தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்
தேவை அதிகமுள்ள நாடுகளில், நிறைய பேர் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி வைராக்கியமாகப் பிரசங்கிக்கிறார்கள். அதில், மணமாகாத சகோதரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் சிலர், பல பத்தாண்டுகளாக வெளிநாட்டில் சேவை செய்கிறார்கள். அப்படிச் சேவை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்க பல வருடங்களுக்கு முன்பு எது அவர்களுக்கு உதவியது? வெளிநாட்டில் சேவை செய்ததிலிருந்து அவர்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள்? அவர்களுடைய வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது? இதைப் பற்றியெல்லாம் இந்த அனுபவமுள்ள சகோதரிகளிடம் கேட்டோம். நீங்களும் மணமாகாத ஒரு சகோதரியா? ஊழியத்தை திருப்தியாக, சந்தோஷமாகச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், இந்த மணமாகாத சகோதரிகள் சொல்கிற விஷயங்களிலிருந்து நீங்கள் பயனடைவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. சொல்லப்போனால், கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே அவர்களுடைய உதாரணங்களிலிருந்து பயனடையலாம்.
முடியாது என்று ஆரம்பத்தில் நினைத்தார்
வெளிநாட்டில் வெற்றிகரமாக பயனியர் ஊழியம் செய்ய மணமாகாத ஒரு சகோதரிக்கு என்ன தேவை? அனிட்டா என்ற சகோதரிக்கு இப்போது 75 வயதாகிறது. இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தன்னுடைய 18 வயதில் அங்கே பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார். ஆனால், வெளிநாட்டுக்குப் போய் சேவை செய்வதெல்லாம் தன்னால் முடியாது என்று ஆரம்பத்தில் நினைத்தார். இப்போது இவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்: “யெகோவாவ பத்தி மக்களுக்கு சொல்லிக்குடுக்குறதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, வெளிநாட்டுக்கு போய் சேவை செய்றத பத்தியெல்லாம் நான் நினைச்சுக்கூட பார்த்ததில்ல. வேறெந்த மொழியயும் நான் படிச்சதே இல்ல, ஒரு புது மொழிய நல்லா கத்துக்க முடியுங்கிற நம்பிக்கையும் எனக்கு இருந்ததில்ல. அதனால, கிலியட் பள்ளியில கலந்துக்கிறதுக்கு அழைப்பு வந்தப்போ எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளுக்கு இவ்வளவு பெரிய அழைப்பு வந்ததை நினைச்சு ரொம்ப ஆச்சரியப்பட்டேன். ஆனா, ‘என்னால முடியும்னு யெகோவாவே நினைக்கிறார்னா, நான் கண்டிப்பா முயற்சி செய்யணும்’னு முடிவு செஞ்சேன். இது நடந்து 50 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. இன்னைக்கு வரைக்கும் நான் ஜப்பான்ல மிஷனரியா சேவை செஞ்சிட்டு இருக்கேன் . . . ‘நீங்களும் என்ன மாதிரியே வெளிநாட்டுல சேவை செய்றதுக்கு முயற்சி செய்யுங்கனு’ இளம் சகோதரிகள்கிட்ட உற்சாகமா சொல்வேன். நான் சொன்ன மாதிரியே நிறைய பேர் வெளிநாட்டுல சேவை செய்றாங்க. அதை நினைச்சு பார்க்குறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
தைரியமாக முடிவு எடுத்தார்கள்
வெளிநாட்டில் சேவை செய்த நிறைய சகோதரிகள், ஆரம்பத்தில் வெளிநாட்டுக்குப் போக தயங்கினார்கள். ஆனால், அவர்கள் எப்படித் தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்கள்?
