கிள்ளுக் கீரையாகக் கருதப்படுகிறீர்களா?
“ஸ்பெயினில் நான் ஒன்றாம் வகுப்பு படித்தபோது, நான் ரொம்பவே குள்ளமாக இருந்ததால் என் வகுப்பிலிருந்த மற்ற பிள்ளைகள் எனக்குப் பட்டப்பெயர்களை வைத்துக் கூப்பிட்டு கேலி செய்தார்கள். நான் அழாமல் வீடு திரும்பிய நாளே இல்லை என்று சொல்லலாம்.”—ஜெனீஃபர், பிலிப்பீன்ஸைச் சேர்ந்த குடியேறியின் மகள்.
“நான் புதிய ஸ்கூலுக்கு மாறியபோது அங்கிருந்த வெள்ளைக்கார மாணவர்கள், கேலிப் பெயர்களை வைத்துக் கூப்பிட்டு என்னை இழிவுபடுத்தினார்கள். அவர்கள் வேண்டுமென்றே என்னைச் சண்டைக்கு இழுக்கப் பார்த்தார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. எப்படியோ நான் அமைதியாக இருந்துவிட்டேன்; ஆனால், மனதுக்குள் ரொம்ப வேதனைப்பட்டேன், ஒதுக்கப்பட்டதைப் போல் உணர்ந்தேன்.”—தீமோத்தி, ஆப்பிரிக்க அமெரிக்கர்.
“எனக்கு ஏழு வயதாக இருந்தபோது, நைஜீரியாவிலுள்ள இக்போ, ஹௌசா இனத்தார் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. அந்தப் பகைமை என்னையும் தொற்றிக்கொண்டது; என் வகுப்பிலிருந்த ஹௌசா இனப் பையனை நான் கேலி செய்ய ஆரம்பித்தேன், இத்தனைக்கும் அவன் என் நண்பன்.” —ஜான், இக்போ இனத்தைச் சேர்ந்தவர்.
“நானும் என்னோடு சேர்ந்து மிஷனரி ஊழியம் செய்தவரும் பைபிள் செய்தியை எங்கள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு அறிவித்து வந்தோம்; அப்போது, அங்கிருந்த பாதிரிகள் தூண்டிவிட்டதால் சில பிள்ளைகள் பின்னாலேயே வந்து எங்கள்மீது கற்களை வீசினார்கள். அந்த ஊரைவிட்டே எங்களைத் துரத்த வேண்டும் என்பதுதான் அந்தப் பாதிரிகளின் விருப்பம்.”—ஆல்கா.
பாகுபாடு காரணமாக, நீங்கள் எப்போதாவது அநியாயமாக நடத்தப்பட்டிருக்கிறீர்களா? உங்களுடைய பொருளாதார நிலை, நிறம், மதம், பாலினம், ஏன், வயது காரணமாகக்கூட நீங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டிருக்கலாம். இப்படிச் சதா நடத்தப்படுகிறவர்கள், நாளைக்கும் இந்தக் கதிதானே என்று நினைத்துப் பயத்தோடு வாழ்கிறார்கள். ஒரு கும்பலைக் கடந்து செல்லும்போது, கடைக்குள் போகும்போது, புதிய ஸ்கூலுக்கு மாறும்போது, அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது பீதியில் அவர்கள் நெஞ்சம் படபடத்துக்கொண்டே இருக்கலாம்.
அதோடு, பாரபட்சத்திற்கும் பாகுபாட்டிற்கும் பலியாகிறவர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடலாம், தரமான சிகிச்சை பெற முடியாமல் தவிக்கலாம், நல்ல பள்ளிகளில் சேர வாய்ப்பில்லாமல் கஷ்டப்படலாம், அல்லது சில சலுகைகளும் சட்டப்பூர்வ உரிமைகளும் கிடைக்காமல் வேதனைப்படலாம். பேதத்திற்கும் பாகுபாட்டிற்கும் அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு இருக்கும்போது, இனப்படுகொலை போன்ற பயங்கரங்கள் நடக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, முற்காலத்தில் இப்படிப்பட்ட ஓர் இனப்படுகொலை நடக்கவிருந்ததைப் பற்றி பைபிளில் எஸ்தர் என்ற புத்தகம் சொல்கிறது. பகைமையும் பாரபட்சமும் எங்குபோய் முடிந்தன என்பதை அதில் கவனியுங்கள்.—எஸ்தர் 3:5, 6.
பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும்கூட ஏற்றத்தாழ்வும் வேறுபாடும் தொடர்கதையாகலாம். ஐ.நா. மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர் ஆணையர் இவ்வாறு சொல்கிறார்: “மனித உரிமைகளின் சர்வதேச உறுதிமொழியை ஏற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகும் . . . சம வாய்ப்புகள், சம உரிமைகள் சார்ந்த கொள்கைகள் இன்று உலகில் எங்குமே கடைப்பிடிக்கப்படுவதில்லை.” அநேக நாடுகளில் குடியேறிகள் மற்றும் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருப்பதைக் கவனிக்கும்போது இது கவலை அளிக்கிறது.
எனவே, சமத்துவ சமுதாயம் வெறும் கனவுதானா? அல்லது பாரபட்சமும் பாகுபாடும் இல்லாத உலகம் வருமா? இந்தக் கேள்விகளுக்குப் பின்வரும் கட்டுரைகள் பதிலளிக்கும். (g09-E 08)