யெகோவாவுடைய கோபத்தின் நாள் வருமுன்னே அவரைத் தேடுங்கள்
‘யெகோவாவைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.’—செப்பனியா 2:3.
1. செப்பனியா தன் தீர்க்கதரிசன வேலையை ஆரம்பிக்கும்போது யூதாவின் ஆன்மீக நிலைமை எவ்வாறு இருந்தது?
யூதாவின் சரித்திரத்தில் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் செப்பனியா தன் தீர்க்கதரிசன வேலையை ஆரம்பித்தார். மக்களின் ஆன்மீக நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அவர்கள் யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக, உதவிக்காக புறமத ஆசாரியர்களையும் ஜோதிடர்களையும் நாடினார்கள். எங்கு பார்த்தாலும் மக்கள் கருவள சடங்குகளைச் செய்து பாகாலை வழிபட்டு வந்தார்கள். தேசத்தின் தலைவர்களாகிய பிரபுக்களும் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் யாரை பாதுகாக்க வேண்டுமோ அவர்களையே ஒடுக்கி வந்தார்கள். (செப்பனியா 1:9; 3:3) இப்போது யூதாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாக தம் “கையை நீட்டி” அவர்களை அழிக்க யெகோவா தீர்மானித்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!—செப்பனியா 1:4.
2. யூதாவிலிருந்த கடவுளின் உண்மையுள்ள ஊழியர்களுக்கு என்ன நம்பிக்கை இருந்தது?
2 நிலைமை மிகவும் மோசமாக இருந்தாலும், அங்கேயும் நம்பிக்கை எனும் மெல்லிய ஒளிக்கீற்று இருக்கத்தான் செய்தது. ஆமோனின் குமாரன் யோசியா இப்போது ஆட்சி செய்துகொண்டிருந்தார். யோசியா சிறு பையனாக இருந்தாலும் யெகோவாவை மிகவும் நேசித்தார். புதிய அரசன் யூதாவில் மெய் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டிவிட்டால், கடவுளை உண்மையுடன் சேவித்துக்கொண்டிருந்த அந்த சொற்ப பேருக்கு அது எத்தனை ஊக்கமூட்டுவதாக இருக்கும்! மற்றவர்களும் ஒருவேளை அவர்களை சேர்ந்துகொள்ள தூண்டப்படலாம், யெகோவாவின் கோபத்தின் நாளிலே தப்பியும் பிழைக்கலாம்.
பாதுகாக்கப்படுவதற்கு நிபந்தனைகள்
3, 4. ‘யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே’ தப்பிப்பிழைப்பதற்கு என்ன மூன்று நிபந்தனைகளை ஒருவர் பூர்த்தி செய்ய வேண்டும்?
3 யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே சிலர் உண்மையில் தப்பிப்பிழைப்பார்களா? ஆம், செப்பனியா 2:1-3-ல் உள்ள மூன்று நிபந்தனைகளின்படி செய்தால் அவர்கள் தப்பிப்பிழைக்கலாம். இந்த வசனங்களை வாசிக்கையில் அந்த நிபந்தனைகள் என்ன என்பதை விசேஷமாக கவனிப்போமாக. செப்பனியா இவ்வாறு எழுதினார்: ‘கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்து போகுமுன்னும் யெகோவாவுடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும் . . . தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவுடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.’
4 அப்படியென்றால் பாதுகாக்கப்படுவதற்கு ஒருவர் (1) யெகோவாவைத் தேட வேண்டும், (2) நீதியைத் தேட வேண்டும், (3) மனத்தாழ்மையைத் தேட வேண்டும். இவற்றில் இன்று நாம் மிகவும் அக்கறை காட்ட வேண்டும். ஏன்? ஏனென்றால் பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டில் யூதாவும் எருசலேமும் கணக்குத் தீர்க்கும் நாளை எதிர்ப்பட்டது போலவே கிறிஸ்தவமண்டல தேசங்களும்—சொல்லப்போனால், பொல்லாதவர்கள் அனைவரும்—வரப்போகிற ‘மிகுந்த உபத்திரவத்தில்’ யெகோவா தேவனோடு அப்படிப்பட்ட ஒரு நாளை எதிர்ப்பட வேண்டியுள்ளது. (மத்தேயு 24:21) அப்போது காப்பாற்றப்பட விரும்பும் எவரும் இப்போதே தீர்மானமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்படி? காலம் கடந்துவிடுவதற்கு முன்பாக யெகோவாவைத் தேட வேண்டும், நீதியைத் தேட வேண்டும், மனத்தாழ்மையைத் தேட வேண்டும்!
