பாடம் 97
கொர்நேலியுவுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கிறது
செசரியாவில், கொர்நேலியு என்ற ஒருவர் இருந்தார். அவர் ரோமப் படையின் முக்கிய அதிகாரி. அவர் ஒரு யூதர் இல்லை. ஆனாலும், யூதர்கள் அவரை மதித்தார்கள். அவர் ஏழை எளியவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவினார். யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருந்தார். எப்போதும் அவரிடம் ஜெபம் செய்தார். ஒருநாள் ஒரு தேவதூதர் கொர்நேலியு முன்னால் வந்து, ‘கடவுள் உன் ஜெபத்தைக் கேட்டார். இப்போது, யோப்பா நகரத்தில் பேதுரு தங்கியிருக்கிற வீட்டுக்கு ஆட்களை அனுப்பி, அவரை உன் வீட்டுக்கு வரச் சொல்’ என்றார். உடனே, கொர்நேலியு மூன்று பேரை யோப்பாவுக்கு அனுப்பினார். அது தென் திசையில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.
அதற்குள், யோப்பாவில் இருந்த பேதுருவுக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. யூதர்கள் சாப்பிடக் கூடாத மிருகங்களை அந்தத் தரிசனத்தில் பார்த்தார். அதையெல்லாம் சாப்பிடும்படி ஒரு குரல் சொன்னது. ஆனால் பேதுரு, ‘நான் இதுவரை அசுத்தமான எந்த மிருகத்தையும் சாப்பிட்டதே இல்லை’ என்று சொல்லி சாப்பிட மறுத்தார். அப்போது அந்தக் குரல், ‘இவற்றை அசுத்தமான மிருகங்கள் என்று சொல்லாதே. கடவுள் இவற்றைச் சுத்தமாக்கிவிட்டார்’ என்று சொன்னது. கடவுளுடைய சக்தி பேதுருவிடம், ‘உன் வீட்டு வாசலில் மூன்று பேர் நிற்கிறார்கள். அவர்களோடு போ’ என்று சொன்னது. பேதுரு வாசலுக்குப் போய், அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று கேட்டார். அப்போது அவர்கள், ‘கொர்நேலியு என்ற ரோமப் படை அதிகாரி எங்களை அனுப்பினார். செசரியாவில் இருக்கிற அவருடைய வீட்டுக்கு நீங்கள் வர வேண்டும்’ என்றார்கள். அன்று ராத்திரி தன்னுடைய விருந்தாளிகளாக அங்கே தங்கும்படி பேதுரு அவர்களிடம் சொன்னார். அடுத்த நாள், அவர்களுடன் செசரியாவுக்குப் போனார். யோப்பாவைச் சேர்ந்த சில சகோதரர்களும் அவரோடு போனார்கள்.
பேதுருவைப் பார்த்ததும் கொர்நேலியு அவர் முன்னால் மண்டிபோட்டார். அப்போது பேதுரு, ‘எழுந்திருங்கள்! நானும் ஒரு மனுஷன்தான்! மற்ற தேசத்து மக்களுடைய வீட்டுக்கு யூதர்கள் போக மாட்டார்கள். ஆனாலும், உங்கள் வீட்டுக்குப் போகும்படி கடவுள் என்னிடம் சொன்னார். என்னை ஏன் இங்கே வர வைத்தீர்கள் என்று சொல்லுங்கள்’ என்றார்.
அப்போது கொர்நேலியு, ‘நான்கு நாட்களுக்கு முன் ஜெபம் செய்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு தேவதூதர் உங்களை இங்கே வர வைக்கும்படி சொன்னார். யெகோவாவின் வார்த்தைகளை தயவுசெய்து எங்களுக்குச் சொல்லுங்கள்’ என்றார். அப்போது பேதுரு, ‘கடவுள் பாரபட்சம் பார்க்காதவர் என்று நான் தெரிந்துகொண்டேன். அவரை வணங்க விரும்புகிறவர்கள் யாராக இருந்தாலும், கடவுள் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்’ என்றார். இயேசுவைப் பற்றி நிறைய விஷயங்களை பேதுரு அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். பிறகு, கொர்நேலியுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் கடவுளுடைய சக்தி கிடைத்தது. அவர்கள் எல்லாரும் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.
“[கடவுளுக்கு] பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”—அப்போஸ்தலர் 10:35