அதிகாரம் பதினைந்து
கடவுள் ஏற்றுக்கொள்கிற வணக்கம்
எல்லா மதங்களுமே கடவுளுக்குப் பிரியமானவையா?
உண்மை மதத்தை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம்?
இன்று கடவுளுடைய உண்மை வணக்கத்தார் யார்?
1. கடவுளைச் சரியான முறையில் வணங்கினால் நாம் எவ்வாறு நன்மை அடைவோம்?
யெகோவா தேவன் நம்மீது மிகுந்த அக்கறை காட்டுகிறார், அன்புடன் நமக்கு உதவுகிறார்; அந்த உதவியிலிருந்து நாம் நன்மையடைய வேண்டுமெனவும் விரும்புகிறார். அப்படிப்பட்ட கடவுளைச் சரியான முறையில் வணங்கினால், நாம் சந்தோஷமாய் வாழ்வோம், எத்தனையோ பிரச்சினைகளையும் தவிர்ப்போம். அதுமட்டுமல்ல, அவருடைய ஆசீர்வாதத்தையும் ஆதரவையும் பெறுவோம். (ஏசாயா 48:17) ஆனால், கடவுளைப் பற்றிய சத்தியங்களைக் கற்றுத் தருவதாகச் சொல்கிற மதங்கள் இன்று நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. என்றாலும், கடவுள் யார், அவர் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றிய போதனைகளில் அவை ஒன்றுக்கொன்று பெரிதும் வேறுபடுகின்றன.
2. யெகோவாவை வணங்குவதற்குரிய சரியான முறையை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம், இதைப் புரிந்துகொள்ள என்ன உதாரணம் நமக்கு உதவுகிறது?
2 யெகோவாவை வணங்குவதற்குரிய சரியான முறையை நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்காக நீங்கள் எல்லா மதங்களுடைய போதனைகளையும் ஆராய்ந்து, ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பதில்லை. மெய் வணக்கத்தைப் பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை மட்டும் நீங்கள் கற்றுக்கொண்டால் போதும். இதற்கு ஓர் உதாரணம்: பல நாடுகளில் இன்று கள்ளநோட்டுப் பிரச்சினை இருக்கிறது. அத்தகைய கள்ளநோட்டுகளைத் தனியே பிரித்தெடுக்க வேண்டிய வேலை உங்களுக்குக் கொடுக்கப்பட்டால், அதை நீங்கள் எப்படிச் செய்வீர்கள்? எல்லாவித கள்ளநோட்டுகளையும் பற்றி அத்துப்படியாகத் தெரிந்துகொண்ட பிறகுதான் அந்த வேலையைச் செய்வீர்களா? இல்லை. அப்படிச் செய்வதைவிட உண்மையான நோட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வது உங்களுக்கு எவ்வளவோ பிரயோஜனமாக இருக்கும். உண்மையான நோட்டு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை நன்கு தெரிந்துகொண்ட பிறகு கள்ளநோட்டை உங்களால் எளிதில் கண்டுகொள்ள முடியும். அதேபோல, உண்மை மதத்தை எப்படிக் கண்டுகொள்வதென்று நாம் கற்றுக்கொள்ளும்போது எவையெல்லாம் பொய் மதம் என்பது நமக்கு நன்றாகத் தெரிந்துவிடும்.
3. கடவுள் நம்மை ஏற்றுக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென இயேசு சொன்னார்?
3 யெகோவா ஏற்றுக்கொள்கிற முறையில் நாம் அவரை வணங்குவதே முக்கியமாகும். எல்லா மதங்களையும் கடவுள் ஏற்றுக்கொள்வதாக அநேகர் நினைக்கிறார்கள், ஆனால் பைபிள் அவ்வாறு கற்பிப்பதில்லை. ‘நான் ஒரு கிறிஸ்தவன்’ என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது. இயேசு இவ்வாறு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” எனவே, கடவுளுடைய அங்கீகாரம் நமக்கு வேண்டுமானால், அவர் நம்மிடமிருந்து என்னென்ன காரியங்களை எதிர்பார்க்கிறார் என்று தெரிந்துகொண்டு அதன்படி செய்வது அவசியம். அவ்வாறு கடவுளுடைய சித்தத்தைச் செய்யாத ஆட்களை ‘அக்கிரமச் செய்கைக்காரர்கள்’ என இயேசு அழைத்தார். (மத்தேயு 7:21-23) கள்ளநோட்டைப் போலவே பொய் மதங்களுக்கும் உண்மையான மதிப்பு இல்லை. ஆனால், அதைவிடக் கொடுமை என்னவென்றால், அத்தகைய மதங்கள் தீங்கு விளைவிப்பதுதான்.
