யெகோவா நீடிய பொறுமையுள்ள கடவுள்
‘யெகோவா இரக்கமும் உருக்கமுமுள்ள கடவுள், கோபப்படுவதற்கு தாமதிக்கிறவர், அன்புள்ள தயவு நிறைந்தவர்.’—யாத்திராகமம் 34:6, NW.
1, 2. (அ) பூர்வ காலத்தில், யெகோவாவின் நீடிய பொறுமையிலிருந்து யார் பயனடைந்தார்கள்? (ஆ) “நீடிய பொறுமை” என்ற வார்த்தையின் அர்த்தமென்ன?
நோவாவின் நாட்களில் இருந்தவர்கள், மோசேயுடன் வனாந்தரம் வழியாக பயணப்பட்டவர்கள், இயேசு பூமியிலிருந்த காலத்தில் வாழ்ந்த யூதர்கள்—இவர்கள் அனைவருமே வெவ்வேறு சூழ்நிலைமைகளில் வாழ்ந்தார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே யெகோவாவின் தயவான குணமாகிய நீடிய பொறுமையிலிருந்து பயனடைந்தார்கள். சிலருடைய விஷயத்தில், இது அவர்களுடைய ஜீவனையே உட்படுத்தியது. யெகோவாவின் நீடிய பொறுமை நம்முடைய ஜீவனையும் உட்படுத்தலாம்.
2 நீடிய பொறுமை என்றால் என்ன? யெகோவா இதை எப்போது காட்டுகிறார், ஏன்? “நீடிய பொறுமை” என்பது தவறை அல்லது கோபமூட்டுதலை பொறுமையோடு சகித்திருப்பதோடு, பாதிக்கப்பட்ட உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை இழந்துவிடாதிருப்பது என விளக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இந்தக் குணத்திற்கு ஒரு நோக்கமும் உண்டு. இது, தொல்லை தரும் சூழ்நிலையை உருவாக்குபவருடைய நலனில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. என்றபோதிலும், நீடிய பொறுமையோடு இருப்பது என்பது தவறை கண்டும் காணாமல் விட்டுவிடுவதை அர்த்தப்படுத்துவதில்லை. நீடிய பொறுமையுடன் இருப்பதற்கான நோக்கம் நிறைவேறுகையில், அல்லது அந்த சூழ்நிலையைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இனிமேலும் தேவைப்படாமல் போகையில் நீடிய பொறுமை முடிவுறுகிறது.
3. யெகோவா என்ன நோக்கத்திற்காக நீடிய பொறுமையுடன் இருந்து வந்திருக்கிறார், எதுவரைக்கும் நீடிக்கும்?
3 மனிதரால் நீடிய பொறுமையைக் காட்ட முடிந்தாலும் யெகோவாவே இந்தக் குணத்திற்கு ஒப்பற்ற முன்மாதிரியாய் விளங்குகிறார். யெகோவாவிற்கும் அவருடைய மானிட சிருஷ்டிகளுக்கும் இடையிலுள்ள உறவை பாவம் பாதிக்க ஆரம்பித்தது முதற்கொண்டு, நம்முடைய சிருஷ்டிகர் பொறுமையுடன் சகிப்புத்தன்மையைக் காட்டியிருக்கிறார்; மனந்திரும்பும் மனிதர் தம்முடனுள்ள உறவை முன்னேற்றுவிப்பதற்குரிய வழிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார். (2 பேதுரு 3:9; 1 யோவான் 4:10) ஆனால் கடவுள் எந்த நோக்கத்திற்காக நீடிய பொறுமையோடு இருக்கிறாரோ அது நிறைவேறிய பின்பு, வேண்டுமென்றே தவறு செய்வோருக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுப்பார், தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவார்.—2 பேதுரு 3:7.
கடவுளின் பிரதான பண்புகளுடன் ஒத்திருக்கிறது
4. (அ) நீடிய பொறுமையின் கருத்து, எபிரெய வேதாகமத்தில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? (அடிக்குறிப்பையும் காண்க.) (ஆ) தீர்க்கதரிசியாகிய நாகூம் யெகோவாவை எவ்வாறு விவரிக்கிறார், இது யெகோவாவின் நீடிய பொறுமையைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது?
