ஆட்டங்காணா வாழ்க்கைக்கு அழியா நெறிகள்
எல்லா சமுதாயத்தினருமே ஏதாவதொரு வகையான ஒழுக்க நியதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். நேர்மை, இரக்கம், பரிவு, பிறர் நலம் கருதுதல் ஆகியவை உலகில் பொன்னெனப் போற்றப்படுகிற, பெரும்பாலோர் விரும்புகிற பண்புகள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?
இவற்றை வகுத்தவர் யார்?
பொது சகாப்தம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சவுல் என்பவர் கல்வியில் கரைகண்டவர்; அவர் மூன்று முக்கிய கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களின் மத்தியில், அதாவது யூதர், கிரேக்கர், ரோமர் ஆகியோரின் மத்தியில் வாழ்ந்தவர். அவர்கள் தங்களுக்கென ஒழுக்க நியதிகளை வகுத்திருந்தார்கள். இந்தக் கலாச்சாரங்கள் விலாவாரியான சம்பிரதாயங்களையும் சட்டதிட்டங்களையும் வகுத்திருந்தாலும்கூட, மனிதர்கள் தங்களிடம் இயல்பாகவே அமைந்துள்ள ஒழுக்க உணர்வின் அடிப்படையில் நடந்துகொள்கிறார்கள் என்பதை சவுல் அறிந்திருந்தார். அந்த உணர்வே மனசாட்சி ஆகும். சவுல் என்பவர் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுலாக மாறியபின் இவ்வாறு எழுதினார்: “திருச்சட்டத்தைப் பெற்றிராத பிற இனத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகக் [“இயல்பான உணர்ச்சியால்,” த நியூ டெஸ்டமன்ட் இன் மார்டன் ஸ்பீச்] கடைப்பிடிக்கும்போது அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாதபோதிலும் தங்களுக்குத் தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள். திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறி தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தங்கள் நடத்தையில் காட்டுகிறார்கள். அவர்களது மனச்சான்றே இதற்குச் சாட்சி.”—ரோமர் 2:14, 15, பொது மொழிபெயர்ப்பு.
என்றாலும், எது சரி எது தவறு என்பதை நாம் தீர்மானிக்கையில், ‘இயல்பான உணர்ச்சியை’ மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டால் போதுமா? தனிநபர்களின் தோல்விகளும் சமுதாயங்களின் தோல்விகளுமே மனித சரித்திரத்தின் ஏடுகளில் நிறைந்திருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இதனால், வாழ்க்கைக்கான சிறந்த நெறிகளை வகுப்பதற்கு உன்னதமான ஒருவரின் வழிநடத்துதல் தேவை என்ற முடிவுக்கு அநேகர் வந்திருக்கிறார்கள். காலத்தால் அழியாத நியதிகளை அளிப்பதற்குத் தகுந்தவர் மனிதனின் படைப்பாளரே என்பதைப் பலரும் ஒத்துக்கொள்கிறார்கள். தன்னைத்தான் அறியாமை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் டாக்டர் கார்ல் ஜங் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடவுளை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாத ஒருவர், உடல் ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் உலகிலிருந்து வரும் சபலங்களை எதிர்த்துப் போராடவே முடியாது.”
இந்தக் கூற்று, முற்கால தீர்க்கதரிசி ஒருவர் பின்வருமாறு எழுதியதற்கு இசைவாகவே இருக்கிறது: ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.’ (எரேமியா 10:23) நம் படைப்பாளர் இவ்வாறு கூறுகிறார்: ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறேன்.’—ஏசாயா 48:17.
மாறாத நெறிகளுக்கு நம்பகமான புத்தகம்
மேற்கூறப்பட்ட வார்த்தைகள், பாரெங்கும் விநியோகிக்கப்பட்டு வருகிற, ஒழுக்க நெறிகள் அடங்கிய புத்தகத்தில் காணப்படுகின்றன. அப்புத்தகம் பரிசுத்த பைபிளே. உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் மதம் சாராதவர்களும்கூட அறிவையும் ஞானத்தையும் பெற பைபிளைப் படித்திருக்கிறார்கள். ஜெர்மானிய கவி யோஹான் வால்ஃப்காங் வான் கேர்தா இவ்வாறு எழுதினார்: “என்னைப் பொறுத்தவரை, [பைபிளே] எனக்குப் பிடித்த புத்தகம், அதை மதிப்புக்குரிய ஒன்றாய்க் கருதினேன்; சொல்லப்போனால், ஒழுக்கசீலனாக என்னை உருவாக்கியதே பைபிள்தான்.” இந்தியத் தலைவரான மோஹன்தாஸ் காந்தி இவ்வாறு கூறியிருக்கிறார்: “உங்கள் வசம் கொடுக்கப்பட்டிருக்கிற மலைப்பிரசங்கம் [பைபிளில் இயேசு கிறிஸ்துவினுடைய போதனைகளின் ஒரு பகுதி] எனும் நீரூற்றில் பெருக்கெடுக்கும் நீரைப் பருகுங்கள் . . . இந்தப் பிரசங்கத்தின் போதனை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியது.”
மாறாத நெறிகளை வழங்குவதில் பரிசுத்த பைபிள் வகிக்கிற முக்கியப் பங்கை இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளவரான அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சிறப்பித்துக் காட்டினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) இது உண்மைதானா?
உண்மைதானா என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கலாமே! அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நியமங்களை ஆராய்ந்து பாருங்கள். அவை ஊக்குவிக்கிற பயனுள்ள நெறிகளைக் கவனியுங்கள். இந்தப் போதனைகளில் பொதிந்துள்ள கருத்துகள், உங்கள் வாழ்க்கைத் தரத்தையும் மற்றவர்களோடு உங்கள் பந்தத்தையும் மேம்படுத்துவதற்கு எந்தளவு சக்திபடைத்தவை என்பதைத் தியானியுங்கள்.
நீங்கள் பயனடைவீர்களா?
அடுத்த பக்கத்திலுள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் நியமங்கள், பைபிளில் உள்ள நடைமுறையான ஆலோசனைகளுக்குச் சில உதாரணங்களே. இவை தவிர, நமக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கெட்ட சிந்தை, கீழ்த்தரமான பேச்சு, தீய செயல் ஆகியவை சம்பந்தமாக ஏராளமான எச்சரிப்புகளும் கடவுளுடைய வார்த்தையில் உள்ளன.—நீதிமொழிகள் 6:16-19.
ஆம், பைபிள் போதனைகள் மனித சமுதாயத்திற்குப் பெரிதும் தேவைப்படுகிற, மிகச் சிறந்த ஒழுக்க நியதிகளை வகுப்பதற்குக் கைகொடுக்கும் ஆலோசனைகளை அளிக்கின்றன. பைபிள் போதனைகளை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கிறவர்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்கிறார்கள். நல்ல விதத்தில் சிந்திக்கத் துவங்குகிறார்கள். (எபேசியர் 4:23, 24) உள்ளெண்ணங்களிலும் சிறந்த மாற்றங்களைச் செய்கிறார்கள். பைபிளில் சொல்லப்பட்டுள்ள கடவுளுடைய நெறிகளைக் கற்றுக்கொள்வது இனப்பற்று, தப்பெண்ணம், பகைமை ஆகியவற்றைத் தங்கள் இதயத்திலிருந்து வேரறுக்க பலருக்கு உதவியிருக்கிறது. (எபிரெயர் 4:12) பைபிள் நெறிகள், எல்லா விதமான வன்முறையையும் தீயொழுக்கத்தையும் களைந்து நல்லவர்களாக நடக்க மக்களை ஊக்குவித்திருக்கின்றன.
ஆம், பைபிளின் நெறிகள் இரத்தத்தில் ஊறிப்போன கெட்ட பழக்கவழக்கங்களையும், பலருடைய வாழ்க்கையைச் சீரழித்திருக்கிற பழக்கவழக்கங்களையும் விட்டொழிக்க லட்சக்கணக்கானோருக்கு உதவியிருக்கின்றன. (1 கொரிந்தியர் 6:9-11) பைபிள் போதனைகள் அவர்களுடைய பழக்கவழக்கங்களை மட்டுமல்ல, அவர்களுடைய இதயத்தையும் நம்பிக்கையையும் குடும்பச் சூழலையும் மாற்றியிருக்கின்றன. இந்த உலகம் எவ்வளவுதான் தறிகெட்டுப்போனாலும், பூமியெங்குமுள்ள மக்கள் தங்களை நன்கு மாற்றிக்கொண்டே வருகிறார்கள். இந்த மாற்றம் தொடர்ந்து நிகழும். ஏனெனில், “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.”—ஏசாயா 40:8.
