‘உலக சிந்தையை’ உதறித்தள்ளுங்கள்
‘நாம் இந்த உலகத்தின் சிந்தையைப் பெறவில்லை, கடவுளின் சக்தியையே பெற்றிருக்கிறோம்.’ —1 கொ. 2:12, NW.
1, 2. (அ) ஒரு காலத்தில் கானரி பறவைகளை பிரிட்டிஷ் சுரங்கங்களில் வைத்திருந்ததற்குக் காரணம் என்ன? (ஆ) கிறிஸ்தவர்கள் என்ன அபாயத்தைச் சந்திக்கின்றனர்?
நிலக்கரிச் சுரங்கப் பணியாளர்களின் உயிரைக் காப்பதற்காக 1911-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, ஒவ்வொரு சுரங்கத்திலும் இரண்டு கானரி பறவைகளை வைத்திருக்க வேண்டும். எதற்காக? சுரங்கத்தில் திடீரெனத் தீப்பிடித்துவிட்டால், மீட்புப் பணியாளர்கள் கானரி பறவைகளை சுரங்கத்திற்குள் எடுத்துச் செல்வார்கள். இந்தச் சின்னஞ்சிறு பறவைகளால் கார்பன் மோனாக்ஸைடு போன்ற விஷ வாயுக்களைத் தாக்குப்பிடிக்க முடியாது. காற்றில் நச்சு வாயு கலந்திருந்தால் இந்தப் பறவைகள் காட்டிக்கொடுத்துவிடும். எப்படியெனில், இவை மூச்சுத்திணறித் திக்குமுக்காடும், ‘பொத்’தென்று கீழேயும் விழுந்துவிடும். இந்த ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது அத்தியாவசியமாய் இருந்தது. கார்பன் மோனாக்ஸைடு என்பது நிறமும் மணமும் இல்லாத ஒரு வாயு ஆகும்; இது, இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் உடலினுள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லாதபடி அவற்றைத் தடுத்துவிடும், இதனால் உயிரிழக்க நேரிடும். மீட்புப் பணியாளர்கள் இந்த அபாய அறிகுறியைக் கண்டு சுதாரிக்காவிட்டால், நச்சுக் காற்றைத் தாங்கள் நுகர்ந்ததை அறியாமலேயே மயக்கமடைந்து மடிந்துவிடலாம்.
2 ஆன்மீக அர்த்தத்தில் இதுபோன்ற சூழ்நிலையையே கிறிஸ்தவர்களும் சந்திக்கிறார்கள். எப்படி? சாத்தானின் பிடியில் கிடக்கிற இந்த உலகம், அதற்கே உரிய சிந்தையால் நிறைந்திருக்கிறது; உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கும் வேலையை இயேசு தம் சீஷர்களிடம் ஒப்படைத்தபோது இந்த ஆபத்தான சூழ்நிலையை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தார். (மத். 10:16; 1 யோ. 5:19) தம் சீஷர்கள்மீது அவருக்கு அந்தளவு அக்கறை இருந்ததால், தாம் மரிப்பதற்கு முந்தின இரவு பிதாவிடம் அவர் இவ்வாறு ஜெபித்தார்: “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று [“தீயவனிடமிருந்து,” NW] காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.”—யோவா. 17:15.
3, 4. இயேசு தம் சீஷர்களை எப்படி எச்சரித்தார், அது ஏன் நமக்கு மிகவும் அர்த்தமுள்ளது?
3 ஆன்மீக ரீதியில் மந்தமாக இருப்பதால் வரும் மரண அபாயத்தைக் குறித்து இயேசு தம் சீஷர்களை எச்சரித்தார். இந்தப் பொல்லாத உலகின் முடிவுகாலத்தில் வாழ்ந்துவரும் நமக்கு, அந்த எச்சரிப்பு மிகவும் அர்த்தமுள்ளது. அந்த எச்சரிப்பு இதுதான்: “இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, . . . விழித்திருங்கள்.” (லூக். 21:34–36) அதே சமயத்தில், கற்ற விஷயங்களை சீஷர்கள் மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பதற்கும், விழிப்புடன் தைரியமாய்ச் செயல்படுவதற்கும் பிதா தமது சக்தியை அருளுவார் என்ற வாக்குறுதியையும் அவர் அளித்தது சந்தோஷமான விஷயமல்லவா?—யோவா. 14:26.
4 நமக்கும் அதே சக்தியைப் பிதா அருளுவாரா? அருளுவாரென்றால், அதைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? உலக சிந்தை என்பது என்ன, அது எவ்விதத்தில் செல்வாக்கு செலுத்துகிறது? அதை நாம் எப்படி வெற்றிகரமாக உதறித்தள்ளலாம்?—1 கொரிந்தியர் 2:12-ஐ வாசியுங்கள்.
கடவுளுடைய சக்தியா, உலக சிந்தையா?
5, 6. கடவுளுடைய சக்தி நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறது, அதைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
5 முதல் நூற்றாண்டில் மட்டுமல்லாமல் இன்றும் கடவுள் தமது சக்தியை அருளுகிறார். சரியானதைச் செய்வதற்கான பலத்தையும், அவருடைய சேவையைச் செய்வதற்கான ஊக்கத்தையும் பெறுவதற்கு இந்தச் சக்தி உதவுகிறது. (ரோ. 12:11; பிலி. 4:13) மேலும் அன்பு, தயவு, நற்குணம் போன்ற அருமையான குணங்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது. இவை, கடவுளுடைய சக்தியினால் உருவாகிற குணங்களில் சிலவாகும். (கலா. 5:22, 23) இந்தச் சக்தியைப் பெற விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்தி கடவுள் அவர்களுக்கு இதை அருளுவதில்லை.
6 அப்படியானால், நாம் இவ்வாறு கேட்பது நியாயமானதே: ‘கடவுளுடைய சக்தியைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ ஆம், அதைப் பெறுவதற்கு நாம் பல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று பைபிள் காட்டுகிறது. நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அதைத் தரும்படி கடவுளிடம் நேரடியாகக் கேட்பதாகும். (லூக்கா 11:13-ஐ வாசியுங்கள்.) மற்றொன்று, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளின் ஆலோசனைகளை ஆழ்ந்து படிப்பதும் அவற்றைக் கடைப்பிடிப்பதும் ஆகும். (2 தீ. 3:16) பைபிளை வெறுமனே வாசிக்கிற எல்லாருக்குமே அவருடைய சக்தி கிடைத்துவிடாது. ஆகவே, ஓர் உண்மைக் கிறிஸ்தவர் பைபிளை ஆழ்ந்து படிக்க வேண்டும்; அப்போதுதான் அதிலுள்ள கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் கண்ணோட்டத்தையும் நன்கு கிரகித்துக்கொள்ள முடியும். அதோடு, யெகோவா தமது பிரதிநிதியாக இயேசுவைய நியமித்திருக்கிறார் என்பதையும், அவர் மூலமாகவே தமது சக்தியை அளித்திருக்கிறார் என்பதையும் ஏற்றுக்கொள்வது அவசியம். (கொலோ. 2:6) ஆகவே, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவருடைய போதனைகளுக்கு இசைவாக நாம் வாழ விரும்புகிறோம். (1 பே. 2:21) இயேசுவைப்போல் இருக்க நாம் எந்தளவுக்கு முயலுகிறோமோ, அந்தளவுக்கு கடவுளுடைய சக்தியைப் பெறுவோம்.
7. இந்த உலகின் சிந்தை மக்கள்மீது எப்படியெல்லாம் செல்வாக்கு செலுத்துகிறது?