4 எபிரெய வேதாகமத்தில் நீடிய பொறுமை என்ற கருத்து, “மூக்குத் துளைகளின் நீளம்” என்ற நேர்பொருள் தரும் இரண்டு எபிரெய வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது; அது புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளில் “கோபப்படுவதற்கு தாமதிப்பது” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.a கடவுளுடைய நீடிய பொறுமையைப் பற்றி தீர்க்கதரிசியாகிய நாகூம் இவ்வாறு சொன்னார்: “யெகோவா கோபப்படுகிறதற்கு தாமதிக்கிறவர், மிகுந்த வல்லமையுள்ளவர்; யெகோவா எவரையும் தண்டியாமல் விடார்.” (நாகூம் 1:3, NW) எனவே, யெகோவா நீடிய பொறுமையோடு இருப்பது பலவீனத்தை அர்த்தப்படுத்துவதில்லை, அது வரம்புகளற்றதாகவும் இல்லை. சர்வவல்லமையுள்ள கடவுள் கோபப்படுவதற்கு தாமதிப்பவராகவும் அதே சமயத்தில் மிகுந்த வல்லமையுள்ளவராகவும் இருப்பது, அவருடைய நீடிய பொறுமையை காரணத்தோடு கட்டுப்படுத்துவதை காட்டுகிறது. தண்டிக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறது, ஆனால் தவறு செய்தவன் திருந்துவதற்கு வாய்ப்பளிப்பதற்காக உடனே தண்டிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கிறார். (எசேக்கியேல் 18:31, 32) ஆகையால், யெகோவாவின் நீடிய பொறுமை அவருடைய அன்பின் வெளிக்காட்டே. மேலும், அது தம்முடைய வல்லமையைப் பயன்படுத்துவதில் அவருக்குள்ள ஞானத்தை தெளிவுபடுத்திக் காட்டுகிறது.
5. எவ்வகையில் யெகோவாவின் நீடிய பொறுமை, அவருடைய நீதியுடன் ஒத்திசைந்து செயல்படுகிறது?
5 யெகோவாவின் நீடிய பொறுமை, அவருடைய நீதியுடனும் நியாயத்துடனும் ஒத்திருக்கிறது. “யெகோவா இரக்கமும் உருக்கமுமுள்ள கடவுள், கோபப்படுவதற்கு தாமதிக்கிறவர் [“நீடிய பொறுமையுள்ளவர்,” கிங் ஜேம்ஸ் வர்ஷன்], அன்புள்ள தயவும் சத்தியமும் நிறைந்தவர்” என அவரே மோசேக்கு வெளிப்படுத்தினார். (யாத்திராகமம் 34:6, NW) பல ஆண்டுகளுக்குப் பின்பு, யெகோவாவைத் துதித்து பாடுகையில் “அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” என மோசே பாடினார். (உபாகமம் 32:4) ஆம், யெகோவாவின் இரக்கம், நீடிய பொறுமை, நீதி, நேர்மை ஆகிய அனைத்தும் நன்மை பயக்கும் விதத்தில் ஒத்திசைவுடன் செயல்படுகின்றன.
ஜலப்பிரளயத்திற்கு முன் யெகோவாவின் நீடிய பொறுமை
6. நீடிய பொறுமைக்கு குறிப்பிடத்தக்க என்ன அத்தாட்சியை ஆதாம் ஏவாளின் சந்ததியாரிடம் யெகோவா காட்டியிருக்கிறார்?
6 ஏதேனில் ஆதாமும் ஏவாளும் கலகம் செய்தபோது, அன்பான படைப்பாளராகிய யெகோவாவுடன் அவர்கள் வைத்திருந்த அருமையான உறவு நிரந்தரமாக துண்டிக்கப்பட்டது. (ஆதியாகமம் 3:8-13, 23, 24) இப்படி விலகியது அவர்களுடைய பிள்ளைகளைப் பாதித்தது, அவர்கள் பாவத்தையும் அபூரணத்தையும் மரணத்தையும் சுதந்தரமாக பெற்றார்கள். (ரோமர் 5:17-19) முதல் மனித தம்பதியினர் வேண்டுமென்றே பாவம் செய்தவர்களாக இருந்தபோதிலும், பிள்ளைகளைப் பெற்றெடுக்க யெகோவா அவர்களை அனுமதித்தார். பின்னால், ஆதாம் ஏவாளின் சந்ததியார் தம்முடன் ஒப்புரவாவதற்குரிய வழியை அன்புடன் ஏற்பாடு செய்தார். (யோவான் 3:16, 36) “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” என அப்போஸ்தலன் பவுல் விளக்கினார்.—ரோமர் 5:8-10.
