“ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்”
“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.”—ஆதியாகமம் 1:27.
1. கிறிஸ்தவ ஆண்களுக்கும் பெண்களுக்கும் சத்தியம் எவ்வாறு ஆசீர்வாதமாய் இருக்கிறது?
யெகோவாவின் மக்கள் மத்தியில் இருப்பதும் கடவுளை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையே வாழ்க்கையில் முதன்மையாக வைத்திருக்கிற ஆண்கள் பெண்களோடும், சிறுவர் சிறுமியரோடும் கூட்டுறவு கொள்வதும் எத்தனை இன்பமாயிருக்கிறது! யெகோவா தேவனுக்குப் பிரியமில்லாத மனப்பான்மைகளிலிருந்தும் நடத்தையிலிருந்தும்கூட சத்தியம் நம்மை விடுதலை செய்கிறது, கிறிஸ்தவர்களாக நாம் வாழவேண்டிய விதத்தையும் நமக்கு போதிக்கிறது. (யோவான் 8:32; கொலோசெயர் 3:8-10) உதாரணமாக, ஆண்கள் தங்களுடைய ஆண்மையையும் பெண்கள் தங்களுடைய பெண்மையையும் வெளிப்படுத்த வேண்டிய விதத்தைப் பற்றிய பாரம்பரியங்களை அல்லது கருத்துக்களை எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களும் வைத்திருக்கிறார்கள். இது வெறுமனே ஆண்கள் ஆணுக்குரிய பண்புகளுடனும் பெண்கள் பெண்ணுக்குரிய பண்புகளுடனும் பிறந்திருக்கிறதினாலா? அல்லது சிந்தித்துப்பார்க்க வேண்டிய மற்ற காரணிகளும் இருக்கின்றனவா?
2. (அ) பெண்மை மற்றும் ஆண்மைக்குரிய நம்முடைய நோக்குநிலையை எது தீர்மானிக்க வேண்டும்? (ஆ) பாலினங்களைப் பற்றிய நோக்குநிலைகளுக்கு என்ன ஏற்பட்டுவிட்டது?
2 நமக்கிருக்கும் தனிப்பட்ட, கலாச்சார, அல்லது பாரம்பரிய நோக்குநிலைகள் எதுவாக இருந்தாலும்சரி, உண்மை கிறிஸ்தவர்களுக்கு கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளே கீழ்ப்படிவதற்கான அடிப்படை ஆதாரம். (மத்தேயு 15:1-9) ஆண்மையையும் பெண்மையையும் பற்றிய எல்லா அம்சங்களையும் வேதவசனங்கள் விரிவாக கூறுகிறதில்லை. அதற்குப் பதிலாக, வித்தியாசப்பட்ட கலாச்சாரங்களில் நாம் பார்க்கிறபடி, அது பல வகைகளில் அவர்களுடைய இயல்புகளை வெளிப்படுத்த சுதந்திரம் அளிக்கிறது. கடவுள் அவர்களை எந்தவிதமாக படைத்தாரோ அந்தவிதமாகவே இருப்பதற்கு, ஆண்கள் ஆண்களுக்குரிய பண்புகளுடனும் பெண்கள் பெண்களுக்குரிய பண்புகளுடனும் இருக்க வேண்டும். ஏன்? ஆணும் பெண்ணும் சரீரப்பிரகாரமாய் ஒருவரையொருவர் பூர்த்திசெய்கிறவர்களாய் உண்டுபண்ணப்பட்டிருப்பதோடுகூட, ஆணுக்குரிய மற்றும் பெண்ணுக்குரிய பண்புகளின் மூலம் ஒருவரையொருவர் பூரணப்படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும். (ஆதியாகமம் 2:18, 23, 24; மத்தேயு 19:4, 5) ஆனால், பாலினத்தைப் பற்றிய நோக்குநிலைகள் தவறாக திரித்துக் கூறுபவையாய் ஆகிவிட்டன. ஆண்மை என்றாலே கொடுமையாக ஆதிக்கம் செலுத்துதல், முரட்டுத் தன்மை, அல்லது கர்வம் இவற்றுடன்தான் பெரும்பாலானோர் இணைத்துப் பேசுகிறார்கள். சில கலாச்சாரங்களில், பொது இடத்திலோ தனி இடத்திலோ ஓர் ஆண்மகன் கண்ணீர் விட்டழுவது அபூர்வமானது அல்லது வெட்கக்கேடானது. ஆனால், லாசருவினுடைய கல்லறைக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தில், “இயேசு கண்ணீர்விட்டார்.” (யோவான் 11:35) பரிபூரணமாய் இருந்த இயேசுவின் ஆண்மைக்கு அது பொருத்தமற்றதாய் இருக்கவில்லை. இன்று அநேகர் பெண்மைக்குரிய பண்புகளைக் குறித்தும் சமநிலையற்ற நோக்குநிலையையே கொண்டிருக்கிறார்கள்; அதை வெறும் சரீர மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகவே கருதுகிறார்கள்.
உண்மையான ஆண்மையும் உண்மையான பெண்மையும்
3. ஆண்களும் பெண்களும் எவ்வாறு வித்தியாசப்படுகிறார்கள்?
3 உண்மையான ஆண்மை என்றால் என்ன, உண்மையான பெண்மை என்றால் என்ன? தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “பெரும்பாலான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகின்றனர், உடல்ரீதியில் மட்டுமல்ல, நடத்தையிலும் விருப்பங்களிலும் வித்தியாசப்படுகின்றனர். இந்த வித்தியாசங்களில் சில மரபணுவினால் தீர்மானிக்கப்படுகின்றன. . . . ஆனால் மரபணு அமைப்பில் இல்லாத அநேக வித்தியாசங்கள், ஒவ்வொரு தனிநபரும் பாலின நடத்தையைப் பற்றி கற்றுக்கொள்வதன் அடிப்படையில் இருப்பதாக தோன்றுகின்றன. ஆணாகவோ பெண்ணாகவோ ஆட்கள் பிறக்கின்றனர், ஆனால் அவர்கள் ஆண்மைக்குரியவர்களாகவோ பெண்மைக்குரியவர்களாகவோ இருப்பதற்கு கற்றுக்கொள்கின்றனர்.” அநேக காரியங்களுக்கு நம்முடைய மரபணு அமைப்பு காரணமாக இருக்கலாம்; ஆனால் பொருத்தமான ஆண்மையின் அல்லது பெண்மையின் வளர்ச்சி, கடவுள் நம்மிடம் தேவைப்படுத்தும் காரியங்களைக் கற்றுக்கொள்வதன் பேரிலும் தனிப்பட்ட ஆளாக வாழ்க்கையில் நாம் தெரிவுசெய்கிறவற்றின் பேரிலுமே சார்ந்திருக்கிறது.
4. ஆண், பெண் வகிக்கும் பாகங்களைப் பற்றி பைபிள் என்ன வெளிப்படுத்துகிறது?
4 தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தலையாக இருந்து அவர்களை வழிநடத்த வேண்டியதே ஆதாமுக்கு நியமிக்கப்பட்ட பாகம் என பைபிள் சரித்திரம் வெளிப்படுத்துகிறது. பூமியை நிரப்பி அதை கீழ்ப்படுத்தி பூமியிலுள்ள ஜீவஜந்துக்களை ஆண்டுகொள்வதற்கு கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக அவன் செயல்பட வேண்டியதாயும் இருந்தது. (ஆதியாகமம் 1:28) ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட பெண்மைக்குரிய குடும்ப பாகம், ஆதாமுக்கு ஒரு ‘உதவியாளாகவும்’ ‘பூர்த்திசெய்பவளாகவும்’ இருப்பதும் அவனுடைய தலைமைவகிப்புக்குக் கீழ்ப்படிந்திருப்பதும் அவர்களுக்கான கடவுளுடைய தெரிவிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவனுடன் ஒத்துழைப்பதுமேயாகும்.—ஆதியாகமம் 2:18, NW; 1 கொரிந்தியர் 11:3.
5. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவு எவ்வாறு பாதிப்படைந்தது?
