யெகோவா நம்மைக் கண்காணிக்கிறார்—நம் நன்மைக்காக
“தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய [யெகோவாவுடைய] கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.”—2 நா. 16:9.
1. யெகோவா நம்மை ஏன் சோதித்தறிகிறார்?
தந்தை என்ற சொல்லுக்கு இலக்கணமாய்த் திகழ்பவர் யெகோவாவே. அவர் நம்மை மிக நன்றாய் அறிந்து வைத்திருக்கிறார்; நம் ‘நினைவுகளின் தோற்றங்களையும்கூட’ கவனிக்கிறார். (1 நா. 28:9) என்றாலும், நம்மிடம் குறை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் அவர் நம்மைச் சோதித்தறிவதில்லை. (சங். 11:4; 130:3) மாறாக, நாம் அவரிடம் வைத்துள்ள பந்தம் அறுந்துவிடவோ நித்திய ஜீவனை இழந்துவிடவோ கூடாது என்ற எண்ணத்தில் நம்மை அன்போடு பாதுகாக்கவே விரும்புகிறார்.—சங். 25:8–10, 12, 13.
2. யாருக்கு உதவ யெகோவா தம் வல்லமையைப் பயன்படுத்துகிறார்?
2 யெகோவா சர்வ வல்லமை உள்ளவர்; அவர் சகலத்தையும் பார்க்கிறார். அதனால்தான், அவருடைய உண்மை ஊழியர்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது உதவிக்கரம் நீட்டுகிறார்; அவர்கள் சோதனைகளைச் சந்திக்கும்போது துணைநின்று ஆதரிக்கிறார். “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய [யெகோவாவுடைய] கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” என 2 நாளாகமம் 16:9 சொல்கிறது. தம்மை உத்தம இருதயத்துடன் வழிபடுவோருக்கு உதவ, அதாவது சுத்தமான, நேர்மையான எண்ணத்துடன் வழிபடுவோருக்கு உதவ, யெகோவா தம் வல்லமையைப் பயன்படுத்துகிறார் என்று இந்த வசனம் சொல்வதைக் கவனியுங்கள். ஆனால், வெளிவேஷம் போடுகிற வஞ்சகர்களுக்கோ அவர் எந்த உதவியும் செய்ய மாட்டார்.—யோசு. 7:1, 2, 20, 21, 25; நீதி. 1:23–33.
கடவுளோடு நடவுங்கள்
3, 4. ‘தேவனோடு நடப்பதன்’ அர்த்தம் என்ன, இதைப் புரிந்துகொள்ள யார் யாருடைய உதாரணங்கள் உதவுகின்றன?
3 பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சத்தைப் படைத்தவரோடு மனிதர் ஆன்மீக ரீதியில் நடப்பதைப் பற்றி அநேகரால் நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. ஆனால், யெகோவா அதையே விரும்புகிறார். பைபிள் காலங்களில், ஏனோக்கும் நோவாவும் ‘தேவனோடே சஞ்சரித்தார்கள்,’ அதாவது நடந்தார்கள். (ஆதி. 5:24; 6:9) மோசே, ‘அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியான’ விசுவாசத்தோடு வாழ்ந்து வந்தார். (எபி. 11:27) தாவீது ராஜா, தன் பரலோகத் தகப்பனுடன் தாழ்மையோடு நடந்து வந்தார். “அவர் [யெகோவா] என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” என்று தாவீது சொன்னார்.—சங். 16:8.
4 நிஜத்தில், நாம் யெகோவாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க முடியாதுதான். ஆனால், ஆன்மீக ரீதியில் அவருடன் நடக்க முடியும். எப்படி? ‘நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்துவீர்’ என்று சங்கீதக்காரன் ஆசாப் எழுதியுள்ளார். (சங். 73:23, 24) சுருங்கச் சொன்னால், நாம் யெகோவாவின் ஆலோசனையைக் கடைப்பிடிப்பது, அவரோடு நடப்பதற்குச் சமமாகும்; இந்த ஆலோசனையை, முக்கியமாய் பைபிள் மூலமாகவும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார் மூலமாகவும் பெறுகிறோம்.—மத். 24:45, NW; 2 தீ. 3:16.
