இறந்தவர்களுக்குப் பயப்படுகிறீர்களா?
“இல்லையே, நான் ஏன் பயப்பட வேண்டும்?” என்றுதான் அநேகர் கேட்பார்கள். இறந்தவர்களுக்கு உயிரில்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இறந்தவர்கள் இன்னும் ஆவியாய் வாழ்வதாக லட்சோபலட்சம் பேர் ஆணித்தரமாய் நம்புகிறார்கள்.
இறந்தவர்கள் சொந்த குடும்பத்தாரை கொலை செய்ய திரும்பவும் வருவார்கள் என மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெனின் நாட்டவர் பலரும் நம்புகிறார்கள். அதனால்தான், மறைந்த உறவினர்களைச் சாந்தப்படுத்த, சொத்துபத்துகளை விற்றோ கடனை உடனை வாங்கியோ மிருக பலி செலுத்துகிறார்கள், மற்ற சடங்குகளையும் செய்கிறார்கள். செத்த பிறகு மனிதரின் ஆவி தொடர்ந்து வாழ்கிறது, உயிரோடிருப்பவர்களுடன் உரையாடுகிறது என்றெல்லாம் சிலர் கருதுவதால் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். இன்னும் சிலர், திகிலூட்டும் சம்பவங்கள் நடக்கும்போது அதற்குச் செத்தவர்களின் ஆவிதான் காரணமென நினைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஓர் அனுபவம்தான் ஆக்பூலாவுக்கு ஏற்பட்டது. இவர் பெனின்-நைஜீரியா எல்லைக்கு அருகே குடியிருக்கிறார். இவர் சொல்கிறார்: “எங்கள் பகுதியில் வசிப்பவர்கள் ஆவியுலகத் தொடர்பு பழக்கத்தின்மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இறந்தவர்களை ஆவி உலகுக்கு அனுப்புவதற்கு முன்பு சடலத்தைக் குளிப்பாட்டும் சடங்கு செய்வது அவர்களுடைய வழக்கம். அதற்குப் பயன்படுத்தப்படும் சோப்பு மீதமாகையில் அவற்றை நான் சேகரித்து வைத்துக்கொண்டேன்; அவற்றை சில இலைகளுடன் கலந்து, அந்தக் கலவையை என் வேட்டைத் துப்பாக்கியில் தடவினேன். அப்படித் தடவும்போது, எந்த மிருகத்தை வேட்டையாட விரும்புகிறேனோ அதன் பெயரை உரக்கச் சொன்னேன். இத்தகைய பழக்கங்கள் இங்கே சர்வசாதாரணம்; அதோடு, இது பலிப்பதாகவே எனக்குத் தோன்றியது. ஆனாலும் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் பீதியூட்டுவதாகத்தான் இருந்தன.
“என் மகன்களில் இரண்டு பேர் மர்மமாகச் செத்தபோது, எனக்கு எதிராக யாரோ ஆவிகளை ஏவிவிடுவதாகச் சந்தேகப்பட்டேன். அதை ஊர்ஜிதம் செய்துகொள்ள பிரபலமாயிருந்த வயதான மந்திரவாதி ஒருவரிடம் போனேன். அவரும் என் சந்தேகத்தை உறுதிப்படுத்தினார். என் மகன்கள் இப்போது ஆவி உலகத்தில் இருக்கிறார்கள் என்றும், அவர்களைக் கொன்றவன் இறந்தபின் அவனுக்கு அடியாட்கள் ஆகிவிடுவார்கள் என்றும் அந்த முதியவர் சொன்னார். என் மகன்கள் இறந்ததையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர் சொன்ன இந்த விஷயம் என்னை இன்னும் வேதனைப்படுத்தியது. இப்படித்தான் என் மூன்றாவது மகனும் சாகப் போகிறான் என்றும் அவர் சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு அவனும் இறந்துவிட்டான்.”