5. இன்று ‘யெகோவாவைத் தேடுவதில்’ உட்பட்டிருப்பது என்ன?
5 ‘நான் ஒரு யெகோவாவின் சாட்சி, கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்ற ஒரு ஊழியன். இந்த நிபந்தனைகளையெல்லாம் ஏற்கெனவே பூர்த்தி செய்துவிட்டேனே’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். உண்மையைச் சொன்னால் யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தால் மாத்திரம் போதாது. அதைவிட அதிகம் தேவைப்படுகிறது. இஸ்ரவேலர் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு ஜனமாக இருந்தார்கள், ஆனால் செப்பனியாவின் நாளில் யூதாவிலிருந்த மக்கள் தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு ஏற்ப வாழவில்லை. இதனால் யெகோவா அந்தத் தேசத்தை புறக்கணித்துவிட்டார். இன்று ‘யெகோவாவைத் தேடுவது’ என்பது யெகோவாவுடைய காணக்கூடிய அமைப்போடு சேர்ந்து, அவருடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டு அதைக் காத்துக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. அப்படியென்றால் காரியங்களை யெகோவா எவ்வாறு நோக்குகிறார் என்பதை அறிந்து செயல்பட வேண்டும், அவருடைய உணர்ச்சிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் அவருடைய வார்த்தையை கவனமாக படித்து, அதை தியானித்து, அதன் புத்திமதிகளின்படி வாழ்ந்தால் யெகோவாவைத் தேடுகிறோம் என சொல்லலாம். யெகோவாவின் வழிநடத்துதலை ஊக்கமாக ஜெபத்தில் கேட்டு அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை பின்பற்றும்போது அவரோடு நமக்குள்ள உறவு இன்னும் நெருக்கமாகிறது; மேலும், அவரை ‘முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும்’ சேவிக்க தூண்டப்படுகிறோம்.—உபாகமம் 6:5; கலாத்தியர் 5:22-25; பிலிப்பியர் 4:6, 7; வெளிப்படுத்துதல் 4:11.
6. நாம் எவ்வாறு ‘நீதியைத் தேடுகிறோம்,’ இந்த உலகத்திலும் அது எவ்வாறு சாத்தியம்?
6 செப்பனியா 2:3-ல் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது நிபந்தனை “நீதியைத் தேடுங்கள்” என்பதாகும். கிறிஸ்தவ முழுக்காட்டுதலுக்கு தகுதிபெற நம்மில் அநேகர் முக்கியமான மாற்றங்களைச் செய்தோம், ஆனால் நாம் கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்தில் நன்றாக கடைப்பிடித்து வந்த சிலர் பிற்பாடு இந்த உலகத்தால் கறைபட தங்களை அனுமதித்திருக்கிறார்கள். பாலின ஒழுக்கக்கேட்டையும் பொய் சொல்லுவதையும் மற்ற பாவங்களையும் இயல்பானதாக கருதும் ஆட்களே நம்மை சுற்றியிருப்பதால் நீதியைத் தேடுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால் யெகோவாவை பிரியப்படுத்த வேண்டும் என்ற பலமான ஆசை நமக்கு இருந்தால், உலகத்தோடு இரண்டற கலந்து உலகத்தின் அங்கீகாரத்தை நாட விரும்பும் ஆசையை மேற்கொள்ளலாம். யூதா தேவபக்தியில்லாத தன் அண்டை நாடுகளைப் பார்த்துப் பின்பற்றியதால் கடவுளுடைய தயவை இழந்துபோனது. அதனால் உலகத்தைப் பின்பற்றுவதற்கு பதிலாக, “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்” கொண்டு “தேவனைப் பின்பற்றுகிறவர்”களாக நாம் இருப்போமாக.—எபேசியர் 4:24; 5:1.
7. நாம் எவ்வாறு ‘மனத்தாழ்மையைத் தேட’ முடியும்?
