பல்வகைமை—உயிர் வாழ இன்றியமையாதது
அயர்லாந்தின் மக்கள்தொகை 1840-களில் 80 லட்சத்தைத் தாண்டியபோது அது ஐரோப்பாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக ஆனது. உருளைக் கிழங்கு அவர்களுடைய முக்கிய உணவாக இருந்தது. லம்பர்ஸ் என அழைக்கப்பட்ட ஒரே வகை உருளைக் கிழங்குதான் அதிகமாக பயிர் செய்யப்பட்டது.
1845-ல் விவசாயிகள் வழக்கம்போல லம்பர்ஸ் வகை உருளைக் கிழங்கை பயிரிட்டார்கள், ஆனால் ப்ளைட் என்ற ஒரு வகை நோய் தாக்கியதால் ஏறக்குறைய பயிர்கள் அனைத்தும் நாசமாயின. “பெரும்பாலான அயர்லாந்து மக்கள் கஷ்டமான அந்த ஆண்டை எப்படியோ தாக்குப்பிடித்தார்கள்” என்று பால் ரேபர்ன் என்பவர் கடைசி அறுவடை—அமெரிக்க வேளாண்மையை அழிவுக்கு அச்சுறுத்தும் மரபியல் சூதாட்டம் என்ற ஆங்கில புத்தகத்தில் எழுதினார். “அடுத்த வருடம் கேடு காலம் வந்தது. விவசாயிகளுக்கு அதே வகை உருளைக் கிழங்கை பயிர் செய்வதைவிட வேறு வழியே இல்லை. வேறு வகை உருளைக் கிழங்கு அவர்களிடம் இல்லை. ப்ளைட் நோய் மறுபடியும் தாக்கியது, இந்த முறை அது மிகவும் தீவிரமாக தாக்கியது. வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.” 10 லட்சம் பேர் பசியால் மாண்டதாகவும் மற்றொரு 15 லட்சம் பேர்—பெரும்பான்மையோர் ஐக்கிய மாகாணங்களுக்கு—குடிபெயர்ந்து சென்றுவிட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர். இங்கேயே தங்கிவிட்ட மக்கள் கொடிய வறுமையால் வாடினர்.
தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டிஸில் விவசாயிகள் பல்வகை உருளைக் கிழங்குகளை பயிர் செய்தனர், சில மாத்திரமே ப்ளைட்டால் பாதிக்கப்பட்டன. ஆகவே அது பெருவாரியாக தாக்கவில்லை. பல்வகை இனங்களும், இனங்களுக்குள் பல்வகை ரகங்களும் இருப்பது பாதுகாப்பை அளிக்கிறது என்பது தெளிவாகிறது. ஒரே மாதிரியான பயிரை வளர்க்கும்போது அது உயிர் தப்புவதற்கான இந்த அடிப்படை வழிமுறைக்கே விரோதமாக அமைந்துவிடுகிறது; நோய்கள் அல்லது பூச்சிகளுக்கு தாவரங்கள் பலியாகிவிடும் நிலையை ஏற்படுத்துகிறது; அதனால் அந்த முழுப் பிராந்தியத்தின் விளைச்சலில் பெரும் பகுதி அழிந்துவிடலாம். இதன் காரணமாகவே, சுற்றுச்சூழலுக்கு பெரும்பாலும் ஆபத்தை விளைவிப்பதாக இருந்தாலும், பூச்சிக்கொல்லிகள், மூலிகைகொல்லிகள், காளான்கொல்லிகள் போன்ற வேதிப்பொருட்களையே விவசாயிகள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.
