வேலை செய்ய ‘நீங்கள் பலவந்தம் செய்யப்பட்டால்’
“ஏய்! உன்னைத்தான்! அந்த வேலையை விட்டுட்டு இங்க வந்து இந்த மூட்டையைத் தூக்கு.” முதல் நூற்றாண்டில், மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த ஒரு யூதனிடம் ரோம போர்வீரன் ஒருவன் இவ்வாறு சொல்லியிருந்தால் அவன் எப்படி பிரதிபலித்திருப்பான் என நீங்கள் நினைக்கிறீர்கள்? மலைப்பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு செய்யும்படி சிபாரிசு செய்தார்: “[“அதிகாரத்திலுள்ள,” NW] ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.” (மத்தேயு 5:41) அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்த அறிவுரையை எப்படிப் புரிந்து கொண்டார்கள்? இன்று நமக்கு இது எதை அர்த்தப்படுத்துகிறது?
பதிலைத் தெரிந்துகொள்வதற்கு, பூர்வ காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாய உழைப்பு முறையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இதைப் பற்றி இயேசுவின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் நன்கு அறிந்திருந்தார்கள்.
கட்டாய உழைப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் பொ.ச.மு. 18-ம் நூற்றாண்டு முதற்கொண்டே கட்டாய உழைப்பு (அல்லது கூலியில்லா வேலை) புழக்கத்தில் இருந்து வந்ததாக அத்தாட்சிகள் காட்டுகின்றன. தங்களுக்கு வேலை செய்து கொடுக்க அரசாங்கம் ஏற்படுத்தியிருந்த கட்டாய உழைப்பு குழுக்களைக் குறித்து ஆலலக் என்ற சிரியாவின் பூர்வ பட்டணத்தில் கண்டெடுக்கப்பட்ட நிர்வாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. சிரியா நாட்டின் கரையோரத்தில் உள்ள உகரிட் என்ற ஊரில், குத்தகைக்கு வேலை செய்த விவசாயிகள், அரசன் விடுவித்தாலொழிய மற்றபடி இப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது.
சிறைபிடிக்கப்பட்ட அல்லது அடிமைகளாக்கப்பட்ட மக்கள் பொதுவாகவே கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது உண்மைதான். எகிப்திய அதிகாரிகள் தங்களுக்காக செங்கல் சுடும்படி இஸ்ரவேலரைக் கட்டாயப்படுத்தினார்கள். பிற்பாடு, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியிருந்த கானானியரை இஸ்ரவேலர் அடிமையாக்கி தங்களுக்காக வேலை செய்ய வைத்தார்கள். தாவீது, சாலொமோன் ஆகியோரும் இது போன்ற பழக்கங்களை பின்பற்றினர்.—யாத்திராகமம் 1:13, 14; 2 சாமுவேல் 12:31; 1 இராஜாக்கள் 9:20, 21.
இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று சாமுவேலிடம் கேட்டபோது, அவர்களிடம் ராஜா நியாயமாக எவற்றையெல்லாம் எதிர்பார்ப்பாரென அவர் விளக்கினார். ராஜா தன் குடிமக்களை ரத சாரதிகளாகவும் குதிரை வீரராகவும் விவசாயிகளாகவும் அறுவடைக்காரர்களாகவும் படைக்கலன்களைச் செய்பவர்களாகவும் பயன்படுத்துவார் என்று விளக்கினார். (1 சாமுவேல் 8:4-17) என்றபோதிலும், யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுகையில் புறதேசத்தாரை கட்டாய உழைப்பில் சாலொமோன் ஈடுபடுத்தியபோதிலும், ‘இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் அவர் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்த மனுஷரும், அவருக்குப் பணிவிடைக்காரரும், பிரபுக்களும், சேர்வைக்காரரும், இரத வீரரும், குதிரை வீரருமாயிருந்தார்கள்.’—1 இராஜாக்கள் 9:22.
கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட இஸ்ரவேலரைக் குறித்து 1 இராஜாக்கள் 5:13, 14 இவ்வாறு சொல்கிறது: “ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்துக்கு முப்பதினாயிரம் அமஞ்சி ஆட்களைப் பிடித்தான். அவர்களில் ஒவ்வொரு மாதத்திற்குப் பதினாயிரம் பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான், அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதம் தங்கள் வீடுகளிலும் இருப்பார்கள்.” “இஸ்ரவேலையும் யூதாவையும் ஆண்ட அரசர்கள் இந்தக் கட்டாய உழைப்பு ஏற்பாட்டின் மூலம் கூலியில்லாத வேலையாட்களைப் பயன்படுத்தி, கட்டுமான வேலைகளையும் தங்கள் நிலங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளையும் செய்து முடித்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை” என்பதாக ஓர் அறிஞர் கூறுகிறார்.