4. இரண்டு வழிகளைப் பற்றி இயேசு சொன்ன உதாரணம் எதை அர்த்தப்படுத்துகிறது, ஒவ்வொரு வழியும் எதற்கு வழிநடத்துகிறது?
4 பூமியிலுள்ள ஒவ்வொருவருக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை யெகோவா அளிக்கிறார். என்றாலும், பரதீஸில் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்கு நாம் சரியான விதத்தில் அவரை வணங்க வேண்டும், அவருக்குப் பிடித்தமான விதத்தில் வாழவும் வேண்டும். வருத்தகரமாக, அப்படி வாழ்வதற்கு அநேகர் விரும்புவதில்லை. அதனால்தான் இயேசு இவ்வாறு சொன்னார்: “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) உண்மை மதம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது. பொய் மதமோ அழிவுக்கு வழிநடத்துகிறது. எந்த மனிதனும் அழிந்துபோக வேண்டுமென யெகோவா விரும்புவதில்லை, அதனால்தான் பூமியில் வாழும் அனைவருக்கும் தம்மைப் பற்றிக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அவர் அளித்து வருகிறார். (2 பேதுரு 3:9) அப்படியானால், நமக்கு ஜீவனா அல்லது மரணமா என்பது கடவுளை நாம் வணங்கும் முறையைப் பொறுத்தே இருக்கிறது.
உண்மை மதத்தை அடையாளம் கண்டுகொள்வது எப்படி
5. உண்மை மதத்தினரை நாம் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம்?
5 ‘ஜீவனுக்குப் போகிற வழியை’ எப்படிக் கண்டுபிடிப்பது? ஜனங்களுடைய வாழ்க்கை முறையிலிருந்தே அவர்கள் பின்பற்றுகிற மதம் உண்மையானதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியுமென இயேசு சொன்னார். ஆம், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று அவர் சொன்னார். “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்” என்றும் சொன்னார். (மத்தேயு 7:16, 17) வேறு வார்த்தைகளில் சொன்னால், உண்மை மதத்தினரின் நம்பிக்கைகளையும் நடத்தையையும் வைத்தே அவர்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மை வணக்கத்தார் பரிபூரணமானவர்கள் அல்ல, அவர்கள் தவறு செய்பவர்கள்தான். என்றாலும் ஒரு தொகுதியாகச் சேர்ந்து, அவர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய முயலுகிறார்கள். உண்மை மதத்தினரை அடையாளம் கண்டுகொள்ள உதவுகிற ஆறு அம்சங்களை இப்போது நாம் கலந்தாராயலாம்.
6, 7. கடவுளுடைய ஊழியர்கள் பைபிளை எப்படிக் கருதுகிறார்கள், இது சம்பந்தமாக இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
6 கடவுளுடைய ஊழியர்கள் பைபிளின் அடிப்படையில் போதிக்கிறார்கள். பைபிளே இவ்வாறு சொல்கிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் [அல்லது மனுஷி] தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: ‘நீங்கள் தேவ வசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . . . அது மெய்யாகவே தேவ வசனந்தான்.’ (1 தெசலோனிக்கேயர் 2:13) எனவே, உண்மை மதத்தின் நம்பிக்கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் மனித கருத்துகளோ பாரம்பரியமோ அடிப்படை அல்ல. கடவுளுடைய வார்த்தையான பைபிளே அடிப்படையாக இருக்கிறது.
7 கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் கற்பித்ததன் மூலம் இயேசு கிறிஸ்து சரியான ஒரு முன்மாதிரி வைத்தார். தமது பரலோகப் பிதாவிடம் ஜெபிக்கும்போது, “உம்முடைய வசனமே [அதாவது, வார்த்தையே] சத்தியம்” என அவர் சொன்னார். (யோவான் 17:17) கடவுளுடைய வார்த்தையில் இயேசு நம்பிக்கை வைத்தார், அவர் கற்றுக்கொடுத்த எல்லா விஷயங்களுமே வேதவசனங்களோடு ஒத்திருந்தன. ஒரு வசனத்தை மேற்கோள் காட்டிவிட்டு, “என்று எழுதியிருக்கிறதே” என அவர் சொன்னார், இப்படியே பலமுறை வேதவசனங்களை மேற்கோள் காட்டி அவர் பேசினார். (மத்தேயு 4:4, 7, 10) அதேபோல, இன்று கடவுளுடைய ஜனங்களும் தங்கள் சொந்தக் கருத்துகளைக் கற்பிப்பதில்லை. பைபிள்தான் கடவுளுடைய வார்த்தை என அவர்கள் நம்புகிறார்கள், அதிலுள்ள விஷயங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து அவர்கள் போதிக்கிறார்கள்.