என்றாலும், தனிப்பட்ட விதமாக ‘நமது தேவனுடைய வசனத்திலிருந்து’ நீங்கள் பயனடைவீர்களா? நன்மை பயக்கும் பைபிள் நெறிகளை நீங்கள் கடைப்பிடிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் உதவத் தயாராய் இருக்கிறார்கள். அந்த நெறிகளின்படி வாழ்ந்தால் இப்போதே கடவுளுடைய தயவைப் பெறுவோம், அத்துடன், நித்திய வாழ்வுக்கும் வழிநடத்தப்படுவோம்; அப்போது கடவுள் தரும் அழியாத நெறிமுறைகளே தழைத்தோங்கும்.
[பக்கம் -ன் பெட்டி/படங்கள்] 6, 7]
காலத்தால் அழியாத நியமங்கள்
பிறரை நடத்துதல். “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.”—மத்தேயு 7:12.
பிறரை நேசித்தல். “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:39) “அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.”—ரோமர் 13:10.
பிறரை மதித்தல். “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.”—ரோமர் 12:10.
சமாதானத்தை நாடுதல். ‘ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாய் இருங்கள்.’ (மாற்கு 9:50) “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:18) “சமாதானத்துக்கடுத்தவைகளை . . . நாடக்கடவோம்.”—ரோமர் 14:19.
பிறரை மன்னித்தல். “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” (மத்தேயு 6:12) “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—எபேசியர் 4:32.
கற்பைக் காத்தல். “உன் மனைவிக்கு உண்மையாயிருந்து, அவளிடம் மட்டுமே காதல் வயப்படு. . . . உன் மனைவியோடே மகிழ்ந்திரு, நீ கரம்பிடித்த இளம் மனைவியுடன் இன்பம் அனுபவி . . . அவளது வசீகரங்கள் உன்னை மயக்குவதாக; அவள் தனது நேசத்தால் உன்னை வளைய வருவாளாக. . . . வேறொரு பெண்ணிடம் நீ ஏன் காதல் வயப்பட வேண்டும்? மாற்றான் மனைவியின்மீது நீ ஏன் மோகம்கொள்ள வேண்டும்?” (நீதிமொழிகள் 5:15-20, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.” (லூக்கா 16:10) “உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.”—1 கொரிந்தியர் 4:2.
நேர்மையாய் இருத்தல். ‘கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களை [ஒழுக்க] சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?’ (மீகா 6:11) “நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் [அதாவது, நேர்மையாய்] நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.”—எபிரெயர் 13:18.
நியாயமாய் இருத்தல். “நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்.” (ஆமோஸ் 5:15) “அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.” (சகரியா 8:16) “பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.”—எபேசியர் 4:25.
சிரத்தையோடு ஊக்கமாய் உழைத்தல். “தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.” (நீதிமொழிகள் 22:29) ‘[உங்கள் வேலையில்] அசதியாயிராதேயுங்கள்.’ (ரோமர் 12:11) “[நீங்கள்] எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.”—கொலோசெயர் 3:24.
சாந்தம், பரிவு, இரக்கம் காட்டுதல். ‘உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்.’—கொலோசெயர் 3:12.
தீமையை நன்மையால் வெல்லுதல். ‘உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.’ (மத்தேயு 5:44) “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.”—ரோமர் 12:21.
மிகச் சிறந்ததை கடவுளுக்கு அளித்தல். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை.”—மத்தேயு 22:37, 38.
[படங்கள்]
பைபிள் நெறிகளைக் கடைப்பிடிப்பது மகிழ்ச்சியான மணவாழ்வுக்கும் குடும்ப ஒற்றுமைக்கும் இனிய தோழமைக்கும் கைகொடுக்கும்