சிரியா—கடந்த காலத்தைக் கண்முன் நிறுத்துகிறது
மத்தியதரைக் கடல் முதல் சீனா வரை, எகிப்து முதல் அன்டாலியா வரை என வணிகர் கூட்டம் பயணப்படும் பண்டைய உலகின் “நாற்சந்திகளில்” ஒன்றில் இது கொலுவீற்றிருக்கிறது. அக்காட், பாபிலோன், எகிப்து, பெர்சியா, கிரீஸ், ரோம் ஆகிய தேசத்தின் படைகள் ஒருகாலத்தில் இதன் மண்ணில் காலடி பதித்திருக்கின்றன. நூற்றாண்டுகளுக்குப் பின்பு துருக்கியர்களும் சிலுவைப் போர் வீரர்களும் இதன் வழியேதான் கடந்து சென்றார்கள். இன்றைய நாளில்கூட பிரான்சு, பிரிட்டன் படைகள் இதை தங்கள் அதிகாரத்திற்குட்படுத்த போரிட்டிருக்கின்றன.
இன்று அந்தப் பிரதேசத்தின் ஒரு பகுதி சிரியா என்ற பெயர் தாங்கி நிற்கிறது; ஆயிரக்கணக்கான வருடத்திற்கு முன் அப்பிரதேசம் முழுவதுமே இந்தப் பெயரையே பெற்றிருந்தது. இப்பகுதி பலவிதமான மாற்றங்களை சந்தித்திருந்த போதிலும் கடந்த காலத்தைக் கண்முன் நிறுத்தும் அழியா சின்னங்கள் இன்றும் இங்கே இருக்கின்றன. பைபிள் சரித்திரத்திலும் சிரியாவுக்குப் பங்கிருப்பதால் பைபிள் மாணாக்கர்களுக்கு இந்தத் தேசம் பெரும் ஆர்வத்திற்குரிய ஒன்று.
டமஸ்கஸ்—பண்டைய நகரம்
உதாரணத்திற்கு சிரியாவின் தலைநகரான டமஸ்கஸை எடுத்துக் கொள்ளலாம். இந்த நகரம் உருவானது முதற்கொண்டு எப்போதுமே ஜனங்கள் வசித்து வந்திருப்பதால் உலகிலுள்ள பழமையான நகரங்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஆண்டி-லெபனான் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளதாலும், இதன் வழியே பாரடா ஆறு பாய்ந்தோடுவதாலும் மகா சிரியா பாலைவனத்தின் முனையில் அழகான பாலைவன சோலையாக பல நூற்றாண்டுகளுக்கு இது திகழ்ந்திருக்கிறது. கோத்திரத் தகப்பனாகிய ஆபிரகாம் கானானுக்குத் தெற்கே சென்ற போது இந்த நகரத்தின் வழியாக பயணித்திருக்கலாம். அவர், “தமஸ்கு ஊரானாகிய” எலியேசரை தன் வீட்டு வேலையாளாக வைத்திருந்தார்.—ஆதியாகமம் 15:2.
ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, சோபா தேசத்து சிரியா ராஜாக்கள் இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுலுக்கு விரோதமாக போரிட்டனர். (1 சாமுவேல் 14:47) இஸ்ரவேலின் இரண்டாவது ராஜாவாகிய தாவீதும் ஆராமின் (சிரியா என்பதற்கு எபிரெய பெயர்) ராஜாக்களுக்கு எதிராக போரிட்டு அவர்களைத் தோற்கடித்து, ‘தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தார்.’ (2 சாமுவேல் 8:3-8) இப்படியாக இஸ்ரவேலும் சிரியாவும் நெடுநாள் பரம வைரிகளாக இருந்தன.—1 இராஜாக்கள் 11:23-25.
பொ.ச. முதல் நூற்றாண்டுக்குள் சிரியா தேசத்தாருக்கும் யூதர்களுக்கும் இடையிலான பகைமை ஓரளவு குறைந்திருந்தது. அந்த சமயத்தில் டமஸ்கஸில் ஏராளமான யூத ஜெபாலயங்களும் கட்டப்பட்டிருந்தன. தர்சு பட்டணத்தை சேர்ந்த சவுல் (பின்னர் பவுல்) எருசலேமிலிருந்து தமஸ்குவுக்குப் போகும் பாதையில் கிறிஸ்தவராக மாறியது உங்கள் நினைவுக்கு வரலாம்.—அப்போஸ்தலர் 9:1-8.
இன்றைய டமஸ்கஸில் (தமஸ்கு), ஆபிரகாம் பயணித்ததைக் காட்டும் அல்லது தாவீதின் வெற்றியை பறைசாற்றும் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பூர்வ ரோம நகரத்தின் இடிபாடுகளும், அதன் வழியே செல்லும் முக்கிய பாதையும் உள்ளன; இது, பண்டைய ரோம வீயா ரெக்டாவின் (நேர் தெரு) பாதையில் அமைந்துள்ளது. தமஸ்குவுக்கு அருகே அற்புதகரமான விதத்தில் கிறிஸ்தவராக மாறிய சவுலை, இந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டில்தான் அனனியா கண்டுபிடித்தார். (அப்போஸ்தலர் 9:10-19) இந்த தெரு ரோமர்கள் காலத்தில் இருந்தது போல் இல்லாமல் இப்போது அடியோடு மாறியிருக்கிறது; எனினும் அங்குதான் அப்போஸ்தலன் பவுல் சிறப்புமிக்க தன் ஊழியத்தை துவங்கினார். இந்த நேர் தெரு, ரோம பாப்-ஷார்கீ வாயிலில் (Bab-Sharqi gate) போய் முடிவடைகிறது. இந்த நகரத்தின் மதிற்சுவர்களின் மீதே வீடுகள் கட்டப்பட்டிருந்தன; கூடையில் வைத்து மதிலிலுள்ள திறப்பு வழியாக பவுலை இறக்கிவிடுவதன் மூலம் அவர் எப்படி தப்பிக்க முடிந்தது என்பதை புரிந்துகொள்ள இது நமக்கு உதவுகிறது.—அப்போஸ்தலர் 9:23-25; 2 கொரிந்தியர் 11:32, 33.
பல்மீரா—சரித்திரப் புகழ் பெற்ற பாலைவன சோலை
டமஸ்கஸிலிருந்து வடகிழக்கில் சுமார் மூன்று மணிநேரம் பயணித்தால் புகழ்பெற்ற தொல்லியல் தலத்தை அடைவோம்; அந்த இடமே தத்மோர் என பைபிள் அழைக்கும் பல்மீரா. (2 நாளாகமம் 8:4) மத்தியதரைக் கடலுக்கும் யூப்ரடீஸ் நதிக்கும் மத்திபத்தில் அமைந்துள்ள இந்தப் பாலைவன சோலைக்கு நிலத்தடி நீரூற்றுகளிலிருந்து தண்ணீர் கிடைக்கிறது; இது வடக்கிலுள்ள மலைகளில் உற்பத்தியாகி இங்கே வெளிப்படுகிறது. மெசொப்பொத்தாமியாவுக்கும், மேற்கே அமைந்துள்ள தேசங்களுக்கும் இடையிலான பண்டைய வணிக போக்குவரத்துப் பாதை, வளமான பிறைப்பிரதேசம் (Fertile Crescent) வழியாக சென்றது; அப்பாதை பல்மீராவின் வடக்கே தொலைதூரத்தில் இருந்தது. எனினும் பொ.ச.மு. முதல் நூற்றாண்டில் வடக்கே அரசியலில் ஏற்பட்ட ஸ்திரமின்மை, தெற்கில் குறைந்த தூரத்தில் இருந்த பாதையை பெரிதும் விரும்பத்தக்க பாதையாக ஆக்கியது. அப்போதுதான் பல்மீரா அதன் செழிப்பில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது.