ஆகவே பல்வகை நாட்டு-ரக பயிர்களுக்கு பதிலாக விவசாயிகள் சீராக ஒரே பயிரை பயிரிடுவதற்கு காரணம் என்ன? பெரும்பாலும் பொருளாதார அழுத்தங்களே காரணம். ஒரே பயிரை பயிரிட்டால் அறுவடை சுலபமாக இருக்கும், விளைபொருள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும், எளிதில் கெட்டுப்போகாது, மிகுதியான விளைச்சல் கிடைக்கும் போன்ற எதிர்பார்ப்புகளே காரணம். இப்படிப்பட்ட போக்குகள் 1960-களில் பசுமைப் புரட்சி ஏற்பட்ட சமயத்தில்தான் அதிக அளவில் ஆரம்பமாயின.
பசுமைப் புரட்சி
அரசாங்கமும் கார்ப்பரேட்டுகளும் மிகப் பிரமாண்டமான அளவில் பிரச்சாரம் செய்தன; அந்தப் பிரச்சாரங்கள் மூலம், பஞ்சத்தில் அடிபடும் சாத்தியமிருந்த நாடுகளில் விவசாயிகள் பல்வகை பயிர்களை பயிரிடுவதை விட்டுவிட்டு ஒரே வகையான, அதிக மகசூலை தரக்கூடிய தானியங்களை, விசேஷமாக நெல்லையும் கோதுமையையும் பயிர்செய்ய தூண்டப்பட்டனர். இந்த “அற்புத” தானியங்கள் உலகின் பசியை போக்கிவிடும் என அவற்றிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவை மலிவாக கிடைக்கவில்லை. விதைகளின் விலை மும்மடங்கானது. விளைச்சலின் அளவு, உரங்களையும் வேதிப்பொருட்களையும் முக்கியமாக டிராக்டர் போன்ற விலையுயர்ந்த உபகரணங்களையும் வெகுவாக சார்ந்திருந்தது. ஆனாலும் அரசின் நிதி உதவியோடு பசுமைப் புரட்சி மிகவும் பிரபலமானது. அது “கோடிக்கணக்கானோரின் பசியை போக்கியது, என்றாலும் இன்று [அது] உலகின் உணவு பாதுகாப்பை அச்சுறுத்தி வருகிறது” என்று கூறுகிறார் ரேபர்ன்.
உண்மையில், பசுமைப் புரட்சி குறுகிய கால நன்மைகளுக்காக நீண்ட கால ஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. கண்டம் முழுவதிலும் ஒரே விதமான பயிர்களையே பயிர் செய்வது பழக்கமாகிவிட்டது. உரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் களைகள் வேகமாக வளர்ந்தன; பூச்சிக்கொல்லிகளோ பயிர்களை நாசப்படுத்தும் பூச்சிகளோடு பயனளிக்கும் பூச்சிகளையும் அழித்துவிட்டன. விஷத்தன்மையுள்ள வேதிப்பொருட்களால், நெல் வயல்களில் இருக்கும் மீன், இறால், நண்டு, தவளை, சாப்பிடக்கூடிய மூலிகைகள், காட்டு செடிகள் ஆகியவை அழிந்தன. இவற்றில் பெரும்பாலானவை கூடுதலான சத்துள்ள உணவு பொருட்களே. வேதிப்பொருட்களை உபயோகித்த விவசாயிகளும் விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யுனைட்டட் கிங்டமிலுள்ள திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறை ஆசிரியராக பணியாற்றும் டாக்டர் மே-வான் ஹோ இவ்வாறு எழுதினார்: “‘பசுமைப் புரட்சி’ ஏற்பட்ட சமயத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும், ஒரே குறிப்பிட்ட வகை பயிர் சாகுபடி உலகம் முழுவதிலும் உயிரியல் பல்வகைமையையும் உணவின் பாதுகாப்பையும் மிகவும் மோசமாக பாதித்திருக்கிறது என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமே இல்லை.” ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கருத்துப்படி, நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பயிர் செய்யப்பட்ட தாவரங்களில் காணப்பட்ட மரபியல் பல்வகைமையில் 75 சதவீதம் மறைந்துவிட்டது; விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதே இதற்கு முக்கிய காரணம்.
“மரபியல் வேறுபாடின்மையை கடைப்பிடிப்பதால் நாம் வருவித்துக்கொள்ளும் சூழலியல் சார்ந்த ஆபத்துகளுக்கு அளவே இல்லை” என்று உவர்ல்டுவாட்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது. இந்த ஆபத்துக்கள் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகின்றன? வேளாண்மை விஞ்ஞானிகளும் சக்திவாய்ந்த வேதிப்பொருட்களும் விவசாயிகளுக்கு நிதியுதவியும்கூட தேவை. ஆனால் உத்தரவாதம் எதுவும் இல்லை. ஐக்கிய மாகாணங்களில் மக்காச்சோள பயிர்களுக்கு நாசம் விளைவித்த ப்ளைட் நோய்க்கும் இந்தோனீஷியாவில் ஐந்து லட்சம் ஏக்கர் நெல் நாசமானதுக்கும் மரபியலில் வேற்றுமை இல்லாததே காரணமாகும். ஆனால் சமீப ஆண்டுகளில் ஒரு புதிய விவசாய புரட்சியே ஆரம்பமாகியிருக்கிறது; மிகவும் ஆரம்ப நிலையாகிய ஜீன் அளவிலேயே உயிரின் செயல்பாட்டை கையாளுவது இதில் அடங்கும்.
ஜீன் புரட்சி
உயிரியல் தொழில்நுட்பம் என்ற அதிக லாபம் தருகிற புதியதோர் தொழிலை மரபியல் ஆய்வு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தப் பெயர் காட்டுகிற வண்ணமாக, மரபணுப் பொறியியல் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி அது உயிரியலையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கிறது. புதிய பையோடெக் கம்பெனிகள் என்று அழைக்கப்படுகிற நிறுவனங்கள் சில, விவசாயத்தில் விசேஷ கவனம் செலுத்துகின்றன; அமோக விளைச்சலையும், நோய், வறட்சி, உறைபனி போன்றவற்றை எதிர்க்க வல்லதும், ஆபத்துண்டாக்கும் வேதிப்பொருட்களின் அவசியமிராததுமான விதைகளை உற்பத்தி செய்வதற்கு தனியுரிமை பெற மும்முரமாக முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. இந்த இலக்குகளை அடைய முடிந்தால் அவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். ஆனால் மரபணுப் பொறியியல் உத்திகள் மூலமாக வளர்க்கப்படும் பயிர்களைக் குறித்து சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.
“இயற்கையில், குறிப்பிட்ட வரம்புகளுடனேயே மரபியல் பல்வகைமை உருவாக்கப்பட்டுள்ளது” என்று மரபணு பொறியியல், உணவு மற்றும் நமது சூழியல் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. “ஒரு ரோஜாவை மற்றொரு வகை ரோஜாவோடு கலப்பு செய்ய முடியும், ஆனால் ஒரு ரோஜாவை உருளைக் கிழங்கோடு கலப்புசெய்ய முடியாது. . . . மறுபட்சத்தில், மரபணுப் பொறியியல், ஓரினத்திலுள்ள மரபணுக்களை தனிப்படுத்தி மற்றொன்றுக்குள் அதை கலப்புசெய்து இப்படியாக விரும்பப்படும் பண்பினை அல்லது தனித்தன்மையை உருவாக்க முயற்சி செய்கிறது. உதாரணமாக, (ஃப்ளௌண்டர் என்ற ஒருவகை தட்டை மீன் போன்ற) ஒரு வடதுருவ மீன் உறைந்து போகாதிருக்கச் செய்யும் வேதிப்பொருள்களை உருவாக்கும் ஜீனை கொண்டிருக்கிறது, இந்த ஜீனை எடுத்து உருளைக் கிழங்கு அல்லது ஸ்டிராபெரிக்குள் செலுத்துவதன் மூலம் அதை உறைபனியை தாங்கும் ரகமாக செய்வதையே இது அர்த்தப்படுத்தும். பாக்டீரியா, வைரஸ், பூச்சிகள், விலங்குகள் அல்லது மனிதர்களிலிருந்துகூட எடுக்கப்பட்ட ஜீன்களை வைத்து தாவரங்களில் மாற்றங்களைச் செய்ய முடியும்.”a சுருக்கமாகச் சொன்னால், உயிரியல் தொழில் நுட்பம் மூலம் இனங்களை பிரிக்கும் மரபியல் சுவர்களை மனிதனால் உடைக்க முடிகிறது.
