செல்வந்தராவதில் தீர்மானமாயிருக்கிறீர்களா? அது உங்களை எப்படிப் பாதிக்கும்
அரை வயிறு கஞ்சிக்குக்கூட வழியில்லாமல் 85 கோடிக்கும் அதிகமான மக்கள் தவித்துக் கொண்டிருக்கிற இந்த உலகத்தில், எக்கச்சக்கமாய்ப் பணம் வைத்திருந்தாலும் பிரச்சினைதான். அது எப்படி? குழப்பமாக இருக்கிறதல்லவா? ஆனால், முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த வசனத்தில் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? அந்த வசனம், பணம் சம்பாதிப்பதையோ சொத்து சேர்ப்பதையோ கண்டிக்கவில்லை. மாறாக, பண ஆசையையும், செல்வந்தராவதில் தீர்மானமாயிருப்பதையுமே கண்டிக்கிறது. பணம் சம்பாதிப்பதிலும் பொருள் சேர்ப்பதிலுமே வாழ்க்கை என்னும் சக்கரத்தை மக்கள் ஓட்டுகையில் என்ன விளைவடைகிறது? இது அவர்களுடைய பிள்ளைகளை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை முதலாவது கவனியுங்கள்.
பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கிறது
அமெரிக்காவில், ஒரு சராசரி பிள்ளை ஒரே வருடத்தில் 40,000 விளம்பரங்களை டிவி-யில் பார்ப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றைத் தவிர, கடைகளிலும் தங்கள் நண்பர்களின் வீடுகளிலும் வீடியோ கேம்ஸ், அதிநவீன மியூசிக் பிளேயர்கள், கம்ப்யூட்டர் புரோகிராம்கள், உயர்தர நவநாகரிக ஆடைகள் ஆகியவற்றை பிள்ளைகள் பார்க்கிறார்கள். பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறார்களா? இல்லை. தங்கள் பெற்றோரிடம் அது வேண்டும், இது வேண்டுமென அவர்கள் அடுக்கிக்கொண்டே போவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள், ஏன் தெரியுமா?
தாங்கள் பிள்ளைகளாக இருந்தபோது தங்களுக்குச் சொகுசான வாழ்க்கை கிடைக்காமல் போனதால், சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அந்நிலை வந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ, பிள்ளைகள் கேட்பதை வாங்கி கொடுக்கவில்லை என்றால் எங்கே அவர்கள் தங்களை வெறுத்து விடுவார்களோ என பயப்படுகிறார்கள். “தங்கள் பிள்ளைகளின் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் சந்தோஷமாயிருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்” என அமெரிக்காவின் கொலரடோவிலுள்ள போல்டர் நகரத்தில் இருக்கிற ஒரு பெற்றோர் நலச் சங்கத்தின் துணை ஸ்தாபகர் ஒருவர் கூறினார். வேறு சில பெற்றோரோ வேலை செய்யும் இடத்திலேயே அதிக நேரத்தைச் செலவிடுவதால் பிள்ளைகளோடிருக்க அவர்களுக்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. எனவே, பிள்ளைகளுக்கு நிறைய பரிசுகளைக் கொடுத்தால் அந்த நேரத்தை ஈடு செய்ய முடியுமென நம்புகிறார்கள். இன்னும் சிலரோ, ஏற்கெனவே வாரம் முழுதும் வேலைசெய்து களைப்பாயிருக்கிறார்கள், அந்தச் சமயத்தில் பிள்ளைகள் கேட்பதை வாங்கி கொடுக்க மறுத்தால் அவர்கள் முரண்டுபிடிப்பார்கள், இதையெல்லாம் சமாளிப்பதைவிட அவர்கள் கேட்பதை வாங்கி கொடுப்பதே மேல் என அவர்கள் நினைக்கிறார்கள்.
பிள்ளைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கி கொடுக்கும் பெற்றோர் அவர்களுக்கு நன்மை செய்கிறார்களா, தீமை செய்கிறார்களா? அனுபவங்கள் காட்டுகிறபடி, கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகள், அப்பா அம்மாவை அதிகமாக நேசிப்பதற்குப் பதிலாக நன்றிகெட்டவர்களாகவே ஆகிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய பொருள்களையும்கூட பிற்பாடு மதிப்பதில்லை. “பிள்ளைகள் தாங்கள் அழுது புலம்பி வாங்கிய பொருள்களையும்கூட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றனர். என்னுடைய அனுபவத்திலும் அதையே கவனித்திருக்கிறேன்” என்று நடுநிலைப் பள்ளியின் இயக்குநர் ஒருவர் கூறினார்.
அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகளுக்கு என்ன நேரிடுகிறது? அவர்கள் பெரியவர்களாகையில் “வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களை சமாளிக்கக் கஷ்டப்படுகிறார்கள்” என்று அறிக்கைகள் காட்டுவதாக நியூஸ்வீக் என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. பிள்ளைகள் கஷ்டப்படாமலேயே தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்வதால் அவற்றின் மதிப்பு அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால், பள்ளியிலும், வேலையிலும், திருமணத்திலும் தோல்வியையே சந்திக்கிறார்கள்; அதன் பிறகு, பண உதவிக்கு தங்கள் பெற்றோரையே எப்போதும் சார்ந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கவலைக்கும் மனச்சோர்வுக்கும்கூட ஆளாகலாம்.
எனவே, செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் முக்கியமான சிலவற்றை இழந்துவிடுகிறார்கள் என்பதே உண்மை. வேலை செய்வதன் மதிப்பை புரிந்துகொள்ளும் வாய்ப்பை அவர்கள் இழப்பதற்கு பெற்றோரே காரணமாகிவிடுகிறார்கள்; தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமற்போவதற்கும் தங்களுக்குள் நல்ல குணங்கள் இருப்பதை அவர்கள் உணர முடியாமற்போவதற்கும்கூட பெற்றோரே காரணமாகிவிடுகிறார்கள். இது சம்பந்தமாக, மனநோய் மருத்துவரான ஜெஸ்ஸி ஓநீல் இவ்வாறு எச்சரிக்கிறார்: “அவர்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற வகையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளை பழக்கிவிட்டால் அவர்களுடைய துயர் மிகுந்த வாழ்க்கைக்கே நீங்கள் அடிக்கோல் நாட்டுகிறீர்கள்.”
பெரியவர்களை எவ்வாறு பாதிக்கிறது?
நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், “நீங்கள் எத்தனை வருடங்கள் ஒன்றாக இருந்திருந்தாலும், எவ்வளவு பணம் உங்களிடம் இருந்தாலும், உங்களுக்கிடையில் எழும் அடுத்த சலசலப்பு அநேகமாக பணத்தின் காரணமாகத்தான் இருக்கும்” என இன்றைய மனோதத்துவம் என்ற ஆங்கில பத்திரிகை குறிப்பிடுகிறது. அது மேலுமாக சொல்வதாவது: “பண விஷயத்தில் வரும் கருத்துவேறுபாடுகளையும் ஏமாற்றங்களையும் ஒரு தம்பதியினர் கையாளும் விதத்திலிருந்தே அவர்களுடைய திருமண உறவு நீண்ட காலம் நிலைக்குமா அல்லது விரைவிலேயே முறிந்துவிடுமா என்பது தெரிந்துவிடும்.” பணத்திற்கும் பொருள் சேர்ப்பதற்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு தம்பதியினர், தங்களுடைய திருமண உறவை பேராபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையில், 90 சதவீத விவாகரத்து வழக்குகளுக்கு முக்கிய காரணமாயிருப்பது பணம் சம்பந்தப்பட்ட வாக்குவாதங்களே என்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
தம்பதியினர் சேர்ந்தே வாழ்ந்தாலும்கூட, பணத்திலும் அது அளிக்கும் சொகுசான வாழ்க்கையிலுமே அவர்கள் குறியாக இருந்தால் அவர்களுடைய திருமண பந்தம் ஆட்டம்காண துவங்கிவிடும். உதாரணத்திற்கு, ஒரு தம்பதியினர் கடனில் விழும்போது அவர்கள் எளிதில் எரிச்சலடையலாம் அல்லது கோபப்படலாம், தங்களுடைய பண நெருக்கடிக்கு ஒருவரையொருவர் குற்றம் சுமத்த நேரிடலாம். சில நேரங்களில் கணவனோ மனைவியோ பொருள் செல்வங்களிலேயே சதா மூழ்கியிருப்பதால் தன் துணையோடு நேரம் செலவழிக்க முடியாமல் போய்விடலாம். அவர்களில் ஒருவர் விலையுயர்ந்த ஒரு பொருளை வாங்கி அதை மற்றவருக்குச் சொல்லாமல் மறைத்து வைத்தால் என்ன நடக்கும்? அப்படிச் செய்வது இரகசியமாய் செயல்படுவதற்கும் குற்ற உணர்வில் தவிப்பதற்கும் துணையின் நம்பிக்கையை இழப்பதற்குமே வழிநடத்தும்; இவையெல்லாம் திருமண பந்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாக்கும்.
திருமணம் ஆனவர்களானாலும் சரி ஆகாதவர்களானாலும் சரி, சிலர் பொருள் சேர்ப்பதற்குத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் மேற்கத்திய நாடுகளின் வாழ்க்கைப் பாணியை பின்பற்ற விரும்பிய சிலர், அதனால் வந்த நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் தற்கொலைக்கும்கூட முயன்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒருவர் தன் மனைவியையும் தன் 12 வயது மகனையும் கொன்றுவிட்டு, கடைசியில் தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட கொடூர சம்பவம் நடந்திருக்கிறது; பொருளாதார பிரச்சினை காரணமாக அவர் அப்படிச் செய்திருப்பதாகத் தெரிகிறது.