7 யெகோவாவின் கோபத்தின் நாளில் மறைக்கப்பட விரும்பினால், செப்பனியா 2:3 குறிப்பிடும் மூன்றாவது நிபந்தனையின்படி நாம் ‘மனத்தாழ்மையைத் தேட’ வேண்டும். ஒவ்வொரு நாளும் மருந்துக்குக்கூட மனத்தாழ்மையே இல்லாத ஆண்களையும் பெண்களையும் இளைஞர்களையும் நாம் சந்திக்கிறோம். அவர்களுக்கு சாந்தகுணம் ஒரு குறையாகத் தெரிகிறது. பணிந்துபோவதை மிகப் பெரிய பலவீனமாக கருதுகிறார்கள். அவர்கள் எப்போதும் எதிர்க்கிறார்கள், சுயநலவாதிகளாக இருக்கிறார்கள், தங்கள் கருத்தே சரி என பிடிவாதமாக வற்புறுத்துகிறார்கள். என்ன நஷ்டம் வந்தாலும் தங்களுடைய “உரிமைகள்” வழங்கப்பட்டே ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட சில மனப்பான்மைகள் நமக்கு வந்துவிடுமானால் அது எவ்வளவு விசனகரமானது! இது ‘மனத்தாழ்மையைத் தேட’ வேண்டிய காலம். எவ்வாறு? கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருந்து, அவருடைய சிட்சையை மனத்தாழ்மையுடன் ஏற்று அவருடைய சித்தத்துக்கு இசைவாக வாழ்வதன் மூலம்.
ஏன் “ஒருவேளை” மறைக்கப்படுவோம்?
8. செப்பனியா 2:3-ல் “ஒருவேளை” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது எதைக் குறிக்கிறது?
8 செப்பனியா 2:3 சொல்வதை கவனியுங்கள்: ‘ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.’ ‘தேசத்திலுள்ள சிறுமையானவர்களிடம்’ பேசும்போது ஏன் “ஒருவேளை” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது? ஆம், அந்தச் சிறுமையானவர்கள் சரியான நடவடிக்கைகளை எடுத்தார்கள், ஆனால் அங்கே தன்னம்பிக்கைக்கு வாய்ப்பில்லை. வாழ்க்கைப் பாதையின் முடிவு வரை அவர்கள் இன்னும் உத்தமத்தைக் காட்டவில்லை. இவர்களில் சிலர் ஒருவேளை பாவத்துக்குள் விழுந்துவிடும் வாய்ப்பு இருந்தது. நம்முடைய விஷயத்திலும் இதுவே உண்மை. இயேசு சொன்னார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 24:13) ஆம், நாம் தொடர்ந்து யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்துகொண்டிருந்தால் மட்டுமே அவரது கோபத்தின் நாளிலே இரட்சிப்பு கிடைக்கும். இதுவே உங்கள் உறுதியான தீர்மானமாக இருக்கிறதா?
9. இளம் யோசியா ராஜா என்ன சரியான நடவடிக்கைகளை எடுத்தார்?
9 செப்பனியாவின் வார்த்தைகளைக் கேட்ட யோசியா ராஜா ‘யெகோவாவைத் தேட’ தூண்டப்பட்டார். வேதவசனங்கள் இவ்வாறு சொல்கின்றன: “அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில் [சுமார் 16 வயதாயிருக்கையில்], தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்”பித்தான். (2 நாளாகமம் 34:3) அதே போல யோசியா தொடர்ந்து ‘நீதியை தேடிக்கொண்டிருந்தார்,’ ஏனென்றால் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான். அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்.” (2 நாளாகமம் 34:3, 4) யோசியா அதே போல ‘மனத்தாழ்மையைத் தேடினார்.’ விக்கிரகாராதனையிலிருந்தும் மற்ற பொய் மத பழக்கங்களிலிருந்தும் தேசத்தை சுத்திகரிப்பதன் மூலம் யெகோவாவை பிரியப்படுத்த மனத்தாழ்மையுடன் செயல்பட்டார். இவற்றையெல்லாம் பார்த்து மனத்தாழ்மையுள்ளவர்களாயிருந்த மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்!
10. பொ.ச.மு. 607-ல் யூதாவுக்கு என்ன நடந்தது, ஆனால் யார் காக்கப்பட்டார்கள்?