“நான் வளர வளர, ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழணும்னு ஆசப்பட்டேன், மத்தவங்களுக்கு உதவணும்னு நினைச்சேன்” என்று சகோதரி மொரீன் சொல்கிறார். இப்போது இவருக்கு 64 வயது. கனடாவில் இருக்கிற கியுபெக் என்ற இடத்தில் நிறைய பயனியர்கள் தேவைப்பட்டதால், தனக்கு 20 வயது ஆனபோது, மொரீன் அங்கே போனார். “அப்புறம் எனக்கு கிலியட் பள்ளியில கலந்துக்க அழைப்பு வந்துச்சு. ஆனா, என் நண்பர்கள் இல்லாம புதுசா ஒரு இடத்துக்கு போக எனக்கு பயமா இருந்துச்சு. அதுமட்டுமில்ல, என் அம்மாவ விட்டுட்டு போறதும் எனக்கு கவலையா இருந்துச்சு. ஏன்னா, உடம்பு சரியில்லாத என் அப்பாவ அவங்கதான் பார்த்துக்க வேண்டியிருந்துச்சு. இந்த விஷயத்த பத்தி, நிறைய நாள் ராத்திரி, யெகோவாகிட்ட அழுது ஜெபம் செஞ்சேன். என் அப்பா, அம்மாகிட்ட இந்த விஷயத்த பத்தி பேசுனப்போ, எனக்கு வந்த அழைப்ப ஏத்துக்க சென்னாங்க. எங்க சபையில இருந்த சகோதர சகோதரிகள், என் அப்பா, அம்மாவ அன்பா கவனிச்சிக்கிட்டாங்க. யெகோவா எங்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்றார்னு என்னால பார்க்க முடிஞ்சது. அதனால, என்னையும் அவர் பார்த்துக்குவாருங்கிற நம்பிக்கை எனக்கு வந்துச்சு. அங்க போறதுக்கு நான் அப்பவே தயாரானேன்” என்று மொரீன் சொல்கிறார். 1979-லிருந்து, 30 வருடங்களுக்கு மேல் மேற்கு ஆப்பிரிக்காவில் மொரீன் ஒரு மிஷனரியாகச் சேவை செய்தார். இப்போது, அவருடைய அம்மாவைக் கவனித்துக்கொண்டே, கனடாவில் இன்னும் ஒரு விசேஷ பயனியராகச் சேவை செய்கிறார். வெளிநாட்டில் சேவை செய்ததைப் பற்றி இவர் இப்படிச் சொல்கிறார்: “எனக்கு என்ன தேவையோ, அதை சரியான நேரத்தில யெகோவா எனக்கு எப்பவும் செஞ்சிருக்கார்.”
65 வயதான வென்டி என்ற சகோதரி, தன்னுடைய டீனேஜ் வயதில் பயனியர் சேவையை ஆரம்பித்தார். இவர் இப்படிச் சொல்கிறார்: “எனக்கு பயந்த சுபாவம் இருந்துச்சு. அதனால, புதுசா யார்கிட்டயாவது பேசணும்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, எல்லா விதமான ஆட்கள்கிட்டயும் பேசுறதுக்கு, பயனியர் ஊழியம் உதவியா இருந்துச்சு. அதனால, என்னோட தன்னம்பிக்கையும் அதிகமாச்சு. பிறகு, பயம் எனக்கு ஒரு பிரச்சனையா இருக்கல. யெகோவா மேல சார்ந்திருக்கிறதுக்கு பயனியர் ஊழியம் எனக்கு உதவுச்சு. அதோட, வெளிநாட்டில சேவை செய்ய முடியுங்கிற நம்பிக்கையும் வந்துச்சு. ஜப்பானுக்குப் போய் 3 மாசம் ஊழியம் செய்யலாம்னு, அங்க 30 வருஷத்துக்கு மேல மிஷனரியா சேவை செஞ்ச மணமாகாத ஒரு சகோதரி என்னை கூப்பிட்டாங்க. அவங்ககூட சேவை செஞ்சது வெளிநாட்டுல போய் சேவை செய்யணுங்கிற என்னோட ஆசைய தூண்டுச்சு.” 1986-ல், ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கே 1,770 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற வனுவாட்டு தீவுக்கு வென்டி போனார்.
இன்னும் இவர் வனுவாட்டு தீவில்தான் இருக்கிறார். இப்போது, அங்கிருக்கிற மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் சேவை செய்கிறார். “ஒதுக்குப்புறமான இடங்கள்ல சபைகளும் தொகுதிகளும் உருவாகுறத பார்க்குறப்போ எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு! இந்த தீவுகள்ல, யெகோவாவோட சேவைய செய்றதுல எனக்கு ஒரு சின்ன பங்கு கிடைச்சிருக்கு. எனக்கு கிடைச்ச இந்த பாக்கியத்தை வார்த்தைகளால விவரிக்கவே முடியாது” என்று இவர் சொல்கிறார்.
குமிக்கோ என்ற சகோதரிக்கு இப்போது 65 வயதாகிறது. இவர் ஒரு ஒழுங்கான பயனியராக ஜப்பானில் சேவை செய்துகொண்டிருந்தார். நேபாள நாட்டுக்குப் போய் ஊழியம் செய்யலாம் என்று அவரோடு பயனியர் ஊழியம் செய்த சகோதரி அவரிடம் சொன்னார். “அங்க போகலாமானு அவங்க எப்போ கேட்டாலும், நான் வேண்டாம்னு சொல்வேன்” என்று குமிக்கோ சொல்கிறார். “அங்க போனா, புது மொழிய கத்துக்கணும்... அந்த இடத்துக்கு ஏத்த மாதிரி என்ன மாத்திக்கணும்... இதையெல்லாம் நினைச்சு நான் ரொம்ப கவலைப்பட்டேன். அதோட, அங்க போறதுக்கு பணமும் தேவைப்பட்டுச்சு. இதை பத்தியெல்லாம் நான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல, எனக்கு திடீர்னு ஒரு பைக் விபத்து நடந்ததால, என்னை ஆஸ்பத்திரியில சேர்த்துட்டாங்க. அங்க இருந்தப்போ, ‘அடுத்தது எனக்கு என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்... ஒருவேளை, எனக்கு ஏதாவது மோசமான வியாதி வந்து, வெளிநாட்டுல பயனியர் ஊழியம் செய்ய முடியாம போயிடுச்சுனா, என்ன செய்றது... ஒரு வருஷத்துக்குக்கூட என்னால வெளிநாட்டுல சேவை செய்ய முடியாதா’னு யோசிக்க ஆரம்பிச்சேன். ‘நான் நினைச்சபடி செய்றதுக்கு உதவி செய்யுங்க’னு யெகோவாகிட்ட ஊக்கமா ஜெபம் செஞ்சேன்” என்று குமிக்கோ சொல்கிறார். ஆஸ்பத்திரியில் இருந்து வந்ததற்குப் பிறகு, குமிக்கோ நேபாள நாட்டுக்குப் போனார். பிறகு, அவரும் அவரோடு பயனியர் ஊழியம் செய்த சகோதரியும் அங்கே குடிமாறி போனார்கள்.
கிட்டத்தட்ட 10 வருடங்கள் நேபாளத்தில் ஊழியம் செய்த குமிக்கோ இப்படிச் சொல்கிறார்: “நான் எதை நினைச்சு கவலைப்பட்டேனோ அதெல்லாம் செங்கடல் மாதிரி என் முன்னாடி ஒண்ணுமே இல்லாம போச்சு. தேவை அதிகம் இருக்கிற இடத்துல ஊழியம் செய்யணும்னு நான் எடுத்த தீர்மானத்த நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறேன். பொதுவா, ஒரு வீட்டுல பைபிள் விஷயங்கள பத்தி பேசுறப்போ, அதை கேட்குறதுக்காக பக்கத்து வீடுகள்ல இருக்கிற 5 அல்லது 6 பேரு வந்திடுவாங்க. பைபிள பத்தி சொல்ற ஏதாவது ஒரு துண்டுப்பிரதிய கொடுக்க சொல்லி சின்ன பிள்ளைங்ககூட ரொம்ப மரியாதையா வந்து என்கிட்ட கேட்பாங்க. நம்ம செய்திய இங்க நல்லா கேட்குறாங்க; இங்க ஊழியம் செய்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு!
பிரச்சினைகளைச் சமாளித்தார்கள்
நாங்கள் பேட்டி எடுத்த தைரியமான இந்த மணமாகாத சகோதரிகளுக்கு நிறைய சவால்கள் இருந்தன. அவற்றை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்?
“குடும்பத்த விட்டு ரொம்ப தூரம் தள்ளி இருக்கிறது ஆரம்பத்துல எனக்கு கஷ்டமா இருந்துச்சு” என்று கனடாவைச் சேர்ந்த டையன் சொல்கிறார். இப்போது அவருக்கு 62 வயதாகிறது. ஐவரி கோஸ்ட் (இப்போது கோட் டீவோர்) என்ற நாட்டில் இவர் 20 வருடங்கள் மிஷனரியாகச் சேவை செய்திருக்கிறார். “நான் ஊழியம் செய்ற இடத்துல இருக்குற மக்கள நேசிக்க உதவி செய்யுங்கனு சொல்லி நான் யெகோவாகிட்ட கேட்டேன். நாம ஊழியம் செய்ற இடங்கள்ல இருக்கிற சூழ்நிலைமைய பார்க்குறது, அதுவும், மக்கள் பயங்கர பஞ்சத்துல இருக்கிறத பார்க்குறது நமக்கு கவலையா இருக்கலாம், ஏன் அதிர்ச்சியாகூட இருக்கலாம்னு என்னோட கிலியட் பள்ளி போதனையாளர்கள்ல ஒருத்தரான சகோதரர் ஜேக் ரெட்ஃபோர்ட் சொன்னார். ‘ஆனா, வறுமைய நினைச்சு கவலைப்படாதீங்க. அங்க இருக்கிற ஜனங்களோட முகத்த பாருங்க, அவங்களோட கண்களை பாருங்க. பைபிள் உண்மைகளை கேட்குறப்போ அவங்க எப்படி பிரதிபலிக்குறாங்கனு பாருங்க’னு அவர் சொன்னார். அவர் சொன்ன மாதிரி செஞ்சதால எனக்கு நிறைய ஆசீர்வாதம் கிடைச்சது. கடவுளோட அரசாங்கத்த பத்தி மக்கள்கிட்ட சொல்றப்போ, அவங்களோட கண்கள்ல ஒரு பிரகாசம் தெரியும்!” என்று டையன் சொல்கிறார். வெளிநாட்டில் சேவை செய்வதற்கு வேறு எதுவும்கூட டையனுக்கு உதவி செய்தது? “என்கூட பைபிள் படிக்கிறவங்ககிட்ட நான் நெருக்கமா பழகுனேன். அவங்க யெகோவாவின் சாட்சிகளா ஆனத பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நான் நியமிக்கப்பட்டிருந்த இடம் என்னோட சொந்த ஊராவே ஆயிடுச்சு! இயேசு வாக்கு கொடுத்த மாதிரி, எனக்கு நிறைய ஆன்மீக அப்பா அம்மாவும், சகோதர சகோதரிகளும் கிடைச்சாங்க” என்று டையன் சொல்கிறார்.—மாற். 10:29, 30.
ஆன் என்ற சகோதரிக்கு இப்போது 46 வயது. ஆசியாவில், நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கிற ஒரு நாட்டில், இப்போது இவர் சேவை செய்துவருகிறார். இவர் இப்படிச் சொல்கிறார்: “வெளிநாட்டுல வேற வேற இடங்கள்ல நான் சேவை செஞ்சிருக்கேன். இத்தனை வருஷத்துல, வித்தியாசமான பின்னணியிலிருந்து வந்த, வித்தியாசமான குணங்கள் இருந்த சகோதரிகள்கூட நான் தங்கியிருந்திருக்கேன். அதனால, சில சமயங்கள்ல எங்களுக்குக்குள்ள மனஸ்தாபம் வந்திருக்கு. அந்த மாதிரி சமயங்கள்ல, அவங்களோட கலாச்சாரத்தை நல்லா புரிஞ்சுக்கிறதுக்காக நான் அவங்ககூட நெருக்கமா பழகுனேன். இன்னும் அவங்கள நேசிக்குறதுக்கும் அவங்ககிட்ட நியாயமா நடந்துக்குறதுக்கும் நான் கடினமா முயற்சி செஞ்சேன். நான் எடுத்த முயற்சிகள் பலன் தந்ததை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. பலமான, நிலையான நட்பு எனக்கு கிடைச்சிருக்கு. என்னோட நியமிப்புல நிலைச்சிருக்கிறதுக்கு இந்த நட்பு உதவியா இருக்கு.”
1993-ல், ஜெர்மனியைச் சேர்ந்த உட்டே என்ற சகோதரி, மடகாஸ்கரில் மிஷனரியாகச் சேவை செய்ய நியமிக்கப்பட்டார். இப்போது அவருக்கு 53 வயது. இவர் இப்படிச் சொல்கிறார்: “ஆரம்பத்துல, அந்த ஊர்ல இருந்த மொழிய கத்துக்குறதுக்கும்... அங்கிருந்த புழுக்கமான சீதோஷ்ணத்தை சமாளிக்குறதுக்கும்... மலேரியா காய்ச்சல சமாளிக்குறதுக்கும்... அமீபா, ஒட்டுண்ணி புழுக்களால வர்ற நோய்களை சமாளிக்குறதுக்கும் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா, இதையெல்லாம் சமாளிக்க எனக்கு நிறைய உதவி கிடைச்சது. நான் உள்ளூர் மொழியை நல்லா கத்துக்குறதுக்கு, அங்கிருந்த சகோதரிகளும், அவங்களோட பிள்ளைகளும், என்கூட பைபிள் படிச்சவங்களும் எனக்கு பொறுமையா உதவி செஞ்சாங்க. நான் உடம்பு சரியில்லாம இருந்தப்போ, என்கூட மிஷனரி ஊழியம் செஞ்ச சகோதரி என்னை ரொம்ப அன்பா கவனிச்சுக்கிட்டாங்க. எல்லாத்துக்கும் மேல யெகோவா எனக்கு உதவி செஞ்சார். என்னோட கவலைகளையெல்லாம் தவறாம யெகோவாகிட்ட சொன்னேன். என்னோட ஜெபத்துக்கு பதில் கிடைக்குறதுக்காக, சில சமயம் ரொம்ப நாளா, ஏன், சில சமயம் மாச கணக்காகூட, பொறுமையா காத்திருந்தேன். எல்லா பிரச்சனைகளையும் யெகோவா சரி செஞ்சார்.” இப்போது, மடகாஸ்கரில் 23 வருடங்களாக உட்டே சேவை செய்துவருகிறார்.
அருமையான ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்
தேவை அதிகம் இருக்கிற இடங்களில் சேவை செய்கிறவர்களைப் போலவே, வெளிநாட்டில் சேவை செய்கிற மணமாகாத சகோதரிகளும் தங்களுடைய வாழ்க்கை இன்னும் மேம்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன?
ஜெர்மனியைச் சேர்ந்த ஹைடி என்ற சகோதரிக்கு இப்போது 73 வயது. இவர் 1968-லிருந்து ஐவரி கோஸ்ட்டில் (இப்போது, கோட் டீவோர்) ஒரு மிஷனரியாகச் சேவை செய்துவருகிறார். இவர் இப்படிச் சொல்கிறார்: “என்னோட ஆன்மீக பிள்ளைங்க ‘தொடர்ந்து சத்தியத்தில்’ நடக்குறத பார்க்கிறதுதான் எனக்கு கிடைச்ச பெரிய சந்தோஷம். என்கிட்ட பைபிள் படிச்சவங்க இன்னைக்கு பயனியர்களாவும் சபை மூப்பர்களாவும் இருக்காங்க. அவங்கள்ல நிறைய பேரு என்னை அம்மானு இல்லன்னா பாட்டினு கூப்பிடுவாங்க. ஒரு மூப்பரும் அவரோட மனைவியும், பிள்ளைங்களும், என்னை அவங்க குடும்பத்துல ஒருத்தராதான் பார்க்குறாங்க. யெகோவாதான் இந்த மகனையும், மருமகளையும், 3 பேரப்பிள்ளைங்களையும் எனக்கு கொடுத்திருக்கிறார்.”—3 யோ. 4.
கனடாவைச் சேர்ந்த கேரன் என்ற சகோதரிக்கு இப்போது 72 வயது. இவர் மேற்கு ஆப்பிரிக்காவில் 20 வருடங்களுக்கு மேல் சேவை செய்தார். இவர் இப்படிச் சொல்கிறார்: “இன்னும் சுயதியாக மனப்பான்மைய காட்டுறதுக்கும், இன்னும் அன்பா, பொறுமையா இருக்குறதுக்கும், மிஷனரி வாழ்க்கை எனக்கு கத்துக்குடுத்திருக்கு. வித்தியாசமான நாடுகளை சேர்ந்தவங்களோட சேவை செஞ்சதால, எல்லா விஷயத்தையும் பரந்த மனப்பான்மையோடு பார்க்குறதுக்கு கத்துக்கிட்டேன். ஒரு விஷயத்த செய்றதுக்கு பல வழிகள் இருக்குங்கிறதயும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ, உலகம் முழுவதும் எனக்கு நிறைய அன்பான நண்பர்கள் இருக்காங்க. இது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! எங்க வாழ்க்கையும் நியமிப்புகளும் மாறியிருந்தாலும் எங்க நட்பு மட்டும் இன்னும் மாறவே இல்ல.”
இங்கிலாந்தைச் சேர்ந்த மார்கரெட் என்ற சகோதரிக்கு இப்போது 79 வயது. இவர் லாவோஸ் என்ற இடத்தில் மிஷனரியாகச் சேவை செய்தார். இவர் இப்படிச் சொல்கிறார்: “வெளிநாட்டுல சேவை செஞ்சதால, எல்லா இனத்தையும் பின்னணியையும் சேர்ந்த மக்களை யெகோவா தன்னோட அமைப்புக்குள்ள கொண்டு வர்றத என்னால நேரடியா பார்க்க முடிஞ்சது. அங்க கிடைச்ச அனுபவம் என்னோட விசுவாசத்தை பலப்படுத்தியிருக்கு. அதுமட்டுமில்ல, தன்னோட அமைப்பை யெகோவாதான் வழிநடத்துறார்னும், அவரோட நோக்கம் நிச்சயம் நிறைவேறும்னும் முழுசா நம்புறதுக்கு இது உதவியா இருந்திருக்கு.”
வெளிநாட்டில் சேவை செய்யும் மணமாகாத சகோதரிகள், தங்களுடைய சேவையில் நிறைய சாதித்திருக்கிறார்கள். இந்தச் சகோதரிகளை நாம் மனதார பாராட்ட வேண்டும். (நியா. 11:40) இப்படிச் சேவை செய்கிற சகோதரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. (சங். 68:11) இந்தக் கட்டுரையில் தங்களுடைய அனுபவங்களைச் சொன்ன வைராக்கியமுள்ள இந்தச் சகோதரிகளைப் பின்பற்ற நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், உங்களால் மாற்றங்கள் செய்ய முடியுமா? அப்படிச் செய்தால், யெகோவா நல்லவர் என்பதை நீங்கள் நிச்சயம் ருசித்துப் பார்ப்பீர்கள்.—சங். 34:8.