7. ஜலப்பிரளயத்திற்கு முன்பு, யெகோவா எவ்வாறு நீடிய பொறுமையைக் காட்டினார், ஜலப்பிரளயத்திற்கு முன்னால் வாழ்ந்த சந்ததி அழிக்கப்பட்டது ஏன் நியாயமானது?
7 யெகோவாவின் நீடிய பொறுமை நோவாவின் நாளில் காணப்பட்டது. ஜலப்பிரளயம் வருவதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் முன்பு “தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.” (ஆதியாகமம் 6:12) இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்கு மனிதகுலத்திடம் யெகோவா நீடிய பொறுமையோடு இருந்தார். “என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்” என்று அவர் சொன்னார். (ஆதியாகமம் 6:3) உண்மையுள்ள நோவா தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கவும், கடவுளுடைய நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது ஒரு பேழையைக் கட்டவும், வரவிருந்த ஜலப்பிரளயத்தைப் பற்றி தன் சகமக்களுக்கு எச்சரிக்கவும் அந்த 120 ஆண்டுகள் காலத்தை அளித்தன. “பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, . . . அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்” என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 3:20) உண்மைதான், நோவாவின் வீட்டார் தவிர வேறு யாரும் அவர் என்ன பிரசங்கிக்கிறார் என்பதைக் குறித்து “உணராதிருந்தார்கள்.” (மத்தேயு 24:38, 39) ஆனால் யெகோவா நோவாவை பயன்படுத்தி பேழையைக் கட்டவும் பல பத்தாண்டுகளுக்கு ‘நீதியை பிரசங்கிக்கவும்’ செய்வதன் மூலம், அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் வன்முறைமிக்க வழிகளை விட்டு மனந்திரும்பி தம்மை சேவிப்பதற்கு போதுமான அளவு வாய்ப்பளித்தார். (2 பேதுரு 2:5; எபிரெயர் 11:7) அந்தப் பொல்லாத சந்ததி முடிவில் அழிக்கப்பட்டது முற்றிலும் நியாயமானதே.
இஸ்ரவேலரிடம் ஒப்பற்ற நீடிய பொறுமை
8. இஸ்ரவேலரிடம் யெகோவா எவ்வாறு நீடிய பொறுமையை காட்டினார்?
8 இஸ்ரவேலரிடம் யெகோவா காட்டிய நீடிய பொறுமை 120 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது. 1,500-க்கும் அதிக ஆண்டு கால சரித்திரத்தில், கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக இருந்த இஸ்ரவேலர் கடவுளுடைய நீடிய பொறுமையை மட்டுக்குமீறி சோதிக்காமல் இருந்த சமயங்கள் மிகவும் குறைவு. எகிப்திலிருந்து அற்புதமாய் விடுவிக்கப்பட்டு சில வாரங்களுக்குள், தங்கள் இரட்சகருக்கு பெரும் அவமரியாதையை காண்பித்து விக்கிரக வணக்கத்தில் ஈடுபட்டார்கள். (யாத்திராகமம் 32:4; சங்கீதம் 106:21, 22) அதற்குப் பின்வந்த பத்தாண்டுகளில் வனாந்தரத்தில் யெகோவா அற்புதகரமாக அளித்த உணவை குறைகூறினார்கள், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தார்கள், யெகோவாவுக்கு விரோதமாக பேசினார்கள், புறமதத்தினருடன் சேர்ந்து வேசித்தனம் பண்ணினார்கள், ஏன், பாகால் வணக்கத்திலும் ஈடுபட்டார்கள். (எண்ணாகமம் 11:4-6; 14:2-4; 21:5; 25:1-3; 1 கொரிந்தியர் 10:6-11) யெகோவா தம் ஜனங்களை உண்மையிலேயே அழித்திருக்கலாம், ஆனால் அவர் நீடிய பொறுமையோடு இருந்தார்.—எண்ணாகமம் 14:11-21.
9. நியாயாதிபதிகளின் காலத்திலும் அரசர்களின் ஆட்சி காலத்திலும் யெகோவா எவ்வாறு நீடிய பொறுமையுள்ள கடவுளாக நிரூபித்தார்?