5 ஆனால், ஆதாம் தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றவில்லை; ஏவாளை குறித்ததிலோ, கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போவதில் ஆதாமும் தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி அவனை கவருவதற்கு அவள் தன் பெண்மையை இணங்கவைக்கும் விதத்தில் பயன்படுத்தினாள். (ஆதியாகமம் 3:6) தவறு என்று தான் தெரிந்திருந்ததைச் செய்வதற்கு தன்னை அனுமதிப்பதன் மூலம், ஆதாம் உண்மையான ஆண்மையை வெளிப்படுத்த தவறிவிட்டான். தன்னுடைய தகப்பனும் படைப்பாளருமானவருக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, வஞ்சிக்கப்பட்ட தன் துணைவியின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதற்கு பலவீனமாக தெரிவுசெய்தான். (ஆதியாகமம் 2:16, 17) கீழ்ப்படியாமையின் விளைவாக என்ன வருமென்று யெகோவா முன்னறிந்திருந்தாரோ அதையே அந்த முதல் தம்பதியினர் விரைவில் அனுபவிக்க ஆரம்பித்தார்கள். முன்பு தன் மனைவியை உணர்ச்சிப்பொங்க, கவிதை நடையில் வர்ணித்த ஆதாமோ, ‘நீர் தந்த ஸ்திரீயானவள்’ என உணர்ச்சியற்ற விதத்தில் அவளைக் குறிப்பிட்டான். இப்பொழுது அவனுடைய அபூரணத்தன்மை ஆணுக்குரிய இயல்பை கெடுத்து தவறாக வழிநடத்தியது, இது தன் மனைவியை ‘ஆண்டுகொள்வதில்’ விளைவடைந்தது. ஏவாளோ, ஒருவேளை மிதமிஞ்சிய அல்லது சமநிலையற்ற விதத்தில் தன்னுடைய கணவனுக்காக ‘ஏக்கமுடையவளாக’ இருப்பாள்.—ஆதியாகமம் 3:12, 16, NW.
6, 7. (அ) ஜலப்பிரளயத்திற்கு முன்பு ஆண்மைக்குரிய பண்பில் என்ன உருக்குலைவு ஏற்பட்டது? (ஆ) ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த சூழ்நிலைமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 ஆண்மையையும் பெண்மையையும் தவறாக பயன்படுத்துவது நோவாவினுடைய நாளில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்திற்கு முன்பு தெளிவாக தெரிய ஆரம்பித்தது. பரலோகத்தில் தங்களுக்கு இருந்த ஆதி ஸ்தானத்தை விட்டுவிட்ட தேவதூதர்கள், மனித குமாரத்திகளோடே பால் சம்பந்தமான உறவுகளை அனுபவிப்பதற்காக மனித உடல்களை எடுத்துக் கொண்டார்கள். (ஆதியாகமம் 6:1, 2) இயற்கைக்கு மாறான அந்தப் புணர்ச்சியிலிருந்து ஆண் பிள்ளைகள் மட்டுமே பிறந்ததாக அந்தப் பதிவு குறிப்பிடுகிறது. அந்தப் பிள்ளைகள் கலப்பினங்களாய், இனப்பெருக்கம் செய்யமுடியாதவர்களாய் இருந்தனர் என தெரிகிறது. அவர்கள் பலவான்கள், நெஃப்லிம்கள் அல்லது வீழ்த்துபவர்கள் என அறியப்பட்டார்கள். ஏனென்றால் மற்றவர்கள் விழுந்துபோகும்படி செய்தனர். (ஆதியாகமம் 6:4, NW அடிக்குறிப்பு) கிடைக்கும் அத்தாட்சியின்படி பார்த்தால், அவர்கள் மூர்க்கத்தனமானவர்களாய், வலியத்தாக்குபவர்களாய், இரக்கமற்றவர்களாய், மற்றவர்களிடம் எந்தப் பரிவிரக்கத்தையும் காண்பிக்காதவர்களாய் இருந்தார்கள்.
7 தெளிவாகவே, சரீர அழகு, உடல்வாகு, பருமன், அல்லது பலம் ஆகியவைதாமே ஏற்றுக்கொள்ளத்தக்க ஆண்மையையோ பெண்மையையோ அளிப்பதில்லை. மாம்ச உடலில் வந்த அந்தத் தூதர்கள் ஒருவேளை அழகிய தோற்றமுடன் இருந்திருக்கலாம். அந்த நெஃப்லிம்கள் பருமனாகவும் முறுக்கேறிய உடலுடனும் இருந்தார்கள், ஆனால் அவர்களுடைய மனோபாவமே நெறிதவறியதாக இருந்தது. கீழ்ப்படியாத அந்தத் தூதர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் இந்தப் பூமியை பாலுறவு ஒழுக்கக்கேட்டாலும் வன்முறையாலும் நிரப்பினார்கள். ஆகவே, யெகோவா அந்த உலகை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார். (ஆதியாகமம் 6:5-7) என்றபோதிலும், ஜலப்பிரளயம் பேய்த்தன செல்வாக்கை ஒழிக்கவுமில்லை, ஆதாமிய பாவத்தின் விளைவுகளை நீக்கவுமில்லை. ஆண்மைக்குரிய மற்றும் பெண்மைக்குரிய தவறான பண்புகள் ஜலப்பிரளயத்திற்குப் பின்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தன; நாம் கற்றுக்கொள்வதற்கான—நல்லவை கெட்டவை ஆகிய இரண்டிற்குமான—உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன.
