பாடம் 35
ஆண் குழந்தைக்காக அன்னாளின் ஜெபம்
இஸ்ரவேலில் எல்க்கானா என்ற ஒருவர் இருந்தார். அவருக்கு அன்னாள், பெனின்னாள் என்ற இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஆனால், அவருக்கு அன்னாளைத்தான் ரொம்பப் பிடிக்கும். பெனின்னாளுக்கு நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்குப் பிள்ளைகளே இல்லை. அதனால், பெனின்னாள் எப்போது பார்த்தாலும் அன்னாளை மட்டம்தட்டி பேசினாள். ஒவ்வொரு வருஷமும், எல்க்கானா தன் குடும்பத்தோடு சீலோவில் இருந்த வழிபாட்டுக் கூடாரத்துக்குப் போவார். அப்படி ஒரு தடவை போனபோது, தன் அன்பு மனைவி அன்னாள் ரொம்பச் சோகமாக இருப்பதை அவர் பார்த்தார். அதனால் அவளிடம், ‘அன்னாள், அழாதே. உனக்குத்தான் நான் இருக்கிறேனே! நான் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன்’ என்று சொன்னார்.
பிறகு, அன்னாள் ஜெபம் செய்வதற்காக அங்கிருந்து எழுந்து போனாள். உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சினாள். அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. ‘யெகோவாவே, நீங்கள் எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தால், அவனை உங்களுக்கே கொடுத்து விடுவேன். வாழ்நாள் முழுவதும் அவன் உங்களுக்குச் சேவை செய்வான்’ என்று சத்தியம் செய்தாள்.
அன்னாள் தேம்பித் தேம்பி அழுவதைத் தலைமைக் குருவான ஏலி பார்த்தார். அவள் குடிபோதையில் இருப்பதாக அவர் நினைத்தார். அப்போது அன்னாள், ‘ஐயா, நான் குடிக்கவில்லை. எனக்கு ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. அதைத்தான் யெகோவாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்’ என்றாள். அன்னாளைப் பற்றித் தான் நினைத்தது தப்பு என்று ஏலி புரிந்துகொண்டார். அதனால் அவர், ‘நீ கேட்டதை கடவுள் உனக்குத் தருவார்’ என்றார். அன்னாளுக்கு இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவள் அங்கிருந்து எழுந்து போனாள். ஒரு வருஷத்துக்குள், அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு சாமுவேல் என்று பெயர் வைத்தாள். அன்னாளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!
யெகோவாவுக்குக் கொடுத்த சத்தியத்தை அன்னாள் மறக்கவில்லை. சாமுவேலுக்குப் பால் கொடுப்பதை நிறுத்தியவுடன், அவனை வழிபாட்டுக் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தாள். அப்போது ஏலியிடம், ‘ஐயா, நான் கடவுளிடம் கேட்ட மாதிரியே அவர் எனக்கு இந்தக் குழந்தையைக் கொடுத்தார். வாழ்நாள் முழுவதும் அவன் யெகோவாவுக்குச் சேவை செய்யட்டும்’ என்று சொன்னாள். எல்க்கானாவும் அன்னாளும் சாமுவேலைப் பார்க்க ஒவ்வொரு வருஷமும் போவார்கள். அப்போது கையில்லாத ஒரு புது சட்டையை அவனுக்குக் கொடுப்பார்கள். யெகோவா அன்னாளுக்கு இன்னும் மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் கொடுத்தார்.
“கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்.”—மத்தேயு 7:7