சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரின் இதயத்தைத் தொடுவது எப்படி?
“நீ உன் வீட்டிற்குப் போய், யெகோவா உனக்காகச் செய்த எல்லாவற்றைப் பற்றியும் அவர் உன்மீது காட்டிய இரக்கத்தைப் பற்றியும் உன் உறவினர்களிடம் சொல்.” தம்முடைய சீடராக விரும்பிய ஒருவரிடம் இயேசு சொன்ன வார்த்தைகளே இவை! அப்போது, அவர் கலிலேயாக் கடலுக்கு தென்கிழக்குப் பகுதியிலிருந்த கதரா என்ற இடத்தில் இருந்திருக்கலாம். பொதுவாக, தங்களுக்குத் தெரிந்த ஆர்வத்துக்குரிய, முக்கியமான விஷயத்தை உறவினர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவது மனிதரின் இயல்பு. இதை இயேசு புரிந்து வைத்திருந்தார் என்பதை அவருடைய வார்த்தைகள் காட்டுகின்றன.—மாற். 5:19.
மனிதரின் இந்த இயல்பை இன்றும் நாம் அநேக சமயங்களில் பார்க்கிறோம்; சில கலாச்சாரங்களில் இது சற்று அதிகமாகவே உள்ளது. அதனால், ஒரு நபர் உண்மைக் கடவுளாகிய யெகோவாவை வழிபட ஆரம்பித்ததுமே, புதிதாகக் கற்றுக்கொண்டவற்றைப் பற்றி குடும்பத்தாரிடம் சொல்ல ஆசைப்படுவார். ஆனால், இதை எப்படிச் செய்வது? வேறு மதத்திலுள்ள அல்லது மத நம்பிக்கையே இல்லாத குடும்பத்தாரின் இருதயத்தைத் தொடுவது எப்படி? நம்பிக்கையூட்டுகிற, நடைமுறையான சில ஆலோசனைகளை பைபிள் தருகிறது.
“மேசியாவைக் கண்டுகொண்டோம்”
முதல் நூற்றாண்டில், முதன்முதலாக இயேசுவை மேசியாவாக அடையாளம் கண்டுகொண்டவர் அந்திரேயா. அதை உடனடியாக அவர் யாருக்குத் தெரியப்படுத்தினார்? “அவர் [அந்திரேயா] முதலில் போய், தன்னுடைய சொந்த சகோதரனாகிய சீமோனைப் பார்த்து, ‘நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்’ என்றார். (மேசியா என்பது ‘கிறிஸ்து’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது).” பின்பு அவர், பேதுருவை இயேசுவிடம் அழைத்துச் சென்றார். இவ்வாறு, பேதுரு இயேசுவின் சீடராவதற்கு வழிதிறந்து வைத்தார்.—யோவா. 1:35-42.
சுமார் ஆறு வருடங்களுக்குப் பிறகு, யோப்பாவில் தங்கியிருந்த பேதுரு, செசரியாவிலிருந்த படை அதிகாரியான கொர்நேலியுவின் வீட்டிற்கு வருமாறு அழைக்கப்பட்டார். அங்கு போனபோது, அந்த வீட்டில் அவர் யாரையெல்லாம் பார்த்தார்? “கொர்நேலியு தன் உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் ஒன்றுகூட்டி, அவர்களுடைய [பேதுருவையும் அவரோடு பயணித்தவர்களையும்] வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.” இவ்விதமாக, பேதுருவின் பேச்சைக் கேட்கவும், அதன் அடிப்படையில் முடிவெடுக்கவும் தன்னுடைய உறவினர்களுக்கு கொர்நேலியு வாய்ப்பளித்தார்.—அப். 10:22-33.
