சோகத்தில் வாடிய சகோதரிகள் ‘இஸ்ரவேல் வீட்டைக் கட்டியவர்கள்’
பொ ழுது விடியும் நேரமானது. தான் யாரென்ற உண்மை கொஞ்ச நேரத்தில் தெரிய வந்துவிடும் என்பதை லேயாள் அறிந்திருந்தாள். தன் அரவணைப்பில் படுத்திருந்தது லேயாளின் தங்கையான ராகேல் அல்ல, லேயாளே என்பதை யாக்கோபு இப்போது கண்டுபிடித்துவிடுவார். தன்னுடைய தகப்பனின் வேண்டுதலுக்கு இணங்கி, யாக்கோபுக்கும் ராகேலுக்கும் தயார்செய்யப்பட்டிருந்த மண மஞ்சத்தில் லேயாள் அன்றிரவு படுத்திருந்தாள். அடையாளம் காணப்படாத அளவுக்கு அவள் ஒருவேளை முக்காடு அணிந்திருக்கலாம்.
விடியலின் வெளிச்சத்தில் உண்மை தெரிந்ததும் யாக்கோபுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! கோபாவேசத்துடன் லேயாளின் தந்தையாகிய லாபானிடம் அவர் தர்க்கம் செய்தார். இதற்கிடையில் லேயாள், இந்த ஏமாற்று வேலைக்கு தான் எப்படி உடந்தையாய் இருந்தாள், தன் வாழ்க்கையை இது எப்படி நிரந்தரமாகப் பாதிக்கக்கூடும் என்பதைப் பற்றியெல்லாம் யோசித்திருப்பாள். பைபிள் வரலாற்றில் லேயாளையும் ராகேலையும் பற்றிய கதைக்கு முக்கியமான இடம் உண்டு. ஒருவரையே மணம் செய்துகொள்வதும் மண உறவில் பற்றுமாறாமல் இருப்பதும் ஏன் ஞானமானது என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவி செய்கிறது.
பரிச்சயமற்ற ஒருவர் கிணற்றருகே
ஏழு வருடங்களுக்கு முன், உறவினர் என்பதாகச் சொல்லிக்கொண்ட பரிச்சயமற்ற ஒருவரை ராகேல் கிணற்றருகே சந்தித்ததைப்பற்றி தன் தகப்பனிடம் ஓடிப்போய் தெரிவித்தாள். பார்க்கப்போனால், அந்த உறவினர் வேறு யாருமல்ல, அவளுடைய அத்தை மகனாகிய யாக்கோபு. அவர் யெகோவாவை வணங்குகிறவராகவும் இருந்தார். ஒரு மாதம் கழித்து, ராகேலை மணம் முடிப்பதற்காக லாபானிடம் ஏழு வருடங்கள் வேலை செய்வதற்கு யாக்கோபு முன்வந்தார். தன் சகோதரியின் மகன் கடின உழைப்பாளி என்பதை லாபான் கவனித்திருந்தார்; அதோடு, உறவினரை மணம் செய்து கொள்வது அந்த மக்கள் மத்தியில் வழக்கமாக இருந்தது. எனவே, லாபான் அதற்கு ஒத்துக்கொண்டார்.—ஆதியாகமம் 29:1-19.
ராகேல்மீது யாக்கோபு வைத்திருந்த அன்பு வெறும் மோகமல்ல. அவர்களுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துசென்றன. இருந்தாலும், ‘அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவருக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.’ (ஆதியாகமம் 29:20) ராகேல் மரிக்கும்வரை யாக்கோபு அவளை நேசித்ததைக் கவனிக்கையில், ராகேலிடம் அநேக அருமையான குணங்கள் இருந்திருக்குமென தெரிகிறது.
யெகோவாவை உண்மையுடன் வணங்கும் ஒருவரையே மணம் செய்யும் எண்ணம் லேயாளுக்கும் இருந்ததா? இதைப்பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. அவளுடைய திருமணத்தைப்பற்றி லாபான் நினைத்த விஷயங்களே அதில் அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ராகேல் நிச்சயிக்கப்பட்ட காலம் முடிவடைகையில் லாபான் ஒரு திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், அன்றிரவு, யாக்கோபு லேயாளோடு ‘உறவு கொள்வதற்காக’ (பொது மொழிபெயர்ப்பு) அவளை யாக்கோபிடம் அழைத்துக் கொண்டுபோய் விட்டார்.—ஆதியாகமம் 29:23.
யாக்கோபை ஏமாற்றவேண்டுமென்று லேயாளும் திட்டம் போட்டாளா? அல்லது வெறுமனே அப்பா பேச்சு கேட்டு நடந்தாளா? அப்போது ராகேல் எங்கே இருந்தாள்? அங்கு என்ன நடந்துகொண்டிருந்தது என்பது அவளுக்குத் தெரியுமா? அப்படியானால், அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? கெடுபிடியாக நடந்துகொள்ளும் தன் தந்தையை மீறி அவளால் செயல்பட முடிந்திருக்குமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பைபிள் எவ்வித பதிலையும் தருவதில்லை. இந்த விஷயத்தைக் குறித்து ராகேலும் லேயாளும் எப்படி உணர்ந்திருந்தாலும் சரி, யாக்கோபு மிகவும் கோபமடைந்தார். லாபானின் மகள்களிடமல்ல, லாபானிடமே யாக்கோபு இவ்வாறு தர்க்கம் செய்தார்: “ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலை செய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர்.” லாபானின் பதில்? “மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது . . . வழக்கம் அல்ல. இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.” (ஆதியாகமம் 29:25-27) இவ்வாறு பலதாரமணம் முடிக்கும் சிக்கலில் யாக்கோபு வசமாக மாட்டிக்கொண்டார். இது கடும் பொறாமையை ஏற்படுத்தவிருந்தது.
மகிழ்ச்சியற்ற குடும்பம்
யாக்கோபு ராகேலை நேசித்தார். ராகேலுடன் ஒப்பிட லேயாள் “அற்பமாய்” எண்ணப்பட்டதை கடவுள் கண்டபோது, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். ராகேலோ மலடியாயிருந்தாள். ஆனால் லேயாள், குழந்தையைவிடவும் யாக்கோபின் பாசத்திற்காக ஏங்கினாள். ராகேல் நேசிக்கப்படுவதைப் பார்த்த லேயாள் மிகவும் துயரப்பட்டாள். இருந்தாலும், யாக்கோபின் மூத்த மகனாகிய ரூபனைப் பெற்றெடுத்ததற்காக யாக்கோபின் அன்பைப் பெறும் நம்பிக்கையுடன் இருந்தாள். ரூபன் என்றால் “இதோ, ஒரு மகன்!” என்பது பொருள். இவ்வாறு பெயரிட லேயாளுக்கு காரணம் இருந்தது. “கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார்” என்று சொல்லி அவனுக்கு இவ்வாறு பெயரிட்டாள். ஆனால், ரூபன் பிறந்த பிறகும் சரி, இன்னொரு மகன் பிறந்த பிறகும் சரி, யாக்கோபு அவளை நேசிக்கவில்லை. இந்த மகனுக்கு சிமியோன் என லேயாள் பெயரிட்டாள். “கேட்டல்” என்பது அதன் அர்த்தம். “நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார்” என்று அவள் சொன்னாள்.—ஆதியாகமம் 29:30-33.
கர்த்தர் கேட்டருளினார் என்று சொல்லும்போது லேயாள் தன் நிலைமையைக் குறித்து ஜெபம் செய்திருப்பதாகத் தெரிகிறது. அவளும் ஒரு விசுவாசமுள்ள பெண்ணாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும், அவள் மூன்றாம் மகனாகிய லேவியைப் பெற்றெடுத்தப் பிறகும்கூட அவளுடைய வேதனை நீடித்தது. லேவி என்றால் “பற்றிக்கொண்டிருத்தல்” அல்லது “இணைதல்” என பொருள். அந்தப் பெயரைக் குறித்து லேயாள் இப்படி விவரித்தாள்: “என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார்.” ஆயினும், யாக்கோபு அவளிடம் நெருங்கி வரவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை லேயாளும் நிஜத்தை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ நான்காவது மகனின் பெயர், யாக்கோபுடன் இன்னும் அன்பான உறவை எதிர்பார்த்தது போன்ற எந்த நம்பிக்கையையும் எதிரொலிக்கவில்லை. அதற்குப் பதிலாக அவனுக்கு யூதா என்று பெயரிடுவதன்மூலம் கடவுளுக்கு நன்றியுணர்வைத் தெரிவித்தாள். “துதிக்கப்பட்ட” அல்லது “துதிக்குப் பாத்திரமான” என்பதே யூதா என்ற பெயரின் அர்த்தம். ‘இப்போது யெகோவாவைத் துதிப்பேன்’ என்று மட்டுமே லேயாள் சொன்னாள்.—ஆதியாகமம் 29:34, 35.
லேயாள்தான் இப்படி துயரப்பட்டுக் கொண்டிருந்தாள் என்றால், ராகேலும் அதே நிலையில்தான் இருந்தாள். “எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்” என்று அவள் யாக்கோபிடம் கெஞ்சினாள். (ஆதியாகமம் 30:1) ராகேல் யாக்கோபின் பாசத்தை அனுபவித்தாள், ஆனால் அவள் தாய்மைப்பேறு அடைய விரும்பினாள். லேயாளுக்கு பிள்ளை பாக்கியம் இருந்தது, அவளோ பாசத்தைப் பெற விரும்பினாள். இருவருமே மற்றவரிடம் இருந்ததைப் பெற ஏங்கினார்கள், ஆக, இருவருமே மகிழ்ச்சியாக இருக்கவில்லை. இருவரும் யாக்கோபை நேசித்தார்கள், அவருக்குப் பிள்ளைகளைப் பெற விரும்பினார்கள். இருவருமே ஒருவர்மீதொருவர் பொறாமைப்பட்டார்கள். குடும்பத்தில் எப்பேர்ப்பட்ட சோகமான நிலைமை!
ராகேலுக்குப் பிள்ளைகள்?
அந்தக் காலத்தில், மலட்டுத்தன்மை ஒரு பெரும் நிந்தையாகக் கருதப்பட்டது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் குடும்பத்தின் மூலமாக ஒரு ‘வித்தைப்’ பிறப்பிப்பதாகவும் அந்த வித்தின் மூலமாக எல்லா குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படுவதாகவும் அவர்களிடம் கடவுள் வாக்குறுதி அளித்திருந்தார். (ஆதியாகமம் 26:5; 28:14) ராகேலோ பிள்ளைகளின்றி இருந்தாள். அப்பேர்ப்பட்ட ஆசீர்வாதங்களில் பங்குபெற உதவும் வகையில் கடவுள்தான் ராகேலுக்கு மகன்களைக் கொடுக்க முடியும் என்று யாக்கோபு நியாயமாக எடுத்துச் சொன்னார். இருந்தாலும், ராகேல் பொறுமையிழந்தாள். “இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும்” என்று சொன்னாள்.—ஆதியாகமம் 30:2, 3.
ராகேல் இப்படிச் சிந்தித்ததைப் புரிந்துகொள்வது நமக்குக் கடினமாக இருக்கலாம். என்றாலும், மத்திய கிழக்கு பகுதியில் மலடியாக இருக்கும் பெண், வாரிசைப் பெறுவதற்காகத் தன் வேலைக்காரியை தன் புருஷனுக்குக் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமாக இருந்ததென்று அங்கு கண்டெடுக்கப்பட்ட பண்டைக்கால திருமண ஒப்பந்தங்கள் குறிப்பிடுகின்றன.a (ஆதியாகமம் 16:1-3) சில சந்தர்ப்பங்களில், அந்த வேலைக்காரியின் பிள்ளைகள் இந்த மனைவியின் பிள்ளைகளாகக் கருதப்படுவார்கள்.