பிறகு, நைஜீரியாவைச் சேர்ந்த ஜான் என்பவரை ஆக்பூலா சந்தித்தார்; அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. இறந்தவர்களின் நிலையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை ஆக்பூலாவுக்கு அவர் விளக்கினார். அந்த விளக்கம் ஆக்பூலாவின் வாழ்க்கையை அடியோடு மாற்றியது. இது உங்களுடைய வாழ்க்கையையும் மாற்றலாம்.
இறந்தவர்கள் வேறெங்காவது வாழ்கிறார்களா?
இந்தக் கேள்விக்கு யார் சரியான பதில் அளிக்க முடியும்? எந்த மனிதனாலும் சரி அவர் எப்பேர்ப்பட்ட மந்திரவாதியானாலும் சரி, இதற்குச் சரியான பதில் அளிக்க முடியாது. ஆனால், “பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான” சகல ஜீவராசிகளையும் படைத்த யெகோவாவால் மட்டுமே பதில் அளிக்க முடியும். (கொலோசெயர் 1:16) பரலோகத்தில் வசிக்க தேவதூதர்களையும் பூமியில் குடியிருக்க மனிதனையும் மிருகங்களையும் அவர் படைத்தார். (சங்கீதம் 104:4, 23, 24) உயிர்வாழ இந்த எல்லா சிருஷ்டிகளும் அவரையே சார்ந்திருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 4:11) அப்படியென்றால், சாவைப் பற்றி கடவுளுடைய வார்த்தையான பைபிள் என்ன சொல்கிறதென சிந்திப்போம்.
சாவைப் பற்றி யெகோவாதான் முதன்முதலாகக் குறிப்பிட்டார். ஆதாம் ஏவாள் தமக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவர்கள் இறந்துவிடுவார்களென அவர் எச்சரித்தார். (ஆதியாகமம் 2:17) அதன் அர்த்தமென்ன? “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்று யெகோவா விளக்கினார். (ஆதியாகமம் 3:19) இறந்துபோகையில் உடல் சிதைவுறுகிறது. அது மண்ணோடு மண்ணாகிவிடுகிறது. உயிர் இல்லாமல் போய்விடுகிறது.
ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். எனவே, மரண தண்டனை பெற்றார்கள். ஆனால், இவர்களுடைய மகன் ஆபேல்தான் முதலில் இறந்துபோனான். இவனுடைய அண்ணன் காயீன் இவனைக் கொன்றுவிட்டான். (ஆதியாகமம் 4:8) இறந்துபோன தன் தம்பி தன்னைப் பழிவாங்குவான் என காயீன் பயப்படவில்லை. ஆனால், உயிரோடிருக்கிற மனிதர்கள் தனக்கு என்ன செய்வார்களோ என்றுதான் அவன் பயந்தான்.—ஆதியாகமம் 4:10–16.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, ஏரோது ராஜா தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் “யூதருக்கு ராஜா” பிறந்திருப்பதை ஜோதிடர்கள் மூலம் அறிந்துகொண்டபோது கலக்கமடைந்தான். எதிர்காலத்தில் இந்தப் பிள்ளை தனக்குப் போட்டியாக வரலாம் என அவன் பயந்தான். அதனால் அந்தப் பிள்ளையை ஒழித்துக்கட்டுவதற்காக இரண்டு வயதும் அதற்குட்பட்ட வயதுமுள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்ய திட்டம் தீட்டினான். அதனால், இயேசுவையும் மரியாளையும் அழைத்துக்கொண்டு ‘எகிப்துக்கு ஓடிப்போகும்படி’ யோசேப்பை தேவதூதன் எச்சரித்தார்.—மத்தேயு 2:1–16.
ஏரோது இறந்த பிறகு, ‘பிள்ளையின் பிராணனை வாங்கத் தேடினவர்கள் இறந்து போனதால்’ இஸ்ரவேலுக்குத் திரும்பி வரும்படி யோசேப்பிடம் தேவதூதன் சொன்னார். (மத்தேயு 2:19, 20) இயேசுவுக்கு ஏரோது இனி எந்தத் தீங்குமே செய்ய முடியாது என்பதை அந்தத் தேவதூதன் அறிந்திருந்தார். இறந்துபோன ஏரோது ராஜாவை நினைத்து யோசேப்பும் பயப்படவில்லை. ஆனால், உயிரோடிருந்த ஏரோதின் மகன் அர்கெலாயு கொடுங்கோலனாக இருந்ததால் அவன் ஏதாவது செய்துவிடுவானோ என்று யோசேப்பு பயப்பட்டார். எனவே, அர்கெலாயுவின் ஆட்சி எல்லைக்கு வெளியே இருந்த கலிலேயாவில் தன் குடும்பத்துடன் குடியேறினார்.—மத்தேயு 2:22.
இறந்தவர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள இந்த பைபிள் பதிவுகள் நமக்கு உதவுகின்றன. அப்படியென்றால், ஆக்பூலாவும் மற்றவர்களும் எதிர்ப்பட்ட பிரச்சினைக்கான காரணத்தை எப்படி விளக்கலாம்?
‘பிசாசுகள்,’ அல்லது கெட்ட தூதர்கள்
இயேசு வளர்ந்த பிறகு பிசாசுகளை எதிர்ப்பட்டார். இயேசு யாரென அவை அறிந்திருந்ததால் “தேவனுடைய குமாரனே” என்று அவரை அழைத்தன. அதேபோல் இயேசுவும் அவற்றைப் பற்றி அறிந்திருந்தார். அவை இறந்த ஆட்களின் ஆவிகள் அல்ல, ஆனால் ‘பிசாசுகள்,’ அதாவது கெட்ட தூதர்கள் என்று இயேசு அவற்றை அடையாளம் காட்டினார்.—மத்தேயு 8:29–31; 10:8; மாற்கு 5:8.
கடவுளுக்கு உண்மையாய்ச் சேவை செய்கிற தூதர்களையும் அவருக்கு எதிராகக் கலகம் செய்த தூதர்களையும் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. கீழ்ப்படியாமல் போன ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்ட பிறகு, அதற்குள் யாரும் நுழையாதபடி காவல் காக்க தோட்டத்திற்குக் கிழக்கே கேருபீன்களை, அதாவது தேவதூதர்களை, யெகோவா நிறுத்தினார் என ஆதியாகமப் புத்தகம் குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 3:24) இந்தச் சமயத்தில்தான் தேவதூதர்கள் முதன்முறையாக மனித உருவில் தோன்றியிருக்கலாம்.
கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, அநேக தேவதூதர்கள் மனித உருவெடுத்து பூமிக்கு வந்தார்கள். யெகோவா ஏதோ வேலை கொடுத்ததால் இவர்கள் பூமிக்கு வரவில்லை. இவர்களாகவே, ‘தங்களுக்குரிய வாசஸ்தலமான’ பரலோகத்தை ‘விட்டுவிட்டு’ வந்தார்கள். (யூதா 6) இவர்கள் முழுக்க முழுக்க சுயநலவாதிகளாகவே இருந்தார்கள். பெண்களைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள். இந்தப் பிள்ளைகள் நெஃபிலிம்களாக, அதாவது இராட்சதர்களாக இருந்தார்கள். இந்த நெஃபிலிம்களாலும் இவர்களுடைய கலகக்கார அப்பாக்களாலும் பூமியில் வன்முறையும் அக்கிரமமும் தலைவிரித்தாடின. (ஆதியாகமம் 6:1–5) நோவா வாழ்ந்த காலத்தில் பூமி முழுவதும் பயங்கரமான வெள்ளப்பெருக்கைக் கொண்டு வருவதன்மூலம் யெகோவா அந்தப் பொல்லாத உலகத்துக்கு ஒரு முடிவுகட்டினார். துன்மார்க்க செயல்களில் ஈடுபட்டிருந்த ஆண்களையும் பெண்களையும் மட்டுமல்ல, இராட்சதர்களையும்கூட அந்தப் பெருவெள்ளம் அழித்துப் போட்டது. சரி, பூமிக்கு வந்த தேவதூதர்களுக்கு என்ன சம்பவித்தது?
பெருவெள்ளம் வந்ததால் வேறு வழியில்லாமல் அவர்கள் எல்லாரும் மீண்டும் பரலோகத்துக்குச் சென்றார்கள். ஆனால், மீண்டும் “ஆதிமேன்மையை” பெற யெகோவா அவர்களை அனுமதிக்கவில்லை. (யூதா 6) ‘பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே [“டார்டரஸிலே,” NW] தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார்.’—2 பேதுரு 2:4.
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நரகம்” என்ற வார்த்தை மூல கிரேக்க பாஷையில் டார்டரஸ் என்று உள்ளது. இது ஒரு நிஜமான இடத்தை அல்ல, ஓர் இழிவான நிலையை, செயல்பட முடியாதபடி சிறைபட்டதைப் போன்ற நிலையைக் குறிக்கிறது. அந்தப் பிசாசுகள் இனிமேலும் மனித உருவெடுக்க முடியாது. ஆனால், மனிதரின் மனங்களையும் வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் அசாதாரண சக்தி இன்னும் அவற்றுக்கு இருக்கிறது. அவை மனிதருக்குள்ளும் மிருகங்களுக்குள்ளும் புகுந்து ஆட்டிப்படைக்க முடியும். (மத்தேயு 12:43–45; லூக்கா 8:27–33) இறந்தவரின் ஆவிபோல் பாசாங்கு செய்து இவை மனிதரை ஏமாற்றுகின்றன. யெகோவாவுக்குப் பிரியமான விதத்தில் மக்கள் அவரை வழிபடாதிருப்பதற்கும், இறந்தவர்களின் உண்மை நிலையைக் குறித்து மக்களின் மனதில் குழப்பத்தை உண்டாக்குவதற்கும் அவை இவ்வாறு செய்கின்றன.
பயத்தைப் போக்குவது எப்படி?
மரணத்தையும் ஆவிகளையும் பற்றி பைபிள் தரும் நியாயமான விளக்கத்தை ஆக்பூலா புரிந்துகொண்டார். இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதையும் அவர் உணர்ந்தார். பைபிளையும் பைபிள் அடிப்படையில் எழுதப்பட்ட பிரசுரங்களையும் ஜானுடன் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். தன்னுடைய மகன்கள் கல்லறையில் தூங்குகிறார்கள் என்பதையும் அவர்களைக் கொன்றவரின் அடியாட்களாவதற்கு அவர்கள் ஆவி உலகில் காத்துக்கொண்டிருக்கவில்லை என்பதையும் அறிந்தபோது அவருடைய மனம் ஆறுதல் அடைந்தது.—யோவான் 11:11–13.
ஆவியுலகத்தோடு தொடர்புள்ள எல்லா பழக்கவழக்கங்களிலிருந்தும் முற்றிலும் விலக வேண்டும் என்பதையும் ஆக்பூலா புரிந்துகொண்டார். தன்னிடமிருந்த எல்லா மாயமந்திர பொருள்களையும் நெருப்பில் சுட்டெரித்தார். (அப்போஸ்தலர் 19:19) இப்படிச் செய்தால் ஆவிகள் தொல்லைப்படுத்துமென அந்தப் பகுதியிலிருந்த சிலர் அவரை எச்சரித்தார்கள். அவரோ துளியும் பயப்படவில்லை. ‘கடவுள் தருகிற முழு கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். ஏனென்றால், . . . பொல்லாத தூதர் கூட்டத்தோடு நாம் மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது’ என எபேசியர் 6:11, 12-ல் (NW) கொடுக்கப்பட்டுள்ள புத்திமதிக்கு அவர் கீழ்ப்படிந்தார். சத்தியம், நீதி, சமாதானத்தின் சுவிசேஷம், விசுவாசம், கடவுளுடைய வார்த்தையெனும் பட்டயம் ஆகியவற்றால் ஆனதே இந்த ஆன்மீகக் கவசம். இந்தக் கவசத்தை கடவுள் அளிக்கிறார், இது பலம் வாய்ந்தது!
ஆவியுலகத் தொடர்புடைய பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதை ஆக்பூலா நிறுத்தியபோது அவருடைய நண்பர்களிலும் உறவினர்களிலும் சிலர் அவரை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துக்கு அவர் சென்றபோது, பைபிள் போதனைகளை நம்புகிற புதிய நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள்.
இந்தப் பொல்லாத உலகை யெகோவா சீக்கிரத்தில் சுத்தம் செய்யப்போவதையும், செயல்பட முடியாத நிலைக்கு பிசாசுகளை அவர் தள்ளப்போவதையும், இறுதியில் அவற்றை அழிக்கப்போவதையும் ஆக்பூலா கற்றுக்கொண்டார். (வெளிப்படுத்துதல் 20:1, 2, 10) ‘கல்லறைகளில் உள்ள அனைவரையும்’ யெகோவா உயிரோடு எழுப்புவார். (யோவான் 5:28, 29, NW) அப்போது, ஆபேலும், ஏரோது ராஜாவால் கொல்லப்பட்ட பழிபாவம் அறியாத அந்தப் பிஞ்சுகளும், இன்னும் லட்சக்கணக்கானோரும் உயிரடைவார்கள். ஆக்பூலாகூட, தன்னுடைய மூன்று மகன்களும் உயிர்த்தெழுந்து வருவார்கள் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார். நீங்கள் மரணத்தில் பறிகொடுத்த உங்கள் பாசத்துக்குரியவர்களும் அந்தச் சமயத்தில் உயிரோடு வரலாம். இப்படி வருகிற எல்லாரும், தாங்கள் இறந்ததுமுதல் உயிர்த்தெழுப்பப்பட்டதுவரை தங்களுக்கு எந்த நினைவும் இருக்கவில்லை என்று சொல்வார்கள், தங்களுக்காகச் செய்யப்பட்ட சடங்குகளைப் பற்றி அறியாதிருந்ததாகவும் சொல்வார்கள்.
ஆகவே, இறந்தவர்களை நினைத்து நீங்கள் பயப்படவே வேண்டாம். மாறாக, இறந்துபோன உங்கள் அன்பானவர்களுடன் சேர்ந்து மீண்டும் சந்தோஷமாய் வாழப்போவதை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். இதற்கிடையில், படைப்பாளர்மீது உங்கள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நீங்கள் ஏன் பைபிளைப் படிக்கக் கூடாது? பைபிள் கற்பிப்பவற்றை நம்புகிறவர்களுடன் கூட்டுறவுகொள்ளுங்கள். ஆவியுலகத் தொடர்புடைய எந்தப் பழக்கங்களிலாவது நீங்கள் ஈடுபட்டுவந்தால் உடனடியாக அவற்றிற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். “கடவுள் தருகிற முழு கவசத்தை” அணிந்துகொள்வதன் மூலம் பிசாசுகளிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:11, NW) யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். உங்கள் வீட்டிற்கு வந்து, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?a என்ற புத்தகத்தைப் பயன்படுத்தி, இலவசமாய் பைபிளைக் கற்றுக்கொடுக்க அவர்கள் தயாராய் இருக்கிறார்கள்.
இறந்தவர்களை நினைத்து ஆக்பூலா இப்போது பயப்படுவதில்லை, பிசாசுகளை எதிர்த்து நிற்கவும் இவர் கற்றுக்கொண்டிருக்கிறார். “என் மூன்று மகன்களும் இறப்பதற்கு யார் காரணமென எனக்குத் தெரியாது. ஆனால், யெகோவாவைச் சேவிக்க ஆரம்பித்தப் பிறகு எனக்கு ஏழு பிள்ளைகள் பிறந்திருக்கிறார்கள். எந்தப் பிசாசும் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ததில்லை” என்று அவர் சொல்கிறார். (w09 1/1)
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.