சாலொமோனின் ஆட்சியில் வேலை பளு மக்களை ஒரேயடியாக அழுத்தியது. அது அந்தளவுக்கு அதிகமாக இருந்ததால், ரெகொபெயாம் அதை இன்னும் அதிகரிக்கப்போவதாக அச்சுறுத்தியபோது, இஸ்ரவேலர் கலகம் செய்து, கட்டாய உழைப்பாளிகள் மீது நியமிக்கப்பட்ட விசாரிப்புக்காரனைக் கல்லெறிந்து கொன்றார்கள். (1 இராஜாக்கள் 12:12-18) இருந்தாலும், கட்டாய உழைப்பு முறை ஒழிக்கப்படவில்லை. ரெகொபெயாமின் பேரனான ஆசா, கேபாவையும் மிஸ்பாவையும் கட்டுவதற்கு யூத மக்களை ஒன்று திரட்டினான். அவர்களில் ‘ஒருவரும் தப்ப முடியவில்லை.’—1 இராஜாக்கள் 15:22.
ரோம ஆதிக்கத்தின் கீழ்
வேலை செய்ய ‘பலவந்தப்படுத்தப்படும்’ வாய்ப்பு இருந்ததைப் பற்றி முதல் நூற்றாண்டு யூதர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பது மலைப் பிரசங்கத்திலிருந்து தெரிய வருகிறது. ஆகாரிவோ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த வார்த்தை, பெர்சிய நாட்டு தூதுவர்கள் செய்து வந்த வேலையோடு சம்பந்தப்பட்டிருந்தது. அவர்கள் பொது வேலைகளைச் சட்டென செய்து முடிக்க ஆட்களை, குதிரைகளை, கப்பல்களை அல்லது எதை வேண்டுமானாலும் கட்டாய உழைப்பில் பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள்.
இயேசுவின் காலத்தில் இஸ்ரவேலில் ஆதிக்கம் செலுத்திய ரோமர்களும் இது போன்றதோர் முறையைக் கையாண்டனர். கிழக்கத்திய மாகாணங்களில், மக்கள் வரிகளை செலுத்த வேண்டியிருந்ததோடு, தொடர்ந்தோ அல்லது தேவைப்படும்போதோ கட்டாய வேலையில் ஈடுபடவும் வேண்டியிருந்தது. அத்தகைய வேலைகளை அவர்கள் வெறுத்தனர். அதுமட்டுமல்ல, நகர போக்குவரத்துக்காக மிருகங்களையோ, வண்டிகளையோ, ஓட்டுனர்களையோ அனுமதியின்றி எடுத்துச் செல்வது சர்வசாதாரணமாக இருந்தது. நிர்வாகிகள் “இதை நெறிப்படுத்த பல விதிமுறைகளை வகுத்தபோதிலும் ஒரு பலனுமில்லாமல் போனது. ஏனென்றால் மோசமான பாதிப்புகளையே இந்தப் பழக்கம் எப்போதும் ஏற்படுத்தவிருந்தது. அநேக ஆணைகளைப் பிறப்பித்து, ரோம உயரதிகாரிகள் இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும் கட்டாய உழைப்பு முறையில் உட்பட்டுள்ள ஒடுக்குமுறையையும் அடக்குவதற்கு உண்மையிலேயே பாடுபட்டார்கள் . . . ஆனால் அது தொடர்ந்து ஒடுக்குவதாகவே இருந்தது” என்பதாக சரித்திராசிரியர் மைக்கேல் ராஸ்டாவ்ட்சிப் கூறுகிறார்.
“படைத் தளவாடங்கள் கொண்ட மூட்டையைக் குறிப்பிட்ட தூரத்துக்குத் தூக்கிச் செல்லும்படி யார் வேண்டுமானாலும் பலவந்தப்படுத்தப்பட்டனர். எந்த வேலையைச் செய்யவும் யாரை வேண்டுமானாலும் ரோமர்கள் கட்டாயப்படுத்தினர்” என்பதாக ஒரு கிரேக்க அறிஞர் கூறுகிறார். ரோம போர்வீரர்கள் சிரேனே ஊரானாகிய சீமோனை இயேசுவின் கழுமரத்தைச் சுமக்கும்படி ‘பலவந்தம் பண்ணினபோது’ சம்பவித்தது இதுவே.—மத்தேயு 27:32.