8. யெகோவாவை வணங்குவதில் என்ன உட்பட்டுள்ளது?
8 உண்மை மதத்தினர் யெகோவாவை மட்டுமே வணங்குகிறார்கள், அவருடைய பெயரை எல்லாருக்கும் தெரியப்படுத்துகிறார்கள். “உன் தேவனாகிய கர்த்தரைப் [“யெகோவாவை,” NW] பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” என இயேசு அறிவித்தார். (மத்தேயு 4:10) எனவே, கடவுளுடைய ஊழியர்கள் யெகோவாவை மட்டுமே வணங்குகிறார்கள். மெய்க் கடவுளாகிய அவருடைய பெயரையும் அவருடைய பண்புகளையும் ஜனங்களுக்குத் தெரிவிப்பது இந்த வணக்கத்தில் உட்பட்டுள்ளது. ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்’ என்று சங்கீதம் 83:17 குறிப்பிடுகிறது. கடவுளிடம் ஜெபிக்கும்போது இயேசு இவ்வாறு சொன்னார்: “நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.” இவ்விதத்தில் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுவதில் இயேசு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். (யோவான் 17:6) இயேசுவைப் போலவே, இன்று உண்மை வணக்கத்தார் கடவுளுடைய பெயரையும், நோக்கங்களையும், குணாதிசயங்களையும் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிக்கிறார்கள்.
9, 10. எந்தெந்த வழிகளில் உண்மை கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறார்கள்?
9 கடவுளுடைய ஜனங்கள் ஒருவருக்கொருவர் உள்ளப்பூர்வமான, சுயநலமற்ற அன்பைக் காண்பிக்கிறார்கள். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என இயேசு சொன்னார். (யோவான் 13:35) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட அன்பைத்தான் ஒருவரிலொருவர் வைத்திருந்தார்கள். அத்தகைய தெய்வீக அன்பு இனம், சமுதாயம், தேசம் ஆகிய தடைகளைத் தகர்த்தெறிந்து, முறிக்க முடியாத உண்மையான சகோதர பந்தத்திற்குள் ஜனங்களை ஈர்க்கிறது. (கொலோசெயர் 3:14) பொய் மத அங்கத்தினர்களிடையே அத்தகைய அன்பான சகோதரத்துவம் இருப்பதில்லை. இது நமக்கு எப்படித் தெரியும்? தேசிய அல்லது இன வேறுபாடுகள் காரணமாக அவர்கள் ஒருவரையொருவர் கொன்று குவிக்கிறார்கள். உண்மை கிறிஸ்தவர்களோ, தங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களையோ வேறு எவரையோ கொல்வதற்கு எவ்வித ஆயுதங்களையும் எடுப்பதில்லை. பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும்; . . . பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்.’—1 யோவான் 3:10-12; 4:20, 21.
10 உண்மைதான், மற்றவர்களைக் கொலை செய்யாதிருப்பது மட்டுமே உள்ளப்பூர்வமான அன்பு அல்ல. ஒருவருக்கொருவர் உதவுவதற்காகவும் உற்சாகப்படுத்துவதற்காகவும் உண்மை கிறிஸ்தவர்கள் தங்களுடைய நேரத்தையும், சக்தியையும், வளங்களையும் சுயநலமில்லாமல் பயன்படுத்துகிறார்கள். (எபிரெயர் 10:24, 25) இக்கட்டான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள், அதோடு மற்றவர்களை நேர்மையான விதத்தில் நடத்துகிறார்கள். சொல்லப்போனால், “யாவருக்கும் . . . நன்மை செய்யக்கடவோம்” என்ற பைபிளின் ஆலோசனையைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்கள்.—கலாத்தியர் 6:10.
11. மனிதர்களுடைய இரட்சிப்புக்கு இயேசு கிறிஸ்துவைத்தான் கடவுள் பயன்படுத்துகிறார் என்பதை ஏற்றுக்கொள்வது ஏன் முக்கியம்?
11 மனிதர்களுடைய இரட்சிப்புக்கு இயேசு கிறிஸ்துவைத்தான் கடவுள் பயன்படுத்துகிறார் என்பதை உண்மை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (அப்போஸ்தலர் 4:12) 5-ம் அதிகாரத்தில் பார்த்தபடி, கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்காக இயேசு தம்முடைய உயிரை மீட்கும் பலியாகக் கொடுத்தார். (மத்தேயு 20:28) அதுமட்டுமல்ல, இந்த முழு பூமியையும் ஆளப்போகிற பரலோக ராஜ்யத்தின் ராஜாவாகக் கடவுளால் நியமிக்கப்பட்டிருப்பவரும் அவர்தான். நமக்கு நித்திய ஜீவன் வேண்டுமென்றால், நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய போதனைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். அதனால்தான் பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை.”—யோவான் 3:36.
12. இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருப்பதில் என்ன உட்பட்டுள்ளது?
12 உண்மை வணக்கத்தார் இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்ல. ரோம அதிபதியான பிலாத்துவுக்கு முன் விசாரணை செய்யப்பட்டபோது, “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என இயேசு சொன்னார். (யோவான் 18:36) இயேசுவின் உண்மையான சீஷர்கள் இன்று எந்த நாட்டில் வசித்து வந்தாலும் சரி, அவர்கள் இயேசுவுடைய பரலோக ராஜ்யத்தின் குடிமக்களாகத்தான் இருக்கிறார்கள், இதனால் உலக அரசியல் விவகாரங்களில் அவர்கள் உறுதியோடு நடுநிலை வகிக்கிறார்கள். கட்சி சம்பந்தமான சண்டைகளில் அவர்கள் தலையிடுவது கிடையாது. அதேசமயம், அரசியல் கட்சி ஒன்றில் சேருவதையோ, ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்பதையோ, வாக்களிப்பதையோ குறித்து மற்றவர்கள் எடுக்கும் தீர்மானத்தில் அவர்கள் தலையிடுவதும் கிடையாது. கடவுளுடைய உண்மை வணக்கத்தார் இப்படி அரசியலில் நடுநிலை வகித்தாலும், சட்டத்திற்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், “மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு,” அதாவது அரசாங்கங்களுக்கு, “கீழ்ப்படிய” வேண்டுமென கடவுளுடைய வார்த்தை அவர்களுக்குக் கட்டளையிடுகிறது. (ரோமர் 13:1) ஆனால், கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிற விஷயமும் ஓர் அரசாங்கம் நம்மிடம் எதிர்பார்க்கிற விஷயமும் எப்போது முரண்படுகிறதோ அப்போது உண்மை வணக்கத்தார், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று சொன்ன அப்போஸ்தலர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.—அப்போஸ்தலர் 5:29; மாற்கு 12:17.
13. கடவுளுடைய ராஜ்யத்தை இயேசுவின் உண்மை சீஷர்கள் எவ்வாறு கருதுகிறார்கள், எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள்?
13 கடவுளுடைய ராஜ்யம்தான் மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கை என இயேசுவின் உண்மை சீஷர்கள் பிரசங்கிக்கிறார்கள். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என இயேசு முன்னறிவித்தார். (மத்தேயு 24:14) பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மனித ஆட்சியாளர்களைச் சார்ந்திருப்பதைவிட மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கையாகத் திகழும் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தைச் சார்ந்திருக்குமாறு இயேசு கிறிஸ்துவின் உண்மை சீஷர்கள் ஜனங்களை உற்சாகப்படுத்துகிறார்கள். (சங்கீதம் 146:3) “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தபோது, அந்தப் பரிபூரண அரசாங்கம் வரவேண்டுமென ஜெபிக்கும்படியே அவர் நம்மிடம் சொன்னார். (மத்தேயு 6:10) இந்தப் பரலோக ராஜ்யம் “[தற்போதுள்ள] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்” என்று கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்தது.—தானியேல் 2:44.
14. எந்த மதத் தொகுதியினர் உண்மை வணக்கத்தின் எல்லா அம்சங்களையும் கடைப்பிடிப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள்?