செல்வங்களை நாடுவதால் மட்டுமே அநேகர் சாவதில்லை என்பது உண்மைதான். என்றாலும், செல்வத்தைத் தேடுவதிலேயே முழுமூச்சாய் ஈடுபடுபவர்கள் வாழ்க்கையில் உண்மையான திருப்தியை அடைவதில்லை. வேலைப் பளுவினாலோ பண நெருக்கடியினாலோ அவர்களுக்கு ஒருவித பயம், தூக்கமின்மை, தீராத தலைவலி, வயிற்றுப் புண் போன்ற வியாதிகள் வரலாம், இவை அவர்களுடைய வாழ்நாட்காலத்தைக் குறைத்து வாழ்க்கை தரத்தையே பாதிக்கலாம். கடைசியில் ஒருவர் தன் தவறை உணர்ந்து, வாழ்க்கையில் மிக முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கத் தீர்மானித்தாலும், அப்போது காலம் கடந்துவிட்டிருக்கலாம். அவருடைய மணத்துணையின் நம்பிக்கையையும் இழந்திருப்பார், அவருடைய பிள்ளைகள் ஏற்கெனவே உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள், அவருடைய உடல் நலமும் மோசமாகிவிட்டிருக்கும். இதுபோன்ற பாதிப்புகளில் சிலவற்றை சரிசெய்துகொள்ளலாம்தான், ஆனால் அதற்கு அவர் பெரும்பாடுபட வேண்டியிருக்கும். இப்படிப்பட்டவர்கள் உண்மையில் “அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:10.
உங்களது தேவை என்ன?
அநேகர் சந்தோஷமான குடும்பம், நல்ல ஆரோக்கியம், நல்ல வேலை, திருப்திகரமான வாழ்க்கை வாழ்வதற்கு போதிய பணம் ஆகியவற்றையே விரும்புகிறார்கள். இந்த நான்குமே வேண்டுமென்றால் சமநிலை அவசியம், ஒருவருடைய முக்கிய குறி பணமாக இருந்தால் அந்தச் சமநிலையைக் காப்பது கடினம். சமநிலையை இழந்தவர்கள், சரியான பாதைக்கு வருவதற்கு குறைந்த வருவாயுள்ள வேலையைத் தேட வேண்டியிருக்கலாம், சிறிய வீடு போதுமானதாக இருக்கலாம், குறைந்த விலையுள்ள காரே திருப்திகரமானதாக இருக்கலாம், சமுதாயத்தில் நடுத்தர வர்க்கத்தினராக வாழவேண்டியிருக்கலாம். உயர்ந்த நெறிகளுக்காக இதுபோன்ற ஆடம்பர வாழ்க்கையை தியாகம் செய்ய அவர்களில் எத்தனை பேர் தயாராயிருக்கிறார்கள்? ‘இதுபோன்ற வசதிகள் எனக்குத் தேவையில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் அவற்றை விட்டுவிட என்னுடைய மனம் இடங்கொடுப்பதில்லை!’ என்று ஒரு பெண் ஒத்துக்கொள்கிறாள். மற்றவர்கள் அவற்றை தியாகம் செய்யத் தயாராயிருக்கிறார்கள், ஆனால், தாங்கள் முதலாவதாக அந்த மாற்றத்தைச் செய்ய தயாராயில்லை.
உங்களைப் பற்றியென்ன? பணத்தையும் பொருளாதார காரியங்களையும் வாழ்க்கையில் அதனதன் இடத்தில் வைப்பவராக இருந்தால் நீங்கள் பாராட்டுக்குரியவர்கள். மறுபட்சத்தில், உங்களுடைய வாழ்க்கை தரத்திற்கு அதிக நேரம் கொடுக்க வேண்டியிருப்பதால் இந்தக் கட்டுரையை வேகவேகமாக படிக்கிறீர்களா? உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஆரோக்கியமாயிருப்பதற்கு சில பொருளாதார ஆதாயங்களை விட்டுக்கொடுத்து தேவையற்ற செலவைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், பொருளாசை தலைதூக்கி உங்கள் குடும்பத்தை சின்னாபின்னமாக்குவதற்கு முன்பே நீங்கள் உறுதியான நிலைநிற்கையை எடுங்கள். செலவுகளை எவ்விதங்களில் குறைக்கலாம் என்பதற்கு இந்தப் பக்கத்திலுள்ள பெட்டியில் சில யோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பொருளாதார காரியங்களை வாழ்க்கையில் அவற்றுக்குரிய இடத்தில் வைத்தால் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருமே உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பயனடைவார்கள். என்றாலும், கிறிஸ்தவர்கள் கவனிக்க வேண்டிய வேறொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, கடவுளோடுள்ள தங்களுடைய உறவுக்கு இடையில் பொருளாதார காரியங்கள் குறுக்கிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஒருவருடைய ஆன்மீக நலனை பொருளாசை எவ்வாறு அச்சுறுத்தலாம், அதைத் தவிர்க்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? அடுத்தக் கட்டுரை இதை விளக்கும்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நன்றிகெட்டவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள், அழுது புலம்பி வாங்கிய பொருள்களும்கூட கொஞ்ச நாட்களிலேயே தூக்கி எறியப்படுகின்றன
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
சமநிலையோடு வாழ்வது
செலவுகளைக் குறைப்பதற்கு, தீர்மானமாயிருப்பதும் கவனமாய் திட்டமிடுவதும் அவசியம். சிலருக்கு உதவிய ஓரிரு குறிப்புகளைக் கவனியுங்கள்.
