தப்பெண்ணத்தின் வேர்கள்
எத்தனையோ காரணங்களால் தப்பெண்ணம் தலைதூக்கலாம். என்றாலும், ஆதாரப்பூர்வமான இரண்டு அம்சங்களை அதற்குக் காரணமாக சொல்லலாம்: (1) யார் மீதாவது பழி சுமத்த அலைவது, (2) முன்பு இழைக்கப்பட்ட அநீதியின் நிமித்தம் மனக்கசப்புடன் சீற்றம் கொள்வது.
முந்தின கட்டுரையில் கவனித்தபடி ஏதேனும் பேரழிவு நிகழும்போது யார் மீதாவது பழியைப் போடுவதற்கே பெரும்பாலும் மக்கள் அலைகிறார்கள். பெரும் புள்ளிகள் ஒரு சிறுபான்மை தொகுதியைப் பற்றி எப்போதும் ஏதாவது குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே இருந்தால் அது நிஜம் என்பது போல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது தப்பெண்ணம் பிறக்க வழிசெய்கிறது. இதற்கு ஓர் உதாரணமாக, யாவரும் அறிந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலை நாடுகளில் பொருளாதார சரிவினால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும்போது, அதற்கு அங்குள்ள குடியேறிகள்தான் காரணம் என பழி சுமத்துகிறார்கள்; உண்மையில், உள்ளூர்வாசிகள் பொதுவாக செய்ய மறுக்கிற வேலைகளை அந்தக் குடியேறிகள் ஏற்றுக்கொள்கிறபோதிலும் அவ்வாறு பழி சுமத்துகிறார்கள்.
இருந்தாலும் யார் மீதாவது பழி சுமத்த வேண்டும் என்பதே தப்பெண்ணம் தலைதூக்க எப்போதும் காரணமாக இருப்பதில்லை. அதற்குக் கடந்தகால சரித்திரமும் காரணமாக இருக்கலாம். “கருப்பர்கள் மீதான இனப் பகைமையையும் கலாச்சார வெறுப்பையும் தூண்டி வளர்த்தது அடிமை வியாபாரமே என சொன்னால் அது மிகையாகாது” என குறிப்பிடுகிறது இனப் பகைமைக்கு எதிராக யுனெஸ்கோ (ஆங்கிலம்) என்ற அறிக்கை. ஆப்பிரிக்கர்கள் அடிமட்டத்தவர் என்பதால்தான் அடிமை வியாபாரம் செய்வதாக சொல்லி, தங்கள் வெட்கக்கேடான பிழைப்பை அந்த வியாபாரிகள் நியாயப்படுத்த முயன்றனர். ஆதாரமற்ற இந்தத் தப்பெண்ணம், வேறு பல குடியேற்ற நாடுகளிலும் பிற்பாடு பரவியது, இன்னும் நீடிக்கிறது.
இவ்வாறு, கடந்த கால ஒடுக்குதலும் முன்பு இழைக்கப்பட்ட அநீதியும் சேர்ந்து உலகெங்கும் தப்பெண்ணத்திற்கு இன்னும் எண்ணெய் வார்த்து வருகின்றன. அயர்லாந்தில் கத்தோலிக்கருக்கும் புராட்டஸ்டன்டினருக்கும் இடையே நிலவும் பகைமை 16-ம் நூற்றாண்டில் ஆரம்பமானது; அதாவது, இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் கத்தோலிக்கர்களைத் துன்புறுத்தி, நாடுகடத்தியபோது ஆரம்பமானது. சிலுவைப் போர்களின்போது கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொண்டவர்கள் செய்த அட்டூழியங்கள் மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் மனதில் இன்னமும் கடும் வெறுப்பை தூண்டிவிடுகின்றன. இரண்டாம் உலகப் போரின்போது பொதுமக்கள் கூண்டோடு கொலை செய்யப்பட்டதால் பால்கன் தீபகற்பத்தில் செர்பியர்களுக்கும் குரோஷியர்களுக்கும் இடையிலான பகைமை உசுப்பி விடப்பட்டது. இப்படி ஏதேனும் இரு தரப்பினருக்கிடையே காலங்காலமாக பகைமை தொடர்ந்தால், அது தப்பெண்ணத்தை இன்னமும் வலுவடையச் செய்யலாம் என்பதையே இந்த உதாரணங்கள் காட்டுகின்றன.
