பைபிளின் கருத்து
அரசியல் உத்தி உலக சமாதானத்துக்கு வழிவகுக்குமா?
போர்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வருவதைக் காண ஆசைப்படுகிறீர்களா? தேசிய மற்றும் சர்வதேச போர்களுக்கு கண்டிப்பாக அரசியல் ரீதியில் ஏதாவதொரு தீர்வு இருக்கும். உலக தலைவர்கள் ஒன்றுபட்டு உழைத்தாலே போதும், போரை ஒழித்துவிடலாம் என பலர் நினைக்கிறார்கள். என்றாலும், அரசியல் உத்தியின் விளைவுகள் உங்களுக்கு ஒருவேளை ஏமாற்றத்தை அளிக்கலாம். நூற்றாண்டுகளாகவே, அரசியல் நிபுணர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார்கள், தீர்மானங்களை எடுத்திருக்கிறார்கள், உச்சி மாநாடுகளை நடத்தியிருக்கிறார்கள், ஆனால் எந்தவொரு பிரச்சினைக்கும் நிரந்தர பரிகாரம் கிடைக்கவில்லை.
அரசியல் உத்தியையும் சமாதானத்தையும் பற்றி பைபிள் நிறைய விஷயங்களை சொல்கிறது. பின்வரும் கேள்விகளுக்கு அது பதில்களை கொடுக்கிறது: அரசியல் உத்தியின் மூலம் இன்று சமாதானத்தை உருவாக்க முடியாமல் தடுத்துவரும் அம்சங்கள் யாவை? அரசியல் உத்தியில் கிறிஸ்தவர்கள் பங்குகொள்ள வேண்டுமா? மெய்யான சமாதானத்தை எப்படித்தான் அடைய முடியும்?
சமாதானத்தை தடுப்பது எது?
நேருக்கு நேர் பேசுவது சமாதானத்துக்கு வழிவகுக்கும் என்பதற்கு பல பைபிள் உதாரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தன்னுடைய குடும்பத்தை பழிதீர்க்காமல் இருப்பதற்காக தாவீதையும் அவருடைய படைவீரர்களையும் அபிகாயில் புத்திசாலித்தனத்துடன் இணங்க வைத்தாள். (1 சாமுவேல் 25:18-35) ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானம் பண்ணிக்கொள்வதைத் தவிர வேறு வழியின்றி தவித்த ஒரு ராஜாவைப் பற்றிய உவமையை இயேசு சொன்னார். (லூக்கா 14:31, 32) ஆம், சில வகை அரசியல் உத்திகள் சண்டைகளுக்கு முடிவு கட்டலாம் என்பதை பைபிள் ஒப்புக்கொள்கிறது. அப்படியானால், சமாதான பேச்சுவார்த்தைகள் ஏன் பெரும்பாலும் தோல்வியடைகின்றன?
நாம் வாழும் காலம் பிரச்சினைகள் நிறைந்த காலமாக இருக்கும் என்பதை பைபிள் துல்லியமாகவே முன்னுரைத்துள்ளது. பிசாசாகிய சாத்தானுடைய செல்வாக்கின் காரணமாக, மனிதர் “எந்த ஒப்பந்தத்துக்கும் இணங்காதவர்களாக” அதே சமயத்தில் “கொடுமையுள்ளவர்களாயும், நன்மையை விரும்பாதவர்களாயும், துரோகிகளாயும், அடங்காதவர்களாயும், தற்பெருமை கொள்பவர்களாயும்” இருப்பார்கள். (2 தீமோத்தேயு 3:3, 4, NW; வெளிப்படுத்துதல் 12:12) அதுமட்டுமல்ல, ‘யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும்’ இந்த பொல்லாத உலகின் முடிவுக்கு அடையாளமாக இருக்கும் என இயேசு முன்னுரைத்தார். (மாற்கு 13:7, 8) இவை உலகெங்கும் சகஜமாக இருப்பதை யார்தான் மறுக்க முடியும்? நிலைமை இப்படி இருப்பதால், நாடுகள் ஒன்றுக்கொன்று சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக முயலுவது ஏன் பலனளிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
இந்த உண்மையையும்கூட சிந்தித்துப் பாருங்கள்: போர்களைத் தடுக்க அரசியல் நிபுணர்கள் அரும்பாடு பட்டாலும் அவர்கள் ஒவ்வொருவருடைய முக்கிய குறிக்கோள் தங்களுடைய நாட்டின் அக்கறைகளை முன்னேற்றுவிக்க வேண்டும் என்பதே. அதுதான் அரசியல் உத்தியின் மிக முக்கியமான அம்சம். அப்படியானால் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட வேண்டுமா?
கிறிஸ்தவர்களும் அரசியல் உத்தியும்
“பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” என பைபிள் அறிவுரை கொடுக்கிறது. (சங்கீதம் 146:3) இது எதை அர்த்தப்படுத்துகிறதென்றால், இந்த உலக அரசியல் நிபுணர்களின் உள்ளெண்ணங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் நிரந்தர தீர்வுகாண அவர்களுக்கு திறனும் இல்லை, சக்தியும் இல்லை.
பொந்தியு பிலாத்துவுக்கு முன்பாக விசாரிக்கப்படுகையில் இயேசு இவ்வாறு சொன்னார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” (யோவான் 18:36) சமாதானத்துக்காக தீட்டப்படும் எல்லா திட்டங்களும், தேசிய பகை, அரசியல் சுயநலம் ஆகியவற்றால் கெடுத்துப் போடப்படுகின்றன. ஆகவேதான், மெய்க் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் போர்களிலும், அதன் அரசியல் உத்திகளிலும் ஈடுபடுவதில்லை.
அப்படியானால், கிறிஸ்தவர்களுக்கு உலக விவகாரங்களில் கொஞ்சமும் அக்கறையில்லை என்றா அர்த்தம்? மனிதர் படும் கஷ்டங்களைக் கண்டும் அவர்கள் உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்களா? இல்லை. அதற்கு மாறாக, கடவுளுடைய உண்மை வணக்கத்தார் ஒவ்வொருவருமே தங்களைச் சுற்றி நடந்துவரும் கெட்ட காரியங்களைக் கண்டு ‘பெருமூச்சுவிட்டு அழுவதாக’ பைபிள் விவரிக்கிறது. (எசேக்கியேல் 9:4) கடவுள் வாக்குறுதி அளித்தபடி சமாதானத்தை கொண்டு வருவதற்காக கிறிஸ்தவர்கள் அவரையே நம்பியிருக்கிறார்கள். போர் முடிவுக்கு வந்தால் சமாதானம் வரும் என்பதுதான் உங்கள் கருத்தா? கடவுளுடைய ராஜ்யம் அவ்வாறே போருக்கு முடிவைக் கொண்டுவரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. (சங்கீதம் 46:8, 9) அதுமட்டுமல்ல, பூமியின் குடிமக்கள் அனைவருக்கும் அது முழுமையான பாதுகாப்பையும், கவலையற்ற வாழ்க்கையையும் தரும். (மீகா 4:3, 4; வெளிப்படுத்துதல் 21:3, 4) அத்தகைய மேம்பட்ட சமாதானத்தை அரசியல் உத்தியாலோ “சமாதானத்தைக் கட்டிக்காக்கும்” அமைப்புகளின் முயற்சிகளாலோ ஒருபோதும் அடைய முடியாது.
சமாதானத்தை அடைய மனிதருடைய அரசியல் உத்தியில் நம்பிக்கை வைப்பது ஏமாற்றத்துக்கே வழி வகுக்கும் என பைபிள் தீர்க்கதரிசனமும் கடந்தகால அனுபவமும் காட்டுகின்றன. சமாதானத்தை அடைவதற்காக இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்து கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரிப்பவர்கள், மெய் சமாதானத்துக்கான தங்களுடைய ஆவல் நிறைவேறுவதைக் காண்பர். அதுமட்டுமா, அதை அவர்கள் நித்திய காலத்திற்கும் அனுபவித்து மகிழ்வர்.—சங்கீதம் 37:11, 29. (g04 01/08)
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
உலக அரசியல் நிபுணர்களின் உள்ளெண்ணங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் நிரந்தர தீர்வுகாண அவர்களுக்கு திறனும் இல்லை, சக்தியும் இல்லை
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
கீழே: Photo by Stephen Chernin/Getty Images