யெகோவா உங்களை அறிந்திருக்கிறாரா?
“தமக்குரியவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்.”—2 தீ. 2:19.
1, 2. (அ) இயேசு எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்? (ஆ) என்ன கேள்விகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
ஒருநாள் பரிசேயன் ஒருவன் இயேசுவிடம் வந்து, “திருச்சட்டத்தில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று சொன்னார். (மத். 22:35-37) யெகோவாமீது இயேசு பேரன்பு வைத்திருந்தார்; அதுமட்டுமல்ல, யெகோவா தன்னை எப்படிக் கருதுகிறார் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்; அவர் வாழ்ந்த விதமே அதைக் காட்டியது. அதனால்தான், இறப்பதற்குச் சற்று முன்பு, ‘நான் என் தகப்பனுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறேன்’ என்று அவரால் சொல்ல முடிந்தது.—யோவா. 15:10.
2 கடவுள்மீது தங்களுக்கு அன்பு இருப்பதாக இன்று அநேகர் சொல்லிக்கொள்கிறார்கள். நாமும் அவர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான சில கேள்விகள் இருக்கின்றன: யெகோவா என்னை எப்படிக் கருதுகிறார்? அவர் என்னை அறிந்திருக்கிறாரா, அதாவது என்னை அங்கீகரிக்கிறாரா? அவர் என்னைத் தமக்குரியவராக நினைக்கிறாரா? (2 தீ. 2:19) இந்த அண்டத்தையே ஆளும் அரசருடன் இப்படிப்பட்ட நெருங்கிய உறவு வைத்திருக்க முடியும் என்பதை நினைத்துப் பார்க்கையில் மெய்சிலிர்க்கிறது, அல்லவா?
3. தாங்கள் யெகோவாவுக்கு உரியவர்களாய் இருக்க முடியாதென ஏன் சிலர் நினைக்கிறார்கள், இப்படிப்பட்ட சிந்தனையை மாற்றிக்கொள்ள எது உதவும்?
3 இருந்தாலும், யெகோவாமீது அன்பு வைத்திருக்கிற சிலருக்கும்கூட அவருடைய நண்பராக முடியும் என்பதை நம்புவது கஷ்டமாக இருக்கிறது. சிலர் தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாய்க் கருதுகிறார்கள், அதனால் தாங்கள் யெகோவாவுக்கு உரியவர்களாய் இருக்க முடியாதென நினைக்கிறார்கள். ஆனால், கடவுள் நம்மை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்பதை அறிவது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! (1 சா. 16:7) சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒருவனுக்குக் கடவுள்மீது அன்பு இருந்தால், கடவுள் அவனை அறிந்திருக்கிறார்.” (1 கொ. 8:3) கடவுள் உங்களை அறிந்திருக்க வேண்டுமென்றால் நீங்கள் கடவுள்மீது அன்புகாட்டுவது முக்கியம். இதைச் சிந்தித்துப் பாருங்கள்: இந்தப் பத்திரிகையை நீங்கள் ஏன் படிக்கிறீர்கள்? உங்களுடைய முழு இருதயத்தோடும் மனதோடும் பலத்தோடும் ஏன் யெகோவாவுக்குச் சேவை செய்ய முயலுகிறீர்கள்? நீங்கள் உங்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்திருந்தால், அப்படிச் செய்யும்படி எது உங்களைத் தூண்டியது? இருதயத்தை ஆராய்கிற யெகோவா விரும்பத்தக்கவர்களைத் தமது பக்கம் ஈர்க்கிறார் என பைபிள் சொல்கிறது. (ஆகாய் 2:7-யும்a யோவான் 6:44-யும் வாசியுங்கள்.) ஆகையால், யெகோவா உங்களைத் தம்முடைய பக்கம் ஈர்த்திருப்பதாலேயே நீங்கள் அவருக்குச் சேவை செய்கிறீர்கள் என்று சொல்லலாம். தாம் ஈர்த்துக்கொண்டவர்களை அவர் மிகவும் அருமையானவர்களாகக் கருதுகிறார், அவர்கள்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கிறார். அவர்கள் உண்மையுடன் நிலைத்திருக்கும்வரை, அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.—சங். 94:14.
4. கடவுளுடன் நமக்கு இருக்கும் நட்பு எவ்வளவு அருமையானது என்பதை ஏன் எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும்?
4 யெகோவா நம்மை ஈர்த்திருப்பதால் அவருடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். (யூதா 20, 21-ஐ வாசியுங்கள்.) ஆனால் மறந்துவிடாதீர்கள், கடவுளைவிட்டு வழுவிப்போவதற்கு அல்லது விலகிப்போவதற்கு வாய்ப்பிருப்பதாக பைபிள் சொல்கிறது. (எபி. 2:1; 3:12, 13) உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல் 2 தீமோத்தேயு 2:19-ல் காணப்படும் வார்த்தைகளைச் சொல்வதற்குச் சற்றுமுன் இமெனேயு மற்றும் பிலேத்துவைப் பற்றிக் குறிப்பிட்டார். ஒருகாலத்தில் இவர்கள் இருவரும் யெகோவாவுக்கு உரியவர்களாகத்தான் இருந்தார்கள், பிற்பாடோ சத்தியத்தைவிட்டு விலகிப்போனார்கள். (2 தீ. 2:16-18) கலாத்திய சபைகளில் இருந்த சிலர்கூட சத்தியத்தைவிட்டு விலகிப்போனார்கள். (கலா. 4:9) நாமோ கடவுளுடன் இருக்கும் நட்பு எவ்வளவு அருமையானது என்பதை எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
5. (அ) கடவுள் உயர்வாய் மதிக்கிற சில பண்புகள் யாவை? (ஆ) என்ன உதாரணங்களைப் பற்றி நாம் பார்ப்போம்?
5 யெகோவா உயர்வாய் மதிக்கிற சில பண்புகள் இருக்கின்றன. (சங். 15:1-5; 1 பே. 3:4) அவரால் அறியப்பட்ட நபர்கள் சிலரிடமிருந்த அப்படிப்பட்ட பண்புகள்தான் விசுவாசமும், மனத்தாழ்மையும். இந்தப் பண்புகள் ஏன் யெகோவாவுக்குப் பிரியமாய் இருந்தன என்பதைப் புரிந்துகொள்வதற்கு இரண்டு நபர்களுடைய உதாரணங்களை இப்போது ஆராய்வோம். கடவுளுக்குத் தன்னைத் தெரியுமென்று எண்ணிக்கொண்டிருந்த மற்றொரு நபரைப் பற்றியும் பார்ப்போம்; பிற்பாடு அவர் அகந்தையுடன் நடந்து கொண்டதையும் அதனால் யெகோவா அவரை ஒதுக்கித் தள்ளியதையும் பற்றிச் சிந்திப்போம். இந்த உதாரணங்களிலிருந்து நாம் அருமையான பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.
விசுவாசத்தின் தகப்பன்
6. (அ) யெகோவாவின் வாக்குறுதிகள்மீது ஆபிரகாம் எப்படிப்பட்ட விசுவாசத்தைக் காட்டினார்? (ஆ) எந்த விதத்தில் ஆபிரகாமை யெகோவா அறிந்திருந்தார்?
6 ஆபிரகாம் ‘யெகோவாவை விசுவாசித்த’ ஒரு மனிதர். சொல்லப்போனால், ‘விசுவாசம் வைக்கிற அனைவருக்கும் தகப்பன்’ என்று அழைக்கப்படுகிறார். (ஆதி. 15:6; ரோ. 4:11) விசுவாசத்தின் காரணமாக ஆபிரகாம் தனது வீட்டை, நண்பர்களை, உடைமைகளை விட்டுவிட்டுத் தூரதேசத்திற்குப் போனார். (ஆதி. 12:1-4; எபி. 11:8-10) பல வருடங்களுக்குப் பின்பும் ஆபிரகாமின் விசுவாசம் உறுதியாகவே இருந்தது. அவர் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தன்னுடைய மகன் ‘ஈசாக்கைப் பலி செலுத்தும் அளவுக்குச் சென்றதிலிருந்து’ இதைத் தெரிந்துகொள்ளலாம். (எபி. 11:17-19) யெகோவாவின் வாக்குறுதிகள்மீது ஆபிரகாம் விசுவாசம் வைத்தார், அதனால்தான் கடவுள் அவரை விசேஷமானவராகக் கருதினார்; ஆம், கடவுள் அவரை உண்மையிலேயே அறிந்திருந்தார். (ஆதியாகமம் 18:19-ஐ வாசியுங்கள்.) ஆபிரகாம் என்ற ஒருவர் இருக்கிறார் என யெகோவா வெறுமனே அறிந்திருக்கவில்லை, வரை ஒரு நண்பராகக் கருதி நெஞ்சார நேசித்தார்.—யாக். 2:22, 23.
7. யெகோவாவின் வாக்குறுதிகளைப் பற்றி ஆபிரகாம் என்ன அறிந்திருந்தார், தன் விசுவாசத்தை அவர் எப்படிக் காட்டினார்?
7 ஆபிரகாமின் சந்ததியார் “தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என்றும், ‘கடற்கரை மணலைப் போல பெருகுவார்கள்’ என்றும் யெகோவா வாக்குறுதி தந்திருந்தார். (ஆதி. 22:17, 18) ஆபிரகாமின் ஆயுள் காலத்தில் இந்த வாக்குறுதிகள் நிறைவேறாதபோதிலும், அவர் யெகோவாமீது உறுதியான விசுவாசத்தைக் காட்டினார். கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார் என்றால், அது நிறைவேறியே தீரும் என்பதை அறிந்திருந்தார். அதோடு, அத்தகைய விசுவாசத்திற்கு இசைவாக வாழ்ந்தார். (எபிரெயர் 11:13-ஐ வாசியுங்கள்.) ஆபிரகாமைப் போன்ற விசுவாசத்தைக் கொண்ட ஒரு நபராக நம்மை யெகோவா அறிந்திருக்கிறாரா?
யெகோவாவுக்காகக் காத்திருப்பது விசுவாசத்தின் அடையாளம்
8. என்ன நியாயமான ஆசைகள் நிறைவேற வேண்டுமென்ற ஏக்கம் சிலருக்கு இருக்கிறது?
8 நம்முடைய சில ஆசைகள் நிறைவேற வேண்டுமென்ற ஏக்கம் நமக்கு இருக்கலாம். திருமணம் செய்துகொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவது இயல்புதான், நியாயம்தான். என்றாலும், அநேகருக்கு இந்த ஆசைகளில் ஏதாவது நிராசையாகிவிடலாம். நமக்கு அப்படி நடந்திருந்தால், அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது நம் விசுவாசத்தைப் பொறுத்தே இருக்கிறது.
9, 10. (அ) சிலர் தங்களுடைய ஆசைகளை எவ்வாறு நிறைவேற்ற முயன்றிருக்கிறார்கள்? (ஆ) கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்க்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
9 இப்படிப்பட்ட ஆசைகளை தெய்வீக ஞானத்திற்கு விரோதமாக நிறைவேற்றத் துடிப்பது முட்டாள்தனம். அது ஒருவருடைய ஆன்மீக வாழ்வுக்கு உலை வைத்துவிடும். உதாரணமாக, யெகோவாவின் அறிவுரைக்கு முரணாக இருக்கிற வைத்தியத்தைச் சிலர் நாடுகிறார்கள். வேறு சிலர், குடும்பங்களுக்கோ கூட்டங்களுக்கோ நேரம் செலவிட முடியாத வேலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்னும் சிலர், விசுவாசியாக இல்லாத ஒருவரைக் காதலிக்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்களில் நாம் ஈடுபட்டால், யெகோவா அறிந்த நபராக இருக்க வேண்டுமென விரும்புகிறோம் எனச் சொல்ல முடியுமா? யெகோவா தந்த வாக்குறுதிகளைக் குறித்து ஆபிரகாம் பொறுமையற்றவராய் இருந்திருந்தால் யெகோவா எப்படி உணர்ந்திருப்பார்? ஆபிரகாம் தன்னுடைய சொந்த விருப்பங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து மறுபடியும் சொகுசாக வாழ முயன்றிருந்தால்? யெகோவாவுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக பேரும் புகழும் சம்பாதிப்பதற்கு முயன்றிருந்தால்? (ஆதியாகமம் 11:4-ஐ ஒப்பிடுக.) கடைசிவரை யெகோவா அவரை நல்ல நண்பராகக் கருதியிருப்பாரா?
10 என்ன ஆசைகள் நிறைவேற வேண்டுமென நீங்கள் ஏங்குகிறீர்கள்? யெகோவாவுக்காகக் காத்திருக்கும் அளவுக்கு உங்கள் விசுவாசம் பலமாக இருக்கிறதா? உங்களுடைய நியாயமான ஏக்கங்களைத் திருப்தி செய்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங். 145:16) ஆபிரகாமின் விஷயத்தில் நடந்ததுபோல, நாம் எதிர்பார்க்கிற நேரத்தில் கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகலாம். என்றாலும், ஆபிரகாமைப் போன்ற விசுவாசம் நமக்கு இருப்பதை வாழ்க்கையில் காட்டினால் யெகோவா நம்மை மறக்க மாட்டார். அவர் நமக்குப் பலனளிப்பார்.—எபி. 11:6.
பணிவுள்ள ஒருவர், பெருமைபிடித்த இன்னொருவர்
11. கோராகு அநேக ஆண்டுகளாய் என்ன செய்திருந்தார்?
11 யெகோவாவின் ஏற்பாட்டிற்கும் அவருடைய தீர்மானங்களுக்கும் மரியாதை காட்டும் விஷயத்தில் மோசேக்கும் கோராகுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது. அவர்களுடைய செயல்களுக்கும் யெகோவா அவர்களைக் கருதிய விதத்திற்கும் சம்பந்தம் இருந்தது. கோராகு லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத்திய வம்சத்தார். அவர் பல பாக்கியங்களைப் பெற்றிருந்தார்; யெகோவா செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலரைக் காப்பாற்றியதைப் பார்த்தது... சீனாய் மலையில், கீழ்ப்படியாத இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பை ஆதரித்தது... ஒப்பந்தப் பெட்டியை இடம்விட்டு இடம் எடுத்துச் செல்வதில் பங்கு வகித்தது... போன்றவை அந்தப் பாக்கியங்களில் அடங்கியிருக்கலாம். (யாத். 32:26-29; எண். 3:30, 31) அநேக ஆண்டுகளாய் அவர் யெகோவாவுக்கு உண்மையோடு இருந்திருந்தார், அதனால் இஸ்ரவேலர் பலருடைய மதிப்பு மரியாதையைச் சம்பாதித்திருந்தார்.
12. பக்கம் 28-ல் காட்டப்பட்டுள்ளபடி, கோராகின் கர்வம் யெகோவாவுடன் அவருக்கு இருந்த நட்பை எவ்வாறு பாதித்தது?
12 என்றாலும், இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குப் போய்க்கொண்டிருந்த சமயத்தில், கடவுளுடைய ஏற்பாட்டில் குளறுபடிகள் இருப்பதாய் கோராகு நினைத்தார். அதனால் மாற்றங்கள் கொண்டுவர விரும்பினார். இஸ்ரவேலரில் 250 பேர் கோராகுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டார்கள். யெகோவா தங்களை அறிந்திருந்ததாகவும் தங்களை அங்கீகரித்திருந்ததாகவும் அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். அதனால் மோசேயிடமும் ஆரோனிடமும், “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே” என்று சொன்னார்கள். (எண். 16:1-3) எப்பேர்ப்பட்ட மிதமிஞ்சிய தன்னம்பிக்கை, எப்பேர்ப்பட்ட கர்வம்! மோசே அவர்களிடம், ‘யெகோவா தம்முடையவன் இன்னான் என்று . . . காண்பிப்பார்’ எனக் கூறினார். (எண்ணாகமம் 16:5-ஐ வாசியுங்கள்.) அடுத்த நாளே, கோராகும் அவரோடு சேர்ந்துகொண்ட எல்லாரும் சமாதியானார்கள்.—எண். 16:31-35.
13, 14. என்னென்ன வழிகளில் மோசே மனத்தாழ்மையைக் காட்டினார்?
13 கோராகுக்கு நேர்மாறாக மோசே, “பூமியிலுள்ள எந்த மனிதரைவிடவும் மிகுந்த பணிவுள்ளவராக இருந்தார்.” (எண். 12:3, NW) யெகோவாவின் கட்டளைக்கு அப்படியே கீழ்ப்படிந்ததன் மூலம் அவர் பணிவையும் மனத்தாழ்மையையும் காட்டினார். (யாத். 7:6; 40:16) யெகோவா செயல்பட்ட விதம் தவறென மோசே நினைத்ததாக பைபிள் எங்கேயும் சொல்வதில்லை; யெகோவாவின் அறிவுரைகளைப் பின்பற்றுவதைக் குறித்து அவர் எரிச்சலடைந்ததாகவும் எங்கேயும் சொல்வதில்லை. உதாரணமாக, ஆசரிப்புக் கூடாரத்தை அமைக்கும் விஷயத்தில் யெகோவா அவருக்குப் பல நுணுக்கமான விவரங்களைக் கொடுத்திருந்தார்; அதாவது, கூடாரத் துணிகளுக்கு எந்த நிற நூலைப் பயன்படுத்த வேண்டும், அதில் எத்தனை வளையங்கள் போட வேண்டும் போன்ற சிறுசிறு விவரங்களைக்கூட கொடுத்திருந்தார். (யாத். 26:1-6) கடவுளுடைய அமைப்பில் மனித கண்காணி ஒருவர் சிறுசிறு விஷயங்களுக்கும் உங்களுக்கு அறிவுரைகள் கொடுத்தால் நீங்கள் ஒருவேளை எரிச்சலடையலாம். ஆனால், யெகோவா பரிபூரண கண்காணி; அவர் தமது ஊழியர்களுக்கு வேலைகள் தருகிறார், அந்த வேலைகளை அவர்கள் நல்லபடியாக செய்து முடிப்பார்கள் என்று நம்புகிறார். அவர் ஏராளமான விவரங்களைக் கொடுக்கிறார் என்றால், நல்ல காரணத்தோடுதான் அப்படிச் செய்கிறார். யெகோவா ஏகப்பட்ட விவரங்கள் கொடுத்ததற்காக மோசே எரிச்சலடையவில்லை என்பதை நினைவில் வையுங்கள்; யெகோவா தன்னை மதிப்புக்குறைவாக நடத்துவதாகவோ, தன்னுடைய படைப்புத்திறனை அல்லது சுதந்திரத்தை முடக்குவதாகவோ அவர் நினைக்கவில்லை. மாறாக, கடவுள் சொன்னதையெல்லாம் வேலையாட்கள் அப்படியே ‘செய்கிறார்களா’ என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். (யாத். 39:32) எவ்வளவு மனத்தாழ்மை அவருக்கு! அது யெகோவாவின் வேலை என்பதையும், தான் யெகோவாவின் கையிலுள்ள வெறும் ஒரு கருவிதான் என்பதையும் மோசே உணர்ந்திருந்தார்.
14 ஏமாற்றத்தைச் சந்தித்த சமயங்களில்கூட மோசே மனத்தாழ்மையைக் காட்டினார். ஒரு சந்தர்ப்பத்தில், மக்கள் முறுமுறுத்தபோது மோசே சுயக்கட்டுப்பாட்டை இழந்துவிட்டார், யெகோவாவைப் பரிசுத்தப்படுத்தத் தவறிவிட்டார். அதன் விளைவாக, மக்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர் அழைத்துச்செல்ல மாட்டார் என யெகோவா கூறினார். (எண். 20:2-12) சதா குறைகூறிக்கொண்டே இருந்த இஸ்ரவேலரை அவரும் அவருடைய சகோதரன் ஆரோனும் வருடக்கணக்காகச் சகித்து வந்திருந்தார்கள். என்றாலும், இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மோசே தவறிவிட்டதால், அவருடைய நீண்டகால ஆசை கைநழுவிப்போனது. அப்போது மோசே எப்படி நடந்துகொண்டார்? அவருக்கு ஏமாற்றமாய் இருந்தபோதிலும், யெகோவாவின் முடிவைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டார். யெகோவா நீதியுள்ள கடவுள், அவரிடம் அநீதியின் சுவடே இல்லை என்பதை அவர் அறிந்திருந்தார். (உபா. 3:25-27; 32:4) மோசேயைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், அவர் யெகோவாவால் அறியப்பட்ட நபர் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டீர்களா?—யாத்திராகமம் 33:12, 13-ஐ வாசியுங்கள்.
யெகோவாவுக்குக் கீழ்ப்படிய மனத்தாழ்மை அவசியம்
15. கோராகு கர்வத்துடன் நடந்துகொண்டதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
15 உலகளாவிய கிறிஸ்தவச் சபையில் செய்யப்படும் மாற்றங்களை... முன்னின்று வழிநடத்துகிறவர்கள் எடுக்கும் தீர்மானங்களை... நாம் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்கிறோம்? இது, நாம் யெகோவாவால் அறியப்பட்ட நபராக இருக்கிறோமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. மிதமீறிய தன்னம்பிக்கை, கர்வம், விசுவாசமின்மை காரணமாக கோராகும் அவருடைய கூட்டாளிகளும் கடவுளைவிட்டு விலகிப்போனார்கள். கோராகின் கண்களில், வயதான மோசேதான் அனுதினமும் தீர்மானங்கள் எடுத்ததாகத் தெரிந்தது, ஆனால் நிஜத்தில் யெகோவாதான் தேசத்தை வழிநடத்தி வந்தார். அதை கோராகு உணரத் தவறியதால், கடவுளால் பயன்படுத்தப்பட்டவர்களுக்கு உண்மைத்தன்மையைக் காட்டத் தவறிவிட்டார். தெளிவான புரிந்துகொள்ளுதல் கிடைக்கும்வரை, அல்லது உண்மையிலேயே மாற்றங்கள் தேவையானால் அவை செய்யப்படும்வரை, கோராகு யெகோவாவுக்காகக் காத்திருந்தால் எவ்வளவு ஞானமாக இருந்திருக்கும்! கோராகு கர்வத்துடன் செயல்பட்டதால் கடவுளிடம் தனக்கிருந்த நற்பெயரைக் கெடுத்துக்கொண்டார்!
16. மோசேயைப் போலவே நாம் எப்படி மனத்தாழ்மையைக் காட்டலாம்?
16 இன்று மூப்பர்களுக்கும் சபையிலுள்ள மற்றவர்களுக்கும் இந்தப் பதிவு ஒரு முக்கியமான எச்சரிக்கையைக் கொடுக்கிறது. யெகோவாவுக்காகக் காத்திருப்பதற்கும் தலைமைதாங்கி நடத்துகிறவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கும் மனத்தாழ்மை தேவை. மோசேயைப் போல் நாம் மனத்தாழ்மையையும் சாந்தகுணத்தையும் காட்டுகிறோமா? சபையை வழிநடத்துகிறவர்களை யெகோவாவே பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் தரும் அறிவுரைகளுக்கு அடிபணிகிறோமா? ஏமாற்றங்களை எதிர்ப்படும்போது நம்முடைய சொந்த உணர்ச்சிகளை மூட்டைகட்டி வைக்கிறோமா? அப்படிச் செய்தால், நாமும் யெகோவாவால் நன்கு அறியப்பட்டவர்களாய் இருப்போம். மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் காட்டும்போது யெகோவாவின் பார்வையில் பிரியமுள்ளவர்களாய் இருப்போம்.
யெகோவா தமக்குரியவர்களை அறிந்திருக்கிறார்
17, 18. நாம் எப்போதும் யெகோவாவுக்கு உரியவர்களாக இருக்க எது உதவும்?
17 யெகோவாவின் நேசத்தையும் நட்பையும் பெற்றவர்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது நன்மை பயக்கும். நம்மைப் போலவே ஆபிரகாமும் மோசேயும் குறைபாடுள்ளவர்கள்தான். என்றாலும், அவர்கள் யெகோவாவுக்கு உரியவர்களாக... அவர் அறிந்த நபர்களாக... இருந்தார்கள். ஆனால், கோராகின் உதாரணம் எதைக் காட்டுகிறது? நாம் யெகோவாவைவிட்டுப் பிரிந்துபோவதற்கு வாய்ப்பிருப்பதைக் காட்டுகிறது. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘யெகோவா என்னை எப்படிப் பார்க்கிறார்? இந்த பைபிள் உதாரணங்களிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ளலாம்?’
18 யெகோவா தம் உண்மையுள்ள ஊழியர்களைத் தமக்குரியவர்களாய்க் கருதுவது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது, அல்லவா? விசுவாசத்தையும் மனத்தாழ்மையையும் கடவுளுக்குப் பிரியமான மற்ற நல்ல பண்புகளையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவால் அறியப்பட்டவராக இருப்பது ஓர் அருமையான பாக்கியம் என்பதை யாரும் மறுக்க முடியாது! இப்போது திருப்தியையும் எதிர்காலத்தில் மகத்தான ஆசீர்வாதங்களையும் அது வாரி வழங்கும்.—சங். 37:18.
[அடிக்குறிப்பு]
a புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து: “‘எல்லாத் தேசங்களையும் அசையப் பண்ணுவேன், எல்லாத் தேசங்களிலுமுள்ள விரும்பத்தக்கவர்கள் வருவார்கள்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப் பண்ணுவேன்’ என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.”
நினைவிருக்கிறதா?
• யெகோவாவால் அறியப்பட்டிருப்பது என்றால் என்ன?
• ஆபிரகாமின் விசுவாசத்தை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம்?
• கோராகு மற்றும் மோசேயிடமிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 26-ன் படம்]
யெகோவா தமது வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற விசுவாசம் ஆபிரகாமைப் போல நமக்கும் இருக்கிறதா?
[பக்கம் 28-ன் படம்]
கொடுக்கப்பட்ட வழிநடத்துதலை கோராகு தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளவில்லை
[பக்கம் 29-ன் படம்]
தாழ்மையும் கீழ்ப்படிதலும் உள்ள ஒருவராக உங்களை யெகோவா அறிந்திருக்கிறாரா?