மக்கள் வெறுத்த இந்த பழக்கத்தைப் பற்றி ரபீனிய எழுத்துக்களும்கூட குறிப்பிடுகின்றன. உதாரணத்திற்கு, ஓர் அரண்மனைக்கு மிருதுச் செடிகளை எடுத்து வருவதற்காக ஒரு ரபீ கட்டாயமாக பிடித்து வரப்பட்டார். அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய பணியாட்களை வைத்தும் வேலை வாங்கினார்கள். ஆனால் அவர்களுடைய முதலாளிகளையே சம்பளம் கொடுக்கச் செய்தார்கள். பொதி சுமக்கும் விலங்குகளையோ, எருதுகளையோ அவர்களால் அபகரித்துக்கொள்ள முடிந்தது. ஒருவேளை அவற்றை உரியவர்களிடம் திரும்பக் கொடுத்தாலும், மீண்டும் வேலை செய்ய முடியாதளவுக்கு பயனற்றவையாகவே இருந்தன. கையை விட்டுப் போனால் போனதுதான் என மக்கள் நினைத்ததற்கான காரணத்தை நீங்கள் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். “ஆகாரீயா மரணத்துக்குச் சமம்” என்று சொல்வதன் மூலம் ஒரு யூத பழமொழி இந்த உண்மையை வலியுறுத்தியது. “பாரம் இழுத்துச் செல்லும் மிருகங்களுக்குப் பதிலாக உழுவதற்கு பயன்படும் எருதுகள் ஆகாரீயாவுக்காக பறித்துக் கொள்ளப்படுகையில் ஒரு முழு கிராமமே பாழாகலாம்” என்பதாக ஒரு சரித்திராசிரியர் கூறுகிறார்.
அகங்காரமும் அநியாயமும் தலைக்கேறிய ஆட்கள் கொடுத்த இந்த வேலைகளைச் செய்ய மக்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இழிவுபடுத்தும் இந்தக் கட்டாய உழைப்பு, ஏற்கெனவே தங்களை அடக்கியாளும் புறதேசத்தாருக்கு எதிராக யூதர்களின் மனதில் கனன்று கொண்டிருந்த பகைமை எனும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதாக அமைந்தது. எவ்வளவு தூரம் சுமை சுமக்கும்படி ஒருவரைக் கட்டாயப்படுத்தலாம் என்பதை நடப்பிலுள்ள எந்தச் சட்டமும் நமக்குத் தெரிவிப்பதில்லை. ஆனாலும், சட்டம் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் ஓர் அடி எடுத்து வைக்கக்கூட அநேகர் விரும்பியிருக்க மாட்டார்கள்.
இருந்தாலும், “[“அதிகாரத்திலுள்ள,” NW] ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ” என்று இயேசு சொன்னபோது இந்த ஏற்பாட்டைக் குறித்துத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். (மத்தேயு 5:41) அதைக் கேட்ட சிலர் இயேசு நியாயமற்ற விதத்தில் பேசுவதைப் போல் நினைத்திருக்கலாம். அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
கிறிஸ்தவர்கள் எப்படி பிரதிபலிக்க வேண்டும்
சுருங்கச் சொன்னால், ஓர் அதிகாரி ஏதோவொரு நியாயமான வேலையை செய்யும்படி ஜனங்களைக் கட்டாயப்படுத்தும்போது, அதை முகம் சுளிக்காமல் மனப்பூர்வமாக செய்ய வேண்டுமென இயேசு அக்கூட்டத்தாரிடம் கூறினார். இப்படியாக, அவர்கள் “இராயனுடையதை இராயனுக்கு” செலுத்த வேண்டியிருந்த போதிலும், “தேவனுடையதை தேவனுக்கு” செலுத்தும் கடமையை புறக்கணிக்காதிருக்க வேண்டியிருந்தது.—மாற்கு 12:17.a
மேலும், கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால் தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான் . . . நீ தீமை செய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை.”—ரோமர் 13:1-4.
