யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுங்கள்
“சமாதானத்தின் தேவன் . . தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக.”—எபிரெயர் 13:20, 21.
1. உலகின் ஜனத்தொகை என்ன, அதில் எவ்வளவு பேர் எந்தெந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது?
உலகத்தின் ஜனத்தொகை 1999-ஆம் ஆண்டு அறுநூறு கோடியை எட்டியது! அவர்களில் 116,50,00,000 பேர் முஸ்லிம்கள்; 103,00,00,000 பேர் ரோமன் கத்தோலிக்கர்கள்; 76,20,00,000 பேர் இந்துக்கள்; 35,40,00,000 பேர் புத்தமதத்தினர்; 31,60,00,000 பேர் புராட்டஸ்டன்டுகள்; 21,40,00,000 பேர் கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைச் சேர்ந்தவர்கள் என்பதாக த உவர்ல்ட் அல்மனாக் எடுத்துக்காட்டியது.
2. இன்று நிலவும் மத சூழ்நிலையைப் பற்றி என்ன சொல்லலாம்?
2 இன்று மதங்களில் இருக்கும் வித்தியாசங்களையும் அவற்றால் வரும் குழப்பங்களையும் பார்க்கும்போது எல்லோரும் கடவுளுடைய சித்தத்தின்படிதான் வாழ்வதாக சொல்ல முடியுமா? இல்லவே இல்லை, “ஏனெனில் கடவுள் குழப்பத்தை ஏற்படுத்துபவரல்ல; அமைதியை ஏற்படுத்துபவர்.” (1 கொரிந்தியர் 14:33, பொ.மொ.) இதற்கு நேர் எதிராக யெகோவாவின் சாட்சிகளிடையே நிலவும் சர்வதேச சகோதரத்துவத்தைப் பற்றி என்னவென்று சொல்வது! (1 பேதுரு 2:17) இந்த விஷயங்களை கவனமாக ஆராய்ந்து பார்த்தால் ‘சமாதானத்தின் தேவன் . . தம்முடைய சித்தத்தின்படி செய்ய சகலவித நற்கிரியையிலும் அவர்களை சீர்பொருந்தினவர்களாக்குகிறார்’ என்பது தெளிவாக தெரிகிறது.—எபிரெயர் 13:20, 21.
3. எருசலேமில் பொ.ச 33-ல் என்ன நடந்தது, ஏன்?
3 யெகோவாவின் சாட்சிகளுக்கு கடவுளுடைய அங்கீகரிப்பு இருக்கிறதா இல்லையா என்பதற்கு அவர்களுடைய எண்ணிக்கை ஒரு அளவுகோல் அல்ல என்பது உண்மையே. அதேபோல, கடவுள் திரளான எண்ணிக்கையைக் கண்டு மயங்கிவிடுபவரும் அல்ல. உதாரணத்திற்கு, கடவுள் இஸ்ரவேலர்களை தம்முடைய ஜனமாக தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எல்லா ஜனங்களையும்விட எண்ணிக்கையில் ‘திரளானவர்களாக’ இருந்தனரா என்ன? இல்லை, மாறாக அவர்கள் மற்ற ஜனங்களைவிட எண்ணிக்கையில் ‘சொற்பமானவர்களாகவே’ இருந்தனர். (உபாகமம் 7:7, பொ.மொ.) காலப்போக்கில் இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம் உண்மையற்றவர்களாக நடந்துகொண்டதால், பொ.ச. 33-ல் யெகோவா தம்முடைய தயவை இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாலான புதிய சபையிடம் காட்டத் துவங்கினார். அவர்கள் யெகோவாவின் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டனர், கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றிய உண்மைகளை வைராக்கியமாக பிரசங்கித்தனர்.—அப்போஸ்தலர் 2:41, 42.
எப்போதும் முன்னேற்றப் பாதையில்
4. முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவ சபை தொடர்ச்சியாக முன்னேற்றப் பாதையில் நடந்தது என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்?
4 முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவ சபை தொடர்ச்சியாக முன்னேற்றப் பாதையில் பீடுநடை போட்டது. அவர்கள் புதிய பிராந்தியங்களில் ஊழியத்தை ஆரம்பித்தனர், சீஷர்களை உருவாக்கினர், கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். தேவ ஆவியால் ஏவப்பட்ட கடிதங்களின் மூலம் கிடைத்த ஆன்மீக ஒளியை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு இணங்க முன்னேறினர். அப்போஸ்தலர்களும் மற்ற சகோதரர்களும் அவர்களை சந்தித்தபோது அதிக உற்சாகமடைந்து தங்கள் ஊழியத்தை நிறைவேற்றினர். இந்த விஷயங்கள் எல்லாம் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.—அப்போஸ்தலர் 10:21, 22; 13:46, 47; 2 தீமோத்தேயு 1:13; 4:5; எபிரெயர் 6:1-3; 2 பேதுரு 3:17, 18.
5. இன்று கடவுளுடைய அமைப்பு முன்னேறுவதற்கு காரணம் என்ன, நாமும் அதோடு சேர்ந்து ஏன் முன்னேற வேண்டும்?
5 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே யெகோவாவின் இந்நாளைய சாட்சிகளும் ஆரம்பத்தில் ஒரு சிறிய தொகுதியாகத்தான் இருந்தனர். (சகரியா 4:8-10) 19-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கடவுளுடைய ஆவி அவரது அமைப்போடு சேர்ந்து செயல்படுகிறது என்பதற்கு தெளிவான ஆதாரம் இருக்கிறது. நாம் மனிதர்களின் சக்தியை அல்ல கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையே சார்ந்திருக்கிறோம். இதன் காரணமாகத்தான் வேதவாக்கியங்களை புரிந்து கொள்வதிலும் கடவுளுடைய நோக்கத்தை அறிந்துகொள்வதிலும் ஒரு அமைப்பாக தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறோம். (சகரியா 4:6) இப்போது நாம் “கடைசி நாட்களில்” இருப்பதால், முன்னேறி வரும் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து நாமும் முன்னேறுவது அவசியம். (2 தீமோத்தேயு 3:1-5) அவ்வாறு முன்னேறினால்தான் நம்முடைய நம்பிக்கை ஜீவனுள்ளதாக இருக்கும்; அதோடு இப்போதிருக்கும் ஒழுங்குமுறை முடிவதற்கு முன்பு நிறுவப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி சாட்சியளிக்கவும் முடியும்.—மத்தேயு 24:3-14.
6, 7. எந்த மூன்று அம்சங்களில் யெகோவாவின் அமைப்பு முன்னேறியிருக்கிறது என்பதை நாம் கவனிக்கப் போகிறோம்?
6 1920-களில், 30-களில், 40-களில் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து சேவை செய்தவர்களில் அநேகர் இன்றும் நம்மோடு இருக்கின்றனர். அந்த காலத்தில், அமைப்பு இந்தளவு முன்னேறும் என்றும் படிப்படியாக வளர்ச்சியடையும் என்றும் யாராவது கற்பனை செய்திருப்பார்களா? நவீன நாளைய சரித்திர பாதையில் நாம் தாண்டி வந்த மைல் கற்களை சற்றே யோசித்துப் பார்க்கலாம்! தேவராஜ்ய ஏற்பாடுகள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட ஜனங்களைக் கொண்டு யெகோவா அநேகத்தை சாதித்திருக்கிறார். அவர் என்னென்ன செய்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்ப்பதே நமக்கு ஒரு பெரிய ஆன்மீக பரிசு எனலாம்.
7 பண்டைய காலத்தில் வாழ்ந்த தாவீது யெகோவா தேவனின் மாபெரும் கிரியைகளை யோசித்துப் பார்த்தபோது மிகவும் வியப்படைந்தார். “அவைகளைச் சொல்லி அறிவிக்க வேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்” என்பதாக தாவீது குறிப்பிட்டார். (சங்கீதம் 40:5) நாமும் தாவீதின் நிலையில்தான் இருக்கிறோம். நம் காலத்தில் யெகோவா செய்திருக்கும் போற்றத்தகும் காரியங்களை எடுத்துச் சொல்ல முடியாத நிலையில்தான் நாமும் இருக்கிறோம். இருந்தாலும் யெகோவாவின் அமைப்பு முன்னேறியிருக்கும் மூன்று அம்சங்களுக்கு நம் கவனத்தை திருப்புவோமாக: (1) ஆன்மீக அறிவொளியில் படிப்படியான முன்னேற்றம், (2) ஊழியத்தில் முன்னேற்றமும் விரிவாக்கமும், (3) அமைப்பின் செயல்முறைகளில் காலத்திற்கேற்ற மாற்றங்கள்.
ஆன்மீக அறிவொளிக்காக நன்றியோடு இருத்தல்
8. நீதிமொழிகள் 4:18-ன் அடிப்படையில் ராஜ்யத்தைப் பற்றி எதைப் புரிந்துகொள்வதற்கு ஆன்மீக அறிவொளி உதவியிருக்கிறது?
8 ஆன்மீக அறிவொளியில் ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றத்தை நீதிமொழிகள் 4:18-ன் நிறைவேற்றம் என்றே சொல்லலாம். அந்த வசனம் கூறுவதாவது: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசம்போலிருக்கும்.” ஆன்மீக அறிவொளியில் படிப்படியாக ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! 1919-ஆம் ஆண்டில், ஒஹாயோவிலுள்ள சீடர் பாயின்ட்டில் நடந்த மாநாட்டில் கடவுளுடைய ராஜ்யமே முக்கியத்துவம் வாய்ந்தது என்பது சிறப்பித்துக் காட்டப்பட்டது. தம்முடைய நாமத்தை பரிசுத்தப்படுத்தவும், தமது பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்யவும் யெகோவா இந்த ராஜ்யத்தையே உபயோகிக்கிறார். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை சொல்லப்பட்ட விஷயங்களில் தம்முடைய குமாரனுடைய ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் பெயர் பரிசுத்தம் செய்யப்படுவதுதான் அவருடைய நோக்கம் என்பதை பைபிள் எடுத்துக்காட்டுகிறது. நமக்கு கிடைத்த ஆன்மீக அறிவொளியால்தான் இதை நாம் புரிந்துகொண்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதில்தான் நீதியை நேசிப்போர் யாவருக்கும் மகிமையான நம்பிக்கை அடங்கியிருக்கிறது.—மத்தேயு 12:18, 21.
9, 10. 1920-களில் ராஜ்யத்தைப் பற்றியும், இரண்டு நேரெதிரான அமைப்புகளைப் பற்றியும் எதை தெரிந்துகொள்ள முடிந்தது, அது எவ்வாறு பிரயோஜனமாக இருந்திருக்கிறது?
9 1922-ஆம் வருடம், சீடர் பாயின்ட்டில் நடந்த மாநாட்டில் முக்கிய பேச்சாளரான ஜே. எப். ரதர்போர்ட் கடவுளுடைய ஜனங்களை பின்வருமாறு உற்சாகப்படுத்தினார்: “ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்.” 1925, மார்ச் 1, காவற்கோபுரம் (ஆங்கிலம்) பத்திரிகையில் “ஒரு தேசத்தின் பிறப்பு” என்ற கட்டுரை வெளிவந்தது. அக்கட்டுரையில், 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதைக் குறித்த தீர்க்கதரிசனங்களை ஆன்மீக உட்பார்வையோடு கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் எதிரான இரண்டு அமைப்புகள் செயல்படுகின்றன என்பதை 1920-களில் நாம் புரிந்துகொண்டோம்; ஒன்று யெகோவாவின் அமைப்பு இன்னொன்று சாத்தானின் அமைப்பு. அந்த இரண்டு அமைப்புகளுக்கும் இடையில் எப்போதும் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கின்றது; நாம் வெற்றிபெறும் அமைப்பில் இருக்க வேண்டும் என்றால் யெகோவாவின் முன்னேறும் அமைப்போடு சேர்ந்து நாமும் முன்னேற வேண்டும்.
10 இப்படிப்பட்ட ஆன்மீக அறிவொளி நமக்கு எவ்வாறு உதவி செய்திருக்கிறது? கடவுளுடைய ராஜ்யமும், ராஜாவான இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தின் பாகமாயில்லாததால் நாமும் இந்த உலகின் பாகமாக இருக்கக்கூடாது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. அதனால் உலகத்திலிருந்து பிரிந்து இருப்பதன் மூலம் நாம் சத்தியத்தின் பக்கம் இருக்கிறோம் என்பதைக் காட்ட முடிகிறது. (யோவான் 17:16; 18:37) சிக்கலான பிரச்சினைகள் இன்றைய பொல்லாத உலகை பதம்பார்த்துக் கொண்டிருப்பதை காணும்போது அதில் நாம் சிக்கவில்லை என்பதற்காக நிம்மதியடைகிறோம்; சாத்தானுடைய அமைப்பிலிருந்து விலகியிருப்பதற்காக நன்றியோடு இருக்கிறோம்! யெகோவாவின் அமைப்பிற்குள் ஆன்மீக பாதுகாப்பைப் பெறும் நாம் எப்பேர்ப்பட்ட பாக்கியம் செய்த ஜனம்!
11. பைபிள் அடிப்படையிலான எந்த பெயரை 1931-ல் கடவுளுடைய ஜனங்கள் ஏற்றுக்கொண்டனர்?
11 1931-ல் ஒஹாயோ, கொலம்பஸ் மாநாட்டில் ஏசாயா 43:10-12 வசனங்களின் சரியான அர்த்தம் விளக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் என்ற தனித்தன்மை வாய்ந்த பெயரை பைபிள் மாணாக்கர்கள் ஏற்றுக்கொண்டனர். கடவுளுடைய பெயரை மற்றவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் மற்றவர்களும் கடவுளை தொழுதுகொண்டு இரட்சிப்படைய முடியும்; இந்தப் பணியை செய்வது எப்பேர்ப்பட்ட மகத்தான சிலாக்கியம்!—சங்கீதம் 83:17; ரோமர் 10:13.
12. 1935-ல் திரள்கூட்டத்தாரைப் பற்றி எப்படிப்பட்ட ஆன்மீக அறிவொளி வழங்கப்பட்டது?
12 1930-க்கு முற்பட்ட சமயத்தில் வாழ்ந்த கடவுளுடைய ஜனங்களில் அநேகருக்கு தங்களுடைய எதிர்கால நம்பிக்கை என்ன என்பதில் சற்று குழப்பம் நிலவியது. சிலர் பரலோகத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணினர், ஆனாலும் பைபிளின் போதகமான பூமிக்குரிய பரதீஸை பெரிதும் விரும்பினர். இந்த குழப்பத்திற்கெல்லாம் 1935-ல் வாஷிங்டன் டிசியில் நடந்த மாநாட்டில் விடை கிடைத்தது. வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட திரள் கூட்டத்தார் பூமிக்குரிய நம்பிக்கை உள்ள ஒரு தொகுதியினர் என்பது விளக்கப்பட்டபோது கேட்பவர்களுக்கு சந்தோஷம் கரைபுரண்டோடியது. அப்போதிலிருந்து இன்று வரை அந்த திரள் கூட்டத்தாரை கூட்டிச் சேர்க்கும் பணி வேகமாக செய்யப்பட்டு வருகிறது. திரள் கூட்டத்தார் யார் என்பது நமக்கு ஒரு புரியாத புதிரல்ல என்பதைக் குறித்து நாம் நன்றியோடு இருக்கிறோமல்லவா? மிகப் பெரிய அளவில் திரளான ஜனங்கள் எல்லா தேசங்களிலிருந்தும், கோத்திரங்களிலிருந்தும், பாஷைக்காரரிலிருந்தும் கூட்டிச் சேர்க்கப்படுகின்றனர்; இந்த உண்மையை கண்கூடாக பார்க்கும் நாம் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேற வேண்டும் என்று உந்துவிக்கப்படுகிறோம் அல்லவா?
13. 1941-ல் செயின்ட் லூயிஸ் மாநாட்டில் எந்த முக்கிய விவாதம் சிறப்பித்துக் காட்டப்பட்டது?
13 மனித சமுதாயம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விவாதம் என்ன என்பது 1941-ல் செயின்ட் லூயிஸ், மிஸ்ஸௌரி மாநாட்டில் சிறப்பித்துக் காட்டப்பட்டது. அதுதான் சர்வலோக ஆட்சியுரிமை அல்லது பேரரசுரிமை. இந்த விவாதம்தான் வெகுசீக்கிரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்; அதற்காகத்தான் கடவுளுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வெகு விரைவாக வந்துகொண்டிருக்கிறது! இந்த விவாதத்தோடு சம்பந்தப்பட்ட நம் உத்தமத்தன்மையை பற்றிய விவாதமும் 1941-ல் நம் கண் முன்பாக கொண்டுவரப்பட்டது; கடவுளுடைய சர்வலோக பேரரசுரிமையோடு சம்பந்தப்பட்ட விவாதத்தில் நம் ஒவ்வொருவருடைய நிலைநிற்கையும் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள இது நமக்கு உதவுகிறது.
14. 1950-ல் நடந்த சர்வதேச மாநாட்டில் ஏசாயா 32:1, 2-ல் விவரிக்கப்பட்டிருக்கும் பிரபுக்களைப் பற்றி எதை தெரிந்துகொண்டோம்?
14 1950-ல் நியூ யார்க் சிட்டியில் நடந்த சர்வதேச மாநாட்டில் ஏசாயா 32:1, 2-ல் விவரிக்கப்பட்டிருக்கும் பிரபுக்கள் யார் என்பது தெளிவாக்கப்பட்டது. அதைப் பற்றி சகோதரர் ஃபிரட்ரிக் ஃபிரான்ஸ் விளக்கினார்; புதிய உலகின் பிரபுக்கள் நம் மத்தியில் இருக்கின்றனர் என்று அவர் சொன்னபோது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது! அந்த மாநாட்டிலும் அதற்கு பிறகு நடத்தப்பட்ட மாநாடுகளிலும் ஆன்மீக அறிவொளி அதிகதிகமாக வெளிப்பட்டது. (சங்கீதம் 97:11) நம்முடைய ‘பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருப்பதற்காக’ நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்!
நம் ஊழியத்தில் முன்னேறுதல்
15, 16. (அ) 1920-களிலும் 1930-களிலும் நாம் எவ்வாறு ஊழியத்தில் முன்னேறினோம்? (ஆ) சமீப ஆண்டுகளில் கிறிஸ்தவ ஊழியம் முன்னேறுவதற்கு எந்த பிரசுரங்கள் உதவியளித்துள்ளன?
15 யெகோவாவின் அமைப்பு முன்னேற்றம் கண்ட இரண்டாவது அம்சம்: பிரசங்கிப்பு வேலை. ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதும் சீஷராக்குவதும்தான் நம் முக்கிய வேலை. (மத்தேயு 28:19, 20; மாற்கு 13:10) இந்த வேலையை செய்து முடிப்பதற்காக நம் ஊழியத்தை விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவரும் பிரசங்க வேலையில் ஈடுபட வேண்டும் என்று 1922-ல் உற்சாகப்படுத்தப்பட்டனர். சத்தியத்திற்கு சாட்சி கொடுப்பதன் மூலம் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னிடத்தில் இருக்கும் ஒளியை பிரகாசிக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். (மத்தேயு 5:14-16) 1927-ல், ஞாயிற்றுக்கிழமைகளை ஊழியத்திற்காக ஒதுக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1940, பிப்ரவரி முதல் சாட்சிகள் தெருக்களிலும் வியாபார சந்தைகளிலும் நின்று கொண்டு காவற்கோபுரம், ஆறுதல் (இப்போது விழித்தெழு!) பத்திரிகைகளை அளிப்பது சர்வசாதாரண காட்சியாக ஆனது.
16 1937-ல் மாதிரி படிப்பு (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகம் வெளியிடப்பட்டது; அதில் மறுசந்திப்பு செய்து பைபிள் சத்தியங்களை பிரசங்கிப்பதன் அவசியம் சிறப்பித்துக் காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில் பைபிள் படிப்பு எடுப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. 1946-ல் கடவுள் சத்தியபரராக விளங்கட்டும் என்ற புத்தகமும் 1968-ல் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் என்ற புத்தகமும் வெளியிடப்பட்டன; பைபிள் படிப்பு எடுப்பது ஊழியத்தின் முக்கிய அம்சம், அதற்கு இப்புத்தகங்கள் பெரிதும் உதவின. தற்சமயம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை நாம் பயன்படுத்துகிறோம். இந்தப் புத்தகங்களை ஆழ்ந்து படிப்பதன் மூலம், வேதப்பூர்வமான கருத்தில் ஒரு சீஷராவதற்கான உறுதியான அஸ்திவாரம் போடப்படுகிறது.
அமைப்பின் மாற்றங்களோடு சேர்ந்து முன்னேறி செல்லுதல்
17. ஏசாயா 60:17-க்கு இசைவாக யெகோவாவின் அமைப்பு எவ்வாறு முன்னேறியிருக்கிறது?
17 யெகோவாவின் அமைப்பு முன்னேற்றம் கண்ட மூன்றாவது அம்சம்: அமைப்பின் செயல்முறைகளில் மாற்றங்கள். ஏசாயா 60:17-ல் (பொ.மொ.) யெகோவா பின்வருமாறு வாக்குறுதி அளிக்கிறார்: “வெண்கலத்திற்குப் பதிலாய்ப் பொன்னையும் இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும் மரத்திற்குப் பதிலாய் வெண்கலத்தையும் கற்களுக்குப் பதிலாய் இரும்பையும் கொண்டுவருவேன்; உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும் உங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன்.” இந்தத் தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை மேற்பார்வையிடுவதை மேம்படுத்துவதற்கும், மந்தையை மேய்ப்பதில் முன்னேற்றம் செய்வதற்கும் முக்கிய படிகள் எடுக்கப்பட்டன.
18, 19. கடந்த காலங்களில், அமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் யாவை?
18 1919-ல் ஊழியத்தை ஒழுங்கமைக்க விரும்பிய ஒவ்வொரு சபையிலும் ‘சர்வீஸ் டைரக்டர்’ என்ற ஒருவர் நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக சபைக்குரிய பிராந்தியத்தில் ஊழியத்தை செவ்வனே செய்ய சபையாருக்கு உற்சாகம் கிடைத்தது. 1932-ல் ஜனநாயக அடிப்படையில் மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் தேர்ந்தெடுக்கும் முறை முடிவுக்கு வந்தது. 1938-ல் நம்முடைய முன்னேற்றப் பாதையில் இன்னொரு மைல் கல்லையும் தாண்டினோம்; ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் தேவராஜ்ய ஏற்பாட்டிற்கு மிகவும் நெருக்கமாக சபையின் எல்லா ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். (அப்போஸ்தலர் 14:23; 1 தீமோத்தேயு 4:14) பூர்வ கிறிஸ்தவ சபையில் எவ்வாறு கண்காணிகளும் உதவி ஊழியர்களும் சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டனரோ அதே முறை 1972-ல் பின்பற்றப்பட்டது. ஒரு சபையில் ஒரே ஒரு சகோதரர் சபை கண்காணியாக சேவிப்பதற்கு பதிலாக சபையில் ஒரு மூப்பர் குழு இயங்க வேண்டும் என்பதை பிலிப்பியர் 1:1 எடுத்துக்காட்டியது; மற்ற வேத வசனங்களும் இந்த நியமத்தை ஆதரிப்பதை சுட்டிக்காட்டியதால் வேதப்பூர்வ தகுதிகளை உள்ள சகோதரர்கள் ஒரு குழுவாக இயங்க ஆரம்பித்தனர்.—அப்போஸ்தலர் 20:28; எபேசியர் 4:12, 13.
19 கடவுளுடைய அமைப்பில், யெகோவாவின் சாட்சிகளின் உலகளாவிய வேலையை மேற்பார்வை செய்வதற்கு 1975-ல் ஒரு புதிய முறை பின்பற்றப்பட்டது; இதன் அடிப்படையில் ஆளும் குழுவின் அங்கத்தினர் சில சிறிய குழுக்களாக செயல்பட ஆரம்பித்தனர். ஒவ்வொரு பிராந்தியத்திலும் நடக்கும் வேலையை மேற்பார்வை செய்வதற்கு கிளைக் காரியாலய குழுக்கள் நியமிக்கப்பட்டன. அப்போது முதற்கொண்டு தலைமை காரியாலயத்திலும் கிளைக் காரியாலயங்களிலும் வேலையை எளிதாக்குவதற்கு கவனம் செலுத்தப்படுகிறது; இவ்வாறு வேலையை சுலபமாக்கினால்தான் ‘அதிமுக்கியமான விஷயங்களை நிச்சயப்படுத்திக்கொள்ள’ முடியும். (பிலிப்பியர் 1:9, 10, NW) நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையில் முன்னின்று வழிநடத்துவது, சபையில் போதிப்பது, கடவுளுடைய மந்தையை சரியாக மேய்ப்பது போன்றவை கிறிஸ்துவின் உதவி மேய்ப்பர்களாக பணியாற்றுபவர்களுக்கு இருக்கும் பொறுப்புகளாகும்.—1 தீமோத்தேயு 4:16; எபிரெயர் 13:7, 17; 1 பேதுரு 5:2, 3.
இயேசுவின் உயிரோட்டமுள்ள தலைமை ஸ்தானம்
20. யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேற வேண்டும் என்று குறிப்பிடும்போது இயேசுவின் எந்த ஸ்தானத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்?
20 கடவுளுடைய அமைப்பு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது; அதோடு சேர்ந்து நாமும் முன்னேற வேண்டுமென்றால், ‘சபைக்கு கிறிஸ்துவை தலைவராக’ கடவுள் நியமித்திருக்கிறார் என்பதையும் அவருடைய பணியையும் புரிந்துகொள்வது அவசியம். (எபேசியர் 5:22, 23) ஏசாயா 55:4-ல் சொல்லப்பட்ட குறிப்புக்கு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்: ‘இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் நான் [யெகோவா] ஏற்படுத்தினேன்.’ எவ்வாறு தலைமை ஏற்று நடத்துவது என்பது இயேசுவிற்கு தெரிந்த விஷயமே. அவருடைய மந்தையைப் பற்றியும் அவை செய்யும் பணிகளைப் பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும். அவர் ஆசியா மைனரில் இருந்த ஏழு சபைகளை ஆய்வு செய்தபோது ஐந்து முறை, “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்” என்று சொன்னார். (வெளிப்படுத்துதல் 2:2, 19; 3:1, 8, 15) யெகோவா எவ்வாறு நம் தேவைகளை அறிந்திருக்கிறாரோ அதேவிதமாகவே இயேசுவும் அறிந்திருக்கிறார். பரமண்டல ஜெபத்தை சொல்லிக் கொடுப்பதற்கு முன் இயேசு சொன்னதாவது, கடவுளாகிய “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.”—மத்தேயு 6:8-13.
21. கிறிஸ்தவ சபையில் இயேசு எவ்வாறு தலைமைத்தாங்கி வழிநடத்துகிறார்?
21 இயேசு எவ்வாறு தலைமைத்தாங்கி வழிநடத்துகிறார்? ஒரு வழியானது, ‘மனிதரில் வரங்கள்’ என அழைக்கப்படும் கிறிஸ்தவ கண்காணிகளின் மூலமாகும். (எபேசியர் 4:8) கிறிஸ்தவ கண்காணிகள் இயேசுவின் வலது கரத்தில் இருப்பதாக அதாவது அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிப்படுத்துதல் 1:16 காட்டுகிறது. இந்த மூப்பர்கள் பரலோக நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் சரி அல்லது பூமிக்குரிய நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் சரி, இவர்களை இப்போது இயேசு கிறிஸ்து வழிநடத்துகிறார். அவர்கள் வேதப்பூர்வ தகுதிகளுக்கு இணங்க பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது முந்தைய கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கிறது. (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9) முதல் நூற்றாண்டில் எருசலேமிலிருந்த மூப்பர்களின் ஒரு தொகுதியினர் ஆளும் குழுவாக செயல்பட்டனர்; அவர்களுக்கு சபைகளை மேற்பார்வை செய்வது, ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை மேற்பார்வையிடுவது போன்ற பொறுப்புகள் இருந்தன. யெகோவாவின் அமைப்பில் அதே முறை இன்றும் பின்பற்றப்படுகிறது.
அமைப்போடு சேர்ந்து முன்னேறுங்கள்!
22. என்ன உதவிகளை ஆளும் குழு அளிக்கிறது?
22 ராஜ்யத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா பொறுப்புகளும் இன்று “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது; அந்த அடிமை வகுப்பாரை யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழு பிரதிநிதித்துவம் செய்கிறது. (மத்தேயு 24:45-47, NW) கிறிஸ்தவ சபைக்கு ஆன்மீக போதனைகளையும் வழிநடத்துதல்களையும் கொடுப்பதே ஆளும் குழுவின் முக்கிய நோக்கம். (அப்போஸ்தலர் 6:1-6) யெகோவாவின் சாட்சிகள் இயற்கை சேதத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்கும், அவர்களுடைய வீடுகளோ அல்லது ராஜ்ய மன்றங்களோ நாசமானால் அவற்றை சரிசெய்வதற்கும் ஆளும் குழு, ஒன்று அல்லது அதற்கும் அதிகமான சட்டப்பூர்வ ஸ்தாபனங்களை உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்கிறது. கிறிஸ்தவர்கள் சிலர் மிக மோசமாக நடத்தப்பட்டால் அல்லது துன்புறுத்தப்பட்டால் அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ‘கஷ்டங்கள் நிறைந்த சமயத்திலும்’ பிரசங்க வேலை முன்னேறி செல்வதற்கு தேவையான எல்லா முயற்சிகளும் செய்யப்படுகின்றன.—2 தீமோத்தேயு 4:1, 2.
23, 24. பிரச்சினைகள் மத்தியிலும் தம்முடைய ஜனங்களுக்கு யெகோவா எதை தொடர்ந்து தருகிறார், எது நம்முடைய தீர்மானமாக இருக்க வேண்டும்?
23 தம்முடைய ஜனங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் சரி, யெகோவா தொடர்ந்து அவர்களுக்கு ஆன்மீக உணவையும் தேவையான வழிநடத்துதல்களையும் அளிக்கிறார். தேவராஜ்ய அமைப்பு தொடர்ந்து முன்னேறுவதற்கும் அதில் தேவையான மாற்றங்கள் செய்வதற்கும் பொறுப்புள்ள சகோதரர்களுக்கு உட்பார்வையையும் புரிந்துகொள்ளுதலையும் கடவுள் அளிக்கிறார். (உபாகமம் 34:9; எபேசியர் 1:16, 17) எனவே, நமக்கு ஒப்படைக்கப்பட்ட சீஷராக்கும் வேலையை செய்வதற்கும், உலகம் முழுவதிலும் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கும் எது தேவையோ அதை யெகோவா நிச்சயமாகவே அளிக்கிறார்.—2 தீமோத்தேயு 4:5.
24 தமக்கு உண்மையோடு இருக்கும் ஜனங்களை யெகோவா ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது; வரவிருக்கும் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” நம்மை நிச்சயம் பாதுகாப்பார். (வெளிப்படுத்துதல் 7:9-14; சங்கீதம் 94:14; 2 பேதுரு 2:9) ஆரம்பத்தில் நமக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போமாக. (எபிரெயர் 3:14) மேலும், யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேற வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்போமாக.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• யெகோவாவின் அமைப்பு முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்று நாம் எப்படி சொல்ல முடியும்?
• கடவுளுடைய ஜனங்கள் படிப்படியான ஆன்மீக அறிவொளியை பெறுகின்றனர் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
• கிறிஸ்தவ ஊழியத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் யாவை?
• காலத்துக்கு ஏற்ற என்ன மாற்றங்கள் யெகோவாவின் ஊழியர்களுடைய அமைப்பில் செய்யப்பட்டன?
[பக்கம் 17-ன் படம்]
யெகோவாவின் மகத்துவமான செயல்கள் அனைத்தையும் தாவீதால் விளக்க முடியவில்லை, நம்மாலும் முடியாது
[பக்கம் 18-ன் படம்]
அமைப்பின் செயல்முறைகளில் செய்த மாற்றங்கள் தேவனுடைய மந்தைக்கு பிரயோஜனமாக இருந்திருக்கின்றன