பைபிளை ஏன் படிக்க வேண்டும்?
பைபிளை என்றாவது வாசித்திருக்கிறீர்களா? இது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு படைப்பு. இதுவரை வேறெந்த புத்தகமும் இதைப்போல் பரவலாக வினியோகிக்கப்படவில்லை. பைபிளின் செய்தி ஆறுதல் தருகிறது, நம்பிக்கை ஊட்டுகிறது, வாழ்க்கைக்கு அருமையான ஆலோசனை அளிக்கிறது—இதை எல்லா கலாச்சாரத்தினரும் ஆமோதிக்கிறார்கள். ஆனால், இன்று அநேகர் பைபிளைப் பற்றி ஓரளவுதான் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் மத நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படலாம். உங்களுக்காகவே பைபிளிலுள்ள விஷயங்களை இந்தச் சிற்றேடு சுருக்கமாகத் தொகுத்து வழங்குகிறது.
நீங்கள் பைபிளை வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு அதைப் பற்றி சில விஷயங்களை அறிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். பைபிள் ‘பரிசுத்த வேதாகமம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அதில் 66 புத்தகங்கள் உள்ளன. முதல் புத்தகத்தின் பெயர் ஆதியாகமம், கடைசி புத்தகத்தின் பெயர் வெளிப்படுத்துதல்.
சரி, பைபிளின் ஆசிரியர் யார்? சுவாரஸ்யமான கேள்வி. சுமார் 40 மனிதர்கள் பைபிளை எழுதினார்கள்; ஏறக்குறைய 1,600 வருட காலப்பகுதியில் எழுதினார்கள். ஆனால், அவர்களில் யாருமே தாங்கள்தான் பைபிளின் ஆசிரியர் என்று சொல்லிக்கொள்ளவில்லை. இதிலிருந்து ஓர் உண்மை தெரிகிறது. ஆம், “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன.” பைபிளை எழுதியவர்களில் ஒருவரே இதைச் சொன்னார். (2 தீமோத்தேயு 3:16) ‘யெகோவாவின் சக்தி என் மூலம் பேசியது; அவரது வார்த்தை என் நாவில் ஒலித்தது’ என்று மற்றொரு எழுத்தாளர் கூறினார். (2 சாமுவேல் 23:2, NW) உன்னத ஆட்சியாளரான யெகோவா தேவன்தான் பைபிளின் ஆசிரியர் என்பதை பைபிளின் எழுத்தாளர்களே ஒத்துக்கொண்டார்கள். அதோடு, மனிதர்கள் தம்மைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமெனக் கடவுள் விரும்புகிறார் என்றும் அவர்கள் எழுதினார்கள்.
பைபிளைப் புரிந்துகொள்ள அதன் மையப்பொருளை அறிந்திருப்பது மிகமிக அவசியம். ‘மனிதர்களை ஆளும் உரிமை கடவுளுக்கே இருக்கிறது என்பதை விண்ணுலக அரசாங்கத்தின் மூலம் நிரூபிப்பதே’ பைபிளின் மையப்பொருள். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை இந்த மையப்பொருள் எப்படி இழையோடுகிறது என்பதைப் பின்வரும் பக்கங்களில் வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
மேற்கூறப்பட்ட குறிப்புகளை மனதில் வைத்து, உலகிலேயே மிகவும் பிரபலமான புத்தகமாகிய பைபிள் சொல்லும் விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.