9 நியாயாதிபதிகளின் காலத்தில், இஸ்ரவேலர் மறுபடியும் மறுபடியும் விக்கிரக வணக்கத்திடம் வழிவிலகிச் சென்றார்கள். அப்போதெல்லாம் அவர்களை சத்துருக்களின் கைகளில் யெகோவா விட்டுவிட்டார். ஆனால் அவர்கள் மனந்திரும்பி உதவி கேட்டு அழைக்கையில் அவர் நீடிய பொறுமையோடு அவர்களை விடுவிக்க நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார். (நியாயாதிபதிகள் 2:17, 18) அரசர்களின் நீண்ட கால அரசாட்சியில் சில அரசர்களே யெகோவாவுக்கு முழு பயபக்தியை காட்டினார்கள். மேலும், உண்மையுள்ள அரசர்களின் ஆட்சியிலும் பெரும்பாலும் ஜனங்கள் மெய் வணக்கத்தைப் பொய் வணக்கத்தோடு கலப்படம் செய்தார்கள். அவர்களுடைய உண்மையற்ற போக்கை குறித்து எச்சரிப்பதற்கு தீர்க்கதரிசிகளை யெகோவா அனுப்பியபோது, பொதுவாக ஊழல்மிக்க ஆசாரியர்களுக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் செவிசாய்க்கவே ஜனங்கள் விரும்பினார்கள். (எரேமியா 5:31; 25:4-7) சொல்லப்போனால், இஸ்ரவேலர் யெகோவாவின் உண்மையுள்ள தீர்க்கதரிசிகளைத் துன்புறுத்தி, அவர்களில் சிலரை கொலையும் செய்தார்கள். (2 நாளாகமம் 24:20, 21; அப்போஸ்தலர் 7:51, 52) இருந்தாலும், யெகோவா தொடர்ந்து நீடிய பொறுமையைக் காட்டினார்.—2 நாளாகமம் 36:15.
யெகோவாவின் நீடிய பொறுமை முடிவடையவில்லை
10. யெகோவாவின் நீடிய பொறுமை எப்போது அதன் வரம்பை எட்டியது?
10 எனினும், கடவுளுடைய நீடிய பொறுமைக்கும் ஓர் எல்லை இருப்பதை சரித்திரம் காட்டுகிறது. பொ.ச.மு. 740-ல், இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தை அசீரியர்கள் கவிழ்க்கவும் அதன் குடிகளை நாடுகடத்தவும் அவர் அனுமதித்தார். (2 இராஜாக்கள் 17:5, 6) மேலும், பொ.ச.மு. 607-ல், யூதாவின் இரண்டு கோத்திர ராஜ்யத்தின் மீது படையெடுத்து, எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழிப்பதற்கு பாபிலோனியர்களை அவர் அனுமதித்தார்.—2 நாளாகமம் 36:16-19.
11. தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையிலும், யெகோவா எவ்வாறு நீடிய பொறுமையைக் காட்டினார்?
11 என்றபோதிலும், இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் எதிராக தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுகையிலும், யெகோவா நீடிய பொறுமையை காண்பிக்க மறந்துவிடவில்லை. தாம் தெரிந்துகொண்ட ஜனம் மீண்டும் நிலைநாட்டப்படும் என்பதை தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் மூலம் யெகோவா முன்னறிவித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “பாபிலோனிலே எழுபது வருஷம் நிறைவேறின பின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப் பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப் பண்ணுவேன். . . . நான் உங்களுக்குக் காணப்படுவேன் . . . நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, . . . உங்களைத் திரும்பி வரப்பண்ணுவேன்.”—எரேமியா 29:10, 14.
12. யூத மீதிபேர் யூதாவுக்குத் திரும்பி வந்தது எவ்வாறு மேசியாவின் வருகை சம்பந்தமாக கடவுளுடைய வழிநடத்துதலாக நிரூபித்தது?
