கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு இருங்கள்
‘இவர்கள் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.’—யோவா. 17:16.
1, 2. (அ) யெகோவாவுக்கு உண்மையோடு இருப்பதற்கும் இந்த உலகத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? (ஆரம்பப் படம்) (ஆ) இன்று நிறைய மக்கள் யாருக்கு உண்மையோடு இருக்கிறார்கள், அதனால் என்ன நடக்கிறது?
நாடு, இனம், கலாச்சாரம் போன்ற விஷயங்களின் அடிப்படையில் இன்று பல சண்டை சச்சரவுகள் நடக்கின்றன. ஆனால், யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் அதில் எல்லாம் ஈடுபடுவதும் இல்லை, யாருக்கும் ஆதரவு கொடுப்பதும் இல்லை. ஏனென்றால் நாம் யெகோவாவை நேசிக்கிறோம், அவருக்கு உண்மையோடு இருக்கிறோம், அவருக்கு மட்டுமே கீழ்ப்படிகிறோம். (1 யோ. 5:3) நாம் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, யெகோவாவுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியத்தான் விரும்புகிறோம். யெகோவாவுக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் உண்மையோடு இருப்பதுதான் வேறு எதையும்விட முக்கியமானது. (மத். 6:33) அதனால்தான், ‘நாம் இந்த உலகத்தின் பாகமாக இருப்பதில்லை.’—யோவான் 17:11, 15, 16-ஐ வாசியுங்கள்; ஏசா. 2:4.
2 பொதுவாக, இன்று நிறைய மக்கள் அவரவருடைய நாடு, இனம், கலாச்சாரம், விளையாட்டு அணிக்கு உண்மையோடு இருக்கிறார்கள். இதனால் நிறைய பேர் மற்றவர்களோடு போட்டி போடுகிறார்கள், அவர்களை வெறுக்கிறார்கள். சில சமயம், அவர்களை கொலையும் செய்கிறார்கள். இந்த மாதிரியான விஷயங்களில் நாம் ஈடுபடவில்லை என்றாலும், இதெல்லாம் நம்மையும் நம் குடும்பத்தில் இருக்கிறவர்களையும் பாதிக்கலாம். எது நியாயம் எது அநியாயம் என்று புரிந்துகொள்ளும் திறனைக் கடவுள் நமக்குக் கொடுத்திருப்பதால் மனித அரசாங்கங்கள் அநியாயமாக நடந்துகொள்ளும்போது நாம் யார் பக்கமாவது சாய்ந்துவிடலாம். (ஆதி. 1:27; உபா. 32:4) ஒருவேளை, அந்த மாதிரி அநியாயம் நடக்கும்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? யார் பக்கமும் சாயாமல் நடுநிலையை காத்துக்கொள்கிறீர்களா?
3, 4. (அ) சண்டை சச்சரவுகள் நடக்கும்போது நாம் ஏன் யார் பக்கமும் சாய்வதில்லை? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
3 ஏதாவது சண்டை சச்சரவுகள் ஏற்படும்போது நிறைய பேர் யார் பக்கமாவது சாய்ந்து விடுகிறார்கள். ‘ஒரு நல்ல குடிமகனாக இருப்பவன் யாரையாவது ஆதரித்தே ஆக வேண்டும்’ என்று அரசாங்கங்கள் மக்களை நினைக்க வைக்கிறார்கள். ஆனால், நாம் இயேசுவைப் பின்பற்றுவதால் அரசியலிலோ போரிலோ ஈடுபடுவதில்லை. (மத். 26:52) இந்த சாத்தானுடைய உலகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைவிட உயர்ந்தது என்று நாம் நினைப்பதில்லை. (2 கொ. 2:11) இந்த உலகத்தில் இருக்கும் எந்த சண்டை சச்சரவுகளிலும் நாம் ஈடுபடுவதும் இல்லை.—யோவான் 15:18, 19-ஐ வாசியுங்கள்.
4 நாம் எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். நம்மில் இருந்து வித்தியாசமாக இருக்கும் ஆட்களைப் பற்றி நம்மில் சிலர் இன்னும் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கலாம். (எரே. 17:9; எபே. 4:22-24) மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் இந்த மாதிரியான எண்ணங்களைத் தவிர்க்க பைபிள் ஆலோசனைகள் நமக்கு எப்படி உதவும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதோடு, கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு இருக்க நம் மனதையும் மனசாட்சியையும் எப்படிப் பயிற்றுவிக்கலாம் என்றும் பார்க்கலாம்.
யார் பக்கமும் சாய்வதில்லை
5, 6. பூமியில் இருந்தபோது வெவ்வேறு மக்கள் தொகுதிகளைப் பற்றி இயேசு என்ன நினைத்தார், ஏன்?
5 யார் பக்கமும் சாயாமல் இந்த உலகத்தில் நடுநிலையைக் காத்துக்கொள்வது கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், ‘இந்த மாதிரியான சூழ்நிலைமையில இயேசு இருந்திருந்தா, அவர் என்ன செஞ்சிருப்பார்?’ என்று யோசித்துப் பாருங்கள். இயேசு பூமியில் இருந்தபோது யூதேயா, கலிலேயா, சமாரியாவில் இருந்த மக்களுக்குள் நிறைய பிரிவினைகளும் கருத்துவேறுபாடுகளும் இருந்தன. உதாரணத்துக்கு, யூதர்களும் சமாரியர்களும் பேசிக்கொள்ள மாட்டார்கள். (யோவா. 4:9) பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையில் நிறைய கருத்துவேறுபாடுகள் இருந்தன. (அப். 23:6-9) திருச்சட்டத்தைப் படித்த யூதர்கள் அப்படிப் படிக்காத யூதர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைத்தார்கள். (யோவா. 7:49) ரோமர்களையும் வரி வசூலிப்பவர்களையும் நிறைய பேர் வெறுத்தார்கள். (மத். 9:11) ஆனால், இயேசு இவர்கள் யார் பக்கமும் சாயவில்லை. யெகோவாவைப் பற்றிய உண்மைகளையே எப்போதும் மக்களிடம் சொன்னார். அதோடு, இஸ்ரவேல் மக்கள்தான் கடவுளுடைய சொந்த மக்கள் என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தாலும், தம் சீடர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று இயேசு அவர்களுக்கு ஒருபோதும் சொல்லித்தரவில்லை. (யோவா. 4:22) அதற்குப் பதிலாக, எல்லா மக்களையும் நேசிக்க வேண்டும் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்.—லூக். 10:27.
6 ஒரு பிரிவினரைவிட இன்னொரு பிரிவினர் உயர்ந்தவர்கள் என்று இயேசு ஏன் நினைக்கவில்லை? ஏனென்றால், யெகோவா முதன்முதலில் ஆணையும் பெண்ணையும் படைத்தபோது, இந்த முழு பூமியும் வித்தியாசமான மனித இனங்களால் நிரம்ப வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் படைத்தார். (ஆதி. 1:27, 28) அதனால் ஒரு இனம், நாடு அல்லது மொழி மற்றொன்றைவிட உயர்ந்தது என்று யெகோவாவும் இயேசுவும் நினைப்பதில்லை. (அப். 10:34, 35; வெளி. 7:9, 13, 14) நாமும் அவர்களுடைய நல்ல முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்.—மத். 5:43-48.
7, 8. (அ) நாம் யாரை ஆதரிக்கிறோம், ஏன்? (ஆ) மனிதர்களுடைய பிரச்சினைகளுக்கு எப்படி முடிவு வரும்?
