வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சவால்களைச் சமாளித்தல்
“வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங் கொண்டிருந்தோம்.”—1 தெ. 2:2.
1. எரேமியா என்னென்ன சவால்களைச் சந்தித்தார், அவற்றை எவ்வாறு சமாளித்தார்?
எரேமியா நம்மைப் போன்ற உணர்வுகளுள்ள ஒருவர். அவரை “ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாக” நியமித்ததுபற்றி யெகோவா சொன்னபோது, “ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்” என்று அவர் புலம்பினார். இருந்தாலும், யெகோவாமீது நம்பிக்கை வைத்து அந்த வேலையைச் செய்ய ஒப்புக்கொண்டார். (எரே. 1:4–10) அவர் 40 வருடங்களுக்கு மேலாக இந்த வேலையைச் செய்தபோது நிறைய சவால்களைச் சந்தித்தார்; அவர் சொன்ன செய்தியை மக்கள் அசட்டை செய்தார்கள், அதைக் கேட்க மறுத்தார்கள், அவரைக் கேலி செய்தார்கள், அடிக்கவும் செய்தார்கள். (எரே. 20:1, 2) அதனால், இந்த வேலையை விட்டுவிடலாமா என்றுகூட சில சமயங்களில் நினைத்தார். என்றாலும், பெரும்பாலான மக்களுக்குப் பிடிக்காத அந்தச் செய்தியை அவர் தொடர்ந்து அறிவித்தார். தன் சொந்த பலத்தால் ஒருபோதும் செய்ய முடியாததை யெகோவாவின் பலத்தால் அவர் செய்து முடித்தார்.—எரேமியா 20:7–9-ஐ வாசியுங்கள்.
2, 3. இன்று கடவுளுடைய ஊழியர்கள், எரேமியாவைப்போல என்னென்ன சவால்களைச் சந்திக்கிறார்கள்?
2 இன்று, கடவுளுடைய ஊழியர்கள் அநேகர், எரேமியாவைப் போலவே உணருகிறார்கள். வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிப்பதைப் பற்றி யோசித்தபோது நம்மில் சிலர், ‘என்னால் அது முடியவே முடியாது’ என்று ஒரு காலத்தில் நினைத்தோம். இருந்தபோதிலும், நற்செய்தியை அறிவிப்பது யெகோவாவின் விருப்பம் என்பதைப் புரிந்துகொண்டபோது, நாம் தயக்கத்தைக் களைந்தோம், மும்முரமாகப் பிரசங்கித்தோம். என்றாலும், தொடர்ந்து பிரசங்கிப்பதற்குத் தடையாக இருந்த சில கஷ்டமான சூழ்நிலைகளை வாழ்க்கையில் ஒரு முறையாவது நம்மில் அநேகர் எதிர்ப்பட்டிருப்போம். வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் ஈடுபடுவதும், முடிவுவரை தொடர்ந்து பிரசங்கிப்பதும், ஒரு சவாலே என்பதை மறுக்க முடியாது.—மத். 24:13.
3 ஒருவேளை, நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்துச் சில காலமாகவே அவர்களுடைய கூட்டங்களுக்குச் சென்று வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; ஆனால் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிக்கத் தயங்குகிறீர்கள் என்றால் என்ன செய்யலாம்? அல்லது, ஒருவேளை நீங்கள் ஒரு முழுக்காட்டப்பட்ட சாட்சியாக உடல் ஆரோக்கியத்துடன் இருந்தும், வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதில் உங்களுக்குப் பிரச்சினை இருந்தால் என்ன செய்யலாம்? கவலைப்படாதீர்கள்! எல்லாப் பின்னணியைச் சேர்ந்தவர்களும் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்குச் செல்வது சம்பந்தமான சவால்களைச் சமாளிக்கிறார்கள். ஆகவே, யெகோவாவின் உதவியோடு நீங்களும் அவற்றைச் சமாளிக்கலாம்.
தைரியத்தைப் பெறுங்கள்
4. நற்செய்தியைத் தைரியத்தோடு பிரசங்கிக்க அப்போஸ்தலன் பவுலுக்கு எது உதவியது?
