யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
நியாயாதிபதிகள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
தமது சொந்த ஜனங்கள் தம்மை விட்டுவிட்டு, பொய்க் கடவுட்களை வணங்க ஆரம்பிக்கும்போது யெகோவா என்ன செய்கிறார்? அவர்கள் திரும்பத் திரும்ப யெகோவாவை விட்டு விலகிப்போய், கஷ்டங்கள் வரும்போது மட்டும் உதவிக்காக அவரை நோக்கி கூப்பிடும்போது என்ன நடக்கிறது? அந்தச் சமயத்திலும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு அவர் ஏற்பாடு செய்கிறாரா? இக்கேள்விகளுக்கும் இன்னும் சில முக்கிய கேள்விகளுக்கும் நியாயாதிபதிகள் புத்தகம் பதிலளிக்கிறது. சுமார் பொ.ச.மு. 1100-ல் சாமுவேல் தீர்க்கதரிசியால் இப்புத்தகம் எழுதி முடிக்கப்பட்டது. சுமார் 330 வருட காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள், அதாவது யோசுவாவின் இறப்பு முதற்கொண்டு இஸ்ரவேலின் முதல் ராஜா அரியணை ஏறியது வரையான சம்பவங்கள் இதில் அடங்கியுள்ளன.
கடவுளுடைய வல்லமைமிக்க வார்த்தையின் அல்லது செய்தியின் பாகமான இந்த நியாயாதிபதிகள் புத்தகம் நமக்கு அதிக முக்கியத்துவமுடையது. (எபிரெயர் 4:12) இதில் காணப்படும் விறுவிறுப்பூட்டும் சம்பவங்கள் கடவுளுடைய ஆளுமையை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன. இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற பாடங்கள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன; அதோடு, கடவுள் வாக்குக் கொடுத்துள்ள புதிய பூமியில் ‘மெய்யான வாழ்க்கையை,’ அதாவது நித்திய ஜீவனை உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கும் உதவுகின்றன. (1 தீமோத்தேயு 6:12, 19, NW; 2 பேதுரு 3:13) தமது ஜனங்களை இரட்சிப்பதற்கு யெகோவா செய்யும் காரியங்கள் எதிர்காலத்தில் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் பெரியளவில் விடுதலை அளிக்கவிருப்பதற்கு முன்நிழலாக இருக்கின்றன.
நியாயாதிபதிகள் தேவைப்பட்டது ஏன்?
யோசுவாவின் தலைமையில் கானான் தேசத்து ராஜாக்களை முறியடித்த பிறகு, இஸ்ரவேல் கோத்திரத்தார் சுதந்தரமாக தாங்கள் பெற்ற இடங்களில் குடியேறுகிறார்கள். என்றாலும் அத்தேசத்தில் குடியிருப்பவர்களை அவர்கள் முற்றிலும் துரத்திவிடுவதில்லை. இது அவர்களுக்கு உண்மையிலேயே ஒரு கண்ணியாக அமைந்துவிடுகிறது.
