இயேசுவைப் போல் ஏழைகள்மீது அக்கறை காட்டுங்கள்
வறுமையும் ஒடுக்குதலும் தொன்றுதொட்டே இருந்துவருகின்றன. இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த சட்டங்கள் வறியோரைப் பாதுகாத்து, அவர்களுடைய துயரத்தைத் தணிக்கும் விதத்தில் இருந்தன; ஆனால் இஸ்ரவேலர் அந்தச் சட்டங்களையெல்லாம் அடிக்கடி அசட்டை செய்தனர். (ஆமோஸ் 2:6) ஏழைகளை அவர்கள் நடத்திய விதத்தை எசேக்கியேல் தீர்க்கதரிசி கண்டனம் செய்தார். “நாட்டின் பொதுமக்கள் பிறர் பொருளைப் பறிக்கின்றனர். ஏழைகளையும் எளியவர்களையும் துன்புறுத்தி, அன்னியரை இழிவாய் நடத்தி, நீதி வழங்க மறுக்கின்றனர்” என்று கூறினார்.—எசேக்கியேல் 22:29, பொது மொழிபெயர்ப்பு.
இயேசு பூமியில் வாழ்ந்தபோதும் அதே நிலைமைதான் இருந்தது. ஏழை எளியோர்மீது மதத் தலைவர்கள் துளிகூட அக்கறை காட்டவில்லை. ‘பண ஆசைமிக்கவர்கள்,’ ‘விதவைகளின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்பவர்கள்’ என்றெல்லாம் மதத் தலைவர்கள் வர்ணிக்கப்பட்டார்கள்; முதியோரையும் வறியோரையும் கவனித்துக் காப்பதற்குப் பதிலாகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காப்பதிலேயே அவர்கள் அதிக அக்கறை காட்டினார்கள். (லூக்கா 16:14, 20:47, பொ.மொ.; மத்தேயு 15:5, 6) நல்ல சமாரியனைப் பற்றிய உவமையில் இயேசு அதைப் பற்றி குறிப்பிட்டது ஆர்வத்திற்குரிய விஷயம்; அடிபட்டுக் கிடந்த ஒரு மனிதனுக்கு ஆசாரியனும் லேவியனும் உதவி செய்வதற்குப் பதிலாக கண்டும் காணாததுபோல் சென்றுவிட்டார்கள் என அந்த உவமையில் குறிப்பிட்டார்.—லூக்கா 10:30-37.
ஏழைகள்மீது இயேசு அக்கறை காட்டினார்
ஏழைகளின் கஷ்டங்களை இயேசு முழுமையாகப் புரிந்துகொண்டார் என்றும், அவர்களுக்காக மிகவும் அனுதாபப்பட்டார் என்றும் அவரைப் பற்றிய சுவிசேஷப் பதிவுகள் காட்டுகின்றன. இயேசு பரலோகத்தில் வாழ்ந்திருந்தபோதிலும், தம்மையே வெறுமையாக்கி மனித உருவெடுத்து வந்து, ‘நமக்காக ஏழையானார்.’ (2 கொரிந்தியர் 8:9, பொ.மொ.) திரளான ஜனங்களைப் பார்த்து, இயேசு ‘அவர்கள்மேல் மனதுருகினார்; ஏனென்றால் அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தார்கள்.’ (மத்தேயு 9:36) ஓர் ஏழை விதவை போட்ட சிறிய காணிக்கையே அவருடைய மனதைக் கவர்ந்தது, செல்வந்தர்கள் தங்களுடைய ‘மிகுதியான செல்வத்திலிருந்து’ கொடுத்த பெரும் நன்கொடைகள் அல்ல. அந்த விதவைக்குப் ‘பற்றாக்குறை இருந்தும் தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் அவள் போட்டது’ அவருடைய இதயத்தைத் தொட்டது.—லூக்கா 21:4, பொ.மொ.