10 யோசியா ராஜாவின் ஆட்சிகாலத்தில் அநேக யூதர்கள் யெகோவாவிடம் திரும்பினார்கள். ஆனால் ராஜா மரித்த பின்போ அவர்களில் பெரும்பான்மையர் தங்களுடைய பழைய வழிக்கு திரும்பி கடவுளுக்கு அறவே பிடிக்காத பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். யெகோவா கட்டளையிட்டிருந்தபடியே பாபிலோனியர்கள் யூதாவை தோற்கடித்து அவளுடைய தலைநகரமாகிய எருசலேமை பொ.ச.மு. 607-ல் அழித்துப்போட்டார்கள். ஆனால் அங்கே நம்பிக்கையே இல்லாமல் இல்லை. எரேமியா தீர்க்கதரிசி, எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்கு, யோனதாபின் சந்ததியார் ஆகியோரும் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாயிருந்த மற்றவர்களும் யெகோவாவின் கோபத்தின் நாளிலே காப்பாற்றப்பட்டார்கள்.—எரேமியா 35:18, 19; 39:11, 12, 15-18.
கடவுளுடைய சத்துருக்களே —கவனியுங்கள்!
11. கடவுளுக்கு இன்று உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பது ஏன் ஒரு சவாலாக இருக்கிறது, யெகோவாவின் மக்களுடைய சத்துருக்கள் எதை எண்ணிப்பார்ப்பது நல்லது?
11 இந்தப் பொல்லாத ஒழுங்கின்மீது யெகோவாவுடைய கோபத்தின் நாள் வருமென்று காத்திருக்கும் இந்தச் சமயத்தில் நாம் ‘பலவிதமான சோதனைகளில் அகப்பட்டு’ அவதிப்படுகிறோம். (யாக்கோபு 1:2) மத சுதந்திரத்தை மதிப்பதாக உரிமைபாராட்டும் பல தேசங்களில், பாதிரிமார் உலக தலைவர்களிடம் தங்களுக்கிருக்கும் செல்வாக்கை தந்திரமாக பயன்படுத்தி கடவுளுடைய மக்களை கொடுமையாக துன்புறுத்தி வருகிறார்கள். நெறிமுறையற்ற மனிதர்கள் யெகோவாவின் சாட்சிகளை “ஆபத்தான உட்பிரிவு” என்று முத்திரை குத்தி அவர்களை பழிதூற்றுகிறார்கள். கடவுள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார், தண்டனையிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. பண்டைய காலங்களில் கடவுளுடைய மக்களின் சத்துருக்களாக இருந்த பெலிஸ்தர் போன்றவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதை இவர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது. தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்கிறது: “காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.” காத்சா, அஸ்கலோன், அஸ்தோத், எக்ரோன் ஆகிய பெலிஸ்த நகரங்கள் பாழ்க்கடிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.—செப்பனியா 2:4-7.
12. பெலிஸ்தியா, மோவாப், அம்மோன் ஆகியவற்றுக்கு என்ன நடந்தது?
12 தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொன்னதாவது: “மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.” (செப்பனியா 2:8) எகிப்தும் எத்தியோப்பியாவும் பாபிலோனிய படைகளால் பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் ஆபிரகாமின் உறவினரான லோத்துவின் சந்ததியாயிருந்த மோவாபியருக்கும் அம்மோனியருக்கும் எதிராக கடவுளுடைய நியாயத்தீர்ப்பு என்ன? யெகோவா இவ்வாறு முன்னுரைத்திருந்தார்: ‘மோவாப் சோதோமைப் போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாகும்.’ இவர்களுடைய மூதாதையான லோத்துவின் இரண்டு மகள்கள் சோதோம் கொமோரா அழிவைத் தப்பியது போல இவர்கள் தப்பிக்க மாட்டார்கள். மேட்டிமையான மோவாபும் அம்மோனும் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளிலிருந்து மறைக்கப்படாது. (செப்பனியா 2:9-12; ஆதியாகமம் 19:16, 23-26, 36-38) இன்று பெலிஸ்தியாவும் அதன் நகரங்களும் எங்கே? ஒரு சமயம் மேட்டிமையாக இருந்த மோவாபும் அம்மோனும் எங்கே? நீங்கள் எவ்வளவு தேடினாலும் அவற்றை கண்டுபிடிக்க முடியாது.