5. தம் உண்மை ஊழியர்களை யெகோவா எவ்வாறு அன்பான தகப்பனைப் போல் கண்காணிக்கிறார், அவரை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
5 தம்மோடு நடப்பவர்களை யெகோவா அருமையானவர்களாய்க் கருதுவதால், ஒரு தகப்பனைப் போல் அவர்களைக் கண்காணிக்கிறார், பராமரிக்கிறார், பாதுகாக்கிறார்; அதோடு, அவர்களுக்குக் கற்பித்தும் வருகிறார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்று கடவுள் சொல்கிறார். (சங். 32:8) அப்படியானால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவின் கருணைக் கண் என்மீது இருப்பதை அறிந்து, அவருடைய ஞானமான ஆலோசனைக்குக் கீழ்ப்படிவதன்மூலம் அவருடன் நான் கைகோர்த்து நடப்பதுபோல் உணருகிறேனா? அவர் என்னோடு இருப்பதை என் சிந்தை, சொல், செயல் அனைத்திலும் காட்டுகிறேனா? நான் தவறு செய்கையில் யெகோவாவை அன்பற்ற, கறாரான கடவுளாகக் கருதாமல், மனந்திரும்புவோரை ஏற்றுக்கொள்கிற அன்பும் இரக்கமுமுள்ள தகப்பனைப் போல் கருதுகிறேனா?’—சங். 51:17.
6. மனித பெற்றோரால் செய்ய முடியாத எதை யெகோவாவால் செய்ய முடியும்?
6 சில சமயங்களில், நாம் தவறான பாதையில் காலெடுத்து வைப்பதற்கு முன்பே யெகோவா நம்மைத் தடுத்து நிறுத்தலாம். உதாரணத்திற்கு, நம் வஞ்சக இருதயத்தில் தவறான ஆசை துளிர்ப்பதை அவர் கவனிக்கலாம். (எரே. 17:9) அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் மனித பெற்றோரைவிட அவர் சீக்கிரமாகவே செயல்பட முடியும். ஏனென்றால், அவருடைய ‘ஒளிவீசும் கண்களால்’ நம் அடிமனதில் இருக்கும் எண்ணங்களைக்கூட ஊடுருவிப் பார்க்க முடியும். (சங். 11:4; 139:4; எரே. 17:10) எரேமியாவின் செயலரும் நெருங்கிய நண்பருமான பாருக்கின் வாழ்க்கையில், ஒரு சந்தர்ப்பத்தில் யெகோவா எவ்வாறு குறுக்கிட்டார் என்பதைக் கவனியுங்கள்.
பாருக்கிடம் அன்புள்ள தந்தையாக
7, 8. (அ) பாருக் யார், அவருடைய இருதயத்தில் எப்படிப்பட்ட தகாத ஆசைகள் துளிர்த்திருக்கலாம்? (ஆ) பாருக்கிடம் ஒரு தகப்பனுக்கே உரிய கரிசனையை யெகோவா எப்படிக் காட்டினார்?
7 நகலெடுக்கும் வேலையில் புலமை பெற்றிருந்த பாருக், பிற்பாடு எரேமியாவுடன் சேர்ந்து சவால்மிக்க வேலையில் ஈடுபட்டார். யூதா தேசத்தாருக்கு யெகோவாவின் நியாயத்தீர்ப்புச் செய்திகளை அறிவிக்கும் வேலை அது. (எரே. 1:18, 19) பாருக், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்திருக்கலாம்; ஒரு கட்டத்தில், அவர் “பெரிய காரியங்களைத்” தேட ஆரம்பித்தார். ஒருவேளை அவர் உயர்ந்த அந்தஸ்தை அல்லது பொருள் செல்வங்களை நாட ஆரம்பித்திருக்கலாம். என்னவாயிருந்தாலும், பாருக்கின் மனதில் தகாத ஆசைகள் துளிர்த்ததை யெகோவா கவனித்தார். அதனால், தாமதமின்றி, எரேமியா மூலமாக பாருக்கிடம் பேசினார். “நீ . . . ஐயோ! கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப்பண்ணினார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய்” என்றார். அதன் பிறகு, “நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே” என்று உறுதியாகச் சொன்னார்.—எரே. 45:1–5.
8 பாருக்கிடம் யெகோவா கண்டிப்புடன் பேசியது உண்மையே; என்றாலும், அது அவருடைய கோபத்தை அல்ல, தகப்பனுக்கே உரிய கரிசனையைத்தான் வெளிக்காட்டியது. பாருக்கின் ஆசை தகாததாய் இருந்தபோதிலும் அவருடைய இருதயம் பொல்லாததாகவோ வஞ்சகமானதாகவோ இருக்கவில்லை என்பதை யெகோவா கண்டார். அதே சமயம், எருசலேமுக்கும் யூதாவுக்கும் அழிவு நெருங்கிவிட்ட அந்த இக்கட்டான காலத்தில் பாருக் வழிவிலகிப் போய்விடக் கூடாது என்று யெகோவா நினைத்தார். எனவே, பாருக்கை எதார்த்தமாய்ச் சிந்திக்க வைப்பதற்காக, ‘மாம்சமான யாவர்மேலும் [தாம்] தீங்கை வரப்பண்ணப்போவதாய்’ யெகோவா நினைப்பூட்டினார். அதோடு, பாருக் ஞானமாய் நடந்துகொண்டால் தப்பிப் பிழைப்பார் என்றும் சொன்னார். (எரே. 45:5) வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘இதோ பார், பாவச் செயல்களில் ஊறிப்போயிருக்கும் யூதாவுக்கும் எருசலேமுக்கும் சீக்கிரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். என் பேச்சைக் கேட்டு நடந்தால் நீ சாகமாட்டாய்! நான் உன்னைக் காப்பாற்றுவேன்’ என்றுதான் அவர் கூறினார். யெகோவா அளித்த அறிவுரை பாருக்கின் இருதயத்தை எட்டியது என்றே சொல்லலாம். எப்படியெனில், பாருக் தன் சிந்தையை மாற்றிக்கொண்டார்; அதன் பலனாக, 17 வருடங்கள் கழித்து எருசலேம் அழிந்தபோது உயிர்தப்பினார்.
9. பாராவில் உள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?
9 பாருக்கின் பதிவை எண்ணிப் பார்க்கையில், பின்வரும் கேள்விகளையும் வசனங்களையும் சிந்தியுங்கள்: பாருக்கிடம் யெகோவா நடந்துகொண்ட முறை, கடவுளைப் பற்றியும் தம் ஊழியர்களை அவர் கருதும் விதத்தைப் பற்றியும் என்ன தெரிவிக்கிறது? (எபிரெயர் 12:9-ஐ வாசியுங்கள்.) நாம் கொடிய காலத்தில் வாழ்ந்துவருவதால் பாருக்கிற்கு கடவுள் கொடுத்த அறிவுரையிலிருந்தும் அதற்கு அவர் கீழ்ப்படிந்ததிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (லூக்கா 21:34–36-ஐ வாசியுங்கள்.) தம் ஊழியர்கள்மீது யெகோவாவுக்கு இருக்கும் கரிசனையை எரேமியா வெளிக்காட்டியதுபோல இன்றுள்ள மூப்பர்களும் எப்படி வெளிக்காட்டலாம்?—கலாத்தியர் 6:1-ஐ வாசியுங்கள்.
தகப்பனின் அன்பு —மகனில்
10. சபைக்குத் தலைவராய் இருக்கும் இயேசு, தம் பொறுப்புகளை நிறைவேற்ற எவ்வாறு தகுதி பெற்றிருக்கிறார்?