பசுமைப் புரட்சியைப் போலவே, ‘ஜீன் புரட்சி’யும் மரபியலில் வேற்றுமை இல்லாதிருக்கும் பிரச்சினையை உருவாக்குகிறது. இதில் பிரச்சினை இன்னும் மோசமாக உள்ளது என்று சிலர் சொல்கின்றனர்; ஏனென்றால் இப்போது மரபியல் வல்லுநர்களால் குளோனிங் மற்றும் திசு வளர்ப்பு போன்ற உத்திகளைப் பயன்படுத்த முடிகிறது. இவற்றால் அசலை அப்படியே ஒத்திருக்கும் நகல்களை அல்லது குளோன்களை உருவாக்க முடிகிறது. உயிரிகளில் பல்வகைமை படிப்படியாக அழிந்துவருவது இன்னும் கவலை தருவதாகவே உள்ளது. ஆனால் மரபியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட தாவரங்கள் புதிய பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அவை மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கக்கூடும். “நம்மை எங்கே கொண்டுபோய்விடும் என்று சரியாக தெரிந்துகொள்ளாமலே வேளாண்மை தொழில் நுட்பம் என்ற ஒரு யுகத்திற்குள் கண்ணை மூடிக்கொண்டு வேகமாக சென்றுகொண்டிருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையோடும் கட்டுப்பாடுகள் எதுவுமின்றியும் விளைவுகளைக் குறித்து எதையும் அறியாமலும் நாம் போய்க்கொண்டிருக்கிறோம்” என்று விஞ்ஞான எழுத்தாளர் ஜெரமி ரிஃப்கின் கூறினார்.b
மறுபட்சத்தில் ஜீன்களை மாற்றி உயிர்களின் தன்மைகளை மாற்றியமைக்கும் சக்தி ஒரு தங்க சுரங்கத்தைப் போல இருப்பதால் புதிய விதைகளுக்கும் மரபணு நுட்ப முறையில் தயாரிக்கப்பட்ட மற்ற உயிரிகளுக்கும் பிரத்தியேக உரிமைபெற கம்பெனிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் தாவரங்கள் ஒரு பக்கம் அழிந்துகொண்டே இருப்பது குறையவில்லை. ஏற்கெனவே சொல்லப்பட்டபடி, பேராபத்து நிகழ்ந்துவிடாமல் இருப்பதற்காக சில அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் விதை வங்கிகளைத் துவங்கியிருக்கின்றன. விதைப்பதற்கும் அறுவடை செய்வதற்கும் எதிர்கால சந்ததிக்கு பலவகை விதைகளை இந்த வங்கிகளால் தாராளமாக வழங்க முடியுமா?
விதை வங்கிகள்—அழிந்துவிடாதிருக்க உத்தரவாதம் அளிக்குமா?
இங்கிலாந்தில் க்யூ என்ற இடத்திலுள்ள ராயல் தாவரவியல் தோட்டங்கள், மிலெனியம் விதை வங்கி திட்டத்தை ஆரம்பித்துள்ளது. “இதுவரை மேற்கொள்ளப்படாத மிகப் பெரிய சர்வதேச பாதுகாப்பு திட்டம்” என்று இதை அது அழைக்கிறது. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள்: (1) 2010-க்குள் உலகிலுள்ள விதை தரும் செடிகளில் 10 சதவீதத்தை—24,000-க்கும் மேற்பட்ட இனங்களை—சேகரித்து பாதுகாக்க வேண்டும். (2) அதற்கு முன்பு, யுனைட்டட் கிங்டம் முழுவதிலும் வளரும் விதை தரும் தாவரங்கள் அனைத்தின் விதைகளையும் சேகரித்து பாதுகாக்க வேண்டும். மற்ற நாடுகளிலும்கூட விதை வங்கிகள் அல்லது சில சமயங்களில் ஜீன் வங்கிகள் எனப்படும் வங்கிகள் துவங்கப்பட்டிருக்கின்றன.
விதை வங்கிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான விதைகளில் குறைந்தபட்சம் 90 சதவீதம், உணவையும் மற்ற பயனுள்ள பொருட்களையும் தரும் மதிப்புள்ள தாவரங்களுடைய விதைகளே என உயிரியலாளர் ஜான் டக்ஸல் கூறுகிறார்; அவை கோதுமை, அரிசி, மக்காச்சோளம், சார்கம் (sorghum), உருளைக் கிழங்கு, வெங்காயம், பூண்டு, கரும்பு, பருத்தி, சோயா பீன்ஸ், மற்ற பீன் வகைகள் போன்றவையே. ஆனால் விதைகள் உயிருள்ள பொருட்களாக இருப்பதால் அவற்றிற்குள் ஆற்றல் இருக்கும்வரை மாத்திரமே அவை வளர முடியும். ஆகவே அந்த விதை வங்கிகள் எவ்வளவு நம்பகமானவை?
வங்கியில் பிரச்சினைகள்
டக்ஸலின் கருத்துப்படி, விதை வங்கிகளை நடத்துவதற்கு வருடந்தோறும் சுமார் 30 கோடி டாலர் வரை செலவாகிறது. ஆனால் இந்தத் தொகைகூட போதாது, ஏனென்றால் “ஜீன் வங்கிகளிலுள்ள 13 சதவீத விதைகள் மாத்திரமே நீண்ட காலம் பாதுகாத்து வைப்பதற்குரிய வசதிகளை உடைய நன்கு பராமரிக்கப்படும் இடங்களில் இருக்கின்றன.” சரியாக பாதுகாத்து வைக்கப்படாத விதைகள் நீண்ட காலத்திற்கு கெட்டுப்போகாமல் இருப்பதில்லை, ஆகவே அடுத்த தலைமுறை விதைகளை அறுவடை செய்வதற்காக அவற்றை சீக்கிரமே நட்டுவிட வேண்டும்; இல்லையென்றால் விதை வங்கிகள் விதைகளின் சவக்கிடங்காக மாறிவிடும். ஆகவே இந்த வேலையில் அதிகம் பேர் ஈடுபடுத்தப்பட வேண்டும், அதற்காகும் செலவும் அதிகம். ஏற்கெனவே பண பற்றாக்குறை இருப்பதால் வசதிகள் செய்து தருவது இன்னும் சிக்கலாகவே உள்ளது.
சீட்ஸ் ஆஃப் சேன்ஜ்—த லிவிங் டிரெஷர் என்ற புத்தகம் அ.ஐ.மா., கொலராடோ என்ற இடத்திலுள்ள தேசிய விதை சேமிப்பு ஆய்வுக்கூடத்தின் நிலைமையை விவரிக்கிறது. “மின்வெட்டு, பழுதடைந்த குளிர்காப்பு சாதனங்கள், போதிய ஆட்கள் இல்லாத குறை, இதனால் விதைகள் வகைப்படுத்தப்படாமல் தாறுமாறாக குவிந்து கிடப்பது உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சினைகளை அனுபவித்து” வருவதாக கூறுகிறது. அரசியல் கிளர்ச்சிகள், பொருளாதார மந்தம், இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றாலும் விதை வங்கிகள் பாதிப்புக்குள்ளாகின்றன.
பிற்கால உபயோகத்துக்காக விதைகளை பாதுகாத்து வைப்பதால் மற்ற பிரச்சினைகளும் உண்டு. இயற்கை சூழலில் ஓரளவுக்கு சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் திறமையை தாவரங்கள் பெற்றுள்ளன. இதனால் இவை நோயையும் மற்ற சவால்களையும் தாக்குப்பிடிக்கின்றன. ஆனால் விதை வங்கியில் பாதுகாக்கப்பட்ட ஒரு சூழலில் இருக்கும் விதைகள், சில காலத்திற்குப் பிறகு சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையை இழந்துவிடுகின்றன. என்றாலும் நன்றாக பாதுகாத்து வைக்கப்பட்ட அநேக தாவர விதைகள் மீண்டும் பயிரிடப்படும் அவசியம் ஏற்படுமுன் பல நூற்றாண்டுகள்கூட கெடாமல் இருக்கலாம். இத்தனை பிரச்சினைகளும் அநிச்சயங்களும் இருந்தபோதிலும், விதை வங்கிகள் இயங்கிக் கொண்டிருக்கிறதென்றால் அது உணவுப் பயிர்களின் எதிர்காலம் பற்றி மனிதகுலத்தின் கவலை அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
இயற்கையான சூழலை பாதுகாத்து, பயிர்களின் பல்வகைமைக்கு மீண்டும் உயிரூட்டி வருவதே தாவரங்கள் முற்றிலும் அழிந்துபோவதை குறைப்பதற்கு மிகச் சிறந்த வழி. ஆனால் இதைச் செய்வதற்கு “மனிதனின் தேவைகளுக்கும் இயற்கை உலகின் தேவைகளுக்குமிடையே ஒரு புதிய சமநிலையை வளர்ப்பது” அவசியம் என்று டக்ஸல் கூறுகிறார். தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி ஒருவித வெறியோடு மனிதன் போய்க்கொண்டிருக்கும்போது இயற்கை உலகத்தோடு ‘புதிய ஒரு சமநிலையை வளர்த்துக்கொள்வான்’ என்று யோசிப்பது நம்பும்படி உள்ளதா? நாம் பார்த்தபடி, விவசாயம்கூட உயர்ந்த தொழில்நுட்பத்தால், லாபத்தையே குறியாகக் கொண்ட ஒரு பெரிய வியாபார உலகின் பாகமாக மாறிக்கொண்டு வருகிறதே. ஆகவே இதற்கு வேறொரு விடை இருக்க வேண்டும். (g01 9/22)
[அடிக்குறிப்புகள்]
a ஜீன்களை மாற்றி உற்பத்தி செய்யப்படும் உணவு, விலங்கு மற்றும் மனிதனின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றிய கருத்துக்கள் முரண்படுபவையாகவே இருக்கின்றன. கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத உயிரிகளின் ஜீன்களை கலப்புசெய்தல் சிலர் தார்மீக கேள்விகளை எழுப்புவதற்கு வழிநடத்தியுள்ளது.—விழித்தெழு! ஏப்ரல் 22, 2000, பக்கங்கள் 25-7 காண்க.
b ஐரோப்பிய சர்க்கரை பீட்ரூட்டுகள், “ஒரு வகை மூலிகைக் கொல்லியை எதிர்க்கும் சக்தியை பெறுவதற்காக மரபியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டபோது அவை தற்செயலாக மற்றொரு வகை மூலிகைக் கொல்லியை எதிர்க்கும் சக்தியையும் பெற்றுக்கொண்டன” என்று நியூ சயன்டிஸ்டு பத்திரிகை அறிக்கை செய்கிறது. தவறுதலாக இந்த பீட்ரூட்டுகளுக்குள் அந்த ஜீன் எவ்வாறு நுழைந்தது என்றால் வேறொரு மூலிகைக் கொல்லியை எதிர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட மற்றொரு வகை பீட்ரூட்டினால் தற்செயலாக மகரந்த சேர்க்கை நிகழ்ந்திருந்தது. இப்படி மூலிகைக் கொல்லிகளை எதிர்க்கும் பயிர்கள் அதிகமாகும்போது மூலிகைக் கொல்லிகளால் பாதிக்கப்படாத சூப்பர் களைகள் உருவாவதற்கு வழிநடத்தலாம் என விஞ்ஞானிகள் சிலர் அஞ்சுகின்றனர்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
விவசாயி ‘அழியும் ஆபத்திலிருக்கும் இனம்’?
“தொழில்துறையில் வளர்ச்சி அடைந்துள்ள எல்லா நாடுகளிலும் 1950 முதல் விவசாயிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. சில இடங்களில் அது 80 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்திருக்கிறது” என்று உவர்ல்டு உவாட்ச் பத்திரிகை கூறுகிறது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் கைதிகளைவிட விவசாயிகளே எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர். இப்படி திரளாக மக்கள் நிலத்தைவிட்டு வெளியேறுவதற்கு என்ன காரணம்?
குறைந்த வருமானம், அதிகமான விவசாய கடன், அதிகரிக்கும் வறுமை, அதிகமதிகமாக இயந்திரமயமாதல் ஆகியவை முக்கிய காரணங்கள். 1910-ல், ஐக்கிய மாகாணங்களில் நுகர்வோர் உணவுக்கு செலவழித்த ஒவ்வொரு டாலரிலும் சுமார் 40 சென்டை விவசாயி பெற்றுக்கொண்டான். ஆனால் 1997-ல் விவசாயிக்கு கிடைத்த பங்கு கிட்டத்தட்ட 7 சென்டாக குறைந்துவிட்டது. நுகர்வோர் “ரொட்டி வாங்குவதற்காக கொடுக்கும் ஒவ்வொரு டாலரிலும், [கோதுமை பயிர்செய்யும் விவசாயிக்கு] வெறும் 6 சென்டே கிடைக்கிறது” என்று உவர்ல்டு உவாட்ச் கூறுகிறது. அப்படியென்றால் ரொட்டியின் மேல் சுற்றிய பேப்பருக்கு கொடுக்கும் அதே அளவு பணத்தைத்தான் நுகர்வோரிடமிருந்து விவசாயி பெற்றுக்கொள்கிறான். வளர்ந்துவரும் நாடுகளில் விவசாயிகளின் நிலைமை அதைவிட மோசம். ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலுள்ள ஒரு விவசாயி மிகவும் கடினமாக இருக்கும் ஒரு ஆண்டை சமாளிப்பதற்கு வங்கியிலிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம்; ஆனால் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விவசாயி மறுபடியும் ஒரு முறைகூட முயற்சி செய்ய முடியாது. அவன் உயிரோடு இருப்பதே அரிது.
[பக்கம் 7-ன் படங்கள்]
“‘பசுமைப் புரட்சி’ ஏற்பட்ட சமயத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வகை பயிர் சாகுபடி உலகம் பூராவும் உயிரியல் பல்வகைமையையும் உணவு பாதுகாப்பையும் மிகவும் மோசமாக பாதித்திருக்கிறது.”—டாக்டர் மே-வான் ஹோ
[படங்களுக்கான நன்றி]
▲ பின்னணி: U.S. Department of Agriculture
Centro Internacional de Mejoramiento de Maíz y Trigo (CIMMYT)
[பக்கம் 8-ன் படங்கள்]
இங்கிலாந்திலுள்ள மிலெனியம் விதை வங்கி மதிப்புள்ள தாவர விதைகளை பாதுகாத்து வருகிறது
[படங்களுக்கான நன்றி]
◀ © Trustees of Royal Botanic Gardens, Kew ▼