மெய் கிறிஸ்தவம் தழைத்தோங்குகிறது
இயேசு கிறிஸ்துவின் ஊழியம் முதல் நூற்றாண்டில் உலக அரங்கில் திடீரென பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள் எல்லாரும் மலைத்துப்போகும் அளவுக்கு அவருடைய செய்தி புத்துணர்ச்சியூட்டுவதாகவும் அறிவொளியூட்டுவதாகவும் உந்துவிப்பதாகவும் இருந்தது. அவருடைய வார்த்தைகள் அநேகருடைய இதயத்தை ஆழமாக தொட்டன.—மத்தேயு 7:28, 29.
அந்நாளில் மக்களை ஒடுக்கிய மத மற்றும் அரசியல் அமைப்புகளை இயேசு துணிந்து ஒதுக்கித் தள்ளிவிட்டு, சாதாரண மக்கள் தம்மிடம் நெருங்கிவர வழிசெய்தார். (மத்தேயு 11:25-30) பூமியில் பொல்லாத ஆவிகளின் நெறிகெட்ட செல்வாக்கு பரவியிருப்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார், அதோடு கடவுளால் அருளப்பட்ட வல்லமையைக் கொண்டு அவற்றை அடக்கினார். (மத்தேயு 4:2-11, 24; யோவான் 14:30) துன்பத்திற்கும் பாவத்திற்கும் இடையே உள்ள அடிப்படை தொடர்பை திறம்பட விளக்கிக் காட்டினார். மேலும், கடவுளுடைய ராஜ்யமே நிரந்தர பரிகாரம் என்பதையும் அன்புடன் சுட்டிக் காட்டினார். (மாற்கு 2:1-12; லூக்கா 11:2, 17-23) கடைசியில், தமது பிதாவின் உண்மையான ஆளுமையை வெகு காலமாக மறைத்திருந்த இருள் எனும் திரையை நீக்கி, அவருடன் நெருங்கிய உறவுக்குள் வர விரும்பிய அனைவருக்கும் அவருடைய பெயரை வெளிப்படுத்தினார்.—யோவான் 17:6, 26.
ஆகவே, தீவிர மத மற்றும் அரசியல் துன்புறுத்தலின் மத்தியிலும், இயேசுவின் சீஷர்கள் அவருடைய உயிர்த்துடிப்புமிக்க செய்தியை விரைவில் எங்கும் பரப்பியதில் ஆச்சரியமில்லை. சுமார் முப்பதே வருடங்களில், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சபைகள் நிறுவப்பட்டு செழித்தோங்கின. (கொலோசெயர் 1:23) இயேசு கற்பித்த எளிய சத்தியம் ரோம சாம்ராஜ்யம் எங்குமிருந்த தாழ்மையும் நேர்மையும் கொண்டவர்களின் இதயத்திற்கு அறிவொளியூட்டியது.—எபேசியர் 1:17, 18.
ஆனால், பல்வேறு பொருளாதார, கலாச்சார, மொழி மற்றும் மத பின்னணியைச் சேர்ந்த இந்தப் புதிய சீஷர்கள் அனைவரும், அப்போஸ்தலன் பவுல் அழைத்த ‘ஒரே விசுவாசத்திற்குள்’ எப்படி ஐக்கியத்துடன் ஒன்றுசேருவார்கள்? (எபேசியர் 4:5) பிரிவினையின்றி ‘ஒரே காரியத்தைப் பேசும்படி’ எது அவர்களுக்கு உதவும்? (1 கொரிந்தியர் 1:10) இன்று கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்கிறவர்கள் மத்தியில் பயங்கர வேற்றுமை இருப்பதைப் பார்க்கையில், இவ்விஷயங்களைப் பற்றி இயேசுதாமே என்ன கற்பித்தார் என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
கிறிஸ்தவ ஒற்றுமைக்கு அடிப்படை
பொந்தியு பிலாத்துவுக்குமுன் விசாரணை செய்யப்பட்டபோது, கிறிஸ்தவ ஒற்றுமைக்குரிய அடிப்படை அம்சத்தை இயேசு குறிப்பிட்டார். அவர் கூறினார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.” (யோவான் 18:37) ஆகவே, கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட முழு பைபிளையும் இயேசுவின் போதனைகளையும் ஏற்றுக்கொள்வது கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களை ஐக்கியப்படுத்துகிற வலிமைமிக்க செல்வாக்காக விளங்குகிறது.—1 கொரிந்தியர் 4:6; 2 தீமோத்தேயு 3:16, 17.
அதே சமயத்தில், இயேசுவின் சீஷர்களுக்கு நியாயமான கேள்விகளும், சில சமயங்களில் கருத்து வேறுபாடுகளும் எழும்பும். அப்பொழுது எது அவர்களுக்கு உதவும்? இயேசு இவ்வாறு விளக்கினார்: “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.” (யோவான் 16:12, 13) இவ்வாறு, சத்தியத்தை படிப்படியாக கடவுள் வெளிப்படுத்துகையில், அதைப் புரிந்துகொள்ள அவருடைய பரிசுத்த ஆவி உண்மையான சீஷர்களுக்கு உதவும். அதோடு, அந்த ஆவி அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்ற ஆவியின் கனியை பிறப்பிக்கும், அது அவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும்.—அப்போஸ்தலர் 15:29; கலாத்தியர் 5:22, 23.
இயேசு தமது சீஷர்கள் மத்தியில் எந்தவொரு கருத்து வேறுபாட்டையும் பிரிவினையையும் அனுமதிக்கவில்லை; தாங்கள் சந்திக்கவிருந்த ஆட்களுடைய கலாச்சார அல்லது மத பாரம்பரியங்களுக்கு இசைவாக தெய்வீக சத்தியங்களை மாற்றிக்கொள்வதற்கும் அவர் சீஷர்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை. மாறாக, அவர்களுடன் இருந்த அந்தக் கடைசி இரவில், அவர் இவ்வாறு ஊக்கமாய் ஜெபித்தார்: “நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்ளுகிறேன்.” (யோவான் 17:20, 21) அப்படியானால், ஆவியிலும் சத்தியத்திலும் உண்மையான ஒற்றுமை நிலவுவதே ஆரம்பகாலம் முதல் நம்முடைய நாள் வரை கிறிஸ்துவின் சீஷர்களை தனிப்படுத்திக் காட்டும் அடையாளமாக இருக்கவிருந்தது. (யோவான் 4:23, 24) என்றாலும், இன்று சர்ச்சுகள் ஐக்கியப்பட்டல்ல, பிளவுபட்டுள்ளன. ஏன்?
சர்ச்சுகள் பிளவுபட்டிருப்பதற்கு காரணம்
இன்று கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்கிறவர்கள் மத்தியில் வித்தியாச வித்தியாசமான நம்பிக்கைகளும் பழக்கங்களும் காணப்படுவதற்கு என்ன காரணம்? ஒளிவுமறைவில்லாமல் சொன்னால், அவர்கள் இயேசுவின் போதனைகளைப் பின்பற்றாததே காரணம். எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “கடந்த காலத்தைப் போலவே இன்றும் புதிய கிறிஸ்தவர்கள் பைபிளில் தங்களுடைய தேவைகளுக்கு பொருந்துகிற விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு, தங்களுடைய சொந்த மதப் பாரம்பரியத்திற்கு ஒத்துப்போகாதவற்றை எல்லாம் புறக்கணித்துவிடுகிறார்கள்.” இப்படி சம்பவிக்கும் என்பதைத்தான் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் துல்லியமாக முன்னறிவித்தார்கள்.
உதாரணமாக, தனது சக கண்காணியான தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் ஆவியின் ஏவுதலால் இவ்வாறு எழுதினார்: “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங் காலம் வரும்.” கிறிஸ்தவர்கள் எல்லாருமே மோசம்போய் விடுவார்களா? இல்லை. பவுல் தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.” (2 தீமோத்தேயு 4:3-5; லூக்கா 21:8; அப்போஸ்தலர் 20:29, 30; 2 பேதுரு 2:1-3) தீமோத்தேயுவும் உண்மையுள்ள பிற கிறிஸ்தவர்களும் ஏவுதலால் எழுதப்பட்ட அந்த அறிவுரைக்கு இசைவாக வாழ்ந்தார்கள்.
மெய் கிறிஸ்தவர்கள் இன்றும் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்
தீமோத்தேயுவைப் போல, மனித நியாயவிவாதங்களைப் புறக்கணிப்பதன் மூலமும் பைபிளின் அடிப்படையிலான கோட்பாட்டுகளை மட்டுமே ஏற்றுக்கொள்வதன் மூலமும் இன்று மெய் கிறிஸ்தவர்கள் மனத்தெளிவுடன் இருக்கிறார்கள். (கொலோசெயர் 2:8; 1 யோவான் 4:1) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பின்பற்றி, இயேசுவின் முக்கிய செய்தியாகிய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை 230-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதன் மூலம் யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார்கள். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும்சரி, நான்கு முக்கிய வழிகளில் இயேசுவை ஒற்றுமையுடன் பின்பற்றி மெய் கிறிஸ்தவத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்; அந்த வழிகளை இப்பொழுது சிந்திக்கலாம்.
அவர்களுடைய நம்பிக்கைகள் கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாக கொண்டவை. (யோவான் 17:17) யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியார் இவ்வாறு எழுதினார்: “அவர்களிடமிருந்து [யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து] ஒரு காரியத்தை நாம் கற்றுக்கொள்ளலாம், அதாவது கடவுளுடைய வார்த்தைக்கு செவிசாய்க்க மனமுள்ளவர்களாய் இருப்பதையும் அதைப் பற்றி சாட்சி கொடுப்பதற்கு அவர்கள் தைரியமுள்ளவர்களாய் இருப்பதையும் நாம் கற்றுக்கொள்ளலாம்.”
உலகப் பிரச்சினைகளுக்குப் பரிகாரமாக கடவுளுடைய ராஜ்யத்தையே எதிர்நோக்கியிருக்கிறார்கள். (லூக்கா 8:1) கொலம்பியாவிலுள்ள பாரன்குவில்லாவைச் சேர்ந்த ஒரு யெகோவாவின் சாட்சி அரசியல் இயக்கம் ஒன்றை தீவிரமாக ஆதரித்த ஆன்டோனியோ என்பவரிடம் பேசினார். அந்த சாட்சி ஆன்டோனியோவின் இயக்கத்தை ஆதரிக்கவுமில்லை, வேறெந்த அரசியல் சித்தாந்தத்தை பரிந்துரைக்கவுமில்லை. மாறாக, ஆன்டோனியோவும் அவருடைய சகோதரிகளும் பைபிளைப் படிக்க இலவசமாக உதவினார். விரைவில், கொலம்பியாவிலுள்ள ஏழைகளுக்கும் உலகிலுள்ள மற்றெல்லா ஏழைகளுக்கும் கடவுளுடைய ராஜ்யமே ஒரே நம்பிக்கை என்பதை ஆன்டோனியோ உணர்ந்துகொண்டார்.
அவர்கள் கடவுளுடைய பெயரை கனப்படுத்துகிறார்கள். (மத்தேயு 6:9) மாரியா என்ற பக்திமிக்க கத்தோலிக்க பெண்மணியை முதன்முதலில் யெகோவாவின் சாட்சிகள் சந்தித்தபோது, பைபிளிலிருந்து கடவுளுடைய பெயரை அவரிடம் காட்டினார்கள். மாரியாவின் பிரதிபலிப்பு எப்படியிருந்தது? “பைபிளில் முதன்முதலாக கடவுளுடைய பெயரைப் பார்த்தபோது, நான் கண்ணீர்விட்டு அழுதேன். கடவுளுடைய தனிப்பட்ட பெயரை தெரிந்துகொள்ள முடியும், அதைப் பயன்படுத்த முடியும் என்ற எண்ணமே என் இதயத்தை ஆழமாக தொட்டது” என்கிறார் மாரியா. அவர் தொடர்ந்து பைபிளைப் படித்தார்; தனது வாழ்க்கையில் முதன்முறையாக, யெகோவா எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொண்டார், அதோடு அவருடன் நீடித்த உறவை வளர்த்துக்கொண்டார்.
அவர்கள் அன்பினால் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். (யோவான் 13:34, 35) கனடாவில் வெளிவரும் லேடிஸ்மித்-ஸமேனஸ் க்ரானிக்கல் என்ற செய்தித்தாளின் தலையங்கம் இவ்வாறு கூறியது: “உங்களுடைய மத நம்பிக்கை எதுவாக இருந்தாலும்சரி, அல்லது எந்தவொரு மத நம்பிக்கையும் உங்களுக்கு இல்லாவிட்டாலும்சரி, கடந்த ஒன்றரை வாரம் இராப்பகலாக உழைத்து, கஸிடியில் 2,300 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு மாநாட்டு மன்றத்தை கட்டி முடித்த 4,500 யெகோவாவின் சாட்சிகளை நீங்கள் பாராட்டியே தீரவேண்டும் . . . அவர்கள் வாக்குவாதம் செய்யாமல், கருத்து வேறுபாடில்லாமல், தனிப்பட்ட புகழைத் தேடாமல் இந்த வேலையை சந்தோஷமாய் செய்தது மெய் கிறிஸ்தவத்திற்கு ஓர் அடையாளமாக இருக்கிறது.”
ஆகவே, அத்தாட்சியை ஆராய்ந்து பாருங்கள். கிறிஸ்தவமண்டல இறையியலாளர்களும் மிஷனரிகளும் சர்ச் அங்கத்தினர்களும் தங்களுடைய சர்ச்சுகளில் புயல் போல் உருவாகப்போகும் சர்ச்சையுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கையில், மெய் கிறிஸ்தவம் உலகெங்கிலும் தழைத்தோங்குகிறது. சொல்லப்போனால், மெய் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட ஊழியத்தை, அதாவது கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கித்துக் கற்பிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். (மத்தேயு 24:14; 28:19, 20) இவ்வுலகில் இன்று செய்யப்பட்டுவரும் அருவருப்புகளைக் கண்டு ‘பெருமூச்சுவிட்டழுது’ கொண்டும், கிறிஸ்தவமண்டல மதங்கள் மத்தியில் நிலவும் பிளவைக் கண்டு அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும் இருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், ஒரே மெய் தேவனாகிய யெகோவாவின் ஐக்கியப்பட்ட கிறிஸ்தவ வணக்கத்தில் யெகோவாவின் சாட்சிகளுடன் சேர்ந்துகொள்ளும்படி உங்களை அழைக்கிறோம்.—எசேக்கியேல் 9:4; ஏசாயா 2:2-4.