4 உலகளாவிய பிரசங்க வேலை மனித பலத்தாலோ ஞானத்தாலோ அல்ல, கடவுளுடைய சக்தியினாலேயே செய்யப்படுகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். (சக. 4:6) ஒவ்வொரு கிறிஸ்தவர் செய்கிற ஊழியத்திலும் இதுவே உண்மை. (2 கொ. 4:7) அப்போஸ்தலன் பவுலின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவரும் அவரோடு ஊழியம் செய்தவரும், எதிராளிகளால் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை அவர் இவ்வாறு எழுதினார்: “முன்னே பிலிப்பி பட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங் கொண்டிருந்தோம்.” (1 தெ. 2:2; அப். 16:22–24) பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்த பவுல், பிரசங்க வேலையை ஒரு போராட்டம் எனச் சொல்லுமளவுக்குக் கடினமான சந்தர்ப்பங்களை எதிர்ப்பட்டார் என்பதை நம்மால் நம்ப முடியாமல் இருக்கலாம். என்றாலும், நற்செய்தியைத் தைரியத்தோடு பிரசங்கிக்க நம் எல்லாரையும் போலவே அவரும் யெகோவாவைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. (எபேசியர் 6:18–20-ஐ வாசியுங்கள்.) பவுலின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
5. பிரசங்கிப்பதற்கு நாம் தைரியத்தைப் பெற ஒரு வழி என்ன?
5 பிரசங்கிப்பதற்கு நாம் தைரியத்தைப் பெற ஒரு வழி, ஜெபம் செய்வதாகும். ஒரு பயனியர் சகோதரி இவ்வாறு சொன்னார்: “தைரியத்தோடு பேசுவதற்கு நான் ஜெபம் செய்கிறேன், மக்களின் இருதயத்தைத் தொடும் விதத்தில் பேசுவதற்கு ஜெபம் செய்கிறேன், ஊழியத்தில் மகிழ்ச்சி காண்பதற்கு ஜெபம் செய்கிறேன். இது நம்முடைய வேலை அல்ல, யெகோவாவின் வேலை என்பதே உண்மை; அதனால், அவருடைய உதவியின்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது.” (1 தெ. 5:17) தைரியமாகப் பிரசங்கிப்பதற்கு கடவுளுடைய சக்திக்காக நாம் அனைவருமே தொடர்ந்து ஜெபம் செய்வது அவசியம்.—லூக். 11:9–13.
6, 7. (அ) எசேக்கியேலுக்கு என்ன தரிசனம் கொடுக்கப்பட்டது, அதன் அர்த்தம் என்ன? (ஆ) இந்தத் தரிசனத்திலிருந்து கடவுளுடைய மக்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
6 நாம் தைரியத்தோடு பேசுவதற்கு உதவுகிற வேறொன்றையும் எசேக்கியேல் புத்தகம் தெரிவிக்கிறது. ஒரு தரிசனத்தில், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்த ஒரு சுருளை எசேக்கியேலுக்குக் கொடுத்து அதைச் சாப்பிடும்படி யெகோவா சொன்னார்; அதிலே, “புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும்” எழுதியிருந்தது; “மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக” என்றார். இந்தத் தரிசனத்தின் அர்த்தம் என்ன? எசேக்கியேல், தான் சொல்லவிருந்த செய்தியை முழுமையாகக் கிரகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அது, அவருடைய இரத்தத்தோடு கலந்துவிட்டதைப் போல், அவரது ஆழ்மனதின் உணர்வுகளைத் தொட வேண்டியிருந்தது. எசேக்கியேல் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.” கடவுளுடைய செய்தியைப் பகிரங்கமாக அறிவிப்பது எசேக்கியேலுக்குத் தேனாய் இனித்தது. கேட்க மனமில்லாத மக்களுக்கு வலிமையான செய்தியை அறிவிக்க வேண்டியதாக இருந்தாலும், யெகோவாவுக்குப் பிரதிநிதியாக இருப்பதையும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதையும் எசேக்கியேல் பெரும் பாக்கியமாகக் கருதினார்.—எசேக்கியேல் 2:8–3:4, 7–9-ஐ வாசியுங்கள்.
7 இன்று கடவுளுடைய ஊழியர்கள் இந்தத் தரிசனத்திலிருந்து நல்லதொரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். நம்முடைய முயற்சிகளை மதிக்காத மக்களுக்கு வலிமையான செய்தியை நாமும்கூட சொல்ல வேண்டியிருக்கிறது. ஊழியத்தை கடவுளிடமிருந்து பெற்ற பெரும் பாக்கியமாக நாம் எப்போதும் கருதினால், அவருடைய வார்த்தையைத் தொடர்ந்து படித்து, அதைத் தியானிக்க வேண்டும். நுனிப்புல் மேய்வதுபோன்றோ ஏனோதானோவென்றோ படித்தால் அவருடைய வார்த்தையை முழுமையாகக் கிரகித்துக்கொள்ள முடியாது. ஆகவே, நீங்கள் தனிப்பட்ட விதமாக பைபிளை வாசித்து, ஆழ்ந்து படிப்பதை இன்னும் சிறப்பாகவோ இன்னும் கிரமமாகவோ செய்ய முடியுமா? நீங்கள் வாசித்ததை அடிக்கடி தியானித்துப் பார்க்க முடியுமா?—சங். 1:2, 3.
பைபிள் உரையாடல்களை ஆரம்பித்தல்
8. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் எந்த விதத்தில் உரையாடலை ஆரம்பிப்பது சில பிரஸ்தாபிகளுக்கு உதவியாய் இருந்திருக்கிறது?
8 வீட்டுக்காரரிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்பதுதான் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பிரஸ்தாபிகள் பலர் எதிர்ப்படுகிற முக்கியப் பிரச்சினை. உண்மைதான், சில பிராந்தியங்களில் உரையாடலை ஆரம்பிப்பது சவாலாகத்தான் இருக்கிறது. ஆனால், சில பிரஸ்தாபிகள் வீட்டுக்காரரிடம் முத்தான சில வார்த்தைகளைப் பேசி, அதன் பின்னர் ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்து உரையாடலை ஆரம்பிப்பதை எளிதாகக் காண்கிறார்கள்; அதைக் கீழே உள்ள பெட்டியில் பார்க்கலாம். அந்தத் துண்டுப்பிரதியின் தலைப்போ அதிலுள்ள வண்ணப் படங்களோ வீட்டுக்காரரின் கவனத்தைக் கவரலாம்; அது, அவரைச் சந்திப்பதற்கான நோக்கத்தை நாம் சுருக்கமாகச் சொல்வதற்கும், அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்பதற்கும் வாய்ப்பை அளிக்கலாம். இதையே இன்னொரு விதத்திலும் செய்யலாம்; மூன்று, நான்கு துண்டுப்பிரதிகளை வீட்டுக்காரரிடம் காட்டி, அவருக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லலாம். ஒவ்வொரு வீடுகளிலும் துண்டுப்பிரதிகளைக் கொடுப்பதோ, அவற்றைப் பயன்படுத்திப் பேசுவதோ மட்டுமே நம்முடைய நோக்கமல்ல; மாறாக, பைபிள் படிப்புக்கு வழிநடத்தும் விதத்தில் உரையாடலை ஆரம்பிப்பதே நம்முடைய நோக்கமாகும்.
9. நன்கு தயாரிப்பது ஏன் முக்கியம்?
