வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
எபிரெயர் 4:9-11-ல் கூறப்பட்டுள்ள ‘இளைப்பாறுதல்’ என்ன, ஒருவர் எவ்வாறு அந்த “இளைப்பாறுதலில் பிரவேசிக்க” முடியும்?
முதல் நூற்றாண்டு எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். ஆகையால், . . . நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.”—எபிரெயர் 4:9-11.
கடவுள் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்திருந்ததாக பவுல் கூறுகையில் ஆதியாகமம் 2:2-ல் உள்ளதையே குறிப்பிட்டிருக்க வேண்டும். அங்கே இவ்வாறு வாசிக்கிறோம்: “தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.” யெகோவா ஏன் “ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்”? ‘தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளுக்கு’ பிறகு களைப்பை நீக்குவதற்காக அல்ல என்பது நிச்சயம். காரணத்தை அறிய அடுத்த வசனம் உதவுகிறது: “தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.”—ஆதியாகமம் 2:3; ஏசாயா 40:26, 28.
இதற்கு முந்தைய ஆறு நாட்களைவிட இந்த ‘ஏழாம் நாள்’ மிகவும் வித்தியாசமாய் இருந்தது. ஏனெனில், கடவுள் அந்த நாளை ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கினார்; அதாவது அந்த நாளை ஒரு விசேஷித்த நோக்கத்திற்காக ஒதுக்கி வைத்தார் அல்லது அர்ப்பணித்தார். என்ன நோக்கத்திற்காக? மனிதனுக்கும் பூமிக்குமான தமது நோக்கத்தை கடவுள் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருந்தார். முதல் மனித தம்பதியினரிடம் கடவுள் இவ்வாறு கூறினார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) மனிதகுலத்தையும் பூமியையும் கடவுள் பரிபூரணமாக உருவாக்கியிருந்த போதிலும் அவருடைய நோக்கத்திற்கு இசைவாக முழு பூமியையும் கீழ்ப்படுத்தி, பரிபூரண மக்கள் நிறைந்த பரதீஸாக அதை மாற்ற காலம் எடுக்கும். இவ்வாறு, அவர் ஏற்கெனவே சிருஷ்டித்தவை தமது சித்தத்திற்கு இசைவாக முன்னேற காலம் அனுமதிக்கவே பூமியில் வேறு எதையும் சிருஷ்டிக்காமல் கடவுள் “ஏழாம் நாளிலே” ஓய்ந்திருந்தார். அந்த ‘நாள்’ முடிவடைகையில் கடவுளுடைய நோக்கம் முழுமையாக நிறைவேறியிருக்கும். அந்த இளைப்பாறுதல் எவ்வளவு காலம் நீண்டிருக்கும்?
இப்போது, பவுல் எபிரெயர்களுக்கு எழுதிய வார்த்தைகளுக்கு மறுபடியும் கவனம் செலுத்துவோம். “தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது” என்று சொல்லி, “இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்”கும்படி தன் உடன் கிறிஸ்தவர்களை அவர் உந்துவித்தார். பவுல் இந்த வார்த்தைகளை எழுதிய சமயத்திலும், ஏறக்குறைய 4,000 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த கடவுளுடைய இளைப்பாறுதலின் ‘ஏழாம் நாள்’ இன்னும் தொடர்ந்ததை இது சுட்டிக்காட்டுகிறது. “ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிற” இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவில் மனிதனுக்கும் பூமிக்குமான கடவுளுடைய நோக்கம் முழுமையாக நிறைவேறும் வரை அந்த இளைப்பாறுதல் தொடரும்.—மத்தேயு 12:8; வெளிப்படுத்துதல் 20:1-6; 21:1-4.
அந்த அருமையான எதிர்கால நம்பிக்கையை மனதில் வைத்தே, கடவுளுடைய இளைப்பாறுதலில் ஒருவர் எவ்வாறு பிரவேசிக்கலாம் என பவுல் விவரித்தார். “அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், . . . தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்” என அவர் எழுதினார். பரிபூரணமாக படைக்கப்பட்ட போதிலும் மனிதவர்க்கம் முழுவதும் கடவுளுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கவில்லை என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. ஆதாமும் ஏவாளும் தங்களுக்காக கடவுள் செய்திருந்த ஏற்பாட்டை ஏற்பதன் மூலம் கடவுளுடைய ‘இளைப்பாறுதலின்’ ஏழாம் நாளை நீண்ட காலத்திற்கு அனுசரிக்க தவறியதே இதற்கு காரணமாகும். அதற்கு பதிலாக அவர்கள் கலகம் செய்து கடவுளைவிட்டு தன்னிச்சையாக செயல்பட விரும்பினர். அவர்கள் கடவுளுடைய அன்பான வழிநடத்துதலை ஏற்பதற்கு பதிலாக சாத்தானின் திட்டங்களுக்கு இசைவாக சென்றனர். (ஆதியாகமம் 2:15-17) இவ்வாறு, பரதீஸிய பூமியில் என்றும் வாழும் வாய்ப்பை இழந்தனர். அன்றிலிருந்து மனிதவர்க்கம் முழுவதும் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டுவிட்டது.—ரோமர் 5:12, 14.
ஆனால், மனிதனின் கலகம் கடவுளுடைய நோக்கத்தை முறியடிக்கவில்லை. அவருடைய இளைப்பாறுதலின் நாள் இன்னமும் தொடர்கிறது. என்றாலும், யெகோவா தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் கிரய பலி என்ற ஓர் அன்பான ஏற்பாட்டை செய்தார். இவ்வாறு, விசுவாசத்தோடு அதை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் பாவம் மற்றும் மரணத்தின் சுமைகளிலிருந்து விடுபட்டு, இளைப்பாறுதலைப் பெறுவதற்கான வழியை திறந்து வைத்தார். (ரோமர் 6:23) அதனால்தான், ‘தங்கள் கிரியைகளை முடித்து ஓய்ந்திருக்கும்படி’ பவுல் தன் உடன் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் இரட்சிப்பிற்கான கடவுளுடைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆதாம் ஏவாளைப் போல தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயிக்க முயலக்கூடாது. சுயநீதிமான்களாக தங்களை நிரூபிக்க முயலும் எந்த செயல்களையும் அவர்கள் தவிர்க்க வேண்டும்.
கடவுளுடைய சித்தத்தை செய்வதற்காக ஒருவர் சுயநல அல்லது அவசியமற்ற காரியங்களை ஒதுக்குவது உண்மையில் அவருக்கு புத்துணர்ச்சியையும் இளைப்பாறுதலையும் அளிக்கிறது. இயேசு பின்வரும் இந்த அழைப்பை விடுத்தார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30.
கடவுளுடைய இளைப்பாறுதலையும் அதில் பிரவேசிக்கும் வழியையும் பற்றி பவுல் விவரித்தது, எருசலேமில் இருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பெரும் ஆறுதலின் ஊற்றாக இருந்திருக்கும். ஏனெனில், தங்கள் விசுவாசத்திற்காக அவர்கள் அதிக துன்புறுத்துதலையும் ஏளனத்தையும் சகித்திருந்தனர். (அப்போஸ்தலர் 8:1; 12:1-5) அதைப் போலவே, இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பவுலின் வார்த்தைகள் ஆறுதலின் பிறப்பிடமாக இருக்கலாம். தமது நீதியுள்ள ராஜ்யத்தின் மூலம் பரதீஸிய பூமியை கொண்டு வருவதற்கான கடவுளுடைய வாக்குறுதி வெகு சீக்கிரத்தில் நிறைவேறும் என்பதை உணர்ந்த நாமும் நம் சொந்த கிரியைகளிலிருந்து ஓய்ந்திருந்து, அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க கடும் முயற்சி செய்ய வேண்டும்.—மத்தேயு 6:10, 33; 2 பேதுரு 3:13.
[பக்கம் 31-ன் படம்]
கடவுளுடைய இளைப்பாறுதலின் நாள் முடிவடைகையில் பூமிக்குரிய பரதீஸ் பற்றிய அவருடைய வாக்குறுதி நிறைவேறும்