அந்திரேயாவும் கொர்நேலியுவும், தங்களுடைய உறவினர்களை அணுகிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
அந்திரேயாவும் சரி கொர்நேலியுவும் சரி, சந்தர்ப்பம் கிடைக்கும்போது தங்களுடைய குடும்பத்தார் சத்தியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடவில்லை. அந்திரேயா, இயேசுவிடம் பேதுருவை அறிமுகப்படுத்தி வைத்தார். கொர்நேலியு, பேதுருவின் பேச்சைக் கேட்பதற்காக உறவினர்களை வீட்டிற்கு அழைத்தார். அதே சமயம், அவர்கள் இருவரும் தங்களுடைய குடும்பத்தாரைக் கட்டாயப்படுத்தியோ தந்திரமாகவோ இயேசுவின் சீடர்களாக்கி விடவேண்டும் என நினைக்கவில்லை. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாமும் அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய குடும்பத்தாரிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அவர்கள் சத்தியத்தில் ஆர்வம் காட்டவும் நம் சகோதர சகோதரிகளிடம் பழகவும் வழி திறந்து வைக்கிறோம். அதே சமயத்தில், தீர்மானம் எடுக்க அவர்களுக்கு இருக்கும் உரிமையை நாம் மதிக்க வேண்டும்; வெறுத்துப்போகுமளவுக்கு அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த விஷயத்தில், நம் குடும்பத்தாருக்கு எப்படி உதவிக்கரம் நீட்டலாம் என்பதைத் தெரிந்துகொள்ள ஜெர்மனியைச் சேர்ந்த யூர்கென்-பெட்ரா தம்பதியரின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம்.
பெட்ரா, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து ஞானஸ்நானம் பெற்றார். அவருடைய கணவர் யூர்கென், அப்போது ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தார். ஆரம்பத்தில், தன்னுடைய மனைவி எடுத்த தீர்மானம் யூர்கென்னுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், சாட்சிகள் பைபிளிலிருந்தே போதிக்கிறார்கள் என்பதை போகப்போகத் தெரிந்துகொண்டார். பிற்பாடு அவரும் யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்தார். இப்போது, சபை மூப்பராகச் சேவை செய்து வருகிறார். வேறு மதத்திலிருக்கும் குடும்பத்தாரின் இருதயத்தைத் தொடுவதற்கு அவர் கொடுக்கும் அறிவுரை இதுதான்...
“ஆன்மீக விஷயங்கள கட்டாயப்படுத்தி திணிக்கக் கூடாது. அப்படி செஞ்சா, இனிமே கேட்கவே கூடாதுங்கற முடிவுக்கு அவங்க வந்துடுவாங்க. அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா விஷயங்கள சொல்றது பின்னால பிரயோஜனமா இருக்கும். அதோட, அவங்க வயசுல இருக்கிற, அவங்களுக்கு பிடிச்ச விஷயங்கள பேசுற சகோதரங்களோட நம்ம குடும்பத்தாரை பழக விடணும். இப்படி செஞ்சா சத்தியத்தை கொஞ்சம் காது கொடுத்து கேட்பாங்க” என்கிறார் யூர்கென்.
அப்போஸ்தலன் பேதுருவும் சரி கொர்நேலியுவின் உறவினர்களும் சரி, பைபிள் செய்தியைக் கேட்டவுடன் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றவர்களோ, ரொம்ப காலத்திற்கு பிறகே சத்தியத்திற்கு வந்தார்கள்.
இயேசுவின் சகோதரர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்களா?
இயேசுவின் ஊழிய காலத்தின்போது, அவருடைய உறவினர்களில் நிறைய பேர் அவரை விசுவாசித்தார்கள். இயேசுவின் தாயான மரியாளின் சகோதரி சலோமேயும் இவருடைய மகன்களான யாக்கோபும் யோவானும் அவர்களில் அடங்குவர். இயேசுவுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் ‘தங்களுடைய உடமைகளைக் கொண்டு . . . பணிவிடை செய்து வந்த’ ‘பல பெண்களில்’ சலோமேயும் ஒருவராக இருந்திருப்பார்.—லூக். 8:1-3.
இயேசுவின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களோ, உடனடியாக அவர்மீது விசுவாசம் வைக்கவில்லை. இயேசு ஞானஸ்நானம் பெற்று சுமார் ஒரு வருடத்திற்குப்பின், அவருடைய பேச்சைக் கேட்பதற்காக மக்கள் ஒரு வீட்டில் திரண்டு வந்திருந்தார்கள். “அவருடைய சொந்தக்காரர்கள் எல்லாவற்றையும் கேள்விப்பட்டபோது, ‘அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது’ என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொண்டுவர அங்கு போனார்கள்.” மற்றொரு சமயத்தில், இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அவருடைய பயணத் திட்டங்களைப் பற்றி விசாரித்தபோது, இயேசு அவர்களுக்குத் தெள்ளத் தெளிவான பதில் ஏதும் அளிக்கவில்லை. ஏனென்றால், “அவருடைய சகோதரர்கள் அவர்மீது விசுவாசம் வைக்கவில்லை.”—மாற். 3:21; யோவா. 7:5.
உறவினர்களிடம் இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக சிலர் சொன்னபோது, அவர் புண்பட்டுவிடவில்லை. அவர் இறந்து உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகுகூட, தம்முடைய ஒன்றுவிட்ட சகோதரரான யாக்கோபுக்குக் காட்சி கொடுத்தார். இதன் மூலம், தாமே மேசியா என்று நம்புவதற்கு யாக்கோபுக்கு மட்டுமல்ல, அவருடைய மற்ற ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் உதவினார். அதனால், அவர்கள் எருசலேமில் அப்போஸ்தலர்களோடும் மற்றவர்களோடும் ஒரு மாடி அறையில் கூடிவந்தார்கள்; கடவுளுடைய சக்தியையும் பெற்றுக்கொண்டார்கள். பிற்பாடு யாக்கோபும் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர்களில் இன்னொருவரான யூதாவும் அரிய வாய்ப்புகளைப் பெற்றார்கள்.—அப். 1:12-14; 2:1-4; 1 கொ. 15:7.
சிலருக்கு அதிக காலம் தேவை
இன்றும் உறவினர்கள் சிலருக்கு சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, ரோஸ்விதா என்பவரை எடுத்துக்கொள்வோம். அவருடைய கணவர், 1978-ல் யெகோவாவின் சாட்சியாக ஞானஸ்நானம் பெற்றார். ரோஸ்விதா, கத்தோலிக்க மதத்தில் ஊறிப்போயிருந்ததால் ஆரம்பத்தில் தன் கணவரை எதிர்த்தார். வருடங்கள் செல்லச் செல்ல யெகோவாவின் சாட்சிகள் சத்தியத்தைத்தான் போதிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு எதிர்ப்பதை நிறுத்திவிட்டார். பிறகு 2003-ல் ஞானஸ்நானம் பெற்றார். இவருடைய மனமாற்றத்துக்கு காரணம் என்ன? ஆரம்பத்தில் ரோஸ்விதா எதிர்த்தபோது அவருடைய கணவர் புண்பட்டுவிடவில்லை; சத்தியத்தை புரிந்துகொள்ள ரோஸ்விதாவுக்கு வாய்ப்புகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். ரோஸ்விதா தரும் ஆலோசனை என்ன? “நல்லதை சாதிப்பதற்குத் தேவையானதெல்லாம் பொறுமை, பொறுமை, நீண்ட பொறுமை.”
மோனிக்கா என்பவர் 1974-ல் ஞானஸ்நானம் பெற்றார். பத்து வருடங்களுக்குப் பிறகு, அவருடைய இரண்டு மகன்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அவருடைய கணவர் ஹான்ஸ், சத்தியத்தை எதிர்க்காவிட்டாலும் 2006-ல்தான் யெகோவாவின் சாட்சியானார். இந்தக் குடும்பத்தார் நமக்குச் சொல்லும் அறிவுரை என்ன? “யெகோவாவை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒருபோதும் விசுவாசத்தை விட்டுக்கொடுத்து விடாதீர்கள்” என்பதே. ஹான்ஸ்மீது அவர்கள் அனைவரும் தொடர்ந்து அன்பு காட்டினார்கள். அதோடு, என்றாவது ஒருநாள் அவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையை அவர்கள் கடைசிவரை விட்டுவிடவே இல்லை.
சத்தியமெனும் தண்ணீரால் புத்துணர்ச்சி பெற...
சத்தியத்தை, முடிவில்லா வாழ்வைத் தரும் தண்ணீருக்கு ஒப்பிட்டு இயேசு பேசினார். (யோவா. 4:13, 14) சத்தியமெனும் சில்லென்ற சுத்தமான தண்ணீரால் நம்முடைய உறவினர்கள் புத்துணர்ச்சி அடைய வேண்டும் என்பதே நம்முடைய ஆசை. ஒரே நேரத்தில் அளவுக்கதிகமான தண்ணீரை வலுக்கட்டாயமாகக் கொடுத்து அவர்களைத் திணறடிக்க நாம் நிச்சயம் விரும்பமாட்டோம். அவர்கள் புத்துணர்ச்சி அடைகிறார்களா அல்லது திணறிவிடுகிறார்களா என்பது, சத்தியத்தை நாம் எவ்விதத்தில் சொல்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. “நல்லவர்கள் பதில் சொல்லும்முன் சிந்திக்கிறார்கள்” என்றும், “அறிவுள்ளவர்கள் எப்பொழுதும் பேசுவதற்குமுன்பு சிந்திப்பார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் நல்லவையாகவும் உயர்வானவையாகவும் இருக்கும்” என்றும் பைபிள் சொல்கிறது. இந்த அறிவுரையை நாம் எப்படிப் பின்பற்றலாம்?—நீதி. 15:28; 16:23; ஈஸி டு ரீட் வர்ஷன்.
ஒரு மனைவி தன் கணவனுக்கு சத்தியத்தைப் பற்றிச் சொல்ல விரும்புவாள். ஆனால் ‘பதில் சொல்லும்முன் சிந்திக்கிற’ ஒரு மனைவி, கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவாள், அவசரப்பட மாட்டாள். தன்னை ஒரு நீதிமான் போலவோ கணவனைவிட உயர்ந்தவள் போலவோ காட்டிக்கொள்ள மாட்டாள். மாறாக, நன்கு யோசித்துப் பேசுவாள். அது அவளுடைய கணவனுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்; குடும்பத்தில் சமாதானமும் தழைக்கும். எப்போது பேசினால் கணவர் காதுகொடுத்துக் கேட்பார்? எந்த விஷயங்களை ஆர்வத்தோடு பேசுவார் அல்லது படிப்பார்? அவருக்குப் பிடித்தது எது—அறிவியலா, அரசியலா, அல்லது விளையாட்டா? அவருடைய உணர்ச்சிகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்புகாட்டுவதோடு, பைபிளிடமாக அவரை ஈர்க்க என்ன செய்யலாம்? இதுபோன்ற கேள்விகளை யோசித்துப் பார்த்தால், தன்னுடைய கணவனிடம் விவேகத்துடன் பேசவும் நடந்துகொள்ளவும் முடியும்.
சத்தியத்தில் இல்லாத நம்முடைய குடும்பத்தாரின் இருதயத்தைத் தொடுவதற்கு, பைபிள் விஷயங்களை அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, அதற்கேற்ப நடக்கவும் வேண்டும்.
நல்நடத்தையைக் காத்துக்கொள்ளுங்கள்
“குடும்பத்துல இருக்குறவங்க சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாம போனாலும் அத பற்றி அவங்க யோசிச்சு பார்க்குறதுக்கு ஒரு நல்ல வழி, பைபிள் நியமங்கள உங்க வாழ்க்கையில எப்பவும் கடைப்பிடிக்கிறதுதான்” என்கிறார் யூர்கென். தன்னுடைய மனைவி ஞானஸ்நானம் எடுத்து சுமார் 30 வருடங்களுக்குப் பின் சாட்சியான ஹான்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “கிறிஸ்தவங்கனு சொல்ற மாதிரி நடக்குறது ரொம்ப முக்கியம். அப்பதான், சத்தியம் நம்மை எந்தளவு மாத்தியிருக்குனு குடும்பத்துல இருக்கிறவங்களால பார்க்க முடியும்.” நாம் எந்தெந்த விஷயங்களில் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்கள் என்பதை உறவினர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக வெறுப்போ மனக்கசப்போ ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளக் கூடாது; அவர்களை ஆதாயப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும்.
சத்தியத்தில் இல்லாத கணவர்களிடம் நடந்துகொள்வது சம்பந்தமாக மனைவிகளுக்கு அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு அறிவுரை கொடுத்தார்: “உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும், உங்கள் கற்புள்ள நடத்தையையும் நீங்கள் காட்டுகிற ஆழ்ந்த மரியாதையையும் பார்த்து உங்கள் நடத்தையினாலேயே விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்; ஆம், நீங்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே அவர் விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம். தலைமயிரைப் பின்னுவது, தங்க நகைகளை அணிவது, பகட்டான உடைகளை உடுத்துவது போன்ற வெளிப்புற அலங்காரம் உங்களுக்கு அலங்காரமாக இருக்க வேண்டாம்; மாறாக, இருதயத்தில் மறைந்திருக்கிற அமைதியும் சாந்தமுமான குணமே உங்களுக்கு அழியாத அலங்காரமாக இருக்க வேண்டும்; அதுவே கடவுளுடைய பார்வையில் மிகவும் மதிப்புள்ளது.”—1 பே. 3:1-4.
மனைவியின் நல்நடத்தையால் கணவன் சத்தியத்திற்கு வர வாய்ப்பிருப்பதாக பேதுரு எழுதினார். இந்த ஆலோசனையைப் பின்பற்றி, கிறிஸ்டா என்ற சகோதரி 1972-ல் ஞானஸ்நானம் எடுத்த நாளிலிருந்தே, தன் கணவனுடைய இருதயத்தைத் தொட முயற்சி செய்துகொண்டே இருந்தார். அவருடைய கணவர் சாட்சிகளோடு பைபிளைப் படித்திருந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சபைக் கூட்டங்கள் சிலவற்றில் கலந்து கொண்டார், சகோதரர்களோடு நன்றாகப் பழகினார். அதே சமயத்தில், சகோதரர்கள் யாரும் நடவடிக்கை எடுக்குமாறு அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. கணவரின் இருதயத்தைத் தொடுவதற்கு கிறிஸ்டா என்னவெல்லாம் செய்தார்?
“எப்படி நடந்துக்கணும்னு யெகோவா ஆசைப்படுறாரோ அப்படி நடந்துக்குறதுல நான் உறுதியாயிருந்தேன். அதே சமயத்துல, ‘ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே’ என்னோட நல்ல நடத்தையால அவரை ஆதாயப்படுத்தறதுக்கு முயற்சி செஞ்சேன். பைபிள் நியமங்கள மீறாதவரைக்கும் அவர் விரும்புற மாதிரி நடந்துகிட்டேன். சத்தியத்தை ஏற்றுக்கணும்னு நான் அவர கட்டாயப்படுத்தல, அந்த விஷயத்தை யெகோவாகிட்டயே விட்டுட்டேன்” என்கிறார் கிறிஸ்டா.
வளைந்து கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கிறிஸ்டாவின் அனுபவம் நமக்கு உணர்த்துகிறது, அல்லவா? கூட்டங்களில் கலந்துகொள்வது, ஊழியம் செய்வது என ஆன்மீக விஷயங்களில் அவர் தவறாமல் ஈடுபட்டார். அதே சமயத்தில் தன்னுடைய அன்பையும், நேரத்தையும், கவனிப்பையும் கணவன் எதிர்பார்ப்பது நியாயமே என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொண்டார். நாமும் சத்தியத்தில் இல்லாத குடும்ப அங்கத்தினர்களுக்கு வளைந்து கொடுப்பதும், அவர்களைப் புரிந்துகொள்வதும் முக்கியம். “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரோடு அதுவும் மணத்துணையோடு நேரம் செலவிடுவது முக்கியம். அப்படி நேரம் செலவிடும்போது நல்ல பேச்சுத்தொடர்பு இருக்கும். நல்ல பேச்சுத்தொடர்பு இருந்தால் தனிமையில் வாடுவதாக, கைவிடப்பட்டதாக அவர்கள் நினைக்கமாட்டார்கள்; எரிச்சலடையவும் மாட்டார்கள்.—பிர. 3:1.
நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்
ஹோல்கர் என்பவருடைய அப்பா, வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஞானஸ்நானம் பெற்று 20 வருடங்களுக்குப் பின்னரே சத்தியத்திற்கு வந்தார். “நம்ம வீட்டுல இருக்குற ஒருத்தர் சத்தியத்தில இல்லாட்டாலும் அவரை நாம நேசிக்கிறோம், அவருக்காக ஜெபம் செய்றோங்கிறத அவர் உணர்றது முக்கியம்” என்கிறார் ஹோல்கர். ‘என் கணவர் கண்டிப்பா சத்தியத்துக்கு வருவாருங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு’ என்று கிறிஸ்டா சொல்கிறார். சத்தியத்தில் இல்லாத குடும்பத்தார் என்றாவது ஒருநாள் சத்தியத்திற்கு வருவார்கள் என்ற நம்பிக்கை எப்போதும் நமக்கு இருக்க வேண்டும்.
சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரோடு நாம் எப்போதும் நல்லுறவு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சத்தியத்தை அவர்கள் அறிந்துகொள்ளவும், அது அவர்களுடைய இதயத்தைத் தொடவும் நம்மால் உதவ முடியும். ஆகவே, அவர்களிடம் எப்போதும் “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” நடந்துகொள்ளுங்கள்.—1 பே. 3:15.