அதிகாரம் 4
கன்னிப்பெண் கர்ப்பமாக இருக்கிறாள்
மரியாள் கர்ப்பமாக இருப்பது யோசேப்புக்குத் தெரியவருகிறது
மரியாள் யோசேப்பின் மனைவியாகிறாள்
மரியாள் இப்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். முதல் மூன்று மாதங்களை அவள் தன் சொந்தக்காரப் பெண்ணான எலிசபெத்துடன் செலவழித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். நாசரேத்துக்குத் தெற்கே இருக்கிற யூதேயா மலைகளில்தான் எலிசபெத்தின் வீடு இருக்கிறது. இப்போது மரியாள் அங்கிருந்து கிளம்பி நாசரேத்தில் இருக்கிற தன் வீட்டுக்கு வந்துவிட்டாள். சீக்கிரத்தில், அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் ஊருக்கே தெரிந்துவிடும். அவளுடைய நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
இன்னொரு விஷயம் என்னவென்றால், அதே ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்ற தச்சருக்கும் அவளுக்கும் ஏற்கெனவே நிச்சயம் ஆகியிருந்தது. ஒருவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் வேறொரு ஆளோடு உறவு வைத்துக்கொண்டால், அந்தப் பெண்ணைக் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது. (உபாகமம் 22:23, 24) இது மரியாளுக்கும் தெரியும். மரியாள் அப்படிப்பட்ட தவறைச் செய்யவில்லை. ஆனாலும், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை யோசேப்பிடம் எப்படிச் சொல்வது, அதைக் கேட்டு அவர் என்ன செய்வார் என்றெல்லாம் பல யோசனைகள் அவள் மனதுக்குள் ஓடுகின்றன.
மரியாள் மூன்று மாதங்களாக ஊரில் இல்லாததால், அவளைப் பார்க்க யோசேப்பு ஆசையாகக் காத்திருக்கிறார். யோசேப்பைப் பார்த்ததும், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மரியாள் சொல்கிறாள். கடவுளுடைய சக்திதான் அதற்குக் காரணம் என்பதை அவருக்குப் புரிய வைக்க தன்னால் முடிந்தவரை அவள் முயற்சி செய்திருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தை யோசேப்பினால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை, நம்பவும் முடியவில்லை.
மரியாள் ரொம்ப நல்ல பெண் என்பதும், எல்லாரிடமும் நல்ல பெயர் எடுத்திருக்கிறாள் என்பதும் யோசேப்புக்குத் தெரியும். அவளை அவர் உயிருக்கு உயிராக நேசிக்கிறார். ஆனாலும், மரியாள் சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. யாரோ ஒரு ஆள்தான் அவளுடைய கர்ப்பத்துக்குக் காரணம் என்று அவர் நினைக்கிறார். இருந்தாலும், அவள் கல்லடிபட்டுச் சாக வேண்டும் என்றோ, எல்லார் முன்னாலும் அவளை அவமானப்படுத்த வேண்டும் என்றோ யோசேப்பு நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவளை ரகசியமாக விவாகரத்து செய்ய நினைக்கிறார். அந்தக் காலத்தில், நிச்சயமான ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் ஆனவர்களாகத்தான் கருதப்பட்டார்கள். அதனால், நிச்சயதார்த்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய விவாகரத்து தேவைப்பட்டது.
இதையெல்லாம் யோசித்துக்கொண்டே யோசேப்பு தூங்கிவிடுகிறார். அப்போது யெகோவாவின் தூதர் யோசேப்பின் கனவில் வந்து, “உன் மனைவி மரியாளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வர பயப்படாதே; கடவுளுடைய சக்தியின் மூலம்தான் அவள் கர்ப்பமாகியிருக்கிறாள். அவளுக்கு ஒரு மகன் பிறப்பார்; அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும்; ஏனென்றால், அவர் தன்னுடைய மக்களைப் பாவத்திலிருந்து மீட்பார்” என்று சொல்கிறார்.—மத்தேயு 1:20, 21.
உண்மை புரிந்ததும் யோசேப்புக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கிறது. தேவதூதர் சொன்னபடியே, அவர் உடனடியாக மரியாளைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருகிறார். இந்தச் செயல் ஒரு திருமண நிகழ்ச்சிபோல் இருக்கிறது. இதன் மூலம், அவர்கள் தம்பதிகளாக ஆகிவிட்டார்கள் என்பதை எல்லாரும் புரிந்துகொள்கிறார்கள். இயேசுவை மரியாள் தன் வயிற்றில் சுமந்த காலத்தில் யோசேப்பு அவளோடு உறவு வைத்துக்கொள்ளவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு, யோசேப்பும் நிறைமாத கர்ப்பிணியான மரியாளும் நாசரேத்திலிருந்து பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. மரியாளுக்குப் பிரசவ நேரம் நெருங்குகிற இந்தச் சமயத்தில் அவர்கள் எங்கே போகிறார்கள்?