பல்மீரா, ரோம பேரரசின் கிழக்கு எல்லைக்கு அரண்போல் இருக்கும் என்பதால் ரோம பிராந்தியமான சிரியாவுடன் இணைக்கப்பட்டது; எனினும் பின்னர் அது சுதந்திர நகரமென பிரகடனப்படுத்தப்பட்டது. உயர்ந்தோங்கிய தூண் மண்டபங்கள் நிறைந்த தெருவில், மாபெரும் ஆலயங்கள், நினைவுச் சின்னங்களான வளைவுகள், குளியல் கூடங்கள், ஓர் அரங்கம் ஆகியவை இருந்தன. தெருவின் இரு புறமும் பாதசாரிகளுக்கென தளவரிசை போடப்பட்டிருந்தது; ஆனால் மத்திபத்திலிருந்த முக்கிய பாதையில் ஒட்டகக் கூட்டங்கள் சௌகரியமாக பயணிப்பதற்காக தளவரிசை போடப்படாதிருந்தது. கிழக்கே சீனாவுக்கும் இந்தியாவுக்கும், மேற்கே கிரேக்க-ரோம பேரரசுகளுக்கும் மத்தியில் வணிக போக்குவரத்தில் ஈடுபட்ட வணிகக் கூட்டத்தார், இடையில் பல்மீராவில் இறங்கிவிட்டு போனார்கள். அங்கே, அவர்கள் கொண்டு சென்ற பட்டு, நறுமணப் பொருட்கள், இன்னும் பிற பொருட்கள் மீது வரி சுமத்தி, அதை செலுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
பொ.ச. மூன்றாம் நூற்றாண்டில் பல்மீரா புகழ் ஏணியின் உச்சியில் இருக்கையில் அங்கு சுமார் 2,00,000 பேர் வசித்து வந்தார்கள். இந்த சமயத்தில்தான் ஆட்சியை விஸ்தரிக்க பேராசைப்பட்ட ஸெனோபியா ராணி ரோமுடன் போரிட்டாள்; இறுதியில் பொ.ச. 272-ல் தோற்கடிக்கப்பட்டாள். இப்படியாக, அறியாமலேயே ஸெனோபியா சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு தானியேல் தீர்க்கதரிசி பதிவு செய்திருந்த தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதியை நிறைவேற்றினாள்.a (தானியேல், 11-ம் அதிகாரம்) ஸெனோபியாவை தோற்கடித்த பின்பு, ரோம பேரரசு கொஞ்ச காலத்திற்கு பல்மீராவை போர் நடவடிக்கைகளுக்குரிய ஒரு மையமாக பயன்படுத்திக் கொண்டது; ஆனால் மீண்டும் பல்மீரா முன்பு போல் வலிமையிலும் புகழிலும் சிறப்படையவே இல்லை.
யூப்ரடீஸின் பாதையில்
வடகிழக்கே பாலைவனத்தின் வழியாக செல்கையில் மூன்று மணிநேர பயண தூரத்தில் உள்ளது டீர் ஏஜ் ஜோர் நகரம்; இங்கிருந்து மனதைக் கொள்ளை கொள்ளும் யூப்ரடீஸ் நதியைக் காணலாம். சரித்திரப் புகழ் பெற்ற இந்த நதி கிழக்கு அன்டாலியாவிலுள்ள (ஆசிய துருக்கி) மலைகளில் உற்பத்தியாகி, கார்க்கெமிஷுக்கு சற்று வடக்கே சிரியாவுக்குள் நுழைந்து, சிரியாவின் வழியாக தென்கிழக்கில் ஈராக்கிற்குள் பாய்கிறது. சிரியாவின் பண்டைய இரு நகரங்களின் சிதிலங்கள் ஈராக்கின் எல்லைக்கு அருகில் காணப்படுகின்றன.