12 அவ்வாறே, நாடுகடத்தப்பட்ட யூதரில் மீதியானோர் மீண்டும் யூதாவுக்கு வந்து, எருசலேமில் திரும்ப கட்டப்பட்ட ஆலயத்தில் யெகோவாவின் வணக்கத்தை மீண்டும் தொடங்கி வைத்தார்கள். யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதில், புத்துணர்ச்சியையும் செழுமையையும் தரும் “யெகோவாவால் வருகிற பனியைப் போல” இந்த மீதியானோர் ஆவார்கள். மேலும், ‘காட்டு மிருகங்களுக்குள்ளே சிங்கம் போலவும்’ தைரியமும் பலமும் மிக்கவர்களாய் இருப்பார்கள். (மீகா 5:7, 8, திருத்திய மொழிபெயர்ப்பு) பின் சொல்லப்பட்ட அந்தக் குறிப்பு, மக்கபேயர் காலத்தில் மக்கபேயர் குடும்பத்தின் ஆதரவிலிருந்த யூதர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து தங்கள் சத்துருக்களை வெளியேற்றி, தீட்டுப்படுத்தப்பட்டிருந்த ஆலயத்தை மீண்டும் பிரதிஷ்டை செய்தபோது நிறைவேறியிருக்கலாம். இவ்வாறு, மேசியாவாக கடவுளுடைய குமாரன் வருகையில் உண்மையுடன் இருக்கும் மற்றொரு மீதியானோர் அவரை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளும்படிக்கு அந்த நாடும் ஆலயமும் பாதுகாத்து வைக்கப்பட்டன.—தானியேல் 9:25; லூக்கா 1:13-17, 67-79; 3:15, 21, 22.
13. யூதர்கள் தம்முடைய குமாரனை கொன்ற பின்பும், யெகோவா எவ்வாறு தொடர்ந்து அவர்களிடம் நீடிய பொறுமையைக் காட்டினார்?
13 யூதர்கள் தம்முடைய குமாரனை கொன்ற பின்புங்கூட, இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்கு அவர்களிடம் யெகோவா தொடர்ந்து நீடிய பொறுமை காட்டினார்; இவ்வாறு ஆபிரகாமின் ஆவிக்குரிய வித்துவின் பாகமாகும் விசேஷ வாய்ப்பை ஏற்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். (தானியேல் 9:27)b பொ.ச. 36-ம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் இந்த அழைப்பை சில யூதர்கள் ஏற்றார்கள். இவ்வாறு, பின்னால் பவுல் குறிப்பிட்டபடி, “தகுதியற்ற தயவினால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு மீதிபேர் வந்தார்கள்.”—ரோமர் 11:5, NW.
14. (அ) ஆபிரகாமின் ஆவிக்குரிய வித்துவின் பாகமாகும் வாய்ப்பு பொ.ச. 36-ல் யாருக்கு அளிக்கப்பட்டது? (ஆ) ஆவிக்குரிய இஸ்ரவேலரின் அங்கத்தினர்களை யெகோவா தெரிந்தெடுக்கும் முறை சம்பந்தமாக தன் கருத்துக்களை பவுல் எவ்வாறு வெளிப்படுத்தினார்?
14 பொ.ச. 36-ல், யூதர்களாகவோ யூத மதத்திற்கு மாறியவர்களாகவோ இல்லாதவர்களுக்கு ஆபிரகாமின் ஆவிக்குரிய வித்துவின் பாகமாகும் அருமையான வாய்ப்பு முதல் தடவையாக அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட எவரும், யெகோவாவின் தகுதியற்ற தயவையும் நீடிய பொறுமையையும் பெறுகிறவர்களாக ஆனார்கள். (கலாத்தியர் 3:26-29; எபேசியர் 2:4-7) ஆவிக்குரிய இஸ்ரவேலை பூர்த்தி செய்வதற்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையடைய யெகோவாவின் இரக்கத்தோடுகூடிய நீடிய பொறுமை வழிவகுத்தது; இதற்கு காரணமான அவரது ஞானத்திற்கும் நோக்கத்திற்கும் ஆழ்ந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தி பவுல் இவ்வாறு உணர்ச்சி ததும்ப கூறினார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!”—ரோமர் 11:25, 26, 33; கலாத்தியர் 6:15, 16.
தம்முடைய பெயரின் நிமித்தம் நீடிய பொறுமை
15. கடவுள் நீடிய பொறுமையுடன் இருப்பதற்கான முக்கிய காரணம் என்ன, எந்த விவாதம் தீர்க்கப்படுவதற்கு காலம் தேவைப்பட்டது?
