இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | ஆபேல்
‘அவர் இறந்துவிட்டாலும் இன்னமும் பேசுகிறார்’
மலைச்சரிவில் ஹாயாக மேயும் தன் மந்தை மீது ஆபேல் கண்களை மேயவிடுகிறார். அப்போது தூரத்தில் ஒரு வெளிச்சம் அவர் கண்ணில் படுகிறது. அது ஏதேன் தோட்டத்தின் நுழைவாயில். அங்கே சுடர்வீசும் ஒரு வாள் சுழன்றுகொண்டிருக்கிறது. அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அது அப்படித்தான் சுழல்கிறது. அதனால் அந்தத் தோட்டத்திற்குள் ஒரு ஈ-காக்காய்கூட நுழைய முடியாது, அந்தளவு பலமான பாதுகாப்பு! முன்பு அவருடைய அப்பா-அம்மா அங்கே வாழ்ந்தார்கள். இப்போது அதற்குள் நுழைய எல்லாருக்கும் தடா! வெயில் மங்கும் அந்தச் சமயத்தில் சுகமாய் வீசும் காற்று ஆபேலின் தலைமுடியை வருட, அவர் கண்கள் வானை நோக்கி மையமிடுவதை கற்பனை செய்து பாருங்கள். படைப்பாளர் பற்றிய நினைவுகள் அவர் நெஞ்சில் நிழலாடுகிறது. மனிதருக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளி என்றாவது குறையுமா? குறைய வேண்டும் என்பதுதான் ஆபேலின் ஒரே ஆசை!
இன்று ஆபேல் உங்களிடம் பேசுவது கேட்கிறதா? ‘என்ன விளையாடுகிறீர்களா, ஆதாமின் இரண்டாவது மகனான ஆபேல் செத்து கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் எலும்புகூட இப்போது கிடைக்காது, மண்ணோடு மண்ணாகியிருப்பார்’ என்று நீங்கள் யோசிக்கலாம். அதுமட்டுமா, “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்று பைபிளே சொல்கிறது. (பிரசங்கி 9:5, 10) அதோடு, ஆபேல் பேசியதாக ஒரு வார்த்தைக்கூட பைபிளில் பதிவு இல்லை. இப்படியிருக்க அவர் இப்போது நம்மிடம் எப்படிப் பேசுவார்?
கடவுளுடைய சக்தியின் உதவியால் அப்போஸ்தலன் பவுல், ஆபேலைக் குறித்து இப்படி எழுதினார்: “அவர் இறந்துவிட்டபோதிலும் விசுவாசத்தினால் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார்.” (எபிரெயர் 11:4) ஆம், அவர் விசுவாசத்தினால் இன்னமும் பேசுகிறார். இந்த உன்னதப் பண்பை முதன்முதலில் காட்டிய மனிதன் இவர்தான். அந்தளவு பலமான விசுவாசத்தைக் காட்டியதால் அவர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். விசுவாசத்திற்கு ஓர் தலைசிறந்த முன்னோடியான அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு, பின்பற்ற முயற்சி செய்தால் அவரே நம்மிடம் நேரடியாக பேசுவது போல் இருக்கும்.
ஆனால், அவரைக் குறித்து பைபிளில் அவ்வளவாக பதிவு இல்லாதபோது நம்மால் எப்படி அவரைப் பற்றியும் அவர் காட்டிய விசுவாசத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்? அதை இப்போது பார்க்கலாம்.
மனிதகுலம் துளிர்விட்ட காலத்தில் ஆபேல்
ஆபேல் வாழ்ந்த சமயத்தில் விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் மனிதர்கள் பூமியில் இருந்தார்கள். மனிதர்கள் படைக்கப்பட்டு கொஞ்ச காலம்தான் ஆகியிருந்தது. ஆபேல் “உலகம் உண்டான” சமயத்தில் வாழ்ந்ததாக இயேசு பூமியில் இருந்தபோது சொன்னார். (லூக்கா 11:50, 51) பாவத்திலிருந்து மீட்பு பெற தகுதியானவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஆபேலைப் பற்றி இயேசு குறிப்பிட்டார். இந்தப் பூமியில் பிறந்த நான்காவது மனிதன் ஆபேல்; கடவுள் மீட்பளிக்கப்போகும் நபர்களில் இவர்தான் முதல் நபர் என தெரிகிறது.a அப்படியென்றால், ஒரு நல்ல சூழலில் ஆபேல் வளரவில்லை என்பது தெளிவாகிறது.
மனிதகுலம் தோன்றிய கொஞ்ச காலத்திலேயே அது அழிவின் பாதையில் நடைபோட ஆரம்பித்ததுதான் வேதனையிலும் வேதனை. ஆபேலின் பெற்றோர் சௌந்தரியத்தோடும் இளமை துடிப்போடும் இருந்தார்கள். ஆனால், உலகமகா பாவம் செய்தார்கள், அதுவும் தெரிந்தே செய்தார்கள். குறையற்றவர்களாக, காலங்காலமாக வாழும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் அருமையான ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார்கள். சுயநலத்தின் ஒட்டுமொத்த உருவமாக இருந்த அவர்கள், தங்கள் பிள்ளைகளைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. இதனால் பரிபூரணத்தையும் முடிவில்லா வாழ்வையும் இழந்தார்கள்.—ஆதியாகமம் 2:15–3:24.
ஏதேன் தோட்டத்திற்கு வெளியே வாழ்க்கை எட்டிக்காயாய் கசந்தது. என்றாலும், அவர்களுடைய மூத்த மகன் பிறந்தபோது அவர்களுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. அவனுக்கு காயீன் என்று பெயர் வைத்தார்கள் (அதன் அர்த்தம், “பெற்றெடுக்கப்பட்டது”). அப்போது ஏவாள், “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்றாள். ஏதேன் தோட்டத்தில் யெகோவா கொடுத்த வாக்குறுதியை மனதில் வைத்து ஏவாள் இப்படிப் பெயர் வைத்திருக்கலாம். ஏனென்றால், ஒரு பெண் ஒரு வாரிசை பெற்றெடுப்பாள் என்றும் அந்த வாரிசு ஆதாமையும் ஏவாளையும் வஞ்சித்த கொடியவனை அழிக்கும் என்றும் கடவுள் வாக்குக் கொடுத்திருந்தார். (ஆதியாகமம் 3:15; 4:1) கடவுள் சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி, தன்னை அந்தப் பெண்ணாகவும் காயீனை அந்த ‘வாரிசாகவும்’ ஏவாள் நினைத்தாளா?
அப்படி நினைத்திருந்தால், அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். ஆதாமும் ஏவாளும் அப்படி நம்பி காயீனின் மனதில் அந்த ஆசையை விதைத்திருந்தால் காயீனுக்குள் பெருமை என்ற விஷச் செடி வேர்விட அவர்களே காரணமாய் இருந்திருப்பார்கள். கொஞ்ச காலத்தில் ஏவாள் இரண்டாவது பிள்ளையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு எந்தப் புகழாரமும் சூட்டவில்லை. ஆபேல் என்று பெயர் வைத்தார்கள். அது “பெருமூச்சு” அல்லது “மாயை” என்று அர்த்தப்படுத்தலாம். (ஆதியாகமம் 4:2) இப்படிப் பெயர் வைத்ததிலிருந்து, காயீன் அளவுக்கு ஆபேல்மீது அவர்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்று தோன்றுகிறதா? ஒருவேளை அப்படி இருந்திருக்கலாம்.
இன்று இருக்கும் எல்லா பெற்றோரும் முதல் பெற்றோரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். உங்கள் சொல்லாலும் செயலாலும் பிள்ளைகளின் மனதில் பெருமை, அகம்பாவம், வெறி, சுயநலம் போன்ற குணங்களை வளர்க்கிறீர்களா? அல்லது யெகோவாவை நேசிக்கவும் அவருடைய நண்பராகவும் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறீர்களா? முதல் பெற்றோர் இந்த விஷயத்தில் தவறிவிட்டார்கள். என்றாலும், முதல் கோணல் முற்றிலும் கோணலாக ஆகவில்லை.
ஆபேலுக்குள் விசுவாசம் வேர்விடுகிறது
மகன்கள் இருவரும் பெரியவர்களாக வளர்ந்தபோது குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள உதவும் சில வேலைகளை ஆதாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பார். காயீன் விவசாயி ஆனான், ஆபேல் மேய்ப்பன் ஆனான்.
ஆனால் ஆபேல் அதைவிட முக்கியமான ஒன்றைச் செய்தார். நாட்கள் நகர நகர விசுவாசம் என்ற அருமையான குணத்தை வளர்த்தார். அதைப் பற்றித்தான் பவுலும் பின்னர் எழுதினார். கொஞ்சம் யோசித்து பாருங்கள்: ஆபேலுக்கு நல்ல முன்மாதிரியாக யாரும் இல்லை. அப்படியிருந்தும் அவரால் எப்படி யெகோவாமீது விசுவாசத்தை வளர்க்க முடிந்தது? அதற்கு மூன்று காரணங்களை இருக்கின்றன:
யெகோவாவின் படைப்பு.
யெகோவா நிலத்தை சபித்தது உண்மைதான். அதனால் முள்ளும் புதருமே வயல்களின் வரப்பிரசாதமாக இருந்தது. இருந்தாலும், ஆபேலின் குடும்பத்தார் வயிறார சாப்பிட்டு திருப்தியடையும் அளவுக்கு பூமியில் விளைச்சல் இருந்தது. அதேசமயம் மிருகங்களை, பறவைகளை, மீன்களை கடவுள் சபிக்கவில்லை. மலைகளை, ஏரிகளை, ஆறுகளை, கடல்களை சபிக்கவில்லை. வானத்தை, மேகத்தை, சூரியனை, சந்திரனை, நட்சத்திரங்களை சபிக்கவில்லை. ஆபேல் எந்தத் திசையில் திரும்பினாலும் யெகோவாவின் படைப்பில் ஜொலித்த அவருடைய அன்பு, ஞானம், நற்குணமே பளிச்சிட்டது. (ரோமர் 1:20) அதையெல்லாம் ஆழமாக சிந்தித்தது அவருடைய விசுவாசத்திற்கு உரம்போட்டது.
யெகோவாவைப் பற்றி யோசித்துப் பார்க்க ஆபேல் நிச்சயம் நேரம் ஒதுக்கியிருப்பார். ஆபேல் ஆடு மேய்ப்பதை மனத்திரையில் ஓடவிடுங்கள். பொதுவாக மேய்ப்பர்கள் ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கும். ஆபேலும் தன் அப்பிராணி ஆடுகளுக்காக பச்சை புள்வெளி தேடி... சுவையான நீரூற்று தேடி... நிழலான இடம் தேடி... மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகளையெல்லாம் கடந்து செல்கிறார். எந்த ஜீவராசியைவிடவும் ஆடுகளுக்குத்தான் மனிதர்களின் உதவி அதிகம் தேவை. வழிநடத்துதலுக்கும் பாதுகாப்புக்கும் யாரையாவது சார்ந்து இருக்கும் விதத்தில் அவை படைக்கப்பட்டது போல் தெரிகிறது. ஆபேல் அந்த ஆடுகளைப் பார்த்தபோது, ‘எனக்கும் நல்வழி காட்ட, பாதுகாக்க, அக்கறை காட்ட ஞானமும் வல்லமையுள்ள கடவுளின் வழிநடத்துதல் வேண்டும்’ என்று யோசித்திருப்பாரோ? அதில் சந்தேகமே இல்லை. நிச்சயம் அதற்காக ஜெபம் செய்திருப்பார். அவருடைய விசுவாசமும் பலப்பட்டிருக்கும்.
படைப்பைப் பார்த்தபோது அன்பான படைப்பாளர்மீது ஆபேல் அசைக்க முடியாத விசுவாசத்தை வளர்த்தார்
யெகோவாவின் வாக்குறுதிகள்.
ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்ட விஷயத்தை ஆதாமும் ஏவாளும் தங்கள் மகன்களுக்குச் சொல்லியிருப்பார்கள். அதையெல்லாம் ஆபேல் யோசித்து பார்த்திருப்பார்.
பூமி சபிக்கப்பட்டது என்று யெகோவா சொன்னார். முள்ளும் புதரும் விளைவதைப் பார்த்தபோது ஆபேலுக்கு யெகோவா சொன்னது நினைவுக்கு வந்திருக்கும். பிரசவ சமயத்தில் ஏவாளுக்கு பயங்கர வலி ஏற்படும் என்று யொகோவா சொன்னார். ஏவாளுக்குப் பிள்ளைகள் பிறந்தபோது யெகோவாவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்று ஆபேல் உணர்ந்திருப்பார். ஏவாள் தன் கணவனின் அன்புக்கும் கவனிப்புக்கும் ஏங்குவாள், ஆதாம் அவளை அடக்கி ஆளுவான் என்பதை யெகோவா முன்னமே தெரிவித்திருந்தார். அதையும் ஆபேல் கண்ணாரக் கண்டார். யெகோவா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இம்மி பிசகாமல் நிறைவேறுவதைப் பார்த்தார். எனவே, யெகோவா கொடுத்த வாக்குறுதியில், ஆம் ஒரு ‘வாரிசு’ வரும், ஏதேனில் ஆரம்பமான பிரச்சினையைச் சரிசெய்யும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார்.—ஆதியாகமம் 3:15-19.
யெகோவாவின் ஊழியர்கள்.
ஆபேலுக்கு நல்ல ஒரு முன்மாதிரி என்று எந்தவொரு மனிதனும் அப்போது இல்லை. ஆனால் அப்போது பூமியில் மனிதர்கள் மட்டுமல்ல இரண்டு தேவதூதர்களும் இருந்தார்கள். ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து யெகோவா துரத்தினபோது, அந்தத் தோட்டத்திற்குள் யாரும் நுழையாமல் இருப்பதற்காக இரண்டு கேருபீன்களை, அதாவது உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த தேவதூதர்களை யெகோவா நிறுத்தினார். அதோடு, அங்கே சுடர்வீசும் வாளையும் சுழலச் செய்தார்.—ஆதியாகமம் 3:24.
சிறுவயதில் ஆபேல் அந்த கேருபீன்களைப் பார்த்திருப்பார். மனித உருவில் இருந்த இவர்கள் வாட்டசாட்டமாக, பலசாலிகளாக இருப்பதைப் பார்த்திருப்பார். அவர்களையும் நிற்காமல் சுழலும் “சுடரொளி பட்டயத்தையும்” பார்த்தபோது வியந்திருப்பார். அத்தனை ஆண்டுகளாகக் காவல் காத்தாலும் அவர்களுடைய முகத்தில் ஒரு சின்ன சலிப்போ, வெறுப்போ தென்பட்டதை ஆபேல் பார்த்திருப்பாரா? இல்லவே இல்லை. புத்திக்கூர்மையுள்ள, பலசாலிகளான அந்தத் தேவதூதர்கள் எத்தனை நாளானாலும் எத்தனை வருடமானாலும் அந்த இடத்தைவிட்டு அசையாமல் இரவு பகலாக காவல் காத்தார்கள். அவர்களைப் பார்த்தபோது, யெகோவாவுக்கு உண்மையாக, உத்தமமாக சேவை செய்யும் ஊழியர்கள் இருப்பதை ஆபேல் உணர்ந்துகொண்டார். தன் குடும்பத்தார் காட்டாத உத்தமத்தையும் கீழ்ப்படிதலையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். நிச்சயம் அவர்களுடைய முன்னுதாரணம் ஆபேலின் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கும்.
யெகோவாவின் படைப்பு, வாக்குறுதியின் நிறைவேற்றம், அவருக்கு உண்மையாய் இருந்த ஊழியர்கள் பற்றியெல்லாம் ஆபேல் ஆழமாகச் சிந்தித்ததால், அவருடைய விசுவாசம் என்ற ஆணிவேர் ஆழமாக வேரூன்றியது. அவர் வைத்த நல்ல முன்மாதிரி இன்றும் நம்மிடம் பேசுகிறது, அல்லவா? இளைஞர்களே, ஆபேல் உங்களுக்கு நல்ல முன்மாதிரி! உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் யெகோவாமீது விசுவாசம் வைத்தாலும் சரி வைக்காவிட்டாலும் சரி, நீங்கள் அவர்மீது திடமான விசுவாசத்தை வளர்க்க முடியும். நம்மைச் சுற்றியும் வியக்க வைக்கும் படைப்பு இருக்கிறது, முழு பைபிள் இருக்கிறது, விசுவாசத்திற்குப் பேர்போன மனித முன்மாதிரிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவையெல்லாம் நம் விசுவாசத்தை இன்னும் உறுதியாக்குகிறது.
ஆபேலின் பலி ஏன் சிறந்தது?
யெகோவாமீது ஆபேலுக்கு இருந்த விசுவாசம் வளர வளர அதை வெளிக்காட்ட அவர் விரும்பினார். ஆனால், இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த கடவுளுக்கு சாதாரண மனிதனால் என்ன கொடுக்க முடியும்? கடவுளும் மனிதர்கள் கையிலிருந்து பொருளையோ உதவியையோ எதிர்பார்ப்பதில்லை. இருந்தாலும், ஆபேலுக்கு போகப் போக ஒரு உண்மை புரிந்தது: தன்னிடம் இருக்கும் சிறந்ததை முழு மனதோடு கொடுத்தால் பரலோக அப்பாவான யெகோவாவின் மனம் சந்தோஷத்தில் குளிர்ந்துவிடும்.
அதனால் தன் மந்தையிலிருந்த தலையீற்று ஆடுகளில் நல்ல கொழுமையான, ஆரோக்கியமான ஆடுகளைத் தேர்ந்தெடுத்தார். அவற்றின் இறைச்சியில் சிறந்ததாக அவர் கருதிய பாகங்களை யெகோவாவுக்கு பலியாகக் கொடுத்தார். அந்தச் சமயத்தில் காயீனும் கடவுளின் ஆசீர்வாதத்தையும் தயவையும் பெற விரும்பி தன் விளைச்சலில் சிலவற்றைப் பலியாகக் கொடுக்க நினைத்தான். ஆனால், அவன் முழு மனதோடு கொடுக்கவில்லை. இந்த உண்மை அவர்கள் இருவரும் பலி செலுத்தியபோது அப்பட்டமாகத் தெரிந்தது.
இருவருமே பலிபீடத்தைக் கட்டி, நெருப்பில் தங்கள் பலிகளைச் சுட்டெரித்திருப்பார்கள். ஒருவேளை அந்த கேருபீன்களின் கண்ணில்படும் தூரத்தில் பலிகளைச் செலுத்தியிருப்பார்கள். ஏனென்றால், அந்தச் சமயத்தில் யெகோவாவின் பிரதிநிதிகளாக அவர்கள் மட்டும்தான் பூமியில் இருந்தார்கள். யெகோவா அந்தப் பலிகளை ஏற்றுக்கொண்டாரா? “ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.” (ஆதியாகமம் 4:4) அந்தப் பலியை ஏற்றுக்கொண்டதை யெகோவா எப்படிக் காட்டினார் என்று பைபிள் சொல்வதில்லை. சரி, ஆபேலின் பலியை மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டார்?
ஆபேல் கொடுத்த பலி சிறந்ததாக இருந்ததா? ஆபேல் உயிருள்ள ஒன்றைக் கொடுத்தார், அதன் மதிப்புமிக்க இரத்தத்தைப் பலியாகச் செலுத்தினார். இதுபோல் பலி செலுத்துவது சிறந்தது என ஆபேல் நினைத்திருப்பாரா? பல ஆயிரம் வருடங்கள் கழித்து யெகோவாவும் தம்முடைய சொந்த மகனின் மாசற்ற உயிரைப் பலியாகச் செலுத்தினார். அவரை “கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!” என்று பைபிள் அழைக்கிறது. அப்போது அவருடைய மகன் தம் விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிந்த வேண்டியிருந்தது. (யோவான் 1:29; யாத்திராகமம் 12:5-7) ஆனால், இதையெல்லாம் யோசித்து ஆபேல் பலி செலுத்தினாரா என்று நமக்குத் தெரியாது.
ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும்: ஆபேல் தன்னிடம் இருந்த சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுத்தார். அதனால் யெகோவா, பலியை மட்டுமல்ல அதைக் கொடுத்தவரையும் அன்போடு அங்கீகரித்தார். யெகோவாமீது ஆழமான அன்பும் உண்மையான விசுவாசமும் இருந்ததால் ஆபேல் அப்படிச் செய்தார்.
ஆனால் காயீன் அப்படியில்லை. “காயீனையும் அவன் காணிக்கையையும் [யெகோவா] அங்கிகரிக்கவில்லை.” (ஆதியாகமம் 4:5) அதற்காக, காயீன் செலுத்திய பலியில் ஏதோ குறையிருந்தது என்று சொல்ல முடியாது; ஏனென்றால் கடவுள் பிற்பாடு சட்டங்களைக் கொடுத்தபோது வயலில் விளைவதையும் காணிக்கையாகச் செலுத்தலாம் என்று சொல்லியிருந்தார். (லேவியராகமம் 6:14, 15) ஆனால், “அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன” என்று காயீனைப் பற்றி பைபிள் சொல்கிறது. (1 யோவான் 3:12) இன்று வாழும் பெரும்பாலான மக்களைப் போலவே காயீன் வெளிவேஷத்துக்காக தன்னை பக்திமானாய் காட்டிக்கொள்ள நினைத்தான். யெகோவாமீது அவனுக்கு உண்மையான அன்போ விசுவாசமோ இல்லை. அதுதான் அவனுடைய செயலில் அப்பட்டமாகத் தெரிந்தது.
யெகோவா தன்னை அங்கீகரிக்கவில்லை என்பதை காயீன் புரிந்துகொண்டபோது தன் தம்பியைப் போல நல்லவனாக மாற நினைத்தானா? இல்லை. ஆனால், தம்பிமீது வெறுப்பும் கோபமும் அவன் மனதில் படிந்தது, அது வெறியாக மாறியது. காயீனின் மனம் அழுக்காக இருப்பதை யெகோவா பார்த்து, அதைச் சரிசெய்யும்படி பொறுமையாக எடுத்துச் சொன்னார். அவன் இப்படியே போனால் பெரிய பாவம் செய்துவிடுவான் என்றும் எச்சரித்தார். மனம் மாறினால் அவனுக்கு “மேன்மை” உண்டாகும் என்றும் சொன்னார்.—ஆதியாகமம் 4:6, 7.
ஆனால், கடவுள் கொடுத்த எச்சரிப்பை காயீன் அசட்டை செய்தான். ஒருநாள் நயவஞ்சகமாக ஆபேலை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றான். நம்பி வந்த தம்பியை அடித்து கொன்றான். (ஆதியாகமம் 4:8) ஆபேல் விசுவாசத்திற்காக உயிர்நீத்தான். விசுவாசத்திற்காகத் துன்புறுத்தப்பட்டவர்களில் இவரே முதல் நபர் என்று சொல்லலாம். இவர் ஒரு உயிர்த்தியாகியும்கூட. ஆபேல் இறந்தாலும் இன்னும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
ஒருவிதத்தில், ஆபேலின் இரத்தம் நீதி கேட்டு யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டது. அதற்காக கடவுளும் காயீனைத் தண்டித்தார். (ஆதியாகமம் 4:9-12) ஆபேலின் விசுவாசம் இன்றும் நம்மிடம் பேசுகிறது. அவர் சுமார் நூறு வருடங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்திருப்பார். அந்தக் காலத்தில் நூறு வருடம் என்பது சொற்ப காலம்தான். இருந்தாலும் பேர் சொல்லும் அளவுக்கு வாழ்ந்தார். பரலோகத் தகப்பனான யெகோவாவின் அன்பையும் அங்கீகாரத்தையும் சம்பாதித்துவிட்ட நம்பிக்கையோடு அவர் இறந்தார். (எபிரெயர் 11:4) அவர் யெகோவாவின் ஞாபகத்தில் இருக்கிறார், பூஞ்சோலை பூமியில் மீண்டும் உயிர் பெற்று வருவார் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். (யோவான் 5:28, 29) அவரைப் பார்க்க நீங்கள் அங்கே இருப்பீர்களா? ஆபேல் சொல்வதைக் கேட்டு அவருடைய விசுவாசத்தைப் பின்பற்ற நீங்கள் உறுதியாக இருந்தால் நிச்சயம் அங்கே இருப்பீர்கள்! ▪ (w13-E 01/01)
a “உலகம் உண்டானதிலிருந்து” என்ற சொற்றொடர் ஆதாம் ஏவாளுக்குப் பிள்ளைகள் பிறந்த சமயத்தைக் குறிக்கிறது (1 பேதுரு 1:20-ன் அடிக்குறிப்பைப் பாருங்கள்). அப்படியென்றால் அந்தச் சொற்றொடர் முதல் மனிதர்களின் பிள்ளைகள் வாழ்ந்த காலத்தைக் குறிக்கிறது. ஆனால், காயீன் முதல் மகனாக இருக்கும்போது, இயேசு ஏன் ஆபேலைக் குறிப்பிட்டார்? காயீன் வேண்டுமென்றே யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தான். அவனுடைய பெற்றோரைப் போலவே காயீனுக்கு உயிர்த்தெழுதலும் இல்லை, மீட்பும் இல்லை என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே.