‘கடவுளது அன்பு’ புத்தகத்தை பைபிள் படிப்புகளில் பயன்படுத்துதல்
1. ‘கடவுளது அன்பு’ புத்தகம் எதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது?
1 “கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுதல்” மாவட்ட மாநாட்டில் ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டபோது நாம் எவ்வளவாய் மகிழ்ச்சியடைந்தோம்! அப்போது அறிவிக்கப்பட்டபடி, இந்தப் புத்தகம் பைபிளின் அடிப்படைப் போதனைகளைக் கற்பிப்பதற்காக அல்ல, யெகோவா வகுத்த ஒழுக்க நெறிகளைத் தெரிந்துகொண்டு அவற்றை நேசிக்க உதவுவதற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்தப் புத்தகத்தை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நாம் அளிக்க மாட்டோம்.
2. இந்தப் புத்தகத்தை பைபிள் படிப்பில் எப்படிப் பயன்படுத்துவோம், யாருக்கு நடத்துவோம்?
2 பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை முடித்தபின் இரண்டாவதாக இந்தப் புத்தகத்திலிருந்து மாணாக்கர்களுக்குப் படிப்பை நடத்துவோம். நம்மோடு பைபிளைப் படிக்கிறவர்கள் வெவ்வேறு வேகத்தில் ஆன்மீக முன்னேற்றம் செய்வார்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். ஆகவே, மாணாக்கரின் புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்து குறைவாகவோ அதிகமாகவோ படிப்பை நடத்த வேண்டும். கலந்தாலோசிக்கிற விஷயத்தை மாணாக்கர் நன்றாகப் புரிந்துகொள்கிறாரா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். பொதுவாக, ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களில் பைபிள் படிப்பைப் படித்திருந்தும், எந்த மாற்றமும் செய்யாமலும் கூட்டங்களுக்கு வராமலும் இருக்கிறவர்களுக்கு இந்தப் புத்தகத்தில் படிப்பை நடத்த வேண்டாம்.
3. கடவுளை வணங்குங்கள் புத்தகத்தில் தற்போது படிப்பு நடத்திக்கொண்டிருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
3 நீங்கள் தற்போது பைபிள் மாணாக்கர் ஒருவருக்கு கடவுளை வணங்குங்கள் புத்தகத்தில் படிப்பை நடத்திவருகிறீர்களா? அதை முடிக்க இன்னும் சில அதிகாரங்களே மீந்திருக்கின்றனவா? அப்படியென்றால், அதை முடித்தபின், ‘கடவுளது அன்பு’ புத்தகத்தை அவராகவே படித்துக்கொள்ளும்படி சொல்லலாம். ஒருவேளை இன்னும் நிறைய அதிகாரங்கள் இருந்தால், அந்தப் புத்தகத்திலிருந்து படிப்பதை நிறுத்திவிட்டு புதிய புத்தகத்திலிருந்து படிக்க ஆரம்பிப்பது மிகச் சிறந்தது. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் படிப்பை நடத்தும்போது செய்ததைப் போலவே, பிற்சேர்க்கையை மாணாக்கரோடு சேர்ந்து படிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.
4. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையும் ‘கடவுளது அன்பு’ புத்தகத்தையும் படித்து முடிப்பதற்குள் மாணாக்கர் ஞானஸ்நானம் பெற்றுவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?
4 இரண்டு புத்தகங்களையும் படித்து முடிப்பதற்குள் மாணாக்கர் ஞானஸ்நானம் பெற்றுவிட்டால் என்ன செய்யலாம்? ‘கடவுளது அன்பு’ புத்தகத்தை முடிக்கும்வரை அவருக்குத் தொடர்ந்து பைபிள் படிப்பு நடத்த வேண்டும். மாணாக்கர் ஞானஸ்நானம் பெற்றவராய் இருந்தாலும், படிப்பு நடத்தப்படும் நேரத்தையும் மறுசந்திப்பையும் பைபிள் படிப்பையும் அறிக்கை செய்யலாம். அந்த பைபிள் படிப்புக்கு உங்களோடு வருகிற பிரஸ்தாபி அதில் பங்குபெற்றால் அவரும் மணிநேரத்தைக் கணக்கிடலாம்.
5. சிறிது காலமாக ஊழியத்தில் ஈடுபடாமற்போன பிரஸ்தாபிகளுக்கு உதவ ‘கடவுளது அன்பு’ புத்தகத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?
5 ஊழியத்தில் ஈடுபடுவதை நிறுத்திவிட்ட ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி சபை ஊழியக் குழுவிலுள்ள ஒரு மூப்பர் உங்களைக் கேட்டுக்கொள்ளலாம்; அப்போது, ‘கடவுளது அன்பு’ புத்தகத்தில் குறிப்பிட்ட சில அதிகாரங்களை நீங்கள் நடத்தும்படி அவர் சொல்லலாம். அப்படிப்பட்ட படிப்புகளை நீண்ட காலத்திற்கு நடத்த வேண்டியதில்லை. ஆக, இந்தப் புத்தகம் ‘கடவுளது அன்புக்கு’ பாத்திரராய் எப்போதும் இருக்க நமக்கு உதவுகிற அருமையான பரிசு!—யூ. 21.