இவ்வாறு, அரசரோ அரசாங்கத் தலைவரோ கோரிக்கைகள் விடுக்கையில் அவற்றை மீறுபவர்களைத் தண்டிக்க அவர்களுக்கு உரிமை இருப்பதாக இயேசுவும் பவுலும் ஒத்துக்கொண்டனர். ஆனால் எத்தகைய தண்டனை அளிக்க அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்? பொ.ச. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க தத்துவஞானி எபிக்டீடஸ் அதற்கு ஒரு பதிலை அளிக்கிறார்: “எதிர்பாராத தேவை காரணமாக ஒரு போர்வீரன் உன்னுடைய கழுதைக் குட்டியை எடுத்துக் கொண்டால் போகட்டும் விட்டுவிடு. அவனைத் தடுக்காதே, ஒன்றும் சொல்லாதே; ஏன் அவனிடம் அடியையும் வாங்கிக் கொண்டு, கழுதையையும் இழக்க வேண்டும்.”
இருப்பினும், அன்றும் சரி, இன்றும் சரி, அரசாங்கத்தின் கோரிக்கைகளோடு தங்களுடைய நல்மனசாட்சி இணங்கிப் போகாததை கிறிஸ்தவர்கள் சில சமயத்தில் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் சிலவேளை விபரீதமான விளைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் சிலர் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் நடுநிலையற்ற காரியங்கள் என தாங்கள் கருதியவற்றில் பங்கெடுக்க மறுத்ததன் காரணமாக பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். (ஏசாயா 2:4; யோவான் 17:16; யோவான் 18:36) மற்ற சமயங்களில், கிறிஸ்தவர்கள் தங்களிடம் எதிர்பார்க்கப்படுபவற்றை செய்ய முடிந்திருக்கிறது. உதாரணமாக, படைத்துறை சாராத நிர்வாகத்தின் கீழ் சமுதாயத்திற்குப் பயனுள்ள வேலைகளை மனசாட்சியின் உறுத்தலின்றி செய்ய முடிந்ததாக சிலர் உணர்ந்திருக்கிறார்கள். வயதானவர்களுக்கோ ஊனமுற்றவர்களுக்கோ உதவுவது, தீயணைப்பு படையில் சேவை செய்வது, கடற்கரைகளைச் சுத்தம் செய்வது, பூங்காக்களில், காடுகளில், நூலகங்களில் வேலை செய்வது போன்றவை அதில் உட்படலாம்.
நாட்டுக்கு நாடு சூழ்நிலைகள் மாறுபடலாம். ஆகையால், அரசாங்கத்தின் கோரிக்கைகளை ஏற்பதா வேண்டாமா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தனது மனசாட்சிக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாவது மைல் வரை செல்லுதல்
நியாயமான கோரிக்கைகளுக்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படிய வேண்டும் என்ற இயேசுவின் நியமம் அரசாங்கம் எதிர்பார்க்கும் காரியங்களுக்கு மட்டுமல்ல, அன்றாட மனித உறவுகளுக்கும் பொருந்தும். ஒருவேளை அதிகாரத்திலுள்ள ஒருவர் கடவுளுடைய சட்டத்துடன் முரண்படாத, ஆனால் உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லலாம். என்ன செய்வீர்கள்? உங்களுடைய சக்தியும் நேரமும் அநியாயமாக விரயமாவதாக நினைத்து நீங்கள் வெறுப்புடன் நடந்து கொள்ளலாம். இதனால் பகைமை தலைதூக்கலாம். ஒருவேளை அக்காரியத்தை கோபத்தோடு செய்து, அதனால் மன அமைதியை இழக்க நேரிடலாம். இதற்குத் தீர்வு? இயேசு சிபாரிசு செய்தபடி, இரண்டாவது மைல் வரை செல்வதுதான். ஆம், உங்களிடம் எதிர்பார்க்கப்படுவதை மட்டுமல்ல, அதைவிட அதிகம் செய்யுங்கள். அதை மனப்பூர்வமாய் செய்யுங்கள். அத்தகை மனநிலை இருந்தால் மற்றவர்கள் உங்களை ஏய்ப்பதாக நினைக்கவும் மாட்டீர்கள், அதே சமயம், என்ன செய்வது, ஏது செய்வது என்பதை நீங்களே தீர்மானிப்பவராகவும் இருப்பீர்கள்.
