நம் பரிசுத்த கூட்டங்களை மதித்தல்
“நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்.”—ஏசாயா 56:7.
1. கூட்டங்களுக்கு தகுந்த மரியாதை காட்டுவதற்கு என்ன வேதப்பூர்வ காரணங்கள் இருக்கின்றன?
யெகோவா தம் மக்களான அபிஷேகம் செய்யப்பட்டவர்களையும் அவர்களுடைய தோழர்களையும் தம் ‘பரிசுத்த பர்வதத்தில்’ தம்மை வணங்குவதற்காக கூட்டிச் சேர்த்திருக்கிறார். தம் “ஜெபவீட்டிலே” அவர்களை மகிழப் பண்ணுகிறார். அந்த ஆன்மீக ஆலயம் ‘சகல ஜனங்களுக்கும் ஜெபவீடாக’ இருக்கிறது. (ஏசாயா 56:7; மாற்கு 11:17) தம் மக்களைக் கூட்டிச் சேர்க்க யெகோவா செய்திருக்கும் காரியங்கள், நம் வணக்கம் பரிசுத்தமானது, தூய்மையானது, மேம்பட்டது என்பதைக் காட்டுகிறது. நாம் கூடிவந்து கற்றுக்கொள்ளவும், வணங்கவும் அவர் செய்திருக்கும் ஏற்பாட்டிற்குத் தகுந்த மரியாதை காட்டுவதன் மூலம் அவர் பரிசுத்தமாக கருதுபவற்றை நாமும் பரிசுத்தமாக கருதுகிறோம் என்பதை நிரூபிப்போம்.
2. யெகோவா தம் வணக்க ஸ்தலத்தை பரிசுத்தமாகக் கருதினார் என்பதை எது காட்டுகிறது, இயேசுவும் தாம் அவ்வாறே கருதியதை எப்படிக் காட்டினார்?
2 யெகோவா தம் வணக்கத்திற்காக தெரிவு செய்த இடம் பூர்வ இஸ்ரவேலில் பரிசுத்தமாகக் கருதப்பட்டது. ஆசரிப்பு கூடாரமும், அதன் பொருள்களும், தட்டுமுட்டு சாமான்களும் “மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு” அவை அபிஷேகம் செய்யப்பட்டு, பரிசுத்தப்படுத்தப்பட்டன. (யாத்திராகமம் 30:26-29) அந்தக் கூடாரத்தின் இரு அறைகளில் ஒன்று ‘பரிசுத்த ஸ்தலமென்றும்’ மற்றொன்று ‘மகா பரிசுத்த ஸ்தலமென்றும்’ அழைக்கப்பட்டது. (எபிரெயர் 9:2, 3) பிற்பாடு, அந்த ஆசரிப்பு கூடாரத்திற்குப் பதிலாக எருசலேம் ஆலயம் வணக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. எருசலேம் நகரம், யெகோவாவின் வணக்கத்திற்கு மையமாக இருந்ததால் ‘பரிசுத்த நகரம்’ என்றழைக்கப்பட்டது. (நெகேமியா 11:1; மத்தேயு 27:53) இயேசுவும்கூட இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது அந்த ஆலயத்திற்கு உரிய மரியாதை காட்டினார். ஆலயப் பகுதியை வியாபார இடமாகவும் குறுக்கு வழியாகவும் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் அவமரியாதை காட்டியதைக் கண்டு அவர் கடுங்கோபம் கொண்டார்.—மாற்கு 11:15, 16.
3. இஸ்ரவேலரின் மாநாடுகள் பரிசுத்தமானவையாக இருந்ததை எது காட்டுகிறது?
3 யெகோவாவை வணங்குவதற்காகவும் அவருடைய நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுவதை கேட்பதற்காகவும் இஸ்ரவேலர் தொடர்ந்து கூடிவந்தார்கள். அவர்களுடைய பண்டிகைகளில் குறிப்பிட்ட சில நாட்கள், பரிசுத்த மாநாடுகள் அல்லது பயபக்திக்குரிய கூட்டங்கள் என்று அழைக்கப்பட்டன. இக்கூட்டங்கள் எந்தளவு பரிசுத்தமானவை என்பதை இது காட்டியது. (லேவியராகமம் 23:2, 3, 36, 37, NW) எஸ்றா, நெகேமியா ஆகியோரின் காலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், லேவியர்கள் “நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.” “ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால்” லேவியர்கள் “ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள்” என்றார்கள். அதன்பிறகு, ஏழு நாள் கூடாரப் பண்டிகையை இஸ்ரவேலர் ‘மிகுந்த சந்தோஷத்தோடு’ கொண்டாடினார்கள். அதோடு, “முதலாம் நாள்தொடங்கிக் கடைசி நாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம் நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது [அதாவது, பயபக்திக்குரிய கூட்டமாயிருந்தது].” (நெகேமியா 8:7-11, 17, 18) அவை உண்மையிலேயே பரிசுத்த நாட்களாக இருந்தன. அங்கு கூடிவந்தவர்கள் மரியாதையோடு கவனம்செலுத்த வேண்டியிருந்தது.
நம் கூட்டங்கள் பரிசுத்தமானவை
4, 5. நம்முடைய கூட்டங்கள் பரிசுத்தமானவை என்பதை அதிலுள்ள எந்த அம்சங்கள் நிரூபிக்கின்றன?
4 இன்று யெகோவாவின் வணக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட விசேஷ ஆலயத்தைக் கொண்ட சொல்லர்த்தமான பரிசுத்த நகரம் எதுவும் பூமியில் இல்லை என்பது உண்மையே. என்றாலும், யெகோவாவை வணங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டங்கள் பரிசுத்தமானவை என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. பைபிளை வாசிக்கவும் படிக்கவும் நாம் வாரத்தில் மூன்று நாட்கள் கூடிவருகிறோம். நெகேமியாவின் நாட்களில் செய்யப்பட்டதைப் போலவே, இன்றும் கூட்டங்களில் யெகோவாவின் வார்த்தை ‘தீர்க்கமாக வாசிக்கப்பட்டு’ அதற்கு ‘அர்த்தஞ்சொல்லப்படுகிறது.’ (நெகேமியா 8:8) நம்முடைய சபை கூட்டங்களின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஜெபம் செய்யப்படுகிறது. பெரும்பாலான கூட்டங்களில் நாம் யெகோவாவை துதித்து பாடல்களைப் பாடுகிறோம். (சங்கீதம் 26:12) உண்மையில், சபை கூட்டங்கள் நம் வணக்கத்தின் பாகமாக இருக்கின்றன. அவற்றில் கலந்துகொள்கையில் பயபக்தி காட்டுவதும், மரியாதையோடு கவனிப்பதும் அவசியம்.
5 தம்மை வணங்குவதற்காகவும், தம்முடைய வார்த்தையை படிப்பதற்காகவும், இனிமையான கிறிஸ்தவ கூட்டுறவை அனுபவித்து மகிழ்வதற்காகவும் தம் மக்கள் ஒன்றுகூடி வருகையில் யெகோவா அவர்களை ஆசீர்வதிக்கிறார். கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான சமயம் வரும்போது, ‘யெகோவா’ அங்கே ‘ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார்’ என்பதில் நாம் உறுதியாயிருக்கலாம். (சங்கீதம் 133:1, 3) அந்த ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதை உன்னிப்பாக கவனிக்கும்போது நாமும் அந்த ஆசீர்வாதத்தைப் பெறுவோம். அதுமட்டுமின்றி, “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்று இயேசு கூறினார். சூழமைவை பொறுத்தவரை, தனி நபர்களுக்கு இடையே இருக்கும் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கூடிவரும் கிறிஸ்தவ மூப்பர்களுக்கு இவ்வார்த்தைகள் பொருந்துகின்றன. ஆனால், அதிலுள்ள நியமம் நம்முடைய கூட்டங்களுக்கும் பொருந்துகிறது. (மத்தேயு 18:20) கிறிஸ்தவர்கள் தம்முடைய பெயரில் கூடிவருகையில் பரிசுத்த ஆவியின் மூலமாக கிறிஸ்து அங்கே இருக்கிறாரென்றால், அப்படிப்பட்ட கூட்டங்களை நாம் பரிசுத்தமாக கருதவேண்டும், அல்லவா?
6. நம்முடைய பெரிய மற்றும் சிறிய வணக்க ஸ்தலங்களைப் பற்றி என்ன சொல்லலாம்?
6 மனிதர் கட்டிய ஆலயங்களில் யெகோவா குடியிருப்பதில்லை என்பது உண்மையே. என்றாலும், நம்முடைய ராஜ்ய மன்றங்கள் மெய் வணக்கத்திற்கான இடங்கள். (அப்போஸ்தலர் 7:48; 17:24) யெகோவாவின் வார்த்தையை படிப்பதற்காகவும், அவரிடம் ஜெபிப்பதற்காகவும், அவரை துதித்துப் பாடுவதற்காகவும் நாம் அங்கே கூடிவருகிறோம். நம்முடைய மாநாட்டு மன்றங்களைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. அரங்கங்கள், பொருட்காட்சி வளாகங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்ற பெரிய இடங்களை வாடகைக்கு எடுத்து மாநாடுகளுக்காக பயன்படுத்துகையில், அவையும் நம்முடைய வணக்க ஸ்தலங்களாக ஆகின்றன. சபை கூட்டங்கள் நடைபெறும் சிறிய இடங்களிலும் சரி, மாநாடுகள் நடைபெறும் பெரிய இடங்களிலும் சரி, வணக்கத்திற்காக கூடிவரும்போது நாம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். அது நம்முடைய மனப்பான்மையிலும் நடத்தையிலும் வெளிப்பட வேண்டும்.
கூட்டங்களுக்கு எப்படி மரியாதை காட்டலாம்?
7. கூட்டங்களை மதிப்பதை நாம் எப்படி வெளிப்படையாக காண்பிக்கலாம்?
7 நம்முடைய கூட்டங்களை மதிக்கிறோம் என்பதை வெளிப்படையாக காண்பிப்பதற்கு பல வழிகள் உள்ளன. ராஜ்ய பாடல்கள் பாடப்படும்போதே ஆஜராயிருப்பது ஒரு வழியாகும். அதில் பல பாடல்கள் ஜெபத்தின் வடிவில் இருப்பதால், அவற்றை நாம் மிகுந்த பயபக்தியோடு பாட வேண்டும். 22-ம் சங்கீதத்தை மேற்கோள் காட்டி, இயேசுவைக் குறித்து பவுல் பின்வருமாறு எழுதினார்: “உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன்.” (எபிரெயர் 2:12) ஆகவே, கூட்டத்தின் ஆரம்பத்தில் பாடல் எண்ணை சேர்மன் அறிவிப்பதற்கு முன்பே நம்முடைய இருக்கையில் அமர்ந்துவிட வேண்டும்; பாடல் வரிகளோடு மனம் ஒன்றி பாட வேண்டும்; இப்படிச் செய்வதை நாம் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். “செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்” என்று எழுதிய சங்கீதக்காரனைப் போலவே நாமும் பாடும்போது உணர வேண்டும். (சங்கீதம் 111:1) ஆம், யெகோவாவை துதிப்பதற்காக நாம் கூட்டங்களுக்கு முன்னதாகவே வந்து, அவை முடியும்வரை இருக்க வேண்டும்.
8. கூட்டங்களில் செய்யப்படும் ஜெபங்களுக்கு நாம் பயபக்தியோடு கவனம் செலுத்தவேண்டும் என்பதை எந்த பைபிள் உதாரணம் காட்டுகிறது?
8 நம்முடைய கூட்டங்களின் ஆன்மீக மதிப்பை அதிகரிக்கச் செய்யும் மற்றொரு அம்சம், கூடிவந்திருக்கும் எல்லாருடைய சார்பாகவும் ஏறெடுக்கப்படும் இருதயப்பூர்வமான ஜெபமே. ஒரு சந்தர்ப்பத்தில், எருசலேமிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி, “ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு” ஊக்கமாக ஜெபித்தார்கள். இதன் விளைவாக, துன்புறுத்தலின் மத்தியிலும் அவர்கள் தொடர்ந்து “தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.” (அப்போஸ்தலர் 4:24-31) அந்த ஜெபத்தின்போது அங்கு கூடியிருந்தவர்கள் யாராவது தங்கள் மனதை அலைபாய விட்டிருப்பார்களா? இல்லை, அவர்கள் “ஒருமனப்பட்டு” ஜெபித்தார்கள். நம்முடைய கூட்டங்களில் செய்யப்படும் ஜெபங்கள் அங்கு கூடிவந்திருக்கும் அனைவரின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறது. அந்த ஜெபங்களின்போது நாம் பயபக்தியோடு கவனம் செலுத்த வேண்டும்.
9. நம்முடைய உடை, நடத்தை ஆகியவற்றின் மூலமாக நம்முடைய பரிசுத்த கூட்டங்களுக்கு எவ்வாறு மரியாதை காட்டலாம்?
9 நம்முடைய கூட்டங்களின் பரிசுத்தத்தன்மையை நாம் மதிக்கிறோம் என்பதை நாம் உடையணியும் விதத்தின் மூலமாகவும் வெளிக்காட்டலாம். நம்முடைய உடை, சிகையலங்காரம் ஆகியவை நம்முடைய கூட்டங்களின் மதிப்பை மேலும் அதிகரிக்கலாம். அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு அறிவுறுத்தினார்: “புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன். ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே . . . தங்களை அலங்கரிக்கவேண்டும்.” (1 தீமோத்தேயு 2:8-10) பெரிய மாநாடுகள் திறந்தவெளி அரங்கங்களில் நடத்தப்படும்போது, சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு நாம் உடுத்தலாம்; ஆனால், அது கண்ணியமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக, நிகழ்ச்சியை நாம் மதிக்கிறோம் என்றால் அச்சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டோ, சூயிங்கம் மென்றுகொண்டோ இருக்க மாட்டோம். கூட்டங்களில் நாம் தகுந்த விதத்தில் உடுத்தி, கண்ணியமாக நடந்துகொள்கையில் அது யெகோவா தேவனுக்கும், அவருடைய வணக்கத்திற்கும், நம்முடைய சக வணக்கத்தாருக்கும் மதிப்பு சேர்க்கிறது.
கடவுளுடைய வீட்டாருக்கு ஏற்ற நடத்தை
10. நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்களில் மிகச் சிறந்த நடத்தை எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு காட்டினார்?
10 கிறிஸ்தவ கூட்டங்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமென்பது சம்பந்தமாக, அப்போஸ்தலன் பவுல் வழங்கியுள்ள ஞானமான அறிவுரையை 1 கொரிந்தியர் 14-ம் அதிகாரத்தில் காணலாம். முடிவாக அவர் இவ்வாறு கூறினார்: “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.” (1 கொரிந்தியர் 14:40) கிறிஸ்தவ சபையின் நடவடிக்கைகளில் நம்முடைய கூட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அங்கே யெகோவாவின் வீட்டாருக்கு ஏற்ற நடத்தை எதிர்பார்க்கப்படுகிறது.
11, 12. (அ) நம்முடைய கூட்டங்களில் கலந்துகொள்ளும் பிள்ளைகளின் மனதில் எதைப் பதியவைக்க வேண்டும்? (ஆ) கூட்டங்களில், பொருத்தமான எந்த வழிகளில் பிள்ளைகள் தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்டலாம்?
11 கூட்டங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று முக்கியமாக பிள்ளைகளுக்கு சொல்லித்தரப்பட வேண்டும். ராஜ்ய மன்றமும், சபை புத்தக படிப்பு நடைபெறும் இடமும் விளையாடுவதற்கான இடங்கள் அல்ல என்பதை கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு புரியவைக்க வேண்டும். அவை, யெகோவாவை வணங்குவதற்கும், அவருடைய வார்த்தையை படிப்பதற்குமான இடங்கள். ஞானமுள்ள அரசராகிய சாலொமோன் பின்வருமாறு எழுதினார்: “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; . . . செவிகொடுக்கச் சேர்வதே நலம்.” (பிரசங்கி 5:1) மோசே, இஸ்ரவேலரை கூடிவரும்படி சொல்லுகையில் பெரியவர்களோடு “பிள்ளைகளும்” வரும்படி கூறினார். அவர் இவ்வாறு கூறினார்: ‘கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, . . . உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்க வேண்டும்.’—உபாகமம் 31:12, 13.
12 இன்றும்கூட, பெற்றோருடன் கூட்டங்களுக்கு வரும் பிள்ளைகள் அங்கே கேட்டு, கற்றுக்கொள்வதற்காகவே வருகிறார்கள். கூட்டங்களில் நடப்பதைக் கவனித்து பைபிளின் அடிப்படை சத்தியத்தையாவது புரிந்துகொள்ளும் அளவிற்கு வளர்ந்தவுடன், சுருக்கமான பதில்கள் சொல்லுவதன் மூலம் பிள்ளைகள் தங்கள் விசுவாசத்தை ‘வாயினாலே அறிக்கைபண்ணுகிறார்கள்.’ (ரோமர் 10:10) சின்னப் பிள்ளைகள் தங்களுக்குப் புரிந்த கேள்விக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்ல ஆரம்பிக்கலாம். முதலில், பதிலை அப்படியே வாசிக்கலாம்; காலப்போக்கில், சொந்த வார்த்தையில் பதிலளிக்க முயற்சிக்கலாம். இது பிள்ளைகளுக்கு பிரயோஜனமாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும். அவர்கள் சொந்த வார்த்தையில் அளிக்கும் பதில்களைக் கேட்டு கூடிவந்திருக்கும் பெரியவர்களும் சந்தோஷப்படுவார்கள். பதில் சொல்வதன் மூலம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள். முடிந்தவரை பிள்ளைகளுக்கு சொந்தமாக ஒரு பைபிள், பாட்டு புத்தகம், படிக்கப்படும் பிரசுரம் ஆகியவற்றைக் கொடுப்பது நல்லது. அந்தப் பிரசுரங்களுக்கு தகுந்த மரியாதை காட்ட அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் நம்முடைய கூட்டங்கள் எந்தளவு பரிசுத்தமானவை என்பதை பிள்ளைகளின் மனதில் பதியவைக்கும்.
13. நம்முடைய கூட்டங்களுக்கு முதன்முறையாக வருவோரை குறித்ததில் நம்முடைய ஆசை என்ன?
13 நம்முடைய கூட்டங்கள் கிறிஸ்தவமண்டல சர்ச் ஆராதனைகளைப் போலிருக்க நாம் விரும்புவதில்லை என்பது உண்மையே. ஏனெனில், சில சர்ச்சுகளில் அதன் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் ஒட்டுறவின்றி இருக்கிறார்கள். பக்திமான்களாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். வேறு சில சர்ச்சுகளிலோ, ‘ராக்’ இசை நிகழ்ச்சியைப் போல பயங்கர இரைச்சலுடன் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களில் நட்பும் உபசரிப்பும் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அதற்காக, அக்கம்பக்கத்திலுள்ள ‘கிளப்’பை போல ஏனோதானோ என்ற முறையிலும் இருக்கக்கூடாது. நாம் யெகோவாவை வணங்குவதற்காக கூடிவருகிறோம். ஆகையால் நம்முடைய கூட்டங்கள் கண்ணியமானதாக இருக்க வேண்டும். கூட்டங்களுக்கு முதன்முறையாக வருபவர்கள் அங்கே கொடுக்கப்படும் பேச்சை கேட்டு, நம்முடைய மற்றும் நம் பிள்ளைகளுடைய நடத்தையை கவனித்த பிறகு, “தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று” சொல்ல வேண்டும் என்பதே நம்முடைய ஆசை.—1 கொரிந்தியர் 14:25.
வணக்கத்தின் நிரந்தர அம்சம்
14, 15. (அ) ‘நம் கடவுளின் ஆலயத்தைப் புறக்கணிப்பதை’ நாம் எவ்வாறு தவிர்க்கலாம்? (ஆ) ஏசாயா 66:23 எவ்வாறு ஏற்கெனவே நிறைவேறி வருகிறது?
14 முன்னரே குறிப்பிட்டபடி, யெகோவா தம் மக்களைக் கூடிவரச் செய்து, தம் ஆன்மீக ஆலயமாகிய “ஜெபவீட்டிலே” அவர்களை மகிழச்செய்கிறார். (ஏசாயா 56:7) உண்மையுள்ள மனிதரான நெகேமியா, அக்காலத்திலிருந்த ஆலயத்தை பொருளாதார ரீதியில் ஆதரிப்பதன் மூலம் அதற்கு தகுந்த மரியாதை காட்டும்படி தன் சக யூதர்களுக்கு நினைப்பூட்டினார். “நம் கடவுளின் ஆலயத்தைப் புறக்கணிக்க கூடாது” என்று அவர் கூறினார். (நெகேமியா 10:39, NW) யெகோவா தம்முடைய “ஜெபவீட்டிலே” தம்மை வணங்கும்படி விடுக்கும் அழைப்பை நாம் புறக்கணிக்கக்கூடாது.
