கடவுளுடைய ராஜ்ய அரசாங்கம்—இன்று நிஜமாகிறது
“இத்தனை அநேக நாடுகளால் எப்படி ஒன்றிணைய முடியும்? அதுவும் வளர்ச்சியின் வெவ்வேறு படிகளிலுள்ள அந்த நாடுகளால், பலதரப்பட்ட பண்பாடுகளை உடைய அந்த நாடுகளால் எப்படி ஒன்றிணைய முடியும்? மற்றொரு கிரகத்திலிருந்து ஏதோவொரு தாக்குதல் நடத்தப்பட்டால்தான் மனிதகுலமே ஒன்றிணையும் என்பதாக சிலர் சொல்கிறார்கள்.”—தி ஏஜ், ஆஸ்திரேலிய செய்தித்தாள்.
என்ன, மற்றொரு கிரகத்திலிருந்து தாக்குதலா? அப்படியொரு தாக்குதல் பூமியிலுள்ள எல்லா தேசங்களையும் நிஜமாகவே ஒன்றிணைக்கப் போகிறதா இல்லையாவென்று நமக்குத் தெரியாது; என்றாலும் அகில உலக தேசங்களையெல்லாம் கூட்டுச் சேர வைக்கப் போகிற ஒரு நெருக்கடி நிலை தீவிரித்து வருவதாக பைபிள் தீர்க்கதரிசனம் உரைக்கிறது. சொல்லப்போனால், அந்த நெருக்கடி நிலை, பூமிக்கு அப்பாற்பட்ட சக்திகளாலேயே ஏற்படப் போகிறது.
பூர்வ இஸ்ரவேலை சேர்ந்த தாவீது ராஜா உலகளாவிய விதத்தில் நிகழப் போகும் அந்த நிலையைப் பற்றி தீர்க்கதரிசன வார்த்தைகளில் பேசினார். தெய்வீக ஏவுதலினால் அவர் பின்வருமாறு எழுதினார்: “கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” NW] விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனை பண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்து போடுவோம் என்கிறார்கள்.” (சங்கீதம் 2:2, 3; அப்போஸ்தலர் 4:25, 26) இந்த சர்வலோகத்தை சிருஷ்டித்த யெகோவாவுக்கு விரோதமாகவும் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு, அதாவது அவரால் நியமிக்கப்பட்ட ராஜா இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் இவ்வுலக ஆட்சியாளர்கள் ஒன்றாக கூட்டங்கூடுவார்கள் என்பதை கவனியுங்கள். அது எவ்வாறு நடக்கும்?
இயேசு கிறிஸ்துவை ராஜாவாக கொண்ட கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை பைபிள் காலக்கணக்கும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும் காண்பிக்கின்றன.a அந்த சமயத்தில் அனைத்து தேசங்களுக்கும் பொதுவாக ஒரே யோசனைதான் இருந்தது. புதிதாக பிறந்த கடவுளுடைய ராஜ்யத்தின் பேரரசாட்சிக்கு கீழ்ப்பட்டிருப்பதற்கு பதிலாக, அதிகாரத்திற்கான போராட்டத்தில், அதாவது மகா யுத்தமான முதல் உலகப் போரின் கொந்தளிப்பில் அவை சிக்கியிருந்தன.
மனித ஆட்சியாளர்களுடைய இத்தகைய பிரதிபலிப்பை யெகோவா எப்படி கருதுகிறார்? “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.” பிறகு, அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவான தம்முடைய குமாரனிடம்: “என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப் போல் அவர்களை உடைத்துப் போடுவீர்” என்று யெகோவா சொல்லுவார்.—சங்கீதம் 2:4, 5, 8, 9.