தென்கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில், யூப்ரடீஸின் பாதையிலுள்ள ஒரு வளைவில் பண்டைய அரண் சூழ்ந்த பட்டணமாகிய டியுரா-யூரோபாஸின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இன்னும் தென்கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் மாரீ என்ற நகரம் உள்ளது. ஒருகாலத்தில் செல்வ செழிப்புமிக்க வணிக நகரமாக அது கொடிகட்டிப் பறந்தது; பாபிலோனிய அரசனாகிய ஹமுராபியால் பொ.ச.மு. 18-ம் நூற்றாண்டில் அது அழிக்கப்பட்டது. அங்கிருந்த அரண்மனையில் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களில் சுமார் 15,000 களிமண் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன; இவை பூர்வ கால சரித்திரத்தைப் பற்றி அதிக தகவலளிக்கும் பத்திரங்கள் ஆகும்.
இந்நகரத்தை ஹமுராபியின் படைகள் தகர்த்தபோது, மேற்புற சுவர்களை இடித்துத் தள்ளியதால் கீழே இருந்த அறைகளை செங்கல்களும் மண்ணும் மூடின. இது ஒருவிதத்தில் பாதுகாப்பாகவே அமைந்தது; எப்படியெனில், தொல்லியலாளர்களின் குழு ஒன்று 1933-ல் இந்த இடத்தைக் கண்டுபிடிக்கும் வரை, சுவரில் தீட்டப்பட்ட சித்திரங்களும், சிலைகளும், மண்பாண்டங்களும், எண்ணற்ற கலைப் பொருட்களும் சேதமடையாதிருந்தன. இந்தப் பொருட்களை டமஸ்கஸ், அலிப்போ ஆகிய இடங்களிலுள்ள அருங்காட்சியகத்திலும், பாரிஸிலுள்ள லூவர் அருங்காட்சியகத்திலும் காணலாம்.
வடமேற்கு சிரியாவிலுள்ள பூர்வ நகரங்கள்
யூப்ரடீஸின் பாதையில் வடமேற்கே சென்றால் அலிப்போவை (ஹாலப்) அடைவோம். டமஸ்கஸைப் போலவே அலிப்போவும் எப்போதும் ஆட்கள் வசித்து வந்த உலகின் பழமையான பட்டணங்களில் ஒன்றென பெருமைப்படுகிறது. அலிப்போவின் சௌவுக்குகள் (souks) அல்லது கூரை வேயப்பட்ட சந்தை வெளி காட்சிகள் மத்திய கிழக்கு நாடுகளைப் பொருத்தவரை மனதைவிட்டு நீங்காத நினைவுகளைப் பதிப்பவை.
அலிப்போவுக்கு சற்று தெற்கே உள்ளது டெல் மார்டிக்; இது, பூர்வத்தில் சுய ஆட்சி நகரமாக விளங்கிய எப்லா வீற்றிருந்த இடம். எப்லா வணிகத்தில் சக்கைப் போடு போட்ட நகரம்; இது பொ.ச.மு. மூன்றாம் ஆயிர வருட காலத்தின் பிற்பகுதியில் வடக்கு சிரியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அகழ்வாய்வின் போது பாபிலோனிய தேவதையான இஷ்டாருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த ஓர் ஆலயத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன், 17,000-க்கும் அதிகமான களிமண் பலகைகள் வைக்கப்பட்டிருந்த ஆவண அறைகளிருந்த அரச அரண்மனையும் கண்டுபிடிக்கப்பட்டது. எப்லாவின் கலைப்பொருட்களை, இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிறிய நகரத்தில் இட்லிப் அருங்காட்சியகத்தில் காணலாம்.
