கடவுளுடைய வார்த்தையை நேசித்த பணிவான ஆப்பிரிக்கர்
ஆப்பிரிக்காவுக்கு விஜயம் செய்பவர்கள் அங்குள்ள ஜனங்களோடு பைபிளைப் பற்றி பேச ஆரம்பிப்பது மிக எளிதாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். “கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?” “பஞ்சம், வியாதி, போர், குற்றச்செயல் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு உண்டா?” என்ற கேள்விகளெல்லாம் மக்களைச் செவிகொடுத்து கேட்கத் தூண்டியிருக்கின்றன. இதற்குரிய பதில்களை பைபிளிலிருந்து காட்டும்போது, முன்பின் தெரியாதவர் என்று பார்க்காமல், அநேகர் நன்கு செவிகொடுத்துக் கேட்கின்றனர். இது பெரும்பாலும் பைபிள் படிப்புக்கு வழிநடத்தியிருக்கிறது. பிறகு அவர்கள் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்து, முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாக ஆகியிருக்கிறார்கள்.
இவ்வாறு நடந்துகொண்ட முதல் ஆப்பிரிக்கர் ஒருவரைப் பற்றி பைபிள் புத்தகமாகிய அப்போஸ்தலர் 8:26-40-ல் சொல்லப்பட்டுள்ளது. அவர் ஓர் எத்தியோப்பியர், மெய்க் கடவுளான யெகோவாவை வழிபட எருசலேமுக்குச் சென்றிருந்தார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, இந்த எத்தியோப்பியர் தனது இரதத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு சுருளை வாசித்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்பின் தெரியாத கிறிஸ்தவ சுவிசேஷகரான பிலிப்பு அவரை அணுகி, “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார். தனக்கு உதவி தேவை என்பதை அந்த எத்தியோப்பியன் பணிவுடன் ஒத்துக்கொண்டார். அத்துடன், இரதத்தில் ஏறி தன்னுடன் உட்காரும்படி பிலிப்புவை கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். பின்னர், தான் வாசித்த அந்த பைபிள் பதிவை விளக்கும்படி கேட்டார். அந்தத் தீர்க்கதரிசனம் மேசியாவாகிய இயேசு கிறிஸ்து சமீபத்தில் மரித்ததைப் பற்றி சொல்வதாக பிலிப்பு விளக்கினார். இயேசுவின் உயிர்த்தெழுதல் உட்பட, “இயேசுவைக் குறித்த நற்செய்தியைப்” (NW) பற்றிய மற்ற விஷயங்களையும் விவரித்தார்.
இந்த அருமையான சத்தியங்களைக் கேட்டவுடன், அந்த எத்தியோப்பியர் இயேசுவின் சீஷராக மாற விரும்பி, “நான் ஞானஸ்நானம் [“முழுக்காட்டுதல்,” NW] பெறுகிறதற்குத் தடையென்ன”? என்று கேட்டார். முழுக்காட்டப்பட்ட பின்பு, இந்தப் பணிவான ஆப்பிரிக்கர் தன் வீட்டுக்குத் திரும்பினார். அதற்கு மேல் பைபிள் அவரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.
இன்று, அதே “நற்செய்தியை” கற்றுக்கொள்ள உலககெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானோருக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்கிறார்கள். தற்போது 60 லட்சம் பைபிள் படிப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.