பில்காள் ஒரு பையனைப் பெற்றபோது, ராகேல் சந்தோஷமாக இவ்வாறு அறிவித்தாள்: “தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார்.” அவனுக்கு தாண் என்று பெயரிட்டாள். தாண் என்றால் “நீதி வழங்கினார்” என்றர்த்தம். ராகேலும் தன் கஷ்டமான நிலைமையைக் குறித்து ஜெபம் செய்திருந்தாள். பில்காளுக்கு இரண்டாம் மகன் பிறந்தபோது ராகேல் அவனுக்கு நப்தலி என்று பெயரிட்டாள். “போராடினேன்” என்பது அதன் அர்த்தம். “நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்” என்று சொல்லி அவ்வாறு பெயரிட்டாள். இரு சகோதரிகளுக்கும் இடையே இருந்த கடும் போட்டியை இந்தப் பெயர்கள் சுட்டிக்காட்டுகின்றன.—ஆதியாகமம் 30:5-8.
பில்காளை யாக்கோபுக்குக் கொடுத்தபோது தன்னுடைய ஜெபங்களுக்கு இசைவாக நடப்பதாக ஒருவேளை ராகேல் நினைத்திருக்கலாம். ஆனால், அவளுக்குப் பிள்ளைகளைக் கொடுக்க இது கடவுள் காண்பித்த வழியல்ல. இதில் நமக்கு ஒரு பாடம் இருக்கிறது. யெகோவாவிடம் நாம் மன்றாடும்போது பொறுமையை இழந்துவிடக் கூடாது. எதிர்பாராத விதங்களில் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத சமயத்தில் நம் ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்கலாம்.
ராகேலுக்கு தான் இளைத்தவள் அல்ல என்பதைக் காண்பிக்கும் வகையில் லேயாளும் தன் வேலைக்காரியாகிய சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். அவள் முதலில் காத்தையும் பின்னர் ஆசேரையும் பெற்றெடுத்தாள்.—ஆதியாகமம் 30:9-13.
மான்ட்ரேக் என்னும் தூதாயீம் கனிகள் உட்பட்ட ஒரு சம்பவம் ராகேலுக்கும் லேயாளுக்கும் இடையிலிருந்த பகையை விளக்குகிறது. இந்தக் கனி கர்ப்பமடைய உதவி செய்ததாகக் கருதப்பட்டது. சில பழங்களைத் தரச் சொல்லி ராகேல் கேட்டபோது லேயாள் குத்தலாக பதிலடி கொடுத்தாள்: “நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ”? யாக்கோபு லேயாளோடு இருந்ததைவிடவும் அதிக நேரம் ராகேலோடு இருந்ததை இந்த வார்த்தைகள் குறிப்பிடுவதாகச் சிலர் புரிந்துகொள்கிறார்கள். ஒருவேளை லேயாளின் முறையீடு நியாயமானதென்று ராகேல் யோசித்திருக்கலாம். அவளுடைய பின்வரும் பதிலிலிருந்து அப்படித்தான் தோன்றுகிறது: “உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும்.” ஆகவே அன்று சாயங்காலம் யாக்கோபு வீடு திரும்பியபோது, “என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும்” என்று லேயாள் யாக்கோபுக்குச் சொன்னாள்.—ஆதியாகமம் 30:15, 16.
லேயாளுக்கு ஐந்தாவதாகவும் ஆறாவதாகவும் இரு மகன்கள் பிறந்தார்கள். இசக்கார் மற்றும் செபுலோன் என்பதே அவர்களுடைய பெயர்கள். அதற்குப்பின் அவள், “என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார்” என்றாள்.b—ஆதியாகமம் 30:17-20.
மான்ட்ரேக் கனிகள் கருத்தரிக்க உதவவில்லை. திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு ராகேல் கருத்தரித்து யோசேப்பைப் பெற்றெடுத்தது, யெகோவா அவளை ‘நினைத்து’ அவள் ஜெபத்திற்கு பதிலளித்ததனாலேயே. அப்போதுதான் “தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார்” என்று ராகேலால் சொல்ல முடிந்தது.—ஆதியாகமம் 30:22-24.
மரணமும் விட்டுச்சென்ற ஆஸ்தியும்
ராகேல், தன் இரண்டாம் மகனாகிய பென்யமீனைப் பிரசவிக்கையில் இறந்துவிட்டாள். யாக்கோபு உண்மையிலேயே ராகேலை நேசித்தார். அவளுடைய இரு மகன்களும் அவருக்கு அருமையானவர்களாய் இருந்தார்கள். பல வருடங்கள் கழித்தும், தன்னுடைய அந்திம காலத்தில், தனக்கு அன்பான ராகேலின் அகால மரணத்தைக் குறித்து அவரால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. (ஆதியாகமம் 30:1; 35:16-19; 48:7) லேயாளின் மரணத்தைப் பொறுத்தவரை, அவளை ஒரு குகையில் அவர் அடக்கம் பண்ணினதையும் தானும் அதே குகையில் அடக்கம் பண்ணப்பட விரும்பியதையும் தவிர வேறெந்த தகவலும் நமக்குத் தெரியாது.—ஆதியாகமம் 49:29-32.
யாக்கோபின் குடும்ப விவகாரங்கள் உட்பட அவருடைய வாழ்க்கையே சஞ்சலம் நிறைந்ததாய் இருந்ததென்று வயதான காலத்தில் அவர் ஒத்துக்கொள்கிறார். (ஆதியாகமம் 47:9) லேயாளுக்கும் ராகேலுக்கும்கூட வாழ்க்கை சோகமாகவே இருந்தது என்பதில் சந்தேகமில்லை. பலதாரமணத்தின் வருத்தகரமான விளைவுகளை இவர்களுடைய அனுபவம் காண்பிக்கிறது. அதோடு, யெகோவா ஏன் ஒரு மனிதனுக்கு ஒரு மனைவியை ஏற்படுத்தினார் என்பதையும் தெளிவாக்குகிறது. (மத்தேயு 19:4-8; 1 தீமோத்தேயு 3:2, 12) கணவன் அல்லது மனைவியின் காதல் உணர்ச்சிகளும் பாலியல் உணர்ச்சிகளும் அவரவர் துணையிடம் மட்டுமே வெளிப்படுத்தப்படாத பட்சத்தில் பொறாமை எழும்பும். விபசாரத்தையும் வேசித்தனத்தையும் கடவுள் தடைசெய்வதற்கு இதுவும் ஒரு காரணம்.—1 கொரிந்தியர் 6:18; எபிரெயர் 13:4.
எது எப்படி இருந்தாலும், அபூரணராக அதே சமயம் உண்மையுள்ளவர்களாக இருக்கும் ஆண்களையும் பெண்களையும் வைத்தே கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்றினார், இன்னும் நிறைவேற்றி வருகிறார். நம்மிடம் குறைகள் இருப்பதுபோலவே, அந்த இரு சகோதரிகளிடமும் குறைகள் இருந்தன. ஆனாலும், யெகோவா ஆபிரகாமிடம் கொடுத்திருந்த வாக்குறுதியை இந்தப் பெண்கள் மூலமாகவே நிறைவேற்ற தொடங்கினார். எனவே, ராகேலும் லேயாளும் “இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த”வர்கள் என்று சொல்லப்பட்டிருப்பது பொருத்தமானதே.—ரூத் 4:11.
[அடிக்குறிப்புகள்]
a ஈராக்கைச் சேர்ந்த நோஸியிலிருந்து கிடைத்த ஒரு திருமண ஒப்பந்தம் இவ்வாறு வாசிக்கிறது: “கிலிம்நினோ என்பவள் ஷெனிமா என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறாள். . . . கிலிம்நினோவுக்கு [பிள்ளைகள்] பிறக்காவிட்டால், லூலூ என்ற இடத்திலிருந்து கிலிம்நினோ ஒரு பெண்ணை [ஒரு வேலைக்காரியை] பார்த்து ஷெனிமாவுக்கு மனைவியாகக் கொடுக்கலாம்.”
b யாக்கோபின் மகள்களில், லேயாளுக்குப் பிறந்த தீனாளின் பெயர் மட்டுமே நமக்குத் தெரியும்.—ஆதியாகமம் 30:21; 46:7.
[பக்கம் 9-ன் படம்]
லேயாளும் ராகேலும் மற்றவரிடம் இருந்ததைப் பெற ஏங்கினார்கள், ஆக, இருவருமே மகிழ்ச்சியாக இருக்கவில்லை
[பக்கம் 10-ன் படம்]
யாக்கோபின் 12 மகன்களிலிருந்து இஸ்ரவேல் தேசத்தார் உருவானார்கள்