10 கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு, யெகோவா தம் மக்கள் மீதுள்ள அன்பைத் தீர்க்கதரிசிகள் மூலமாகவும் உண்மை ஊழியர்கள் மூலமாகவும் வெளிக்காட்டினார். இன்று, சபையின் தலைவரான இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே தம் அன்பை வெளிக்காட்டுகிறார். (எபே. 1:22, 23) எனவேதான் வெளிப்படுத்துதல் புத்தகத்தில், இயேசு, ‘ஏழு கண்களை உடைய’ ஓர் ஆட்டுக்குட்டியாகச் சித்தரிக்கப்படுகிறார்; “அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே,” அதாவது சக்தியே. (வெளி. 5:6) ஆம், கடவுளுடைய சக்தியை முழு அளவில் பெற்றவரான இயேசுவின் கணிப்பு நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும். அவரும்கூட நம் உள்ளத்தைப் பார்ப்பதால் எதுவுமே அவர் கண்களுக்குத் தப்பாது.
11. இயேசு நமக்கு யாராக இருக்கிறார், அவர் நம்மிடம் எவ்வாறு தம் தகப்பனின் மனப்பான்மையைக் காட்டுகிறார்?
11 என்றாலும், இயேசுவும்கூட யெகோவாவைப் போலவே, நம்மைப் பரலோகத்திலிருந்து ஒரு போலீஸ்காரர் போல் கண்காணித்துக்கொண்டிருப்பதில்லை; மாறாக, அவர் நம்மை அன்போடு சோதித்தறிகிறார். இயேசுவின் பதவிப் பெயர்களில் ஒன்றுதான் “நித்திய பிதா.” தம்மில் விசுவாசம் வைப்பவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதன்மூலம் அவர் நித்திய தகப்பனாக ஆவார் என்பதை இந்தப் பெயர் நமக்கு நினைப்பூட்டுகிறது. (ஏசா. 9:6) அதுமட்டுமல்ல, சபையின் தலைவராகிய கிறிஸ்து, ஆன்மீகச் சிந்தையும் சேவை மனமும் உள்ளவர்களை, முக்கியமாக மூப்பர்களைத் தூண்டி உதவி தேவைப்படுவோருக்கு ஆறுதலையும் ஆலோசனையையும் அளிக்கிறார்.—1 தெ. 5:14; 2 தீ. 4:1, 2.
12. (அ) ஆசியாவைச் சேர்ந்த ஏழு சபைகளுக்கு இயேசு எழுதிய கடிதங்கள் அவரைப் பற்றி என்ன தெரிவிக்கின்றன? (ஆ) கடவுளுடைய மந்தையிடம் மூப்பர்கள் எவ்வாறு கிறிஸ்துவின் மனப்பான்மையைக் காட்டுகிறார்கள்?
12 கிறிஸ்து தமது மந்தைமீது எந்தளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பது, ஆசியாவைச் சேர்ந்த ஏழு சபைகளின் மூப்பர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களிலிருந்து தெரிகிறது. (வெளி. 2:1–3:22) அந்தச் சபைகளில் நடந்துகொண்டிருந்தவற்றை அவர் அறிந்திருந்தார் என்பதையும் தம்மைப் பின்பற்றுகிறவர்கள்மீது அவர் அளவுகடந்த அக்கறை வைத்திருந்தார் என்பதையும் அக்கடிதங்கள் சுட்டிக்காட்டின. வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள இந்தத் தரிசனம் “கர்த்தருடைய நாளில்” நிறைவேறிவருவதால் அக்கடிதங்களிலுள்ள விஷயங்கள் நம்முடைய நாளுக்கு இன்னும் நன்றாகப் பொருந்துகின்றன.a (வெளி. 1:10) கிறிஸ்துவின் அன்பு, சபையில் ஆன்மீக மேய்ப்பர்களாகச் சேவை செய்கிற மூப்பர்கள் மூலமாகப் பெரும்பாலும் வெளிக்காட்டப்படுகிறது. அவர், ‘மனிதர் வடிவில் வரங்களான’ மூப்பர்களைத் தூண்டி, தக்க சமயத்தில் ஆறுதலையும் ஊக்கத்தையும் ஆலோசனையையும் அளிக்கலாம். (எபே. 4:8, NW; அப். 20:28; ஏசாயா 32:1, 2-ஐ வாசியுங்கள்.) மூப்பர்களின் இந்தச் சேவையை, உங்கள் ஒவ்வொருவர்மீதும் கிறிஸ்து வைத்திருக்கும் அக்கறையின் வெளிக்காட்டென்றே கருதுகிறீர்களா?
