வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஏவாளிடம் பேசிய பாம்பிற்கு கால்கள் இருந்தனவா?
ஏதேன் தோட்டத்தில் ஏவாளை வஞ்சித்த பாம்பிடம் யெகோவா தேவன் பேசினதாக ஆதியாகமம் 3:14 சொல்கிறது. அதை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.” ஏவாளைச் சோதிக்கப் பயன்படுத்தப்பட்ட பாம்பிற்கு முன்னர் கால்கள் இருந்ததாகவோ, பின்னர் அவை இல்லாமற் போனதாகவோ பைபிள் குறிப்பாகச் சொல்வதில்லை. ஆதியாகமம் 3:14-ல் உள்ள வார்த்தைகளைச் சிலர் அப்படி எடுத்துக்கொண்டாலும், கடவுள் சாபமிட்டதற்கு முன்னர் பாம்பிற்கு கால்கள் இருந்திருக்குமென முடிவுசெய்ய வேண்டிய அவசியமில்லை. ஏன்?
ஏனென்றால், யெகோவா தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது காணக்கூடாத ஆவி ஆளாகிய சாத்தானுக்குத்தான்; அவனே அந்த அற்பப் பிராணியைத் தவறாகப் பயன்படுத்தினவன். பைபிள் அவனை, “பொய்க்குப் பிதா” என்றும் ‘பழைய பாம்பு’ என்றும் விவரிக்கிறது. இவ்விரண்டு பட்டப் பெயர்களும் எதைத் தெரிவிக்கின்றன? கடவுள் இட்ட கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி ஏவாளைத் தூண்டுவதற்கு, காணக்கூடிய பாம்பைக் கைப்பாவையாக சாத்தான் பயன்படுத்தினான் என்பதையே தெரிவிக்கின்றன.—யோவான் 8:44; வெளிப்படுத்துதல் 20:2.
பாம்புகளை கடவுள் படைத்தார் என்பதும், ஏவாளை வஞ்சிக்க சாத்தான் பாம்பைப் பயன்படுத்துவதற்கு முன்னதாகவே ஆதாம் அவற்றுக்குப் பெயர் வைத்திருந்தான் என்பதும் நமக்குத் தெரியும். ஆகவே, அந்தப் பகுத்தறிவில்லாத பாம்பைக் குற்றஞ்சொல்ல முடியாது. தன்னைத் தந்திரமாக சாத்தான் பயன்படுத்தினான் என்பது அதற்குத் தெரிந்திருக்காது; கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போனவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டபோதும்கூட அதற்கு எதுவும் புரிந்திருக்காது.
அப்படியானால், பாம்பு வயிற்றினால் நகர்ந்து செல்லுமென்றும், மண்ணைத் தின்னுமென்றும் கடவுள் சொன்னது ஏன்? இயல்பாகவே, பாம்பு அதன் வயிற்றால் ஊர்ந்து செல்லும்; அது நாக்கை நீட்டி உள்ளே இழுப்பது, மண்ணை நக்குவது போலவே தெரியும். இவை, சாத்தானின் இழிவான நிலையை நன்கு சித்தரித்துக்காட்டுகிறது. முன்னொரு சமயம் தேவதூதர்களில் ஒருவனாக மேன்மையான நிலையில் இருந்த அவன், ‘டார்ட்டரஸ்’ என்று பைபிள் குறிப்பிடுகிற கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.—2 பேதுரு 2:4, NW.
மேலும், நிஜமான பாம்பு, மனிதனின் குதிங்காலைக் கடித்துக் காயப்படுத்துவதைப் போலவே, இழிவான நிலையிலுள்ள சாத்தான் கடவுளுடைய ‘வித்துவின்’ ‘குதிங்காலை நசுக்குவான்’ என பைபிள் குறிப்பிட்டது. (ஆதியாகமம் 3:15) இயேசு கிறிஸ்துவே அந்த வித்துவின் முதன்மை பாகமாக இருந்தார்; அவர் சாத்தானுடைய கையாட்களின் செயல்களால் தற்காலிகமாக துன்பம் அனுபவித்தார். ஆனால், கடைசியில் கிறிஸ்துவும் அவருடைய தோழர்களான உயிர்த்தெழுந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும், அந்த அடையாளப்பூர்வ பாம்பு மீண்டும் தலைதூக்காதபடி அதன் தலையை நசுக்கிவிடுவார்கள். (ரோமர் 16:20) எனவே, காணக்கூடிய பாம்பிற்கு கடவுள் இட்ட சாபம், ‘பழைய பாம்பு’ என்றழைக்கப்பட்ட காணக்கூடாத பிசாசாகிய சாத்தானின் இழிவான நிலையையும், முடிவில் அவனுக்கு வரப்போகும் அழிவையுமே கனகச்சிதமாகச் சித்தரித்தது.