கடவுளுக்கு விரோதமாக எழும்புகிற தேசங்கள் கடைசியாக இருப்புக்கோலால் சுக்குநூறாக உடைத்துப் போடப்படும் சம்பவம் அர்மகெதோனில் நடந்தேறும். பைபிளின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் அந்தக் கடைசிக்கட்ட சம்பவத்தை ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தம்’ என விவரிக்கிறது; அந்த யுத்தத்திற்காக ‘பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள்’ கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். (வெளிப்படுத்துதல் 16:14, 16) பேய்த்தன செல்வாக்கின் கீழ், பூலோகத்து தேசங்களெல்லாம் ஒரே குறிக்கோளுடன் இறுதியில் ஒன்றிணையும், ஆம், சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு விரோதமாக யுத்தம் செய்யும் குறிக்கோளுடன் ஒன்றிணையும்.
கடவுளுடைய பேரரசாட்சிக்கு விரோதமாக மனிதர்கள் ஒன்றிணையப் போகும் நேரம் வேகமாய் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்களுடைய “ஒற்றுமை” அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் அளிக்கப் போவதில்லை என்பதுதான். அதற்கு பதிலாக, முழு மனிதவர்க்கமும் ஆண்டாண்டு காலமாய் ஆர்வத்துடன் காத்திருந்த சமாதானத்திற்கான ஓர் ஆரம்ப நிகழ்ச்சியாகத்தான் அது இருக்கப் போகிறது. எவ்வாறு? அந்தக் கடைசி யுத்தத்தில், கடவுளுடைய ராஜ்யம் “[உலகத்தின்] அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) ஆம், எந்த மனித அமைப்பும் அல்ல, ஆனால் கடவுளுடைய ராஜ்யம்தான் சமாதானத்திற்கான மனிதகுலத்தின் ஆசையை நிறைவேற்றுகிற அரசாங்கமாக இருக்கும்.
ராஜ்ய அரசாங்கத்தின் பிரதான நிர்வாகி
“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று நல்மனமுள்ள அநேகர் ஜெபிப்பது கடவுளுடைய அந்த ராஜ்யத்திற்காகத்தான். (மத்தேயு 6:10) அந்த ராஜ்யம் புரிந்துகொள்ள முடியாத ஏதோவொரு இருதயநிலை அல்ல, ஆனால் அது ஓர் உண்மையான அரசாங்கம்; 1914-ல் அதன் ஆட்சி பரலோகத்தில் ஆரம்பித்ததிலிருந்து அது அற்புதமான காரியங்களை நிறைவேற்றி வந்திருக்கிறது. அந்த ராஜ்யம் இன்று முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு நிஜமான அரசாங்கம் என்பதை காண்பிக்கிற சில முக்கிய குறிப்புகளை இப்போது சிந்திக்கலாம்.
முதலாவதாக, முடிசூட்டப்பட்ட ராஜாவான இயேசு கிறிஸ்துவின் தலைமையில் வல்லமையும் திறமையுமிக்க ஒரு நிர்வாகப் பிரிவு அந்த ராஜ்யத்தில் செயலாற்றி வருகிறது. இயேசு கிறிஸ்துவை பொ.ச. 33-ல் கிறிஸ்தவ சபையின் தலைவராக யெகோவா தேவன் நியமித்தார். (எபேசியர் 1:22, 23) அன்றிலிருந்து, இயேசு தம்முடைய தலைமை வகிப்பை பிரயோகிப்பதன் மூலம் தமது நிர்வாகத் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார். உதாரணமாக, முதல் நூற்றாண்டின்போது, யூதேயாவில் பெரும் பஞ்சம் தாக்கிய சமயத்தில் கிறிஸ்தவ சபையானது அதன் அங்கத்தினருக்கு உதவ உடனடியாக செயலில் இறங்கியது. நிவாரணப் பணிகள் ஒழுங்கமைக்கப்பட்டன; இதற்கான நிதி உதவி அந்தியோகியாவிலிருந்து பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்தனுப்பப்பட்டது.—அப்போஸ்தலர் 11:27-30.
