சூதாட்டத்தை பைபிள் கண்டனம் செய்கிறதா?
அழகும் பணமும் கொட்டிக் கிடக்கிற டிப்-டாப்பான ஆண்களும் பெண்களும் பொழுதுபோக்குக்காக கிளப்புகளுக்குச் சென்று சூதாடும் காட்சிகளையே பிரபல திரைப்படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால், அப்படிப்பட்ட காட்சிகள் வெறும் கற்பனைக் காட்சிகள் என்பது பெரும்பாலோருக்குத் தெரியும்.
நிஜத்தில், சூதாடிகளின் வட்டத்தில் கிளப்புகளுக்குப் போட்டியாக லாட்டரி டிக்கெட்டுகளுக்கும், பந்தயம் கட்டி ஆடும் விளையாட்டுகளுக்கும், இன்டர்நெட் சூதாட்டங்களுக்கும் மவுசு அதிகமாகிக்கொண்டு வருகிறது. சூதாட்டம் என்பது “பாரெங்கும் பரவியிருக்கும் ஒரு தீய மோகம்” என இன்டர்நெட் சூதாட்டம் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. இன்று டிவியிலும் இன்டர்நெட்டிலும் சீட்டாட்டம் ஒரு பிரபல விளையாட்டாகக் காட்டப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி அமெரிக்காவில் 18 மாதங்களுக்குள் சீட்டாட்டக்காரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்ததென ஒரு செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
சூதாட்டம் என்பது, முடிவு என்னவாக இருக்குமென தெரியாமலேயே காசு வைத்துப் பந்தயம் கட்டி ஆடும் விளையாட்டு என விவரிக்கப்படுகிறது. ஒரு நபர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஆடும்வரை, அதற்கு அடிமையாகாதவரை, சூதாடுவதில் எந்தத் தவறும் இல்லையென அநேகர் நினைக்கிறார்கள். சொல்லப்போனால், “மற்ற பொறுப்புகளைக் கவனிக்காமல் சூதாட்டமே உலகம் என்றிருந்தால் மட்டும்தான் பாவம், மற்றபடி அதில் பாவம் இல்லை” என்று புதிய கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) சொல்கிறது. என்றாலும், அந்தக் கருத்துக்கு ஆதாரமாக எந்த பைபிள் வசனங்களையும் அது குறிப்பிடுவதில்லை. அப்படியென்றால், சூதாட்டத்தை ஒரு கிறிஸ்தவர் எப்படிக் கருத வேண்டும்? சூதாடுவது அவ்வளவு பெரிய தவறு இல்லையென பைபிள் சொல்கிறதா? அல்லது அது பெரிய தவறு எனச் சொல்கிறதா?
சூதாட்டத்தைப் பற்றி பைபிள் நேரடியாக எதுவும் குறிப்பிடுவதில்லை. என்றாலும், இவ்விஷயத்தில் அது எந்த வழிநடத்துதலையும் தருவதில்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு செயலுக்கும் சூழ்நிலைக்கும் சட்டதிட்டங்களை வகுப்பதற்குப் பதிலாக, “யெகோவாவின் சித்தம் என்னவென்று பகுத்துணர்ந்துகொண்டே இருங்கள்” என்ற அறிவுரையை அது நமக்கு வழங்குகிறது. (எபேசியர் 5:17) “பகுத்துணர்ந்து” என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஒரு விஷயத்தோடு சம்பந்தப்பட்ட அம்சங்களை “நினைத்துப் பார்ப்பதன் மூலமாகவும், ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பதன் மூலமாகவும்” கோர்வைப்படுத்துவதைக் குறிக்கிறதென ஈ. டபிள்யூ. புலிங்கர் என்ற பைபிள் அறிஞர் சொல்கிறார். ஆகவே, ஒரு கிறிஸ்தவர் சூதாட்டத்தைக் குறித்த கடவுளுடைய சித்தத்தை எவ்வாறு பகுத்துணரலாம்? அது சம்பந்தப்பட்ட பைபிள் நெறிமுறைகளை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்துக் கோர்வைப்படுத்துவதன் மூலமாகும். இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் வசனங்களை நீங்கள் பைபிளிலிருந்து வாசித்துப் பார்க்கும்போது உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சூதாட்டம் இந்த வசனத்திற்கு ஒத்துப்போகிறதா? இவ்விஷயத்தில் கடவுளுடைய சித்தம் என்னவென்று அவரது புத்தகம் சொல்கிறது?’
அதிர்ஷ்டம் என்ற வசீகர வலை
சூதாட்டம் என்பது, முடிவு என்னவாக இருக்குமெனத் தெரியாமலேயே பந்தயம் கட்டி ஆடும் ஆட்டமாக இருப்பதால், அதில் அதிர்ஷ்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, அதுவும் பணம் வைத்துப் பந்தயம் கட்டப்படும்போது. (அதிர்ஷ்டம் அல்லது யோகம் என்பது என்ன நடக்கும் என்பதைக் கட்டுப்படுத்தும் ஏதோவொரு மர்ம சக்தி எனக் கருதப்படுகிறது.) உதாரணத்திற்கு, மக்கள் ராசியான எண்களைப் பார்த்துத் பார்த்துத்தான் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள்; சூதாட்டங்களில், பகடைக் காயை ஒரு ஊது ஊதிய பிறகுதான் உருட்டிவிடுகிறார்கள்; மூடநம்பிக்கைகளோடு சம்பந்தப்பட்ட மா-ஜாங் சூதாட்டத்தில் சில வார்த்தைகளைச் சொன்னால் அபசகுனமென நினைத்து சீனர்கள் அவற்றைத் தவிர்க்கிறார்கள். சூதாடிகள் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்? ஏனென்றால், ஆட்டத்தில் தாங்கள் ஜெயிப்பார்களா இல்லையா என்பது அதிர்ஷ்டத்தின் கையில் இருக்கிறது அல்லது இருக்கலாம் என நினைக்கிறார்கள்.
அதிர்ஷ்டத்தை நம்பி பந்தயம் கட்டுவது தீங்கற்ற விளையாட்டுதானா? பூர்வ இஸ்ரவேலரில் சிலர் அப்படித்தான் நினைத்தார்கள். அதிர்ஷ்டத்தால் தங்களுக்குச் செல்வச்செழிப்பு உண்டாகுமென நம்பினார்கள். ஆனால், யெகோவா தேவன் அதை எப்படிக் கருதினார்? தமது தீர்க்கதரிசியான ஏசாயாவின் மூலம் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவைவிட்டு என் பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்களே, நீங்கள் அதிஷ்டம் என்னும் தேவதைக்குப் படைப்புப்போட்டு, விதி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை வார்க்கிறீர்கள்.” (ஏசாயா 65:11, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆகவே, கடவுளுடைய கண்ணோட்டத்தில், அதிர்ஷ்டத்தை நம்புவது உருவ வழிபாட்டுக்குச் சமமாகும்; அது, உண்மை வணக்கத்திற்கு எதிரானது. ஏனென்றால், உண்மைக் கடவுளை நம்புவதற்குப் பதிலாக ஒரு கற்பனை சக்தியை நம்புவதாக இருக்கிறது. அன்றும் சரி இன்றும் சரி, கடவுளுடைய கண்ணோட்டம் இதுவாகத்தான் இருக்கிறது.
சூதாடிகள் ஜெயிக்கிற பணம் எங்கிருந்து வருகிறது?
இன்டர்நெட்டில் சூதாடினாலும் சரி, லாட்டரி டிக்கெட் வாங்கினாலும் சரி, விளையாட்டுகளில் பந்தயம் கட்டினாலும் சரி, கிளப்புகளில் சீட்டாடினாலும் சரி, சூதாடிகள் தாங்கள் ஜெயிக்க நினைக்கும் பணம் எங்கிருந்து வருகிறதென்பதை யோசிப்பதில்லை. சூதாட்டம், சட்டப்பூர்வ கொடுக்கல் வாங்கலிலிருந்து வித்தியாசப்படுகிறது; ஏனென்றால், சூதாடிகள் மற்றவர்களுடைய நஷ்டத்தில் லாபம் சம்பாதிக்கத் துடிக்கிறார்கள்.a “ஒவ்வொரு முறையும் லாட்டரி அடித்து ஒருவர் கோடீஸ்வரராகும்போது லட்சக்கணக்கானவர்களுடைய முதலீடு நஷ்டமடைகிறது!” என்று கனடாவிலுள்ள (அடிமைத்தனத்திற்கும் மனநலத்திற்குமான) ஒரு மையம் சொல்கிறது. இந்த விஷயத்தில் கடவுளுடைய எண்ணத்தைப் புரிந்துகொள்ள என்ன பைபிள் நியமங்கள் ஒரு கிறிஸ்தவருக்கு உதவும்?
இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் கடைசி கட்டளை இவ்வாறு குறிப்பிட்டது: ‘பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.’ (யாத்திராகமம் 20:17, பொது மொழிபெயர்ப்பு) ஆக, அடுத்தவருடைய உடைமைகளை, சொத்துசுகங்களை அல்லது பணத்தை அடைய விரும்புவது படுமோசமான பாவமாகக் கருதப்பட்டது; ஆம், அடுத்தவருடைய மனைவியை அடைய விரும்புவதற்குச் சமமாகக் கருதப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு அப்போஸ்தலன் பவுல், இந்தக் கட்டளையைக் கிறிஸ்தவர்களிடம் மீண்டும் குறிப்பிட்டு, “பேராசைப்படக் கூடாது” என்றார். (ரோமர் 7:7) மற்றவர்களுடைய நஷ்டத்தில் லாபம் பெற நினைக்கிற ஒரு கிறிஸ்தவர் பேராசைக்கு இடங்கொடுக்கிறாரா?
“[சூதாடிகள்] ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, அவர்கள் கையில் நாலு காசு மட்டுமே இருந்தாலும் விளையாட ஆரம்பிப்பதற்கு முன்பே கற்பனையில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்; ஆம், பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுவதுபோல் ஆகாயக்கோட்டை கட்ட ஆரம்பித்துவிடகிறார்கள்” என்று ஜே. ஃபிலிப் வோகல் என்ற பத்திரிகை எழுத்தாளர் எழுதினார். உட்கார்ந்த இடத்திலிருந்து சில மணிநேரத்திலேயே கத்தை கத்தையாகச் சம்பாதிக்கலாமென அவர்கள் பகற்கனா காண்கிறார்கள். இது பைபிள் தரும் புத்திமதிக்கு நேர்மாறாக இருக்கிறது; ஒரு கிறிஸ்தவர், “இல்லாதவர்களுக்குக் கொடுக்கும்படி தானே தன் கையால் பாடுபட்டு நேர்மையாக உழைக்க” வேண்டுமென அது சொல்கிறது. (எபேசியர் 4:28) “வேலை செய்ய ஒருவனுக்கு மனமில்லை என்றால், அவன் சாப்பிடவும் கூடாது” என்றும், ஒவ்வொருவரும் “தாங்களே உழைத்துச் சாப்பிட வேண்டுமென்றும்” அப்போஸ்தலன் பவுல் தெளிவாகக் குறிப்பிட்டார். (2 தெசலோனிக்கேயர் 3:10, 12) ஆனால், சூதாட்டத்தை நேர்மையான வேலை எனச் சொல்ல முடியுமா?
சூதாடிகள் விளையாட்டில் “கருமமே கண்ணாக” இருக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்குக் கிடைக்கும் லாபம் ஜெயித்து பெற்ற ஒன்றாகத்தான் இருக்கும், சம்பாதித்த ஒன்றாக இருக்காது; ஆம், உழைப்புக்குப் பெற்ற ஊதியமாக இருக்காது. சூதாட்டத்தில் நஷ்டம் ஏற்பட பெருமளவு வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தே, அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பியே, சூதாடிகள் பணத்தைப் போடுகிறார்கள்; சீக்கிரத்தில் வட்டியும் முதலுமாகக் கையில் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பிலேயே விளையாடுகிறார்கள். சுருங்கச் சொன்னால், சட்டியில் இல்லாமல் அகப்பையில் எடுக்க வழிதேடுகிறார்கள். ஆனால், நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும்படி உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. ‘உண்பதையும் குடிப்பதையும் தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை’ என்று ஞானியான சாலொமோன் ராஜா எழுதினார்; “இந்த வாய்ப்பும் கடவுள் தந்ததே” என்றும் எழுதினார். (பிரசங்கி 2:24, பொ.மொ.) ஆம், கடவுளுடைய ஊழியர்கள் கற்பனைக் கோட்டையைக் கட்டுவதுமில்லை, பணம் சம்பாதிக்க குறுக்கு வழிகளைத் தேடுவதுமில்லை; மாறாக, சந்தோஷத்தையும் ஆசீர்வாதங்களையும் பெற கடவுளையே சார்ந்திருக்கிறார்கள்.