15 யெகோவா ஏன் நீடிய பொறுமையைக் காட்டுகிறார்? முக்கியமாக, தம்முடைய பரிசுத்த பெயரை மகிமைப்படுத்துவதற்கும் தம்முடைய பேரரசுரிமையை நியாய நிரூபணம் செய்வதற்குமே. (1 சாமுவேல் 12:20-22) யெகோவா அரசுரிமையை செலுத்தும் முறையின்மீது சாத்தான் எழுப்பின ஒழுக்கநெறி சார்ந்த விவாதம் அனைத்து சிருஷ்டிகளுக்கும் முன்பாக திருப்திகரமாய் தீர்க்கப்படுவதற்குக் காலம் தேவைப்பட்டது. (யோபு 1:9-11; 42:2, 5, 6) ஆகையால், எகிப்தில் தம்முடைய ஜனங்கள் ஒடுக்கப்படுகையில் பார்வோனிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.”—யாத்திராகமம் 9:16.
16. (அ) யெகோவா தம்முடைய பெயருக்கென ஒரு ஜனத்தை தயார்படுத்துவதை எவ்வாறு அவருடைய நீடிய பொறுமை சாத்தியமாக்கியது? (ஆ) எவ்வாறு யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுத்தப்பட்டு, அவருடைய பேரரசுரிமை நியாய நிரூபணம் செய்யப்படும்?
16 தம்முடைய பரிசுத்த பெயர் மகிமைப்படுத்தப்படுவதில் கடவுளுடைய நீடிய பொறுமையின் பங்கை அப்போஸ்தலன் பவுல் விளக்கும்போது, பார்வோனிடம் யெகோவா சொன்ன வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். பின்பு பவுல் இவ்வாறு எழுதினார்: “கடவுள் தமது கோபத்தைக் காண்பிக்கவும் தமது வல்லமையைத் தெரிவிக்கவும் அதோடுகூடத் தாம் மகிமைக்காக ஆயத்தமாக்கின இரக்கப் பாத்திரங்கள்மேல், அதாவது யூதரிலிருந்து மாத்திரமல்ல புறஜாதிகளிலிருந்தும் அவர் அழைத்த நம்மேல், தமது மகிமையின் ஐசுவரியத்தைத் தெரிவிக்கவும் சித்தங்கொண்டு அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாயிருந்தாரானாலென்ன? அவர் ஒசேயாவின் மூலமாய்ச் சொல்லுகிறதும் அதுவே: எனக்கு ஜனமல்லாதவர்களை என் ஜனமென்று . . . சொல்லியழைப்பேன்.” (ரோமர் 9:17, 22-25, தி.மொ.) யெகோவா நீடிய பொறுமையைக் காட்டினதால், புறதேசத்தாரிலிருந்து “தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை” தெரிந்துகொள்ள முடிந்தது. (அப்போஸ்தலர் 15:14) அவர்களுடைய தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் தலைமையில் இந்தப் ‘பரிசுத்தவான்கள்,’ யெகோவா தம்முடைய சிறப்பான பெயரை பரிசுத்தப்படுத்தவும் தம்முடைய பேரரசுரிமையை நியாய நிரூபணம் செய்யவும் பயன்படுத்தப்போகும் ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாக இருக்கிறார்கள்.—தானியேல் 2:44; 7:13, 14, 27; வெளிப்படுத்துதல் 4:9-11; 5:9, 10.
யெகோவாவின் நீடிய பொறுமை இரட்சிப்பை அளிக்கிறது
17, 18. (அ) என்ன செய்வதன் மூலம் நம்மை அறியாமலேயே யெகோவா நீடிய பொறுமை காட்டுவதற்காக அவரை குறைகூறிவிடலாம்? (ஆ) யெகோவாவின் நீடிய பொறுமையை எப்படி நோக்கும்படி நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்?
17 மனிதகுலம் ஆரம்பத்தில் அழிவுக்கு ஏதுவான பாவத்தில் வீழ்ந்த சமயத்திலிருந்து இப்போது வரை, யெகோவா நீடிய பொறுமையுள்ள கடவுளாக தம்மை நிரூபித்திருக்கிறார். ஜலப்பிரளயத்திற்கு முன்பு அவர் நீடிய பொறுமையோடிருந்தது, தகுந்த எச்சரிக்கை செய்யவும் இரட்சிப்புக்கான பேழையைக் கட்டவும் காலத்தை அனுமதித்தது. ஆனால் அவருடைய பொறுமை வரம்பை எட்டியது, ஜலப்பிரளயம் வந்தது. அவ்வாறே இன்று, யெகோவா மிகுந்த நீடிய பொறுமையைக் காட்டுகிறார். இது, சிலர் எதிர்பார்த்ததற்கும் மேலாக நீடித்திருக்கிறது. எனினும், நம்பிக்கை இழப்பதற்கு அது காரணமாயில்லை. அப்படி செய்வது, கடவுள் நீடிய பொறுமையுடன் இருப்பதற்காக அவரை குறைகூறுவதாக இருக்கும். “தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணுகிறாயோ?” என பவுல் கேட்டார்.—ரோமர் 2:4.
18 இரட்சிப்படைவதற்கு கடவுளுடைய அங்கீகாரம் நமக்கிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள எந்தளவுக்குக் கடவுளுடைய நீடிய பொறுமை தேவை என்பதை நாம் யாரும் அறிய முடியாது. ‘அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நம் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படும்படி’ பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறார். (பிலிப்பியர் 2:12) உடன் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: ‘தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, [யெகோவா] தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.’—2 பேதுரு 3:9.
19. யெகோவாவின் நீடிய பொறுமையை எந்த விதத்தில் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்?
19 ஆகையால், காரியங்களை யெகோவா கையாளும் முறையைக் குறித்து பொறுமையற்றவர்களாய் இல்லாதிருப்போமாக. மாறாக, பேதுருவின் மேலுமான அறிவுரையைப் பின்பற்றி, ‘நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுவோமாக.’ யாருடைய இரட்சிப்பு? நம்முடைய இரட்சிப்பும், ‘ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை’ இன்னும் கேட்க வேண்டியிருக்கும் எண்ணற்ற மற்றவர்களின் இரட்சிப்பும்தான். (2 பேதுரு 3:15; மத்தேயு 24:14) யெகோவா எந்தளவுக்கு தாராளமாய் நீடிய பொறுமை காட்டியிருக்கிறார் என்பதை மதித்துணர நமக்கு உதவி செய்வதோடு, மற்றவர்களுடன் பழகும் விஷயத்திலும் நீடிய பொறுமையுடன் இருக்க இது நம்மை தூண்டுவிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a எபிரெயுவில், “மூக்கு” அல்லது “மூக்குத்துளை” (ஆஃப்) என்பதற்குரிய வார்த்தை, பெரும்பாலும் கோபத்தைக் குறிப்பதற்கு அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. வெகுண்டெழும் ஒருவர் மூர்க்க மூச்சுவிடுவது அல்லது மூக்குச் சீறுவதே அதற்குக் காரணம்.
b இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றிய மேலுமான விளக்கத்திற்கு, யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தில் பக்கங்கள் 191-4-ஐக் காண்க.
நீங்கள் விளக்க முடியுமா?
• ‘நீடிய பொறுமை’ என்ற வார்த்தை பைபிளில் எதை அர்த்தப்படுத்துகிறது?
• ஜலப்பிரளயத்திற்கு முன்பு, பாபிலோனிய சிறையிருப்பிற்குப் பின்பு, பொ.ச. முதல் நூற்றாண்டில் யெகோவா தம் நீடிய பொறுமையை எவ்வாறு காட்டினார்?
• என்ன முக்கிய காரணங்களினிமித்தம் யெகோவா நீடிய பொறுமையைக் காட்டினார்?
• யெகோவாவின் நீடிய பொறுமையை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
[பக்கம் 9-ன் படம்]
ஜலப்பிரளயத்திற்கு முன்பு யெகோவா காட்டிய நீடிய பொறுமை, மனந்திரும்ப ஜனங்களுக்கு போதிய வாய்ப்பளித்தது
[பக்கம் 10-ன் படம்]
பாபிலோனின் வீழ்ச்சிக்குப் பின், யூதர்கள் யெகோவாவின் நீடிய பொறுமையிலிருந்து பயனடைந்தார்கள்
[பக்கம் 11-ன் படம்]
முதல் நூற்றாண்டில், யூதரும் யூதரல்லாதவர்களும் யெகோவாவின் நீடிய பொறுமையிலிருந்து பயனடைந்தார்கள்
[பக்கம் 12-ன் படங்கள்]
இன்று கிறிஸ்தவர்கள் யெகோவாவின் நீடிய பொறுமையை சிறந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்