இயேசு ஏழைகள்மீது இரக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்வதில் தனிப்பட்ட அக்கறையும் காட்டினார். அவரும் அவருடைய அப்போஸ்தலர்களும் பொதுநல நிதி வைத்திருந்தார்கள், அதிலிருந்து ஏழைகளான இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்கள். (மத்தேயு 26:6-9; யோவான் 12:5-8; 13:29) ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டிய கடமையை உணரும்படி தமக்கு சீஷர்களாயிருக்க விரும்புகிறவர்களை இயேசு ஊக்குவித்தார். செல்வந்தனாகிய இளம் அதிபதியிடம் அவர் இவ்வாறு கூறினார்: “உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா.” கடவுளையும் சக மனிதரையும்விட செல்வத்தையே அதிகம் நேசித்ததால், அவன் தனது உடமைகளை ஏழைகளுக்குக் கொடுக்க மனமில்லாதிருந்தான். எனவே, இயேசுவின் சீஷனாய் இருப்பதற்குரிய பண்புகள் அவனிடம் இருக்கவில்லை.—லூக்கா 18:22, 23.
கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் ஏழைகள்மீது அக்கறை காட்டுகிறார்கள்
இயேசுவின் மரணத்திற்குப்பின், அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் ஏழைகள்மீது தொடர்ந்து அக்கறை காட்டினார்கள். அப்போஸ்தலன் பவுல் சுமார் பொ.ச. 49-ல், யாக்கோபுவையும் பேதுருவையும் யோவானையும் சந்தித்தார்; நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றதைப் பற்றி கூறினார். ‘புறதேசத்தார்மீது’ பவுலும் பர்னபாவும் கவனம் செலுத்த வேண்டுமென்பதை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதேசமயத்தில், ‘ஏழைகளுக்கு உதவி செய்யவும் மறக்க வேண்டாமென’ யாக்கோபும் அவருடைய தோழர்களும் பவுல் மற்றும் பர்னபாவுக்கு அறிவுறுத்தினார்கள். அதன்படியே பவுல் ‘முழு ஆர்வத்தோடு’ ஏழைகளுக்கு உதவினார்.—கலாத்தியர் 2:7-10, பொ.மொ.
பேரரசரான கிலவுதியுவின் ஆட்சியில், ரோம மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவியது. அதனால், அந்தியோகியாவிலிருந்த கிறிஸ்தவர்கள் “ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பொருளுதவியை யூதேயாவில் வாழ்ந்த சகோதரர் சகோதரிகளுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அப்பொருளுதவியைப் பர்னபா, சவுல் ஆகியோர் வாயிலாக மூப்பர்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.”—அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 11:28-30, பொ.மொ.
ஏழை எளியோர்மீது, முக்கியமாக சக விசுவாசிகள்மீது, அக்கறை காட்ட வேண்டும் என்பதை இன்று உண்மை கிறிஸ்தவர்களும் புரிந்திருக்கிறார்கள். (கலாத்தியர் 6:10) அதனால், வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் தவிப்போர்மீது உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு, 1998-ல், கடுமையான வறட்சி காரணமாக பிரேசிலின் வடகிழக்கில் பெரும்பாலான பகுதிகள் பயங்கர பாதிப்புக்கு உள்ளாயின. நெல், மொச்சை, சோளம் ஆகிய பயிர்கள் வறட்சியால் நாசமாயின, இதனால் எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது—15 வருட காலத்தில் இதுவே படுமோசமான பஞ்சமாக இருந்தது. சில இடங்களில், குடிநீருக்கும்கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. நாட்டின் பிற பகுதிகளில் வாழ்ந்துவந்த யெகோவாவின் சாட்சிகள் உடனடியாக நிவாரண உதவிக் குழுக்களை ஏற்படுத்தினார்கள்; குறுகிய காலத்தில், டன்கணக்கில் உணவுப் பொருள்களைச் சேகரித்து, அவற்றை அனுப்புவதற்குத் தேவையான செலவுகளையும் கவனித்துக்கொண்டார்கள்.
நிவாரணப் பணிகளுக்குத் தேவையான பொருளுதவியைக் கொடுத்த சாட்சிகள் இவ்வாறு எழுதினார்கள்: “நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு உதவிசெய்ய முடிந்ததில் எங்களுக்கு அதிக சந்தோஷம். முக்கியமாக யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்ததற்காக சந்தோஷப்படுகிறோம். யாக்கோபு 2:15, 16-ஐ நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை.” அந்த பைபிள் வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன: “ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?”
சாவோ போலோ நகரத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சபையில், மனத்தாழ்மையும் பக்திவைராக்கியமுமிக்க ஏழைப் பெண்மணி ஒருவர் வாழ்க்கையை ஓட்டுவதற்குப் படாதபாடுபடுகிறார். கடினமாய் உழைக்கும் அந்தப் பெண்மணி இவ்வாறு கூறுகிறார்: “நான் ஏழ்மையில் இருந்தாலும், பைபிளின் செய்தி என்னுடைய வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது. மற்ற யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து எனக்கு உதவி கிடைக்காதிருந்தால், என் கதி என்னவாகியிருக்கும் என்று எனக்கே தெரியாது.” கொஞ்ச காலத்திற்கு முன்பு, இந்தக் கிறிஸ்தவ பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது, ஆனால் அவரிடம் பணமில்லை. உடனே அதற்கான பணத்தை அந்தச் சபையிலுள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் கொடுத்து உதவினார்கள். கஷ்ட காலத்தில் சக விசுவாசிகளுக்கு உலகெங்கிலும் வாழும் உண்மை கிறிஸ்தவர்கள் உதவி அளிக்கிறார்கள்.
இத்தகைய அனுபவங்கள் எவ்வளவுதான் இதயத்திற்கு இதமாக இருந்தாலும், இப்படிப்பட்ட உள்ளப்பூர்வமான உதவிகள் வறுமையை அடியோடு ஒழித்துவிடாது. வலிமைமிக்க அரசாங்கங்களும் பெரிய பெரிய சர்வதேச நிவாரண ஏஜென்ஸிகளும் ஓரளவு உதவி அளித்திருக்கிறபோதிலும், காலங்காலமாய் இருந்துவரும் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. ஆகவே, ‘வறுமைக்கும் மனிதகுலத்தை வாட்டுகிற மற்ற பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு என்ன?’ என்ற கேள்வி எழுகிறது.
பைபிள் போதனைகள் நிரந்தர உதவி அளிக்கின்றன
வறுமையில் வாடுவோருக்கும் பிற தேவைகளை உடையோருக்கும் இயேசு கிறிஸ்து நன்மை செய்து வந்தாரென சுவிசேஷப் பதிவுகள் கூறுகின்றன. (மத்தேயு 14:14-21) ஆனால், எந்த வேலைக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்? ஒரு சந்தர்ப்பத்தில், ஏழைகளுக்கு உதவ ஓரளவு நேரம் செலவழித்த பிறகு, இயேசு இவ்வாறு கூறினார்: ‘அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்.’ வியாதியஸ்தருக்காகவும் ஏழைகளுக்காகவும் செய்த சேவையையே அவர் தொடர்ந்து செய்யாமல், பிரசங்க வேலைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்தார்? “இதற்காகவே [அதாவது, பிரசங்கிப்பதற்காகவே] புறப்பட்டு வந்தேன்” என்று சொன்னார். (மாற்கு 1:38, 39; லூக்கா 4:43) கஷ்டப்படும் மக்களுக்கு நன்மை செய்வதை இயேசு முக்கியமானதாகக் கருதியபோதிலும், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்கும் வேலையையே அதிமுக்கியமானதாகக் கருதினார்.—மாற்கு 1:14.
இயேசுவின் “அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி” கிறிஸ்தவர்களை பைபிள் ஊக்குவிக்கிறது, ஆகையால் மற்றவர்களுக்கு உதவும் விஷயத்தில் எதற்கு முதலிடம் கொடுப்பது என்பதைக் குறித்து இன்று கிறிஸ்தவர்களுக்கு தெளிவான வழிநடத்துதல் இருக்கிறது. (1 பேதுரு 2:21) இயேசுவைப் போலவே, ஏழைகளுக்கு அவர்கள் உதவுகிறார்கள். அதேசமயத்தில், அவரைப் போலவே, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலைக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். (மத்தேயு 5:14-16; 24:14; 28:19, 20) ஏன்?
பைபிளின் நடைமுறையான அறிவுரையை மக்கள் புரிந்துகொண்டு அதைப் பின்பற்றும்போது ஏழ்மை உட்பட, அனுதின வாழ்க்கைப் பிரச்சினைகளை நன்றாகச் சமாளிக்க முடியுமென்பதை உலகெங்கிலும் நடந்து வரும் உண்மைச் சம்பவங்கள் காட்டுகின்றன. அதோடு, யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியே எதிர்கால நம்பிக்கையைத் தருகிறது. எந்தவொரு கஷ்டத்தின் மத்தியிலும் அந்த நம்பிக்கை வாழ்க்கைக்குத் தூண்டுகோலாக அமைகிறது. (1 தீமோத்தேயு 4:8) அந்த நம்பிக்கை என்ன?
நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு உறுதி அளிக்கிறது: “[கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) சிலசமயங்களில், “பூமி” என பைபிள் சொல்லும்போது, அது இந்தப் பூமியில் வாழும் மக்களையே குறிக்கிறது. (ஆதியாகமம் 11:1) ஆகவே, நீதி வாசமாயிருக்கும் “புதிய பூமி” என்பது கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்ற மக்களைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் ஆட்சியில், கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள் என்றும், பரதீஸ் பூமியில் திருப்தியான வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் கடவுளுடைய வார்த்தை மேலும் வாக்குறுதி அளிக்கிறது. (மாற்கு 10:30) இந்த அற்புதமான எதிர்காலம் அனைவருக்கும் உண்டு; ஆம், வறியோர்க்கும்தான். அந்தப் “புதிய பூமி”யில் வறுமை நிரந்தரமாய் ஒழிக்கப்பட்டிருக்கும்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
இயேசு எப்படி ‘ஏழைகளை விடுவிப்பார்’?—சங்கீதம் 72:12
நீதி: ‘எளியோருக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக; பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக!’ (சங்கீதம் [திருப்பாடல்கள்] 72:4, பொ.மொ.) பூமியின் மீது கிறிஸ்து ஆட்சி செய்கையில், அனைவருக்கும் நீதி கிடைக்கும். அநேக பணக்கார நாடுகளில் வறுமைக்குக் காரணமான ஊழல் இனி நடக்காது.
சமாதானம்: ‘அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.’ (சங்கீதம் 72:7) இன்று உலகில் இந்தளவு வறுமை தாண்டவமாடுவதற்கு சண்டை சச்சரவுகளும் போர்களுமே காரணம். கிறிஸ்து அவற்றையெல்லாம் ஒழித்து, பூமியில் பூரண சமாதானத்தை நிலைநாட்டுவார்.
இரக்கம்: ‘வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.’ (சங்கீதம் [திருப்பாடல்கள்] 72:12-14, பொ.மொ.) வறியோரும் எளியோரும் ஒடுக்கப்படுவோரும் ஒரே குடும்பமாக சந்தோஷமாய் வாழ்வார்கள்; ராஜாவான இயேசு கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.
செழுமை: ‘பூமியில் ஏராளமாய் தானியம் விளையும்.’ (சங்கீதம் 72:16, NW) கிறிஸ்துவின் ஆட்சியில், பொருளாதார செழுமை இருக்கும். இன்று பெரும்பாலும் வறுமைக்குக் காரணமான உணவுப் பற்றாக்குறையினாலும் பஞ்சத்தினாலும் மக்கள் இனி அவதிப்பட மாட்டார்கள்.
[பக்கம் 4, 5-ன் படம்]
ஏழைகள்மீது இயேசு தனிப்பட்ட அக்கறை காட்டினார்
[பக்கம் 6-ன் படம்]
பைபிளின் செய்தி மகத்தான நம்பிக்கை அளிக்கிறது