வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
உடன்படிக்கை பெட்டியை தூக்கிச் செல்வதற்குரிய தண்டுகளை பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்க்க முடிந்ததாக 1 இராஜாக்கள் 8:8 குறிப்பிடுவதால், அவை எப்படி பொருத்தப்பட்டிருந்தன?
வனாந்தரத்தில் ஆசரிப்புக் கூடாரத்திற்குரிய வரைபடத்தை மோசேக்கு யெகோவா கொடுத்தபோது, அதில் ஓர் முக்கிய அம்சமாக இருந்தது உடன்படிக்கைப் பெட்டி. பொன்தகட்டால் மூடப்பட்ட இந்தச் செவ்வக பெட்டியில் நியாயப்பிரமாண சட்டங்கள் எழுதப்பட்ட கற்பலகைகளும் மற்ற பொருட்களும் இருந்தன. அது மகா பரிசுத்த ஸ்தலமாகிய உட்புற அறையில் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டியின் மூடியில், செட்டைகளை விரித்தாற்போல பொன்னாலான இரு கேருபீன்களின் உருவங்கள் இருந்தன. இரண்டு தண்டுகளால் தூக்கிச் செல்வதற்கு வசதியாக பெட்டியின் ஒவ்வொரு பக்கத்திலும் வளையங்கள் இருந்தன. சீத்திம் மரத்தாலான அந்தத் தண்டுகள் பொன் தகட்டால் மூடப்பட்டிருந்தன. பொருத்தமாகவே, அந்தத் தண்டுகள் பெட்டியின் நீளவாக்கிற்கு இணையாக வளையங்களில் செருகப்பட்டிருந்தன. இவ்வாறு, ஆசரிப்புக் கூடாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்திருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் அந்தப் பெட்டி வைக்கப்பட்டிருந்ததால், அந்தத் தண்டுகள் வடக்கு-தெற்கு முகமாகவே இருந்தன. பிற்பாடு சாலொமோன் கட்டிய ஆலயத்தில் அந்தப் பெட்டி வைக்கப்பட்டபோதும் அவை இப்படியே இருந்தன.—யாத்திராகமம் 25:10-22; 37:4-9; 40:17-21.a
மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் (வெளிப்புற அறையையும்) ஒரு திரை இரண்டாக பிரித்தது. பரிசுத்த ஸ்தலத்திலுள்ள ஆசாரியர்கள் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேயும் கடவுளுடைய பிரசன்னம் இருந்த அந்தப் பெட்டியையும் பார்க்க முடியாது. (எபிரெயர் 9:1-7) எனவே, “தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை” என 1 இராஜாக்கள் 8:8-ல் பதிவு செய்யப்பட்டிருப்பது குழப்பமாக இருக்கலாம். இதே குறிப்பு 2 நாளாகமம் 5:9-லும் சொல்லப்பட்டுள்ளது. எப்படி அந்தத் தண்டுகள் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்திலுள்ள எவருக்கும் தெரிந்தன?
அந்தத் தண்டுகள் திரைச்சீலையை தொட்டுக்கொண்டிருந்தன, இதனால் அவை காணத்தக்கதாக துருத்திக்கொண்டிருந்தன என சிலர் கற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால் அந்தத் தண்டுகள் வடக்கு-தெற்கு முகமாக இருந்ததால் அப்படி இருந்திருக்காது, ஏனென்றால் அந்தத் தண்டுகள் இருந்த வாக்கிலேயே அந்தத் திரைச்சீலையும் இருந்தது. (எண்ணாகமம் 3:38) இதற்கு இன்னும் நல்ல நியாயமான விளக்கம் இருக்கிறது. திரைச்சீலைக்கும் ஆலயத்தின் சுவருக்கும் இடையே சிறிதளவு இடைவெளி இருந்தால், அல்லது பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய வேண்டிய சமயத்தில் அந்தத் தண்டுகள் தெரிந்திருக்கலாம். எந்த விதத்திலும் அந்தப் பெட்டியை பார்ப்பதற்கு திரைச்சீலை தடையாக இருந்தது, ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் நீட்டிக்கொண்டிருந்த தண்டுகள் இடைவெளி வழியாக தெரிந்திருக்கலாம். இந்த விளக்கம் நியாயமாக தோன்றினாலும், இதைக் குறித்து நாம் பிடிவாதமாக எதுவும் சொல்ல முடியாது.
நாம் கற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. எபிரெயருக்கு எழுதிய கடிதத்தில் சில அம்சங்களை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். பிறகு அவர் இவ்வாறு கூறினார்: “இவைகளைக் குறித்து விவரமாய்ப் பேச இப்பொழுது சமயமில்லை.” (எபிரெயர் 9:5) ஆசரிப்புக் கூடாரத்தின் வடிவமைப்பையும் அதன் செயற்பாட்டையும் நன்கு அறிந்த மோசே, ஆரோன், பெசலெயேல் போன்ற உண்மையுள்ள ஆட்கள் உயிர்த்தெழுப்பப்படும்போது ஆர்வத்திற்குரிய அநேக விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் இருக்கும்.—யாத்திராகமம் 36:1.
[அடிக்குறிப்பு]
a அந்தப் பெட்டி ஆசரிப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த சமயத்திலும் அந்தத் தண்டுகளை வளையங்களிலிருந்து கழற்றி வைக்கக் கூடாது. அதனால் அந்தத் தண்டுகளை வேறெந்த காரியத்திற்கும் பயன்படுத்த முடியாது. அதோடு, அந்தப் பெட்டியைத் தொட வேண்டியதில்லை; அந்தத் தண்டுகள் வளையங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால், அதை தூக்கிச் செல்லும் ஒவ்வொரு சமயத்திலும் தண்டுகளை வளையங்களுக்குள் மீண்டும் செருக வேண்டியிருந்திருக்கும். அதற்காக பரிசுத்த பெட்டியை தொட வேண்டியிருக்கும். எண்ணாகமம் 4:6-ல் “அதின் தண்டுகளைப் பாய்ச்சி” என்ற குறிப்பு, புதிய இடத்திற்கு மாறிச்செல்லும்போது கனமான அந்தப் பெட்டியை தூக்கிச் செல்வதற்கு ஆயத்தமாக அந்தத் தண்டுகளை ஒழுங்காக வைப்பதை அல்லது சரிசெய்வதைக் குறிக்கலாம்.