அறியாமையை ஊட்டி வளர்த்தல்
ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் மனதில் தப்பெண்ணம் ஏற்பட சாத்தியமே இல்லை. பொதுவாக ஒரு குழந்தை வேற்று இனத்தைச் சேர்ந்த குழந்தையுடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக விளையாட ஆரம்பிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் அவனுக்கு 10, 11 வயதாகையில் வேறொரு குலத்தை, இனத்தை, மதத்தைச் சேர்ந்தவர்களை ஒதுக்கிவிடலாம். அவனது குணாம்சம் வடிவமைக்கப்படுகிற பருவத்தில், எண்ணற்ற விஷயங்களைக் கற்றுக்கொள்கிறான்; அவை வாழ்நாள் முழுவதும் அவனது நெஞ்சைவிட்டு நீங்குவதில்லை.
அவ்விஷயங்களை எப்படி கற்றுக்கொள்கிறான்? சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தப்படுகிற சாதகமற்ற மனப்பான்மைகளிலிருந்து அவன் கற்றுக்கொள்கிறான்; இவற்றை முதலில் அவனுடைய அப்பா, அம்மாவிடமிருந்தும், பின்னர் நண்பர்களிடமிருந்தோ ஆசிரியர்களிடமிருந்தோ கற்றுக்கொள்கிறான். பிற்பாடு அண்டை அயலாரிடமிருந்தும், செய்தித்தாள், ரேடியோ, டெலிவிஷன் வாயிலாகவும் கற்றுக்கொள்கிறான். தான் வெறுக்கிற வகுப்பாரைப் பற்றி ஓரளவு அறிந்திருக்கிறான் அல்லது துளியும் அறியாதிருக்கிறான்; ஆனால் அவன் பெரியவனாக வளரும் சமயத்திற்குள், அந்த வகுப்பார் தாழ்த்தப்பட்டவர்கள், எதற்கும் லாயக்கற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான். அவர்களை வெறுக்கவும் செய்கிறான்.
அநேக நாடுகளில், போக்குவரத்து வசதிகளும் வணிகமும் பெருகியிருப்பதால் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கும் இனப் பிரிவுகளுக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்திருக்கிறது. இருந்தாலும், தப்பெண்ணத்தை வெளிக்காட்டுவதில் தீவிரம் காட்டும் ஒரு நபர் தன் மனதில் ஏற்கெனவே ஆழமாக வேரூன்றியிருக்கும் கருத்துகளில் பொதுவாக விடாப்பிடியாக இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட இனத்தார் ஆயிரக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் இருந்தாலும்கூட சில கெட்ட குணங்கள் அவர்கள் எல்லாரிடமும் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார். அந்தத் தொகுதியை சேர்ந்த ஒரேவொருவருடன் ஏதோவொரு கசப்பான அனுபவம் ஏற்பட்டாலே போதும் அந்தத் தப்பெண்ணம் மீண்டும் வலுவடைந்துவிடுகிறது. ஆனால் நல்ல அனுபவங்களைப் பெறும்போது அது பொதுவாக நூற்றில் ஒன்றாக கருதி கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது.
விலங்கை உடைத்தல்
தப்பெண்ணத்திற்குக் கொள்கை அளவில் பலர் கண்டனம் தெரிவித்தாலும் அந்த விலங்கை உடைத்துக் கொண்டு வெளியே வருவது சிலர்தான். சொல்லப்போனால், தப்பெண்ணத்தில் ஊறிப்போன அநேகர் தங்களுக்குத் தப்பெண்ணமே இல்லை என்று அடித்துச் சொல்வார்கள். வேறு சிலர், தப்பெண்ணத்தை வெளிக்காட்டாமல் மனதளவில் வைத்துக்கொண்டால் பாதகமில்லை என சொல்கிறார்கள். ஆனால் பாதகமில்லை என எண்ணி விட்டுவிட முடியாது; ஏனென்றால் அது மக்களின் மனதைப் புண்படுத்துகிறது, அவர்களைக் கூறுபோடுகிறது. அறியாமையின் விளைவாக தப்பெண்ணம் பிறக்கிறது என்றால், தப்பெண்ணத்தின் விளைவாக பெரும்பாலும் பகைமை பிறக்கிறது. சார்லஸ் கேலப் கோல்டன் (1780?-1832) எனும் எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: “சிலரை நமக்குத் தெரியாததால் அவர்களை வெறுக்கிறோம்; அவர்களை வெறுப்பதால் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.” எப்படியிருந்தாலும், தப்பெண்ணத்தை ஒருவர் வளர்த்துக்கொள்ள முடியுமென்றால் அவரால் அதைக் களைந்தெறியவும் முடியும். எப்படி? (g04 9/8)
[பக்கம் 7-ன் பெட்டி]
மதம் எதற்குத் துணைபோகிறது—சகிப்புத்தன்மைக்கா, தப்பெண்ணத்திற்கா?
“சராசரியாக பார்த்தால், சர்ச்சுக்குச் செல்லாதவர்களைவிட சர்ச்சுக்குச் செல்பவர்களே அதிகமாய் தப்பெண்ணத்துடன் நடந்துகொள்வது போல் தோன்றுகிறது” என கூறுகிறார் தப்பெண்ணத்தின் இயல்பு புத்தகத்தின் எழுத்தாளர் கார்டன் டபிள்யூ. அல்பர்ட். மதம் தப்பெண்ணத்தை ஒழிப்பதற்குப் பதிலாக அது தலைதூக்க காரணமாக இருந்திருக்கிறது, இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உதாரணமாக, நூற்றாண்டுக் கணக்கில் யூதர்களுக்கு விரோதமான பகைமையை குருமார்கள் தூண்டி விட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவத்தின் சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தின்படி, “யூதர்களைப் பற்றிய விஷயத்தில், கத்தோலிக்க சர்ச் 1500 வருடங்களாக பின்பற்றி வந்த அதே கொள்கையைத்தான் நானும் பின்பற்றுகிறேன்” என ஹிட்லர் ஒருசமயம் குறிப்பிட்டார்.
பால்கன் நாடுகளில் நடந்த அட்டூழியங்களின்போது, வேற்று மதத்தைச் சேர்ந்த அயலாருக்கு மரியாதை காட்டும்படியும், அவர்களிடம் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ளும்படியும் கற்பிக்க ஆர்த்தடாக்ஸ், கத்தோலிக்க மதப் போதனைகளால் முடியவில்லை.
அவ்வாறே ருவாண்டாவில், சர்ச் அங்கத்தினர்கள் தங்கள் சக வணக்கத்தாரை கொன்று குவித்தார்கள். நேஷனல் கேத்தலிக் ரிப்போர்ட்டர் குறிப்பிட்டபடி, அங்கு நடந்த சண்டை “நிஜமான, மெய்யான இனப் படுகொலையாக இருந்தது, அதற்குக் கத்தோலிக்கர்களும்கூட காரணம் என்பது வருத்தகரமான விஷயம்.”
கத்தோலிக்க சர்ச்சும்கூட இத்தனை காலமாக சகிப்புத்தன்மை காட்டத் தவறியிருந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறது. வருடம் 2000-த்தில், ரோமில் இரண்டாம் போப் ஜான் பால் பொதுமக்கள் முன் நடத்திய பூசையின்போது, “கடந்த காலத்தில் மோசமாக நடந்துகொண்டதற்காக” மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அந்தப் பூசையின்போது, “யூதர்களிடம், பெண்களிடம், நாட்டின் பழங்குடியினரிடம், குடியேறிகளிடம், ஏழைகளிடம், பிறவா குழந்தைகளிடம் மத சகிப்பின்மையோடு நடந்துகொண்டதையும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதையும்” பற்றி குறிப்பாக சொன்னார்.
[பக்கம் 6-ன் படம்]
மேலே: அக்டோபர் 20, 1995, போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் உள்ள அகதிகள் முகாம்
உள்நாட்டுப் போர் முடிவடையும் நாளுக்காக காத்திருக்கும் போஸ்னிய, செர்பிய அகதிகள் இருவர்
[படத்திற்கான நன்றி]
Photo by Scott Peterson/Liaison
[பக்கம் 7-ன் படம்]
பகைக்க கற்றுக்கொள்ளுதல்
ஒரு குழந்தை, தன் பெற்றோரிடமிருந்தும் டெலிவிஷனிடமிருந்தும் வேறு பல வழிகளிலிருந்தும் தவறான மனப்பான்மைகளைக் கற்றுக்கொள்கிறது