உங்களுடைய கண் “தெளிவாயிருக்”கிறதா?
“உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.”—மத்தேயு 6:22.
கண்பார்வை பொதுவாக மிகவும் மதிப்புள்ளதாகவும் புலன்களில் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அதை இழந்துவிடுகிறவர்கள் விசேஷமாக அவ்விதமாகக் கருதுகிறார்கள். ஒவ்வொரு நொடிப் பொழுதும் நூறாயிரக் கோடிக்கணக்கில் ஒளி அணுக்கள் நம்முடைய கண்மணிகளின் வழியாக கடந்து செல்கின்றன என்பதாக விஞ்ஞானிகள் நம்மிடம் சொல்லுகிறார்கள். அவை விழித்திரையை அடையும்போது, கோடிக்கணக்கான பிரம்பு மற்றும் கூம்புவடிவ செல்களால் அவை பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒளியினால் தூண்டி எழுப்பப்பட்டவையாக இந்த நரம்பு செல்கள் மூளைக்கு மின்குறிகளை அனுப்ப ஆரம்பிக்கின்றன. அங்கே, கோடிக்கணக்கான நியுரான்களில் பெரும்பகுதி, பெற்றுக்கொள்ளப்பட்டவற்றின் பொருளைக் கண்டுபிடித்து, எவ்விதமாக பிரதிபலிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேலை செய்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரு வினாடிகூட எடுப்பதில்லை. ஆம், கண் புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிப்புக்கு வியத்தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.—சங்கீதம் 139.14.
2 விஞ்ஞானிகள், கண்ணும் மூளையும் செய்யும் வேலைகளைப்பற்றி அதிகத்தை தெரிந்து வைத்திருந்தாலும் நாம் பார்க்கும் காரியங்களுக்கு எவ்விதமாக பிரதிபலிக்கிறோம், ஏன் அவ்வாறு பிரதிபலிக்கிறோம் என்பதைக் குறித்து முழுமையாக அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு நபர் ஏன் நீலத்தைவிட சிவப்பை விரும்புகிறார் என்பதையோ மற்றொருவர் சிவப்பைவிட நீலத்தை ஏன் விரும்புகிறார் என்பதையோ அல்லது ஏன் வித்தியாசமான வண்ணங்கள் நம்மை வித்தியாசமான விதங்களில் பாதிக்கின்றன என்பதையோ முழுமையாக புரிந்துகொள்ள முடிவதில்லை. பார்வைக்கும் பிரதிபலிப்புக்குமிடையே உள்ள தொடர்பு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஆனால் கண்ணை உண்டாக்கினவராகிய யெகோவாவும், அவருடைய குமாரனும் உடன் வேலையாளனுமாகிய இயேசு கிறிஸ்துவும் கண்ணின் சிக்கலான அமைப்பை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். கண் எவ்விதமாக நம்முடைய செயல்களின் மீதும் நம்முடைய வாழ்க்கையின் மீதும் செல்வாக்கை செலுத்துகிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.
“சரீத்தின் விளக்கு”
3 “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது” என்பதாக இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 6:22) நாம் எங்கே இருக்கிறோம், எவ்விதமாக செயல்புரிவது, எவ்வழியில் செல்வது போன்றவற்றையெல்லாம் நாம் தெரிந்துகொள்வதற்காக இருளான இடத்தை ஒளிப்பெறச் செய்வதற்காக ஒரு விளக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒளியை நம்முடைய சரீரத்துக்குள் அனுமதிப்பதன் மூலம் நம்முடைய கண்கள் ஒரு விளக்கினுடைய அதே செயல்களை நடப்பிக்கின்றன. இருளிலே தடவி, இடறிவிழுந்து, ஒருவேளை நம்மை நாமே காயப்படுத்திக் கொளவ்தற்கு பதிலாக, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு புத்திக்கூர்மையுடனும் திட்டவட்டமாகவும் பிரதிபலிக்க அவை நமக்கு உதவி செய்கின்றன.
4 ஆனால் கண்ணானது சரீரத்துக்கு எந்த அளவுக்கு விளக்காக உதவக்கூடும் என்பது பெரும்பாலும் கண்ணின் நிலைமையைப் பொறுத்ததாக இருக்கிறது. இதன் காரணமாகவே இயேசு தொடர்ந்து இவ்விதமாகச் சொன்னார்: “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்.!” (மத்தேயு 6:22, 23) நன்மைக்கோ தீமைக்கோ கண்ணானது நம்முடைய முழு வாழ்க்கை போக்கின் மீதும் செலுத்தும் மிகுதியான செல்வாக்கை இதிலிருந்து நம்மால் காணமுடிகிறது.
கண்ணின் செல்வாக்கு
5 முதல் மனுஷியாகிய ஏவாளின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கண்ணானது அவளுடைய செயல்களை எந்த அளவுக்கு பாதித்தது என்பது வஞ்சகனாகிய பிசாசாகிய சாத்தானோடு அவள் கொண்டிருந்த சம்பாஷணையைப் பற்றிய பைபிள் பதிவிலிருந்து காண முடிகிறது. (2 கொரிந்தியர் 11:3; 1 தீமோத்தேயு 2:14) அவள் கடவுளுடைய கட்டளையை வெறுமென அசட்டை செய்து “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தி”லிருந்து கனியை எடுத்து புசிப்பாளேயானால், ‘அவளுடைய கண்கள் திறக்கப்படும்’ என்பதாக சாத்தான் குறிப்பிட்டான். அவள் எவ்விதமாக பிரதிபலித்தாள்? பைபிள் நமக்குச் சொல்லுகிறது: “அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டாள்.” அவளுக்கு விலக்கப்பட்டிருந்த ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டே இருக்க கண்களை அவள் அனுமதித்தாள். அது வேண்டுமென்றே கண்ணை தவறாக பயன்படுத்துவதாக இருந்தது. விளைவு என்ன? “அதின் கனியைப் பறித்து புசித்தாள்.”—ஆதியாகமம் 2:17; 3:4-6.
6 “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையோ” அல்லது அதன் கனியையோ ஏவாள் இப்பொழுது தானே முதல் முறையாக பார்க்கவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வித்தியாசமான ஏதோ ஒன்று நடந்து கொண்டிருந்தது. இப்பொழுது அது “பார்வைக்கு இன்பமும்” “இச்சிக்கப்படத்தக்கதாயும்” தோன்றியது. இன்பமும் இச்சையும் சாதாரணமாக கண்களின் குணங்களாக இல்லாமல் இருதயத்தினுடையவையாக இருக்கின்றன. ஆனால் கண்கள் பார்ப்பது, இருதயத்தின் இன்பத்தையும் இச்சையையும் அவ்வளவு தீவிரமாக்குவதன் காரணமாக அங்கே செயல் நடப்பிக்கப்படக்கூடும். ஏவாளின் விஷயத்தில், இத்தகையச் செயல், இன்று நம்மையும் உட்பட அவளுக்கும் அவளுடைய கணவன் ஆதாமுக்கும் அவர்களுடைய எல்லா எதிர்கால சந்ததிக்கும் அவலமான பின்விளைவுகளுக்கு வழிநடத்தியது.—ரோமர் 5:12; யாக்கோபு 1:14, 15.
7 ஆனால் கண்களின் மூலமாக, கேட்டுக்கு வழிநடத்தும் எந்த செல்வாக்கையும் எதிர்த்து நிற்பது கூடிய காரியம் என்பதைக் காண்பிக்க, நாம் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை சிந்திக்கலாம். மறுபடியும் அதே சோதனைக்காரனாகிய சாத்தானே இதில் உட்பட்டிருந்தான். கடவுளுடைய சித்தத்தைச் செய்வதிலிருந்து இயேசுவை விலகிப் போகச் செய்வதற்கு அவன் மூன்றாவது முறையாகச் செய்த முயற்சியில் “பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.” ஒரு வணக்கச் செயலுக்கு மாற்றாக உலகத்தின் எல்லா அதிகாரத்தையும் மகிமையையும் தருவதாக அவன் வெறும் வாய்வார்த்தைகளில் சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். அவன் இந்த காரியங்களை “காண்பித்து” கண்ணின் பலமான செல்வாக்கை தன்னலத்துக்காக பயன்படுத்திக் கொண்டான். ஆனாலும் இயேசுவின் கண், கவர்ச்சியான அளிப்பினால் திசை திரும்பாமல், அவருடைய பரம பிதாவாகிய யெகோவாவோடு அவருடைய உறவின் மீது கவனம் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தபடியால், சாத்தானின் தந்திரமான திட்டத்தை முறியடிப்பதில் அவர் வெற்றி கண்டார்.—மத்தேயு 4:8-10.
8 முன்சொல்லப்பட்ட உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? முதலாவதாக நம்முடைய கண்களை எதன்மீது ஒருமுகப்படுத்தி வைக்கிறோமோ, அது நம்முடைய இருதயத்தின் நல்ல அல்லது கெட்ட ஆசைகளைத் தீவிரமாக்கக்கூடும். இது நமக்கும் மற்றவர்களுக்கும் ஆசிர்வாதத்தையோ அல்லது அழிவையோ கொண்டுவரக்கூடிய செயலுக்கு வழிநடத்தக்கூடும். இரண்டாவதாக, தனக்கு பலியாகிறவர்களை ஏமாற்றுவதற்கு கண், சாத்தானின் விருப்பமான வழிமுறையாக இருக்கிறது. மனிதவர்க்கத்தை தவறாக வழிநடத்த சாத்தான் உபயோகிக்கும் எல்லா “தந்திரங்களிலும்” கண்களின் இந்தக் கவர்ச்சியே மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகத் தோன்றுகிறது.—2 கொரிந்தியர் 2:11.
9 இன்று, எல்லா ஜனங்களையும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதிலிருந்து விலகிப்போகச் செய்வதற்கு சாத்தான் இன்னும் அவனுடைய சூழ்ச்சி முறைகளில் இதே தந்திரத்தையே பயன்படுத்துகிறான். உலகின் மினுமினுப்பினாலும் மாயமான கவர்ச்சியினாலும் சாத்தான், “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும் ஜீவனத்தின் பெருமை”யுமாகியவற்றை ஊக்குவிக்கிறான். (1 யோவான் 2:16) வியாபார உலகத்தால் பயன்படுத்தப்படும் விளம்பரக் முறைகளில் இது தெளிவாக காணப்படுகிறது. பார்வையின் மீது ஏற்படுத்தும் செயல்விளைவை முழுவதும் பயன்படுத்திக்கொள்கிறவையே மிகவும் வெற்றிகரமான விளம்பரங்களாக இருக்கின்றன என்பது உண்மையல்லவா? ஆயிரக்கணக்கான வண்ண விளம்பரப் பலகைகளும் பளிச்சென ஒளிவிடும் விளம்பரக் குறிப்புகளும், பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலுமுள்ள பளபளப்பான படங்களும், டெலிவிஷனில் விளம்பரதாரர்களின் நிகழ்ச்சிகளும்—அவற்றை தயாரிக்க கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுவதும் இவை அனைத்துமே, விளம்பரம் செய்வதன் முழு நோக்கமே, நுகர்வோரின் “கண்களின் இச்சை”யைத் தூண்டுவதற்கே என்ற உண்மையை உறுதி செய்கின்றன.
10 இந்த விளம்பரங்களின் பெரும்பாலானவை கற்பனைக்கு இடமளிக்காதிருப்பினும் இந்த விளம்பரங்கள் வெறுமென நுகர்வோர் பொருட்களை மட்டுமல்லாமல், அவை வாழ்க்கை பாணிகளையே உண்மையில் ஊக்குவிப்பதே அதிக தந்திரமான காரியமாக இருக்கிறது. அநேகமாக இந்தப் பொருட்கள், அதிக சலுகைப்பெற்ற, செல்வாக்குள்ள, மகிழ்ச்சியுள்ள மற்றும் அழகான ஆட்களால் பயன்படுத்தப்படுவதுபோல காண்பிக்கப்படுகின்றன. நுகர்வோர் அந்தப் பொருளை பயன்படுத்தினால் அவர் தானாகவே அந்த வகுப்புகளில் ஒன்றில் இருக்க தகுதிபெறுகிறவராக இருப்பார் என்பதே செய்தியாக இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு வாழ்க்கை முறையை ஒரு நபர் ஏற்றுக்கொண்டுவிட்டால், அதோடு இணைந்து செல்லும் பொருட்களையும் சரக்குகளையும் ஏற்றுக்கொள்ள அவனையோ அல்லது அவளையோ இணங்க வைப்பது எளிதே என்பதை விளம்பரதாரர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் எபிரெயர் 13:5-ல் காணப்படும் புத்திமதியைப் பின்பற்றுவது எவ்வளவு ஞானமான காரியமாக இருக்கும்! அங்கே நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்.”
கண்ணை “கெட்ட”தாயில்லாமல் “தெளிவாக” வைத்திருத்தல்
11 நம்மை திசை திருப்புவதற்கு ஏதுவாக வரிசையாக இத்தனை கண்கவர் காரியங்களைத் தினந்தோறும் நாம் எதிர்படுவதன் காரணமாக, இயேசு கிறிஸ்து ஏன் நம்முடைய கண்ணை “கெட்ட”தாயில்லாமல் “தெளிவாக” வைத்துக்கொள்ளும்படியாக அறிவுரைக் கூறினார் என்பதை நாம் போற்றக்கூடியவர்களாக இருக்கலாம். (மத்தேயு 6:22, 23) இது எதை அர்த்தப்படுத்துகிறது, இங்கு “தெளிவு” என்ற வார்த்தை கிரேக்க பதமாகிய ‘ஹா ப்ளவுஸ்’ என்பதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் மனதின் ஒருமுகப்பட்டத் தன்மையை அல்லது ஒரு நோக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. மறுபட்சத்தில் “கெட்டது” என்பது மூல கிரேக்க வார்த்தையாகிய ‘போனிராஸ்’ என்பதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கெட்டது, வீணானது, தீயது என்பதாக இது பொருள்படுகிறது. இவ்விதமாக, ‘தெளிவான கண்’ நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்துக் காரியங்களாலும் திசை திருப்பப்பட அல்லது பக்க பாதையில் திருப்பப்படுவதற்கு பதிலாக ஒரே ஒரு காரியத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. எதிர்மாறாக, ‘கெட்டதாயிருக்கும் கண்’ ஏமாற்றுகிறதாக, தந்திரமுள்ளதாக, பேராசையுள்ளதாக இருந்து விரும்பத்தகாத தீங்கான காரியங்களிடமாக கவர்ந்திழுக்கப்படுகிறது.
12 ஆனால், “சரீரம் முழுவதும் வெளிச்ச”மாயிருப்பதற்கு கண் எதன் மீது கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்? சந்தர்ப்ப சூழ்நிலையை ஆராய்தல், பதிலை கண்டுபிடிக்க நமக்கு உதவி செய்யும். இதற்கு முன்னான வசனங்களில் இயேசு, “பூமியிலே பொக்கிஷங்களையும்” “பரலோகத்திலே பொக்கிஷங்களையும்” சேர்த்து வைப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார். “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” என்று அவர் சொன்னார். பின்பு கண்ணைப் பற்றி பேசியப் பிறகு அவர் மறுபடியுமாக நோக்கத்தில் ஒருமுகப்பட்டத் தன்மையை காண்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது.” அதாவது கடவுளுக்கும் ஐசுவரியங்களுக்கும். தொடர்ந்துவரும் வசனங்களில் அன்றாட தேவைகளைப் பற்றிய ஒருவரின் நோக்குநிலையின் பேரில் புத்திமதியைக் கொடுத்து பின்வரும் இந்த அறிவுரையை கடைசியாகத் தருகிறார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:19-34.
13 இவை அனைத்திலிருந்தும் நாம் அறிந்துகொள்வது என்ன? பொருளாதார காரியங்களை நாடுவது வீனானது என்பதையும் ஆவிக்குரிய காரியங்களில் அக்கறையை வளர்த்துக்கொள்வதால் வரும் ஆசீர்வாதங்களையும் சுட்டிக்காட்டி, இயேசு இங்கு வாழ்க்கையின் இலக்குகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். நம்முடைய கண்களை ராஜ்ய அக்கறைகளின் மீதே ஒருமுகப்படுத்துவதன் மூலம் நம்முடைய “சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்” என்பதை அவர் நமக்கு தெளிவாகச் சொல்லுகிறார். ஏன்? ஏனென்றால் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதையே நம்முடைய வாழ்க்கையின் இலக்காக நாம் ஆக்கிக் கொள்வோமேயானால், நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மகிமைப் பொருந்திய நற்செய்தியை பிரதிபலிக்க நாம் நாடுகிறவர்களாக இருப்போம். பிரகாசமான ஒரு எதிர்காலத்தை நாம் எதிர்நோக்கியிருக்கலாம் என்பது மட்டுமல்லாமல், ஆனால் சுயநலமான நாட்டத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையில் இருக்கும் வெட்கமான மற்றும் அந்தரங்கமான காரியங்களிலிருந்து நாம் விடுபட்டவர்களாக இருக்கலாம்.—2 கொரிந்தியர் 4:1-6.
14 அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு விளக்கியபோது, இயேசுவின் வார்த்தைகளை கூடுதலாக வலியுறுத்துகிறான்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:9) நிச்சயமாகவே இந்த வார்த்தைகளில் இன்றியமையாத பொருள் இருக்கிறது! தொழில்நடத்தும் ஆட்கள் செய்யும் குற்றங்களில் சிக்கிக்கொண்டிருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், நீதிபதிகள், வங்கிதாரர்கள், கூட்டாண்மை செயலாளர்கள் இன்னும் மற்றவர்களைப்பற்றிய செய்திகள் ஏராளமாக வருகின்றன. அறிக்கை ஒன்றின் பிரகாரம் இதனால் ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே “வருடந்தோறும் குறைந்த பட்சம் $20,000 கோடி [ரூ.2,00,000 கோடி]” நஷ்டமாகிறது. ஐசுவரியவானாக வேண்டும் என்ற சோதனையும் கண்ணியும் ஒரு சமயம் மதிப்புக்குரியவர்களாக இருந்தவர்களை பாகர்களாகவும் குற்றவாளிகளாகவும் மாற்றியிருக்கிறது. நிச்சயமாகவே ‘கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்தப்படுவதையும் இயேசு எச்சரித்த “இருளை”யும் தவிர்க்கவே நாம் விரும்புகிறோம்.—நீதிமொழிகள் 23:4, 5 பார்க்கவும்.
15 என்றபோதிலும் ஐசுவரியவான்களாக வேண்டும் என்பதில் தங்களுடைய கண்களை வைப்பவர்கள் மாத்திரம்தான் இருளிலே நடக்கும் அபாயத்தில் இருக்கிறார்களா? இல்லை. ஏனென்றால் “கண்களின் இச்சை” அநேக மற்ற காரியங்களையுங்கூட உட்படுத்துகிறது. மத்தேயு 5:28-லுள்ள இயேசுவின் வார்த்தைகளை நினைவுபடுத்திப் பாருங்கள்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.” தவறான உணர்ச்சிகளையும் ஆசைகளையும் தூண்டிவிட அல்லது எழுப்பிவிட திட்டமிடப்பட்டிருக்கும் புத்தகங்களை ஒருவருடைய கண்கள் பார்த்துக் கொண்டிருக்க அனுமதிப்பதற்குங்கூட அந்த எச்சரிப்பு பொருத்தப்படலாம்.
16 பின்பு உணவையும், பானத்தையும், உடையையும் பற்றிய கவலை இருக்கிறது. இதைப்பற்றி இயேசு பேசினார். (மத்தேயு 6:25-32) இந்தக் காரியங்கள் தேவையாக இருந்தபோதிலும், நவநாகரீகமானதை அதிக விலையுயர்ந்ததை மிகவும் ஆவலாக நாடப்படுவதை எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும் என்ற மட்டுக்குமீறிய ஆசை நம்முடைய மனதையும் இருதயத்தையும் அடிமையாக்கிவிடக்கூடும். (ரோமர் 16:18; பிலிப்பியர் 3:19) பொழுதுபோக்கு, ஓய்வுநேர விருப்ப வேலை, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றிலுங்கூட சரியான சமநிலையை நாம் காத்துக்கொண்டு, உலகின் நாகரீகத்திலும் தோற்றத்திலும் சிக்கிக்கொள்வதற்கு எதிராக நாம் எச்சரிப்பாயிருக்க வேண்டும். இந்த எல்லா விஷயங்களிலும் நீதிமொழிகள் 27:20-ல் காணப்படும் ஞானமான வார்த்தைகளை நினைவில் கொள்வது நமக்கு பிரயோஜனமாக இருக்கும்: “பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை. அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.” ஆம், நம்முடைய கண்களை திருப்தி செய்ய முயற்சிக்கையில், நாம் ஆவிக்குரிய விதத்தில் ஆபத்துக்குள்ளாகிவிடாதபடிக்கு தன்னடக்கத்தை அப்பியாசிப்பது அவசியமாக இருக்கிறது.
கண்ணை தெளிவாக வைத்திருப்பதற்காக ஆசீர்வாதங்கள்
17 தங்களுடைய கண்ணை தெளிவாக வைத்திருந்து கடவுளுடைய ராஜ்ய வாக்குத்தத்தங்களின்மீது ஊக்கமாக அதை ஒருமுகப்படுத்தியிருப்பவர்கள் யெகோவாவிடமிருந்து அநேக ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதிலுமிருந்து வருகிறவர்களும் பல்வேறு வாழ்க்கைத் துறையிலுள்ளவர்களுமாகிய ஆட்களின் அனுபவங்கள் இதைத் தெளிவாக காண்பிக்கின்றன. இந்த உதாரணங்களைப் பாருங்கள்:
“தேவை அதிகமாயிருக்கும் தென் அமெரிக்காவிலுள்ள கொலம்பியாவில் நான் ஊழியஞ்செய்து கொண்டிருக்கும்போது, நான் மாதம் சுமார் 1,200 ரூபாய் வருவாயில் வாழ வேண்டிய நிலையில் இருந்தேன். நான் பயனியர் ஊழியஞ்செய்ய ஆரம்பித்துவிட்டேன். ஆனால் மாத துவக்கத்திலேயே நான் கீழே விழுந்து என் கணுக்காலை முறித்துக் கொண்டுவிட்டேன். இதற்கான மருத்துவ செலவுக்கு என்னிடமிருந்த பணத்தைச் செலவழித்து விட்டேன். மாதம் முடியும்வரையாக எனக்கு கையில் ஒன்றுமிராது. ராஜ்ய மன்றத்துக்கு நன்கொடை தர வேண்டிய சமயமாக அது இருந்தது. நான் அதைத் தந்துவிட்டால், அடுத்த வாரத்துக்கு மளிகைச் சாமான் வாங்க என்னிடம் ஒன்றுமிராது. ஒரு சில நாட்கள் அதைக் குறித்து யோசித்துவிட்ட பின்பு, மன்றத்துக்கு வாடகை கட்ட வேண்டும் என்பதால் பணத்தை நன்கொடை பெட்டியில் போட தீர்மானித்து அதைப் போட்டுவிட்டேன். மறுநாள் காலையிலேயே, கொலம்பியாவில் என்னை வந்து சந்தித்த ஒரு சகோதரி ஐக்கிய மாகாணங்களிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருந்தாள். கொலம்பியாவுக்கு வந்துபோன பின்பு, அவள் வைத்திருந்த இந்நாட்டுப் பணத்தில் மீதமிருந்தவற்றை அவள் எனக்கு அனுப்பிவைத்திருந்தாள். நான் பெட்டியில் போட்ட அதே தொகையாக அது இருந்தது.”
கொரியாவிலுள்ள டேசுன் தனி மருத்துவ மனை ஒன்றை வைத்து நடத்திக்கொண்டிருந்த கி என்பவரை, உஷ்ணமான ஒரு செவ்வாய்க்கிழமை மதிய வேளையில், கடற்கரையில் மதிய பொழுதைக் கழிக்க அவனோடு வேலை செய்துவந்த மூன்று பேர் அழைத்தனர். கி-வுக்கு அந்த எண்ணம் அதிக கவர்ச்சியாக இருந்தபோதிலும், அவன் போனால் அன்று மாலையில் நடைபெறும் சபை புத்தகப் படிப்புக்கு நேரத்துக்கு வரமுடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. சற்று நேரத்துக்குள் மூவரும் மருத்துவ மனைக்கு உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டார்கள்! மருத்துவ மனையைவிட்டு புறப்பட்ட பின்பு அவர்கள் பயங்கரமான ஒரு விபத்துக்குள்ளானார்கள். இச்சம்பவத்தைக் குறித்து கி துக்கப்பட்டான். ஆனால் பல வருடங்களாக அவன் பின்பற்றி வந்திருந்த நல்ல பழக்கத்தில் உறுதியாக இருந்ததன் காரணமாக அவன் உயிர்தப்பியதற்காக மகிழ்ச்சியாக இருந்தான்.—எபிரெயர் 10:24, 25.
18 பின்வரும் அனுபவம் காண்பிக்கிற விதமாகவே சிறு பிள்ளைகளுங்கூட தங்களுடைய கண்ணை ராஜ்ய அக்கறைகளில் ஒருமுகப்படுத்துவதற்கு கற்பிக்கப்படலாம்:
“பிலிப்பைன்ஸில் எரிந்துபோன ராஜ்ய மன்றத்தை திரும்பக் கட்டுவதற்கு அங்குள்ள மூன்று சபைகள் தலா 12,000 ரூபாய் சேர்க்க வேண்டும் என்பதை இரண்டு பேரிடமிருந்து நாங்கள் கேள்விப்பட்டபோது, இது அவர்களுக்கு கணிசமான ஒரு தொகையாக இருந்ததால், நானும் என் கணவரும் நன்கொடை அளிக்க தீர்மானித்தோம். நான்கு மாதங்கள் முதல் ஆறு வயது வரையில் இருந்த எங்களுடைய நான்கு பிள்ளைகளைப்பற்றி என்ன? ஒவ்வொரு வாரமும் என் கணவருக்கு சம்பளம் வரும்போது ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வெள்ளி டாலரை அவர் வாங்குவார். ஒவ்வொரு பிள்ளையும் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை காண என் கணவர் நாணயங்களை பங்கிட்டார். பணத்தை வைத்து அவர்கள் வாங்க விரும்பிய சில காரியங்களையுங்கூட நாங்கள் அவர்களுக்கு எடுத்துச் சொன்னோம். ஆனால் பதில் எப்பொழுதும் ஒரே விதமாக இருந்தது. அவர்கள் பணத்தை சகோதரர்களுக்கு கொடுக்க விரும்பினார்கள்.” 1,188 ரூபாய் பணத்தோடு பிள்ளைகள் ஒரு கடிதத்தையும் வைத்து அனுப்பினார்கள். அந்தக் கடிதம் வாசிக்கப்பட்டபோது பிலிப்பைன்ஸிலிருந்த சகோதரர்கள், பிள்ளைகளின் அன்பினாலும் தாராள குணத்தினாலும் அவ்வளவாக உணர்ச்சிதூண்டப்பட்டவர்களாக, அவர்களில் அநேகர் கண்ணீர் விட்டார்கள்.
19 “உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக் கடவது.” (நீதிமொழிகள் 4:25) அந்தப் புத்திமதியை பின்பற்றி, நாம் பக்க பாதையில் திரும்பிவிடாதபடிக்கு நம்முடைய கண்களை அலைய அனுமதியாதிருப்பது நமக்கு எத்தனை ஞானமுள்ள காரியமாக இருக்கும்! “நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” என்பதாக பவுல் அறிவுரை கூறினான். “யெகோவாவுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்” என்பதாகவுங்கூட அவன் துரிதப்படுத்தினான். (எபேசியர் 5:15-17) அவ்விதமாகச் செய்வதன் மூலம் நம்முடைய கண்ணை தெளிவாக வைத்திருப்பதில் நாம் வெற்றியடைவோம். பிரகாசமான எதிர்காலத்தை—கடவுள் வாக்களித்திருக்கும் புதிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனை—நாம் நம்பிக்கையோடே எதிர்நோக்கியிருக்க நிச்சயமாயிருக்கலாம்.—2 கொரிந்தியர் 4:17, 18-ஐ ஒப்பிடவும். (w86 5/1)
உங்களால் விளக்க முடியுமா?
◻ கண் எவ்விதமாக “சரீரத்துக்கு வெளிச்சமாயிருக்கிறது”?
◻ ஏவாள் மற்றும் இயேசுவின் மாதிரியின்படி, கண் எவ்விதமாக நம்முடைய செயல்களின் மீது செல்வாக்கைச் செலுத்துகிறது?
◻ சாத்தான் என்ன விதங்களில் “கண்களின் இச்சை”க்கு கவர்ச்சியூட்டுகிறான்?
◻ கண்ணை “தெளிவாக” வைத்திருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
◻ எதன்மீது நம்முடைய கண்களை இப்பொழுது ஒருமுகப்படுத்த வேண்டும்?
[கேள்விகள்]
1. கண், புத்திக்கூர்மையுள்ள ஒரு சிருஷ்டிப்புக்கு வியக்கத்தக்க எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று ஏன் சொல்லப்படலாம்?
2. பார்வையின் என்ன அம்சம் விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஒரு புதிராகவே இருந்து வருகிறது?
3. கண் எவ்விதமாக “சரீரத்தின் விளக்காக” இருக்கிறது?
4. கண்ணின் நிலைமையினால் நாம் எவ்விதமாக பாதிக்கப்படுகிறோம்?
5. சாத்தானால் ஏவாள் சோதிக்கப்பட்டபோது, கண் எந்த அளவுக்கு அதில் உட்பட்டிருந்தது?
6. கண் எவ்விதமாக நம்முடைய செயல்களைப் பாதிக்கிறது,
7. இயேசுவை தவறாக வழிநடத்த மூன்றாவது முறையாக சாத்தான் முயற்சிக்கையில் கண் எவ்விதமாக உட்பட்டிருந்தது? விளைவு என்னவாக இருந்தது?
8. ஏவாள் மற்றும் இயேசுவின் உதாரணங்களிலிருந்து நாம் என்ன பாடங்களை கற்றுக்கொள்ளலாம்?
9. சாத்தான் இன்று எவ்விதமாக “கண்களின் இச்சை”யை ஊக்குவிக்கிறான்?
10. வியாபார உலகத்தால் உண்மையில் ஊக்குவிக்கப்படுவது என்ன?
11. கண்ணைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகளில் “தெளிவான” மற்றும் “கெட்டதான” என்பதன் பொருளை விளக்கவும்.
12. இயேசுவின் விவாதத்தின் சந்தர்ப்ப சூழ்நிலையை விமர்சித்து விளக்கவும்.
13. நம்முடைய “சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்” பொருட்டு, நம்முடைய கண் எதன்மீது ஒருமுகப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்?
14. பொருளாதார ஜசுவரியத்தின் மீது ஒருவர் தன்னுடைய கண்களை ஒருமுகப்படுத்துவது எவ்விதமாக “இருளில்” விளைவடைகிறது?
15, 16. (எ) வேறு என்ன “கண்களின் இச்சை”யை நாம் வெறுத்துவிட வேண்டும்? (பி) நீதிமொழிகள் 27:20-லுள்ள புத்திமதியை நம்முடைய பொருளுக்கு எவ்விதமாக நீங்கள் பொருத்துவீர்கள்?
17. கண்ணை “தெளிவாக” வைத்திருப்பது ராஜ்ய அக்கறைகளை நாடுவதற்கு சிலருக்கு எவ்விதமாக உதவியிருக்கிறது?
18. சிறுபிள்ளைகள் எவ்விதமாக தங்களுடைய கண்ணை தெளிவாக வைத்திருக்க கற்பிக்கப்படலாம்?
19. நாம் எதன் மீது நம்முடைய கண்ணை வைத்தால், பிரகாசமான ஒரு எதிர்காலத்தைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம்?
[பக்கம் 23-ன் படம்]
நாம் எதன்மீது நம்முடைய கண்களை ஒருமுகப்படுத்துகிறோமோ அது இருதயத்தின் ஆசைகளை தீவிரமாக்கக்கூடும்