15 வணக்கத்திற்காக தொடர்ந்து கூடிவருவது எந்தளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி ஏசாயா பின்வருமாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுது கொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 66:23) இது இன்று நிறைவேறி வருகிறது. ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் யெகோவாவை வணங்குவதற்காக மாதம் தவறாமல் ஒவ்வொரு வாரமும் கூடிவருகிறார்கள். மற்ற காரியங்களோடுகூட, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருவதன் மூலமும் பிரசங்க ஊழியத்தில் ஈடுபடுவதன் மூலமும் அவர்கள் இதைச் செய்கிறார்கள். தவறாமல் வந்து ‘யெகோவாவுக்கு முன்பாகத் தொழுதுகொள்வோரில்’ நீங்களும் ஒருவரா?
16. கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது ஏன் நம்முடைய வாழ்க்கையில் நிரந்தர அம்சமாக இருக்க வேண்டும்?
16 யெகோவா வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகில் ஏசாயா 66:23 முழுமையாக நிறைவேறும். அந்தச் சமயத்தில் “மாம்சமான யாவரும்” சொல்லர்த்தமாகவே வாராவாரம் மாதாமாதம் என என்றென்றுமாக யெகோவாவை ‘தொழுது கொள்வார்கள்,’ அதாவது வணங்குவார்கள். புதிய உலகிலும் யெகோவாவை வணங்குவதற்காக ஒன்றுகூடி வருவது நம்முடைய ஆன்மீக வாழ்வில் நிரந்தர அம்சமாக இருக்கும். அப்படியானால், நம்முடைய பரிசுத்த கூட்டங்களில் தவறாமல் ஆஜராவதை, வாழ்க்கையின் நிரந்தர அம்சமாக இப்போதே ஆக்கிக்கொள்வது அவசியம், அல்லவா?
17. ‘நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறோமோ அவ்வளவாய்’ நாம் ஏன் கூட்டங்களுக்கு வர வேண்டும்?
17 முடிவு நெருங்கி வந்துகொண்டிருக்கையில், சக கிறிஸ்தவர்களோடு வணக்கத்திற்காக ஒன்றுகூடி வருவதை விட்டுவிடாதிருக்க நாம் திட தீர்மானத்தோடு இருக்க வேண்டும். நம்முடைய கூட்டங்கள் பரிசுத்தமானவை என்பதை நாம் மதிப்பதால், வேலை, ஹோம்வொர்க், டியூஷன் போன்றவை நம் சக வணக்கத்தாரோடு கூடிவருவதை தடுப்பதற்கு நாம் அனுமதிப்பதில்லை. இப்படிக் கூடிவருவதால் கிடைக்கும் பலம் நமக்குத் தேவை. ஒருவரையொருவர் நன்கு தெரிந்துகொள்வதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும், “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும்” தூண்டுவிப்பதற்கும் கூட்டங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன. ‘நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறோமோ அவ்வளவாய்’ இவற்றைச் செய்ய வேண்டும். (எபிரெயர் 10:24, 25) ஆகவே, தவறாமல் ஆஜராதல், பொருத்தமான உடை, நன்நடத்தை ஆகியவற்றின் மூலமாக நம்முடைய பரிசுத்த கூட்டங்களுக்கு எப்போதும் தகுந்த மரியாதை காட்டுவோமாக. இவ்வாறு செய்வதன் மூலம் யெகோவா பரிசுத்தமாக கருதுபவற்றை நாமும் பரிசுத்தமாக கருதுகிறோம் என்பதைக் காட்டலாம்.
மறுபார்வை
• யெகோவாவின் மக்களுடைய கூட்டங்கள் பரிசுத்தமானவையாக இருக்க வேண்டுமென்பதை எது காட்டுகிறது?
• நம் கூட்டங்களின் எந்த அம்சங்கள் அவை பரிசுத்தமானவை என்பதைக் காட்டுகின்றன?
• நம் கூட்டங்களின் பரிசுத்தத்தன்மையை மதிப்பதை பிள்ளைகள் எப்படிக் காட்டலாம்?
• தவறாமல் கூட்டங்களில் ஆஜராவதை நம் வாழ்வில் நிரந்தர அம்சமாக ஏன் ஆக்கிக்கொள்ள வேண்டும்?
[பக்கம் 28-ன் படங்கள்]
யெகோவாவை வணங்குவதற்கான கூட்டங்கள் எங்கே நடத்தப்பட்டாலும் அவை பரிசுத்தமானவையே
[பக்கம் 31-ன் படம்]
கேட்டு, கற்றுக்கொள்வதற்காகவே நம் பிள்ளைகள் கூட்டங்களுக்கு வருகிறார்கள்