பாடம் 80
இயேசுவின் 12 அப்போஸ்தலர்கள்
ஒன்றரை வருஷங்கள் ஊழியம் செய்த பிறகு, இயேசு ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. தன்னோடு ரொம்ப நெருக்கமாக வேலை செய்ய யாரைத் தேர்ந்தெடுப்பது, கிறிஸ்தவ சபையை வழிநடத்த யாருக்குப் பயிற்சி கொடுப்பது என்று முடிவு எடுக்க, யெகோவாவின் உதவி வேண்டும் என்று இயேசு நினைத்தார். அதனால், தனியாக ஒரு மலைக்குப் போய் ராத்திரி முழுவதும் ஜெபம் செய்தார். காலையில், தன் சீஷர்கள் சிலரைக் கூப்பிட்டு, அவர்களில் 12 பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள்தான் அப்போஸ்தலர்கள். அவர்களுடைய பெயர் ஏதாவது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, சீமோன், யூதாஸ் இஸ்காரியோத்து.
இந்த 12 பேரும் இயேசுவோடு எப்போதும் பயணம் செய்தார்கள். அவர்களுக்குப் பயிற்சி கொடுத்த பிறகு, பிரசங்கிப்பதற்காக அவர்களைத் தனியாக அனுப்பினார். பேய்களைத் துரத்துவதற்கும் நோயாளிகளைக் குணமாக்குவதற்கும் யெகோவா அவர்களுக்குச் சக்தி கொடுத்தார்.
இயேசு அந்த 12 பேரைத் தன்னுடைய நண்பர்கள் என்று சொன்னார், அவர்களை நம்பினார். அவர்கள் படிக்காதவர்கள், சாதாரண ஆட்கள் என்று பரிசேயர்கள் நினைத்தார்கள். ஆனால், இயேசு அப்படி நினைக்கவில்லை. அவர்கள் செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான பயிற்சியை அவர் கொடுத்தார். இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான சமயங்களில் அவர்கள் அவருடன் இருந்தார்கள். உதாரணமாக, அவருடைய மரணத்துக்கு முன்பும், அவர் உயிரோடு எழுந்த பிறகும் அவர்கள் இயேசுவுடன் இருந்தார்கள். இயேசுவைப் போலவே, அவர்களில் நிறைய பேர் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் கல்யாணம் ஆனவர்கள்.
எல்லாரையும் போல, அவர்களுக்கும் சில குறைகள் இருந்தன. அவர்களும் தவறு செய்தார்கள். சில சமயங்களில், யோசிக்காமல் பேசினார்கள், தவறாக முடிவு எடுத்தார்கள். பொறுமையாக நடந்துகொள்ளவில்லை. தங்களில் யார் பெரிய ஆள் என்றும்கூட சண்டை போட்டார்கள். ஆனாலும், அவர்கள் நல்லவர்கள். யெகோவாமேல் அவர்களுக்கு அன்பு இருந்தது. அவர்கள்தான் கிறிஸ்தவ சபை ஆரம்பமானபோது இருந்தவர்கள். இயேசு இறந்த பிறகு, சபையில் முக்கிய பொறுப்புகளை கவனித்துக்கொண்டவர்கள்.
“நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், என் தகப்பனிடமிருந்து கேட்ட எல்லா விஷயங்களையும் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.”—யோவான் 15:15