◼ உங்கள் நிலைமையைக் கண்டறியுங்கள். நீங்கள் வாங்கும் பொருள்களில் எவற்றை நிறுத்தலாம்? நீங்கள் எதையெல்லாம் விட்டொழிக்கலாம்? பத்திரிகை சந்தாக்கள்? மியூசிக் சிடிக்கள்? காருக்கு கூடுதல் உபகரணங்கள்?
◼ கொஞ்ச காலத்திற்கு எளிமையாக வாழ்ந்து பாருங்கள். உண்மையிலேயே எளிமையாக வாழ முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், ஆறு மாதத்திற்கோ ஒரு வருடத்திற்கோ எளிமையாக வாழ்ந்து பார்க்கலாமே. பணத்திற்கும் சொத்திற்கும் நீங்கள் செலவிட்ட அந்த மணித்துளிகள் உண்மையிலேயே உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததா, சந்தோஷத்தைக் குறைத்ததா என்பதை நீங்களே சோதித்துப் பாருங்கள்.
◼ வாழ்க்கையை எப்படி எளிமையாக்கலாம் என்பதை உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து தீர்மானியுங்கள். அப்படிச் செய்தால் அவர்களும் தங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவுவார்கள், அவர்கள் உங்களிடம் கேட்பதை மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகையில் அவ்வாறு செய்வதற்கு நீங்களும்கூட தயங்க மாட்டீர்கள்.
◼ கைச்செலவுக்காக உங்களுடைய பிள்ளைகளுக்குப் பணம் கொடுங்கள். அவர்கள் விரும்புகிற ஒரு பொருளை வாங்குவதற்காக அந்தப் பணத்தை சேமித்து வைக்கலாம் அல்லது அந்தப் பொருள் இல்லாமலே இருந்து விடலாம், இவற்றில் எதைச் செய்தாலும் அதிலிருந்து அவர்கள் பொறுமையாய் இருக்கவும் தங்களிடம் உள்ள பொருள்களை மதிக்கவும் நிச்சயம் கற்றுக்கொள்வார்கள். தீர்மானம் எடுக்கவும் கற்றுக்கொள்வார்கள்.
◼ உங்கள் செலவுகளைக் குறைக்க உதவும் வழிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் வாங்க விரும்பும் அதே பொருள் தள்ளுபடியில் வேறெங்காவது கிடைக்குமா என கண்டறியுங்கள். பட்ஜெட் போடுங்கள். கார்பூல் என்ற முறையைக் கையாளுங்கள். அதாவது, ஒரு வாரம் நீங்கள் மற்றவர்களோடு சேர்ந்து காரில் செல்லலாம், அடுத்த வாரம் உங்களுடைய காரில் மற்றவர்களை ஏற்றிச் செல்லலாம். மின்சாரத்தினாலோ கியாஸினாலோ இயங்கும் சாதனங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். சில புத்தகங்களை விலைகொடுத்து வாங்குவதற்குப் பதிலாக நூலகத்திலிருந்து எடுத்துப் படியுங்கள்.
◼ உங்களுக்கிருக்கும் நேரத்தையும் சக்தியையும் பயனுள்ள விதத்தில் செலவழியுங்கள். நீங்கள் உங்கள் செலவுகளைக் குறைப்பது பொருளுடைமைகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல, ஆனால் அதிக முக்கியமானவற்றுக்கு கவனம் செலுத்துவதற்காகவே, அதாவது, உங்கள் குடும்பத்தினரோடும் உங்கள் நண்பர்களோடும் நேரம் செலவிடுவதற்காகவே என்பதை நினைவில் வையுங்கள், நீங்கள் அதைச் செய்கிறீர்களா?
[பக்கம் 6-ன் படம்]
செல்வந்தராவதில் தீர்மானமாய் இருப்பது திருமண பந்தத்தில் விரிசலை உண்டாக்கக்கூடும்