பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுப்பது ஏன், எப்படி?
இந்தப் பூமி படைக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே ஒருவர் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டார். ஆம், யெகோவா தமது ஒரே மகனைப் படைத்துவிட்டு, இந்தச் சர்வலோகத்தையும் படைக்கும் வேலையை அவரோடு பகிர்ந்துகொண்டார்; அந்த மகன் ‘கைதேர்ந்த வேலையாளாக’ இருந்தார். (நீதி. 8:22, 23, 30, NW; யோவா. 1:3) முதல் மனித ஜோடியைக் கடவுள் படைத்தபோது, ‘பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தும்படி’ அவர்களிடம் சொன்னார். (ஆதி. 1:28) கொஞ்சம் கொஞ்சமாகப் பூமி முழுவதையும் ஏதேன் தோட்டத்தைப் போலாக்கும் வேலையை அவர்களுக்குக் கொடுத்தார். ஆம், பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுப்பது, ஆரம்பத்திலிருந்தே யெகோவாவுடைய அமைப்பின் தனித்தன்மையாக இருந்து வந்திருக்கிறது.
பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுப்பது என்றால் என்ன? கிறிஸ்தவ மூப்பர்கள் சபைப் பொறுப்புகள் சிலவற்றை ஏன் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்? அதை அவர்கள் எப்படிச் செய்யலாம்?
பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுப்பது என்றால் என்ன?
பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுப்பது என்றால், இன்னொருவரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதை அல்லது இன்னொருவரைப் பிரதிநிதியாக நியமிப்பதை அர்த்தப்படுத்துகிறது. ஆகவே, பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுக்க வேண்டுமென்றால், திட்டமிடும் வேலைகளைச் செய்து முடிக்க மற்றவர்களுடைய உதவியை நாடுவது அவசியம். அப்படியென்றால், நமக்கிருக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொடுக்க வேண்டும்.
கிறிஸ்தவ சபையில் ஏதேனும் வேலையைச் செய்ய நியமிக்கப்பட்டவர்கள், அந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும், அது எந்தளவுக்கு நடந்தேறியிருக்கிறதெனத் தெரிவிக்க வேண்டும், வேலையைப் பகிர்ந்தளித்தவரின் ஆலோசனையைப் பெரும்பாலும் கேட்க வேண்டும். ஆனால், வேலையைப் பகிர்ந்தளித்த சகோதரருக்குத்தான், அது முடியும்படி பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பு உள்ளது. வேலை எப்படி நடந்தேறி வருகிறதென அவர் கண்காணித்து, தேவைப்படுகையில் ஆலோசனைகள் தர வேண்டும். என்றாலும், ‘வேலையை நம்மாலேயே செய்ய முடியும்போது ஏன் மற்றவர்களுக்கு அதைப் பகிர்ந்துகொடுக்க வேண்டும்?’ என சிலர் கேட்கலாம்.
ஏன் பகிர்ந்துகொடுக்க வேண்டும்?
யெகோவா தமது ஒரே மகனைப் படைத்துவிட்டு, மற்ற எல்லாவற்றையும் படைக்கும் வேலையை அவரோடு பகிர்ந்துகொண்டதை யோசித்துப் பாருங்கள். ஆம், “பரலோகத்திலுள்ளவை, பூமியிலுள்ளவை, காணப்படுகிறவை, காணப்படாதவை ஆகிய அனைத்தும் . . . அவர் மூலமாகவே படைக்கப்பட்டன.” (கொலோ. 1:16) யெகோவா தனியாகவே எல்லாவற்றையும் படைத்திருக்க முடியும், ஆனாலும் அந்த வேலையில் கிடைக்கும் மகிழ்ச்சியைத் தம் மகனுடன் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்தார். (நீதி. 8:31) இதனால், அவருடைய குணங்களை அவரது மகன் இன்னுமதிகமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஒரு விதத்தில், அந்தத் தகப்பன் தமது ஒரே மகனைப் பயிற்றுவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்லலாம்.
இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, தமது தகப்பனைப் போலவே பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுத்தார். அவர் படிப்படியாகத் தமது சீடர்களைப் பயிற்றுவித்தார். பிரசங்க வேலையை முன்னின்று செய்வதற்கு தமது 12 அப்போஸ்தலர்களையும் அதன்பின் 70 சீடர்களையும் தமக்கு முன்பாகவே அனுப்பி வைத்தார். (லூக். 9:1-6; 10:1-7) அந்த இடங்களுக்கு இயேசு பிற்பாடு சென்றபோது, ஏற்கெனவே போடப்பட்டிருந்த அஸ்திவாரத்தின்மீது அவரால் கட்ட முடிந்தது. இயேசு பூமியைவிட்டுப் போவதற்கு முன்பாக, தாம் பயிற்றுவித்த சீடர்களுக்கு இன்னும் பெரிய பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தார்; அவற்றில் ஒன்றுதான், உலகெங்கும் பிரசங்க வேலை செய்வதாகும்.—மத். 24:45-47; அப். 1:8.
பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுப்பதும் பயிற்சி அளிப்பதும் கிறிஸ்தவச் சபையின் அம்சங்களாயின. தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலன் பவுல், ‘நீ கேட்டறிந்த . . . விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்; அப்போது, மற்றவர்களுக்குக் கற்பிக்க அவர்கள் போதிய தகுதி பெறுவார்கள்’ என்று சொன்னார். (2 தீ. 2:2) ஆகவே, அனுபவம் பெற்றவர்கள் மற்றவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும், அப்படிப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் இன்னும் பலரைப் பயிற்றுவிக்க வேண்டும்.
ஒரு மூப்பர், தனக்கு நியமிக்கப்பட்டுள்ள வேலைகளில் சிலவற்றைப் பகிர்ந்துகொடுத்தால், கற்பிப்பதிலும் மேய்ப்பதிலும் கிடைக்கும் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியும். மனிதர்களுக்கு ஓரளவுதான் திறமைகள் உண்டு என்பதை மூப்பர்கள் புரிந்துகொள்ளும்போது, சபைப் பொறுப்புகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொடுப்பதன் முக்கியத்துவத்தை இன்னும் நன்கு உணருவார்கள். “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (நீதி. 11:2) தாழ்ந்த சிந்தையுள்ளவர்கள் தங்களுடைய வரம்புகளை அறிந்திருப்பார்கள். எல்லாவற்றையும் நீங்களாகவே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யப் பார்த்தீர்களென்றால், அலுத்துக் களைத்துப் போய்விடுவீர்கள்; அதோடு, உங்கள் குடும்பத்தாருடன் செலவிட வேண்டிய நேரத்தையெல்லாம் பறிகொடுத்துவிடுவீர்கள். ஆகவே, நீங்கள் சுமக்கும் பொறுப்புகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொடுப்பதுதான் ஞானமானது. மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் சகோதரரை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். சபை கணக்குகளைத் தணிக்கை செய்யும்படி அவர் மற்ற மூப்பர்களைக் கேட்கலாம். அந்த மூப்பர்கள் கணக்குப் பதிவுகளைப் பார்வையிடுவதன் மூலம் சபையின் நிதி நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
பொறுப்புகளை ஒருவர் பகிர்ந்தளிக்கும்போது, தேவைப்படுகிற திறமையையும் அனுபவத்தையும் பெற மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிகிறது; அதுமட்டுமல்ல, அவர்களுடைய திறமைகளைக் கவனிக்கவும் இவரால் முடிகிறது. இவ்வாறு, மூப்பர்கள் சபை பொறுப்புகளைச் சகோதரர்களுக்குச் சரிவர பகிர்ந்தளிப்பதன் மூலம், உதவி ஊழியர்களாக நியமிக்கப்படுவதற்கு அவர்கள் “தகுதியுள்ளவர்களா” என்று சோதித்துப் பார்க்க முடியும்.—1 தீ. 3:10.
கடைசியாக, மூப்பர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதன் மூலம், மற்றவர்கள்மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறார்கள். தீமோத்தேயுவைப் பவுல் தன்னுடனேயே அழைத்துச் சென்று மிஷனரி ஊழியத்திற்குப் பயிற்றுவித்தார். இதனால், இருவருக்கும் இடையே பாசப்பிணைப்பு ஏற்பட்டது. ஆகவே, தீமோத்தேயுவைப் பவுல், ‘விசுவாசத்தில் உத்தமப் பிள்ளை’ என அழைத்தார். (1 தீ. 1:2) அதுபோலத்தான், இயேசுவுடன் சேர்ந்து யெகோவா எல்லாவற்றையும் படைத்தபோது அவர்களுக்கு இடையே மிக நெருக்கமான பந்தம் உருவானது. மூப்பர்களும் மற்றவர்களிடம் வேலைகளை ஒப்படைக்கும்போது அவர்களுக்கு இடையே நெருக்கமான உறவு ஏற்படுகிறது.
ஏன் சிலர் தயங்குகிறார்கள்?
பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி அறிந்திருந்தாலும் சில மூப்பர்கள் அதைச் செய்யத் தயங்குகிறார்கள். ஒருவேளை தங்களுக்கிருக்கும் அதிகாரம் குறைந்துவிடுமோ என அவர்கள் பயப்படுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம். எல்லாமே தங்கள் கையில் இருக்க வேண்டுமென அவர்கள் நினைக்கலாம். ஆனால், இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்குமுன் தம்முடைய சீடர்களுக்கு முக்கியமான ஒரு பொறுப்பைக் கொடுத்தார்; அதுவும், தம்மைவிட பெரியளவில் அவர்கள் ஊழியம் செய்வார்களென அறிந்திருந்தும் அவர்களுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தார்; இது, நாம் நினைவில் வைக்க வேண்டிய விஷயம்.—மத். 28:19, 20; யோவா. 14:12.
இன்னும் சில மூப்பர்கள், முன்பு பொறுப்புகளைப் பகிர்ந்தளித்திருக்கலாம், ஆனால் அவை கையாளப்பட்ட விதம் அவர்களுக்குத் திருப்தி அளிக்காதிருந்திருக்கலாம். அதனால், வேலையை தாங்களே சிறப்பாகவும் சீக்கிரமாகவும் செய்து முடித்துவிடலாமென நினைக்கலாம். என்றாலும், பவுலின் உதாரணத்தைக் கவனியுங்கள். பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதன் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருந்தார்; அதேசமயத்தில், பயிற்றுவிக்கப்படுகிறவர்கள் எப்போதுமே தான் எதிர்பார்க்கும் அளவுக்குச் செயல்பட மாட்டார்கள் என்பதையும் புரிந்து வைத்திருந்தார். அவர் தன்னுடைய முதல் மிஷனரி பயணத்தின்போது, தன்னுடன் வந்த இளைஞரான மாற்குவைப் பயிற்றுவித்தார். மாற்குவோ தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை விட்டுவிட்டு வீடு திரும்பியபோது பவுல் மிகுந்த ஏமாற்றமடைந்தார். (அப். 13:13; 15:37, 38) இருந்தாலும், அவர் மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நிறுத்திவிடவில்லை. முன்னர் குறிப்பிட்டபடி, இளம் கிறிஸ்தவரான தீமோத்தேயுவைத் தன்னுடன் மிஷனரி பயணத்திற்கு அழைத்துச் சென்றார். இன்னும் பெரிய பொறுப்புகளைப் பெற தீமோத்தேயு தயாரானபோது, எபேசு சபையில் கண்காணிகளையும் உதவி ஊழியர்களையும் நியமிக்கும் அதிகாரத்தை பவுல் அவருக்குக் கொடுத்து, அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்.—1 தீ. 1:3; 3:1-10, 12, 13; 5:22.
அதுபோலவே இன்றுள்ள மூப்பர்களும், ஒரு சகோதரர் எதிர்பார்த்த அளவுக்குப் பொறுப்பை நிறைவேற்றாத காரணத்துக்காக மற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி அளிப்பதை விட்டுவிடக் கூடாது. மற்றவர்கள்மீது நம்பிக்கை வைக்கவும் அவர்களைப் பயிற்றுவிக்கவும் பழகிக்கொள்வது ஞானமானது, முக்கியமானதும்கூட. என்றாலும், பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்கையில் என்னென்ன விஷயங்களை மூப்பர்கள் மனதில் வைக்க வேண்டும்?
எப்படிப் பகிர்ந்துகொடுக்க வேண்டும்?