13. புதைபொருள் ஆய்வு நினிவேயில் கண்டுபிடித்தது என்ன?
13 செப்பனியாவின் நாளில் அசீரிய பேரரசு அதிகாரத்தின் உச்சியில் இருந்தது. அசீரியாவின் தலைநகரான நினிவேயில் தான் கண்டுபிடித்த அரச மாளிகையின் ஒரு பகுதியை வருணித்து புதைபொருள் ஆய்வாளர் ஆஸ்டீன் லேயார்டு இவ்வாறு எழுதினார்: “உட்கூரை சதுரம் சதுரமாக பிரிக்கப்பட்டிருந்தது, அதில் மலர்கள் அல்லது விலங்குகளின் வடிவங்கள் வர்ணம் பூசப்பட்டிருந்தன. சில சதுரங்களில் தந்தம் பதிக்கப்பட்டிருந்தது, ஒவ்வொரு சதுரத்தையும் சுற்றி நேர்த்தியாக பார்டர்கள் அல்லது அச்சு வார்ப்புகள் போடப்பட்டிருந்தன. உத்தரங்களிலும் கூடங்களின் பக்கங்களிலும் தங்க அல்லது வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது, தங்க அல்லது வெள்ளி தகட்டாலும் கவசமிடப்பட்டிருந்தது. மர வேலைக்கு மிகவும் அபூர்வமான உயர் ரக மரங்களே, அதிலும் கேதுரு மரங்களே அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தன.” ஆனால் செப்பனியாவின் தீர்க்கதரிசனத்தில் முன்னுரைக்கப்பட்டபடியே, அசீரியா அழிக்கப்பட வேண்டும், அதன் தலைநகரான நினிவே ‘பாழும் வனாந்தரத்தைப் போல’ மாற வேண்டும்.—செப்பனியா 2:13.
14. நினிவே மீது செப்பனியாவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
14 செப்பனியா அந்தத் தீர்க்கதரிசனம் உரைத்து பதினைந்தே ஆண்டுகளில் வலிமைமிக்க நினிவே அழிக்கப்பட்டது, அதன் அரச மாளிகை கற்குவியலானது. ஆம், மேட்டிமையான அந்த நகரம் மண்மேடானது. இது எந்தளவுக்கு பாழாக்கப்படும் என்பது இவ்வாறு முன்னுரைக்கப்பட்டிருந்தது: “அதினுடைய சிகரங்கள்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்.” (செப்பனியா 2:14, 15) நினிவேயின் கம்பீரமான கட்டடங்கள் நாரையும் கோட்டானும் மாத்திரமே தங்குவதற்கு ஏற்ற இடமாகும். நகர வீதிகளில் வியாபாரிகளின் குரலும், போர்வீரர்களின் சத்தமும், கோவில் பூசாரிகள் ஓதும் மந்திர சப்தமும் இனி கேட்கப்படாது. ஒரு சமயம் சந்தடியாக இருந்த அந்தத் தெருக்களில் இப்போது பலகணிகளில் விநோதக் குரல் மட்டுமே கேட்கும்; ஒருவேளை பறவையின் சோக கீதமோ காற்றின் இரைச்சலோதான் கேட்கும். இதுபோலவே கடவுளுடைய சத்துருக்கள் எல்லாருடைய முடிவும் இருப்பதாக!
15. பெலிஸ்தியா, மோவாப், அம்மோன், அசீரியா ஆகியவற்றுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
15 பெலிஸ்தியா, மோவாப், அம்மோன், அசீரியா ஆகியவற்றுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இதைத்தான்: யெகோவாவின் ஊழியர்களாகிய நாம் சத்துருக்களைப் பார்த்து எதற்கும் பயப்பட வேண்டியதே இல்லை. தம்முடைய மக்களை எதிர்க்கிறவர்கள் செய்கிற காரியங்களை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் அவர் தம்முடைய சத்துருக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறார், இன்றும் குடியிருக்கப்பட்டிருக்கும் பூமி முழுவதன்மீதும் அவருடைய நியாயத்தீர்ப்பு கட்டாயம் நிறைவேறும். ஆனாலும் இதில் தப்பிப்பிழைக்கிறவர்கள் இருப்பார்கள், அதாவது ‘எல்லா தேசங்களிலிருந்தும் வரும் திரள் கூட்டத்தார்’ தப்பிப்பிழைப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, NW) நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கலாம்—யெகோவாவையும் நீதியையும் மனத்தாழ்மையையும் தொடர்ந்து தேடும் பட்சத்தில்.
துணிந்து பாவம் செய்கிறவர்களுக்கு ஐயோ!
16. யூதாவின் பிரபுக்களையும் மதத் தலைவர்களையும் பற்றி செப்பனியா தீர்க்கதரிசனம் என்ன சொன்னது, இந்த வார்த்தைகள் ஏன் கிறிஸ்தவமண்டலத்துக்கு கச்சிதமாக பொருந்துகின்றன?
16 செப்பனியாவின் தீர்க்கதரிசனம் மறுபடியுமாக யூதாவையும் எருசலேமையுமே முக்கியப்படுத்திக் காட்டுகிறது. செப்பனியா 3:1, 2 இவ்வாறு கூறுகிறது: ‘இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ! அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது யெகோவாவை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.’ யெகோவா தம்முடைய மக்களை கடிந்துகொண்டபோதும் அவர்கள் திருந்தாதது எத்தனை விசனகரமானது! பிரபுக்கள், அதிபதிகள், நியாயாதிபதிகள் இரக்கமற்ற கொடூரர்களாயிருந்தது எவ்வளவு மோசமானது! செப்பனியா வெட்கங்கெட்ட மதத்தலைவர்களை கண்டித்து இவ்வாறு கூறினார்: “அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் [“துணிகரமும்,” NW] வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்.” (செப்பனியா 3:3, 4) இந்த வார்த்தைகள் கிறிஸ்தவமண்டல தீர்க்கதரிசிகளுக்கும் பாதிரிமார்களுக்கும் எவ்வளவு கச்சிதமாக பொருந்துகின்றன! அவர்கள் பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து கடவுளுடைய பெயரை துணிகரமாக நீக்கிவிட்டு, அவர்கள் வணங்குவதாக உரிமைபாராட்டும் கடவுளையே தவறாக பிரதிநிதித்துவம் செய்யும் கோட்பாடுகளை போதித்து வந்திருக்கிறார்கள்.
17. மக்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், நற்செய்தியை நாம் ஏன் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்?
17 யெகோவா தாம் எடுக்கப்போகும் நடவடிக்கைகளைக் குறித்து பண்டைய மக்களுக்கு தயவோடு எச்சரித்திருந்தார். அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளாகிய செப்பனியாவையும் எரேமியாவையும் இன்னும் மற்றவர்களையும் அனுப்பி, அவர்களை மனந்திரும்பும்படி ஊக்குவித்திருந்தார். ஆம், யெகோவா ‘அநியாயஞ்செய்யாதவர்; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணினார்.’ இதற்கு அவர்கள் காட்டிய பிரதிபலிப்பு என்ன? ‘அநியாயக்காரனோ வெட்கம் அறியாது’ இருந்தான் என்று செப்பனியா கூறினார். (செப்பனியா 3:5) இதே போன்ற ஒரு எச்சரிப்புதான் இன்று கொடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் நற்செய்தியை அறிவிக்கிறவராக இருந்தால், இந்த எச்சரிப்பு வேலையில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. அப்படியென்றால் ஒருபோதும் பின்வாங்காமல் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருங்கள்! மக்கள் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி, நீங்கள் அதை உண்மையுடன் செய்துகொண்டிருக்கும்வரை கடவுளுடைய நோக்குநிலையில் ஊழியத்தில் வெற்றியே பெற்று வருகிறீர்கள்; கடவுளுடைய வேலையை வைராக்கியமாக செய்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை.
18. செப்பனியா 3:6 எவ்வாறு நிறைவேற்றமடையும்?
18 கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படுகையில் அழிக்கப்படுவது கிறிஸ்தவமண்டலம் மட்டுமே அல்ல. எல்லா தேசங்களையும் அவர் வெளிப்படையாக கண்டனம் செய்கிறார்: “ஜாதிகளைச் [“தேசங்களை,” NW] சங்கரித்தேன்; அவர்கள் துருகங்கள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் . . . அவாந்தரையாயின.” (செப்பனியா 3:6) இந்த வார்த்தைகள் அத்தனை நம்பத்தக்கவையாக இருப்பதால், அந்த அழிவு ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது போல அதைக் குறித்து யெகோவா பேசுகிறார். பெலிஸ்தியா, மோவாப், அம்மோன் ஆகிய நகரங்களுக்கு என்ன நேர்ந்தது? அசீரிய தலைநகரமாகிய நினிவேக்கு என்ன நேரிட்டது? அவை அழிக்கப்பட்டது இன்றுள்ள தேசங்களுக்கு ஒரு எச்சரிப்பாக இருக்கிறது. கடவுளை பரிகாசம் செய்ய முடியாது.
யெகோவாவை தேடிக்கொண்டே இருங்கள்
19. சிந்தனையைத் தூண்டும் என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ளலாம்?
19 செப்பனியாவின் நாளில், பொல்லாப்பாய் ‘தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கின’ ஆட்களின்மீது கடவுளுடைய கோபம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. (செப்பனியா 3:7) நம்முடைய நாளிலும் இதுவே சம்பவிக்கும். யெகோவாவின் கோபத்தின் நாள் அருகில் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி உங்களுக்குத் தெரிகிறதா? யெகோவாவுடைய வார்த்தையை தவறாமல் தினந்தோறும் வாசிப்பதன் மூலம் தொடர்ந்து நீங்கள் ‘யெகோவாவைத் தேடிக்’ கொண்டிருக்கிறீர்களா? கடவுளுடைய தராதரங்களை மதித்து சுத்தமான, ஒழுக்கமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதன் மூலம் நீங்கள் ‘நீதியைத் தேடிக்’ கொண்டிருக்கிறீர்களா? கடவுளுக்கும் இரட்சிப்புக்கான அவருடைய ஏற்பாடுகளுக்கும் பணிவான, கீழ்ப்படிதலுள்ள மனப்பான்மையைக் காட்டுவதன் மூலம் ‘மனத்தாழ்மையைத் தேடிக்’ கொண்டிருக்கிறீர்களா?
20. செப்பனியாவின் தீர்க்கதரிசனத்தைப் பற்றிய இந்தத் தொடர் கட்டுரைகளின் கடைசி கட்டுரையில் நாம் என்ன கேள்விகளை சிந்திப்போம்?
20 நாம் உண்மையுடன் யெகோவாவையும் நீதியையும் மனத்தாழ்மையையும் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தால், இப்பொழுதே—ஆம், நம்முடைய விசுவாசத்துக்கு சோதனையாக இருக்கும் இந்தக் ‘கடைசி நாட்களிலும்’—மிகுதியான ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழலாம். (2 தீமோத்தேயு 3:1-5; நீதிமொழிகள் 10:22) ஆனால் ‘இன்று கடவுளுடைய ஊழியர்களாக நாம் என்ன விதங்களில் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறோம், வேகமாக நெருங்கிவந்து கொண்டிருக்கும் யெகோவாவின் கோபத்தின் நாளில் மறைக்கப்படுகிறவர்களுக்கு செப்பனியாவின் தீர்க்கதரிசனம் குறிப்பிடும் எதிர்கால ஆசீர்வாதங்கள் என்ன?’ என்பதை நாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுவோம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• ‘யெகோவாவைத் தேடுவது’ எப்படி?
• ‘நீதியைத் தேடுவதில்’ என்ன உட்பட்டிருக்கிறது?
• நாம் எவ்வாறு ‘மனத்தாழ்மையைத் தேடலாம்’?
• நாம் ஏன் தொடர்ந்து யெகோவாவையும் நீதியையும் மனத்தாழ்மையையும் தேடிக்கொண்டிருக்க வேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
பைபிள் படிப்பதன் மூலமும் ஊக்கமாக ஜெபிப்பதன் மூலமும் நீங்கள் யெகோவாவைத் தேடுகிறீர்களா?
[பக்கம் 21-ன் படம்]
திரள் கூட்டத்தார் தொடர்ந்து யெகோவாவை தேடிக்கொண்டிருப்பதால் அவருடைய கோபத்தின் நாளில் தப்பிப்பிழைப்பார்கள்