தெற்கே டமஸ்கஸ் சாலையில் ஹமா நகரம் உள்ளது, பைபிளில் அதன் பெயர் ஆமாத். (எண்ணாகமம் 13:21) ஹமா நகரம் நெடுகிலும் ஆரேன்டிஸ் நதி பாய்வதால் சிரியாவின் இனிய நகரங்களின் வரிசையில் இது இடம்பெறுகிறது. இதை அடுத்து உள்ளது ராஸ் ஷம்ரா; இதுவே பண்டைய நகரமான யுகாரிட் அமைந்திருந்த இடம். பொ.ச.மு. மூன்றாம், இரண்டாம் ஆயிர ஆண்டு காலங்களில் யுகாரிட் செல்வம் கொழிக்கும் வணிக துறைமுகமாக விளங்கியது; இது பாகால், தாகோன் வணக்கத்தில் பெருமளவு மூழ்கிப் போயிருந்தது. 1929 முதற்கொண்டு பிரெஞ்சு தொல்லியலாளர்கள் அநேக களிமண் பலகைகளையும் எழுத்துப் பொறிக்கப்பட்ட வெண்கல தகடுகளையும் தோண்டியெடுத்திருக்கிறார்கள்; இக்கண்டுபிடிப்புகள், பாகால் வணக்கத்தின் தரங்கெட்ட நிலையை அம்பலப்படுத்துகின்றன. பாகால் வணக்கத்தாரான கானானியர் அழிக்கப்படும்படி கடவுள் ஏன் தீர்ப்பளித்தார் என்பதை நன்கு புரிந்துகொள்ள இவை நமக்கு உதவுகின்றன.—உபாகமம் 7:1-4.
ஆம், இன்றைய சிரியாவில் கடந்த காலத்தைக் கண்முன் நிறுத்தும் காட்சிகளை இன்றும் காணலாம். (g03 2/08)
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, 1999, ஜனவரி 15 தேதியிட்ட காவற்கோபுர பிரதியில் வெளிவந்த “சிரியா பாலைவனத்து கார்கூந்தல் ராணி” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 24, 25-ன் தேசப்படம்]
மத்தியதரைக் கடல்
சர்ச்சைக்குட்பட்ட எல்லை பகுதிகள்
எகிப்து
இஸ்ரேல்
ஜோர்டான்
லெபனான்
சிரியா
டமஸ்கஸ்
பாரடா
ஆரேன்டிஸ்
ஹமா (ஆமாத்)
யுகாரிட் (ராஸ் ஷம்ரா)
எப்லா (டெல் மார்டிக்)
அலிப்போ (ஹாலப்)
கார்க்கெமிஷ் (ஜெராபுலுஸ்)
யூப்ரடீஸ்
ஸெனோபியா
டீர் ஏஜ் ஜோர்
டியுரா-யூரோபாஸ்
மாரீ
பல்மீரா (தத்மோர்)
ஈராக்
துருக்கி
[பக்கம் 24-ன் படங்கள்]
டமஸ்கஸும் (கீழே) நேர் தெருவும் (மேலே)
[பக்கம் 25-ன் படம்]
தேன் கூடு வடிவ வீடுகள்
[பக்கம் 25-ன் படம்]
யுகாரிட்
[பக்கம் 25-ன் படம்]
ஹமா
[பக்கம் 26-ன் படம்]
மாரீ
[பக்கம் 26-ன் படம்]
அலிப்போ
[படத்திற்கான நன்றி]
© Jean-Leo Dugast/Panos Pictures
[பக்கம் 26-ன் படம்]
அரச அரண்மனை, எப்லா
[பக்கம் 26-ன் படம்]
ஸெனோபியாவிலுள்ள மேய்ப்பர்கள்
[பக்கம் 26-ன் படங்கள்]
பல்மீரா
[பக்கம் 26-ன் படம்]
டியுரா-யூரோபாஸில் யூப்ரடீஸ்
[பக்கம் 25-ன் படங்களுக்கான நன்றி]
பிள்ளைகள்: © Jean-Leo Dugast/Panos Pictures; தேன் கூடு வடிவ வீடுகள்: © Nik Wheeler