7 நாம் ஏன் எந்த மனித அரசாங்கத்தையோ ஆட்சியாளரையோ ஆதரிப்பது இல்லை? ஏனென்றால், நாம் நம் ஆட்சியாளராகிய யெகோவாவைத்தான் ஆதரிக்கிறோம். யெகோவா ஒரு நல்ல ஆட்சியாளர் இல்லை என்று சாத்தான் ஏதேன் தோட்டத்தில் சொன்னான். யெகோவா செயல்படும் விதத்தைவிட அவன் செயல்படும் விதம்தான் சிறந்தது என்று மக்களை நம்ப வைக்க அவன் முயற்சி செய்தான். நாம் யார் பக்கம் இருக்கிறோம் என்று தீர்மானிக்கும் உரிமையை யெகோவா நம்மிடமே விட்டுவிட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: ‘உங்கள் வழியைவிட யெகோவாவுடைய வழிதான் சிறந்தது என்று நம்பி அவருக்குக் கீழ்ப்படிகிறீர்களா? கடவுளுடைய அரசாங்கம்தான் எல்லா பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? அல்லது கடவுள் இல்லாமலேயே மனிதர்கள் தங்களை சிறந்த விதத்தில் ஆட்சி செய்துகொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?’—ஆதி. 3:4, 5.
8 உதாரணத்துக்கு, ஏதாவது ஒரு அரசியல் கட்சியைப் பற்றியோ வேறு ஒரு அமைப்பைப் பற்றியோ உங்கள் கருத்தைக் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஒருவேளை, சில அமைப்புகள் உண்மையிலேயே மக்களுக்கு உதவ நினைக்கலாம். இருந்தாலும், யெகோவாவுடைய அரசாங்கம் மட்டுமே மனிதர்களுடைய பிரச்சினைகளையும் இன்று நடக்கும் அநியாயங்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் என்பது நமக்குத் தெரியும். அதோடு, சபையில், நாம் ஒவ்வொருவரும் நம் இஷ்டப்படி செய்யாமல் யெகோவா சொல்கிறபடியே செய்கிறோம். அதனால்தான், சபை ஒற்றுமையாக இருக்கிறது.
9. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் என்ன பிரச்சினை இருந்தது, அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?
9 முதல் நூற்றாண்டில் கொரிந்து சபையில் இருந்த சிலர், “நான் பவுலைச் சேர்ந்தவன்” என்றும், “நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்” என்றும், “நான் கேபாவைச் சேர்ந்தவன்” என்றும், “நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்” என்றும் சொல்லிக்கொண்டார்கள். சகோதரர்கள் இப்படி வாக்குவாதம் செய்துகொண்டிருந்தது பவுலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், அது கிறிஸ்தவ சபையின் சமாதானத்தையே குலைத்துவிடும் அளவுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. அதனால், அங்கிருந்த சகோதர சகோதரிகளிடம் பவுல் இப்படி சொன்னார்: ‘கிறிஸ்து உங்களிடையே பிரிந்திருப்பது போல்’ தெரிகிறது. அதோடு, “சகோதரர்களே, நீங்கள் எல்லாரும் முரண்பாடில்லாமல் பேச வேண்டுமென்றும், உங்களுக்குள் பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதுடனும் ஒரே யோசனையுடனும் முழுமையாக ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்றும் நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர்களிடம் சொன்னார். அதனால் இன்று, கிறிஸ்தவ சபையில் எந்த விதமான பிரிவினையும் இல்லாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.—1 கொ. 1:10-13; ரோமர் 16:17, 18-ஐ வாசியுங்கள்.
10. பவுல் கிறிஸ்தவர்களிடம் என்ன சொன்னார், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
10 பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், ‘பூமிக்குரிய காரியங்கள்மீது’ கவனம் செலுத்தக் கூடாது என்று பவுல் சொன்னார். ஏனென்றால், அவர்களுடைய குடியுரிமை பரலோகத்தில் இருந்தது. (பிலி. 3:17-20)a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் தூதர்களாக இருக்கிறார்கள். பொதுவாக, ஒரு நாட்டின் தூதர் இன்னொரு நாட்டில் இருக்கும்போது அந்த நாட்டின் அரசியலிலோ அங்கு நடக்கும் பிரச்சினைகளிலோ தலையிட மாட்டார். அப்படியென்றால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், இந்த உலகத்தின் அரசியலிலோ பிரச்சினைகளிலோ தலையிடுவது சரியாக இருக்காது. (2 கொ. 5:20) பூமியில் முடிவில்லாமல் வாழும் நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களும் கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு இருக்கிறார்கள். இந்த உலகத்தின் சண்டை சச்சரவுகளில் அவர்கள் ஈடுபடுவதும் இல்லை, யாருக்கும் ஆதரவு காட்டுவதும் இல்லை.
எப்போதும் உண்மையோடு இருங்கள்
11, 12. (அ) கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க நாம் எதை தவிர்க்க வேண்டும்? (ஆ) ஒரு சகோதரிக்கு என்ன தப்பான எண்ணம் இருந்தது, அதை மாற்றிக்கொள்ள அவர் என்ன செய்தார்?
11 ஒரே பின்னணியையும் கலாச்சாரத்தையும் மொழியையும் சேர்ந்த மக்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது ‘இவங்கெல்லாம் நம்ம ஆளுங்க’ என்ற உணர்வு பெரும்பாலும் ஏற்படுகிறது. நிறைய சமயங்களில், தங்கள் சொந்த நாட்டை அல்லது ஊரைப் பற்றி அவர்கள் ரொம்ப பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், இந்த மாதிரியான எண்ணங்கள் நமக்குள் துளிர்விட அனுமதிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நாம் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வந்துவிடாதபடி நம் மனசாட்சியைப் பயிற்றுவிக்க வேண்டும். நாம் இதை எப்படி செய்யலாம்?
12 மிர்யிட்டாb (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். இவர் யுகோஸ்லாவியா என்று அழைக்கப்பட்ட நாட்டில் பிறந்தவர். இவருடைய ஊரில் இருந்த ஆட்கள், செர்பிய நாட்டு மக்களை வெறுத்தார்கள். ஆனால், யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு ஒரு இனத்தைவிட இன்னொரு இனத்தை அவர் தாழ்வாக நினைப்பதில்லை என்று மிர்யிட்டா புரிந்துகொண்டார். அதோடு, மக்கள் ஒருவரையொருவர் வெறுக்க வேண்டும் என்பது சாத்தானுடைய ஆசை என்றும் புரிந்துகொண்டார். இருந்தாலும், அந்தத் தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்வது அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் வாழ்ந்த இடத்தில் ஒரு இனப்போர் வெடித்தபோது செர்பியர்களைப் பற்றிய தவறான எண்ணம் அவருக்கு மறுபடியும் வந்தது. செர்பியர்களிடம் நற்செய்தியைப் பற்றி பேசக்கூட அவருக்குப் பிடிக்கவில்லை. இது தவறு என்பதால் இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள தனக்கு உதவும்படி யெகோவாவிடம் கெஞ்சினார். பயனியர் ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு உதவும்படியும் வேண்டினார். “பிரசங்க வேலையில முழு கவனம் செலுத்துறதுதான் என்னோட பிரச்சினைக்கு ரொம்ப நல்ல தீர்வுனு புரிஞ்சுக்கிட்டேன். ஊழியத்துல, யெகோவாவை போலவே நடந்துக்குறதுக்கு முயற்சி செய்றேன். இப்படி செய்றதுனால, அவங்கள பத்தின தப்பான எண்ணங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிடுச்சு” என்று மிர்யிட்டா சொல்கிறார்.
13. (அ) தொய்லாவுக்கு எது கஷ்டமாக இருந்தது, அதற்கு அவர் என்ன செய்தார்? (ஆ) தொய்லாவிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
13 மெக்சிகோவை சேர்ந்த தொய்லா என்ற சகோதரி ஐரோப்பாவுக்கு மாறிப் போனார். அவருடைய சபையில், லத்தீன் அமெரிக்காவின் வேறொரு பகுதியை சேர்ந்த சகோதர சகோதரிகள் இருந்தார்கள். அவர்களில் சிலர், தொய்லாவின் ஊரைப் பற்றி... அவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பற்றி... அங்கிருக்கும் இசையைப் பற்றி... எல்லாம் கேலி செய்தார்கள். அது அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அவர்கள்மீது கோபப்படாமல் இருக்க யெகோவாவிடம் ஜெபம் செய்தார். நாம் தொய்லாவின் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? நம் சகோதர சகோதரிகள் சிலருக்கு தங்கள் சொந்த ஊரைப் பற்றி யாராவது தரக்குறைவாகப் பேசினால் கோபம் வரலாம்; அதைக் கட்டுப்படுத்த அவர்கள் இன்னும் போராடிக்கொண்டு இருக்கலாம். அதனால், எந்த சூழ்நிலையிலும் நம் பேச்சோ செயலோ ஒரு பகுதி மக்களைவிட இன்னொரு பகுதி மக்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. சபையாக இருந்தாலும் சரி, வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி, பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் நாம் நடந்துகொள்ள கூடாது.—ரோ. 14:19; 2 கொ. 6:3.
14. மக்களைப் பற்றி யெகோவா நினைப்பது போல் நாமும் நினைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
14 உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் ஒரே குடும்பமாக, ஒற்றுமையாக இருக்கிறோம். அதனால், ஒரு நாடோ ஊரோ மற்றொன்றைவிட உயர்ந்தது என்று நினைக்கக் கூடாது. ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்களோ உங்கள் ஊரில் இருக்கிறவர்களோ உங்கள் சொந்த ஊர் அல்லது நாடுதான் சிறந்தது என்று உங்களை நினைக்க வைத்திருக்கலாம். அதனால், சில சமயங்களில் மற்ற நாட்டு மக்களை... கலாச்சாரத்தை... மொழியை... இனத்தை... பற்றி எல்லாம் நீங்கள் இன்னமும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்தத் தவறான எண்ணத்தை நாம் எப்படி மாற்றிக்கொள்ளலாம்? தங்கள் சொந்த நாட்டைப் பற்றி பெருமையாக நினைப்பவர்களை... மற்றவர்களைவிட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்களை... பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று ஆழமாக யோசியுங்கள். உங்கள் தனிப்பட்ட படிப்பிலோ குடும்ப வழிபாட்டிலோ இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யுங்கள். இந்த விஷயத்தில், யெகோவா யோசிப்பது போல் யோசிப்பதற்கு அவரிடம் ஜெபம் செய்யுங்கள்.—ரோமர் 12:2-ஐ வாசியுங்கள்.
15, 16. (அ) கடவுளுக்கு நாம் உண்மையாக இருப்பதால் மக்கள் என்ன செய்வார்கள் என்று இயேசு சொன்னார்? (ஆ) கிறிஸ்தவ நடுநிலையைக் காத்துக்கொள்ள பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்கு உதவலாம்?
15 நாம் சுத்தமான மனசாட்சியோடு யெகோவாவுக்கு சேவை செய்ய விரும்புகிறோம். சில சமயம், நாம் மற்றவர்களிடமிருந்து, அதாவது, வேலை செய்பவர்கள், சக மாணவர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இருந்து வித்தியாசமானவர்களாக தெரிவோம். (1 பே. 2:19) நாம் மற்றவர்களைப் போல் இல்லாததால் அவர்கள் நம்மை வெறுப்பார்கள் என்று இயேசு எச்சரித்திருந்தார். நம்மை எதிர்க்கும் நிறைய பேருக்கு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனால்தான், நாம் ஏன் கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு இருக்கிறோம் என்ற விஷயத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
16 மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி, நாம் யெகோவாவுக்கு மட்டுமே உண்மையோடு இருக்க வேண்டும். அதற்கு, அவருக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். (தானி. 3:16-18) மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்; முக்கியமாக, இளைஞர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் பள்ளியில் தைரியமாக இருப்பதற்கு உதவி செய்யுங்கள். ஒருவேளை, கொடி வணக்கம் செய்யாமல் இருப்பதற்கும், தேசப்பற்று சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கும் உங்கள் பிள்ளைகள் பயப்படலாம். அதனால் உங்கள் குடும்ப வழிபாட்டில், யெகோவா இந்த விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று உங்கள் பிள்ளைகளோடு கலந்துபேசுங்கள். நம் நம்பிக்கைகளைப் பற்றி மரியாதையாகவும் தெளிவாகவும் மற்றவர்களிடம் பேச அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். (ரோ. 1:16) தேவைப்பட்டால், உங்கள் பிள்ளைகளுடைய ஆசிரியர்களிடம் நம் நம்பிக்கைளைப் பற்றி நீங்களே பேசுங்கள். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
நன்றியோடு இருங்கள்
17. நாம் எப்படி யோசிக்கக் கூடாது, ஏன்?
17 பொதுவாக நம் நாடு, கலாச்சாரம், மொழி, உணவு எல்லாம் நமக்கு பிடிக்கும்! இருந்தாலும், ‘என் நாடு, கலாச்சாரம், மொழி, உணவுதான் மத்த எல்லாத்தையும்விட சிறந்தது’ என்று நினைப்பது தவறு. நாம் சந்தோஷமாக இருப்பதற்காகவே யெகோவா எல்லாவற்றையும் விதவிதமாக படைத்திருக்கிறார். (சங். 104:24; வெளி. 4:11) அதனால், ஒன்றைவிட இன்னொன்று சிறந்தது என்று நாம் சொல்வது சரியாக இருக்குமா?
18. யெகோவா யோசிக்கிற விதமாக நாமும் யோசிப்பதால் என்ன நன்மை?
18 எல்லா விதமான மக்களும் தம்மைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், தம்மை வணங்க வேண்டும், முடிவில்லாமல் வாழ வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். (யோவா. 3:16; 1 தீ. 2:3, 4) மற்றவர்கள் கொடுக்கும் ஆலோசனை நம் ஆலோசனையைவிட வித்தியாசமாக இருக்கலாம். இருந்தாலும், அது யெகோவாவுடைய கட்டளைகளை மீறாதவரை அவர்கள் சொல்வதை நாம் காதுகொடுத்து கேட்கலாம். அப்படி செய்யும்போது, நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதோடு, நம் சகோதரர்களோடு ஒற்றுமையாகவும் இருப்போம். இதுவரை பார்த்தபடி, நாம் யெகோவாவுக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் உண்மையோடு இருப்பதால் இந்த உலகத்தில் நடக்கும் பிரச்சினைகளில் நாம் தலையிடுவதும் இல்லை, யார் பக்கமும் சாய்ந்துவிடுவதும் இல்லை. சாத்தானுடைய உலகத்தில் இருக்கும் போட்டி, தற்பெருமை போன்ற எண்ணங்களை நாம் வெறுக்கிறோம். சமாதானமாகவும் மனத்தாழ்மையாகவும் இருக்க யெகோவா நமக்கு சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அதனால், நாம் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” என்று சங்கீதக்காரன் சொன்னது போல் நாமும் சொல்வோம்.—சங். 133:1.
a பிலிப்பி சபையில் இருந்த சிலரிடம் ஒரு வகையான ரோம குடியுரிமை இருந்திருக்கலாம். அதனால், ரோம குடிமகன்களாக இல்லாத தங்கள் சகோதரர்களைவிட இவர்களுக்கு அதிக உரிமை இருந்தது.
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.