பாடம் 2
ரெபேக்காள் யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்தாள்
ரெபேக்காளுக்கு யெகோவாவை ரொம்பப் பிடிக்கும். அவங்க கணவர் பேரு ஈசாக்கு. அவருக்கும் யெகோவாவை ரொம்பப் பிடிக்கும். சரி, ரெபேக்காளுக்கும் ஈசாக்குக்கும் எப்படிக் கல்யாணம் நடந்தது? ரெபேக்காள் எப்படி யெகோவாவுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துகிட்டாங்க? இப்போ படிக்கலாமா?
ஈசாக்கோட அப்பா பேரு ஆபிரகாம், அம்மா பேரு சாராள். அவங்க கானான் நாட்டுல இருந்தாங்க. அந்த நாட்டு மக்கள் யெகோவாவை வணங்கல, பொய் கடவுளைதான் வணங்குனாங்க. ஆனா, யெகோவாவை வணங்குற பொண்ணை ஈசாக்குக்குக் கல்யாணம் பண்ணி வைக்க ஆபிரகாம் ஆசைப்பட்டார். அதனால, பொண்ணு தேட ஆரான்-னு ஒரு ஊருக்கு வேலைக்காரரை அனுப்பினார். ஒருவேளை எலியேசர்-னு ஒருத்தரை அனுப்பியிருக்கலாம். ஆரான் ஊர்லதான் ஆபிரகாமோட சொந்தக்காரங்க இருந்தாங்க.
எலியேசர் ஆரானுக்குப் போனார். கூடவே சில வேலைக்காரங்களை கூட்டிட்டு போனார். அந்த ஊர் ரொம்பத் தூரத்துல இருந்தது. அவங்க பத்து ஒட்டகங்களோட போனாங்க. சாப்பாடு, பரிசு எல்லாம் கொண்டுபோனாங்க. ஆரானுக்குப் போனதும் ஒரு கிணறு பக்கத்துல நின்னுட்டாங்க. ‘கிணத்துல தண்ணி எடுக்க பொண்ணுங்க யாராவது வருவாங்களா’னு பார்த்துட்டு நின்னாங்க. ‘இப்போ, எந்தப் பொண்ணை ஈசாக்குக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது’னு எலியேசர் யோசிச்சார். உடனே ஒரு ஜெபம் செய்தார். ‘இங்கே வர்ற பொண்ணுகிட்ட தண்ணி கேட்பேன். அவள் எனக்கும் என் ஒட்டகங்களுக்கும் தண்ணி கொடுத்தா, அவதான் நீங்க காட்டுற பொண்ணு’னு சொல்லி ஜெபம் செய்தார்.
அப்போ அழகான ரெபேக்காள் அங்கே வந்தாங்க. ரெபேக்காள்கிட்ட எலியேசர் தண்ணி கேட்டார். உடனே ரெபேக்காள், ‘தாராளமா குடிங்க. உங்களோட எல்லா ஒட்டகத்துக்கும் தண்ணி கொண்டு வரேன்’னு சொன்னாங்க. ஒட்டகம் தாகமா இருந்தா குடம் குடமா தண்ணி குடிக்கும். ரெபேக்காள் ஓடி ஓடி தண்ணி எடுத்து ஊத்துனாங்க. அவங்க எப்படி வேலை செய்றாங்கனு படத்தில பார்த்தியா?— எலியேசர் செஞ்ச ஜெபத்துக்குப் பதில் கிடைச்சாச்சு!
எலியேசர் ரெபேக்காளுக்கு நிறைய பரிசு கொடுத்தார். எலியேசரையும் அவரோட வந்தவங்களையும் ரெபேக்காள் வீட்டுக்குக் கூட்டிட்டு போனாங்க. வீட்டில இருந்தவங்ககிட்ட எலியேசர் விஷயத்தைச் சொன்னார். ஆரானுக்கு எதுக்கு வந்தார், யெகோவா எப்படி ரெபேக்காளை அவருக்கு காட்டினார்னு எல்லா விஷயத்தையும் சொன்னார். அதைக் கேட்டு ரெபேக்காள் வீட்டில இருந்தவங்களுக்கு ஒரே சந்தோஷம். கல்யாணத்துக்கு உடனே ஒத்துக்கிட்டாங்க.
ரெபேக்காள் கானான் நாட்டுக்கு எலியேசரோட போய், ஈசாக்கைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க
ஈசாக்கைக் கல்யாணம் பண்ணிக்க ரெபேக்காள் ஏன் ஒத்துக்கிட்டாங்க?— எலியேசரை அனுப்பினது யெகோவாதான்னு ரெபேக்காளுக்கு நல்லா தெரிஞ்சது. அதனால ‘கானான் நாட்டுக்குப் போய், ஈசாக்கைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமா ரெபேக்கா’னு கேட்டதும், ‘சரி’னு சொன்னாங்க. உடனே, கானான் நாட்டுக்கு எலியேசரோட போனாங்க. ஈசாக்கைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.
ரெபேக்காள் யெகோவாவுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துகிட்டாங்க. அதனால யெகோவா அவங்களுக்கு நிறைய நல்லது செய்தார். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம், இயேசு அவங்க குடும்பத்தில பிறந்தார். நீயும் யெகோவாவுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துகிட்டா, அவர் உனக்கும் நிறைய நல்லது செய்வார்.