தவிர்க்க வேண்டிய “கண்ணி”
சூதாடுபவர் ஒருவேளை ஜெயித்தாலும், அதனால் கிடைக்கும் தற்காலிக சந்தோஷத்தைப் பற்றி மட்டுமல்ல, நீண்ட கால பாதிப்பைப் பற்றியும் நன்கு சிந்திக்க வேண்டும். “ஆரம்பத்தில் பேராசையினால் பெற்ற சொத்து, முடிவிலே ஆசீர்வாதம் தராது” என்று நீதிமொழிகள் 20:21 (NW) சொல்கிறது. லாட்டரி அடித்து லட்சாதிபதியான பலரும், வேறு வித சூதாட்டங்களில் சொத்து சேர்த்த பலரும் கசப்பான ஒரு பாடத்தைக் கற்றிருக்கிறார்கள்; ஆம், சூதாட்டத்தில் ஜெயிக்கும் பணம் சந்தோஷத்தைத் தருவதில்லையெனக் கற்றிருக்கிறார்கள். “நிலையற்ற செல்வங்கள்மீது நம்பிக்கை வைக்காமல், நம்முடைய மகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் அள்ளி வழங்குகிற கடவுள் மீதே நம்பிக்கை வைக்க வேண்டுமென்று” பைபிள் சொல்லும் புத்திமதிக்குச் செவிசாய்ப்பது எவ்வளவு நல்லது!—1 தீமோத்தேயு 6:17.
சூதாட்டத்திற்கு வெற்றி, தோல்வி என்ற ஒரு பக்கம் மட்டுமல்ல, இன்னும் மோசமான மறுபக்கமும் உண்டு. “பணக்காரராவதில் குறியாக இருக்கிறவர்கள், சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்; அதோடு, தீங்கிழைக்கும் முட்டாள்தனமான பலவித ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்; இவை மனிதர்களைக் கேட்டிலும் அழிவிலுமே அமிழ்த்துகின்றன” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:9) இரையைச் சிக்க வைப்பதற்காகத்தான் கண்ணி வைக்கப்படுகிறது. கொஞ்ச பணத்தை வைத்து மட்டுமே சூதாட நினைத்த அல்லது ஒரு சில முறை மட்டுமே சூதாட நினைத்த எக்கச்சக்கமானோர் அதன் மாய வலையில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதனால் வேலையைப் பறிகொடுத்திருக்கிறார்கள், அன்பானவர்களின் மனதைச் சுக்குநூறாக்கியிருக்கிறார்கள், தங்கள் குடும்பங்களைச் சீரழித்திருக்கிறார்கள்.
சூதாட்டம் சம்பந்தப்பட்ட அநேக வசனங்களைச் சிந்தித்த பிறகு, இதைக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறீர்களா? “இந்த உலகத்தின் பாணியின்படி நடப்பதை விட்டுவிடுங்கள்; உங்கள் மனம் புதிதாக்கப்படுவதற்கும், அதன் மூலம் உங்கள் குணாதிசயம் மாற்றப்படுவதற்கும் இடங்கொடுங்கள்; அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்” என்று அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களிடம் சொன்னார். (ரோமர் 12:2) இந்த உலகம் போகிற போக்கில் போகாமல், கடவுளுடைய சித்தத்திற்கு இசைய நாம் வாழ வேண்டும். ‘சந்தோஷமுள்ள கடவுளான’ யெகோவா, நாம் வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டுமென விரும்புகிறார்; ஆம், சூதாட்டமெனும் கண்ணியில் சிக்கி வேதனைப்படாதிருக்க வேண்டுமென விரும்புகிறார்.—1 தீமோத்தேயு 1:11. (w11-E 03/01)
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, நவம்பர் 8, 2000 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 27-29-ல் வெளிவந்துள்ள கட்டுரை, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் சூதாட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது.
[பக்கம் 32-ன் சிறுகுறிப்பு]
கடவுளுடைய ஊழியர்கள் நேர்மையாய் உழைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள்
[பக்கம் 31-ன் பெட்டி]
வெற்றிப் பரவசம்
சூதாட்டம் எளிதில் ஒரு பழக்கமாகி, கடைசியில் அடிமைப்படுத்திவிடுமா? வெற்றி, தோல்வி பற்றிய சூதாடிகளின் கருத்துகளை ஆய்வுசெய்த டாக்டர் ஹான்ஸ் பிரைட்டர் இவ்வாறு சொல்கிறார்: “கொகெயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் கொகெயினை எடுத்துக்கொள்ளும்போது எவ்வாறு பரவசமடைவார்களோ அவ்வாறே சூதாடுபவர்கள் பணத்தை ஜெயிக்கும்போது பரவசமடைகிறார்கள்.”
[பக்கம் 31-ன் படம்]
சூதாடிகள் யாருடைய பணத்தை ஜெயிக்கத் துடிக்கிறார்கள்?