“அநேகர் தாங்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய காரியங்களை மட்டுமே வாழ்நாள் முழுவதும் செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது சுவாரஸ்யமற்ற அனுபவம், அதில் அவர்கள் அடிக்கடி சோர்ந்து போய்விடுவார்கள். வேறு சிலரோ தாங்கள் செய்ய வேண்டியதைக் காட்டிலும் அதிகம் செய்து, மனப்பூர்வமாய் மற்றவர்களுக்கு உதவுவார்கள்” என்பதாக ஒரு எழுத்தாளர் குறிப்பிடுகிறார். கட்டாயத்தின் காரணமாக செல்லும் ஒரு மைலா அல்லது மனப்பூர்வமாகச் செல்லும் இரண்டு மைலா என்பதைத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை ஒருவர் அடிக்கடி எதிர்ப்படலாம். முதல் வகையினர் தங்களுடைய உரிமைகளை கோருவதிலேயே அதிக அக்கறையை காட்டுவார்கள். இரண்டாவது வகையினர், பலனளிக்கும் பல அனுபவங்களைப் பெறுவார்கள். நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்? உங்களுடைய வேலைகளை செய்தே தீர வேண்டுமென ஏதோ கடமைக்காக செய்யாமல் அதை ஆர்வத்தோடு செய்கையில் அதிக சந்தோஷமாக இருப்பீர்கள், ஆக்கபூர்வமாகவும் இருப்பீர்கள்.
அதிகாரம் உங்கள் கையில் இருந்தால் அப்போது என்ன செய்வீர்கள்? அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஒருவருக்கு விருப்பமில்லாத காரியத்தைச் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவது அன்பற்ற செயல் என்பது தெள்ளத் தெளிவானதே, அப்படிச் செய்வது கிறிஸ்தவருக்கு அழகல்ல. “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள்” என்பதாக இயேசு கூறினார். ஆனால் கிறிஸ்தவர்கள் அப்படி இருக்கக்கூடாது. (மத்தேயு 20:25, 26) அதிகாரிகள் கறாராக இருக்கையில் பலன் கிடைக்கும் என்பது உண்மையே. ஆனால் தயவான, பொருத்தமான கோரிக்கைகள் வைக்கப்பட்டு, அவை மரியாதையோடும், ஆனந்தத்துடனும் ஏற்றுக் கொள்ளப்படும்போது அனைவர் மத்தியிலும் உறவுகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும்! ஆம், ஒரு மைல் செல்வதைவிட, இரண்டு மைல் செல்ல தயாராக இருப்பது உங்கள் வாழ்க்கைக்கு வளமூட்டும்.
[அடிக்குறிப்பு]
a “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்பது கிறிஸ்தவர்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை விளக்கமாக தெரிந்துகொள்ள காவற்கோபுரம், மே 1, 1996, பக்கங்கள் 15-20-ஐக் காண்க.
[பக்கம் 25-ன் பெட்டி]
பூர்வத்தில் கட்டாய உழைப்பு எப்படித் தவறாக பயன்படுத்தப்பட்டது
கட்டாய உழைப்பு என்ற பெயரில் மக்கள் சக்கையாய் பிழிந்தெடுக்கப்பட்டார்கள் என்பது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அமல்படுத்தப்பட்ட சட்டங்களில் இருந்து தெரிய வருகிறது. பொ.ச.மு. 118-ல் எகிப்தை ஆண்ட இரண்டாம் டாலமி யூயர்ஜடிஸ் தனது ஊழியர்களுக்கு இவ்வாறு ஆணையிட்டார்: “சொந்த வேலைகளை செய்ய அந்நாட்டின் குடிகளை வற்புறுத்தக் கூடாது, சொந்த தேவைகளுக்காக அவர்களுடைய கால்நடைகளை கேட்கவும் (aggareuein) கூடாது.” மேலும், “எந்தச் சாக்குப்போக்குச் சொல்லியும் சொந்த வேலைகளுக்காக பிறருடைய படகுகளை கேட்கக் கூடாது” என்றும் ஆணையிட்டார். எகிப்தில் உள்ள மகா ஓயாசிஸ் கோவிலில் பொறிக்கப்பட்ட பொ.ச. 49-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் ரோம அதிகாரியான வெர்ஜிலியுஸ் கேபிட்டோ, சட்ட விரோதமான கோரிக்கைகளை நிறைவேற்ற மக்களை போர் வீரர்கள் வற்புறுத்தியதை ஒப்புக்கொண்டிருந்தார்; “எழுத்துப்பூர்வமாக நான் அங்கீகாரம் அளித்தால் ஒழிய . . . மற்றபடி எவரும் எதையாகிலும் கேட்கவோ எடுத்துக் கொள்ளவோ கூடாது” என சட்டப்படி நிலைநாட்டினார்.
[பக்கம் 24-ன் படம்]
சிரேனே ஊரானாகிய சீமோன் வேலை செய்ய பலவந்தப்படுத்தப்பட்டார்
[பக்கம் 26-ன் படம்]
கிறிஸ்தவ நிலைநிற்கை காரணமாக அநேக சாட்சிகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள்