கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்ற ஒரு நிர்வாகம்
‘[கடவுள்] தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிறார்.’—எபேசியர் 1:12.
1. யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளைச் சேர்ந்த அனைவரும் ஏப்ரல் 12, 2006 அன்று எதற்காக ஒன்றுகூடிவருவார்கள்?
கிட்டத்தட்ட ஒரு கோடியே அறுபது லட்சம் பேர், ஏப்ரல் 12, 2006, புதன்கிழமை மாலை அன்று கர்த்தருடைய இராப்போஜனத்தை அனுசரிக்க ஒன்றுகூடிவருவார்கள். அவர்கள் கூடிவரும் ஒவ்வொரு இடத்திலும், ஒரு மேஜையில் புளிப்பில்லாத அப்பமும் சிவப்பு திராட்சரசமும் வைக்கப்பட்டிருக்கும்; அந்த அப்பம் கிறிஸ்துவின் உடலையும், திராட்சரசம் அவர் சிந்திய இரத்தத்தையும் அடையாளப்படுத்தும். இயேசுவின் நினைவுநாள் ஆசரிப்பினுடைய அர்த்தத்தைப் பற்றி ஒரு பேச்சு கொடுக்கப்படும்; அப்பேச்சு முடிவுறும் சமயத்தில் அந்த அடையாளச் சின்னங்கள் எல்லாருக்கும் அனுப்பப்படும்; முதலில் அப்பமும் பிறகு திராட்சரசமும் அனுப்பப்படும். யெகோவாவின் சாட்சிகளுடைய சில சபைகளில் ஓரிருவர் அந்தச் சின்னங்களில் பங்குகொள்வார்கள். ஆனால் பெரும்பாலான சபைகளில் ஒருவர்கூட பங்குகொள்ள மாட்டார்கள். ஆக, சில கிறிஸ்தவர்கள் மட்டுமே, அதாவது பரலோகத்திற்குச் செல்லும் நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமே அதில் பங்குகொள்வது ஏன்? பூமியில் என்றென்றும் வாழப்போகும் நம்பிக்கையுள்ள திரளானவர்கள் அதில் பங்குகொள்ளாதிருப்பது ஏன்?
2, 3. (அ) யெகோவா தமது நோக்கத்திற்கு இசைவாக எவ்வாறு படைக்க ஆரம்பித்தார்? (ஆ) பூமியையும் மனிதனையும் என்ன நோக்கத்திற்காக யெகோவா படைத்தார்?
2 யெகோவா தேவன், நோக்கமுள்ள ஒரு கடவுள். தமது நோக்கத்தை நிறைவேற்ற அவர் ‘தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிறார்.’ (எபேசியர் 1:12) அவர் முதன்முதலாக தமது ஒரேபேறான குமாரனைப் படைத்தார். (யோவான் 1:1, 14; வெளிப்படுத்துதல் 3:14) அதன் பிறகு, அந்தக் குமாரனைக் கொண்டு மற்ற ஆவி குமாரர்களையும், பூமி மற்றும் மனிதன் உட்பட முழு பிரபஞ்சத்தையும் படைத்தார்.—யோபு 38:4, 7; சங்கீதம் 103:19-21; யோவான் 1:2, 3; கொலோசெயர் 1:15, 16.
3 கடவுள் பூமியில் மனிதர்களை சோதித்துப் பார்த்துவிட்டு, பிறகு பரலோகத்திலுள்ள ஆவி குமாரர்களின் குடும்பத்தில் அவர்களைச் சேர்த்துக்கொள்வதாக அநேக கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் கற்பிக்கின்றன; ஆனால் பூமியை அவ்வாறு ஒரு ‘சோதனைக்கூடமாக’ யெகோவா படைக்கவில்லை; திட்டவட்டமான ஒரு நோக்கத்திற்காகவே, அதாவது, ‘குடியிருப்புக்காகவே’ படைத்தார். (ஏசாயா 45:18) பூமியை மனிதனுக்காகவும் மனிதனை பூமிக்காகவும் உண்டாக்கினார். (சங்கீதம் 115:16) முழு பூமியும் பரதீஸாக ஆக வேண்டும், அதில் நீதிமான்கள் குடியிருக்க வேண்டும், அதை அவர்கள் பண்படுத்தி பராமரிக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஆக, பரலோகத்துக்குப் போகும் நம்பிக்கை, முதல் மனித தம்பதிக்குக் கொடுக்கப்படவில்லை.—ஆதியாகமம் 1:26-28; 2:7, 8, 15.
யெகோவாவின் நோக்கம் சவால்விடப்படுகிறது
4. யெகோவா பேரரசாட்சி செலுத்தும் விதம் மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே எவ்வாறு முக்கிய விவாதத்திற்குள்ளானது?
4 கடவுளுடைய ஆவி குமாரர்களில் ஒருவன் கலகம் செய்தான்; கடவுளுடைய பரிசை, அதாவது சுயமாகத் தெரிவு செய்கிற சுதந்திரத்தை, தவறான விதத்தில் பயன்படுத்தி அவரது நோக்கத்தைக் குலைக்கத் தீர்மானித்தான். யெகோவாவின் பேரரசாட்சிக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்பட்டிருக்கிறவர்களுக்குக் கிடைக்கும் சமாதானத்தைக் கெடுத்துப்போட்டான். கடவுளை விட்டுப்பிரிந்து சுயமாக வாழ ஆரம்பிப்பதற்கு முதல் மனிதத் தம்பதியைத் தூண்டினான். (ஆதியாகமம் 3:1-6) யெகோவாவின் வல்லமையைக் குறித்து அவன் சவால்விடவில்லை, ஆனால் அவர் பேரரசாட்சி செலுத்தும் விதத்தைக் குறித்தே சவால்விட்டான்; இதன் மூலம் ஆட்சி செய்வதற்கான அவரது உரிமையையே கேள்விக்குறியாக்கினான். இவ்வாறு, மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே யெகோவாவின் பேரரசாட்சி பூமியில் முக்கிய விவாதத்திற்குள்ளானது.
5. வேறு என்ன விவாதமும் எழுப்பப்பட்டது, அது யாரையெல்லாம் உட்படுத்தியது?
5 சர்வலோக பேரரசாட்சி பற்றிய முக்கிய விவாதத்தோடு சம்பந்தப்பட்ட மற்றொரு விவாதத்தை சாத்தான் யோபுவின் நாட்களில் எழுப்பினான். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து சேவை செய்கிற அவரது சிருஷ்டிகளின் உள்நோக்கத்தைக் குறித்து அவன் கேள்வியெழுப்பினான். சுயநல காரணங்களுக்காகவே அவர்கள் யெகோவாவை வணங்குகிறார்கள் என்றும், சோதனைகள் வந்தால் அவரை விட்டுவிடுவார்கள் என்றும் அவன் மறைமுகமாகத் தெரிவித்தான். (யோபு 1:7-11; 2:4, 5) அந்த விவாதம், யெகோவாவை வணங்கிய ஒரு மனிதனைப் பற்றியதே என்றாலும், கடவுளுடைய ஆவி குமாரர்கள் அனைவரையும், சொல்லப்போனால் அவரது ஒரேபேறான குமாரனையும்கூட அது உட்படுத்தியது.
6. யெகோவா தமது நோக்கத்திற்கும் தமது பெயரின் அர்த்தத்திற்கும் இசைவாக எவ்வாறு செயல்பட்டார்?
6 யெகோவா தமது நோக்கத்திற்கும் தமது பெயரின் அர்த்தத்திற்கும் இசைவாக தம்மையே ஒரு தீர்க்கதரிசியாகவும் இரட்சகராகவும் ஆக்கிக்கொண்டார்.a சாத்தானிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) யெகோவா, தமது ‘ஸ்திரீ’ மூலமாக, அதாவது தமது அமைப்பினுடைய பரலோக பாகத்தின் வித்து மூலமாக, சாத்தானுடைய சவாலுக்குப் பதிலளிப்பார்; அதோடு, ஆதாமின் சந்ததியினருக்கு, மீட்பும் ஜீவனும் பெறுவதற்கான நம்பிக்கையை அளிப்பார்.—ரோமர் 5:21; கலாத்தியர் 4:26, 31.
‘அவரது சித்தத்தின் இரகசியம்’
7. அப்போஸ்தலன் பவுல் மூலமாக யெகோவா என்ன நோக்கத்தை வெளிப்படுத்தினார்?
7 அப்போஸ்தலன் பவுல் எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில், யெகோவா எவ்வாறு தமது நோக்கத்தை நிறைவேற்ற காரியங்களை நிர்வகிக்கிறார் என அழகாக விளக்கினார். அவர் இவ்வாறு எழுதினார்: “காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி [“நிர்வாகத்தின்படி,” NW] பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை [“பரிசுத்த இரகசியத்தை,” NW] எங்களுக்கு அறிவித்தார்.” (எபேசியர் 1:9, 10) யெகோவாவின் மகிமையான நோக்கம் இதுதான்: ஒன்றுபட்ட பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும், தமது பேரரசாட்சிக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்பட்டிருக்கும் சிருஷ்டிகளால் அது நிரம்பியிருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 4:11) இவ்வாறு அவரது பெயர் பரிசுத்தப்படும், சாத்தான் பொய்யன் என்பது நிரூபிக்கப்படும், கடவுளுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும்” செய்யப்படும்.—மத்தேயு 6:10.
8. ‘நிர்வாகம்’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தையின் அர்த்தம் என்ன?
8 யெகோவாவின் ‘தயவுள்ள சித்தம்,’ அதாவது நோக்கம், ‘ஒரு நிர்வாகத்தின்’ மூலம் நிறைவேற்றப்படும். “வீட்டு நிர்வாகம்” என சொல்லர்த்தமாகப் பொருள்படும் வார்த்தையை பவுல் இங்கு பயன்படுத்தினார். அது மேசியானிய ராஜ்யம் போன்ற ஓர் அரசாங்கத்தைக் குறிப்பதில்லை, மாறாக, காரியங்களை நிர்வகிக்கும் விதத்தையே குறிக்கிறது.b யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு காரியங்களை நிர்வகிக்கவிருந்த அற்புத வழி, ஒரு ‘பரிசுத்த இரகசியத்தோடு’ சம்பந்தப்பட்டதாக இருந்தது; அந்த இரகசியம் பல நூற்றாண்டுகளுக்குப் படிப்படியாக வெளிப்படுத்தப்பட இருந்தது.—எபேசியர் 1:10; 3:9, NW அடிக்குறிப்புகள்.
9. யெகோவா எவ்வாறு தமது சித்தத்தின் பரிசுத்த இரகசியத்தை படிப்படியாக வெளிப்படுத்தினார்?
9 ஏதேனில் வாக்குறுதி கொடுக்கப்பட்ட வித்து சம்பந்தமான தமது நோக்கம் எவ்வாறு நிறைவேறும் என்பதை பல உடன்படிக்கைகள் மூலம் யெகோவா படிப்படியாக வெளிப்படுத்தினார். ஆபிரகாமுடன் அவர் செய்த உடன்படிக்கை, வாக்குப்பண்ணப்பட்ட வித்து ஆபிரகாமின் சந்ததியில் வருவார் என்பதையும், அவர் மூலமாக ‘பூமியிலுள்ள சகல ஜாதிகளும்’ ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதையும் வெளிப்படுத்தியது. அதோடு, அந்த வித்துவின் முக்கிய பாகமாக இருப்பவருடன் மற்றவர்களும் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்றுகூட அந்த உடன்படிக்கை சுட்டிக்காட்டியது. (ஆதியாகமம் 22:17, 18) இஸ்ரவேலரோடு யெகோவா செய்த நியாயப்பிரமாண உடன்படிக்கை, ‘ஆசாரிய ராஜ்யத்தை’ ஏற்படுத்துவது சம்பந்தமான அவரது நோக்கத்தை வெளிப்படுத்தியது. (யாத்திராகமம் 19:5, 6) தாவீதோடு செய்த உடன்படிக்கை, வித்துவானவர் என்றென்றும் ஒரு ராஜ்யத்தின் ராஜாவாக இருப்பார் என்பதைக் காட்டியது. (2 சாமுவேல் 7:12, 13; சங்கீதம் 89:3, 4) நியாயப்பிரமாண உடன்படிக்கை யூதர்களை மேசியாவிடம் வழிநடத்தியவுடன், யெகோவா தமது நோக்கத்தின் நிறைவேற்றத்தில் உட்பட்டுள்ள மற்ற அம்சங்களை வெளிப்படுத்தினார். (கலாத்தியர் 3:19, 24) வித்துவின் முக்கிய பாகமாக இருப்பவருடன் சம்பந்தப்பட்ட மனிதர்கள், முன்னுரைக்கப்பட்ட ‘ஆசாரிய ராஜ்யமாக’ செயல்பட்டு, புதிய ‘இஸ்ரவேலராக,’ அதாவது ஆவிக்குரிய இஸ்ரவேலராக ‘புதிய உடன்படிக்கைக்குள்’ கொண்டு வரப்படுவார்கள் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.—எரேமியா 31:31-34; எபிரெயர் 8:7-9.c
10, 11. (அ) முன்னறிவிக்கப்பட்ட வித்துவைப் பற்றி யெகோவா எவ்வாறு வெளிப்படுத்தினார்? (ஆ) கடவுளுடைய ஒரேபேறான குமாரன் ஏன் பூமிக்கு வந்தார்?
10 தெய்வீக நோக்கத்தினுடைய நிர்வகிப்பின்படி, முன்னறிவிக்கப்பட்ட வித்து பூமிக்கு வருவதற்கான காலம் வந்தது. யெகோவா, தமது தூதனான காபிரியேலை மரியாளிடம் அனுப்பி, இயேசு என்ற குமாரனை அவள் பெற்றிடுவாள் என அறிவித்தார். அந்தத் தூதன் இவ்வாறு சொன்னார்: “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” (லூக்கா 1:32, 33) ஆக, வாக்குப்பண்ணப்பட்ட வித்துவின் அடையாளம் தெளிவானது.—கலாத்தியர் 3:16; 4:5.
11 யெகோவாவின் ஒரேபேறான குமாரன் பூமிக்கு வந்து முழுமையாகச் சோதிக்கப்பட வேண்டியிருந்தது. சாத்தானுடைய சவாலுக்கு மிகச் சரியான பதிலடி கொடுப்பது இயேசுவின் கையில்தான் இருந்தது. அவர் தமது பிதாவுக்கு உண்மையுள்ளவராக இருப்பாரா? அதில் ஒரு பரிசுத்த இரகசியம் சம்பந்தப்பட்டிருந்தது. இயேசு வகித்த பங்கைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடி, தெய்வபக்திக்குரிய இரகசியம் மகா மேன்மையுள்ளது: அவர் மாம்சத்தில் வெளிப்பட்டவர், ஆவியில் நீதியுள்ளவரென்று தீர்க்கப்பட்டவர், தெய்வ தூதரால் தரிசிக்கப்பட்டவர், புறஜாதியாருக்குள் பிரசங்கிக்கப்பட்டவர், உலகத்தில் விசுவாசிக்கப்பட்டவர், மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டவர்.” (1 தீமோத்தேயு 3:16, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆம், மரணம்வரை உத்தமத்தை சிறிதும் விட்டுக்கொடுக்காதிருந்த இயேசு, சாத்தானுடைய சவாலுக்கு முடிவான பதிலை அளித்தார். அதேசமயத்தில், பரிசுத்த இரகசியத்தின் மற்ற விவரங்கள் தெளிவாக்கப்பட வேண்டியிருந்தன.
‘பரலோக ராஜ்யத்தின் இரகசியம்’
12, 13. (அ) ‘தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தினுடைய’ ஓர் அம்சம் என்ன? (ஆ) பரலோகத்திற்குச் செல்வதற்காக மனிதர்களின் ஒரு சிறிய தொகுதியை யெகோவா தேர்ந்தெடுப்பதில் என்ன உட்பட்டிருந்தது?
12 பரிசுத்த இரகசியம் மேசியானிய ராஜ்யத்தோடு நெருங்கிய தொடர்புடையது என்பதை இயேசு ஒருமுறை கலிலேயாவில் பிரசங்கிக்கச் சென்றபோது சுட்டிக்காட்டினார். தமது சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘பரலோக ராஜ்யத்தின் [“தேவனுடைய ராஜ்யத்தின்,” மாற்கு 4:11] இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது.’ (மத்தேயு 13:11) அந்த இரகசியத்தின் ஓர் அம்சம், 1,44,000 மனிதர்கள் அடங்கிய ‘சிறுமந்தையை’ யெகோவா தேர்ந்தெடுப்பதாகும்; அதாவது, வித்துவின் பாகமாக, இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்து பரலோகத்தில் ஆட்சிசெய்ய அவர்களைத் தேர்ந்தெடுப்பதாகும்.—லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 14:1, 4.
13 பூமியில் வாழ்வதற்காகவே மனிதர்கள் படைக்கப்பட்டதால், அவர்களில் சிலர் பரலோகத்திற்குச் செல்வதற்கு யெகோவா அவர்களை ‘புதுச்சிருஷ்டியாய்’ உண்டாக்க வேண்டியிருந்தது. (2 கொரிந்தியர் 5:17) பரலோகத்தில் வாழும் இந்த அரிய வாய்ப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். . . . உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.”—1 பேதுரு 1:3-5.