அப்படியானால், ராஜ்ய அரசாங்கம் செயல்பட்டு வரும் இந்த வேளையில் இயேசு கிறிஸ்து அதைவிட இன்னும் அதிகத்தை செய்வார் என நாம் எதிர்பார்க்கலாம். எப்போதெல்லாம் பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள், வெள்ளங்கள், சூறாவளிகள், புயல்கள், எரிமலை வெடிப்புகள் போன்ற பேரழிவுகள் நேரிடுகின்றனவோ அப்போதெல்லாம் யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபையானது பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உடன் விசுவாசிகளுக்கும் மற்றவர்களுக்கும் சட்டென்று உதவிக்கரம் நீட்டுகிறது. உதாரணத்திற்கு, 2001-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் எல்சால்வடார் நாட்டில் படு பயங்கர பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டபோது நாடெங்கும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன; கனடா, குவாதமாலா, அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் தொகுதி தொகுதியாக வந்து உதவியளித்தனர். வணக்கத்திற்காக அவர்கள் பயன்படுத்திய மூன்று மன்றங்களும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளும் மளமளவென்று திரும்பக் கட்டப்பட்டன.
கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தின் குடிமக்கள்
கடவுளுடைய பரலோக ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட நாள் தொடங்கி, அதன் குடிமக்களை எட்டுத்திக்கிலிருந்தும் கூட்டிச் சேர்த்து வருகிறது, அவர்களை ஒழுங்கமைத்தும் வருகிறது. இது ஏசாயாவினால் பதிவு செய்யப்பட்ட பிரமாண்டமான ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருக்கிறது: ‘கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் [உயர்த்தப்பட்ட அவருடைய மெய் வணக்கம்] பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படும், . . . எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள்.’ இந்தத் தீர்க்கதரிசனம், “திரளான ஜனங்கள்” அந்தப் பர்வதத்திற்கு போவார்கள் என்றும் யெகோவாவின் போதனைகளையும் சட்டங்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் காண்பிக்கிறது.—ஏசாயா 2:2, 3.
இந்தச் செயல் நவீன காலங்களில் மிக மிக குறிப்பிடத்தக்க ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறது, அதாவது 230-க்கும் அதிக நாடுகளில் 60,00,000-க்கும் மேலான கிறிஸ்தவர்களால் ஆன சர்வதேச சகோதரத்துவத்தை உருவாக்கியிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாடுகளில் இனம், மொழி, பண்பாடு ஆகிய தடைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, அங்கே அன்பையும், சமாதானத்தையும், ஐக்கியத்தையும் காண்பவர்கள் பெரும்பாலும் அப்படியே வாயடைத்துப் போகிறார்கள். (அப்போஸ்தலர் 10:34, 35) ஓர் அரசாங்கத்தால் நூற்றுக்கணக்கான இனப்பிரிவுகளை சமாதானத்திலும் ஐக்கியத்திலும் இணைக்க முடிகிறதென்றால், அது திறம்பட்ட அரசாங்கமாக, நிலையான அரசாங்கமாக, நிஜமான அரசாங்கமாகத்தான் இருக்க வேண்டுமென்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா?
கடவுளுடைய ராஜ்யமும் கல்வியும்
ஒவ்வொரு அரசாங்கமும் அதன் குடிமக்களிடம் குறிப்பிட்ட சில தராதரங்களை எதிர்பார்க்கிறது; அந்த அரசாங்கத்தின் கீழ் வாழ விரும்புபவர்கள் அனைவருமே அந்தத் தராதரங்களை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல, கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாகவிருக்கும் எல்லாரும் அதற்குரிய தராதரங்களை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால், பெருமளவு வித்தியாசப்பட்ட பின்னணி உடைய இத்தனை அநேகரை ஒரேவித தராதரங்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதும், அவற்றை பின்பற்றச் செய்வதும் உண்மையிலேயே லேசுப்பட்ட காரியமல்ல, அது மிகப் பிரமாண்டமான வேலை. எனவே, ஜனங்களுடைய மனதை மட்டுமல்ல இருதயத்தையும் தொட்டு அவர்களை மறுரூபமாக்கச் செய்கிற இந்த மிகச்சிறந்த கல்வித்திட்டமே கடவுளுடைய ராஜ்யம் நிஜமானது என்பதற்கு மற்றொரு அத்தாட்சியாக இருக்கிறது.
சவால்மிக்க இந்த வேலையை கடவுளுடைய ராஜ்ய அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றுகிறது? அப்போஸ்தலர்களைப் போலவே “வீடுகள்தோறும்” பிரசங்கிப்பதன் மூலமும் தனிப்பட்டோருக்கு கடவுளுடைய வார்த்தையை கற்றுத்தருவதன் மூலமும் நிறைவேற்றுகிறது. (அப்போஸ்தலர் 5:42; 20:20) இவ்வகையான கல்வித்திட்டம் எந்தளவு பலன் தருகிறது? ஷாக் ஜான்ஸன் என்ற ஒரு கத்தோலிக்க பாதிரி, யெகோவாவின் சாட்சிகளோடு படிப்பதிலிருந்து ஒரு பெண்ணை தடுப்பதற்காக முயற்சிகள் எடுத்தார்; அதைப் பற்றி கனடா நாட்டு வாராந்தர செய்தித்தாள் ஒன்றில் அவர் பின்வருமாறு எழுதினார்: “ஜெயிக்க முடியாத ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது போல் உணர்ந்தேன், குழம்பிப் போனேன். வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்த அந்த இளம் தாயிடம் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையை சேர்ந்த பெண்கள் பல மாதங்களாக நெருக்கமான உறவை வளர்த்திருந்த விஷயம் பிற்பாடு எனக்கு புரிய ஆரம்பித்தது. அவளுக்கு உதவுவதன் மூலமும் நட்புடன் பழகுவதன் மூலமும் அவளுடைய இருதயத்தில் அர்த்தமுள்ள பந்தத்தை நிலைநாட்டிக் கொண்டார்கள். அதன்பின், அவள் சீக்கிரத்திலேயே அவர்களுடைய மதத்தில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தாள், அதை தடுக்க என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.” யெகோவாவின் சாட்சிகள் கற்பித்த பைபிள் செய்தியாலும் அவர்களுடைய கிறிஸ்தவ நடத்தையாலும் இந்த முன்னாள் கத்தோலிக்க பெண்ணின் இருதயம் எப்படி தூண்டப்பட்டதோ அப்படியே உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானோரின் இருதயமும் தூண்டப்பட்டு வருகிறது.
இவ்வகையான கல்வி, அதாவது ராஜ்ய கல்வி, பைபிளையே மையமாக கொண்டிருக்கிறது, அதன் நியமங்களையும் அதன் ஒழுக்க தராதரங்களையும் ஆதரிக்கிறது. எந்தவொரு பின்னணியைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் அவர்களை நேசிப்பதற்கும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் கற்றுக் கொடுக்கிறது. (யோவான் 13:34, 35) அதுமட்டுமல்ல, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்ற அறிவுரைக்கு செவிசாய்ப்பதற்கும் மக்களுக்கு உதவுகிறது. (ரோமர் 12:2) லட்சக்கணக்கானோர் தங்களுடைய முன்னாள் வாழ்க்கை முறையை விட்டொழித்து, ராஜ்ய அரசாங்கத்தின் சட்டங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் சந்தோஷமாக கீழ்ப்படிந்து வருகிறார்கள்; இத்தகையோர் தற்போது சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார்கள், அதோடு ஒளிமயமான எதிர்காலமும் அவர்கள் முன் இருக்கிறது.—கொலோசெயர் 3:9-11.