தக்க சமயத்தில் உதவி
13-15. நம்முடைய ஜெபங்களுக்கு என்னென்ன வழிகளில் கடவுள் விடை அளிக்கலாம்? உதாரணங்கள் தருக.
13 நீங்கள் எப்போதாவது உதவி கேட்டு ஊக்கமாய் ஜெபித்த பின்பு ஆன்மீக ரீதியில் முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவர் உங்களைச் சந்தித்து ஊக்கம் அளித்திருந்தால், அதை உங்கள் ஜெபத்திற்குக் கிடைத்த விடையாகவே உணர்ந்திருக்கிறீர்களா? (யாக். 5:14–16) அல்லது கிறிஸ்தவக் கூட்டங்களில் கேட்ட ஒரு பேச்சிலிருந்தோ பைபிள் பிரசுரத்திலிருந்தோ உங்கள் ஜெபத்திற்கு விடை கிடைத்திருக்கலாம். பெரும்பாலும் இவ்விதங்களிலேயே யெகோவா நம் ஜெபங்களுக்கு விடை அளிக்கிறார். உதாரணத்திற்கு, ஒரு மூப்பர் பேச்சு கொடுத்து முடித்த பிறகு, ஒரு சகோதரி அவரிடம் சென்று நன்றி சொன்னார்; அதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் அவர் கடும் அநீதிக்கு ஆளாகியிருந்தார். என்றாலும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர் பெரிதுபடுத்திச் சொல்லாமல், அந்தச் சகோதரர் பைபிளிலிருந்து சொன்ன சில குறிப்புகள் தனக்கு அருமருந்தாய் இருந்ததாகக் கூறினார். அவருடைய சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமாய் இருந்த அக்குறிப்புகள் அவருக்கு மிகுந்த ஆறுதலை அளித்தன. அந்தக் கூட்டத்திற்கு அவர் சென்றிருந்தது எவ்வளவு பிரயோஜனமாய் இருந்தது!
14 ஜெபத்தின் மூலமாக உதவி பெற்றதற்கு மூன்று சிறைக் கைதிகளின் உதாரணத்தைச் சிந்திப்போம். இவர்கள் சிறையில் இருந்தபோது பைபிள் சத்தியத்தைப் பெற்று முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாய் ஆனவர்கள். சிறையில் நடந்த ஒரு வன்முறைச் சம்பவம் காரணமாக, கைதிகள் அனைவரும் பல சலுகைகளை இழக்க நேர்ந்தது. அதனால், அவர்கள் எல்லாரும் சிறை அதிகாரிகளுக்கு விரோதமாகக் கலகத்தில் ஈடுபட்டார்கள். அடுத்த நாள், காலை உணவுக்குப் பிறகு சாப்பாட்டுத் தட்டைத் திருப்பித் தரக் கூடாது எனத் தீர்மானித்தார்கள். ஆனால், அந்த மூன்று பிரஸ்தாபிகளுக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களும் கலகத்தில் சேர்ந்துகொண்டால் ரோமர் 13:1-ல் உள்ள யெகோவாவின் கட்டளையை மீறுவதாய் இருக்கும்; கலகத்தில் சேராவிட்டால் சிறைக் கைதிகளின் கோபத்துக்குப் பலியாக வேண்டியிருக்கும்.
15 ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வாய்ப்பில்லாமல் போனதால், அவர்கள் மூவரும் ஞானத்திற்காக யெகோவாவிடம் ஜெபித்தார்கள். அடுத்த நாள் காலையில், அவர்கள் மூவரும் ஒரே முடிவை எடுத்திருந்தது தெரியவந்தது; அதாவது, காலைச் சாப்பாடே வேண்டாமென்ற முடிவுக்கு வந்திருந்தது தெரியவந்தது. பின்னர், தட்டுகளை வாங்கிச் செல்லக் காவலர்கள் வந்தபோதோ திருப்பித் தர அவர்களிடம் ஒன்றுமே இருக்கவில்லை. ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ தங்களோடு இருந்ததை உணர்ந்து அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.—சங். 65:2.
நம்பிக்கையோடு எதிர்காலத்தைச் சந்தித்தல்
16. செம்மறியாடு போன்றவர்கள்மீது யெகோவா வைத்திருக்கும் அக்கறைக்குப் பிரசங்க வேலை எப்படி அத்தாட்சி அளிக்கிறது?
16 எங்குமுள்ள நல்மனமுள்ளவர்கள்மீது யெகோவா அக்கறை வைத்திருக்கிறார் என்பதற்கு உலகளவில் நடைபெற்று வருகிற பிரசங்க வேலை இன்னொரு அத்தாட்சி ஆகும். (ஆதி. 18:25) அவர் பெரும்பாலும் தமது தூதர்கள் மூலமாகத் தம் ஊழியர்களைச் செம்மறியாடு போன்றவர்களிடம் வழிநடத்துகிறார்; நற்செய்தி இதுவரை எட்டாத தொலைதூர இடங்களில் அவர்கள் வாழ்ந்தாலும் அவ்வாறு வழிநடத்துகிறார். (வெளி. 14:6, 7) உதாரணத்திற்கு, கடவுள் தமது தூதன் மூலமாக, எத்தியோப்பிய மந்திரியிடம் முதல் நூற்றாண்டு சுவிசேஷகரான பிலிப்புவை வழிநடத்தி அவருக்கு வசனங்களை விளக்கும்படிச் செய்தார். அதற்குக் கிடைத்த பலன்? அந்த மந்திரி நற்செய்தியை ஏற்றுக்கொண்டு இயேசுவின் சீஷராகி முழுக்காட்டுதல் பெற்றார்.b—யோவா. 10:14; அப். 8:26–39.
17. எதிர்காலத்தைக் குறித்து நாம் ஏன் அளவுக்கதிகமாய்க் கவலைப்பட வேண்டியதில்லை?
17 இந்த உலகம் அதன் முடிவை நோக்கிச் செல்கையில், ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்ட ‘வேதனைகளை’ நாம் தொடர்ந்து எதிர்ப்பட வேண்டியிருக்கும். (மத். 24:8) உதாரணத்திற்கு, தேவை அதிகரிப்பதாலோ சாதகமற்ற சீதோஷ்ணத்தாலோ பொருளாதார மாற்றத்தாலோ உணவுப் பொருள்களின் விலை கிடுகிடுவென ஏறலாம். வேலை கிடைப்பது இன்னும் கடினமாகிவிடலாம்; அப்படிக் கிடைத்தாலும், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். என்ன நடந்தாலும் சரி, ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து, தங்கள் ‘கண்களை எளிமையாய்’ வைத்திருப்பவர்கள் அளவுக்கதிகமாய்க் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், கடவுள் தங்களை நேசிக்கிறார், தங்களை அவர் கவனித்துக்கொள்வார் என்று அவர்கள் நம்புகிறார்கள். (மத். 6:22–34; NW) உதாரணத்திற்கு, பொ.ச.மு. 607-ல் எருசலேம் கொந்தளிப்பான காலக்கட்டத்தில் இருந்தபோது எரேமியாவை யெகோவா எப்படிப் பராமரித்தார் என இப்போது சிந்திப்போம்.
18. எருசலேம் முற்றுகையிடப்பட்ட சமயத்தில், எரேமியாமீது தாம் வைத்திருந்த அன்பை யெகோவா எப்படிக் காட்டினார்?
18 எருசலேமை பாபிலோனியர் முற்றுகையிட்ட காலத்தின் பிற்பகுதியில் எரேமியா, காவற்சாலையின் முற்றத்திலே சிறைவைக்கப்பட்டார். இந்நிலையில் சாப்பாட்டுக்கு அவர் என்ன செய்வார்? அவர் சுதந்திரமாய் விடப்பட்டிருந்தால் சாப்பாட்டுக்கு ஏதாவது வழிதேடியிருப்பார். ஆனால், கட்டுண்ட நிலையில் இருந்ததால் அங்கிருந்தவர்களையே அவர் முழுக்க முழுக்க சார்ந்திருக்க வேண்டியிருந்தது; அவர்களில் பெரும்பாலோர் அவரை வெறுத்தவர்களாயிற்றே! இருந்தாலும், எரேமியா மனிதர்களை அல்ல, தன்னைக் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்த கடவுளையே நம்பியிருந்தார். கொடுத்த வாக்கை யெகோவா காப்பாற்றினாரா? நிச்சயமாக! ‘நகரத்திலே அப்பமிருக்குமட்டும் . . . தினம் ஒரு அப்பம் அவருக்கு’ கிடைக்கும்படியாக யெகோவா வழிசெய்தார். (எரே. 37:21) எரேமியாவோடுகூட பாருக், எபெத்மெலேக் போன்ற மற்றவர்களும் அந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்திலிருந்தும் கொள்ளைநோயிலிருந்தும் மரணத்திலிருந்தும் தப்பிப்பிழைத்தார்கள்.—எரே. 38:1; 39:15–18.
19. எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், எதைச் செய்ய நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
19 ஆம், “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது.” (1 பே. 3:12) பரம தகப்பன் உங்களைக் கண்காணிப்பதைக் குறித்துச் சந்தோஷப்படுகிறீர்களா? அவருடைய கருணைக் கண்கள் உங்கள் நன்மைக்காகவே உங்களைக் கண்காணிக்கின்றன என்பதை அறியும்போது பாதுகாப்பாய் உணருகிறீர்களா? அப்படியானால், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் சரி, தொடர்ந்து கடவுளோடு நடக்கத் தீர்மானமாயிருங்கள். யெகோவா தம் உண்மை ஊழியர்கள் அனைவரையும் ஒரு தகப்பனைப் போல எப்போதும் கண்காணிப்பார் என நாம் நிச்சயமாய் இருக்கலாம்.—சங். 32:8; ஏசாயா 41:13-ஐ வாசியுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கடிதங்கள் கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு முக்கியமாய்ப் பொருந்தினாலும், அவற்றிலுள்ள நியமங்கள் கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்குமே பொருந்தும்.
b கடவுளுடைய வழிநடத்துதலுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு, அப்போஸ்தலர் 16:6–10-ல் உள்ளது. ஆசியா மற்றும் பித்தினியாவில் பவுலும் அவருடைய தோழர்களும் பிரசங்க வேலை செய்யாதபடி ‘பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டார்கள்’ என்று அதில் வாசிக்கிறோம். அதற்குப் பதிலாக, மக்கெதோனியாவில் பிரசங்கிக்கும்படி அழைக்கப்பட்டார்கள்; அங்கே சென்று அவர்கள் பிரசங்கித்தபோது நேர்மை மனமுள்ள அநேகர் அவர்களுடைய செய்திக்குச் செவிசாய்த்தார்கள்.
உங்கள் பதில்?
• நாம் ‘தேவனோடு நடப்பதை’ எப்படிக் காட்டலாம்?
• பாருக்மீது தாம் அன்பு வைத்திருந்ததை யெகோவா எப்படி வெளிக்காட்டினார்?
• கிறிஸ்தவ சபையின் தலைவராகிய இயேசு தம் தந்தையின் குணங்களை எவ்வாறு வெளிக்காட்டுகிறார்?
• இந்தக் கொடிய காலங்களில் நாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை எவ்விதங்களில் காட்டலாம்?
[பக்கம் 9-ன் படங்கள்]
எரேமியா, யெகோவாவின் கரிசனையை பாருக்கிடம் வெளிக்காட்டியது போலவே இன்றுள்ள மூப்பர்களும் வெளிக்காட்டுகிறார்கள்
[பக்கம் 10-ன் படங்கள்]
யெகோவா தக்க சமயத்தில் எப்படி உதவி அளிக்கலாம்?