யோசுவாவின் காலத்திற்குப்பின் வந்த சந்ததியார், ‘யெகோவாவையும் அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறிவதில்லை.’ (நியாயாதிபதிகள் 2:10) அதுமட்டுமல்ல, அவர்கள் கானானியரை மணந்துகொண்டு அவர்களுடைய தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆகவே இஸ்ரவேலரை எதிரிகளின் கையில் யெகோவா விட்டுவிடுகிறார். எதிரிகளின் ஒடுக்குதலை சகிக்க முடியாமல் போகும்போது அவர்கள் உதவி கேட்டு மெய்க் கடவுளிடம் வேண்டுகிறார்கள். இப்படிப்பட்ட மத, சமூக, அரசியல் சூழலில் எதிரிகளிடமிருந்து தமது ஜனங்களைப் பாதுகாப்பதற்கு நியாயாதிபதிகளை யெகோவா எழுப்புகிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:2, 4—தேசத்தில் ஒவ்வொரு கோத்திரமும் அதனதன் பங்கை சுதந்தரிக்க அனுப்பப்படுகையில் யூதா கோத்திரம் ஏன் அதை முதலில் பெற்றது? சட்டப்படி, இந்தச் சிலாக்கியம் ரூபன் கோத்திரத்திற்குக் கிடைக்க வேண்டும், ஏனென்றால் ரூபனே யாக்கோபின் தலைப்பிள்ளை. ஆனால் அவர் தலைப்பிள்ளை உரிமையை இழந்ததால் மேன்மை அடையப் போவதில்லை என்றும் சிமியோனும் லேவியும் மூர்க்கமாக நடந்ததால் இஸ்ரவேலிலே சிதறுண்டு போவார்கள் என்றும் யாக்கோபு தன் மரண படுக்கையில் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். (ஆதியாகமம் 49:3-5, 7) ஆகவே, யாக்கோபின் நான்காவது மகன் யூதாதான் அடுத்ததாக இந்தச் சிலாக்கியத்தைப் பெறும் நிலையில் இருந்தார். யூதாவுடன் சென்ற சிமியோனுக்கோ, யூதாவுக்குக் கொடுக்கப்பட்ட விஸ்தாரமான பகுதியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த சிறுசிறு பகுதிகள் கிடைத்தன.a—யோசுவா 19:9.
1:6, 7—பிடிபட்ட ராஜாக்களுடைய கைகால்களின் பெருவிரல்கள் ஏன் துண்டிக்கப்பட்டன? கைகால்களின் பெருவிரல்களை ஒருவன் இழந்தால் அவன் இராணுவத்திற்குத் தகுதியற்றவனாகி விடுவான். கையில் பெருவிரல் இல்லாவிட்டால் ஒரு படைவீரனால் பட்டயத்தையோ ஈட்டியையோ எப்படி பயன்படுத்த முடியும்? அதுபோல காலில் பெருவிரல் இல்லாவிட்டால் தடுமாற்றமின்றி உறுதியாக நிற்க முடியாது.
நமக்குப் பாடம்:
2:10-12. ‘யெகோவா செய்த சகல உபகாரங்களையும் மறக்காமல்’ இருப்பதற்கு பைபிளை நாம் தவறாமல் படிக்க வேண்டும். (சங்கீதம் 103:2) தங்களுடைய பிள்ளைகளின் இருதயத்தில் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை பெற்றோர் ஆழப் பதிய வைக்க வேண்டும்.—உபாகமம் 6:6-9.
2:14, 21, 22. யெகோவா ஒரு நோக்கத்திற்காகவே, அதாவது கண்டிப்பதற்கும் நல்வழிப்படுத்துவதற்கும் தம்மிடம் திரும்பி வரும்படி தூண்டுவதற்குமே கீழ்ப்படியாமற்போன தமது ஜனங்கள் மீது கெட்ட காரியங்களை அனுமதிக்கிறார்.
நியாயாதிபதிகளை யெகோவா எழும்பப் பண்ணுகிறார்
நியாயாதிபதிகளின் செயல்களைப் பற்றிய விறுவிறுப்பூட்டும் சம்பவங்கள் ஒத்னியேல் என்ற நியாயாதிபதியின் காலத்திலிருந்து ஆரம்பமாகின்றன. மெசொப்பொத்தாமியா ராஜாவின்கீழ் எட்டு வருடம் அடிமைப்பட்டு கிடந்த இஸ்ரவேலரை அவர் விடுவிக்கிறார். நியாயாதிபதியான ஏகூத் ஓர் உபாயத்தைப் பயன்படுத்தி, பருத்த மேனியுடைய மோவாபிய ராஜாவான எக்லோனை துணிச்சலுடன் கொன்றுவிடுகிறார். வீரமிக்க சம்கார் ஒரு தாற்றுக்கோலால் 600 பெலிஸ்தரை தன்னந்தனியாக முறியடிக்கிறார். தீர்க்கதரிசினியாக சேவை செய்கிற தெபொராளின் ஊக்குவிப்பாலும் யெகோவாவின் ஆதரவாலும் பாராக்கும் ஆயுதங்களைக் குறைவாக வைத்திருக்கிற அவரது பத்தாயிரம் படை வீரர்களும் சிசெராவின் வலிமைமிக்க படை வீரர்களை முறியடிக்கிறார்கள். கிதியோன் என்பவரை யெகோவா எழும்பப் பண்ணி, அவரையும் அவரது 300 பேரையும் பயன்படுத்தி மீதியானியரை வீழ்த்துகிறார்.
யெப்தாவின் மூலம் அம்மோன் புத்திரரிடமிருந்து இஸ்ரவேலரை யெகோவா விடுவிக்கிறார். இஸ்ரவேலரை நியாயம் விசாரிக்கிற 12 பேரில் தோலா, யாவீர், இப்சான், ஏலோன், அப்தோன் ஆகியோரும் அடங்குவர். பெலிஸ்தருக்கு எதிராக சிம்சோன் போரிடுகிறார். இவருடன் நியாயாதிபதிகளின் காலம் முடிவுக்கு வருகிறது.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
4:8—தன்னுடன் போர்க்களத்திற்கு வரும்படி தீர்க்கதரிசினியான தெபொராளை பாராக் ஏன் வற்புறுத்தினார்? சிசெராவின் படையை எதிர்த்துப் போர் தொடுக்க பாராக் தகுதியற்றவராய் உணர்ந்ததாகத் தெரிகிறது. இந்தத் தீர்க்கதரிசினி அவருடன் இருந்தது, அவருக்கும் அவருடைய ஆட்களுக்கும் கடவுளுடைய வழிநடத்துதல் இருந்ததை உறுதிப்படுத்தி, தன்னம்பிக்கையை அளிக்கும். அப்படியானால், தெபொராள் தன்னுடன் கட்டாயம் வரவேண்டுமென பாராக் சொன்னது பலவீனத்திற்கு அடையாளமல்ல, பலமான விசுவாசத்திற்கு அடையாளமாகும்.
5:20—பாராக்கின் சார்பாக வானத்து நட்சத்திரங்கள் எப்படிப் போரிட்டன? இது தேவதூதர்களுடைய உதவி கிடைத்ததையோ, சிசெராவின் ஞானிகள் நினைத்தபடி கெட்ட சகுனத்திற்கு அடையாளமாக விண்கற்கள் விழுந்ததையோ, சோதிட முன்கணிப்புகளை ஒருவேளை சிசெரா நம்பியிருந்தது பொய்யாகிப் போனதையோ குறிப்பதாக பைபிள் சொல்வதில்லை. ஆனால் ஏதோவொரு விதத்தில் கடவுள் தலையிட்டார் என்பதில் சந்தேகமில்லை.
7:1-3; 8:10—1,35,000 பேரைக் கொண்ட எதிரி படையுடன் யுத்தம் செய்ய கிதியோனிடமிருந்த 32,000 பேரே வெகு அதிகம் என யெகோவா ஏன் சொன்னார்? ஏனெனில் கிதியோனுக்கும் அவருடைய ஆட்களுக்கும் வெற்றி தேடித் தருவது யெகோவா தேவனே. தங்களுடைய பலத்தால் மீதியானியரை முறியடித்ததாக அவர்கள் நினைப்பதை அவர் விரும்பவில்லை.
11:30, 31—யெப்தா பொருத்தனை செய்தபோது, நரபலி கொடுக்கும் எண்ணம் அவருக்கு இருந்ததா? அப்படிப்பட்ட ஒரு எண்ணமே யெப்தாவுக்கு இருந்திருக்காது. ஏனென்றால், ‘தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப் பண்ணுகிறவன் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம்’ என நியாயப்பிரமாணம் திட்டவட்டமாக குறிப்பிட்டது. (உபாகமம் 18:10, 11) என்றாலும், ஒரு மிருகத்தை அல்ல, ஒரு நபரைப் பற்றிய எண்ணமே அவருக்கு இருந்தது. ஏனென்றால் பலி செலுத்துவதற்குரிய மிருகங்கள் இஸ்ரவேலருடைய வீடுகளில் இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, பொருத்தனை செய்யுமளவுக்கு மிருக பலி செலுத்துவது அப்படியொன்றும் விசேஷித்ததாக இருந்திருக்காது. அநேகமாக தன்னை வரவேற்க வீட்டிலிருந்து வருவது தன் மகளாகவும் இருக்கலாம் என்பதை யெப்தா அறிந்திருந்தார். இவளை ‘சர்வாங்க தகனபலியாகக்’ கொடுப்பது, பரிசுத்த ஸ்தலத்தில் யெகோவாவை முழுமையாய் சேவிப்பதற்காக அர்ப்பணிப்பதைக் குறிக்கும்.
நமக்குப் பாடம்
3:10. ஆன்மீக காரியங்களுக்காக நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு மனித ஞானத்தால் அல்ல, ஆனால் யெகோவாவின் ஆவியாலேயே வெற்றி கிடைக்கிறது.—சங்கீதம் 127:1, 2.
3:21. ஏகூத் தனது பட்டயத்தைத் திறமையாகவும் தைரியமாகவும் பாய்ச்சினார், நாமும் “தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தை” நன்கு பயன்படுத்தும் திறமையைப் பெற்றுக்கொள்வது அவசியம். அப்படியானால், ஊழியத்தில் பைபிள் வசனங்களைத் தைரியமாகப் பயன்படுத்துவது அவசியம்.—எபேசியர் 6:17; 2 தீமோத்தேயு 2:15.
6:11-15; 8:1-3, 22, 23. கிதியோனுடைய பணிவான குணம் மூன்று முக்கிய பாடங்களை நமக்குக் கற்பிக்கிறது: (1) நமக்கு ஒரு சிலாக்கியம் கொடுக்கப்படும்போது, அதனால் வரும் புகழையோ அந்தஸ்தையோ பற்றி யோசிக்காமல் அதில் உட்பட்டுள்ள பொறுப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டும். (2) வம்புச் சண்டைக்கு இழுக்கும் ஆட்களிடம் பணிவைக் காட்டுவது ஞானமான செயலாகும். (3) ஸ்தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதிருக்க பணிவு உதவுகிறது.
6:17-22, 36-40. நாமும்கூட உஷாராக இருப்பதும் ‘ஏவப்பட்ட எல்லா வசனிப்புகளையும் நம்பாதிருப்பதும்’ அவசியம். அதற்கு மாறாக, ‘ஏவப்பட்ட அந்த வசனிப்புகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறிவது’ அவசியம். (1 யோவான் 4:1, 2, NW) ஒரு புதிய மூப்பர் தான் கொடுக்கப் போகும் ஆலோசனை வேதப்பூர்வமானதா என்பதை உறுதி செய்துகொள்வதற்கு அனுபவமுள்ள ஒரு மூப்பரின் உதவியை நாடுவது ஞானமானது.
6:25-27. எதிர்க்கிறவர்களின் கோபத்தை அநாவசியமாக கிளறிவிடாதிருக்கும் விஷயத்தில் கிதியோன் விவேகமாக நடந்துகொண்டார். நற்செய்தியைப் பிரசங்கிக்கையில், நாம் பேசும் விதம் மற்றவர்களைத் தேவையில்லாமல் புண்படுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
7:6. யெகோவாவுக்குச் சேவை செய்கையில் கிதியோனுடைய 300 பேரைப் போல நாம் விழிப்புடனும் ஜாக்கிரதையுடனும் இருக்க வேண்டும்.
9:8-15. இறுமாப்புடன் நடந்துகொள்வதும், பதவிக்காக அல்லது அந்தஸ்துக்காக ஆலாய்ப் பறப்பதும் எவ்வளவு முட்டாள்தனம்!
11:35-37. யெப்தாவின் மகள் பலமான விசுவாசத்தையும் சுயதியாக மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்ள அவரது சிறந்த முன்மாதிரி உண்மையிலேயே உதவியது. இன்றும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட முன்மாதிரியை வைக்கலாம்.
11:40. யெகோவாவின் சேவையில் ஆர்வத்துடன் ஈடுபடும் ஒருவரைப் பாராட்டும்போது அது அவருக்கு ஊக்கமளிக்கிறது.
13:8. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குப் போதிக்கையில், யெகோவாவின் உதவிக்காக ஜெபித்து அவருடைய வழிநடத்துதலை பின்பற்ற வேண்டும்.
14:16, 17; 16:16. சதா அழுது, நச்சரித்து ஒருவரைப் போட்டு தொல்லைப்படுத்துவது அவரோடுள்ள உறவுக்கு ஊறு விளைவிக்கலாம்.—நீதிமொழிகள் 19:13; 21:19.
இஸ்ரவேலர் செய்த பிற தவறுகள்
நியாயாதிபதிகள் புத்தகத்தின் கடைசி பகுதியில் குறிப்பிடத்தக்க இரண்டு சம்பவங்கள் உள்ளன. ஒன்று மீகா என்பவனைப் பற்றியது; அவன் ஒரு விக்கிரகத்தை உண்டுபண்ணி, லேவியன் ஒருவனை தனக்கு ஆசாரியனாக நியமிக்கிறான். தாண் கோத்திரத்தார் லாயீஸ் பட்டணத்தை, அதாவது லேசேம் பட்டணத்தை அழித்த பிறகு அதைத் திரும்பக் கட்டி அப்பட்டணத்திற்கு தாண் என்று பெயர் சூட்டுகிறார்கள். மீகாவின் விக்கிரகத்தையும் அந்த ஆசாரியனையும் பயன்படுத்தி தாண் பட்டணத்தில் மற்றொரு வழிபாட்டை ஆரம்பிக்கிறார்கள். லாயீஸ் பட்டணம் யோசுவாவின் மரணத்திற்கு முன்பாகவே கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.—யோசுவா 19:47.
இரண்டாவது சம்பவம், யோசுவா இறந்து கொஞ்ச காலத்திலேயே நடக்கிறது. பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கிபியா பட்டணத்தார் சிலர் ஒரு பெண்ணைக் கற்பழித்ததால், கிட்டத்தட்ட அந்தக் கோத்திரமே அழிக்கப்பட்டுவிடுகிறது; 600 ஆண்கள் மட்டுமே தப்பிப்பிழைக்கிறார்கள். என்றாலும், அவர்களுக்கு மனைவிகள் கிடைப்பதற்கு நடைமுறையான ஏற்பாடு செய்யப்படுகிறது; அதனால் தாவீதின் ஆட்சி காலத்திற்குள் அவர்களுடைய யுத்த மனுஷரின் எண்ணிக்கை ஏறக்குறைய 60,000 ஆக அதிகரிக்கிறது.—1 நாளாகமம் 7:6-11.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
17:6; 21:25—‘அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தது’ அராஜகத்தைத் தூண்டிவிட்டதா? இல்லை, ஏனென்றால் தமது ஜனங்களை வழிநடத்துவதற்கு யெகோவா போதிய ஏற்பாடுகளை செய்திருந்தார். அவர்களை தமது வழியில் பயிற்றுவிப்பதற்காக நியாயப்பிரமாண சட்டத்தையும் ஆசாரியர்களையும் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு ஊரீம் தும்மீம் என்பவற்றின் மூலம் ஆசாரியர்கள் கடவுளிடம் ஆலோசனை கேட்டார்கள். (யாத்திராகமம் 28:30) சிறந்த ஆலோசனை அளிப்பதற்கு ஒவ்வொரு பட்டணத்திலும் மூப்பர்களும்கூட இருந்தார்கள். இந்த ஏற்பாடுகளை எல்லாம் ஓர் இஸ்ரவேலன் பயன்படுத்திக் கொள்ளும்போது அவனுடைய மனசாட்சிக்கு சிறந்த வழிகாட்டுதல் கிடைக்கிறது. இந்த விதத்தில் ‘தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தது’ நன்மையாய் முடிந்தது. மறுபட்சத்தில், ஒருவன் நியாயப்பிரமாணத்தை அவமதித்து, நடத்தை, வழிபாடு சம்பந்தப்பட்டதில் தனது சொந்த தீர்மானங்களை எடுத்தபோது அது தீமையில் போய் முடிந்தது.
20:17-48—பென்யமீன் கோத்திரத்தார் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக இருந்தபோதிலும், பிற கோத்திரத்தார் இருமுறை முறியடிக்கப்படுவதற்கு அவர்களை யெகோவா ஏன் அனுமதித்தார்? பேரிழப்பை எதிர்ப்படுவதற்கு உண்மையுள்ள கோத்திரத்தாரை முதலில் அனுமதிப்பதன் மூலம் இஸ்ரவேலிலிருந்து தீமையை வேரோடு பிடுங்கிப் போடுவதில் அவர்கள் எந்தளவு உறுதியாக இருந்தார்கள் என்பதை யெகோவா சோதித்தார்.
நமக்குப் பாடம்:
19:14, 15. கிபியா பட்டணத்தார் உபசரிக்கும் குணத்தைக் காட்ட மனமில்லாதிருந்தது தார்மீக விஷயத்தில் அவர்கள் குறைவுபட்டதைச் சுட்டிக்காட்டியது. கிறிஸ்தவர்கள் ‘உபசரிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும்படி’ அறிவுறுத்தப்படுகிறார்கள்.—ரோமர் 12:13, NW.
விடுதலை சமீபம்
கிறிஸ்து இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய ராஜ்யம் வெகு விரைவில் இந்தப் பொல்லாத உலகை அழித்து, செம்மையானவர்களுக்கும் உத்தமர்களுக்கும் பெரும் விடுதலையை அளிக்கும். (நீதிமொழிகள் 2:21, 22; தானியேல் 2:44) ‘யெகோவாவைப் பகைக்கிற யாவரும் அப்போது அழிக்கப்படுவார்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப் போல இருப்பார்கள்.’ (நியாயாதிபதிகள் 5:31) ஆகவே, நியாயாதிபதிகள் புத்தகத்திலிருந்து நாம் கற்ற காரியங்களைப் பின்பற்றுவதன் மூலம் யெகோவாவில் அன்புகூருகிறவர்களாக இருப்போமாக.
இப்புத்தகத்தில் திரும்பத் திரும்ப விளக்கிக் காட்டப்பட்டிருக்கிற அடிப்படை உண்மை இதுதான்: யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது அபரிமிதமான ஆசீர்வாதங்களைத் தரும், கீழ்ப்படியாமல் போவது பெரும் நாசத்தை விளைவிக்கும். (உபாகமம் 11:26-28) அப்படியானால், கடவுள் நமக்குத் தெரியப்படுத்தியுள்ள சித்தத்திற்கு ‘மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிவது’ எவ்வளவு முக்கியம்!—ரோமர் 6:17; 1 யோவான் 2:17.
[அடிக்குறிப்பு]
a வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் ஆங்காங்கே இருந்த 48 பட்டணங்களைத் தவிர வேறெதுவும் லேவியருக்கு சுதந்தரமாக கொடுக்கப்படவில்லை.
[பக்கம் 25-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
‘யெகோவா நியாயாதிபதிகளை எழும்பப் பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.’—நியாயாதிபதிகள் 2:16
நியாயாதிபதிகள்
1. ஒத்னியேல்
2. ஏகூத்
3. சம்கார்
4. பாராக்
5. கிதியோன்
6. தோலா
7. யாவீர்
8. யெப்தா
9. இப்சான்
10. ஏலோன்
11. அப்தோன்
12. சிம்சோன்
தாண்
மனாசே
நப்தலி
ஆசேர்
செபுலோன்
இசக்கார்
மனாசே
காத்
எப்பிராயீம்
தாண்
பென்யமீன்
ரூபன்
யூதா
[பக்கம் 26-ன் படம்]
போர்க்களத்திற்குத் தன்னுடன் வரும்படி தெபொராளை பாராக் வற்புறுத்தியதிலிருந்து நீங்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டீர்கள்?