சர்வதேச அளவில் ஐக்கியத்தை பெறுவதற்கு மிகச் சிறந்த உபகரணமாக இருப்பது இந்த காவற்கோபுரம் பத்திரிகைதான். ஒழுங்கமைக்கப்பட்ட மொழிபெயர்ப்பு முறைகள் மூலமாகவும் பல மொழிகளில் பிரசுரிக்க உதவும் நவீன சாதனங்கள் மூலமாகவும், இந்தக் காவற்கோபுர பத்திரிகையிலுள்ள முக்கியமான கட்டுரைகள் ஒரே நேரத்தில் 135 மொழிகளில் வெளியிடப்படுகின்றன; இதனால் உலகெங்குமுள்ள அதன் வாசகர்களில் 95 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் தங்களுடைய சொந்த மொழியில் அதிலுள்ள விஷயங்களை வாசிக்க முடிகிறது.
மார்மன் சர்ச்சை சேர்ந்த ஓர் எழுத்தாளர் தன்னுடைய சர்ச் தவிர, மிஷனரி ஊழியத்தில் வெற்றி சிகரத்தை எட்டியவற்றின் பெயர்களை பட்டியலிட்டார். மிகச் சிறந்த சுவிசேஷ பத்திரிகைகளாக காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!வின் பெயர்களை குறிப்பிட்டுவிட்டு அவர் சொன்னதாவது: “காவற்கோபுர பத்திரிகையோ விழித்தெழு! பத்திரிகையோ மெத்தனப்போக்கை வளர்ப்பதாக எவராலும் குற்றம்சாட்ட முடியாது; அதற்கு மாறாக அவை ஒருவித விழிப்புணர்வையே ஏற்படுத்துகின்றன; இதை வேறெந்த மத வெளியீடுகளிலும் நான் அவ்வளவாக பார்த்ததில்லை. உண்மைகளின் அடிப்படையில் அமைந்துள்ள, நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள, நிஜ உலகம் சம்பந்தப்பட்டுள்ள பொருத்தமான கட்டுரைகள் அடங்கிய இப்பத்திரிகைகள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன.”
கடவுளுடைய ராஜ்யம் நிஜமானது என்பதற்கும் அது முழுவீச்சில் இன்று செயல்பட்டு வருகிறது என்பதற்கும் மறுக்க முடியாத ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷ”த்தை தங்களுடைய அண்டை அயலாரிடம் சொல்லி, அவர்களை அதன் குடிமக்களாகும்படி அழைக்கிறார்கள். (மத்தேயு 24:14) அத்தகைய ஓர் எதிர்பார்ப்பு உங்கள் மனதை சுண்டி இழுக்கிறதா? அந்த ராஜ்யத்தைப் பற்றிய கல்வியறிவை பெற்று, அதன் தராதரங்களின்படி வாழ பிரயாசப்படுகிறவர்களோடு கூட்டுறவு வைத்துக் கொள்வதால் வரும் ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவித்து மகிழலாம். அதற்கும் மேலாக, அந்த ராஜ்ய ஆட்சியின் கீழ், கடவுள் வாக்குறுதி அளித்துள்ள புதிய உலகில், அதாவது “நீதி வாசமாயிருக்கும்” புதிய உலகில் வாழப்போகிற நம்பிக்கையிலும் களிகூரலாம்.—2 பேதுரு 3:13.
[அடிக்குறிப்பு]
a விவரமான கலந்தாலோசிப்புக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் பக்கங்கள் 90-7-ல், “கடவுளுடைய ராஜ்யம் ஆளுகை செய்கிறது” என்ற தலைப்பிலுள்ள 10-வது அதிகாரத்தை பார்க்கவும்.
[பக்கம் 4, 5-ன் படம்]
1914-ல் தேசங்கள் ஓர் உலகளாவிய போரின் கொந்தளிப்பில் சிக்கியிருந்தன
[பக்கம் 6-ன் படங்கள்]
மனமுவந்து செய்யப்படுகிற நிவாரணப் பணி கிறிஸ்தவ அன்பிற்கு நடைமுறையான ஓர் அத்தாட்சி
[பக்கம் 7-ன் படம்]
உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் ஒரே கல்வித் திட்டத்திலிருந்து பயனடைகிறார்கள்