“ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில்” அளிப்பது?
“உங்கள் பேச்சு எப்போதும் இனிமையாக . . . இருக்க வேண்டும்; அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் அளிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.”—கொலோ. 4:6.
1, 2. (அ) பொருத்தமான கேள்விகளைக் கேட்பது நல்ல பலன்களைத் தரும் என்பதற்கு ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள். (படத்தைப் பாருங்கள்.) (ஆ) திரித்துவம், எரிநரகம், நாத்திகம் போன்ற விஷயங்களைப் பற்றிப் பேச ஏன் பயப்பட வேண்டியதில்லை?
ஒரு சகோதரி சத்தியத்தில் இல்லாத கணவரிடம் பைபிளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய கணவர், பெயருக்குத்தான் கிறிஸ்தவராக இருந்தார்; ஆனால் திரித்துவத்தை நம்புவதாகச் சொன்னார். திரித்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதை நம்புகிறார் என்பதை சகோதரி புரிந்துகொண்டதால், ஒரு சாதுரியமான கேள்வி கேட்டார்: “பிதாவும் ஒரு கடவுள், குமாரனும் ஒரு கடவுள், பரிசுத்த ஆவியும் ஒரு கடவுள். ஆனா, மூனு கடவுள் இல்ல, மூனும் சேர்ந்து ஒரே கடவுள்னுதானே நினைக்கிறீங்க?” உடனே அவர், “இல்ல, நான் அதை நம்பல!” என்று சொன்னார். அதன்பிறகு, சத்தியத்தை ஆர்வமாகக் கேட்டார்.
2 பொருத்தமான கேள்விகளைச் சாதுரியமாகக் கேட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த அனுபவம் காட்டுகிறது. திரித்துவம், எரிநரகம், நாத்திகம் போன்ற விஷயங்களைப் பற்றி எப்படிப் பேசுவது என நாம் பயப்பட வேண்டியதில்லை என்பதையும் இது காட்டுகிறது. யெகோவாவைச் சார்ந்திருந்து அவர் அளிக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றினால் கேட்போரின் இருதயத்தைத் தொடும் விதத்தில் பேச முடியும். (கொலோ. 4:6) திறம்பட்ட ஊழியர்கள் இதுபோன்ற விஷயங்களைப்பற்றி எப்படிப் பேசுகிறார்கள் என்பதை இப்போது சிந்திக்கலாம். (1) ஒருவர் என்ன நம்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள எப்படிக் கேள்விகள் கேட்பது? (2) பைபிளிலிருந்து எப்படி விளக்கிக் காட்டுவது? (3) உதாரணங்களைப் பயன்படுத்தி எப்படிப் புரியவைப்பது? என இந்தக் கட்டுரையில் கலந்தாலோசிக்கலாம்.
கேள்விகள் கேளுங்கள்
3, 4. கேள்விகள் கேட்பது ஏன் நல்லது? உதாரணம் கொடுங்கள்.
3 ஒருவர் என்ன நம்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள கேள்விகள் கேளுங்கள். ஆனால், அவர் என்ன நம்புகிறார் என்று நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? “காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் [பதில்] சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்” என்று நீதிமொழிகள் 18:13 சொல்கிறது. எனவே, ஒரு விஷயத்தைப் பற்றிய பைபிளின் கருத்தை நாம் சொல்வதற்கு முன்பு, அந்த நபர் என்ன நம்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். இல்லாவிட்டால், அவர் நம்பாத ஒரு விஷயத்தைப் பற்றி விளக்குவதில் நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்போம்.—1 கொ. 9:26.
4 உதாரணத்திற்கு, எரிநரகத்தைப் பற்றி ஒருவரிடம் பேசுவதாக வைத்துக்கொள்ளுங்கள். நரகம் என்பது நெருப்பில் போட்டு வதைக்கும் இடம் என்றுதான் பொதுவாக மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அநேகர், நரகம் என்று ஓர் இடமே இல்லை, அது கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் ஒரு நிலைதான் என்று நினைக்கிறார்கள். அதனால், நாம் இப்படிக் கேட்கலாம்: “நரகத்தைப்பற்றி ஒவ்வொருத்தருக்கும் வித்தியாசமான கருத்து இருக்கு. ஆனா, உங்க கருத்து என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா?” அவர் பதிலளித்தப் பிறகு, பைபிள் என்ன சொல்கிறது என்று விளக்குங்கள்.
5. ஒருவர் ஒரு விஷயத்தை ஏன் நம்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள கேள்விகள் எப்படி உதவும்?
5 ஒரு விஷயத்தை ஒருவர் ஏன் நம்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளவும் சாதுரியமான கேள்விகள் கேளுங்கள். உதாரணத்திற்கு, ஊழியத்தில் சந்திக்கும் ஒருவர் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் என்ன செய்வது? பரிணாமத்தை நம்புவதால்தான் அவர் அப்படிச் சொல்கிறார் என்று நாமாகவே நினைத்துக்கொள்ளக் கூடாது. (சங். 10:4) அவர் ஏதாவது கஷ்டத்தில் தவிப்பதாலோ மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் பார்ப்பதாலோ கடவுள் நம்பிக்கையை இழந்திருக்கலாம். ‘கடவுள்னு ஒருத்தர் இருந்தா இதையெல்லாம் தடுத்திருப்பார், இல்லையா?’ என்று அவர் நினைக்கலாம். எனவே, வீட்டுக்காரர் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னால், “ஆரம்பத்துல இருந்தே உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா?” என்று கேளுங்கள். சில வருடங்களாகத்தான் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனதாக அவர் சொன்னால், அதற்கான காரணத்தைக் கேளுங்கள். அவர் சொல்லும் பதிலை வைத்து நாம் பேச்சைத் தொடரலாம்.—நீதிமொழிகள் 20:5-ஐ வாசியுங்கள்.
6. கேள்வி கேட்ட பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்?
6 கேள்வி கேட்ட பிறகு, அவருடைய பதிலைக் கவனித்துக் கேட்க வேண்டும், அவருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, வாழ்க்கையில் ஏதோவொரு சோகச் சம்பவம் நடந்ததால் கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் அவருக்கு வந்திருக்கலாம். கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுவதற்குமுன் அவரிடம் ஆறுதலாகப் பேசுங்கள்; ‘எனக்கு ஏன் இந்த வேதனை?’ என்று யோசிப்பதில் தவறில்லை என்று சொல்லுங்கள். (ஆப. 1:2, 3) பொறுமையாகவும் அன்பாகவும் பேசினால், நாம் சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்பார்.a
பைபிளிலிருந்து விளக்கிக் காட்டுங்கள்
7. ஊழியத்தில் திறம்பட்டவர்களாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
7 பைபிள் வசனங்களை நாம் எப்படி விளக்கிக் காட்டலாம்? ஊழியத்தில் முக்கியமாக பைபிளைத்தான் பயன்படுத்துகிறோம். ‘முழுமையான திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும் பெற்றவர்களாக இருக்க’ அது நமக்கு உதவுகிறது. (2 தீ. 3:16, 17) ஊழியத்தைத் திறம்படச் செய்வதற்கு பைபிளிலிருந்து நிறைய வசனங்களை வாசித்து காட்டினால் மட்டும் போதாது. அவற்றை விளக்கிச் சொல்வதும் முக்கியம். (அப்போஸ்தலர் 17:2, 3-ஐ வாசியுங்கள்.) இதற்கு மூன்று உதாரணங்களைப் பார்க்கலாம்.
8, 9. (அ) இயேசுவும் கடவுளும் ஒன்றுதான் என்று சொல்லும் ஒருவரிடம் எப்படிப் பேசலாம்? (ஆ) இதைப்பற்றி நீங்கள் எப்படி விளக்கியிருக்கிறீர்கள்?
8 உதாரணம் 1: ‘இயேசுவும் கடவுளும் ஒன்னுதான்.’ இதைப்பற்றி விளக்க என்னென்ன வசனங்களைப் பயன்படுத்துவீர்கள்? யோவான் 6:38-ஐ வாசிக்கச் சொல்லுங்கள்: “என்னுடைய சித்தத்தைச் செய்வதற்கு அல்ல, என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்வதற்கே பரலோகத்திலிருந்து நான் இறங்கி வந்திருக்கிறேன்.” அதன் பிறகு, “இயேசுவே கடவுளா இருந்தா, அவரை பூமிக்கு அனுப்புனது யாரு? இயேசுவை அனுப்பினவரு இயேசுவைவிட பெரியவரா இருக்கணும்தானே?” என்று அவரிடம் கேளுங்கள்.
9 அதேபோல், இயேசு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு கடவுள் என்ன செய்தார் என்பதைப்பற்றி பிலிப்பியர் 2:9-ல் வாசிக்கச் சொல்லுங்கள்: “கடவுள் அவரை [இயேசுவை] மேலான நிலைக்கு உயர்த்தி, மற்றெல்லாப் பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குத் தந்தருளினார்.” இந்த வசனத்தை இப்படி விளக்கலாம்: “இயேசு இறப்பதற்குமுன், கடவுளுக்கு சமமானவரா இருந்திருந்தா, இந்த வசனத்தின்படி உயிர்த்தெழுந்ததுக்கு அப்புறம், கடவுளையும்விட இயேசு உயர்ந்தவரா ஆயிட்டாருன்னுதானே அர்த்தம்? ஆனா, கடவுளவிட ஒருத்தர் எப்படி உயர்ந்தவரா ஆக முடியும்?” அந்த நபர் கடவுளுடைய வார்த்தையை மதிப்பவராக இருந்தால், இதைப்பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்.—அப். 17:11.
10. (அ) எரிநரகத்தை நம்பும் ஒருவரிடம் எப்படிப் பேசலாம்? (ஆ) இதைப்பற்றி நீங்கள் எப்படி விளக்கியிருக்கிறீர்கள்?
10 உதாரணம் 2: ‘கெட்டவர்கள் எரிநரகத்தில் தண்டிக்கப்படுவார்கள்.’ கெட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென நினைப்பதால் அவர் எரிநரக கோட்பாட்டை நம்பலாம். அவரிடம் எப்படிப் பேசுவது? முதலாவதாக, கெட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று சொல்லுங்கள். (2 தெ. 1:9) பிறகு, ஆதியாகமம் 2:16, 17 வசனங்களை வாசிக்கச் சொல்லுங்கள்; பாவத்தின் தண்டனை மரணம் என்று அது சொல்கிறது. ஆதாம் பாவம் செய்ததால் மனிதர்கள் எல்லோரும் பாவிகளாகப் பிறந்திருக்கிறார்கள். (ரோ. 5:12) ஆனால், மனிதர்கள் எரிநரகத்தில் வாட்டி வதைக்கப்படுவார்கள் என்பதாகக் கடவுள் சொல்லவே இல்லை என்று விளக்குங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்: “பாவம் செஞ்சா எரிநரகத்துல போட்டுடுவேன்னு கடவுள் முன்னாடியே சொல்லியிருக்கணும்ல?” பிறகு, ஆதியாகமம் 3:19-ஐ வாசியுங்கள். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைப் பற்றி அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அதில், அவர்கள் பாவம் செய்ததால் மண்ணுக்குப் போவார்கள் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது, எரிநரகத்துக்குப் போவார்கள் என்று சொல்லப்படவில்லை. “ஆதாம் எரிநரகத்திற்கு போறதா இருந்தா, அவன் மண்ணுக்குத் திரும்புவான்னு கடவுள் ஏன் சொன்னாரு?” என அவரிடம் கேளுங்கள். நியாயமானவராக இருந்தால் இதை யோசித்துப் பார்ப்பார்.
11. (அ) நல்லவர்கள் எல்லோரும் பரலோகத்திற்குப் போவதாக நம்பும் ஒருவரிடம் எப்படிப் பேசலாம்? (ஆ) இதைப்பற்றி நீங்கள் எப்படி விளக்கியிருக்கிறீர்கள்?
11 உதாரணம் 3: ‘நல்லவர்கள் எல்லோரும் பரலோகத்திற்குப் போவார்கள்.’ இந்த நம்பிக்கையுள்ள ஒருவர் பைபிள் வசனங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு, வெளிப்படுத்துதல் 21:4-ஐ (வாசியுங்கள்.) வாசித்துக்காட்டினால், அது பரலோக வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதாகத்தான் நினைப்பார். அவரிடம் எப்படிப் பேசுவது? வேறு ஏதாவது வசனங்களைக் காட்டுவதற்குப் பதிலாக, அந்த வசனத்திலிருந்தே விளக்குங்கள். “இனி மரணம் இருக்காது” என்று அந்த வசனம் சொல்கிறது. “ஏற்கெனவே இருக்கிற ஒரு விஷயத்தைதானே ‘இனி இருக்காது’ என்று சொல்ல முடியும்?” என அவரிடம் கேளுங்கள். பிறகு, “பரலோகத்துல மரணம் என்பதே கிடையாது. அப்புறம் எப்படி பரலோகத்துல ‘இனி மரணம் இருக்காது’-னு சொல்ல முடியும்? பூமியில் இருக்கிறவங்களுக்குதான் மரணம் வருது. அப்படினா, வெளிப்படுத்துதல் 21:4-ல் பூமியில் நடக்கப்போற விஷயத்தைப்பத்திதான் சொல்லியிருக்கு” என்று விளக்குங்கள்.—சங். 37:29.
உதாரணங்களைப் பயன்படுத்துங்கள்
12. இயேசு ஏன் உதாரணங்களைப் பயன்படுத்தினார்?
12 இயேசு ஊழியத்தில் கேள்விகளை மட்டுமல்ல, உதாரணங்களையும் பயன்படுத்தினார். (மத்தேயு 13:34, 35-ஐ வாசியுங்கள்.) கேட்போரின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள இயேசுவுக்கு இது உதவியது. (மத். 13:10-15) மக்களுக்குப் புரிகிற, மனதில் பதிகிற உதாரணங்களை அவர் பயன்படுத்தினார். நாம் எப்படி உதாரணங்களைப் பயன்படுத்திக் கற்பிக்கலாம்?
13. இயேசுவைவிட கடவுள் உயர்ந்தவர் என்பதை எப்படி விளக்கலாம்?
13 எளிமையான உதாரணங்களைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இயேசுவைவிட கடவுள் உயர்ந்தவர் என்பதற்கு என்ன உதாரணம் சொல்லலாம்? “கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையில் அப்பா-மகன் உறவு இருக்குனு பைபிள் சொல்லுது. அதனாலதான் இயேசுவைக் கடவுள் தன்னோட மகன்னு சொல்றாரு, கடவுளை இயேசு தன்னோட தகப்பன்னு சொல்றாரு.” (லூக். 3:21, 22; யோவா. 14:28) “உறவு முறையில பொதுவா எந்த ரெண்டுபேர சமமானவங்கனு சொல்வோம்?” என்று கேளுங்கள். அதற்கு வீட்டுக்காரர்: “கூடப் பிறந்தவங்கள இல்லனா இரட்டை பிள்ளைங்களைதான் அப்படிச் சொல்வோம்” என்று பதிலளிக்கலாம். “சரியா சொன்னீங்க. அப்போ கடவுளும் இயேசுவும் சமம்னா இயேசுவும் இப்படித்தான சொல்லியிருக்கணும், ஆனா கடவுள் தன்னுடைய அப்பானுல்ல சொன்னாரு? அப்படினா, கடவுளுக்குதான் இயேசுவவிட நிறைய அதிகாரம் இருக்கு, அவர்தான் உயர்ந்தவர், இல்லையா?” என்று சொல்லுங்கள்.
14. மக்களைச் சாத்தான் எரிநரகத்தில் வதைக்கிறான் என்று சொல்பவர்களிடம் எப்படி விளக்கலாம்?
14 சாத்தான் மக்களை எரிநரகத்தில் வதைக்கிறான் என்று சிலர் நினைக்கிறார்கள். அவனுக்கு அந்த அதிகாரத்தைக் கடவுளே கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை என்பதை எப்படி விளக்குவீர்கள்? “ஒரு பிள்ளை, அப்பா-அம்மா பேச்சை கேட்காம நிறைய தப்பு செஞ்சா அவங்க என்ன செய்வாங்க?” என்று கேளுங்கள். “நிச்சயமா அந்தப் பிள்ளைய திருத்தணும்னுதான் நினைப்பாங்க” என்று வீட்டுக்காரர் சொல்லலாம். (நீதி. 22:15) “பெற்றோர் முயற்சி செஞ்சும் அந்தப் பிள்ளையைத் திருத்த முடியலன்னா என்ன செய்வாங்க” என்று கேளுங்கள். “அவன அடிச்சுதான் திருத்தணும்” என்றே சொல்வார்கள். “பிள்ளை அடங்காம போனதுக்கு ஒரு கெட்டவன்தான் காரணம்னு தெரிஞ்சா அவன்மேலதான கோபம் வரும்? ஆனா, அந்தக் கெட்டவன்கிட்டயே பிள்ளைய தண்டிக்க சொல்வாங்களா?” என்று கேளுங்கள். “நிச்சயமா சொல்ல மாட்டாங்க” என்றே பதிலளிப்பார். “மனுஷங்க தப்பு செய்றதுக்கு சாத்தான்தான் காரணம். அப்படினா, தப்பு செய்றவங்கள தண்டிக்கும் பொறுப்பை சாத்தான்கிட்டயே கடவுள் கொடுப்பாரா?” என்று சொல்லிப் புரிய வையுங்கள்.
சோர்ந்துவிடாதீர்கள்!
15, 16. (அ) நற்செய்தியை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று ஏன் எதிர்பார்க்கக் கூடாது? (ஆ) ஊழியத்தில் திறம்பட போதிக்க, விசேஷ திறமைகள் வேண்டுமா? விளக்குங்கள். (“பதிலளிக்க உதவும் கட்டுரைகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
15 நம் செய்தியை எல்லோருமே நன்றாகக் கேட்பார்கள் என்று சொல்ல முடியாது. (மத். 10:11-14) அதனால், சாதுரியமான கேள்விகளைக் கேட்டாலும் சிறந்த விதத்தில் விளக்கம் கொடுத்தாலும் எளிமையான உதாரணங்களைச் சொன்னாலும் எல்லோரும் உடனே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிகப் பெரிய போதகரான இயேசுவின் போதனையைக்கூட சிலர்தானே ஏற்றுக்கொண்டார்கள்!—யோவா. 6:66; 7:45-48.
16 நமக்கு விசேஷ திறமைகள் இல்லாவிட்டாலும், ஊழியத்தில் திறம்பட போதிக்க முடியும். (அப்போஸ்தலர் 4:13-ஐ வாசியுங்கள்.) “முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்கள்” நற்செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. (அப். 13:48) எனவே, சோர்ந்துவிடாதீர்கள்! போதிக்கும் திறமையில் முன்னேற தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அதே சமயத்தில், மக்கள் நற்செய்தியைக் கேட்காததை நினைத்து வருத்தப்படாதீர்கள். யெகோவா தரும் ஆலோசனையைப் பின்பற்றினால், நாமும் நன்மை அடைவோம், நம்முடைய செய்தியைக் கேட்பவர்களும் நன்மை அடைவார்கள். (1 தீ. 4:16) “ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் அளிக்க வேண்டும்” என்பதைத் தெரிந்துகொள்ள யெகோவா நமக்கு உதவுவார். அன்பாகவும் கனிவாகவும் நடந்துகொண்டால் ஊழியத்தில் எப்படி வெற்றி பெறலாம் என்று அடுத்தக் கட்டுரையில் கலந்தாலோசிப்போம்.
a “படைப்பாளர்மீது நம்பிக்கை வைக்க முடியுமா?” என்ற கட்டுரையை அக்டோபர் 1, 2009, ஆங்கில காவற்கோபுரத்தில் பாருங்கள்.