14. (அ) ‘தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தில்’ யூதரல்லாதவர்கள் எவ்வாறு உட்பட்டிருக்கிறார்கள்? (ஆ) இப்படிப்பட்ட “தேவனுடைய ஆழங்களை” நம்மால் எவ்வாறு புரிந்துகொள்ள முடிகிறது?
14 எதிர்கால ராஜ்ய அரசாங்கம் சம்பந்தப்பட்ட பரிசுத்த இரகசியத்தின் மற்றொரு அம்சம், பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய அழைக்கப்படும் சிறிய தொகுதியினரில் யூதரல்லாதவர்களும் சேர்க்கப்பட வேண்டுமென்ற கடவுளுடைய சித்தமாகும். யெகோவாவுடைய ‘நிர்வாகத்தின்,’ அதாவது அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற காரியங்களை நிர்வகிக்கும் விதத்தின் இந்த அம்சத்தை பவுல் இவ்வாறு விளக்கினார்: “அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன் பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற . . . இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது போல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.” (எபேசியர் 3:3, 6) பரிசுத்த இரகசியத்தின் இந்த அம்சத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் “பரிசுத்த அப்போஸ்தலருக்கு” அருளப்பட்டது. அதேவிதமாய் இன்று, பரிசுத்த ஆவியின் உதவியோடு மட்டும்தான் இப்படிப்பட்ட “தேவனுடைய ஆழங்களை” நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.—1 கொரிந்தியர் 2:10; 4:1; கொலோசெயர் 1:26, 27.
15, 16. கிறிஸ்துவுடன் ஆட்சி செய்கிறவர்களை யெகோவா ஏன் மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுத்தார்?
15 பரலோக சீயோன் மலையில் ‘ஆட்டுக்குட்டியானவரோடு’ நிற்பதுபோல் காணப்பட்ட ‘லட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்’ ‘பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்’ என்றும், “மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் [அதாவது, கிறிஸ்து இயேசுவுக்கும்] முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்” என்றும் சொல்லப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 14:1-4) ஏதேனில் வாக்குக்கொடுக்கப்பட்ட வித்துவின் முக்கிய பாகமாக ஆவதற்கு தமது பரலோகக் குமாரர்களில் முதற்பேறானவரை யெகோவா தேர்ந்தெடுத்தார்; ஆனால் கிறிஸ்துவின் உடன் அரசர்களை மட்டும் ஏன் மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுத்தார்? இந்தச் சிறு தொகுதியினர் ‘அவருடைய [யெகோவாவுடைய] தீர்மானத்தின்படியும்’ அவருடைய ‘தயவுள்ள சித்தத்தின்படியும்’ அழைக்கப்பட்டார்கள் என அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார்.—ரோமர் 8:17, 28-30; எபேசியர் 1:6, 12; 2 தீமோத்தேயு 1:9.
16 யெகோவாவின் நோக்கம், தமது மகத்தான பரிசுத்த பெயரைப் புனிதப்படுத்துவதும் தமது சர்வலோக பேரரசாட்சியை நியாயநிரூபணம் செய்வதுமே ஆகும். ஒப்பற்ற ஞானமுள்ள ‘நிர்வாகத்தின்’ மூலம் அவர் தமது முதற்பேறான குமாரனை பூமிக்கு அனுப்பினார்; இங்கே அந்தக் குமாரன் முழுமையாகச் சோதிக்கப்பட்டார். அதோடு, யெகோவா இன்னொன்றையும் தீர்மானித்தார்; அதாவது, மரணம்வரை தமது பேரரசாட்சியை ஆதரிக்கும் சில மனிதர்கள் தமது குமாரனின் மேசியானிய ராஜ்யத்தின் பாகமாக இருப்பார்கள் என்பதைத் தீர்மானித்தார்.—எபேசியர் 1:8-12; வெளிப்படுத்துதல் 2:10, 11.
17. கிறிஸ்துவும் அவரது உடன் அரசர்களும் ஒருகாலத்தில் மனிதர்களாக வாழ்ந்தவர்கள் என்ற உண்மை நமக்கு ஏன் சந்தோஷமளிக்கிறது?
17 தம்முடைய குமாரனை பூமிக்கு அனுப்புவதன் மூலமும், ராஜ்ய அரசாங்கத்தின் உடன் அரசர்களை மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுப்பதன் மூலமும் யெகோவா ஆதாமின் சந்ததியார்மீது மிகுந்த அன்பு காட்டினார். அப்படியானால், ஆபேல் முதற்கொண்டு, யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்திருப்போருக்கு அது எவ்வாறு நன்மை அளிக்கும்? பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைகளாகப் பிறந்திருக்கிற அபூரண மனிதர்கள் ஆன்மீக ரீதியிலும் உடல் ரீதியிலும் சுகப்படுத்தப்பட்டு பரிபூரண நிலைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே யெகோவாவின் நோக்கம். (ரோமர் 5:12) பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையுள்ள அனைவரும், தங்கள் ராஜாவான இயேசு அன்போடும் புரிந்துகொள்ளுதலோடும் தங்களை நடத்துவார் என்பதை அறிந்து எவ்வளவாய் ஆறுதல் அடைகிறார்கள்! ஆம், இயேசு தமது பூமிக்குரிய ஊழியத்தின்போது தம் சீஷர்களை நடத்தியதைப் போலவே தங்களையும் நடத்துவார் என்பதை அறிந்து அவர்கள் ஆறுதல் அடைகிறார்கள். (மத்தேயு 11:28, 29; எபிரெயர் 2:17, 18; 4:15; 7:25, 26) அதோடு, ஒருகாலத்தில் நம்மைப் போலவே பலவீனங்களோடும் வாழ்க்கையின் சவால்களோடும் போராடிய உண்மையுள்ள ஆண்களும் பெண்களுமே, பரலோகத்தில் கிறிஸ்வின் உடன் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் இருக்கப் போகிறார்கள் என்பதை அறிந்தும் நம்பிக்கை பெறுகிறார்கள்.—ரோமர் 7:21-25.
யெகோவாவின் மாறாத நோக்கம்
18, 19. எபேசியர் 1:8-12-ல் உள்ள பவுலின் வார்த்தைகள் இப்போது ஏன் அதிக தெளிவாக இருக்கின்றன, அடுத்த கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
18 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எபேசியர் 1:8-12-ல் பவுல் எழுதிய வார்த்தைகளின் அர்த்தத்தை இப்போது நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. யெகோவா ‘தமது சித்தத்தின் இரகசியத்தை’ அவர்களுக்கு வெளிப்படுத்தினார் என்றும், அவர்கள் கிறிஸ்துவின் ‘சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டார்கள்’ என்றும், தேவனுடைய ‘சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே முன்குறிக்கப்பட்டார்கள்’ என்றும் பவுல் சொன்னார். இவ்வாறு யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு காரியங்களை அற்புதமாக ‘நிர்வகித்தார்’ என்று புரிந்துகொள்கிறோம். கர்த்தருடைய இராப்போஜனத்தின்போது சில கிறிஸ்தவர்கள் மட்டுமே அந்த அடையாளச் சின்னங்களில் பங்குகொள்வது ஏன் என்பதையும் புரிந்துகொள்கிறோம்.
19 அடுத்த கட்டுரையில், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் நினைவுநாள் ஆசரிப்பு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைச் சிந்திப்போம்; அதோடு, பூமியில் என்றென்றும் வாழப்போகும் நம்பிக்கையுள்ள லட்சக்கணக்கானோர், இதில் ஏன் மிகுந்த ஆர்வம்காட்ட வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்வோம்.
[அடிக்குறிப்புகள்]
a அவரது பெயரின் நேரடியான அர்த்தம், “ஆகும்படி செய்கிறவர்.” தமது நோக்கத்தை நிறைவேற்ற எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆக யெகோவாவால் முடியும்.—யாத்திராகமம் 3:14, NW அடிக்குறிப்பு.
b அந்த ‘நிர்வாகம்’ பவுலின் காலத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தது என்பதை அவரது வார்த்தைகள் காண்பிக்கின்றன; ஆனால் மேசியானிய ராஜ்யம் 1914-ம் வருடத்தில்தான் நிறுவப்பட்டதாக வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
c கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தில் உட்பட்டுள்ள இந்த உடன்படிக்கைகளைப் பற்றிய விவரமான கலந்தாலோசிப்புக்கு காவற்கோபுரம் பிப்ரவரி 1, 1990, பக்கங்கள் 10-15-ஐக் காண்க.
மறுபார்வை
• யெகோவா ஏன் பூமியைப் படைத்து அதில் மனிதர்களைக் குடிவைத்தார்?
• யெகோவாவின் ஒரேபேறான குமாரன் பூமியில் சோதிக்கப்படுவது ஏன் அவசியமாக இருந்தது?
• கிறிஸ்துவின் உடன் அரசர்களை யெகோவா ஏன் மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுத்தார்?