பாடம் 11
நாங்கள் எதற்காக மாநாடுகளுக்குப் போகிறோம்?
இந்தப் படத்தில் இருக்கிறவர்கள் ஏன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்? ஏனென்றால், இவர்கள் எல்லாரும் ஒரு மாநாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் வருடத்திற்கு மூன்று தடவை ஒன்றுகூடி வர வேண்டும் என்று கடவுள் சொல்லியிருந்தார். (உபாகமம் 16:16) அவர்களைப் போலவே நாங்களும் வருடத்திற்கு மூன்று தடவை இதேபோல் பெரிய மாநாடுகளில் சந்தோஷமாக கலந்துகொள்கிறோம். வட்டார மாநாடு வருடத்திற்கு இரண்டு தடவை நடக்கும், மண்டல மாநாடு வருடத்திற்கு ஒரு தடவை நடக்கும். வட்டார மாநாடு ஒரு நாள் மட்டும் நடக்கும், மண்டல மாநாடு மூன்று நாட்கள் நடக்கும். இந்த மாநாடுகளுக்குப் போவது எங்களுக்கு எப்படி உதவியாக இருக்கிறது?
எங்கள் மத்தியில் அன்பு அதிகமாகிறது. இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே நாங்களும் மாநாடுகளில் ஒன்றாகக் கூடிவந்து யெகோவாவை சந்தோஷமாக வணங்குகிறோம். (சங்கீதம் 26:12, அடிக்குறிப்பு; 111:1) இதுபோன்ற மாநாடுகளுக்கு மற்ற இடங்களில் இருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் யெகோவாவின் சாட்சிகள் வருவார்கள். மத்தியான நேரத்தில் நாங்கள் எல்லாரும் மாநாடு நடக்கிற இடத்திலேயே சேர்ந்து சாப்பிடுவோம். அந்த சமயத்தில் எல்லாரிடமும் நன்றாகப் பேசிப் பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்கும், புதுப்புது நண்பர்களும் கிடைப்பார்கள். (அப்போஸ்தலர் 2:42) ‘சகோதரர்கள் எல்லாரும்’ ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுவதை நேரடியாக பார்க்க முடியும்.—1 பேதுரு 2:17.
கடவுளுக்குப் பிடித்த விதத்தில் வாழ்வதற்குக் கற்றுக்கொள்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் ஒன்றாகக் கூடிவந்த சமயத்தில் “தங்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்ட விஷயங்களைப் புரிந்துகொண்டார்கள்.” அது அவர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. (நெகேமியா 8:8, 12) நாங்களும் மாநாட்டிலிருந்து நிறைய பைபிள் விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். பைபிள் சம்பந்தமாகத்தான் எல்லா நிகழ்ச்சிகளும் இருக்கும். பேச்சுகள், நடிப்புகள் மூலம் கடவுள் சொல்வதுபோல் நடப்பது எப்படி என்று கற்றுக்கொள்கிறோம். இந்தக் கஷ்டமான காலத்திலும் கடவுளுக்கு உண்மையாக வாழ்கிறவர்களுடைய அனுபவங்களை மாநாட்டில் கேட்போம். அது எங்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது. மண்டல மாநாடுகளில் பைபிள் நாடகங்கள் இருக்கும். வாழ்க்கைக்குத் தேவையான நிறைய விஷயங்களை அந்த நாடகங்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறோம். கடவுளுக்கு தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்கள், ஞானஸ்நானம் எடுக்க ஒவ்வொரு மாநாட்டிலும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
மாநாடுகளுக்குப் போவது ஏன் சந்தோஷமாக இருக்கிறது?
மாநாடுகளுக்கு போவது உங்களுக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கும்?