8. பொருத்தமான ஆண்மைக்கு யோசேப்பு என்ன சிறந்த முன்மாதிரியை வைத்தான்?
8 யோசேப்பையும் போத்திபாரின் மனைவியையும் பற்றிய விவரப்பதிவு, பொருத்தமான ஆண்மைக்கும் உலகியல் சார்ந்த பெண்மைக்கும் இடையே உள்ள தெளிவான வித்தியாசத்தை காண்பிக்கிறது. போத்திபாரின் மனைவி அழகிய தோற்றமுடைய யோசேப்பின்மீது மோகம்கொண்டு அவனுடைய ஒழுக்கத்தைக் கெடுக்க முயன்றாள். அந்தச் சமயத்தில், வேசித்தனத்தையோ விபசாரத்தையோ தடைசெய்கிற எழுதப்பட்ட தெய்வீக சட்டம் எதுவும் கிடையாது. இருப்பினும், ஒழுக்கயீனமான அந்தப் பெண்ணிடமிருந்து யோசேப்பு தப்பியோடி தன்னை கடவுளுடைய உண்மையுள்ள மனிதனாக நிரூபித்தான், கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றிருந்த ஆண்மையைக் காண்பித்தான்.—ஆதியாகமம் 39:7-9, 12.
9, 10. (அ) ராணியாகிய வஸ்தி எவ்வாறு தன்னுடைய பெண்மையை தவறாக பயன்படுத்தினாள்? (ஆ) பெண்மைக்குரிய என்ன நல்ல முன்மாதிரியை எஸ்தர் நமக்கு வைத்தாள்?
9 பெண்களுக்கு, எஸ்தரும் ராணியாகிய வஸ்தியும் குறிப்பிடத்தக்க விதத்தில் முரண்பட்ட முன்மாதிரியை வைத்தார்கள். வஸ்தி, அதிக அழகுடையவளாய் இருந்ததினால் ராஜாவாகிய அகாஸ்வேரு எப்பொழுதும் தன்னுடைய விருப்பங்களுக்கு இணங்கிப்போவார் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவளுடைய அழகு வெறும் மேற்பூச்சாகவே இருந்தது. அடக்கத்திலும் பெண்மையிலும் அவள் குறைவுபட்டாள், ஏனென்றால் தன்னுடைய கணவனும் ராஜாவுமாகியவருக்கு கீழ்ப்படிதலைக் காண்பிக்கத் தவறினாள். ராஜா அவளை புறக்கணித்துவிட்டு, தனக்கு ராணியாக இருப்பதற்கு, உண்மையில் யெகோவாவுக்கு பயந்து நடந்த உண்மையான பெண்மையையுடைய ஒரு பெண்ணை தெரிந்துகொண்டார்.—எஸ்தர் 1:10-12; 2:15-17.
10 கிறிஸ்தவ பெண்களுக்கு எஸ்தர் ஒரு மிகச் சிறந்த முன்மாதிரி. அவள் “ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்,” ஆனால் ‘அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமாகிய’ அலங்கரிப்பை காண்பித்தாள். (எஸ்தர் 2:7; 1 பேதுரு 3:4) பகட்டான அலங்கரிப்பை முக்கியமானதாக அவள் கருதவில்லை. எஸ்தர் சாதுரியத்தையும் தன்னடக்கத்தையும் காண்பித்தாள்; தன் மக்களுடைய உயிர் ஆபத்தில் இருந்தபோதுகூட, தன்னுடைய கணவனாகிய அகாஸ்வேருவுக்கு கீழ்ப்பட்டிருந்தாள். எப்போது அமைதலாய் இருப்பது ஞானமாய் இருக்குமோ அப்போது அவள் அமைதலாய் இருந்தாள், ஆனால் எப்போது பேசவேண்டிய தேவை ஏற்பட்டதோ அப்போது அவள் தைரியமாகவும் சரியான சமயத்திலும் பேசினாள். (எஸ்தர் 2:10; 7:3-6) முதிர்ச்சிவாய்ந்த அவளுடைய பெரியப்பா மகனாகிய மொர்தேகாய் கொடுத்த அறிவுரையை ஏற்றுக்கொண்டாள். (எஸ்தர் 4:12-16) அவள் தன்னுடைய மக்களிடம் அன்பையும் உண்மைப்பற்றுறுதியையும் காண்பித்தாள்.
வெளிப்புற தோற்றம்
11. வெளிப்புற தோற்றத்தைக் குறித்ததில் நாம் எதை மனதில் வைத்திருக்க வேண்டும்?
11 பொருத்தமான பெண்மைக்குரிய இரகசியம் என்ன? ஒரு தாய் சொன்னார்: “செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.” (நீதிமொழிகள் 31:30) ஆகவே, கடவுளிடம் காண்பிக்கும் பயபக்தி இன்றியமையாதது; அன்புள்ள தயவு, இனிமை, அடக்கம், சாந்தமுள்ள நாவு ஆகியவை சரீர அழகைவிட பெண்மைக்கு அதிக அழகு சேர்க்கின்றன.—நீதிமொழிகள் 31:26.
12, 13. (அ) வருத்தகரமாக, பலருடைய பேச்சு எதைக் காண்பிக்கிறது? (ஆ) நீதிமொழிகள் 11:22-ன் அர்த்தம் என்ன?
12 வருத்தகரமான காரியம் என்னவென்றால், அநேக பெண்களும் ஆண்களும் தங்களுடைய வாயை ஞானம் விளங்க திறப்பதுமில்லை, அவர்களுடைய நாவில் அன்புள்ள தயையும் இல்லை. அவர்களுடைய பேச்சு இழிவானதாய், குத்தலாய், அசிங்கமாய், கரிசனையற்றதாய் இருக்கிறது. அசிங்கமான பேச்சே ஆண்மைக்கு அடையாளம் என்று ஆண்கள் சிலர் நினைக்கிறார்கள், சில பெண்கள் இவர்களை முட்டாள்தனமாய் பின்பற்றுகிறார்கள். ஆனால், ஒரு பெண் அழகானவளாக இருந்து ஆனால் விவேகமற்றவளாக, வாதிடுகிறவளாக, குத்தலாய் பேசுகிறவளாக அல்லது அகந்தையுள்ளவளாக இருந்தால், சரியான கருத்தில் அவள் உண்மையிலேயே அழகுள்ளவளாக, உண்மையிலேயே பெண்மைக்குரியவளாக இருக்க முடியுமா? “மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.”—நீதிமொழிகள் 11:22.
13 அசுத்தமான பேச்சு, கேலிப்பேச்சு, அல்லது விவேகமில்லாமை ஆகியவற்றோடுகூடிய அழகு, ஒரு நபர் வெளிப்படுத்திக் காட்டும் பெண்மைக்குரிய எந்தத் தோற்றத்துடனும் ஒத்துப்போகாததாக இருக்கும். உண்மையில் சொல்லப்போனால், தேவபக்தியற்ற இப்படிப்பட்ட நடத்தை, சரீரப்பிரகாரமாய் கவர்ச்சிகரமாய் உள்ள நபரையும்கூட அசிங்கமானவராக்கும். ஆண் அல்லது பெண்ணின் சரீரப்பிரகாரமான தோற்றம் தானேயும் சீறியெழும் கோபத்தை, கூச்சலிடுவதை அல்லது தகாத பேச்சை ஈடுகட்டவோ அல்லது நியாயப்படுத்தவோ முடியாது என்பதை நாம் எளிதாக பகுத்துணரலாம். எல்லா கிறிஸ்தவர்களும் தங்களுடைய பைபிள் அடிப்படையிலான பேச்சு மற்றும் நடத்தையின் மூலம் கடவுளுக்கு முன்பாகவும் உடன் மனிதர்களுக்கு முன்பாகவும் தங்களை கவர்ச்சிகரமானவர்களாக ஆக்கிக்கொள்ள முடியும், ஆக்கிக்கொள்ளவும் வேண்டும்.—எபேசியர் 4:31.
14. 1 பேதுரு 3:3-5-ல் என்ன விதமான அலங்காரம் போற்றப்படுகிறது, அதைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?
14 மதிப்புமிக்க பெண்மையும் ஆண்மையும் ஆவிக்குரிய பண்புகளை அடிப்படையாக கொண்டிருக்கிறபோதிலும், நாம் உடுத்துகிற உடையும் உடுத்துகிற விதமும் உட்பட, சரீர பாங்கும் தோற்றமும் நம்மைப் பற்றி பேசுகின்றன. கிறிஸ்தவ பெண்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு அறிவுரை கொடுத்தபோது முதல் நூற்றாண்டிலிருந்த குறிப்பிட்ட சில பாணிகளையும் உடையையும் அவர் தன்னுடைய மனதில் கொண்டிருந்தார் என்பதில் சந்தேகமில்லை: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.”—1 பேதுரு 3:3-5.
15. கிறிஸ்தவ பெண்கள் தங்களுடைய உடையின்மூலம் எதை வெளிப்படுத்திக் காண்பிக்க முயல வேண்டும்?
15 ஒன்று தீமோத்தேயு 2:9, 10-ல் பெண்மைக்குரிய உடையைக் குறித்து பவுல் சொல்லும் குறிப்பை நாம் காண்கிறோம்: “ஸ்திரீகளும் . . . தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்.” அடக்கத்தையும் தெளிந்த புத்தியையும் பிரதிபலிக்கிற நேர்த்தியான உடைக்கான தேவையை அதில் வலியுறுத்திக் கூறினார்.
16, 17. (அ) இன்று அநேக ஆண்களும் பெண்களும் உடைகளை எவ்வாறு தவறான முறையில் பயன்படுத்துகின்றனர்? (ஆ) உபாகமம் 22:5-ல் காணப்படுகிற ஆலோசனையிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்?
16 ஒரு ஆணோ பெண்ணோ, சிறுவனோ சிறுமியோ, பால் சம்பந்தமாக உணர்ச்சியைத் தூண்டுகிற விதத்தில் நடந்துகொள்வது அல்லது உடை உடுத்துவது உண்மையான பெண்மையையோ அல்லது ஆண்மையையோ உயர்த்தாது, அது நிச்சயமாகவே யெகோவாவை கனப்படுத்தாது. உலகத்திலுள்ள அநேக மக்கள், உடையைக் குறித்ததிலும் நடத்தையைக் குறித்ததிலும் ஆண்மைக்குரிய அல்லது பெண்மைக்குரிய பாலியலை பகட்டாக காட்டுமளவுக்கு மிதமிஞ்சி சென்றுவிடுகிறார்கள். மற்றவர்கள் ஒழுக்கயீனமான நோக்கங்களின் காரணமாக ஆண், பெண்ணுக்கிடையே உள்ள வித்தியாசங்களைத் தெளிவற்றதாக்கிவிடுகிறார்கள். கடவுளுடைய சிந்தையை பைபிள் வெளிப்படுத்துவதற்காக கிறிஸ்தவர்களாகிய நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும்! பூர்வ இஸ்ரவேலருக்கு யெகோவா இவ்வாறு சொன்னார்: “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.”—உபாகமம் 22:5.
17 இதன் சம்பந்தமாக, நவம்பர் 1, 1989, பக்கம் 17-ல் காவற்கோபுரம் என்ன சொன்னது என்பதை மீண்டும் பார்ப்பதை நீங்கள் ஒருவேளை அனுபவித்து மகிழக்கூடும்: “பிரச்னை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பாணி தீவிரமான விதத்தில் புதுப்பாணி கொண்டது என்பது அல்ல, ஆனால் கடவுளுடைய ஊழியர் என்று உரிமைபாராட்டும் ஒருவருக்குத் தகுதியானதா என்பதே. (ரோமர் 12:2; 2 கொரிந்தியர் 6:3) அளவுக்கு மிஞ்சி கவலையீனமாக உடுத்துதல், மற்றும் இறுக்கமான உடைகள் மற்றவர்களை நம்முடைய செய்தியிலிருந்து திசைத்திருப்பிவிடும். வேண்டுமென்றே ஆண்களைப் பெண்களாகக் காண்பிப்பது, அல்லது பெண்களை ஆண்களாகக் காண்பிப்பது சார்ந்த உடைப் பாணிகள் நிச்சயமாகவே சரி அல்ல. (உபாகமம் 22:5-ஐ ஒப்பிடுக.) உண்மைதான், உள்ளூர் பழக்க முறைகள் வித்தியாசப்படலாம், இவை சீதோஷணம், வேலை அல்லது தொழில் போன்றவற்றிற்கு ஏற்றதாக அமையலாம். எனவே கிறிஸ்தவ சபை தங்களுடைய உலக சகோதரத்துவத்தை உட்படுத்தும் வகையில் எந்த ஒரு கடினமான விதியையும் ஏற்படுத்துவதில்லை.”
18. உடை மற்றும் சிகையலங்காரத்தைப் பற்றிய பைபிளின் ஆலோசனையைப் பொருத்திப் பயன்படுத்துவதில் என்ன படிகளை நாம் எடுக்கலாம்?
18 சமநிலையானதும் பொருத்தமானதுமான எப்பேர்ப்பட்ட அறிவுரை! விசனகரமாக, சில கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும், தங்களுடைய உடையும் சிகையலங்காரமும் யெகோவாவையும் கிறிஸ்தவ சபையையும் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை சிந்தித்துப்பார்க்காமல் இந்த உலகம் தூண்டுவிக்கிற போக்கை கண்மூடித்தனமாய் பின்பற்றுகிறார்கள். இந்த உலகத்தின் சிந்தனையால் செல்வாக்கு செலுத்தப்படுகிறோமா என்பதை பார்ப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஓரளவு சுயபரிசோதனையை செய்துபார்க்கலாம். அல்லது மரியாதைக்குரியவரும் அனுபவமிக்கவருமான சகோதரர் அல்லது சகோதரியை அணுகி, நாம் உடை உடுத்தும் பாணியில் செய்யவேண்டிய ஏதாவது மாற்றங்களைக் குறித்து அவர்களுடைய மனதிற்குப் பட்டதைச் சொல்லும்படி கேட்டு, பின்பு ஆலோசனைகளைக் கருத்தார்ந்த விதத்தில் சீர்தூக்கிப் பார்க்கலாம்.
கிறிஸ்தவ ஆண்கள், பெண்கள்—உண்மையான ஆண்கள், பெண்கள்
19. விரும்பத்தகாத என்ன செல்வாக்கை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்?
19 இந்த உலகத்தின் கடவுள் சாத்தானே, பாலினங்களைக் குறித்ததில் அவன் உருவாக்கியிருக்கிற குழப்பத்திலிருந்து அவனுடைய செல்வாக்கை காணலாம், அது உடை சம்பந்தப்பட்ட காரியங்களுக்கும் அப்பால் செல்கிறது. (2 கொரிந்தியர் 4:4) சில நாடுகளில் பெண்கள் பலர், பைபிள் நியமங்களைப் புறக்கணித்துவிட்டு தலைமைத்துவத்தைக் குறித்து ஆண்களுடன் போட்டிபோடுகிறார்கள். மறுபட்சத்தில், பெரும்பாலான ஆண்கள், ஆதாமைப் போல தங்களுடைய தலைமைத்துவ பொறுப்புகளை வெறுமனே தட்டிக்கழித்துவிடுகிறார்கள். வாழ்க்கையில் பாலுறவு வகிக்கும் பாகத்தை வித்தியாசமான புணர்ச்சிகளுக்கு மாற்ற முயற்சிசெய்கிறவர்களும்கூட இருக்கிறார்கள். (ரோமர் 1:26, 27) கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுவகை வாழ்க்கை பாணிகள் எதையும் பைபிள் குறிப்பிடுகிறதில்லை. கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன் தங்களுடைய தனித்துவத்தை அல்லது பாலின தெரிவுகளைப் பற்றி குழப்பமடைந்த எவரும், ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள கடவுளுடைய தராதரத்திற்கு, மனித பரிபூரணத்தை எட்டுகிற அனைவராலும் நிச்சயமாகவே போற்றப்படுகிற ஒரு தராதரத்திற்கு, இசைவாக வாழ்வது தங்களுடைய நித்தியகால நன்மைக்கே என்பதை நம்பலாம்.
20. பெண்மை மற்றும் ஆண்மையைக் குறித்த நம்முடைய நோக்குநிலையில், கலாத்தியர் 5:22, 23 என்ன பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்?
20 கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் கடவுளுடைய ஆவியின் கனிகளை—அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றை—வளர்த்துக்கொள்ளவும் வெளிப்படுத்திக் காண்பிக்கவும் வேண்டும் என்று வேதாகமம் காண்பிக்கிறது. (கலாத்தியர் 5:22, 23) இந்தக் கனிகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் ஆண்கள் தங்களுடைய ஆண்மையையும் பெண்கள் தங்களுடைய பெண்மையையும் மேம்படுத்திக்கொள்ளும்படி கடவுள் தம்முடைய தலைசிறந்த ஞானத்தால் உதவிசெய்தார். ஆவியின் கனிகளை வெளிப்படுத்துகிற ஒரு ஆணுக்கு மரியாதை காண்பிப்பது எளிது, அவ்விதமாக செய்கிற ஒரு பெண்ணுக்கு அன்பு காண்பிப்பது எளிது.
21, 22. (அ) வாழ்க்கை பாணிகளைக் குறித்ததில் இயேசு என்ன மாதிரியை வைத்தார்? (ஆ) இயேசு எவ்வாறு தம்முடைய ஆண்மையை வெளிப்படுத்தினார்?
21 எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் இயேசு கிறிஸ்து, அவருடைய வாழ்க்கை முறையே கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை. (1 பேதுரு 2:21-23) இயேசுவைப் போலவே, ஆண்கள், பெண்கள் ஆகிய இருதரப்பினரும் கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவர்களாய் இருந்து அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும். மிகச் சிறந்த குணங்களாகிய அன்பு, கனிவு, இரக்கம் ஆகியவற்றை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார். உண்மை கிறிஸ்தவர்களாக, நாம் அவருடைய சீஷர்கள் என்பதை நிரூபித்துக் காண்பிப்பதற்கு அவரைப் பார்த்து பின்பற்றும்படி எதிர்பார்க்கப்படுகிறோம்.—யோவான் 13:35.
22 இயேசு கிறிஸ்து உண்மையான மனிதனாக இருந்தார், வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள அவருடைய வாழ்க்கைப் பதிவை நாம் ஆராய்கையில் அவருடைய ஆணுக்குரிய பண்புகளைத் தெளிவாக காணமுடியும். அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை, ஆனால் பெண்களுடன் ஒரு சமநிலையான கூட்டுறவை அனுபவித்து மகிழ்ந்தார் என்பதை பைபிள் காண்பிக்கிறது. (லூக்கா 10:38, 39) ஆண்களுடனும் பெண்களுடனும் அவர் வைத்திருந்த உறவு எப்பொழுதும் கற்புடனும் மதிப்புடனும் இருந்தன. அவரே ஆண்மைக்கு பரிபூரண முன்மாதிரி. ஆணோ பெண்ணோ, கீழ்ப்படியாத தேவதூதரோ யாராக இருந்தாலும்சரி, அவருடைய தேவபக்திக்குரிய ஆண்மையையும் யெகோவாவுக்கான உண்மைத்தன்மையையும் தம்மிடமிருந்து பறித்துக்கொள்ள ஒருவரையும் அனுமதிக்கவில்லை. அவர் தம்முடைய உத்தரவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கு தயங்கவில்லை, அதை முறுமுறுப்பின்றி செய்தார்.—மத்தேயு 26:39.
23. பாலினங்கள் வகிக்கும் பாகங்கள் சம்பந்தமாக, உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு தனித்தன்மை வாய்ந்த முறையில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்?
23 யெகோவாவின் மக்கள் மத்தியில் இருப்பதும் யெகோவா தேவனை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையே வாழ்க்கையில் முதன்மையாக வைத்திருக்கிற ஆண்கள் பெண்களோடும், சிறுவர் சிறுமியர்களோடும் கூட்டுறவு கொள்வதும் எத்தனை சந்தோஷமாயிருக்கிறது! கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதனால் நாம் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, பாலினங்களின் அழகை, அவற்றின் நோக்கத்தை, அவை வகிக்கும் தெளிவான பாகங்களை இழிவுபடுத்துகிற இந்த உலகிலிருந்தும் அதன் வழிகளிலிருந்தும் நாம் விடுவிக்கப்படுகிறோம். நாம் ஆணாக இருந்தாலும்சரி பெண்ணாக இருந்தாலும்சரி, வாழ்க்கையில் கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற ஸ்தானத்தை நிறைவேற்றுவதிலிருந்து வருகிற உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். ஆம், நம் சார்பாக அவர் செய்திருக்கிற அன்பான எல்லா ஏற்பாடுகளுக்காகவும் நம்மை ஆணும் பெண்ணுமாக படைத்திருப்பதற்காகவும் சிருஷ்டிகராகிய யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ ஆண்கள், பெண்கள் வகிக்கவேண்டிய பொருத்தமான என்ன பாகங்களை பைபிள் விவரிக்கிறது?
◻ ஜலப்பிரளயத்திற்கு முன்பு எவ்வாறு ஆண்மை உருக்குலைக்கப்பட்டது, நம்முடைய நாளில் அது எவ்வாறு திரிக்கப்பட்டிருக்கிறது?
◻ தோற்றத்தைப் பற்றிய எந்த பைபிள் அறிவுரையை நீங்கள் பொருத்திப் பயன்படுத்த நாடுவீர்கள்?
◻ கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் எவ்வாறு உண்மையான ஆண்களும் பெண்களுமாக நிரூபிக்கலாம்?
[பக்கம் 17-ன் படம்]
அழகுள்ளவளாய் இருந்தபோதிலும், குறிப்பாக அடக்கத்திற்கும் அவளுடைய அமைதியும் சாந்தமுமான பண்புக்கும் எஸ்தர் நினைவுகூரப்படுகிறாள்
[பக்கம் 18-ன் படம்]
சிகையலங்காரத்திற்கு நியாயமான கவனம் செலுத்துங்கள், அதேசமயத்தில் உள்ளான அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்