சகோதரர்களே, நீங்கள் தகுதிபெற முயற்சி செய்கிறீர்களா?
1. இளம் சகோதரர் ஒருவர் எப்போது 1 தீமோத்தேயு 3:1-ல் உள்ள அறிவுரையைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கலாம்?
1 “தகுதிபெற முயலுகிற ஒருவர் சிறந்த வேலையை விரும்புகிறார்.” (1 தீ. 3:1) கடவுளுடைய சக்தியால் அருளப்பட்ட இந்த வார்த்தைகள்... சபையில் பொறுப்புகளுக்காகத் தகுதிபெற சகோதரர்களை உந்துவிக்கின்றன. வயது முதிர்ந்த நபராக இருந்தால்தான் நீங்கள் தகுதிபெற முடியுமா? சொல்லப்போனால், நீங்கள் ஓர் இளைஞராக இருக்கும்போதே அதற்காகத் தகுதிபெற முயற்சி செய்வது மிகவும் நல்லது. இதனால், உங்களுக்குப் பயிற்றுவிப்பு கிடைக்கிறது; அதோடு, பிற்காலத்தில் ஓர் உதவி ஊழியராக நியமிக்கப்படுவதற்குத் தகுதிபெற்று வருவதைக் காட்டுகிறீர்கள். (1 தீ. 3:10) நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற இளம் சகோதரர் என்றால், தகுதிபெற எப்படி முயற்சி செய்யலாம்?
2. சுயதியாக மனப்பான்மையை எப்படி வளர்த்துக்கொள்ளலாம், செயலில் காட்டலாம்?
2 சுயதியாகம்: நீங்கள் ஒரு சிறந்த வேலைக்காகத் தகுதிபெற முயற்சி செய்கிறீர்கள், ஏதோவொரு பதவிக்காக அல்ல என்பதை நினைவில் வையுங்கள். ஆகையால், உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள்ளுங்கள். இதற்கு ஒரு வழி... இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதாகும். (மத். 20:28; யோவா. 4:6, 7; 13:4, 5) மற்றவர்கள்மீது அக்கறை காட்டும் பண்பை வளர்த்துக்கொள்ள யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (1 கொ. 10:24) சபையிலுள்ள வயதானவர்களுக்கு அல்லது சுகவீனமானவர்களுக்கு உங்களால் ஏதாவது நடைமுறையான உதவியளிக்க முடியுமா? ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்வதற்கோ பராமரிப்பதற்கோ நீங்கள் உதவுகிறீர்களா? தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாலண்டியர் பேச்சு கொடுக்க முன்வருகிறீர்களா? பிறருக்கு ஏதாவது விதத்தில் உதவி செய்யும்போது அது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும்.—அப். 20:35.
3. ஆன்மீக முதிர்ச்சி எவ்வளவு முக்கியம், அதை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
3 ஆன்மீக முதிர்ச்சி: எந்தவொரு விசேஷ திறமையையும்விட ஆன்மீக முதிர்ச்சிதான் சபையில் ஓர் ஊழியராகச் சேவை செய்வதற்கு முக்கியம். ஆன்மீக முதிர்ச்சியுள்ள ஒருவர் எதையும் யெகோவாவின் கண்ணோட்டத்திலும் இயேசுவின் கண்ணோட்டத்திலும் பார்க்க முயற்சி செய்கிறார். (1 கொ. 2:15, 16) ‘கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்களை’ வெளிக்காட்டுகிறார். (கலா. 5:22, 23) கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கிறார், பக்திவைராக்கியத்துடன் பிரசங்கிக்கிறார். (மத். 6:33) நீங்கள் தனிப்பட்ட படிப்பில் தவறாமல் ஈடுபடுவதன் மூலம் ஆன்மீகக் குணங்களை வளர்த்துக்கொள்ளலாம். அப்படியென்றால், தினமும் பைபிள் வாசிக்க வேண்டும்... காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஒன்றுவிடாமல் வாசிக்க வேண்டும்... சபை கூட்டங்களுக்காகத் தயாரிக்க வேண்டும்... அவற்றில் கலந்துகொள்ள வேண்டும். (சங். 1:1, 2; எபி. 10:24, 25) ஆன்மீக ரீதியில் முன்னேறச் சொல்லி இளம் தீமோத்தேயுவை பவுல் உற்சாகப்படுத்தியபோது, ‘உன் போதனையின் மீது எப்போதும் கவனம் செலுத்து’ என்று எழுதினார். (1 தீ. 4:15, 16) ஆகவே, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு நியமிப்பு கிடைத்தவுடன் அதைச் சிறப்பாகச் செய்வதற்குக் கடினமாய் முயலுங்கள். ஊழியத்திற்காகத் தயார் செய்யுங்கள், அதில் தவறாமல் ஈடுபடுங்கள். பயனியர் சேவை செய்வது, பெத்தேல் சேவை செய்வது, திருமணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளியில் கலந்துகொள்வது போன்ற ஆன்மீக இலக்குகள் வைத்து அவற்றை அடைய முயலுங்கள். ‘இளமைப் பருவத்திற்குரிய ஆசைகளிலிருந்து விலகியோடுவதற்கு’ ஆன்மீக முதிர்ச்சி உங்களுக்குக் கைகொடுக்கும்.—2 தீ. 2:22.
4. நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மையின் மதிப்பு என்ன?
4 நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை: முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஏழை கிறிஸ்தவர்களுக்கு உணவு வழங்க “நற்சான்று” பெற்ற சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள்; அவர்கள் நம்பகமானவர்களாக... உண்மையுள்ளவர்களாக... இருந்ததால், இந்த வேலையைக் கவனித்துக்கொள்வார்களா மாட்டார்களா என்பதைப் பற்றி அப்போஸ்தலர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதோடு, மிக முக்கியமான மற்ற விஷயங்கள்மீது அப்போஸ்தலர்களால் கவனம் செலுத்தவும் முடிந்தது. (அப். 6:1-4) ஆகவே, சபையில் உங்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால், உங்களால் முடிந்தளவு சிறப்பாகச் செய்யுங்கள். அதோடு, பேழையைக் கட்டும் விஷயத்தில் எல்லா அறிவுரைகளையும் கவனமாகக் கடைப்பிடித்த நோவாவைப் பின்பற்றுங்கள். (ஆதி. 6:22) உண்மைத்தன்மை ஆன்மீக முதிர்ச்சிக்கு அடையாளம், அதை யெகோவா உயர்வாக மதிக்கிறார்.—1 கொ. 4:2; “பயிற்சியால் வரும் பலன்கள்” என்ற பெட்டியைக் காண்க.
5. ஏன் இளம் சகோதரர்கள் தகுதிபெற முயற்சி செய்ய வேண்டும்?
5 தீர்க்கதரிசனத்தின்படி, கூட்டிச்சேர்க்கும் வேலையை யெகோவா விரைவுபடுத்துகிறார். (ஏசா. 60:22) ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக இரண்டரை லட்சம் பேர் ஞானஸ்நானம் பெறுகிறார்கள். புதியவர்கள் அநேகர் சபைக்குள் வந்துகொண்டிருப்பதால், சபை பொறுப்புகளைக் கவனிக்க ஆன்மீக முதிர்ச்சியுள்ள தகுதிவாய்ந்த சகோதரர்கள் தேவை. எக்காலத்தையும்விட இக்காலத்தில், யெகோவாவின் சேவையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. (1 கொ. 15:58) இளம் சகோதரர்களே, நீங்கள் தகுதிபெற முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் உண்மையிலேயே சிறந்த வேலையைச் செய்ய விரும்புகிறீர்கள்!
[பக்கம் 5-ன் படம்]
புதியவர்கள் அநேகர் சபைக்குள் வந்துகொண்டிருப்பதால், சபை பொறுப்புகளைக் கவனிக்க ஆன்மீக முதிர்ச்சியுள்ள தகுதிவாய்ந்த சகோதரர்கள் தேவை
[பக்கம் 6-ன் பெட்டி]
பயிற்சியால் வரும் பலன்கள்
தகுதிவாய்ந்த இளம் சகோதரர்களுக்கு மூப்பர்கள் பொறுப்புகளைக் கொடுத்து பயிற்சி அளிக்கும்போது அவர்கள் பலனடைகிறார்கள். ஒருசமயம், சபைக்கூட்டம் முடிந்த பின்பு வட்டாரக் கண்காணி ஒருவர் மேடையில் அமர்ந்துகொண்டு பிரஸ்தாபி ஒருவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்து, என்ன விஷயமென அவனிடம் கேட்டார். ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும் மேடையைச் சுத்தம் செய்வது தன்னுடைய வேலையென அந்தச் சிறுவன் பதிலளித்தான். அவனுடைய பெற்றோர்கள் கிளம்ப தயாராய் இருந்தார்கள், ஆனால் இந்த வேலையைச் செய்யாமல் போக அவன் விரும்பவில்லை. உடனே வட்டாரக் கண்காணி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். “அந்த சபையில் தகுதிவாய்ந்த இளம் சகோதரர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுத்து மூப்பர்கள் தவறாமல் பயிற்சி தருகிறார்கள். அதனால், நான் அந்த சபைக்குச் சென்றிருந்தபோது, இளம் சகோதரர்களை உதவி ஊழியர்களாக நியமிக்க அவர்கள் வழக்கமாக சிபாரிசு செய்வதைக் கவனித்தேன்” என்று அவர் கூறினார்.