7 அதற்கு நேர்மாறாக, உலக சிந்தையோ சாத்தானின் சுபாவத்தை வெளிக்காட்ட மக்களைத் தூண்டுகிறது. (எபேசியர் 2:1–3-ஐ வாசியுங்கள்.) இந்த உலகின் சிந்தை பல்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்துகிறது. இன்று அதற்கான அத்தாட்சியை எங்கும் காண முடிகிறது. இந்தச் சிந்தை, கடவுளுடைய நியதிகளுக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டுகிறது. ‘மாம்சத்தின் இச்சையையும், கண்களின் இச்சையையும், ஜீவனத்தின் பெருமையையும்’ இது முடுக்கிவிடுகிறது. (1 யோ. 2:16) வேசித்தனம், விபசாரம், பில்லிசூனியம், பொறாமை, கோபதாபம், குடிவெறி போன்ற பாவ இயல்புக்குரிய செயல்களில் ஈடுபட வைக்கிறது. (கலா. 5:19–21) பரிசுத்தமானவற்றுக்கு எதிரான விசுவாசதுரோகக் கருத்துகளை ஊட்டி வளர்க்கிறது. (2 தீ. 2:14–18) ஒருவர் இந்த உலகின் சிந்தைக்கு எந்தளவு இடமளிக்கிறாரோ, அந்தளவு சாத்தானைப்போல் ஆவார்.
8. நம் எல்லோருக்கும் முன்பு என்ன இரண்டு தெரிவுகள் உள்ளன?
8 எந்தவித வெளிப்புற பாதிப்பும் இல்லாமல் வாழ்வது சாத்தியமற்றது. ஒருவரது வாழ்க்கையில் கடவுளுடைய சக்தி அல்லது உலக சிந்தை—இவ்விரண்டில் ஏதாவது ஒன்று செல்வாக்கு செலுத்தியே தீரும்; ஆகவே ஒவ்வொருவரும் இந்த இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்தாக வேண்டும். தற்போது உலக சிந்தையின் செல்வாக்கில் சிக்கியிருப்போர் அதிலிருந்து விடுபட்டு, கடவுளுடைய சக்தி தங்களை வழிநடத்த இடமளிக்கலாம். மறுபட்சத்தில், சில காலத்திற்கு கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்டு வந்த ஒருவர், பிற்பாடு உலக சிந்தையின் செல்வாக்கில் சிக்கிவிடலாம். (பிலி. 3:18, 19) உலக சிந்தையை நாம் எவ்வாறு உதறித்தள்ளலாம் என்பதை இப்போது சிந்திக்கலாம்.
ஆரம்ப அறிகுறிகளை அறிதல்
9-11. நாம் உலக சிந்தையால் செல்வாக்கு செலுத்தப்படுகிறோம் என்பதற்கு சில அறிகுறிகள் யாவை?
9 முன்பு குறிப்பிடப்பட்ட பிரிட்டிஷ் சுரங்கப் பணியாளர்கள் கானரி பறவைகளை வைத்திருந்தது எதற்காக? விஷ வாயு கலந்திருப்பதற்கான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக. இந்தப் பறவை ‘பொத்’தென்று கீழே விழுவதை ஒரு பணியாளர் பார்த்துவிட்டால், உடனே அங்கிருந்து தப்புவதற்கு வழிதேடுவார்; அப்போதுதான் உயிர் பிழைக்க முடியும். அதைப் போல, உலக சிந்தை கொஞ்சம் கொஞ்சமாக நம்மீது செல்வாக்கு செலுத்துகிறது என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான அறிகுறிகள் சில யாவை?
10 நாம் பைபிள் சத்தியங்களைக் கற்று, யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்த சமயத்தில், ஒருவேளை ஆர்வத்தோடு பைபிளை வாசித்திருக்கலாம். நாம் அடிக்கடி உருக்கமாக ஜெபம் செய்திருக்கலாம். மகிழ்ச்சியோடு சபைக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கலாம்; ஒவ்வொரு கூட்டத்தையும் பாலைவனச்சோலை போன்று புத்துணர்ச்சி தருவதாகக் கருதியிருக்கலாம். அப்படியெல்லாம் செய்தது, உலக சிந்தையின் பிடியிலிருந்து விடுபடவும், அதிலிருந்து விலகியிருக்கவும் உங்களுக்கு உதவியது.
11 இப்போதும் பைபிளை அன்றாடம் வாசிக்க முயலுகிறோமா? (சங். 1:2) அடிக்கடி உருக்கமாக ஜெபிக்கிறோமா? அனைத்து சபைக் கூட்டங்களுக்கும் ஒவ்வொரு வாரமும் ஆர்வத்தோடு செல்கிறோமா? (சங். 84:10) இல்லையெனில் இந்த நல்ல பழக்கங்களில் சிலவற்றை விட்டுவிட்டோமா? நம் நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடுமளவுக்கு தலைக்குமேல் நிறைய வேலை இருக்கலாம் என்பது உண்மைதான்; அதனால் நம் ஆன்மீக நலனை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவும் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது சிரமமாகவே இருக்கலாம். ஆனால், நம் நல்ல பழக்கங்களில் சிலவற்றை நாளடைவில் விட்டுவிட்டோமென்றால் நாம் உலக சிந்தையால் செல்வாக்கு செலுத்தப்படுவதே அதற்குக் காரணமாய் இருக்கலாம் அல்லவா? விட்டுவிட்ட அந்த நல்ல பழக்கங்களை மீண்டும் ஆரம்பிக்க இப்போது நாம் கடினமாக முயலுவோமா?
‘பாரமடைந்துவிடாதீர்கள்’
12. “எச்சரிக்கையாய் இருங்கள்” என்று இயேசு தம் சீஷர்களிடம் சொல்லியது ஏன்?
12 உலக சிந்தையை உதறித்தள்ளுவதற்கு நாம் வேறு என்னவும் செய்யலாம்? “விழித்திருங்கள்” என்று இயேசு தம் சீஷர்களை அறிவுறுத்தியபோது, குறிப்பிட்ட சில அபாயங்களைப் பட்டியலிட்டு அவர்களை எச்சரித்திருந்தார். “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” என்று அவர் சொன்னார்.—லூக். 21:34, 35.
13, 14. சாப்பிடுவதையும் குடிப்பதையும் குறித்து எப்படிப்பட்ட கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்வது சரியானது?
13 அந்த எச்சரிப்பைக் குறித்துச் சற்று சிந்தித்துப் பாருங்கள். ரசித்துச் சாப்பிடுவதையும், ருசித்துக் குடிப்பதையும் தவிர்க்க வேண்டுமென்று இயேசு சொன்னாரா? இல்லவே இல்லை! சாலொமோன் சொல்லியிருந்த பின்வரும் வார்த்தைகளை அவர் அறிந்திருந்தார்: “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.” (பிர. 3:12, 13) இருந்தாலும், இவ்விஷயங்களில் கட்டுப்பாடின்றி செல்லுமளவுக்கு உலக சிந்தை ஒருவரை ஊக்குவிக்கிறது என்பதை இயேசு அறிந்திருந்தார்.
14 மிதமிஞ்சிச் சாப்பிடுவதும் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் ஆபத்தான செயல்களாகும்; இவ்விஷயங்களில் நம் புலன் உணர்வுகளை உலக சிந்தை நச்சுப்படுத்தவில்லை என்பதை நாம் எப்படி உறுதிசெய்துகொள்ளலாம்? நமக்கு நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘மிதமிஞ்சிச் சாப்பிடுவது சம்பந்தமாக பைபிளிலும் நம்முடைய பிரசுரங்களிலும் கொடுக்கப்பட்டுள்ள புத்திமதியை வாசிக்கும்போது அதை நான் எப்படி எடுத்துக்கொள்கிறேன்? “இந்தப் புத்திமதி எனக்குப் பொருந்தாது” என்றோ, “இது கடுமையானது” என்றோ சொல்லி அவற்றை ஒருபுறம் ஒதுக்கிவிடுகிறேனா, அல்லது சாக்குபோக்கு சொல்கிறேனா, அல்லது ஏதாவது காரணம் காட்டி நியாயப்படுத்துகிறேனா?a “குடிக்க நேர்ந்தால் மிதமாகவே குடிக்க வேண்டும், ‘குடிவெறி’ கூடவே கூடாது” என மதுபானம் குறித்துக் கொடுக்கப்படுகிற ஆலோசனையை நான் எப்படிக் கருதுகிறேன்? “சில காரணங்களினால் அந்த ஆலோசனை எனக்குப் பொருந்தாது” என்று நினைத்துக்கொண்டு அதை நான் அசட்டை செய்கிறேனா? நான் அதிகமாய்க் குடிப்பதாக மற்றவர்கள் சொல்லும்போது அவர்கள் வாயை அடைக்கும் விதத்தில் எதையாவது சொல்கிறேனா, அல்லது கோபத்தைக் கொப்பளிக்கிறேனா? அப்படிப்பட்ட பைபிள் ஆலோசனைக்கு மற்றவர்களும் முக்கியத்துவம் கொடுக்காதபடி செய்துவிடுகிறேனா?’ ஆம், ஒருவர் உலக சிந்தைக்கு அடிபணிந்திருக்கிறாரா என்பதற்கு அவரது மனப்பான்மையே அளவுகோலாய் இருக்கிறது.—ரோமர் 13:11–14-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
கவலைகள் நெருக்கிப்போட இடமளிக்காதீர்கள்
15. மனிதரின் என்ன இயல்பைக் குறித்து இயேசு எச்சரித்தார்?
15 உலக சிந்தையை உதறித்தள்ள நாம் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான காரியம், கவலையைச் சமாளிப்பது. அபூரண மனிதரான நமக்கு, அன்றாட தேவைகளைக் குறித்த கவலை இருக்கும் என்பதை இயேசு அறிந்திருந்தார். அதனால்தான், ‘கவலைப்படுவதை நிறுத்துங்கள்’ என்று தம் சீஷர்களை அன்போடு எச்சரித்தார். (மத். 6:25, NW) நமக்கு நியாயமான கவலைகள் இருப்பதையும் மறுக்க முடியாது; கடவுளைப் பிரியப்படுத்துவது, கிறிஸ்தவக் கடமைகளை நிறைவேற்றுவது, குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளைக் கவனிப்பது போன்றவை அவற்றில் அடங்கும். (1 கொ. 7:32–34) அப்படியானால், இயேசு கொடுத்த எச்சரிப்பிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
16. இந்த உலகத்தின் சிந்தை அநேகர்மீது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது?
16 ஜீவனத்தின் பெருமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற இந்த உலகத்தின் சிந்தை, அநேகரை அனாவசியமாகக் கவலைப்படச் செய்கிறது. ஒருவருக்குப் பணம் இருந்தால்தான் பாதுகாப்பு என்றும், ஒருவரது கிறிஸ்தவப் பண்புகள் எல்லாம் மதிப்புத் தரப்போவதில்லை, உயர்தரமான பொருள்களை எக்கச்சக்கமாக வைத்திருப்பதுதான் ஒருவருக்கு மதிப்பு என்ற கருத்தை உலகத்தார் நம் மனதில் திணிக்க விரும்புகிறார்கள். இந்தக் கருத்தை உண்மையென நம்புவோர் செல்வத்தைச் சேர்ப்பதற்கென்றே மாடாய் உழைப்பார்கள்; புத்தம் புதிய, மிகப் பெரிய, அதி நவீன சாதனங்களை வாங்கிக் குவிப்பதிலேயே சதா ஆர்வமாயிருப்பார்கள். (நீதி. 18:11) பொருள்கள் சம்பந்தமாக இப்படிப்பட்ட தவறான கருத்துக்கு ஒருவர் இடமளிக்கையில் அது அவருடைய கவலைகளைக் கூட்டுகிறது; இவை யாவும் அவருடைய ஆன்மீக வளர்ச்சியை நெருக்கிப்போடுகின்றன.—மத்தேயு 13:18, 22-ஐ வாசியுங்கள்.
17. கவலைகள் நம்மை நெருக்கிப்போடாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
17 கவலைகள் நம்மை நெருக்கிப்போடாமல் இருக்க இயேசுவின் பின்வரும் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.” இப்படிச் செய்தோமென்றால், நமக்கு உண்மையில் தேவையானவை எல்லாம் கூடக் கொடுக்கப்படும் என்று இயேசு உறுதியளிக்கிறார். (மத். 6:33) இந்த வாக்குறுதியை நம்புகிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்? கடவுளுடைய நீதியைத் தேடுவது ஒரு வழியாகும்; அதாவது, பண விஷயத்தில் கடவுளுடைய நெறிமுறைகளைப் பின்பற்றுவதாகும். உதாரணமாக, வரி செலுத்துவதற்கான படிவங்களில் கூட்டிக் குறைத்து எழுதவோ, தொழில் சம்பந்தமான விஷயங்களில் “சிறுசிறு” பொய்களைச் சொல்லவோ மாட்டோம். பண விஷயத்தில் நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு நம்மாலான எல்லாவற்றையும் செய்வோம்; நாம் கடனை அடைக்கும் விஷயத்தில், ‘ஆம் என்று சொன்னபடியே’ செய்வோம். (மத். 5:37; சங். 37:21) அப்படி நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒருவரால் பணக்காரர் ஆகமுடியாமல் போகலாம்; ஆனாலும் கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்க முடியும், சுத்தமான மனசாட்சியைப் பெற முடியும், கவலைகளைப் பெருமளவு குறைக்க முடியும்.
18. என்ன அருமையான முன்மாதிரியை இயேசு வைத்தார், அவரைப் பின்பற்றும்போது நாம் என்னென்ன பலன்களைப் பெறுவோம்?
18 முதலாவது ராஜ்யத்தைத் தேடுவது, முக்கியமானவற்றுக்கு நாம் முதலிடம் தருவதை உட்படுத்துகிறது. இயேசுவின் முன்மாதிரியைக் கவனியுங்கள். சில சமயங்களில் அவர் உயர்தர ஆடையை அணிந்திருந்தார். (யோவா. 19:23) தம் ஆருயிர் நண்பர்களோடு சேர்ந்து உணவை உண்டு மகிழ்ந்தார், திராட்சரசத்தைப் பருகி மகிழ்ந்தார். (மத். 11:18, 19) என்றாலும் அவருடைய வாழ்க்கையில், உடமைகளும் சரி பொழுதுபோக்கும் சரி, உணவிற்குச் சுவை சேர்க்கும் உப்பைப் போலவே இருந்தன, அவையே முக்கிய உணவாய் ஆகிவிடவில்லை. யெகோவாவின் சித்தத்தைச் செய்வதே இயேசுவுக்கு உணவாக இருந்தது. (யோவா. 4:34–36) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றும்போது வாழ்க்கை எத்தனை இனிமையாய் இருக்கும்! ஒடுக்கப்பட்ட மக்கள் பைபிளிலிருந்து ஆறுதல் பெற நாம் உதவும்போது மகிழ்ச்சி அடைவோம். சபையின் அன்பையும் ஆதரவையும் பெறுவோம். யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவோம். முக்கியமானவற்றுக்கு வாழ்க்கையில் முதலிடம் தரும்போது, உடமையும் உல்லாசமும் நம்மீது அதிகாரம் செலுத்துகிற எஜமான்களாக இராமல் யெகோவாவை வழிபட உதவுகிற ஊழியக்காரர்களாகவே இருக்கும். அதோடு, கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரிக்கும் வேலையில் நாம் எந்தளவு மும்முரமாக ஈடுபடுகிறோமோ, அந்தளவு அதிகமாக உலக சிந்தையைத் தவிர்ப்போம்.
எப்போதும் ஆன்மீக சிந்தை உள்ளவர்களாய் இருங்கள்
19-21. நாம் எப்போதும் ஆன்மீக சிந்தை உள்ளவர்களாய் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும், ஏன்?
19 நம் சிந்தைகளே செயல்களாக உருவெடுக்கின்றன. கவனமற்ற செயல்கள் என்று பலரும் சொல்வது பெரும்பாலும் பாவ சிந்தையால் உருவான செயல்களே. அதனால்தான் நாம் சிந்திக்கும் காரியங்களைக் குறித்துக் கவனமாய் இருக்கும்படி அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். “பாவ வழியில் நடக்கிறவர்கள் பாவக் காரியங்களில் சிந்தையாக இருக்கிறார்கள்; ஆன்மீக வழியில் நடக்கிறவர்களோ ஆன்மீகக் காரியங்களில் சிந்தையாக இருக்கிறார்கள்” என்று அவர் எழுதினார்.—ரோ. 8:5, NW.
20 நம் சிந்தையும் அதன் மூலம் நம் செயலும் இந்த உலகின் மனப்பான்மையால் செல்வாக்குச் செலுத்தப்படாதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? சல்லடையால் சலிப்பதுபோல, முடிந்தவரையில் இந்த உலகின் கருத்துகள் நம் மனதிற்குள் நுழையாதபடி அவற்றைச் சலித்தெடுக்க அரும்பாடுபட வேண்டும். உதாரணமாக பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கையில், நம் மனதை அசுத்தப்படுத்துகிற, அதாவது ஒழுக்கக்கேட்டையோ வன்முறையையோ சிறப்பித்துக் காட்டுகிற, கேளிக்கை நிகழ்ச்சிகளைத் தவிர்ப்போம். ஏனென்றால், கடவுளுடைய சுத்தமான சக்தி அசுத்தமான மனதிற்குள் குடிகொள்ளாது என்பது நமக்குத் தெரியும். (சங். 11:5; 2 கொ. 6:15–18) அது மட்டுமல்ல, தவறாமல் பைபிளை வாசிப்பது, ஜெபம் செய்வது, கற்றவற்றைத் தியானிப்பது, கூட்டங்களுக்குச் செல்வது ஆகியவற்றின் மூலம் கடவுளுடைய சக்தியை நம் மனதிற்குள் வரவழைக்கிறோம். நற்செய்தியை அறிவிக்கும் வேலையில் தவறாமல் ஈடுபடுவதன் மூலம் அந்தச் சக்தியின் போக்கிலேயே செல்வோம்.
21 ஆம், உலக சிந்தையையும், அது தூண்டுகிற பாவ இச்சைகளையும் நாம் கண்டிப்பாக உதறித்தள்ள வேண்டும். இதற்காக நாம் ஊக்கமாக முயற்சி செய்யும்போது அதற்குப் பலன் கிடைக்கும். இதைத்தான் பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பாவ சிந்தை மரணம், ஆன்மீக சிந்தையோ வாழ்வும் சமாதானமும் ஆகும்.”—ரோ. 8:6, NW.
[அடிக்குறிப்பு]
a பெருந்தீனி என்பது ஒரு மன நிலை ஆகும்; பழக்கமாகப் பேராசையோடு புசித்துக்கொண்டும் குடித்துக்கொண்டும் இருப்பதை இது குறிக்கிறது. எனவே, பெருந்தீனிக்காரரின் அறிகுறி அவருடைய உருவம் கிடையாது. மாறாக, உணவுமீது அவர் கொண்டுள்ள மனப்பான்மையே. பார்ப்பதற்கு சராசரி உருவமுடையவராகவோ ஒல்லியாகவோ காணப்படும் நபரும்கூட பெருந்தீனிக்காரராக இருக்கலாம். மறுபட்சத்தில், ஒருவரின் வியாதி அல்லது பரம்பரைகூட சில சமயங்களில் உடல் பருமனுக்குக் காரணமாக இருக்கலாம். ஒருவருடைய எடை அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி, சாப்பிடுகிற விஷயத்தில் மிதமிஞ்சிப் பேராசைப்படுகிறாரா என்பதே முக்கியமான விஷயம்.—நவம்பர் 1, 2004 தேதியிட்ட காவற்கோபுரம் பத்திரிகையில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.
நினைவுபடுத்திப் பார்ப்போமா?
• கடவுளுடைய சக்தியைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
• இந்த உலகின் சிந்தை நம்மீது பாதிப்பை ஏற்படுத்துகிற சில வழிகள் யாவை?
• நாம் எவ்வாறு உலக சிந்தையை உதறித்தள்ளலாம்?
[பக்கம் 21-ன் படம்]
வேலைக்கு அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள்
[பக்கம் 23-ன் படங்கள்]
நம் மனதைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தொழில் சம்பந்தமான விஷயங்களில் நேர்மையாக இருக்க வேண்டும், எல்லா விஷயங்களிலும் மிதமாக இருக்க வேண்டும்