பொறுப்புகளை எந்தெந்த சகோதரர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கும்போது அவர்களுடைய தகுதிகளைக் குறித்து யோசியுங்கள். எருசலேமில், அன்றாட உணவு வழங்கும் வேலையைக் கவனிக்க வேண்டியிருந்தபோது, ‘கடவுளுடைய சக்தியினாலும் ஞானத்தினாலும் நிறைந்தவர்களாகவும் நற்சான்று பெற்றவர்களாகவும் இருந்த ஏழு ஆண்களை’ அப்போஸ்தலர்கள் தேர்ந்தெடுத்தார்கள். (அப். 6:3) நம்பகமற்ற ஒருவரிடம் நீங்கள் ஏதேனும் வேலையை ஒப்படைத்தால் அவர் அதைச் செய்யாமல் போகலாம். அதனால், பொறுப்புகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும்போது முதலில் சின்னச் சின்ன வேலைகளைக் கொடுங்கள். அவர்கள் அவற்றைச் சரியாகச் செய்தால், பின்பு கூடுதலான பொறுப்புகளைக் கொடுங்கள்.
இன்னும் சில விஷயங்களையும் மனதில் வைக்க வேண்டும். சுபாவங்களும் திறமைகளும் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. ஒவ்வொருவருடைய அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது. அன்பாகவும் இனிமையாகவும் பழகுகிற ஒரு சகோதரர் அட்டன்டெண்ட்டாக இருப்பது பிரயோஜனமாக இருக்கலாம்; எல்லாவற்றையும் சீராகவும் ஒழுங்காகவும் செய்கிற ஒரு சகோதரர் சபையின் செயலருக்கு உதவியாளராக இருப்பது மிகுந்த பயனளிக்கலாம். கலைத்திறன் உள்ள ஒரு சகோதரி, நினைவுநாள் அனுசரிப்பின்போது மலர் அலங்காரம் செய்வது சிறந்ததாக இருக்கலாம்.
பொறுப்புகளை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெள்ளத்தெளிவாகச் சொல்லுங்கள். யோவான் ஸ்நானகர் இயேசுவிடம் தன் சீடர்களை அனுப்புவதற்குமுன், தான் எதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்பதையும், என்ன கேள்வியை அவர்கள் இயேசுவிடம் கேட்க வேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டார். (லூக். 7:18-20) இயேசுவோ, மக்களுக்கு அற்புதமாக உணவளித்த பின்பு, மீதமானவற்றைச் சேகரிக்கும்படி மட்டுமே சீடர்களிடம் சொன்னார்; அதை எப்படிச் செய்ய வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்கும்படி விட்டுவிட்டார். (யோவா. 6:12, 13) ஆகவே, எந்தளவு தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்பது, கொடுக்கப்படும் வேலை என்ன, அதை யார் செய்யப் போகிறார் என்பதையெல்லாம் பொறுத்ததே. வேலையில் என்ன செய்து முடிக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறது என்பதை வேலை கொடுப்பவர், அதைச் செய்கிறவர் ஆகிய இருவருமே நன்கு புரிந்திருக்க வேண்டும்; வேலை எந்தளவுக்கு நடந்தேறியிருக்கிறதென எவ்வளவு அடிக்கடி தெரிவிக்க வேண்டும் என்பதையும் இருவரும் பேசிவைப்பது அவசியம். என்னென்ன விஷயங்கள் வேலை செய்பவரின் தீர்மானத்திற்கே விடப்படுகிறது என்பதையும் இருவரும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வேலையை முடிக்க வேண்டுமென்றால், அந்தத் தேதியை வேலை கொடுப்பவரே தீர்மானிப்பதற்குப் பதிலாக இருவருமாகப் பேசி முடிவுசெய்யும்போது வேலை உற்சாகமாக நடந்தேறும்.
தேவைப்படும்போதெல்லாம் பணம், கருவி, உதவி ஆகியவற்றை வேலை செய்கிறவருக்குக் கொடுக்க வேண்டும். இந்த ஏற்பாட்டைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிப்பது நல்லது. இயேசு “பரலோக அரசாங்கத்தின் சாவிகளை” பேதுருவிடம் ஒப்படைத்தபோது, மற்ற சீடர்களும் அங்கு இருந்தார்கள். (மத். 16:13-19) அதேபோல், ஒரு குறிப்பிட்ட பொறுப்பைச் செய்ய யார் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதைச் சபைக்குத் தெரியப்படுத்துவது சிலசமயங்களில் உதவியாய் இருக்கும்.
பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பவர் ஜாக்கிரதையாகச் செயல்படுவதும் அவசியம். ஒரு வேலையை ஒருவரிடம் ஒப்படைத்த பிறகு அந்த வேலையில் தலையிட்டுக்கொண்டே இருந்தால், “நான் உங்களை நம்பவில்லை” என்று அவரிடம் சொல்வதுபோல் இருக்கும். சிலசமயங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்குச் சிறப்பாக வேலை நடக்காது என்பது உண்மைதான். ஆனாலும், பொறுப்பளிக்கப்பட்ட சகோதரருக்கு ஓரளவு சுதந்திரம் தரும்போது அவர் தன்னம்பிக்கையையும் அனுபவத்தையும் பெற வாய்ப்புண்டு. அவர் வேலையை எப்படிச் செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதை இது அர்த்தப்படுத்தாது. யெகோவா தமது மகனுக்குப் படைப்பு வேலையில் பங்களித்தபோதிலும், அவரும்கூட அந்த வேலையில் ஈடுபட்டார். கைதேர்ந்த வேலையாளாகிய தமது மகனிடம், ‘நமது சாயலாக . . . மனுஷனை உண்டாக்குவோமாக’ என்றார். (ஆதி. 1:26) ஆகவே, செய்யப்படுகிற வேலைக்கு உங்கள் சொல்லிலும் செயலிலும் ஆதரவு அளியுங்கள்; வேலை செய்கிறவர் எடுக்கும் முயற்சிகளுக்காக அவரைப் பாராட்டுங்கள். செய்து முடிக்கப்பட்டிருக்கும் வேலையைப் பற்றி அவரிடம் சுருக்கமாகப் பேசுவது உதவியாக இருக்கும். அந்த வேலை சரியாகச் செய்யப்படவில்லை என்றால், கூடுதலான ஆலோசனையையோ உதவியையோ அளிக்கத் தயங்காதீர்கள். வேலை நல்லபடியாக முடிக்கப்படும்படி பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பு, வேலையைக் கொடுத்த உங்களுக்குத்தான் இருக்கிறது என்பதை எப்போதும் மனதில் வையுங்கள்.—லூக். 12:48.
மூப்பர்கள் உள்ளப்பூர்வமான அக்கறையுடன் பல சகோதரர்களுக்குச் சபை பொறுப்புகளைப் பகிர்ந்தளித்ததால் அந்தச் சகோதரர்கள் நன்மை அடைந்திருக்கிறார்கள். உண்மையில், யெகோவாவைப் போல் வேலைகளை ஏன் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதையும் எப்படிப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதையும் எல்லா மூப்பர்களுமே கற்றுக்கொள்வது அவசியம்.
[பக்கம் 29-ன் பெட்டி]
பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுப்பது . . .
• ஏதோவொன்றைச் சாதித்த சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு வழி
• இன்னுமதிகத்தைச் சாதிப்பதற்கான ஒரு வழி
• ஞானத்தையும் தாழ்ந்த சிந்தையையும் காட்டுவதற்கான ஒரு வழி
• மற்றவர்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு வழி
• மற்றவர்கள்மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுவதற்கான ஒரு வழி
[பக்கம் 30-ன் பெட்டி]
பொறுப்புகளைப் பகிர்ந்துகொடுக்கும் விதம்
• பொருத்தமான நபர்களை வேலைக்குத் தேர்ந்தெடுங்கள்
• தெள்ளத்தெளிவாக விளக்குங்கள்/பேசுங்கள்
• எதைச் செய்து முடிக்க வேண்டுமெனத் தெளிவாகச் சொல்லுங்கள்
• வேலை செய்யத் தேவையானவற்றைக் கொடுங்கள்
• வேலையில் அக்கறை காட்டுங்கள், அவர்மீது நம்பிக்கை வைத்திருப்பதைத் தெரிவியுங்கள்
• முழு பொறுப்பையும் ஏற்க மனமுள்ளவர்களாக இருங்கள்
[பக்கம் 31-ன் படங்கள்]
பொறுப்பைப் பகிர்ந்துகொடுப்பது என்றால், ஒரு வேலையை ஒப்படைத்துவிட்டு அது எப்படி நடந்தேறுகிறதெனப் பார்த்துக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது