“என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”
‘தேவனுடைய மந்தையை மேய்த்து வாருங்கள்’
“நீங்கள் எப்போதும் செவிகொடுத்துக் கேட்கிறீர்கள், நீங்கள் பைபிளிலிருந்து பேசுவது எங்களுக்கு தெம்பளிக்கிறது.”—பமலா.
“எங்கள் எல்லாருக்காகவும் நீங்கள் செய்கிற எல்லாவற்றிற்கும் நன்றி. அது உண்மையிலேயே எங்களுக்கு அதிக பிரயோஜனமாக இருக்கிறது.”—ராபர்ட்.
தங்கள் தங்கள் சபையிலுள்ள கிறிஸ்தவ மூப்பர்களுக்கு போற்றுதல் தெரிவிக்கும் இந்த வார்த்தைகளை எழுதும் அளவுக்கு பமலாவும் ராபர்ட்டும் தூண்டப்பட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதிலுமுள்ள கடவுளுடைய ஊழியர்களில் இன்னும் மற்றவர்களும்கூட ‘தேவனுடைய மந்தையை மேய்ப்பவர்கள்’ தரும் தொடர்ச்சியான ஆதரவுக்காகவும் கவனிப்புக்காகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். (1 பேதுரு 5:2) சொல்லப்போனால், மூப்பர்கள் தங்களுக்கு செய்யும் அநேக காரியங்களுக்காகவும் அவற்றை அவர்கள் செய்யும் முறைக்காகவும் யெகோவாவின் ஜனங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
‘செய்வதற்கு நிறைய வேலைகள் உடையவர்களாய்’
கிறிஸ்தவ மூப்பர்களிடத்தில் நிறைய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. (லூக்கா 12:48) அவர்கள் சபை கூட்டங்களுக்கு பேச்சுகள் தயாரிக்கிறார்கள், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதில் ஈடுபடுகிறார்கள். சக விசுவாசிகளிடத்தில் மேய்ப்பு சந்திப்பு செய்வதும் அவர்களது கடமைகளில் உட்படுகிறது. விசேஷித்த விதத்தில் கவனம் செலுத்த வேண்டியவர்களுக்காகவும்—வயதானவர்களுக்காகவும் தேவையிலிருப்பவர்களுக்காகவும்—மூப்பர்கள் நேரம் செலவழிக்கிறார்கள்; இதற்காக தங்கள் சொந்த குடும்பத்தின் ஆன்மீக மற்றும் பொருளாதார நலனை அலட்சியம் செய்வதுமில்லை. (யோபு 29:12-15; 1 தீமோத்தேயு 3:4, 5; 5:8) மூப்பர்கள் சிலர் ராஜ்ய மன்றங்களை கட்டுவதற்கு உதவுகிறார்கள். இன்னும் சிலரோ மருத்துவமனை தொடர்பு ஆலோசனை குழுக்களில் சேவை செய்கிறார்கள் அல்லது நோயாளி சந்திப்பு குழுக்களில் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். அதோடு அவர்களில் அநேகர் அசெம்பிளிகளிலும், மாநாடுகளிலும் வாலண்டியர்களாக வேலை செய்கிறார்கள். ஆம், மூப்பர்களுக்கு ‘கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு நிறைய’ இருக்கின்றன. (1 கொரிந்தியர் 15:58, NW) இவ்வாறு கடினமாய் உழைக்கும் மூப்பர்கள் அவர்களுடைய கவனிப்பை பெறுபவர்களால் பெரிதும் போற்றப்படுகிறார்கள்!—1 தெசலோனிக்கேயர் 5:12, 13.
சக கிறிஸ்தவர்களை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்துவதற்காக, வீடுகளிலோ மற்ற இடங்களிலோ தவறாமல் சென்று சந்திக்கும் மூப்பர்கள் உற்சாகத்தின் உறைவிடமாகத் திகழ்கிறார்கள். “மூப்பர்களின் அன்பான ஆதரவும் ஊக்குவிப்பும் மட்டும் இல்லை என்றால், இன்று முழுநேர ஊழியனாக யெகோவாவை சேவித்திருக்க என்னால் முடிந்திருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை” என்று அப்பா இல்லாத குடும்பத்தில் வளர்ந்த தாமஸ் சொன்னார். மூப்பர்களின் கவனிப்பே தாங்கள் கடவுளோடு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள உதவியதாக அம்மாவோ அப்பாவோ இல்லாத குடும்பங்களில் வளர்ந்த அநேக இளைஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
சபையிலுள்ள முதியவர்களும்கூட மேய்ப்பு சந்திப்புகளை மிக உயர்வாக மதிக்கிறார்கள். கிட்டத்தட்ட 85 வயதுள்ள ஒரு மிஷனரி தம்பதியினரை இரண்டு மூப்பர்கள் சந்தித்த பின்பு அவர்கள் இவ்வாறு எழுதினார்கள்: “அன்போடு வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போனதற்கு நாங்கள் போற்றுதல் தெரிவிக்கிறோம். நீங்கள் போன பிறகு, எங்களோடு கலந்தாலோசித்த வேத வசனங்களை மறுபடியும் வாசித்து பார்த்தோம். உங்களுடைய உற்சாகமூட்டும் வார்த்தைகளை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.” 70 வயதான ஒரு விதவை மூப்பர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “நான் யெகோவாவிடம் உதவிக்காக ஜெபம் செய்துகொண்டிருந்தேன்; அவர் உங்கள் இருவரையும் என் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். உங்களுடைய வருகை யெகோவாவிடமிருந்து வந்த ஆசீர்வாதமாகவே இருந்தது!” சமீபத்தில் சபை மூப்பர்கள் சந்தித்ததால் நீங்கள் பயனடைந்திருக்கிறீர்களா? தங்கள் கவனிப்பில் இருக்கிற மந்தையை மேய்ப்பதில் அவர்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் அனைவருமே மதித்துணருகிறோம்!
கடவுளையும் கிறிஸ்துவையும் பின்பற்றும் மேய்ப்பர்கள்
யெகோவா ஓர் அன்புள்ள மேய்ப்பர். (சங்கீதம் 23:1-4; எரேமியா 31:10; 1 பேதுரு 2:25) இயேசு கிறிஸ்துவும்கூட ஆவிக்குரிய தேவைகளை கவனிக்கும் ஒரு தலைசிறந்த மேய்ப்பர். சொல்லப்போனால், அவர் “நல்ல மேய்ப்பன்,” ‘பெரிய மேய்ப்பர்,’ “பிரதான மேய்ப்பர்” என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். (யோவான் 10:11; எபிரெயர் 13:20; 1 பேதுரு 5:4) தமக்கு சீஷர்களாய் ஆக விரும்பியவர்களிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார்? “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்ற அன்பான அழைப்பை அவர் அவர்களுக்குக் கொடுத்தார்.—மத்தேயு 11:28.
அவ்வாறே இன்றும் மூப்பர்கள் மந்தைக்கு புத்துணர்ச்சியையும் பாதுகாப்பையும் அளிக்கும் ஊற்றுமூலமாக திகழ அரும்பாடு படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” இருக்கிறார்கள். (ஏசாயா 32:2) இவ்வகையான பாதுகாப்பாளர்கள் புத்துணர்ச்சியை தருகிறார்கள், மந்தையின் மரியாதையை சம்பாதிக்கிறார்கள், கடவுளுடைய அங்கீகாரத்தையும் பெறுகிறார்கள்.—பிலிப்பியர் 2:29; 1 தீமோத்தேயு 5:17.
மனைவிமார்களின் மதிப்புமிக்க ஆதரவு
கிறிஸ்தவ மூப்பர்களுக்காகவும் அவர்களுடைய மனைவிமாரிடமிருந்து அவர்கள் பெறும் அன்பான ஆதரவுக்காகவும் கடவுளுடைய ஜனங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு மனைவிமாரின் பங்கில் தியாகங்கள் செய்வது தேவைப்படுகிறது. சில சமயங்களில், அவர்கள் வீட்டில் இருக்கும் போது கணவர்களோ சபை சம்பந்தப்பட்ட காரியங்களை கவனிக்கிறார்கள் அல்லது மேய்ப்பு சந்திப்புகளுக்கு செல்கிறார்கள். சில சமயங்களில், சபையில் அவசரமாக தீர்க்க வேண்டிய பிரச்சினை எழும்புவதால் தாங்கள் மிக கவனமாக போட்ட சொந்த திட்டங்களை தள்ளிப்போடுகிறார்கள். “இருந்தாலும், என் கணவர் கூட்டங்களுக்கு தயாரிப்பதிலோ மேய்ப்பு சந்திப்புகளை செய்வதிலோ பிஸியாக இருப்பதை நான் பார்க்கும்போது, அவர் யெகோவாவின் வேலையைத்தான் செய்கிறார் என்பதை மனதில் வைத்து, என்னால் முடிந்தவரை அவருக்கு ஆதரவளிக்க முயலுகிறேன்” என்று சொன்னார் மஷல்.
ஒரு மூப்பரின் மனைவியான ஷெரலும்கூட இவ்வாறு குறிப்பிட்டார்: “சபையிலுள்ள சகோதர சகோதரிகள் மூப்பர்களை சந்தித்து பேச விரும்புவதை நான் அறிந்திருப்பதால், அவர்களுக்கு விருப்பமான எந்த சமயத்திலும் என் கணவரை சந்தித்துப் பேசும்படி விரும்புகிறேன்.” மஷல், ஷெரல் போன்று பக்கபலமாக இருக்கும் பெண்கள் மனப்பூர்வமாக தியாகங்கள் செய்கிறார்கள், அதனால் அவர்களுடைய கணவர்களால் கடவுளுடைய ஆடுகளை கவனிக்க முடிகிறது. மூப்பர்களுடைய மனைவிமார்களின் ஆதரவளிக்கும் மனப்பான்மை போற்றத்தக்கது.
இருந்தாலும், பிஸியாக இருக்கும் ஒரு மூப்பர் தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் ஆவிக்குரிய தேவைகளையும் மற்ற தேவைகளையும் கவனியாமல் இருந்துவிடக் கூடாது. மணமான ஒரு மூப்பர் ‘குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாய்’ இருக்க வேண்டும். (தீத்து 1:6) கிறிஸ்தவ கண்காணிகளிடத்தில் பைபிள் எதிர்பார்க்கும் விதமாக அவர் தன் குடும்பத்தை கவனிக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 3:1-7.
எப்போதும் வேலையாக இருக்கும் ஒரு மூப்பருக்கு, ஆதரவளிக்கும் மனைவி பெரும் மதிப்புக்குரியவள்! சிந்தித்து செயல்படுகிற மணமான மூப்பர்கள் அவ்வாறே உணருகிறார்கள். இது பைபிள் சொல்வதற்கு ஒப்பாக இருக்கிறது. “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்” என அது சொல்கிறது. (நீதிமொழிகள் 18:22) அப்படிப்பட்ட மூப்பர்கள் சொல்லிலும் செயலிலும் தங்கள் மனைவிமாருக்கு உள்ளப்பூர்வமான போற்றுதலைக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்தவ தம்பதியினர் ஊக்கமாக ஜெபிப்பது சேர்ந்து ரசித்துப் படிப்பது மட்டுமல்லாமல் கடற்கரைக்கு, காடுகளுக்கு அல்லது பூங்காவுக்கு உலாவவும் செல்கிறார்கள். ஆம், மூப்பர்கள் தங்கள் மனைவிமாரை அன்பாக கவனிப்பதில் மகிழ்ச்சி காண்கிறார்கள்.—1 பேதுரு 3:7.
கடவுளுடைய மந்தையை தன்னலம் கருதாமல் மேய்க்கும் மூப்பர்கள் யெகோவாவின் ஜனங்களுக்கு ஆன்மீக புத்துணர்வின் ஊற்றுமூலமாக திகழ்கிறார்கள். அவர்கள் உண்மையில் ‘மனிதரில் வரங்களே,’ சபைக்கு ஓர் ஆசீர்வாதமே!—எபேசியர் 4:8, 11-13, NW.