முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 5: எவ்வளவு விஷயத்தைப் படிப்பது என தீர்மானித்தல்
1 இயேசு போதிக்கையில், தம் சீஷர்களால் எவ்வளவு விஷயத்தைக் கிரகிக்க முடியும் என்பதையும் கருத்தில் கொண்டார். எனவே “அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக” மட்டும் பேசினார். (மாற். 4:33; யோவா. 16:12) அவ்வாறே, இன்று கடவுளுடைய வார்த்தையைப் போதிக்கும் நாமும் பைபிள் படிப்பு நடத்துகையில் எவ்வளவு விஷயத்தைப் படிப்பது என்பதைத் தீர்மானிப்பது அவசியம். இது, படிப்பை நடத்துபவர், படிக்கிற மாணாக்கர் ஆகிய இருவரின் திறமையையும் சூழ்நிலைகளையும் பொறுத்தது.
2 உறுதியான விசுவாசத்தைப் பெற உதவுங்கள்: சிலருக்கு ஒரே படிப்பில் நடத்தி முடிக்கும் அதே விஷயத்தை வேறு சிலருக்கு இரண்டு, மூன்று படிப்புகளாக நடத்த வேண்டியிருக்கலாம். மாணாக்கர் புரிந்துகொண்டாரா இல்லையா என்பதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் நாம் சீக்கிரமாய் படிப்பை நடத்தி முடித்துவிடக் கூடாது. ஒவ்வொரு மாணாக்கருக்கும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து அவர் புதிதாக கற்றுக்கொள்ளும் விஷயத்திற்குப் பலமான அஸ்திவாரம் தேவைப்படுகிறது.—நீதி. 4:7; ரோ. 12:2.
3 நீங்கள் வாரா வாரம் படிப்பை நடத்துகையில், கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயத்தை மாணாக்கர் நன்கு புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்வதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதோ அவ்வளவு நேரம் செலவிடுங்கள். வேக வேகமாக நடத்துவதைத் தவிருங்கள்; ஏனெனில் படிப்பிலிருந்து மாணாக்கர் முழுமையாக பயனடைய முடியாமல் போய்விடும். முக்கிய குறிப்புகளைக் கவனிப்பதற்கும், போதனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் வசனங்களைச் சிந்திப்பதற்கும் போதிய நேரத்தை அனுமதியுங்கள்.—2 தீ. 3:16, 17.
4 படிப்புதான் உங்கள் குறி: நாம் படிப்பை வேக வேகமாய் நடத்துவதைத் தவிர்க்கும் அதே சமயத்தில், வேறு விஷயங்கள் படிப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பி விடாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும். மாணாக்கர் சொந்த விஷயங்களைப் பேசிக்கொண்டே இருப்பவரானால் படிப்பு முடிந்தபின் பேசும்படி நாம் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கலாம்.—பிர. 3:1.
5 மறுபட்சத்தில், நாமும்கூட சத்தியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் மாணாக்கருக்கு நிறைய விஷயங்களைச் சொல்லத் துடிக்கலாம்; படிப்பு நடத்தும்போது இப்படி அதிகம் பேசாதிருப்பது ஒரு சவாலே. (சங். 145:6, 7) எப்பொழுதாவது கூடுதல் குறிப்பையோ அனுபவத்தையோ சொல்வது படிப்பிற்கு மெருகூட்டும்; ஆனால் எதற்கெடுத்தாலும் இதுபோன்று சொல்வதோ, நீண்ட நேரம் பேசுவதோ சரியாகாது. ஏனெனில் இப்படிச் செய்வது மாணாக்கர் அடிப்படை பைபிள் போதனைகளின் திருத்தமான அறிவைப் பெறுவதற்குத் தடங்கலாக இருக்கும்.
6 ஒவ்வொரு முறையும் படிக்கும்போது நியாயமான அளவு விஷயங்களை மாணாக்கருக்கு நடத்துவதன் மூலம் ‘கர்த்தரின் வெளிச்சத்திலே நடக்க’ அவருக்கு உதவுகிறோம்.—ஏசா. 2:5.