வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சபையில் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எப்படி நியமிக்கப்படுகிறார்கள்?
அப்போஸ்தலன் பவுல் எபேசு சபையில் இருந்த மூப்பர்களிடம், “உங்களுக்கும் மந்தை முழுவதற்கும் கவனம் செலுத்துங்கள்; கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்ப்பதற்குக் கடவுளுடைய சக்தி உங்களைக் கண்காணிகளாக நியமித்திருக்கிறது” என்று சொன்னார். (அப். 20:28) எந்த விதங்களில் கடவுளுடைய சக்தி மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்க உதவுகிறது?
ஒரு நபரை மூப்பராக நியமிப்பதற்கு, 1 தீமோத்தேயு 3:1-7, தீத்து 1:5-9, யாக்கோபு 3:17, 18 போன்ற வசனங்களில் உள்ள தகுதிகள் அவருக்கு இருக்க வேண்டும். ஒருவரை உதவி ஊழியராக நியமிப்பதற்கு, 1 தீமோத்தேயு 3:8-10, 12, 13-ல் உள்ள தகுதிகள் அவருக்கு இருக்க வேண்டும். இந்த தகுதிகள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால்தான் பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது. அதோடு, ஒரு நபரை சிபாரிசு செய்வதற்கு முன்பும் அவரை நியமிப்பதற்கு முன்பும் பொறுப்பில் உள்ள சகோதரர்கள் கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்கிறார்கள். முக்கியமாக, பைபிளில் இருக்கும் எல்லா தகுதிகளும் அவருக்கு போதுமான அளவுக்கு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள ஜெபம் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரு நபரை மூப்பர்கள் சிபாரிசு செய்ய வேண்டுமென்றால் அந்த நபர் கலாத்தியர் 5:22, 23-ல் உள்ள குணங்களை காட்ட வேண்டும். கடவுளுடைய சக்தி ஒருவருக்கு இருந்தால்தான் இந்த குணங்களை காட்ட முடியும். இந்த எல்லா விதங்களிலும் கடவுளுடைய சக்தி உதவுகிறது.
செப்டம்பர் 1, 2014-க்கு முன்புவரை மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எப்படி நியமிக்கப்பட்டார்கள்? மூப்பர் குழு ஒரு நபரைப் பற்றி கிளை அலுவலகத்திற்கு சிபாரிசு செய்வார்கள். கிளை அலுவலகத்தில் ஆளும் குழுவால் நியமிக்கப்பட்ட சில சகோதரர்கள், மூப்பர்களுடைய சிபாரிசு கடிதத்தை கவனமாகப் பார்ப்பார்கள். அந்த நபரைப் பற்றி சொல்லப்பட்ட விஷயங்கள் பைபிளில் இருக்கும் தகுதிகளோடு ஒத்துப்போனால் அவரை நியமிப்பார்கள். பிறகு அவருடைய சபையில் இருக்கும் மூப்பர்களுக்கு அதை தெரியப்படுத்துவார்கள். அதன்பின் மூப்பர்கள் அந்த நபரிடம், நியமிப்பை ஏற்றுக்கொள்ள அவருக்கு விருப்பம் இருக்கிறதா, அல்லது அவர் அதற்கு தகுதியில்லை என்று நினைக்கிறாரா என கேட்பார்கள். அவர் அந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் அதை சபையில் அறிவிப்பார்கள்.
முதல் நூற்றாண்டில், சில சகோதரர்களை முக்கியமான வேலைகளை செய்வதற்கு அப்போஸ்தலர்கள் நியமித்தார்கள். உதாரணத்திற்கு, விதவைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் வேலையை கவனிக்க 7 சகோதரர்களை நியமித்தார்கள். (அப். 6:1-6) ஆனால், அவர்களை அப்போஸ்தலர்கள்தான் மூப்பர்களாக நியமித்தார்கள் என்று இந்த உதாரணம் சொல்லவில்லை. ஏனென்றால், அவர்கள் அந்த முக்கியமான வேலையை செய்ய நியமிக்கப்படுவதற்கு முன்பே மூப்பர்களாக இருந்திருக்க வேண்டும். அப்படியென்றால், முதல் நூற்றாண்டில் மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் எப்படி நியமித்தார்கள்?
ஒவ்வொரு நியமிப்பும் எப்படி செய்யப்பட்டது என்று பைபிளில் தெளிவாக இல்லை. இருந்தாலும், அதை பற்றி ஓரளவு புரிந்துகொள்ள சில பைபிள் வசனங்கள் நமக்கு உதவும். உதாரணத்திற்கு, பவுலும் பர்னபாவும் முதல் மிஷனரி பயணத்தை முடித்த பிறகு, “ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை நியமித்து, விரதமிருந்து, ஜெபம் செய்து, யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்த அவர்களை அவர் பாதுகாக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.” (அப். 14:23) தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் இப்படி சொன்னார்: “சீர்கேடுகளைச் சரிசெய்வதற்காகவும், என் கட்டளைப்படி நகரங்கள்தோறும் மூப்பர்களை நியமிப்பதற்காகவும் நான் உன்னை கிரேத்தா தீவில் விட்டுவந்தேன்.” (தீத். 1:5) தீமோத்தேயுவுக்கும் பவுல் இதேபோல ஒரு பொறுப்பை கொடுத்ததாக தெரிகிறது. (1 தீ. 5:22) தீத்து, தீமோத்தேயு மற்றும் பவுல் பல சபைகளை சந்தித்தார்கள், பயணக் கண்காணிகளாக சேவை செய்தார்கள். அப்படியென்றால், மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் பயணக் கண்காணிகளே நியமித்தார்கள், எருசலேமிலிருந்த ஆளும் குழு நியமிக்கவில்லை.
இந்த விஷயங்களை மனதில் வைத்துதான் ஆளும் குழு ஒரு புதிய மாற்றத்தை செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 1, 2014-ல் இருந்து மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் வட்டார கண்காணிகள்தான் நியமிக்கிறார்கள். ஒவ்வொரு சபையின் மூப்பர் குழுவும் தகுதியுள்ள நபரைப் பற்றி அவர்களுடைய வட்டாரக் கண்காணிக்கு தெரியப்படுத்துவார்கள். வட்டாரக் கண்காணி அந்த சபையை சந்திக்கும்போது அந்த நபரைப் பற்றி இன்னும் நன்றாக தெரிந்துகொள்ள முயற்சி செய்வார்; முடிந்தால் அவரோடு ஊழியம் செய்வார். அதன்பின் அந்த நபரைப் பற்றி மூப்பர் குழுவிடம் பேசுவார். பிறகு, அந்த நபரை நியமிப்பார். முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே நாமும் செய்கிறோம் என்பதை இது காட்டுகிறது.
மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிப்பதில் யாருக்கெல்லாம் பங்கு இருக்கிறது? ‘ஏற்ற வேளையில் தன் வீட்டாருக்கு உணவளிக்கும்’ முக்கிய பொறுப்பு ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ அதாவது, ஆளும் குழுவுக்கு இருக்கிறது. (மத். 24:45-47) உலகம் முழுவதிலும் இருக்கும் சபைகள் ஒழுங்காக செயல்பட, ஆளும் குழு நடைமுறையான ஆலோசனைகளை கொடுக்கிறார்கள். அதற்காக அவர்கள் கடவுளுடைய சக்தியின் உதவியோடு பைபிளை ஆராய்ச்சி செய்கிறார்கள். அதோடு வட்டாரக் கண்காணிகளையும் கிளை அலுவலக குழுவில் இருக்கும் சகோதரர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். கிளை அலுவலகம், ஆளும் குழு கொடுக்கும் ஆலோசனைகளை கடைப்பிடிக்க சபைகளுக்கு உதவுகிறது. சபையின் மூப்பர் குழு ஒரு சகோதரரை சிபாரிசு செய்வதற்கு முன் பைபிளில் சொல்லப்பட்ட தகுதிகள் அவருக்கு இருக்கிறதா என்பதை கவனமாகப் பார்க்கிறார்கள். மூப்பர்கள் கொடுத்த குறிப்புகளை வட்டாரக் கண்காணி கவனமாகப் பார்க்கிறார். அந்த சகோதரரை நியமிப்பதற்கு முன் கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்கிறார்.
நாம் பார்த்த இந்த விஷயங்களில் இருந்து மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எப்படி நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்துகொண்டோம். அவர்களை நியமிக்க கடவுளுடைய சக்தி எப்படி உதவுகிறது என்றும் தெரிந்துகொண்டோம். அப்படியென்றால், நியமிக்கப்பட்ட இந்த சகோதரர்கள்மீது நாம் இன்னும் எந்தளவு நம்பிக்கை வைக்க வேண்டும்! இன்னும் எந்தளவு மதிப்பும் மரியாதையும் காட்ட வேண்டும்!!—எபி. 13:7, 17.
வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இரண்டு சாட்சிகள் யார்?
வெளிப்படுத்துதல் 11:3-ல் இரண்டு சாட்சிகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் 1,260 நாட்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்வார்கள். பின்பு, ஒரு “மூர்க்க மிருகம் அவர்களோடு போரிட்டு, அவர்களை ஜெயித்து, கொன்றுபோடும்.” ஆனால், “மூன்றரை நாட்களுக்குப் பின்பு,” அந்தச் சாட்சிகள் மீண்டும் உயிர் பெறுவார்கள். அதைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். இந்த சம்பவங்கள் எதைக் குறிக்கிறது?—வெளி. 11:7, 11.
அந்த இரண்டு சாட்சிகள் யார்? இதைப் புரிந்துகொள்ள அடுத்து வரும் வசனங்களை கவனியுங்கள். முதலாவதாக, “இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு குத்துவிளக்குகளும் அந்த இரண்டு சாட்சிகளை அடையாளப்படுத்துகின்றன” என்று வெளிப்படுத்துதல் 11:4 சொல்கிறது. இரண்டு ஒலிவ மரங்களையும் குத்துவிளக்கையும் பற்றி சகரியா புத்தகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு ஒலிவ மரங்கள், “அபிஷேகம் பெற்ற” ஆளுநரான செருபாபேலையும் தலைமை குருவான யோசுவாவையும் குறிக்கிறது. அவர்கள், “சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில்” நிற்பதாக சொல்லப்பட்டுள்ளது. (சக. 4:1-3, 14) இரண்டாவதாக, வெளிப்படுத்துதல் 11:5, 6-ல், அந்த இரண்டு சாட்சிகள் மோசேயையும் எலியாவையும் போல் அற்புதங்களைச் செய்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 11:5, 6-ஐ எண்ணாகமம் 16:1-7, 28-35 மற்றும் 1 இராஜாக்கள் 17:1; 18:41-45-யோடு ஒப்பிடுங்கள்.
வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்ட விஷயத்துக்கும் சகரியாவில் சொல்லப்பட்ட விஷயத்துக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது? கஷ்டமான காலங்களில் கடவுளுடைய மக்களை வழிநடத்தினவர்களை பற்றி இந்தப் பதிவுகள் சொல்கின்றன. அவர்களைப் போலவே 1914-ல் இயேசு ராஜாவானபோது, பரலோக நம்பிக்கையுள்ள சில கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலையை வழிநடத்தினார்கள். வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லியிருக்கிறபடி, மூன்றரை வருஷங்கள் அவர்கள் “துக்க உடை உடுத்திக்கொண்டு” அதாவது, கஷ்டமான காலங்களில் பிரசங்கித்தார்கள்.
அதன்பிறகு பரலோக நம்பிக்கையுள்ள அந்த கிறிஸ்தவர்கள் அடையாள அர்த்தத்தில் மூன்றரை நாட்களுக்கு இறந்த நிலையில் இருந்தார்கள். அதாவது, கொஞ்ச காலத்துக்கு சிறையில் போடப்பட்டார்கள். அப்போது பிரசங்க வேலை முழுமையாக நின்றுவிட்டது என்று நினைத்து அவர்களுடைய எதிரிகள் சந்தோஷப்பட்டார்கள்.—வெளி. 11:8-10.
ஆனால், அந்த இரண்டு சாட்சிகள் மூன்றரை நாட்களுக்கு பிறகு மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று வெளிப்படுத்துதல் 11:11 சொல்கிறது. அதேபோல் பரலோக நம்பிக்கையுள்ள அந்த கிறிஸ்தவர்கள் சிறையிலிருந்து விடுதலையானார்கள். அவர்களில் யாரெல்லாம் உண்மையாக இருந்தார்களோ அவர்களுக்கு இயேசு கிறிஸ்து மூலம் யெகோவா ஒரு முக்கியமான பொறுப்பை கொடுத்தார். 1919-ல் இன்னும் சில சகோதரர்களோடு இவர்களையும் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ நியமித்தார். இவர்கள் கடவுளுடைய மக்களுக்கு ‘ஏற்ற வேளையில் உணவளிப்பதற்காக’ நியமிக்கப்பட்டார்கள்.—மத். 24:45-47; வெளி. 11:11, 12.
நாம் இதுவரை பார்த்த விஷயங்கள் எல்லாம், வெளிப்படுத்துதல் 11:1, 2-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘கடவுளுடைய ஆலயத்தை அளப்பதோடு,’ அதாவது சோதிப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ‘கடவுளுடைய ஆலயத்தை’ சோதிப்பதையும் சுத்தப்படுத்துவதையும் பற்றி மல்கியா 3-ஆம் அதிகாரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. (மல். 3:1-4) மல்கியா புத்தகத்தில் சொல்லியிருக்கிறபடி, ஆலயத்தைச் சோதிக்கவும் சுத்தப்படுத்தவும் எவ்வளவு காலம் எடுத்தது? இது 1914-ல் ஆரம்பித்து 1919 வரை நீடித்தது. வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் 1,260 நாட்களும் (42 மாதங்கள்) அடையாள அர்த்தமுள்ள மூன்றரை நாட்களும் சேர்ந்ததுதான் இந்தக் காலப்பகுதி.
ஒரு முக்கியமான வேலைக்காக யெகோவா அவருக்கென்று மக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ‘தூய்மைப்படுத்தியதற்காக’ நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்க வேண்டும்! (தீத். 2:14) கஷ்டமான காலங்களில் கடவுளுடைய மக்களை வழிநடத்திய சகோதரர்களின் முன்மாதிரியை நாம் பின்பற்றுவோம். இவர்கள்தான் வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் அடையாள அர்த்தமுள்ள இரண்டு சாட்சிகள்.a