9 எந்த முறையில் நீங்கள் பேசினாலும் சரி, நன்கு தயாரித்துச் சென்றால் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நிதானத்தோடும் ஆர்வத்தோடும் பேச முடியும். ஒரு பயனியர் இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் நன்றாகத் தயாரித்திருந்தால் மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது. நான் தயாரித்திருப்பதை எப்படியாவது சொல்ல வேண்டுமென்ற ஆசை வருகிறது.” “வீட்டுக்காரரிடம் கொடுக்கப்போகிற பிரசுரங்களில் உள்ள கட்டுரைகளைப் படித்து வைத்திருக்கும்போது, அவற்றைக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுகிறது” என்று மற்றொரு பயனியர் சொன்னார். நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதை மனதிற்குள் சொல்லிப் பார்ப்பதால் ஓரளவுக்குப் பலன் கிடைப்பது உண்மைதான்; என்றாலும், அதை வாய்விட்டுச் சொல்லி ஒத்திகை பார்த்த அநேகருக்கு இன்னும் அதிக பலன் கிடைத்திருக்கிறது. அப்படிச் செய்வதால் தங்களிடமுள்ள மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்க முடிந்திருக்கிறது.—கொலோ. 3:24; 2 தீ. 2:15.
10. வெளி ஊழியக் கூட்டத்தை நடைமுறைக்கு ஏற்ற விதத்திலும் பயன் தரும் விதத்திலும் நடத்த என்ன செய்யலாம்?
10 வெளி ஊழியக் கூட்டங்களை நடைமுறைக்கு ஏற்ற விதத்தில் நடத்துவது, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நாம் திறம்படப் பேசவும், சந்தோஷம் காணவும் உதவுகிறது. அன்றைய தினவசனம் பிரசங்க வேலை சம்பந்தப்பட்டதாக இருந்தால், அதை வாசித்துச் சுருக்கமாகக் கலந்துபேசலாம். என்றாலும், வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துகிற சகோதரர், பிராந்தியத்திற்குப் பொருத்தமான விஷயத்தை எளிய முறையில் கலந்துபேசவோ நடித்துக் காட்டவோ, அல்லது, அன்றைய ஊழியத்தில் பயன்படுத்தக்கூடிய நடைமுறையான பிற தகவலைக் குறித்துச் சிந்திக்கவோ போதியளவு நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இது, அங்கு வந்திருப்பவர்கள் திறம்பட்ட விதத்தில் சாட்சி கொடுக்க இன்னும் அதிக உதவியாய் இருக்கிறது. இந்தக் கூட்டங்களை நடத்துகிற மூப்பர்களும் மற்றவர்களும் முன்கூட்டியே நன்கு தயாரித்திருந்தால், மேலே சொல்லப்பட்டதைச் செய்யவும் முடியும், கூட்டத்தைச் சரியான நேரத்திற்குள் முடிக்கவும் முடியும்.—ரோ. 12:8.
கவனித்துக் கேட்பதன் நன்மை
11, 12. நற்செய்தி மக்களின் இருதயத்தை எட்டுவதற்கு, பரிவோடு கவனித்துக் கேட்பது நமக்கு எவ்வாறு உதவும்? உதாரணங்கள் தருக.
11 ஊழியத்தில் மக்களிடம் பைபிள் உரையாடல்களை ஆரம்பித்து, அவர்களுடைய இருதயத்தை எட்டும் விதத்தில் பேசுவதற்கு நல்ல தயாரிப்பு மட்டுமல்ல, அவர்கள்மீது ஆழ்ந்த அக்கறை காட்டுவதும் உதவுகிறது. இவ்வாறு அக்கறை காட்டுவதற்கு ஒரு வழி, அவர்கள் பேசும்போது கவனித்துக் கேட்பதே. ஒரு பயணக் கண்காணி இவ்வாறு சொன்னார்: ‘பொறுமையாய் இருந்து, மக்கள் சொல்வதை மனதார கவனித்துக் கேட்கும்போது, நாமே ஆச்சரியப்படும் விதத்தில் அவர்களுடைய கவனத்தை ஈர்க்க முடியும்; இது, அவர்கள்மீது கனிவான அக்கறை இருப்பதைக் காட்டுவதற்கு ஓர் அருமையான வழியாகும்.’ பரிவோடு கவனித்துக் கேட்பது இரும்பு இதயங்களையும் திறக்கும்; பின்வரும் அனுபவம் இதைக் காட்டுகிறது.
12 பிரான்சைச் சேர்ந்த ஸென்ட்-ஏட்யென்-ல் வெளியாகும் ல ப்ராக்ரி என்ற செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கடிதத்தில், இரண்டு பேர் தன்னைச் சந்தித்ததைப் பற்றி ஒரு பெண் குறிப்பிட்டார்; கொஞ்ச நாட்களுக்குமுன் தன்னுடைய மூன்று மாதப் பிள்ளையைப் பறிகொடுத்திருந்த அவர் வேதனையில் தவித்துக்கொண்டிருந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “அவர்களைப் பார்த்தவுடனே யெகோவாவின் சாட்சிகள் எனத் தெரிந்துகொண்டேன். நாசுக்காக அவர்களை அனுப்பிவிட இருந்தேன், ஆனால் அவர்கள் கொடுத்த ஒரு சிற்றேட்டைப் பார்த்தேன். அதில், கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற விஷயம் இருந்தது. எனவே, அவர்களுடைய கருத்துகளைத் தவிடுபொடியாக்கிவிட வேண்டுமென்ற தீர்மானத்தோடு அவர்களை உள்ளே அழைத்தேன். ... அவர்கள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக என்னோடு இருந்தார்கள். நான் சொன்னதையெல்லாம் மிகவும் பரிவோடு கவனித்துக் கேட்டார்கள். அவர்கள் போகும்போது, என் பாரமெல்லாம் குறைந்ததுபோல் இருந்தது. அதனால், இன்னொருமுறை சந்திக்க வருவதாக அவர்கள் சொன்னபோது நான் சம்மதித்தேன்.” (ரோ. 12:15) பிற்பாடு, இந்தப் பெண் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். அன்றைய முதல் சந்திப்பைப்பற்றி நினைத்துப்பார்க்கையில், அந்தச் சாட்சிகள் என்ன சொன்னார்கள் என்பதல்ல, எப்படிக் கவனித்துக் கேட்டார்கள் என்பதே அவருடைய மனதில் பதிந்திருந்தது. இதிலிருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
13. நாம் சந்திக்கும் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் எவ்வாறு நற்செய்தியைச் சொல்லலாம்?
13 மக்கள் பேசுவதை நாம் பரிவோடு கவனித்துக் கேட்கையில், கடவுளுடைய ராஜ்யம் தங்களுக்குத் தேவை என்பதை அவர்களே சொல்வதற்கு உண்மையில் வாய்ப்பளிக்கிறோம். இதனால், அவர்களுக்கு நற்செய்தியைச் சொல்வது இன்னும் வசதியாகிவிடுகிறது. திறம்பட்ட ஊழியர்கள் பொதுவாக கவனித்துக் கேட்பதில் திறமைசாலிகளாக இருப்பதை நீங்கள் ஒருவேளை கண்டிருப்பீர்கள். (நீதி. 20:5) அவர்கள், ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் உண்மையான அக்கறை காட்டுகிறார்கள். அவர்கள், மக்களுடைய பெயர்களையும் முகவரிகளையும் மட்டுமல்ல, அவர்களுடைய விருப்பங்களையும் தேவைகளையும்கூட குறித்துக்கொள்கிறார்கள். முக்கியமான ஒரு விஷயத்தைப்பற்றி யாராவது கேட்கும்போது, அதன்பேரில் ஆராய்ச்சி செய்து சீக்கிரத்திலேயே அந்நபரைச் சந்தித்து அதைச் சொல்கிறார்கள். அப்போஸ்தலன் பவுலைப்போல, தாங்கள் சந்திக்கும் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் ராஜ்ய செய்தியைச் சொல்கிறார்கள். (1 கொரிந்தியர் 9:19-23-ஐ வாசியுங்கள்.) இப்படி உண்மையாக அக்கறை காட்டுவது, நற்செய்தியிடம் மக்களை ஈர்க்கிறது, ‘நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தை’ அற்புதமாய்ப் படம்பிடித்துக் காட்டுகிறது.—லூக். 1:77.
நம்பிக்கையான மனநிலையோடு இருங்கள்
14. ஊழியத்தில், யெகோவாவின் பண்புகளை நாம் எவ்வாறு காட்டலாம்?
14 சுயமாகத் தெரிவுசெய்யும் திறனைத் தந்து யெகோவா நம்மைக் கெளரவப்படுத்தியிருக்கிறார். அவர் சர்வவல்லமையுள்ள தேவனாக இருந்தாலும் தமக்குச் சேவை செய்யும்படி யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. மாறாக, அப்படிச் செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறார். தாம் செய்திருக்கும் அருமையான ஏற்பாடுகளுக்கு நன்றியோடு கீழ்ப்படிவோரை ஆசீர்வதிக்கிறார். (ரோ. 2:4) அவருக்கு ஊழியர்களாக இருக்கிற நாம், ஒவ்வொரு முறையும் சாட்சி கொடுக்கும்போது இரக்கமுள்ள நம் கடவுளுக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் நற்செய்தியைச் சொல்லத் தயாராக இருக்க வேண்டும். (2 கொ. 5:20, 21; 6:3-6) அப்படியானால், பிராந்தியத்திலுள்ள மக்களைக் குறித்து நம்பிக்கையான மனநிலையோடு இருப்பது அவசியம். இந்தச் சவாலைச் சமாளிக்க நமக்கு எது உதவும்?
15. (அ) நற்செய்தியை மக்கள் கேட்காதபோது என்ன செய்யும்படி தம் சீஷர்களுக்கு இயேசு அறிவுரை வழங்கினார்? (ஆ) பாத்திரமானவர்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த நமக்கு எது உதவும்?
15 நற்செய்தியைச் சிலர் கேட்காதபோது அதைப்பற்றியே வீணாகக் கவலைப்படாமல் பாத்திரமானவர்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தும்படி இயேசு தம் சீஷர்களுக்கு அறிவுரை வழங்கினார். (மத்தேயு 10:11-15-ஐ வாசியுங்கள்.) இதற்கு, எட்ட முடிந்த சிறுசிறு இலக்குகளை வைப்பது உதவும். ஒரு சகோதரர், தங்கத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஒருவருக்குத் தன்னை ஒப்பிடுகிறார். “இன்றைக்கு எப்படியாவது தங்கத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும்” என்ற குறிக்கோளோடு அவர் செல்கிறார். இன்னொரு சகோதரர், “ஒவ்வொரு வாரமும் ஆர்வமுள்ள ஒருவரையாவது சந்தித்து, சில நாட்களுக்குள் மீண்டும் சென்று அவருடைய ஆர்வத்தை வளர்க்க வேண்டும்” என்ற இலக்கை வைத்திருக்கிறார். சில பிரஸ்தாபிகள், ஒவ்வொரு வீட்டிலும் முடிந்தளவு ஒரு வசனத்தையாவது வாசிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். உங்களால் முடிந்த என்ன இலக்கை நீங்கள் வைக்கலாம்?
16. நாம் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு என்ன காரணங்கள் உள்ளன?
16 பிராந்தியத்திலுள்ள மக்கள் செவிகொடுப்பதைப் பொறுத்து மட்டுமே வீட்டுக்கு வீடு ஊழியத்தை நாம் சிறப்பாகச் செய்கிறோமா இல்லையா எனத் தீர்மானிக்க முடியாது. நாம் செய்கிற ஊழியம் நல்மனமுள்ளோரின் இரட்சிப்புக்கு மிகவும் அவசியமாக இருப்பது உண்மைதான். என்றாலும், அதற்கு வேறு முக்கியக் காரணங்களும் இருக்கின்றன. ஊழியம் செய்வதன்மூலம் யெகோவாமீது நமக்கிருக்கும் அன்பை வெளிக்காட்ட முடிகிறது. (1 யோ. 5:3) இரத்தப்பழியைத் தவிர்க்க முடிகிறது. (அப். 20:26, 27) கடவுள் “நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது” என்று சொல்லி தேவபக்தியில்லாதவர்களை எச்சரிக்க முடிகிறது. (வெளி. 14:6, 7) எல்லாவற்றுக்கும் மேலாக, அகிலமெங்கும் யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்த முடிகிறது. (சங். 113:3) எனவே, மக்கள் கேட்டாலும்சரி கேட்காவிட்டாலும்சரி, நாம் தொடர்ந்து ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். ஆம், நற்செய்தியைப் பிரசங்கிக்க நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் யெகோவாவின் பார்வையில் அருமையானவை.—ரோ. 10:13–15.
17. மக்கள் வெகுவிரைவில் எதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்?
17 இன்று அநேகர் நம்முடைய பிரசங்க வேலையை அற்பமாக நினைத்தாலும், வெகுவிரைவில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளும் காலம் வரும். (மத். 24:37-39) எசேக்கியேல் அறிவித்த நியாயத்தீர்ப்புகள் நிறைவேறும்போது கலக வீட்டாராகிய இஸ்ரவேலர், ‘தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை ... அறிந்துகொள்வார்கள்’ என்று யெகோவா உறுதியளித்தார். (எசே. 2:5) அதேபோல, இந்த உலகத்தின்மீது கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது, அவருடைய பிரதிநிதிகளாகவே யெகோவாவின் சாட்சிகள் சேவை செய்தார்கள் என்பதையும், பொதுவிடங்களிலும் வீடு வீடாகவும் அவர்கள் பிரசங்கித்த செய்தி உண்மையில் மெய்க்கடவுளாகிய யெகோவாவின் செய்தி என்பதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆகவே, இந்த முக்கியமான காலக்கட்டத்தில் நாம் அவருடைய பெயரைப் பெற்றிருப்பதும் அவருடைய செய்தியை அறிவிப்பதும் அரும்பெரும் பாக்கியம், அல்லவா? அவருடைய பலத்தால், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்திக்கும் சவால்களை நாம் தொடர்ந்து சமாளிப்போமாக.
உங்கள் பதில்?
• பிரசங்கிப்பதற்கு நாம் எவ்வாறு தைரியத்தைப் பெறலாம்?
• வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பைபிள் உரையாடல்களை ஆரம்பிக்க நமக்கு எது உதவும்?
• மற்றவர்கள்மீது நாம் எவ்வாறு உண்மையான அக்கறை காட்டலாம்?
• பிராந்தியத்திலுள்ள மக்களைக் குறித்து நம்பிக்கையான மனநிலையோடு இருக்க நமக்கு எது உதவும்?
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
பைபிள் உரையாடல்களை ஆரம்பிக்க ஒரு வழி
இப்படி ஆரம்பிக்கலாம்:
◼ வீட்டுக்காரருக்கு வாழ்த்துச் சொன்ன பிறகு அவரிடம் ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்து, “இந்த முக்கியமான விஷயத்தின்பேரில் ஆர்வமூட்டும் ஒரு கருத்தைச் சொல்வதற்கு நான் வந்திருக்கிறேன்” என்று சொல்லலாம்.
◼ அல்லது, ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்து, “உங்களிடம் சில நிமிடங்கள் பேசுவதற்காக வந்திருக்கிறேன்; இந்த விஷயத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லலாம்.
துண்டுப்பிரதியை அவர்கள் பெற்றுக்கொண்டால்:
◼ வெகுநேரம் தாமதிக்காமல், துண்டுப்பிரதியின் தலைப்பை வைத்து ஓர் எளிய நோக்குநிலைக் கேள்வியைக் கேளுங்கள்.
◼ அவர் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள், அவருடைய கருத்துகளைப் புரிந்துகொள்ள முயலுங்கள். அவருடைய கருத்துகளைச் சொன்னதற்கு நன்றி தெரிவியுங்கள்.
தொடர்ந்து உரையாடுவதற்கு:
◼ ஓரிரு வசனங்களை வாசித்துக் கலந்தாலோசியுங்கள், அந்த நபருடைய விருப்பங்களையும் தேவைகளையும் மனதில் வைத்துப் பேசுங்கள்.
◼ அவர் ஆர்வம் காட்டினால், புத்தகத்தை அளித்து பைபிள் படிப்பு நடத்தப்படும் விதத்தை நடித்துக்காட்ட முயலுங்கள். மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.