இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | ஏனோக்கு
‘கடவுளுக்கு பிரியமாக நடந்துகொண்டார்’
இன்று 70 வயதுவரை வாழ்வதே பெரிய விஷயம். ஆனால், ஏனோக்கு கிட்டத்தட்ட 365 வருஷங்கள் வாழ்ந்தார். இது நம் வாழ்நாளைவிட பல மடங்கு அதிகம். இவ்வளவு காலம் வாழ்வதைப் பற்றி நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. ஏனோக்கு பார்ப்பதற்கு வயதானவர் போல் இருந்திருக்க மாட்டார். ஏனென்றால், 5,000 வருஷங்களுக்கு முன்பெல்லாம் மக்கள் ரொம்ப காலம் வாழ்ந்தார்கள். ஏனோக்கு பிறந்தபோது, முதல் மனிதனான ஆதாமுக்கு 600 வயதுக்கு மேல் இருந்திருக்கும். அதற்கு பின்பும் ஆதாம் 300 வருஷங்கள் உயிரோடு இருந்தார். அவருடைய வாரிசுகளில் சிலர் அதற்கும் அதிகமாக வாழ்ந்தார்கள். அதனால், 365 வயதாகியிருந்தாலும் ஏனோக்கு நல்ல ஆரோக்கியத்தோடு இருந்திருப்பார். அவருக்கு இன்னும் பல வருஷங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் 365 வயதிலேயே இறந்துவிட்டார்.
கடவுள் சொல்ல சொன்ன செய்தியை அன்று வாழ்ந்த மக்களிடம் ஏனோக்கு சொன்னார். அதைக் கேட்ட அந்த மக்களுக்கு பயங்கர கோபம் வந்தது. அவர் சொன்ன செய்தி அவர்களுக்கு கொஞ்சங்கூட பிடிக்கவில்லை. ஏனோக்கையும் அந்தச் செய்தியை சொல்ல சொன்ன கடவுளையும் அவர்கள் வெறுத்தார்கள். ஏனோக்கு வணங்கிய கடவுளான யெகோவாவை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால், ஏனோக்கைக் கொல்ல நினைத்தார்கள். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து அவர் ஓடினார். அந்த சமயத்தில், ‘என் குடும்பத்த மறுபடியும் நான் பார்ப்பேனா?’ என்று அவர் நினைத்திருக்கலாம். அவருடைய மனைவி, மகள்கள், அவருடைய மகன் மெத்தூசலா மற்றும் பேரன் லாமேக்கு பற்றிய கவலை அவர் மனதை வாட்டியிருக்கலாம். (ஆதியாகமம் 5:21-23, 25) அடுத்து என்ன நடந்தது, ஏனோக்கை அவருடைய எதிரிகள் கொன்றுவிட்டார்களா?
ஏனோக்கைப் பற்றி பைபிளில் அதிகமாக சொல்லப்படவில்லை. வெறும் மூன்று வசனங்களில் மட்டும்தான் அவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதியாகமம் 5:21-24; எபிரெயர் 11:5; யூதா 14, 15) ஆனால், அந்த வசனங்களில் இருந்து அவர் எந்தளவுக்கு விசுவாசம் காட்டினார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா? சரியானதைச் செய்ய நீங்கள் போராட வேண்டியிருக்கிறதா? அப்படியென்றால், ஏனோக்கு காட்டிய விசுவாசத்தில் இருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
‘கடவுளோடு ஏனோக்கு தொடர்ந்து நடந்தார்’
ஏனோக்கு பிறந்தபோது இந்த உலகம் ரொம்ப மோசமாக இருந்தது. ஆதாமிலிருந்து அது ஏழாவது தலைமுறையாக இருந்தது. ஆதாம் ஏவாளுக்கு இருந்த அதே உடல் ஆரோக்கியம் இவர்களுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு ஆரோக்கியமாக இருந்தார்கள். அதனால்தான், இவர்களால் ரொம்ப வருஷம் உயிர் வாழ முடிந்தது. இருந்தாலும் இவர்கள் ஆன்மீக விஷயத்திலும் ஒழுக்க விஷயத்திலும் படுமோசமான நிலைமையில் இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் வன்முறை நிறைந்திருந்தது. இது ஆதாமுக்கு அடுத்த தலைமுறையில், அதாவது இரண்டாவது தலைமுறையில் இருந்தே ஆரம்பித்துவிட்டது. காயீன் தன் சொந்த தம்பியைக் கொலை செய்தான். காயீனுடைய வம்சத்தில் வந்த ஒருவன் காயீனைவிட கொடூரமாக நடந்துகொண்டதை நினைத்து பெருமை அடித்தான். மூன்றாம் தலைமுறையில் நிலைமை இன்னும் மோசமானது. மக்கள், “யெகோவாவின் பெயரைக் களங்கப்படுத்த ஆரம்பித்தார்கள்.”—ஆதியாகமம் 4:8, 23-26.
ஏனோக்கு வாழ்ந்த காலத்தில் மக்கள் பொய் மதத்தில் ஊறிப்போய் இருந்தார்கள். அதனால், ஊரோடு ஒத்துப்போவதா அல்லது வானத்தையும் பூமியையும் படைத்த உண்மை கடவுளான யெகோவாவை வணங்குவதா என்று இளம் வயதிலேயே ஏனோக்கு தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. யெகோவாவுக்கு உண்மையாக வாழ்ந்ததால் கொல்லப்பட்ட ஆபேலைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருப்பார். ஆபேலின் உதாரணம் அவர் மனதை ஆழமாக தொட்டிருக்கும். அதனால், ஆபேலைப் போலவே இருக்க ஏனோக்கு தீர்மானித்தார். “அவர் உண்மைக் கடவுளுடைய வழியில் தொடர்ந்து நடந்துவந்தார்” என்று ஆதியாகமம் 5:22 சொல்கிறது. கடவுள்பக்தி இல்லாத மக்கள் நடுவில் ஏனோக்கு மட்டும் கடவுளை உண்மையாக வணங்கினார் என்று இந்த வசனத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். பைபிளில் இப்படிச் சான்று பெற்ற மனிதர்களில் ஏனோக்கு முதல் இடத்தில் இருக்கிறார்.
மெத்தூசலா பிறந்த பிறகும் ஏனோக்கு தொடர்ந்து கடவுளோடு நடந்தார் என்று ஆதியாகமம் 5:22 சொல்கிறது. அப்படியென்றால், ஏனோக்கு இளம் வயதில் மட்டுமல்ல ஒரு குடும்ப தலைவரான பிறகும் கடவுளோடு நடந்தார் என்று தெரிகிறது. அவருக்கு அப்போது சுமார் 65 வயது இருந்திருக்கலாம். அவருடைய மனைவியின் பெயர்... அவருக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தார்கள்... என்றெல்லாம் பைபிளில் கொடுக்கப்படவில்லை. ஏனோக்கு ஒரு நல்ல அப்பாவாகவும் கணவனாகவும் குடும்பத்துக்கு தேவையானதைச் செய்திருப்பார். ஏனென்றால், அவர் கடவுள் விரும்பும் விதத்தில் தன் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார். ஏனோக்கு யெகோவா எதிர்பார்த்தபடியே தன் மனைவிக்கு உண்மையாக இருந்தார். (ஆதியாகமம் 2:24) அதோடு, தன்னுடைய பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி சொல்லிக்கொடுக்க தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். இதனால் என்ன நன்மை கிடைத்தது?
இதைப் பற்றிய சில தகவல்கள் மட்டும்தான் பைபிளில் இருக்கிறது. ஏனோக்கின் மகன் மெத்தூசலாவின் விசுவாசத்தைப் பற்றி பைபிளில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், பைபிள் காலங்களில் வாழ்ந்த மனிதர்களிலேயே இவர்தான் ரொம்ப வருஷம் உயிர்வாழ்ந்தார். பெருவெள்ளம் வந்த அதே வருஷத்தில் இவர் இறந்துவிட்டார். மெத்தூசலாவுக்கு லாமேக்கு என்ற மகன் பிறந்தார். கிட்டத்தட்ட 100 வருஷங்களுக்கு அதிகமாக லாமேக்கு தன்னுடைய தாத்தா ஏனோக்கோடு வாழ்ந்தார். ஏனோக்கைப் போலவே லாமேக்கும் விசுவாசமுள்ள நபராக இருந்தார். யெகோவாவுடைய சக்தியின் உதவியோடு லாமேக்கு தன்னுடைய மகன் நோவாவைப் பற்றி தீர்க்கதரிசனம் சொன்னார். பெருவெள்ளத்துக்கு பிறகு அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. நோவாவும் தன்னுடைய கொள்ளுத்தாத்தா ஏனோக்கைப் போலவே கடவுளோடு தொடர்ந்து நடந்தார். ஆனால், நோவா ஏனோக்கை பார்த்ததே இல்லை. இருந்தாலும், ஏனோக்கு காட்டிய விசுவாசத்தில் இருந்து நோவா நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருப்பார். ஏனோக்கைப் பற்றி தன்னுடைய அப்பா லாமேக்கிடமிருந்து அல்லது தாத்தா மெத்தூசலாவிடமிருந்து தெரிந்துகொண்டிருக்கலாம். ஏனோக்கின் அப்பா யாரேத்திடமிருந்தும் கற்றுக்கொண்டிருக்கலாம். ஏனென்றால், நோவாவுக்கு 366 வயதாகி இருக்கும்போதுதான் யாரேத் இறந்தார்.—ஆதியாகமம் 5:25-29; 6:9; 9:1.
ஆதாமுக்கும் ஏனோக்குக்கும் இருக்கிற வித்தியாசத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யெகோவா ஆதாமைப் படைத்தபோது அவனுக்கு எந்தக் குறையும் இல்லை. இருந்தாலும், அவன் யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தான். எதிர்கால சந்ததிக்கு வேதனையையும் வருத்தத்தையும்தான் விட்டு சென்றான். ஆனால், ஏனோக்கு தவறு செய்யும் இயல்புள்ளவராக இருந்தும் அவர் கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ்ந்தார். அவருக்கு பிறகு வந்த சந்ததிக்கு ஒரு சிறந்த சொத்தை விட்டு சென்றார். அவர் காட்டிய விசுவாசம்தான் அந்தச் சொத்து. ஏனோக்குக்கு 308 வயதிருந்தபோது ஆதாம் இறந்தார். சுயநலவாதியான ஆதாம் இறந்ததை நினைத்து அவருடைய குடும்பத்தார் வேதனைப்பட்டிருப்பார்களா? நமக்கு அதைப் பற்றி தெரியாது. ஆனால், ஏனோக்கு, “உண்மைக் கடவுளுடைய வழியில் தொடர்ந்து நடந்துவந்தார்.”—ஆதியாகமம் 5:24.
நீங்கள் ஒரு குடும்பத் தலைவராக இருந்தால் ஏனோக்குடைய விசுவாசத்தை எப்படிப் பின்பற்றலாம் என்று யோசித்துப் பாருங்கள். குடும்பத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பது முக்கியம்தான். (1 தீமோத்தேயு 5:8) ஆனால், குடும்பத்தில் இருப்பவர்கள் கடவுள்பக்தியோடு இருக்க உதவுவதுதான் அதைவிட முக்கியம். நீங்கள் சொல்வதைவிட செய்வதைப் பார்த்து அவர்கள் அதிகம் கற்றுக்கொள்வார்கள். ஏனோக்கைப் போல நீங்களும் கடவுளோடு நடக்க விரும்பினால், கடவுளுடைய சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படியுங்கள். அப்போது, உங்களுடைய விசுவாசத்தைப் பார்த்து உங்கள் குடும்பத்தாரும் கடவுள்பக்தியோடு நடந்துகொள்வார்கள். இதுதான் நீங்கள் அவர்களுக்கு விட்டு செல்லும் உண்மையான சொத்து.
‘அவர்களைக் குறித்து ஏனோக்கு தீர்க்கதரிசனம் சொன்னார்’
கடவுள்பக்தி இல்லாத உலகத்தில் ஏனோக்கு மட்டும் கடவுளை உண்மையாக வணங்கினார். இதை அவருடைய கடவுளான யெகோவா பார்த்தாரா? நிச்சயம் பார்த்திருப்பார். அதனால்தான் விசுவாசமுள்ள அவருடைய ஊழியனிடம் யெகோவா பேசினார். அவரை ஒரு தீர்க்கதரிசியாக நியமித்தார். அன்று வாழ்ந்த மக்களிடம் ஒரு செய்தியைச் சொல்ல சொன்னார். இவர்தான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் முதல் தீர்க்கதரிசி. அவர் சொன்ன செய்தியை பல வருஷங்களுக்கு பிறகு கடவுளின் சக்தியின் தூண்டுதலால் இயேசுவின் சகோதரனான யூதா பைபிளில் பதிவு செய்தார்.a
ஏனோக்கு எதைப் பற்றி தீர்க்கதரிசனம் சொன்னார்? பைபிளில் இப்படி வாசிக்கிறோம்: “இதோ! யெகோவா தன்னுடைய லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு எல்லாரையும் நியாயந்தீர்க்க வந்தார். கடவுள்பக்தி இல்லாத எல்லாரும் கடவுள்பக்தி இல்லாத விதத்தில் செய்த கடவுள்பக்தி இல்லாத எல்லா செயல்களுக்காகவும், கடவுள்பக்தி இல்லாத பாவிகள் தனக்கு விரோதமாகப் பேசிய அதிர்ச்சியூட்டும் பேச்சுக்காகவும் அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்க்க வந்தார்.” (யூதா 14, 15) இந்த தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை கடவுள் ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டதுபோல் ஏனோக்கு சொல்லியிருக்கிறார். இவருக்கு பிறகு வந்த நிறைய தீர்க்கதரிசிகள்கூட இதுபோல தீர்க்கதரிசனம் சொன்னார்கள். கடவுள் சொன்னது நிச்சயமாக நடக்கும் என்று ஏனோக்கு உறுதியாக நம்பியதால் அது நடந்துவிட்டதுபோல அவர் சொன்னார்.—ஏசாயா 46:10.
அன்று வாழ்ந்த மக்களிடம் இந்த எச்சரிப்பு செய்தியைச் சொன்னபோது ஏனோக்கு எப்படி உணர்ந்திருப்பார்? அந்தச் செய்தியைச் சொல்லும்போது “கடவுள்பக்தி இல்லாத” என்ற வார்த்தையை ஏனோக்கு நான்கு முறை பயன்படுத்தினார். அந்த மக்கள் மட்டுமல்ல, அவர்கள் செய்த செயல்கள்... அதை அவர்கள் செய்த விதம்... எல்லாமே ‘கடவுள்பக்தியற்றதாக’ இருந்தது என்று சொன்னார். ஏதேன் தோட்டத்தில் நடந்த கலகத்துக்கு பிறகு பூமியில் வாழ்ந்தவர்கள் கடவுளுக்கு பிடிக்காத படுமோசமான விஷயங்களைச் செய்தார்கள். அதனால், அழிவு வரப்போகிறது என்று ஏனோக்கு அவர்களை எச்சரித்தார். அவர்களை அழிப்பதற்கு “யெகோவா தமது லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு” வருவார். கடவுள் சொல்ல சொன்ன இந்த எச்சரிப்பு செய்தியை ஏனோக்கு தைரியமாக... தன்னந்தனியாக... போய் சொன்னார். தன் தாத்தாவுக்கு இருந்த தைரியத்தைப் பார்த்து லாமேக்கு ரொம்பவே அசந்துபோயிருப்பார்.
ஏனோக்குக்கு இருந்த அதே விசுவாசம் நமக்கும் இருந்தால் இன்று இருக்கும் உலகத்தை யெகோவா பார்க்கும் விதமாக நாமும் பார்ப்போம். இன்று இருக்கும் மக்களும் ஏனோக்கு காலத்தில் வாழ்ந்த மக்களைப் போலவே இருக்கிறார்கள். அதனால் அந்த எச்சரிப்பு செய்தி இன்று இருக்கும் மக்களுக்கும் பொருந்தும். ஏனோக்கு சொன்னது போலவே அந்தத் தேவபக்தியற்ற மக்களை நோவாவின் காலத்தில், பெருவெள்ளத்தினால் யெகோவா அழித்தார். கடவுள்பக்தியற்ற மக்களை யெகோவா அப்போது அழித்தது போலவே எதிர்காலத்திலும் அழிப்பார். (மத்தேயு 24:38, 39; 2 பேதுரு 2:4-6) அவர்களை அழிப்பதற்கு கடவுள் அவருடைய பரிசுத்த தூதர்களோடு தயாராக காத்திருக்கிறார். அதனால் ஏனோக்கு சொன்ன செய்திக்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதைப் பற்றி மற்றவர்களிடமும் சொல்ல வேண்டும். ஆனால், நம்முடைய சொந்தக்காரர்களும், நண்பர்களும் அந்தச் செய்தியை கேட்காமல் போகலாம். நாம் தனியாக இருப்பது போல் உணரலாம். ஏனோக்கை யெகோவா எப்படி கைவிடவில்லையோ அதேபோல் இன்றும் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களை கைவிட மாட்டார்.
“மரணத்தைக் காணாதபடி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்”
ஏனோக்கின் மரணம் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. “அவர் உண்மைக் கடவுளுடைய வழியில் தொடர்ந்து நடந்துவந்தார். அதன்பின் யாரும் அவரைப் பார்க்கவில்லை. ஏனென்றால், கடவுள் அவரை எடுத்துக்கொண்டார்.” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 5:24) அதைத் தவிர வேறெந்த தகவலும் பைபிளில் இல்லை. எந்த அர்த்தத்தில் “கடவுள் அவரை எடுத்துக்கொண்டார்?” அதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “விசுவாசத்தால்தான் ஏனோக்கு, வேதனைப்பட்டுச் சாகாதபடி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். அப்படி அவரைக் கடவுள் இடம் மாற்றியதால் அதற்குப் பின்பு அவரை யாரும் பார்க்கவில்லை; அவர் இடம் மாற்றப்படுவதற்கு முன்பே, கடவுளுக்கு மிகவும் பிரியமாக நடந்துகொண்டவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார்.” (எபிரெயர் 11:5) “சாகாதபடி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார்” என்று பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன? ஏனோக்கை கடவுள் பரலோகத்துக்கு எடுத்துக்கொண்டார் என்று சில பைபிள் மொழிபெயர்ப்புகள் சொல்கின்றன. ஆனால், பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்ட முதல் நபர் இயேசு கிறிஸ்துதான் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது.— யோவான் 3:13.
அந்தக் கெட்ட மக்கள் கையில் ஏனோக்கு சித்திரவதை அனுபவித்து சாகாதபடி யெகோவா அவரை எடுத்துக்கொண்டார். அதாவது, அவரை மரணத்தில் தூங்க வைத்துவிட்டார். இந்த அர்த்தத்தில்தான் அவர் “சாகாதபடி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார்” என்று பைபிள் சொல்கிறது. ஆனால் அதற்கு முன்பு அவர் “கடவுளுக்கு மிகவும் பிரியமாக நடந்துகொண்டவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார்.” எப்படி? அவர் இறப்பதற்கு முன்பு பூஞ்சோலை பூமியைப் பற்றிய ஒரு தரிசனத்தை கடவுள் அவருக்கு காட்டியிருக்கலாம். இது அவர் யெகோவாவுக்கு பிரியமான ஒரு நபராக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் ஏனோக்கு உட்பட மற்ற விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: அவர்கள் “எல்லாரும் விசுவாசமுள்ளவர்களாக இறந்தார்கள்.” (எபிரெயர் 11:13) ஏனோக்கின் எதிரிகள் அவருடைய உடலைத் தேடியிருக்கலாம். அவரை அவமானப்படுத்துவதற்காக அவருடைய உடலைப் பயன்படுத்த நினைத்திருக்கலாம். அல்லது பொய் மத பழக்கத்துக்காக அதைப் பயன்படுத்த நினைத்திருக்கலாம். ஆனால் அவருடைய உடலை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் யெகோவா அதை மறைத்துவிட்டார்.b
பைபிள் சொல்லும் இந்த விஷயங்களை மனதில் வைத்து பார்க்கும்போது ஒருவேளை ஏனோக்கின் வாழ்க்கை இப்படி முடிந்திருக்கலாம்: கெட்ட ஜனங்களுக்கு பயந்து ஏனோக்கு தலைதெறிக்க ஓடுகிறார். அவர் மிகவும் களைத்துப்போய் இருக்கிறார். அவருடைய எதிரிகள் அவர் சொன்ன செய்தியைக் கேட்டு கோபத்தில் கொந்தளித்து அவரைப் பின்தொடருகிறார்கள். கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கவும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் அவர் ஒரு இடத்தில் ஒளிந்துகொள்கிறார். ஆனால் எதிரிகளிடம் சிக்காமல் ரொம்ப நேரம் இருக்க முடியாது என்று அவருக்கு தெரியும். ஒரு பயங்கரமான சாவு அவருக்கு காத்துக்கொண்டிருந்தது. அவர் ஒளிந்திருந்த இடத்தில் இருந்தே அவர் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார். அப்போது அவருக்கு மன அமைதி கிடைக்கிறது. அந்தச் சமயத்தில் அவர் ஒரு தரிசனத்தைப் பார்க்கிறார். அந்தத் தரிசனத்தில் வரும் இடத்திலேயே அவர் இருப்பதுபோல் உணருகிறார்.
அவர் ஒரு காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். அந்தக் காட்சி அவர் அப்போதிருந்த சூழ்நிலையைவிட ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அவர் கண்களுக்கு அது ஏதேன் தோட்டதைப் போல் அழகாக தெரிகிறது. ஆனால், காவல் காப்பதற்கு அங்கு கேருபீன்கள் இல்லை. அங்கு இருக்கும் மக்கள் எல்லாரும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார்கள். எல்லாரும் நிம்மதியாக இருந்தார்கள். அங்கு சண்டை சச்சரவு எதுவும் இல்லை. ஏனோக்கை துன்புறுத்திய கொடூரமான மக்கள் யாரும் அங்கு இல்லை. யெகோவாவின் அன்பும் ஆசீர்வாதமும் தனக்கு இருந்ததை ஏனோக்கினால் உணர முடிந்தது. அவர் அங்குதான் வாழ வேண்டுமென்றும் அதுதான் தன்னுடைய வீடாக இருக்க வேண்டும் என்றும் நினைத்திருப்பார். இதையெல்லாம் யோசித்துக்கொண்டு தன் கண்களை மூடியிருப்பார். அவர் மனதில் ஒரு அமைதி ஏற்பட்டிருக்கும். கனவே இல்லாத ஒரு ஆழ்ந்த தூக்கம் அவருக்கு வந்திருக்கும்.
இன்றுவரை மரணம் என்ற ஆழ்ந்த தூக்கத்தில்தான் அவர் இருக்கிறார். யெகோவா தேவனுடைய நினைவில் அவர் பத்திரமாக இருக்கிறார். கடவுளுடைய ஞாபகத்தில் இருக்கும் எல்லாரும் இயேசு கிறிஸ்துவின் குரலைக் கேட்டு கல்லறையைவிட்டு வெளியே வருவார்கள். அவர்கள் கண்களைத் திறந்து பார்க்கும்போது அழகான பூஞ்சோலைதான் அவர்களுக்கு தெரியும்.—யோவான் 5:28, 29.
நீங்களும் அங்கிருக்க ஆசைப்படுகிறீர்களா? ஏனோக்கை நேரில் பார்க்கும்போது எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொள்ள முடியும். நாம் கற்பனை செய்து பார்த்த விஷயங்களும் அவருக்கு உண்மையிலேயே நடந்த சம்பவங்களும் ஒத்துப்போகிறதா என்று அவரிடமே கேட்கலாம். இப்போதே நாம் அவரிடம் இருந்து ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ளலாம். ஏனோக்கைப் பற்றி சொன்ன பிறகு பவுல் இப்படி எழுதினார்: “விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது.” (எபிரெயர் 11:6) கடவுளைப் பிரியப்படுத்த ஏனோக்கைப் போல் நீங்களும் விசுவாசமாக இருப்பீர்களா?
a தள்ளுபடி ஆகமங்களின் ஒன்றாகிய ஏனோக்கின் புத்தகத்திலிருந்து யூதா இந்த வார்த்தைகளை எழுதியிருக்கலாம் என்று சில பைபிள் அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்தப் புத்தகத்தை ஏனோக்கு எழுதினார் என்று தவறாக நம்பப்படுகிறது. ஆனால், ஏனோக்கின் தீர்க்கதரிசனம் அதில் துல்லியமாக இருந்தது. பழங்காலத்து பதிவுகள் ஒன்றிலிருந்து அது எழுதப்பட்டிருக்கலாம். இப்போது நம்மிடம் அந்தப் பதிவு இல்லை. அது வாய்மொழியாக சொல்லப்பட்டிருக்கலாம் அல்லது எழுத்துவடிவில் இருந்திருக்கலாம். ஏனோக்கைப் பற்றி அந்தப் பழங்காலத்து பதிவில் இருந்தோ அல்லது இயேசுவிடம் இருந்தோ யூதா தெரிந்துகொண்டிருக்கலாம். ஏனென்றால் ஏனோக்கு பூமியில் வாழ்ந்ததை இயேசு பரலோகத்தில் இருந்து பார்த்திருப்பார்.
b மோசேயின் உடலையும் இயேசுவின் உடலையும் யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கடவுள் அதை மறைத்துவிட்டார்.—உபாகமம் 34:5, 6; லூக்கா 24:3-6; யூதா 9.