14 இதுவரை சிந்தித்தவற்றின் அடிப்படையில் உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எந்த மதத் தொகுதியினர் அனைத்து விஷயங்களையும் பைபிளின் அடிப்படையில் போதிக்கிறார்கள், யெகோவாவின் பெயரை அறிவிக்கிறார்கள்? எந்த மதத் தொகுதியினர் கடவுள் கற்பித்திருக்கும் விதத்தில் அன்பை வெளிக்காட்டுகிறார்கள், இயேசுவில் நம்பிக்கை வைக்கிறார்கள், உலகத்தின் பாகமாக இல்லாதிருக்கிறார்கள், கடவுளுடைய ராஜ்யம்தான் மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கை எனப் பிரசங்கிக்கிறார்கள்? இன்று பூமியிலுள்ள மதங்களிலேயே எந்த மதத் தொகுதியினர் இந்த எல்லா அம்சங்களையும் கடைப்பிடிக்கிறார்கள்?’ அவர்கள் யெகோவாவின் சாட்சிகள்தான் என்பதை உண்மைகள் தெளிவாகக் காண்பிக்கின்றன.—ஏசாயா 43:10-12.
நீங்கள் என்ன செய்வீர்கள்?
15. கடவுள் இருக்கிறார் என்று நம்புவதோடுகூட வேறு எதையும் நாம் செய்ய வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார்?
15 கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு அவர் மீது நம்பிக்கை வைத்தால் மட்டுமே போதாது. சொல்லப்போனால், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று பிசாசுகளும்கூட நம்புவதாக பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 2:19) ஆனால், நமக்கு நன்றாய்த் தெரிந்தபடி அந்தப் பிசாசுகள் கடவுளுடைய சித்தத்தையும் செய்வதில்லை, அவருடைய அங்கீகாரத்தையும் பெறுவதில்லை. எனவே, கடவுளுடைய அங்கீகாரம் நமக்கு வேண்டுமானால், அவர் இருக்கிறார் என்று நம்புவது மட்டுமல்லாமல் அவருடைய சித்தத்தை நாம் செய்யவும் வேண்டும். அதோடு, பொய் மதத்திலிருந்து விலகி உண்மை வணக்கத்தை மனதார ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
16. பொய் மதத்தோடு சம்பந்தம் வைக்காதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
16 பொய் மதத்தோடு நாம் சம்பந்தம் வைக்கக்கூடாது என அப்போஸ்தலன் பவுல் காண்பித்தார். அவர் இவ்வாறு எழுதினார்: ‘நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.’ (2 கொரிந்தியர் 6:17, 18; ஏசாயா 52:11) எனவே, பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட எந்தக் காரியத்தையும் உண்மை கிறிஸ்தவர்கள் தவிர்க்கிறார்கள்.
17, 18. “மகா பாபிலோன்” என்பது என்ன, ‘அவளைவிட்டு வெளியே வருவது’ ஏன் மிக அவசரம்?
17 பொய் மதங்கள் அனைத்தும் ‘மகா பாபிலோனின்’ பாகமாக இருப்பதை பைபிள் காட்டுகிறது.a (வெளிப்படுத்துதல் 17:5) அந்தப் பெயர் பூர்வ பாபிலோன் நகரை நமக்கு நினைப்பூட்டுகிறது; நோவாவின் நாளில் நடந்த ஜலப்பிரளயத்திற்குப் பின் பொய் மதம் ஆரம்பமான இடம் அது. இன்று பொதுவாக பொய் மதங்களிலுள்ள ஏராளமான போதனைகளும் பழக்கவழக்கங்களும் அன்று பாபிலோனில் தோன்றியவையே. உதாரணத்திற்கு, பாபிலோனியர்கள் திரித்துவக் கடவுட்களை, அதாவது மும்மூர்த்திகளை வணங்கினார்கள். இன்றுள்ள அநேக மதங்களின் முக்கிய போதனை திரித்துவமாகும். ஆனால், யெகோவா என்ற ஒரேவொரு உண்மையான கடவுளே இருக்கிறார் என்றும் இயேசு கிறிஸ்து அவருடைய குமாரன் என்றும் பைபிள் தெளிவாகக் கற்பிக்கிறது. (யோவான் 17:3) பாபிலோனியர் வேறொன்றையும் நம்பினார்கள், அதாவது ஒருவருடைய மரணத்திற்குப் பின்னும் அவருடைய ஆத்துமா தொடர்ந்து உயிர் வாழ்கிறது என்றும் வதைக்கப்படுகிற ஓர் இடத்தில் அது துன்பத்தை அனுபவிக்கக்கூடும் என்றும் நம்பினார்கள். அழியாத ஆத்துமா அல்லது ஆவி எரிநரகத்திலே வதைக்கப்படுவதாகப் பெரும்பாலான மதங்கள் இன்றும் கற்பித்து வருகின்றன.
18 பூர்வ பாபிலோனிய வழிபாட்டு முறை பூமி முழுவதும் பரவ ஆரம்பித்ததால், நவீன நாளைய மகா பாபிலோனை பொய் மத உலகப் பேரரசு என மிகச் சரியாகவே அடையாளம் கண்டுகொள்ளலாம். இந்தப் பொய் மதப் பேரரசுக்குத் திடீரென முடிவு வருமென கடவுள் முன்னறிவித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 18:8) மகா பாபிலோனின் ஒவ்வொரு அம்சத்தையும் விட்டு அறவே விலகியிருப்பது எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குப் புரிகிறதா? காலம் இருக்கும்போதே, நீங்கள் உடனடியாக ‘அவளைவிட்டு வெளியே வர’ வேண்டுமென யெகோவா தேவன் விரும்புகிறார்.—வெளிப்படுத்துதல் 18:4.
19. யெகோவாவை வணங்குவதன் மூலம் நீங்கள் என்னவெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்?
19 பொய் மதத்தில் இனியும் ஈடுபடக் கூடாதென நீங்கள் தீர்மானம் எடுத்திருப்பதால், சிலர் உங்களோடுள்ள சகவாசத்தையே துண்டித்துக் கொள்ளலாம். ஆனால் யெகோவாவின் மக்களோடு சேர்ந்து அவரைச் சேவிக்கும்போது, இழப்புகளைவிட பல மடங்கு ஆசீர்வாதங்களையே பெற்றுக்கொள்வீர்கள். இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் அவரைப் பின்பற்றுவதற்காக மற்ற காரியங்களை விட்டுவிட்டு வந்தபோது அவர்கள் எப்படி அநேக ஆவிக்குரிய சகோதர சகோதரிகளைப் பெற்றார்களோ அதேபோல நீங்களும் காலப்போக்கில் பெற்றுக்கொள்வீர்கள். உள்ளப்பூர்வ அன்பை வெளிக்காட்டும் லட்சக்கணக்கான உண்மை கிறிஸ்தவர்களுடைய உலகளாவிய குடும்பத்தின் பாகமாக நீங்கள் ஆவீர்கள். அதோடு, “மறுமையில்,” அதாவது வரவிருக்கும் புதிய உலகில், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் அருமையான நம்பிக்கையையும் பெறுவீர்கள். (மாற்கு 10:28-30) உங்கள் மத நம்பிக்கைகளின் காரணமாக உங்களைக் கைவிட்டு விட்டவர்கள், காலப்போக்கில் பைபிள் என்னதான் கற்பிக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்து, அவர்களும் யெகோவாவின் வணக்கத்தாராக ஆகலாம்.
20. உண்மை மதத்தினருக்கு என்ன எதிர்கால நம்பிக்கை இருக்கிறது?
20 வெகு சீக்கிரத்தில் கடவுள் இந்தப் பொல்லாத உலகை அழித்துவிட்டு, தம்முடைய ராஜ்யத்தின் மூலம் நீதியான புதிய உலகை ஸ்தாபிப்பார் என பைபிள் கற்பிக்கிறது. (2 பேதுரு 3:9, 13) அது எப்பேர்ப்பட்ட மகத்தான உலகமாக இருக்கும்! நீதியுள்ள அந்தப் புதிய உலகில் ஒரேவொரு மதமே, ஆம் ஒரேவொரு உண்மை வணக்கமே இருக்கும். அப்படியானால், உண்மை வணக்கத்தாருடன் சேர்ந்துகொள்வதற்கு நீங்கள் என்ன படிகளை எடுக்க வேண்டுமோ அதை இப்போதே எடுப்பது ஞானமல்லவா?
a மகா பாபிலோன் என்பது ஏன் பொய் மத உலகப் பேரரசைக் குறிக்கிறது என்பதற்கான கூடுதல் தகவல்களுக்கு, பக்கங்கள் 219-20-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.